இதற்கு, தஜின் பானைகள் என்னும் கூம்புவடிவப் பானை மெள்ளச் சமைக்கப் பயன்பட்டிருக்கும். சங்க காலத்தில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் கிடைக்கும் பானை இது.
தஜின் பானைகளில் ஆக்கும் புலாச்சோறு (1) வாடூன் என்பதில் இருவகை உண்டு: (அ) முரியடுப்பில் சமைத்த கெபாப், kebab (ஆ) உப்புக்கண்டம், கொடிக்கறி என்று வட்டாரவழக்கில் சொல்லப்படும் ஜெர்க்கி (jerkey). வாடூனை அரிசியுடன் சேர்த்தோ (2) பச்சூன் (வாடாவூன், fresh meat) அரிசியுடன் சேர்த்தோ சமைத்து விருந்துகளில் பரிமாறினர். இதற்கு சங்க நூல்கள் சான்றாகத் திகழுகின்றன.
சங்க காலத்தில் தற்காலத்தைய பிரியாணி இல்லை. ”தம்” பிடித்தல், முகலாய அரண்மனைகள் (லாகூர்), சுல்தான்களின் பாரசீகத்திலோ கண்டறியப்பட்ட சமைநுட்பு எனத் தெரிகிறது. ஆனால் பிலாஃப் பரவலாக இருந்துள்ளது. புலி - புலால் உண்ணி என்பதால் பிறக்கும் பெயர். புலி > பிலி, பில்லி என வடமொழிகளில் ஆதல் காண்க. அதுபோல, புலாவு > பிலாஃப். pili, pilaaf are from echo-word formation, an Indian areal feature. பலவகையான புலாவு (சோறு) தஜின் பானைகள் கொண்டு சமைத்துள்ளனர் என்பதைத் தமிழ்நாட்டு ஆர்க்கியாலஜி காட்டுகிறது. இந்தச் சங்ககாலச் சமையல் முறை, உணவுப் பெயர் உலகமெல்லாம் பரவியுள்ளது காண்க:
https://en.wikipedia.org/wiki/Pilafபிலாஃப் (< புலாவு) பற்றிச் சங்க நூல்கள்:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/Dec/23/ஊன்-துவை-அடிசில்-2832023.htmlதஜின் பானையில் வாடூன் (கெபாப், பெரும்பாண்., முரியடுப்பு), + அரிசி சேர்த்துச் சமைத்தால் ஆவதைப் பதிற்றுப்பத்து சொல்லுகிறது:
”சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து” (பதிற். 45: 13-14)
சங்கச் சேரர்கள் தொடங்கி, குலசேகர ஆழ்வார் ஈறாக, சேர நாட்டுத் தலைநகராக வஞ்சி மாநகர் (கரூர்) விளங்கியது. இப்போது சிலம்பி ஆற்றில் கேரளா ஸ்டேட் பிணராயி விஜயன் தலைமையில் கட்டிவிட்டால், ஆன்பொருநை நதி (அமராவதி ஆறு) வற்றி வளங்குன்றும். கரூரில் செல்வக் கடுங்கோ வாழியாதன் அரண்மனையில் புலாச்சோறு உண்டு களித்தவர் கபிலர் என்னும் புலவர்பிரான்.
செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது. செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும் வண்மையாகவும் உள்ளன. ஆனால் எனது கைகள் பிலாஃப் என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார். ”புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது பிறிது தொழில் அறியா ஆகலின்” (14: 12-5) என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காரணம் தெரிவித்துள்ளார் கபிலர்.
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் செம்மற்று அம்ம நின் வெம்முனை இருக்கை (புறம். 33:14-15)
தலைச்சேரி பிரியாணி என இப்போது சொல்வதை, முரியடுப்பு கெபாப் + அரிசி சேர்க்கும் பிலாஃப் எனச் சொல்லலாம். கபிலரும், சேரமான் அரண்மனை பிலாஃப் பற்றி விளக்கினார்.
https://www.dinamani.com/editorial-articles/special-stories/2021/Oct/16/food-day-special-biryani-and-old-rice-3717995.htmlபுவனா கருணாகரன், தமிழ் கன்கார்டன்ஸ் பார்த்து, கொழுங்குறை = கொழுவிய தசைக்கறித் துண்டம் எங்கெல்லாம் சங்க இலக்கியங்களில் வருகின்றது என எழுதியுள்ளார்.
கொழுங்குறை என்ற சொல் பதினெண் மேல்கணக்கு நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் இடம் பெறுகிறது. இப்போது அவற்றைப் பார்ப்போம்.
1. பதிற்றுப்பத்தில் 12 ஆம் பாடலில் 16 அடியில் இடம்பெறுகிறது.
“எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு”
இந்த அடியில் இதன் பொருள் “ஆட்டின் கொழுத்த கறித்துண்டு / தசைத்துண்டு”
2. நற்றிணை 85 இல் 8 ஆம் அடியில் இடம்பெறுகிறது “கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு” இங்கு இதன் பொருள் முள்ளம்பன்றியின் கொழுத்த கறித்துண்டு / தசைத்துண்டு
3. புறநானூறு 399 இல் 5 ஆம் அடியில் இடம்பெறுகிறது “ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி, மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை” இங்கு இதன் பொருள் வரால் மீன் சுறாமீன் கறித்துண்டு
4.அக நானூறு 196 இல் 3 ஆம் அடியில்
“நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,”
5. அகநானூறு 236 இல் 3 ஆம் அடியில் 236-3 – “பெருமீன் அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி”
6. அகநானூறு 237 இல் 9 ஆம் அடி “கனை திறல் செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை”
7. புறநானூறு 125-7 - “நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை”
8. புறநானூறு 250-9 - “இழுதின் அன்ன வால் நிணக் கொழுங்குறை”
9. புறநானூறு 328-9 - “வாடூன் கொழுங்குறை கொய்குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, “
10. புற நானூறு 364—5 - “மை விடை இரும் போத்துச் செந்தீச் சேர்த்திக் காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை”
11. புறநானூறு 374-11 - “சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை”
இங்கும், துடியெனும் இசைக்கருவியின் கண் போன்ற வரால் மீனின் “கொழுத்த கறித்துண்டு / தசைத்துண்டு” என்று பொருள்
பத்துப்பாட்டு நூல்களில்:
1. மலைபடுகடாம்/ கூத்தராற்றுப்படை இல் 175 ஆம் அடியில் இடம் பெறுகிறது
“அருவி தந்த பழம் சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை,
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை”
இங்கு இதன் பொருள் செத்த கடமானின் “கொழுத்த தசைத்துண்டு” அல்லது “கறித்துண்டு” என்று பொருள்
2. பெரும்பாணாற்றுப்படை யில் 472 ஆம் அடி “கொடுவாள் கதுவிய வடு ஆழ் நோன்கை வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்”
இங்கு பல இறைச்சியின் “கொழுத்த தசைத்துண்டு” என்று பொருள்
3. பொருநராற்றுப்படையில் 105 ஆம் அடி- “காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை” இங்கு கோழ் ஊன் – கொழுத்த தசை, கொழுங்குறை – பெரிய கறித்துண்டுகள்,
அதனால் மீன் கொழுங்குறை என்றால் மீன் பிரியாணி இல்லை. மீனின் கொழுத்த தசைத்துண்டு அல்லது மீனின் கொழுப்பு நிறைந்த கறித்துண்டு என்று பொருள்.
சங்க காலத்தில் இறைச்சியும் அரிசியும் ஒன்றாக சமைத்தார்கள் ஆனால் அது பிரியாணி ஆகாது. அப்படிச் சமைத்த இறைச்சி கலந்த அரிசி உணவையும் இச்சொல் குறிக்கவில்லை. இறைச்சித் துண்டை மட்டுமே குறித்தது.
பிரியாணி நம் நாட்டு உணவல்ல. பாரசீக நாட்டுடையது என கேள்வி. முகலாய ஆட்சியின் போது இது இந்தியாவிற்கு வந்திருக்கும்.
-------------