பெருமை மிக்க சங்க கால சேரர் தலைநகர் வஞ்சி (இன்றைய கரூர்)

298 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 18, 2022, 11:48:51 PM10/18/22
to Santhavasantham
19-ம் நூற்றாண்டின் இறுதி, 20-ம் நூற்றாண்டு முற்பகுதியில் சங்க இலக்கியங்கள் அச்சான புதுமை நிகழ்ந்தது. 120- 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப் புதுமையால் தமிழ்நாட்டு வரலாறு அறிதலில் மிகப் பெரிய தாக்கம் தொடங்கிற்று. சங்கநூல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகளைத் தமிழறிஞர்கள் ஆராயத் தலைப்பட்டனர். ஹிந்து என்றும், இந்து என்று தமிழிலும் இந்து சமயத்தவர் பற்றிய முதல் சொல்லாடல்கள் தொடக்கமுற்ற காலம் விஜயநகர காலம் ஆகும். அவ்வமயத்தில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் தென்னிந்திய மொழிகளில் தோன்றலாயின. தமிழ் மொழி இலக்கியங்கள் புதிதாகப் படைக்கப்பெற்றன. அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். வில்லிபுத்தூரார் மகாபாரதம் தமிழில் விரிவாகச் செய்தார். வில்லிக்கும், அருணகிரிக்கும் புலமை வாதங்கள் தமிழ்ச் சங்கத்தார் முன்னிலையில் நடந்ததாகச் சொல்வர். கந்தரந்தாதிக்கு வில்லிபுத்தூரார் உரை உண்டு. இவையெல்லாம் நிகழ்ந்த சங்கம் இருந்திருக்கிறது. வில்லிபுத்தூராழ்வார்,  கொங்கர்கோன் வக்கபாகை ஆட்கொண்டான், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளால் தமிழ் அழியாது காக்க நான்காம் தமிழ்ச் சங்கம் தோற்றுவித்தான் என்று பாடியுள்ளார். இது போல, ஆங்கிலம் என்னும் மொழியால் தமிழ் சிதைந்து வந்தபோது ராமநாதபுரம் சேதுபதிகள் அரிய தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைத்தனர். இதனை ஐந்தாம் தமிழ்ச் சங்கம் எனலாம். ஏனெனில், பெரும்புலவர்களால் நான்காம் தமிழ்ச்சங்கம் எப்போது, யாரால் அமைக்கப்பட்டது என்று இலக்கியவரலாற்றில் காண்கிறோம். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் இருவர் புதிதாக அச்சு வாகனம் ஏறிய சங்க நூற்கடலை ஆய்ந்து, சங்க காலத்தில் சேர நாடு என்பது இன்றைய கொங்குநாடும், கேரள மாநிலமும் சேர்ந்தது என அறிவித்தனர். நூல்கள் ஆதாரபூர்வமாக இயற்றி அளித்தனர். தமிழ்நாட்டு மூவேந்தர் வரலாற்றுக்கு இவ்வாராய்ச்சிகள் மிக முக்கியமானவை. ஆன்பொருநை என வழங்கிய அமராவதி ஆற்றங்கரையில் உள்ள வஞ்சி (கருவூர்) சங்க காலத்தில் சேரர்கள் தலைநகராக இருந்தது. அதற்கு மேலைக் கடற்கரையில் இருந்த முசிறிப் பட்டினம்  தொண்டி, நறவு போன்ற துறைமுகங்களை ஆண்டு கடல்வணிகம், உண்ணாட்டு வணிகம் செய்தனர் என மதுரைத் தமிழ்ச்சங்கம் என்னும் ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தார் ஆராய்ச்சிகளின் வழி அறிவித்தனர். தமிழ்நாட்டில் மூவேந்தரில் சேர மன்னர்கள் வரலாறு, பதிற்றுப்பத்து, கல்வெட்டு இவற்றால் துலக்கமாயிற்று. பின்னர், தினமலர் முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி நாணயவியல் மூலம் கரூர் தான் சேரர் தலைநகர் வஞ்சி மாநகர் என நாட்டினார். ஐராவதம் மகாதேவன், இரா. நாகசாமி, புலவர் செ. ராசு, கொடுமுடி சண்முகன், ... எனப் பலரும், டாக்டர் கி. ஸ்ரீதரன் போன்ற தொல்லியல்துறை அறிஞர்களும் சங்கச் சேரர் தலைநகர் கரூர் என நிறுவினர். இதனை எல்லாம் இன்றைய தமிழ்நாட்டு மாணவர்கள் அறிதல் அவசியம். வரலாற்று நிறுவலை அறிவியல் வழி செய்தது சேர வேந்தர் தலைநகர் வஞ்சி (2000 ஆண்டு முன்) கரூர் என்பது சாதனை. இலக்கியம், கைபீது வழி சில செய்திகள் தெரிவிக்க இவ்விழை தொடங்குகிறேன்.

முதலில், தொல்லியல் அறிஞர் முனைவர் கி. ஸ்ரீதரன் சென்ற திங்களில், தினமணியில் எழுதின கட்டுரை படிப்போம்:
பெருமை மிக்க சங்க கால சேரர் தலைநகர் கருவூர்

ஆக, முடியுடை மூ வேந்தர் தலைநகரங்கள் மூன்றுமே ~ சேரர் வஞ்சி (கரூர்), சோழர் கோழி (உறையூர்), பாண்டியர் மதிரை (மதுரை) ~ இன்றைய தமிழ்நாடு என்னும் இந்திய மாநிலத்தில் சங்க காலத்தில் இருந்திருக்கின்றன. அண்மையில் கிடைத்த கேரளாந்தகன் எனும் தமிழ் எழுத்துக் காசிலும் பல செய்திகள் கிட்டுகின்றன. மலைகள் மிகுந்த நாடு சேரநாடு. மலைநாடு என்றே பெயர். வஞ்சி மாநகரில் குடையூர் உள்ளது. சேர மஹாராஜாக்கள் ராஜ்ய பட்டாபிஷேகம் தரித்த கோயில் உண்டு. உலகத்துக்கு மேருப் போன்றது எனச் சேரர் கொண்டாடிய மலை. பார்க்க: குடையூர்க் கைபீது. காலின் மெக்கென்சி சேர்த்தது (230 ஆண்டு முன்). சோழ நாட்டில் மலைவளம் இல்லை. எனவே, மேரு என தஞ்சை பிரகதீசர் கோவிலை எழுப்பினான் ராஜராஜ சோழன். கேரளாந்தகன் ஆகிய அவனுக்கும், பிற சோழ ராஜாக்களுக்கும், வஞ்சி நகரை இன்றைய கேரளா செலுத்தியதில் பெரும்பங்கு உண்டு. வஞ்சிக் கரூர் அரண்மனையில் இருந்த வித்துவக்கோடு கேரளா பட்டாம்பிக்கு மாற்றினர் சோழர். இதனைச் சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டால் அறிய முடிகிறது. https://groups.google.com/g/santhavasantham/c/rDHY3FOgS04/m/_SJdBwQtAAAJ

பிற பின்!
நா. கணேசன்
பெருமை மிக்க சங்க கால சேரர் தலைநகர் கருவூர்

Aug. 21st, 2022 Dinamani

- முனைவர் கி. ஸ்ரீதர, தொல்லியல்துறை (ஓய்வு)

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கருவூரும் ஒன்று. கைத்தறி நெசவுத் தொழிலுக்கு சிறப்பு பெயர் பெற்றது இவ்வூர்.

சங்க இலக்கியங்கள் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையில் கருவூர் அமைந்துள்ளது எனக் குறிப்பிடுகிறது. தமிழக சமூக பொருளாதார பெருமை வரலாற்றுக்கு சேர்க்கும் வகையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றை தன்னகத்தே கொண்டு சிறப்பாக விளங்குகிறது கருவூர்.

கருவூரின் தொன்மைச் சிறப்பு:

பெருங்கற்காலம் என்ற இரும்புக்கால பண்பாட்டில் இருந்து (3000 ஆண்டுகளுக்கு முன்) கருவூரின் தொன்மை வரலாறு துவங்குகிறது. பெருங்கற்கால சான்றுகளாக விளங்கும் ஈமச் சின்னங்களான கல்வட்டம் - கல்குவை போன்றவை கருவூரைச் சுற்றி உள்ள புகளூர், காருடையாம்பாளையம், கொத்தமங்கலம், மலைக்கோவிலூர், வேட்டமங்கலம், நெடுங்கூர், பவித்திரம், பரமத்தி, வெஞ்சமாக்கூடலூர் போன்ற பல ஊர்களில் இத்தகைய ஈமச் சின்னங்களைக் காணலாம். அரவக்குறிச்சி அருகே நெடுங்கூர் என்ற ஊரில் காணப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னம் 2006 - 07- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்யப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மண்மேடுகள்:

கருவூரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் "நத்தமேடு" என அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க மண்மேடுகள் காணப்படுகின்றன. இவைகளில் இருந்து கிடைக்கும் தொல்பொருள்கள் கருவூரின் தொன்மை வரலாற்றுக்கு சான்றளிப்பவையாகத் திகழ்கின்றன. மணவாசி, பஞ்சமாதேவி, சோமூர், திருமுக்கூடலூர், புதுக்கோட்டை, பழைய செயங்கொண்ட சோழபுரம், மகாதானபுரம், மேட்டுத் திருக்காம்புலியூர் போன்ற பல ஊர்களில் இத்தகைய மண்மேடுகள் காணப்படுகின்றன.

கருவூருக்கு அருகில் திருக்காம்புலியூர் - அழகரை போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் காவிரிக்கரை நாகரிகத்தின் பண்பாட்டுச் சிறப்பின் ஒரு பகுதியை வெளிப்படுத்தியுள்ளன என்று கூறினால் மிகையாகாது. சங்கரமலை அய்யர் மலையில் காணப்படும் சமண சமய சான்றுகள் மாயனூர் அருகே காணப்படும் மாயனூர் மதிற்கரை போன்றவை கருவூரில் தொன்மைக்கு சான்றாகவும், பெருமையளிப்பவையாகவும் விளங்குகின்றன.

இலக்கிய குறிப்புகள்:

கருவூர் ஆன்பொருநை ஆற்றுக் கரையில் இருந்தது என்றும் சேரர்களின் தலைநகராக விளங்கியது என்றும் "கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமாவியல் நகர் கருவூர் முன்துறை' என அகநானூறு கூறுகிறது. பெருங்டுங்கோ கருவூரிலிருந்து ஆட்சி செய்தான் - ஆன்பொருநை ஆற்றின் கரையில் இருந்த வஞ்சி நகரை தலைநகராக கொண்டான் என புறப்பாட்டில் கூறப்படுகிறது.

சேர, சோழ மன்னர்கள் கருவூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணலாம். காவிரி ஆற்றோடு ஆன்பொருநையும் குடவனாறும் கலக்கும் கடல் போன்றவன் செங்குட்டுவன் என பதிற்றுப்பத்து புகழ்ந்து கூறுகிறது. திருமுக்கூடல் கருவூரின் அருகில் உள்ளது. இங்கே காவிரி ஆற்றுடன் ஆறும் ஆன்பொருநை (அமராவதி) ஆறும் கலக்கின்றன.

அயல் நாட்டவர் குறிப்பு:

கிரேக்க நிலநூல் வல்லுனரான தாலமி என்பார் "கொரேவூரா" என்ற ஓர் இடத்தினைக் குறிக்கிறார். உள்நாட்டு நகரங்களில் கொரேவூரா (கருவூர்) இருந்தது என்பதை அவர் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

வரலாற்றுச் சான்றுகள்: கருவூரின் வரலாற்றுக் குறிப்பை வேள்விக்குடி செப்பேடு, சீவரமங்கலம் செப்பேடு, தளவாய்ப்புரச் செப்பேடு போன்ற வரலாற்றுச் சான்றுகளில் காணப்படுகிறது.

கருவூர் சோழர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. சோழர்களின் குல மரபில் முதல் தனிநகர் எனச் சிறப்பித்து கூறப்படுகிறது. சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை "மன்னிய அநபாயன சீர் மரபில் மாநகரமாகும் தொன்னெடுங் கருவூர்' எனச் சேக்கிழார் பெருமான் - எறிபத்தர் வரலாறு வழியே அறிய முடிகிறது. புகழ்ச்சோழரும் கருவூரை ஆட்சி செய்திருக்கிறார்.

தொடர்ந்து ராஜராஜ சோழன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், விக்ரமச்சோழன், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. கருவூர் மூன்றாம் குலோத்துங்;க சோழன் காலத்தில் "முடி வழங்கு சோழபுரம்' என அழைக்கப்பட்டதையும் அறிகிறோம். பின்னர் போசள மன்னர்கள், பிற்கால பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டது.

வரலாற்று புகழ்மிக்க ஆங்கிலேய - மைசூரு போர்களில் கரூர் பகுதியும் முக்கிய இடம் பெற்று விளங்கும். சங்கக் காலத்தில் இருந்து தொடர்ச்சியான கருவூரின் வரலாற்றினை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். கருவூர் வரலாற்றினை பேரூர் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம், கருவூர் தலபுராணம் ஆகியவையும் எடுத்துக் கூறுகின்றன. மேலும் ஆதிபுரம், கருவைப்பதி, வஞ்சுளாரண்யம், கர்ப்புரம், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், சண்மங்கல சேத்திரம் என்ற பெயர்களாலும் இவ்வூர் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் அறிகிறோம்.

கல்வெட்டுகளில்..:

கருவூர் அருகே காணப்படும் புகளூர் ஆறு நாட்டார் மலையில் காணப்படும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தமிழ் எழுத்துகளில் காணப்படும் கல்வெட்டில், 1. கோ ஆதன் சேரலிரும்பொறை, 2. அவன் மகன் பெருங்கடுங்கோ, 3. அவன் மகன் இளங்கடுங்கோ என்ற மூன்று மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் குறிக்கப்படும் மன்னர்களே இங்கே கல்வெட்டில் காணப்படுகின்றனர்.

கருவூர் - வஞ்சி: கரூரில் இரண்டு நடு கற்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் "ரவி கோ கலியமகந் கருவூரிடை ஆநிரை கொள எறிந்து பட்டான்', "ஸ்ரீ வஞ்சி வேளடியான்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 8 - 9-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர் கருவூர் வஞ்சி என்றும் அழைக்கப்பட்டு வந்தது என்பது புலனாகிறது. மேலும் அருகிலுள்ள நெரூர் பெருமாள் கோயில் கல்வெட்டில் "வஞ்சி மாநகரான கருவூர்' என்றும் அரங்கநாதர் கோயில் கல்வெட்டில் வஞ்சி " ஸ்ரீ வைஷ்ணவரோம்' என்று குறிப்பிடப்படுவதால் கருவூர் என்றும் வஞ்சி என்றும் 12-ஆம் நூற்றாண்டு வரை வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.

காசுகள் - மோதிரங்கள்: அமராவதி ஆற்றில் பண்டைய காசுகள் பண்டைய தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் முத்திரைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் கொல்லிப்பொறை, கொல்லிரும்பொறை, மாக்கோதை எனப் பெயருடன் காணப்பட்ட காசுகள் மிகச் சிறப்பானவை. மேலும் இங்கு கிடைத்த மோதிரங்களில் தித்தன், பேர் அவதான், தாயன் ஓதலன் போன்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்கம் - வெள்ளி மோதிரங்கள் கருவூரின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றன. மேலும் இவ்வூரில்தான் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன என்பது பெருமையளிக்கக் கூடியதாகும்.

அகழ்வாராய்ச்சி

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கரூவூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1973-74, 1977, 1979, 1996-ஆம் ஆண்டுகளில் இங்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து அகழ்வாராய்சியை மேற்கொண்டது. கருவூரின் தொன்மைக்குச் சான்றாக பண்டைய தமிழ் (பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டட அமைப்பின் ஒரு பகுதி, மணிகள் போன்ற பல பொருள்கள் கிடைத்தன.

எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் சாதன் கடியதா' என 12 எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு குற(று) கல் என்பவை மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை இங்கே தொல்லியல்துறையால் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காட்சியகத்தில் காணலாம்.

பண்டைய வணிக பெருவழியில் கருவூர் அமைந்திருந்ததால் பல மன்னர்கள் வெளியிட்ட காசுகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. சங்கக் கால மோதிரங்கள் - காசுகளும் கிடைத்துள்ளன. வளங்கொழிக்கும் வாணிக நகரமாக கருவூர் திகழ்ந்துள்ளது. கருவூர் என்றே இலக்கியங்களிலும் - கல்வெட்டுகளிலும் குறிக்கப்படும் இவ்வூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி "சங்கக் கால சேரர் தலைநகர்" இதுவே என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2022/aug/21/karuvur-was-the-cherar-capital-of-the-glorious-union-period-3901832.html

N. Ganesan

unread,
Oct 28, 2022, 7:14:02 AM10/28/22
to santhav...@googlegroups.com
On Wed, Oct 19, 2022 at 7:12 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
நல்ல ஆதார பூர்வமான கட்டுரை. நன்றி, திரு கணேசன்.
சங்கரன் 

இந்த வாரத்தில், சங்கச் சேரர்களின் தலைநகர், வஞ்சி மாநகரில் (கரூர்) ஆன்பொருநை (அமராவதி), குடவனாறு சேரும் கூடுதுறையில் இருந்த கோவிலின் 6 அடி உயரச் சிவலிங்கம், ஆவுடையார், பழைய நந்தி, ... போன்றன கிடைத்துள்ளன. பின்னர், இந்த ஆன்பொருநை-குடகனாறு காவிரி ஆற்றுடன் சங்கமிக்கிறது. இந்த முக்கியமான தலமான, கூடல் என்னும் இடம் - வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கடைசி மன்னன், குலசேகர ஆழ்வார் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது அவரது பாசுரத்தாலேயே விளங்குகிறது. அதன் பின்னர், சோழர் தாக்குதல், போர்கள் மலிந்தன. வஞ்சி மாநகராம் கரூரை விடுத்து, பெருவஞ்சி எனத் தாராபுரத்துக்கு மாறினர். கடைசியில் கரூரில் இருந்த வித்துவக்கோடு, கேரளாவில் வயல் நடுவே பட்டாம்பிக்கு மாற்றினர். மேலைக் கடற்கரைக்குச் சேரர் சென்றுவிட்டனர். இதனை எல்லாம் கேரள வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகின்றனர். அவற்றை இவ்விழையில் தர எண்ணியுள்ளேன்.

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்றன்னை நயந்து இளவாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி உரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசே கரன் இன்னிசையில் மேவி
சொல்லிய இன்தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கில்லை துன்பந்தானே!

                           - குலசேகராழ்வார்

கொல்லிநகர் - சேரர்களின் வஞ்சி மூதூர் (கரூர்) அருகே உள்ள  கொல்லிமலை.
அதனால், கொல்லிநகர் எனக் கரூருக்கு ஓர் பெயர்.
கூடல் = இங்கே, முக்கூடல் என்னும் இடம். குடவனாறு, ஆன்பொருனை, காவிரி மூன்றும்
சேரும் கூடல். அதன் மன்னன் என்கிறார் தம்மை குலசேகர ஆழ்வார்.

கரூரைத் தலைநகராகக் கொண்டு இருந்த கடைசி அரசர்களில் குலசேகர ஆழ்வார் தம்மைக் கூடற் கோமான் என்கிறார். அவ்விடத்தில் இருந்த  சிவாலயம். 6 அடி உயரச் சிவலிங்கம், ஆவுடையார், பழைய நந்தி, ... பார்ப்போம்.
சோழர்கள் கேரளாந்தகன் ஆனார்கள். வஞ்சி “சோணாடு வஞ்சி” (திருப்புகழ் ஆனது) - இதனைக் குலசேகராழ்வார் தனியனிலும் காணலாகும். ராஜராஜன் போன்றோர்கள் இறையாளுமைக்கு வஞ்சி மாநகர் வந்தபின்னர் சேரர்கள் வணங்கிய இதுபோன்ற திருக்கோயில்கள் கைவிடப்பட்டன. The royal patronage ceased to exist at ancient Chera temples in the Vanji (Karur) area. Time and floods took care of the rest.

Lifting of the Siva Lingam
ௐ நமச்சிவாய ௐ
ௐ நமச்சிவாய ௐ
ௐ நமச்சிவாய ௐ

சங்க இலக்கியத்தில் சேரர் வரலாற்றுக்கு எனவே எழுதப்பெற்றது பதிற்றுப்பத்து. இதில், இலிங்கம் கிடைத்துள்ள கூடல் வருணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரா. ராகவையங்கார் முதன்முதலாக, 110 ஆண்டு முன்னர், கரூர் தான் சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி என நிறுவியவர். பின்னர் மு. ரா., தொல்லியல் துறை அறிஞர்கள் உறுதிப்படுத்தினர். கூடல் பற்றி ரா.ரா. நூலில் உள்ளபடி:

Gateway of India, Bombay போல வஞ்சி மாநகரில் கோபுர மாட வாசல் விளங்கியது.
இதனை “வாயில் வஞ்சி” என்றார் சிறுபாணாற்றுப்படையில். இந்த வஞ்சி மாநகரின்
கட்டிடங்கள் எவ்வாறு விளங்கின எனப் பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து
ரா.ரா. அவர்கள், வஞ்சி மாநகர் நூலில் எடுத்தாண்டுள்ளார்:

”2. வஞ்சிமாநகரம் 
--------------------------

தமிழ்நாட்டை ஆண்டுவந்த மூவேந்தருள்ளே,சோழ பாண்டியர்க்கு உறையூர் புகார் மதுரைகள் எவ்வாறு பழைய தலைநகரங்களாக விளங்கினவோ,அவ்வாறே, சேரரது தொன்றுதொட்ட இராஜதானி *வஞ்சி மாநகரமாகும். மேல் கடலில் தொண்டி மாந்தை என்னுந் துறைமுக நகரங்களும்,சேரர்க்குச் சிறந்த தலங்களாயினும் வஞ்சிமா நகர்க்கு அவை அடுத்த தரத்தனவேயாம். இவ்வஞ்சிக்குக் கருவூர் என்பதும் ஒரு பழம் பெயர். இந்நகரம் ஆன்பொருநையாற்றங் கரையில் அமைந்து விளங்கியதாம்.

" நெடுந்தேர்க்கோதை--
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத் 
தெண்ணீ ருயர்கரைக் குவைஇய 
தண்ணான் பொருநை மணலினும் பலவே" 
(அகநானூறு.93.)

"தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சி" (புறம்.11)

"தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்"(சிலப்-29.)

எனக் காண்க.ஆன்பொருநையாற்றின் அலை, வஞ்சிக்கோட்டைமதிலிற் றாக்கும்படி அவ்யாறு நெருங்கிச் செல்வதென்பது, "வஞ்சிப் புறமதி லலைக்குங் கல்லென் பொருநை" என்னும் புறப்பாட்டடியால்(387) விளங்கும்.
-------
*இந்நகரத்தைப் பூவாவஞ்சி(சிலப்.26.50),வாடாவஞ்சி(28-180) பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்(மணி.92.) கோநகர் (சிலப்.27.255) என முன்னூல்கள் அணிந்து கூறும்.

Page 117
இவ் வான் பொருநை--ஆனி,வானி,ஆன்பொருந்தம்,தண்பொருநை, சூதநதி எனவும் கூறப்படும்.*

கருவூராகிய வஞ்சிக்குப் பக்கத்தோடும் ஆன்பொருநையோடு நேர்கிழக்கிற் செல்லும் காவிரியும்,குடவனாறும் சங்கமமாகும் கூடலொன்று உண்டு; இதனை--

"செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை" (பதிற்-50)

எனச் செங்குட்டுவனைப் பரணர் பாடுதலால் அறியலாம். "மூன்றுடன் கூடிய கூடலென்றது,அக்காவிரிதானும் ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றுஞ் சேரக்கூடிய கூட்டம்" என்பது பழையவுரை.இந்நதிகளன்றிக் காஞ்சியென்னும் †ஓர் யாறும் செங்குட்டுவனாட்டிற் பிரபலம்பெற்றது; ' தீனம்புன லாய மாடுங்-காஞ்சியம் பெருந்துறை ' எனக் காண்க.

இவ்வஞ்சிமாநகரின் பழைய அமைப்பு,முன்னூல்களில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றது.இம்மூதூரின் கோட்டைக்கு வெளியே தேவர் கோட்டங்களும் பொது ஸ்தலங்களும் ஜைநப்பள்ளிகளும் பொழில்களும் பொய்கைகளும் மிகுந்திருந்ததோடு, அவ்விடங்களில் தவமுனிவரும் ஞானிகளும் சாஸ்திரவறிஞரும் எங்கும் நிறைந்திருந்தனர்.
-------------
*பிங்கல நிகண்டு,4.118 பொருநை என்பது தாமிரபர்ணிக்குத் தனித்த பெயராதலால்,அதனின் வேறென்பதைக் குறித்தற்கு ஆன்பொருநை என விஷேடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.
குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12-மைலில், ஆம்பிராவதியுடன் சங்கமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியற்குக் காரணந்தெரியவில்லை.

Page 118
கோட்டையைச் சூழ்ந்துள்ள புறக்குடி அல்லது புறஞ்சேரியில் அரண்காவல்புரியும் படையிருப்புகளும் அந்நியவரசர் தங்குதற்கமைந்த மாளிகைகளும் இருந்தன. கோட்டையை,ஆழ்ந்தகன்ற அகழி சூழ்ந்திருந்தது. அதனிற் பல வகை முதலைச் சாதிகளும் பெருமீன்களும் நிறைந்திருந்தன.வஞ்சிமாநகருள்ளே பெருகியோடுங் கழிநீரெல்லாம் முடிவில் அவ் வகழிக்கண்ணே சென்று சேர்வதாம். இவ்வகழுக்கும் கோட்டைக்கும் இடையிலே காவற்காடொன்று உண்டு.கோட்டைமதில், பகைவரை அழிக்கத்தக்க எந்திரங்கள் பலவற்றால் மாட்சிமைபெற்றிருந்தது. அதன் வாயிலானது, வேலைப்பாடு மிகுந்து, பல நிலைகொண்ட கோபுரத்தோடுங் கொடிகளோடும், வெள்ளிமலையொன்று உள்கிழிந்தாற்போல விளங்கியது. இவ்வாயிலைக் கடந்து செல்லின், கோட்டை வாயில் காக்கும் காவலாளர் நெருங்கியுறையும் வீதிகளும் மீன்விலைஞரும் உப்புவாணிகரும் கள்விற்போரும் பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற்போரும் இறைச்சிவிற்போரும் வசிக்கின்ற வீதிகளும் அமைந்திருந்தன.இவ்வீதிகளையடுத்து - மட்கலஞ்செய்யுங் குயவர்,செம்பு கொட்டிகள், வெண்கலக்கன்னார், பொற்கொல்லர்,தச்சர், நட்பாவைசெய்வோர், தையற்காரர், மாலைகட்டுவோர்,சோதிடர், பாணர்முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப்பணியாளர் வீதிகளும், நாடகக்கணிகையர் வீதியும்,நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும்,சூதர் மாகதர் வேதாளிகர், பொதுமகளிர் தெருக்களும், 

Page 119
ஆடைநெய்து விற்போர்,பொன்வாணிகர்,இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரகாரமும், இராச வீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழுந் தெருக்களும் அப்பெருநகரில் முறையே அமைந்திருந்தன. இவையன்றி, யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும், அம்பலமும்,முச்சந்தி நாற்சந்திகளும், அருவியோடும் அழகிய செய்குன்றுகளும், இளமரக்காக்களும், பொய்கைகளும், அறச்சாலைகளும், பொன்னம்பலமும், தவப்பள்ளிகளும் விளங்கின. மிகவழகாக அமைக்கப்பட்ட பௌத்த சைத்தியமொன்றும்* அவ்வஞ்சியினுள்ளே திகழ்ந்தது.(மணிமே. காதை.28)

சேரருடைய அரண்மனையானது அம்மூதூரின் மத்தியில்,பொன்மயமானதொரு சிறு மேருப்போலப் பிரகாசித்தது; "நெடுநிலை மேருவிற்,கொடிமதின் மூதூர் நடுநின்
றோங்கிய,தமனிய மாளிகை" என்பர் இளங்கோவடிகள்.† அதனுள் அத்தானி மண்டபமும் (கொலுவிருக்கை), வேத்தியன்மண்டபமும் (மந்திராலோசனைச்சபை), மணியரங்குகளும் (நடனசாலை), பிறவும் மாட்சிமைபெற்று விளங்கின. அரசன் தன் மனைவியுடன் வசந்தகாலத்தைக் கொண்டாடு தற்கென்று அமைந்த 'இலவந்திகை வெள்ளிமாடம்' என்னும் மாளிகை யொன்றுண்டு‡ .இஃதன்றி, நகர்ப்புறத்தே,பொய்
கைகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட 'வேளாவிக் கோமாளிகை' (சிலப்பதி 28: 197-198.)என்னும் ஓர் அழகிய மந்திரமும் அமைந்திருந்தது.
---------
*கோவலனுக்கு ஒன்பதாந்தலைமுறைப் பாட்டனான கோவலனால் வஞ்சிநகரிற் கட்டப்பட்டதாக மணிமேகலையிற் கூறப்படும் பௌத்த சைத்தியம் இதுபோலும். (காதை-28. 123-31)
†சிலப்.28 ‡ ௸.25.4.

page 120
இது 'வேண்மாடம்' எனவும் வழங்கப்படும்.(புறநானூறு 13.) செங்குட்டுவன் மாற்றாந்தாய்ப் பாட்டனும், பொதினிமலைத் தலைவனுமான வேளாவிக்கோமான் பெயர்பெற்றிருத்தலால், இம்மாளிகை அவன் வசித்துவந்தது போலும். இவ்வழகிய மாடம் செங்குட்டுவன்காலத்தே அந்நியவரசர் தங்குதற்கென்று உபயோகப்பட்டது. (சிலப் 28.198.) திருமால் பள்ளிகொண்டருளும் ஆடகமாடம் (சிலப் 26. 62; 30.51.) என்ற ஆலயமொன்றும் வஞ்சிக்குப் பக்கத்திருந்ததாகக் கருதப்படுகின்றது.

இங்ஙனம், சேரரது பழைய இராசதானியாகச் சிறப்பிக்கப்பட்ட வஞ்சியென்பது யாதென ஆராயுமிடத்து, அஃது,இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றுமாகிய கருவூரே(கர்ப்பபுரி என்பர் வடநூலார்.) என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் எதிர்ப்படுகின்றன. முன்னூல்களிற் கூறப்பட்டவாறே, இவ்வூர் ஆம்பிராவதி நதிக்கரையில் உள்ளதாம்; ஆம்பிராவதி என்பது, ஆன்பொருநையின் வடமொழிப்பெயர்; "பொற்பு மலியாம் பிரவதியான் பொருநை யெனவும் புகலுவரால்" என்பது கருவூர்ப்புராணம்(இப்புராணம் இற்றைக்கு 290-வருஷங்கட்குமுன் இயற்றப்பட்டதென்பது. அதன் பாயிரச் செய்யுளால் அறியப்படுகின்றது; இனிய வாக்குடையது; நூலாசிரியர் பெயர்முதலிய வரலாறுகள் விளங்கவில்லை.) [ஆம்பிரம்-மாமரம்] சூதநதி என்று பிங்கலநிகண்டு இதற்கொரு பெயர் கூறுவதும் ஆம்பிராவதி என்பதோடு ஒத்த பொருளுடையதேயாகும்; [சூதம் -மா]. இந்நதி வராக மலையில் உற்பத்தியாகி மாமரச்சோலைவழியே செல்லுதலால் இப்பயர்கள் பெற்றதென்பர். "வஞ்சிப் புறமதிலலைக்கும் கல்லென் பொருநை" "தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்" என முன்னோர் கூறியவாறே,இக் 
காலத்தும், இவ் வாம்பிராவதி கருவூரையொட்டித் தென்றிசையிலிருந்து கீழ்புறமாகவோடி வடக்கேதிரும்பிக் காவிரியுடன் கலக்கின்றது. ”

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages