சங்ககாலம் சுமாராக கிமு 2ம் நூற்றாண்டில் துவங்குகிறது. சங்கபாடல்கள் மூலமாக தான் நாம் பலதமிழ் மன்னர்களின் பெயர்களை அறிகிறோம். கிமு 2ம் நூற்றாண்டில் இரான் முதல் ஆந்திரா வரை ஆண்ட அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றபோது அவருக்கு கட்டுபடாமல் இருந்த பகுதிகள் கலிங்கமும், தமிழகமும் மட்டுமே. மவுரியருக்கும், தமிழருக்கும் இடையே அதற்கு முன் எல்லைபோர்கள் நடந்து வந்தன. வில்திறன் மிகுந்த வடுகர் (வடுகர் என்றால் வடவர் என பொருள். திருப்பதிக்கு வடக்கே வசித்தவர்கள் வடுகர்) தமிழகம் மேல் படை எடுக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக வம்ப மோரியர் (புதிய மவுரியர்) தம் தேர்களை செலுத்தி பாதை அமைத்து கொடுக்கிறார்கள். இப்படி கூட்டாக வடுகரும், மோரியரும் தாக்கியபோது அவர்களை மோகூர் மன்னனான சேரன் எதிர்கொண்டு முறியடித்தான். புதிய மோரியர் என குறிப்புள்ளதால் நந்தர்களை தோற்கடித்த சந்திரகுப்த சக்ரவர்த்தி அல்லது அவரது மகனான பிந்துசாரன் அட்சிகாலத்தில் சுமார் கிமு 3ம் நூற்றாண்டில் இப்போர் நிகழ்ந்து இருக்கலாம் என அறியலாம்
இப்படி மோரியருடன் பகையை வளர்த்துகொண்டிருந்த தமிழகத்துக்கு அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றதும் பெரும் ஆபத்து காத்திருந்தது. முதலில் கலிங்கத்தை ஒரு வழி பண்ணலாம் என நினைத்து கலிங்கத்தின்மேல் பாய்ந்தார் அசோகர். மாபெரும் கலிங்கபோர் நிகழ்ந்து அதன் உயிரிழப்பால் மனம் கலங்கிய அசோகர் அதன்பின் போர் செய்வதையே நிறுத்திவிட்டார். தமிழகம் இதனால் தப்பியது. இதன்பின் அசோகருக்கும், தமிழ் மன்னர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதாக அறிகிறோம். அசோகர் தமிழ்மண்ணுக்கு பவுத்தம் வளர்க்க பிக்குகளை அனுப்பிவைத்தார். பவுத்தம் இப்படியாக தமிழகத்துக்கு வர, ஜைனமும் மவுரியர் மூலமே தென்னகம் வருகிறது. அசோகரின் தாத்தாவும், நந்தர்களை முறியடித்து மவுரிய பேரரசை நிறுவியவருமான சந்திரகுப்தர் ஒரு சமணர். அவர் பிற்காலத்தில் துறவறம் பூண்டு 12,000 ஜைனமுனிகளுடன் மைசூர் அருகே உள்ள சரவனபெலகுலா வந்ததாக ஜைனமரபு குறிப்பிடுகிறது.
வடக்கே இருந்து வந்த அபாயம் அகன்றதும் தமிழக மன்னரிடையே உட்பூசல் துவங்க ஆரம்பித்தது. சங்ககால பாடல்கள் முழுக்க இத்தகைய உட்பூசல்களையே குறிப்பிடுகின்றன. ஆனால் வெளிமன்னர்கள் படை எடுத்தால் தமிழக மன்னர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததாகவும் காண்கிறோம். கிமு 155ம் ஆண்டு கலிங்க மன்னன் காரவேலன் "திரமிடதேசசங்க"த்தை சேர்ந்த மன்னர்களின் கூட்டை தோற்கடித்ததாக தெரிகிறது. இப்போரில் வெற்றி கண்ட கரவேலன் கணக்கு வழக்கற்ற பாண்டிய நாட்டு முத்துக்கள், சேரநாட்டு யானைகள், குதிரைகள், பொன்னை அள்ளிகொண்டு திரும்புகிறான்.
இதன்பின் கலிங்கம், மவுரியர், தமிழர் அரசியல் என்ன ஆனது என நமக்கு தெரிவதில்லை. இதன்பின் தமிழக வரலாறு சங்க இலக்கியங்கள் மூலமே நமக்கு தெரியவருகிறது. இதில் வரும் வரலாறு முழுக்க தமிழ் மன்னர்களின் உட்பூசலை பற்றியதாகவே உள்ளது. ஆக வடக்கிருந்து வந்த அபாயம் நீங்கியதாகவே காண்கிறோம்.
சங்ககாலத்தமிழ்மன்னர்களாக சேர, சோழ, பாண்டியரையும், அதியமான், பாரி முதலான குறுநில மன்னர்களையும் அறிகிறோம். சுமார் கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டில் சங்ககாலம் துவங்கி, கிபி 3ம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்புடன் முடிவடைகிறது. களப்பிரர் ஆட்சிகாலத்தில் சுமார் 250 ஆண்டுகள் தமிழக வரலாற்றின் பக்கங்கள் இருண்டு காணபடுகின்றன. மூவேந்தர் முடியிழந்து, குலமிழந்து இருந்த சுவடற்று போகிறார்கள். சேரர்கள் மலையாளிகள் என நாம் நினைத்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்லர். மலையாள மன்னை ஆண்ட கரூரை தலைநகராக கொண்ட தமிழ்மன்னர்களே சேரர்கள். இத்தகைய பெருமை வாய்ந்த சேரர்குலம் களப்பிரர் படையெடுப்பால் அழிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதன்பின் சேரமன்னர்கள் இறக்குமதி ஆகி "பெருமாள்" எனும் பெயரை சூட்டிகொன்டு ஆட்சியில் இருக்கிரார்கள். சோழர்கள் சுத்தமாக வழக்கொழிந்து போகிறார்கள். உறையூரை தலைநகராக கொண்டு ஆண்ட சங்ககால சோழர்கள் அதன்பின் என்ன ஆனார்கள் என்ற குறிப்பு இல்லை. ஆந்திராவில் ராயலசீமாவை ஆண்ட தெலுங்குசோடர்கள் மட்டுமே தம்மை சோழர்களின் வழிதோன்றலாக கூறி ஆட்சியை நடத்துகிறார்கள். பாண்டியப்பேரரசு குறுநில ஆட்சியாக சுருங்கிவிடுகிறது
இப்படி மூவேந்தரையும் முறியடித்து ஆட்சிக்கு வந்த களப்பிரர் சங்ககாலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இருண்டகாலம் எனும் காலத்துக்கு தமிழகத்தை அழைத்து செல்கின்றனர். அவர்கள் ஜைனர்கள், பவுத்தர்கள் என பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் பிற்காலத்தில் மெதுவாக அவர்களை இந்துமதம் உள்வாங்குகிறது. களப்பிரமன்னர்கள் செல்வாக்கும் இவ்வமயம் குன்றுகிறது. காஞ்சியில் ஆட்சிக்கு வந்த சிம்மவிஷ்ணு பல்லவனும், தஞ்சை விஜயாலய சோழனும், பாண்டியனும் களப்பிரர் ஆட்சியை ஒழித்து மீண்டும் தமிழ்மன்னர்களின் ஆட்சியை ஏற்படுத்துகிறார்கள். பாண்டியர், சோழரை முறியடித்து தமக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக ஆக்கி தமிழகத்தை ஒன்றுபடுத்தி சிம்மவிஷ்ணுபல்லவனும், அவன் மகன் மகேந்திரவர்ம பல்லவனும் முடிக்கும்போது அன்றைய பாரதத்தில் மூன்றே பேரரசுகள் மட்டுமே உள்ளன. வடக்கே ஹர்ஷரின் பேரரசு, நர்மதை முதல் காஞ்சிவரை இருந்த புலிகேசியின் சாளுக்கிய பேரரசு மற்றும் தமிழகத்தில் பல்லவர் பேரரசு
அரசியல்ரீதியாக தமிழ்மன்னர்கள் இப்படி எழுகையில், ஆன்மிக ரீதியாக தமிழ் தெய்வங்களான மாயோனும், சேயோனும், கொற்றவையும், சிவனும் பக்தி இயக்கம் மூலம் நாயன்மார், ஆழ்வாரால் மீண்டும் தமிழகத்தில் எழுச்சி பெறுகிறார்கள். அதன்பின் மாலிகாபூர் படையெடுப்புவரை சுமார் எட்டுநூறு ஆண்டுகள் பிற்கால சோழர், பல்லவர், பான்டியர் ஆட்சி நடைபெறுகிறது. அதன்பின் தமிழகத்தை ஆண்ட தமிழர் என்பவர் 1950ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜியே ஆவார்.