Re: நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 6, 2024, 10:18:10 PM11/6/24
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
கடம்பன் - வேலனின் பெயர் - எவ்வாறு?
----------------------------

முருகனுக்கு மூன்று பூக்கள் உகந்தவை. காந்தளும் வெட்சியும் புறத்துறைக்கு உரியவை. தேவ சேனாபதி ஆகிய கார்த்திகேயன் போரில் ஈடுபடும் போது சூடும் புறத்துறை மலர்கள் இவை. வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை. இதனால், "கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்" என்கிறது திருமுருகாற்றுப்படை. கச்சு - கவசம், செச்சி - சிவந்த வெட்சி. செச்சியைத் தெச்சி எனல் கொங்குநாட்டு வழக்கு. வெட்சி மிலைந்து ஆநிரை கவர்தல், ஏறு தழுவல் நடப்பதைச் சங்க நூல்கள் பாடியுள்ளன. கந்தன் போர்க்கோலத்தில் தோளில்  வெட்சிப் பூவை  அணிகிறான். அவ் வருணனை: "கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே" - கந்தர் அலங்காரம். போர்க்கோலத்தில் காந்தள் பூக்கண்ணி சூடுவதைப் பற்றிப் பல பாடல்கள் உண்டு. வெட்சியைப் போலவே, காந்தளும் வெண்மை, சிவப்பு என்ற இருவகை மலர்களாக இயற்கையில் பூக்கும்.  

புறத்திணைப் பூ காந்தள். ஈழத்தில் வெற்றி வீரர்கள் தம் சின்னமாகக் காந்தள் பூவைக் கொண்டமை அண்மைக் காலத்தே கண்டோம்.   நவம்பர் 11 மேலைநாடுகளில் விடுமுறை. Poppy flower is its symbol. ஐரோப்பியப் போரை நினைவு கூரும் பொப்பி மலர், இந்திய உபகண்டத்திலே போரை நினைவுகூரும் காந்தள் மலர்: ஓர் ஒப்பீடு:
https://amarnathkk-narean.blogspot.com/2010/11/blog-post_25.html
https://www.dtkc.co.uk/பொப்பி-மலரும்-காந்தள்-மல/

குறுந்தொகையின் முதல் பாட்டிலேயே காந்தள் போர்க்கடவுள் முருகனுக்கான புறப்பொருள் பேசப்படுகிறது. காந்தளின் நெருப்புப் போல நிறம் கொண்ட ஆறு இதழ்கள் ஆறு கார்த்திகைப் பெண்டிருக்கு உவமையானது. அசுரர்களை அழிக்கச் சேனைத் தலைவனாய் திருவவதாரம் கார்த்திகேயன் செய்கிறான். எனவே, சங்கப் புலவோர்கள் போர் நிகழும் புறத்திணையின் பூவாகக் காந்தளைத் தெரிந்தெடுத்தனர்.  காந்தள் கார் காலமாகிய கார்த்திகையில் மலரும்; கார்த்திகைப் பூ என நாட்டுப்புறத்தில் இதன் இன்றைய பெயர்.

   செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
   செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
    கழல் தொடி சேஎய் குன்றம்
   குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

அரத்தம் வழியும் தந்தங்களை உடைய யானையின் மீது ரத்தம் தோய்ந்த செந்நிற வேலுடனும் அம்புகளுடனும் அரக்கர்களின் ரத்தம் ஊறி செங்களமாகவே மாறிய போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் முருகன் ஆளும் எங்கள் குன்றும் காந்தள் மலரால் நிறைந்திருக்கிறது.

Riding on the elephant with blood dripping tusks
With blood reddened spear and arrows that had killed the demons
Returning from the blood soaked red battlefield
This hill our fiery Murukan rules
Is full of the the blood flower blooms.

----

புறத்திணையில் காந்தளின்  பெயரில் ஒரு துறை அமைந்தது. இது முருகனின் போர்க்கோலம். மன்னர்கள் போர் தொடுக்குமுன்னர் நிகழ்ந்த பூசை ஆகலாம். இதனைத் தொல்காப்பியம்,
   “நெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
          வெறியாட் டயர்ந்த காந்தளும்,”தொல் : பொருள் : புறத்திணை. 62 : 1-2
எனப் பெயர் சூட்டியுளது. மேலும் மடல் ஏறுவதற்குப் பெயராகவும், இக்காந்தள் கூறப்படுகிறது. இதனை இளம்பூரணர், ‘காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார்’ என்றாராகலான், ‘வெறியாட்டயர்ந்த காந்தள்’ என்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி ‘காந்தள் எனவும் பெயராம்’ என்று அகத்திணை இயலில் காந்தள் பெற்ற இரண்டு இடத்தைக் குறித்துள்ளார். இரண்டில் வெறியாடும் வேலன் ‘காந்தள் சூடி ஆடுதலில் காந்தள் என்றார்’ என நச்சினார்க்கினியர் காந்தள் சூடுவதைக் குறித்தார். இது போன்று, மடலேறும் போதும் காந்தள் சூடப்படும். எனவே, இரு துறைகளுக்கும் காந்தள் ‘சின்னப் பூ’ (Emblem). மடல் ஏறல் - Mock warrior riding a palmyrah horse,hence for this also Malabar lily became  a symbol.கடல் போலக் காமம் இருந்தாலும், ஆண்கள் செய்யும் பொய்ப்போர் போலப் பெண்கள் செய்யார் என்கிறார் வள்ளுவர்: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். ஆணைவிடப் பெண்ணே மேலானவள் எனக் காட்ட மடல் ஊர்தலை உதகரிக்கிறார்.

இனி, கடம்பு என்னும் மலர் முருகனின் போகத்துக்குரிய மலர் என்பதைப் பார்ப்போம். புறத்துறையாக வெட்சித்திணையில்  காந்தள் சூடுவது போல, அகத்துறை குறிஞ்சித்திணையில்  காதல் இன்பம் நல்க வேண்டி கடம்பு சூடுதல் வழக்கம். முதலில், நற்றிணை 34. இப்பாடலில், முதலில் முருகனின் போர் ஆவேசத்தைக் காட்டும் சண்ட பராக்கிரமச் சின்னமாகிய செங்காந்தள் மலரும், போர்க்களத்தில் ஆடும் பேய் அணங்குகளும் வர்ணிக்கப்படுகின்றன.  பின்னர், பித்து ஏறிவிட்ட மகளின் நோய் நீங்க, வேலன் பூசகன், இன்பத்துக்கு ஆன கடப்பமாலை அணிந்து ஆடும் வெறியாட்டுடன் பாடல் முடிகிறது. புறப்பொருளில் தொடங்கி, அகப்பொருளாக முடியும் அழகிய சங்கப்பாடல் இது:

        வேலன் வெறிவிலக்கல் (நற்றிணை 34)
    ----------------------
  கடவுள் கல்சுனை , அடை இறந்து அவிழ்ந்த
  பறியாக் குவளை மலரொடு ,காந்தள்
  குருதி ஒண்பூ , உருகெழக் கட்டிப்
  பெருவரை அடுக்கப் பொற்பச் சூர் மகள்
  அருவி இன்னியத்து ஆடு நாடன்

  மார்பு தர வந்த, படர்மலி அருநோய்
  நின் அணங்கு அன்மை அறிந்தும் – அண்ணாந்து
  கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
  வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
  கடவுள் ஆயினும் ஆக
  மடவை மன்ற வாழிய முருகே!
 
திருமுருகாற்றுப்படையில் "போகத்துக்குரிய" கடம்புப் பூமாலை அணியும் முருகன்:

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து  
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்  (7-11)

காதல் இன்பத்துக்குரிய கடப்பந்தார் பற்றிய விளக்கம்.
https://temple.dinamalar.com/news_detail.php?id=13485
திருமுருகின் இவ்வடிகள் பற்றி மேலும் பின் ஒருமுறை பார்ப்போம்.
நச்சினார்க்கினியர் உரையால், காந்தள் (புறப்பொருள்), கடம்பு (அகப்பொருள்)
வெளிச்சமடைகிறது. ஏனைச் சங்கப் பாட்டுகள், பின்னர் வருபவை ஒளி பாய்ச்சுகின்றன.

கடப்ப மாலை இன்பத்துக்குரிய மாலை. வெறியாட்டுப் பூசனை செய்யும் வேலன் பூசாரி,
கடம்பன் என்றழைக்கப்படுவதும் இதே காரணத்தால் தான். தலைவியின் கலியாணம்
நிறைவேறக் கடம்பன் வெறியாடலில் ஈடுபடுவான். மாங்குடி கிழாரின் முக்கியமான
பாடலில் இரு மலர்கள் அழிந்துவிட்டன. அவை மருது, தாழை ஆக  இருக்கலாம்
என்பது பற்றிய என் ஆய்வுக்குறிப்பு:
https://groups.google.com/g/santhavasantham/c/XxDOt97x4LY/m/m_YMsqCOCwAJ
பாடலில் நான்கு, நான்கு என்று வருவதை நோக்கினால், சாதாரணமாகத் தோன்றும் இப் பொருள்கள்
முக்கியம். நான்கு வருணப் பகுப்பு புதிது, அவசியமில்லை என்னும் எதிர்ப்பு இலக்கியச் செய்யுள் இது.
வேலன் பூஜாரியை  வேல்மகன் என நாலடியிலும், கடம்பன் எனப் புறப்பாட்டிலும் அழைப்பர்.
புறப்பாட்டில் ஏனை மூவரும் சங்கீதம், தாளக் கருவிகள் இசைப்போராக இருக்க, கடம்பன்
கூத்தாடுவோன் ஆக, ஆடல்/நடனத்துக்கு ஆன கலைவாணன் என அமைந்துள்ளது சிறப்பு.
கடம்பன் என்னும் வேலன் ஆடும் நடனத்தை - வெறியாடல் - பாணி என்கிறது நாலடியார்.
பாணி = கூத்து (பிங்கலந்தை). பங்கம் இல் பாடலோடு *ஆடல் பாணி* பயின்ற படிறர் (சம்பந்தர்).
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் எல்லி நடம் செய் ஈசன் (சம்பந்தர்)
படு முழவம் பாணி பயிற்றும் அடி (அப்பர்).  நாலடியிலும், வேலன் பூசாரி கடம்புக் கண்ணி சூடி வெறி ஆடுகிறான்.
நாலடி வெண்பாவைக் கீழே கொடுத்துள்ளேன்.

பாணர், பண்டித ஞா. தேவநேயப் பாவாணர் கட்டுரை படித்தருளுக.
"பல்வகைப் பறைகளையும் அடித்துக்கொண்டு ஒரே குலமாயிருந்த
மண்டைப் பாணர் பிற்காலத்துத் தொழில், கருவி, ஒழுக்கம் முதலியவற்றின்
வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய்ப் பிரிந்து போயினர்.
  "துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
   இந்நான்கு அல்லது குடியுமில்லை"
                        - புறநானூறு (செய். 335)
என, மாங்குடி கிழார் தொழிற் குடிமக்களை நால்வகைப் படுத்திக் கூறியுள்ளனர். துடி - உடுக்கு." (பாவாணர், 1939, செந்தமிழ்ச்செல்வி)

"இக்கடம்பு மற்றொரு முத்திரை கொண்டதுமாகும். ஒருவகைக் குடிமக்கட்கு இதன் பெயர் அமைந்தது.
'துடியன் பாணன் பறையன் கடம் பனென் றின்னான் கல்லது குடியு மில்லை' - என்னும் மாங்குடி கிழார்
 புறப்பாட்டு இவ்வாறு ஒரு குடிப்பெயரை அறிவிக்கின்றது. இத்துடன் கூறப்படும் மற்றைய மூன்று
 குடிப்பெயர்களும் அவரவர் செய்த தொழில்களாகிய துடி முழக்குதல், பண்ணிசைத்தல், பறையடித்தல்
 என்பவற்றால் உண்டானவை. இத்தொடர்பில் நோக்கினால் கடம்பமாலை அணிந்து வெறியாடும் தொழில்
 புரிந்தோர் இப்பெயர் பெற்றவராகலாம். ”
 (இலக்கியம் ஒரு பூக்காடு - கோவை இளஞ்சேரன், தமிழ்ப் பல்கலைப் பேராசிரியர்).

Note: முருக பக்தர்கள் ஆகிய கதம்ப குல ராஜாக்கள் கர்நாடகம், கோவா (கூபகம்) பக்கம் வாழ்ந்தவர்கள்.
கடம்பு முருகனின் தெய்வமரம் ஆதலால், இக் கடம்பர்களுக்குக் கடம்பு அரச சின்னம். கடம்ப ராஜாக்கள் தமிழர் அல்லர்.
மஹாஸேனன் என ஸ்கந்தனை வழிபடு தெய்வமாகக் கொண்டவர்கள்.  மேலைக் கடற்கரையில் இருந்த
இந்தச் சிற்றரசர்களை, கரூர் (வஞ்சி மாநகர்) ஆண்ட சேர மன்னர்கள் போரிட்டு அடக்கினர்.
முக்கியமாக, சேரலாதன். காரணம்: யவன தேசத்துக்கு ஏற்றுமதி ஆகும் மிளகு, தந்தம், தோகை போன்ற கடல் வாணிகம்
தடைபடாமல் இருக்க இப்போர்கள் நடந்தன. கடற்குறும்பு அடங்கிற்று. மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடலில் வரும் இசைவாணன்,
கூத்து ஆடல் புரியும் கடம்பன் தமிழ்நாட்டான். இக் கடம்பனுக்கும், சேர மன்னர்கள் கடல்குறும்பு அறுத்த விதேசி மன்னருக்கும் தொடர்பில்லை
 என 1906-ம் ஆண்டு செந்தமிழ் (மதுரைத் தமிழ்ச் சங்கம்) ஆய்வேட்டில் விளக்கியுள்ளனர்.

   சிலப்பதிகாரம் (குன்றக் குரவை):
இறைவளை  நல்லாய்! இது நகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை "அலர் கடம்பன்" என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன் வருகென்றாள்

 மணிமேகலை
"கார் அலர் கடம்பன்" அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
 
மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்!
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார் - ஐந்திணை ஐம்பது

இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளைதாதை கழல் அடி காணலாமே - அப்பர்

மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் - தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல்  மாறனை                                                                                                                                                                  
இன்றமிழால் யாம்பாடும் பாட்டு   - முத்தொள்ளாயிரம்
 (கடம்பு - அகப்பொருளுக்கு ஆன மலர். அதுபோல், இன்தமிழ்ப் பாட்டு - அகத்துறையின் பாட்டு).
 
கடம்பும் களிறும் பாடி ... (முருகனின் கடம்பு, வாகனம்: பிணிமுகம் என்னும் யானை பற்றியது)/

'மாலை மார்ப நூலறி புலவ' (முருகு 261)
'களநன்கு இழைத்துக் கண்ணி சூட்டி' (அக. 22)
'நெடுவேள் மார்பின் ஆரம் போல' (அக. 120)
எனப் பொதுவாக மாலை என வருமிடங்களிலும் உரையாசிரியர்கள் கடம்பமாலை
என்றே குறித்துள்ளனர்.  பிற்காலத்திலும் இது தொடர்கிறது. உ-ம்: நாலடி வெண்பா:

           இளமை நிலையாமை
  வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
  முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
   மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
   அறிவுடை யாளர்கண் இல்.
(பாணி - வெறி ஆடல். நறுங்கண்ணி - நறுமணம் வீசும் கடம்பு மலர்மாலை).

இதே உத்தியை அருணகிரிநாதரும் ஆள்கிறார். உ-ம் 'மால்கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே' தார் - போகத்துக்கான  கடம்பு மலர்மாலை.  நீலங்கொள் ... திருப்புகழ்.

அடுத்ததாக, அகத்துறை இன்பத்துக்குரிய  கடம்பு மாலையை எத்தனை பாடல்களில்  அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார் எனப் பார்ப்போம்.

ஆக, கடம்பு முருகனது குறிஞ்சித்திணையில் மக்களுக்குப் போகத்துக்குரிய  குடும்ப வாழ்வு வாழும் சின்னமாக இருப்பதால்,
கடம்பன் என முருகனும், அவனது பூசாரியும் பழந்தமிழ் நூல்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

நா. கணேசன்

On Sat, Nov 2, 2024 at 8:05 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> உலகமெங்கும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் இவ்வேளையில்,
> பழந்தமிழ் இலக்கியங்கள் போற்றும் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய
> என் இல்லத்தரசி திருமதி மு. சுப்புலட்சுமியின் ஆய்வுக் கட்டுரை-
> ‘நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’-
> https://publuu.com/flip-book/265728/1463954/page/13

👆 from Dr. M. Raja Murukan, IPS,  High official of Police, Tripura
state, and grandson of Dr. M. Rajamanikkanar, Trichy.

அன்பின் திரு & திருமதி ராஜமுருகன்,

வணக்கம்.  அரிய காணொளி - சூலமங்கலம் சோதரியர் இராகமாலிகையில் அமைத்தது
முழங்காத தமிழ் இல்லமில்லை.
https://www.youtube.com/watch?v=_nxx7y-vazw

'நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்' கட்டுரை சிறப்பு.  வெட்சி மாலை
போருக்கு உரிய மாலை. தேவ சேனாபதி கார்த்திகேயன் போர்க்கோலம் பூண்டு சண்ட
பராக்கிரமத்தில் ஈடுபடும்போது அணிவது. முருகனுக்கு  இன்னொரு மாலையும்
உண்டு: கடப்ப மாலை இன்பத்துக்குரிய மாலை. இம்மாலைகளின் வேறுபாட்டைச் சங்க
நூல்கள் முழுவதிலும் காணலாம். வெறியாட்டுப் பூசனை செய்யும் வேலன் பூசாரி,
கடம்பன் என்றழைக்கப்படுவதும் இதே காரணத்தால் தான். தலைவியின் கலியாணம்
நிறைவேறக் கடம்பன் வெறியாடலில் ஈடுபடுவான். மாங்குடி கிழாரின் முக்கியமான
பாடலில் இரு மலர்கள் அழிந்துவிட்டன. அவை மருது, தாழை ஆக  இருக்கலாம்
என்பது பற்றிய என் ஆய்வுக்குறிப்பு:
https://groups.google.com/g/santhavasantham/c/XxDOt97x4LY/m/m_YMsqCOCwAJ

கவச நூலின் தொடக்கத்திலேயே தாம் திருமேனி தொட்டுப் பூசை செய்யும்
சென்னிமலை ஆண்டவரை "சிரகிரி முருகன் சீக்கிரம் வருக" என்று முன்னிலைப்
படுத்துகிறார். கோடானுகோடி மக்களின் இதயங்கவர்ந்த எளிய, மந்திரார்த்தம்
நிறைந்த, பாடல் கந்தசஷ்டி கவசம். 17-ம் நூற்றாண்டில் சென்னிமலைக்
குருக்கள் பாடிய இக் கவசம் பற்றி "பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்!!
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை நண்பர் (பெங்களூர் வாணிபச்
செல்வர்) பாடியது" என்றெல்லாம் பல பிழைபட்ட செய்திகள்
உலவிக்கொண்டிருந்தன.  கவசத்தில் எல்லா உடல் அங்கங்களையும் காக்கச்
சொல்வதுபற்றி அவதூறுகள் வந்தன. பக்தகோடிகளின் கடுமையான எதிர்ப்பும்
உருவானது. அப்பொழுது கந்த சஷ்டி கவசம் ஆசிரியர் யார் என்றும், அவரது
காலத்தையும் பற்றி எழுதினேன். 2020 கட்டுரை இணைத்துள்ளேன். பலர் பாராட்டி
எழுதினர். தமிழில் உள்ள மந்திர நூல்களில் மிகப் பிரபலமானதற்கு ஆசிரியர்
ஊர், காலம் முதலியவற்றை விளக்கியதில் மகிழ்ச்சி. 2009-ல் திரு. சு.
பசுபதி அவர்களுக்கு முக்கியமான முருகடியார்கள் பற்றிய விருத்தம் ஒன்றை
விளக்கியிருந்தேன். சரியான பொருளைச் சொல்லியமைக்கு நன்றி
தெரிவித்திருந்தார்,
https://groups.google.com/g/santhavasantham/c/sTXzmy0cRko/m/O8vmcq9tmqoJ
பேரா. சு. பசுபதி மேற்கோள் காட்டிய பாடல் இந்தச் சர்ச்சையில்
காட்டியிருந்தேன். அப்பாடல் ஆசிரியர் பேரன், முனைவர் சபாரத்தினம்
கோவையில் இருந்து வாழ்த்து அனுப்பினார். 16-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய
வரலாற்றில், மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை) கந்த சஷ்டி
கவசம் பற்றி எழுதியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலே, புலவர் செ. இராசு
அளித்த கல்வெட்டுச் சான்றுகள் முக்கியமானவை.

சென்னிமலைக் குருக்கள் தேவராய பண்டிதர் செய்த கந்தசஷ்டிக் கவசம் (17-ம்
நூற்றாண்டு):
https://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html

முக்கியக் குறிப்பு: வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்கள் விகடன்
பிரசுரமாக, “முத்தமிழ் முருகனின் அற்புதத் தொண்டர்கள்“ என்ற நூலை
எழுதியுள்ளார். அதில் உ.வே. சாமிநாதையரின் ஆசிரியர் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நண்பர்/மாணவர், பெங்களூர் வணிகர்
தேவராசபிள்ளை வரலாற்றை, இந்தச் சிவாச்சாரியர் தேவராயசுவாமிகள் எனக் கருதி
எழுதிவிட்டார். இருவரும் வெவ்வேறானவர்கள். கந்தசஷ்டிக் கவசம் வல்லூர்
தேவராசபிள்ளைக்கு இரண்டு நூற்றாண்டு காலத்தால் முற்பட்டது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages