அபலைகள் (15) தையல் யந்திரம்

அவள், அதான் வள்ளி, ஒரு பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவனின் மகள். வயதுக்கு வந்து விட்டாள் வள்ளி.
பெரியவளாகி விட்டால் அடுத்தது கல்யாணம் தானே? அதுவும் நடந்தது, விமரிசையாக அல்ல, ஊர் மாரியம்மன் கோவிலில்.
வாய்த்தவனும் படிக்காத ஒரு தொழிலாளியே. வீடுகளுக்கு வெள்ளை யடித்தல், கூரை வேய்தல் போன்ற வேலைகள் செய்திடும் காளியின் சித்தாள் தான் முருகன், அதான் வள்ளியின் கணவன்.
கல்யாணமானால் அடுத்தது என்ன? அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் வள்ளிக்கு, மூன்றே ஆண்டுகளில்.
வள்ளி வந்த ராசி அடுத்த வருஷமே முருகனின் தாய் கண்ணை மூடினாள்.
வள்ளிக்கு வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனிப்பது, நாலு வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து அதில் கிடைக்கும் காசில் அரிசி, உப்பு, புளி, மிளகாய் வாங்கி வருவது, ஒழிந்த போது தெருவில் சாணி பொறுக்கித் தட்டிக் காய வைத்து விற்பதில் கிடைக்கும் காசின் ஒரு பங்கில் பிள்ளைகளுக்கு சீனி மிட்டாய் வாங்கித்த் தருவது என்று கழிந்தது பொழுது.
உடல் சோர்ந்த வள்ளி கேட்டாள் ஒரு நாள்,
“ஏனுங்க நமக்குதான் மூணு புள்ளெய்ங்க ஆயிடிச்சே? பக்கத்து ஊரு பஞ்சாயத்து ஆசுபத்திரிலெ கருத்தடெ ஆபரேசன் பண்ணுறாங்களாம். கூடவே நூறு ரூவாக் காசும் தாராங்களாமே? நீங்க போயி ஆபரேசன் பண்ணிகிட்டு அந்தக் காசெ வாங்கியங்களேன்.”
“ஏம்புள்ளெ, என்னெப் போயி ஆபரேசன் பண்ணி கிட்டு அப்பாலெ ஆம்பிளையாவே இல்லாமெ ஆக்கீடணும்னு பாக்குறெயா? நீ போயி பண்ணிக்கிட்டு காசெயும் வாங்கீட்டு வருவயா? அதெ வுட்டூட்டு என்னெயெ போவச் சொல்லுறே?”
புருஷன் பேச்சுக்கு மறு பேச்சுண்டா? அதுவும் நடந்தது. உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தாள் வள்ளி. நாளுக்கு நாள் அவள் உடல் சோர்வடைய ஆரம்பித்தது.
ஒரு நாள்:
“ஏனுங்க. எனக்கு ரொம்ப ஒடம்பு முடீலேங்க. இன்னிக்கி ஒரு நாளு புள்ளெங்கெளெக் குளிப்பாட்டி, சோறு குடுத்தூட்டு நீங்க வேலெய்க்குப் போங்க.”
“வேலெக் கள்ளிக்குப் புள்ளெ மேலெ சாக்குன்னானாம். ஒரேடியா ஒடம்பு ஒடம்புன்னு அலுத்துக்காதெ. நானுந்தான் நாள் முச்சூடும்
வேலெ செய்ய்றேன். செஞ்சூட்டு ஒடம்பு வலி போக ஒரு பாட்டுலு தண்ணி அடிச்சீட்டு வந்து படுக்குறேன். மய்க்கா நாளு ஏந்திரிச்சு வேலெக்குப் போகலே? நீயும் பானேலேந்து ரெண்டு மடக்குத் தண்ணியெக் குடிச்சீட்டுப் படு புள்ளெ. ஒடம்பு தானே சரியாயிடும்.”
நான்கு நாட்களுக்குப் பின் முருகன் குடிசை வசலில் உட்கார்ந்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான்.
“பாவீ.... பாவீ.... இப்பிடி ஓடிப் போயிடெயேடீ? நான் ஒனக்கு என்ன கொறெடீ வெச்சேன்? மத்தவங்க மாதிரி நான் என்ன வண்ணான் வெளுத்த துணிங்களெயாடீ வெள்ளெ சொள்ளெயாப் போட்டுக்கிட்டு போவேன்? நீ தோக்கிற துணிங்க தானேடீ நான் போட்டு கிட்டது? நீ எங்கெ ‘என் தெறெமேலெ ஒங்களுக்கு நம்பிக்கெ இல்லீங்களா?’ ன்னு கேட்டூடுவெயோன்னு ஒன் கையாலெ தெச்ச சட்டெதானேடீ போட்டுக்குவேன்? அதுக்குத் துணி என்ன கடேலெயா வாங்கினேன்? நம்ம ஊரு சேணியன் இது இன்னமெ வேலெக்கு ஒதவாதூன்னு தூக்கிப் போட்ட தறியெக் கொண்டாந்து அதெ ஒக்கப் பண்ணி அதுலெ நீ நெஞ்செ தூணீலெ தெச்சதுதானேடீ அந்த சட்டெ? அதுக்கு நூலு நான் என்னா கடேலெயா வாங்கியாந்தேன்? நீ அறுவடெ முடிஞ்ச பருத்திக் காடுங்கள்ளெ பொறுக்கி வந்த பஞ்சுலேந்து ஒங்கையாலெ நூத்த நூலு தானேடி அது? இவ்வொளோ ஒம்மேலெ ஆசெயா இருந்த என்னெயெ உட்டூட்டு ஓடிப் போயிடெயேடீ நீ? ஒனக்கு என்ன கொறெடீ வெச்சேன் நான்?”
ஓடிப்போனவளைத் தேடிக் கண்டு பிடித்து திரும்பக் கூட்டி வரக்கூடிய இடத்துக்கா ஓடிப் போனாள் வள்ளி? உடலை விட்டே அல்லவா ஓடிப்போய் விட்டாள் அந்தத் ‘தையல்’ யந்திரம்?
14-08-2014 நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!
ஏழ்மை என்றாலும் அன்பான வாழ்க்கை. மனைவி அகால மரணம். உருக்கமான கதை - கல்பட்டாரே.”நம்ம ஊரு சேணியன் இது இன்னமெ வேலெக்கு ஒதவாதூன்னு” - சேணியன் என்றாலே கல்லூரிமாணவர்கள்யாருக்கும் இப்போது தெரியாது. காளமேகத்தின் ‘வாணியன் பாடிட ...” பாடல் ஊரில் திருவிழாவில்ஊர்வலம் போகும் சாமி சப்பரத்தைச் சுற்றியுள்ள மக்களைச் சொல்கிறது. அந்தணன் சிவனைச் சொல்கிறதும்நினைவுக்கு வருகிறது:
வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன்செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி முன்தொழ, தீங்கரும்பைக்
அப்படி நினைத்துதான் எழுதி இருந்தேன். உங்கள் மடலைப் பார்த்ததும் சந்தேகம் வந்து விட்டது.காளமேகப் புலவர் பாடல் பற்றி ஒரு சந்தேகம். அதைத் தனி மடலில் கேட்கிறேன்.
2014-08-16 21:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, August 16, 2014 8:44:52 AM UTC-7, knn1929 wrote:சேணியன் என்றால் துணி நெய்பவர் இல்லையோ? நெசவாளன் என்று சொல்லி இருக்க வேண்டுமோ? தவறாயின் மன்னிக்கவும்.சேணியன் என்றால் துணி நெய்பவர் தான் ஐயா.