#ரமணி_ஆய்வுக்கட்டுரை
வெண்பாவில் விளாங்காய்ச் சீர்
குருநாதன் ரமணி
15/05/2018
இன்றைய யாப்பியல் வல்லோர் விளாங்காய்ச் சீர் என்றழைக்கும் மூவசைக் காய்ச்சீர் பற்றியும், அத்தகைய சீர் ஏன் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன என்றும் கொஞ்சம் ஆராய்வோம். அத்துடன், திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களிற் காணும் விளாங்காய்ச் சீர் வெண்பாக்களையும் சேகரித்து விவாதிப்போம்.
★★★
ஏன் விளாங்காய்ச் சீர் என்று பெயர்?
நிரையசை நடுவாக வரும் காய்ச்சீர்கள் இருவகை: கூவிளங்காய், கருவிளங்காய். நிரையசையில், குறிலிணை, குறிலிணையொற்று, குறில்நெடில், குறில்நெடிலொற்று ஆகிய நால்வகை உறழ்ச்சிகள் காணப்படும்.
விளங்காய், விளாங்காய்ச் சான்றுகள்
வேர்ப்பலவின் => குறிலிணை நிரைநடு => கூவிளங்காய்
வேர்ப்பலாவின் => குறில்நெடில் நிரைநடு => கூவிளாங்காய்
மற்றெனுஞ்சொல் => குறிலிணையொற்று நிரைநடு => கூவிளங்காய்
மற்றுமோர்சொல் => குறில்நெடிலொற்று நிரைநடு => கூவிளாங்காய்
புழுவிதமாய் => குறிலிணை நிரைநடு => கருவிளங்காய்
புழுவெலாமாய் => குறில்நெடில் நிரைநடு => கருவிளாங்காய்
விலங்குகள்நான் => குறிலிணையொற்று நிரைநடு => கருவிளாங்காய்
விலங்கெலாம்நான் => குறில்நெடிலொற்று நிரைநடு => கருவிளங்காய்
குறிப்பு
விளாங்காய்ச் சீர் என்று யாப்பிலக்கண நூல்களில் இல்லை. நெடிலோசையில் முடியும் நிரைநடுவாம் காய்ச்சீரும் விளங்காய் என்னும் வகையே. எனினும், அத்தகைய சீரில் ஓசை நீளுவதைக் குறிக்க விளாங்காய் என்று குறிப்பது இக்காலப் புலவர் வழக்கு.
★★★
விளாங்காய்ச் சீரின் ஓசை
மேற்காணும் நிரைநடு காய்ச்சீர்களில் ஓசையை மாத்திரை கொண்டு அளந்து பார்ப்போம்.
வேர்ப்பலவின் => 2+1/2+1/2+1+1+1+1/2 => 6 1/2 மாத்திரைகள்
வேர்ப்பலாவின் => 2+1/2+1/2+1+2+1+1/2 => 7 1/2 மாத்திரைகள்
மற்றெனுஞ்சொல் => 1+1/2+1+1+1/2+1+1/2 => 5 1/2 மாத்திரைகள்
மற்றுமோர்சொல் => 1+1/2+1+2+1/2+1+1/2 => 6 1/2 மாத்திரைகள்
புழுவிதமாய் => 1+1+1+1+2+1/2 => 6 1/2 மாத்திரைகள்
புழுவெலாமாய் => 1+1+1+2+2+1/2 => 7 1/2 மாத்திரைகள்
விலங்குகள்நான் => 1+1+1/2+1+1+1/2+2+1/2 = 7 1/2 மாத்திரைகள்
விலங்கெலாம்நான் => 1+1+1/2+1+2+1/2+2+1/2 = 8 1/2 மாத்திரைகள்
இங்ஙனம், குறில்நெடில் நிரைநடு வாய்வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசையளவில் ஒரு மாத்திரை அதிகம் ஒலிக்கக் காணலாம். இவ்வாறு ஒலித்தலால் செப்பலோசை விளாங்காய் வரும் சீர்களில் நீண்டொலித்துச் செய்யுளின் ஓட்டம் தடைப்படும் என்பது வெண்பா மரபு. எனவேதான், விளாங்காய்ச் சீர்கள் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன.
★★★
நீளோசை மட்டுந்தானா? சீர் பிரிதலுந்தான்!
மரபுச் செய்யுள்களில் ஈரசை, மூவசைச் சீர்களே பெரிதும் பயன்படுகின்றன. ஈரசை, மூவசைச் சீர்களின் அடிப்படை நோக்கமே, அவை தம்மில் குறைந்த வேரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது என்பதே. இவ்வகையில் தான் ஈரசை, மூவசைச் சீர்களில் கட்டுண்ணும் நேர்நிரை அசைகள் அமைகின்றன.
குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, ஓரசை மட்டுமே பயிலும் அசைச்சீர் தனியே மரபுச் செய்யுளில் வருதலில்லை, எனவே, ஈரசைச் சீர்களைப் பிரித்தாலும் அவை இரண்டு அசைச் சீர்களாகவே பிரிதல் காணலாம்.
ஈரசைச் சீர்களோடு நேர், நிரை அசைகள் பின்தொடர்ந்து வருவனவே மூவசைச் சீர்கள். இதனாற்றான் அவற்றின் ஈரசைச் சீர்ப் பெயர்களோடு காய், கனி என்ற பெயர்கள் சேர்த்து அழைக்கிறோம்.
எனவே, மூவசைச் சீர்களைப் பிரித்தால் அவை ஈரசைச் சீர் + அசைச் சீர் (தேமா + காய் என்பதுபோல்) என்றே பிரியவேண்டும். ★★★ இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது! ★★★ அவ்வாறு பிரிந்தால் அது காய்ச்சீர்க்கு உரிய இயல்பான ஓசையின் மிக்கு ஒலிப்பதாக ஆகும். வெண்பாவின் கனிச்சீர்கள் வருதலாகா என்பதால், வரும் காய்ச்சீர்கள் விளாங்காய்ச் சீராக இருத்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மரபு.
இப்போது மேலுள்ள விளங்காய், விளாங்காய்ச் சீர்களைப் பிரித்து ஓசையுடன் படித்துப் பார்ப்போம்.
வேர்ப்பலவின் => வேர்ப்பல + வின் => கூவிளம் + அசைச்சீர்
.. வேர்ப்ப + லவின் => தேமா + அசைச்சீர் என்று படித்தல் தவறு!
.. வேர்ப்பல என்று தொடர்வதால், வேர்ப்ப என்றபின் நிறுத்தம் வராது என்றறிக.
வேர்ப்பலாவின் => வேர்ப்ப + லாவின் => தேமா + தேமா => ஈரசைச்சீர் இரண்டு
.. வேர்ப்ப என்றபின், லா என்ற நெடிலால் அங்கு நிறுத்தமும் ஓசை நீளலும் காண்க.
மற்றெனுஞ்சொல் => மற்றெனும் + சொல் => கூவிளம் + அசைச்சீர்
.. மற்றெ + னுஞ்சொல் என்று படிப்பதில்லை!
மற்றுமோர்சொல் => மற்று + மோர்சொல் => தேமா + தேமா => மற்று பின் ஓசை நிறுத்தம்+நீளல்
புழுவிதமாய் => புழுவித + மாய் => கருவிளம் + அசைச்சீர்
.. புழுவி + தமாய் என்று படிப்பதில்லை!
புழுவெலாமாய் => புழுவெ + லாமாய் => தேமா + தேமா => புழுவெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.
விலங்குகள்நான் => விலங்குகள் + நான் => கருவிளம் + அசைச்சீர்
.. விலங்கு + கள்நான் என்று படிப்பதில்லை!
விலங்கெலாம்நான் => விலங்கெ + லாம்நான் => தேமா + தேமா => விலங்கெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.
★★★
விளாங்காய் இழுபறி!
வேர்ப்பலாவின் தோல்சிராய்த்து வெட்டியேநாம் தேனிறைத்துச்
சேர்ந்தவாறே உண்ணுவோமே யின்று.
இலக்கணப்படி இது குறள் வெண்பா. முதலேழும் காய்ச்சீர் ஆதலால் முதல் வகையான ஏந்திசைச் செப்பலோசை பயில்வது தான். ஆயின் ஓசை நிற்பதும் நீள்வதுமாக ஒவ்வொரு சீரிலும் தடுமாற்றம் காணலாம்!
விளாங்காய்களை விளங்காய்களாக்கி எழுதினால், இக்குறள்
வேர்ப்பலவின் தோல்செதுக்கி வெட்டிசுளை தேன்கூட்டிச்
சேர்ந்திருந்தே உண்ணுவம்நாம் இன்று.
இவ்விதமாய் ஏந்திசைச் செப்பல் தடங்கலின்றி ஒலித்தல் காணலாம்.
★★★
விளாங்காய் பற்றி இன்றைய யாப்பியல் ஆசிரியர்கள்
கி.வா.ஜகந்நாதன், 'கவி பாடலாம்'
கேள்வி-பதில் பக்.228, கேள்வி 15
வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்
கால்பற்றிக் காண்போம் கதி.
கேள்வி: இந்த வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?
பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு.
★★
பசுபதி, 'கவிதை இயற்றிக் கலக்கு', பக்72
விளாங்காய்ச் சீர்களை வெண்பாவில் உபயோகித்தால், செப்பல் ஓசை சிறிது குறைந்துவிடுகிறது. அதனால், விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில், வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. அந்த விளாங்காய்ச் சொல்லைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும், ஆனால் ஓசையும் குறையக்கூடாது என்றால், வகையுளியைத் தவிர வேறு வழியில்லை.
காட்டு
கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
(கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும்.)
எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.
★★
பாவலர் ம.வரதராசன்
இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள.
கவிதைகளையும், செய்யுட்களையும் இக்காலத்தில் உரைபோல் படித்துவிடுகிறோம். ஆனார் முற்காலத்தில் அவற்றை இசையாகவே பாடினர். அவ்விதம் பாடும்போது இவ்வழி விளங்காய்ச் சீர் சற்றே நீண்டொலிப்பதால் சந்தம் கெட்டுத் தடுமாறும் நிலையின் காரணமாக விளாங்காயைக் கூடுமானவரை தவிர்த்தார்கள். இதைக் காரணம் காட்டியே இற்றைப் புலவர் விளாங்காய் வரலாகா என்றனர்.(வரக்கூடாது எனச் சொன்னாரில்லை) வரலாகா என்றால் அது இசைத்தற்கு ஆகா என்று பொருள். சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை.
★★
அகரம் அமுதன்
வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
நானும் நளவெண்பா வெண்பாக்கள் முழுவதும், பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பா, இருபா விருபது, உண்மை விளக்கம், திருக்களிற்றுப்படியார், வினா வெண்பா ஆகிய பாக்களில் பலநாட்கள் தேடினேன்.
ஆகவே, எந்தவகையான பாக்களிலும், விளாங்காய்ச் சீர் வருவது சிறப்பன்று.
★★★
பழந்தமிழ் வெண்பாக்களில் விளாங்காய்ச் சீர்கள்
திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களில் காணும் வெண்பாக்களில், விளாங்காய்ச் சீர் உள்ளனவற்றை, அன்பர்கள் பின்னூட்டமாக எடுத்தாண்டால், நாம் அவற்றை விவாதிக்கலாம்.
★★★
முடிவுரை
யாப்பிலக்கணம் ஒரு பாவகை அல்லது பாவினத்தில் அமையும் அசை, சீர், தளை, ஓசை போன்ற இலக்கணக் கூறுகளை மட்டுமே பேசும். செய்யுளில் அமையும் எதுகை, மோனை போன்ற தொடை வகைகள் பற்றியோ, செப்பலோசை சிதைக்கும் விளாங்காய்ச் சீர் போன்றன பற்றியோ இலக்கணம் பேசுவதில்லை.
இங்குதான் செய்யுள் மரபு என்பதன் ஆளுமை தொடங்குகிறது. அளவடிகளில் பொழிப்பு மோனை அழகு, ஈரடிக்கோரெதுகை அழகு, வெண்பா ஈற்றடியில் வகையுளி அமையலாம், வெண்பா வடிகளில் விளாங்காய்ச் சீர் வந்தால் செப்பலோசை சிதையும் போன்ற மரபு இலக்கியக் கூறுகளைச் சரியாக அறிந்துகொள்வது மரபுச் செய்யுள் புனைதிறனை மேம்படுத்தும்.
★★★ ★★★ ★★★