வெண்பா இலக்கணம் தமிழ்க் கவிதைக்கு இயற்கையாகவே அமைந்துள்ள கட்டுக்கோப்பான யாப்புவகை. அகவல் யாப்பு பேச்சின் வளர்ச்சி. அதற்கும் அடுத்தது வெண்கவி/வெண்பா. யாப்பிலக்கணத்தில் உத்தமம் ஆனது வெண்பா. பாடம் பண்ணுவதற்கு வெண்பா எளிதாக இருப்பது. இதனை ஔவையார், ‘வெண்பா இருகாலில் கல்லானை’ என்ற வெண்பாவில் சொல்லியுள்ளார். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் வெண்பா இயற்றுவோர் எக்காலத்திலும் இருக்கின்றனர். அவர்களைப் பாராட்டி, “எல்லாப் புலவருக்கும் வெண்பா புலி” என்றும் கூறினார். இப்போது Corpora Linguistics என்னும் ஆய்வுத்துறை கணினி நுட்பத்தால் பலம்பெற்று வருகிறது. வெண்பா ஓசை சிதையாமல் இருக்க ஒரு விதி 2000 ஆண்டுகளாகப் புழங்கிவருகிறது. பாம்பன் சுவாமிகள் இதனை முதலில் ஆராய்ந்து கூறியதால், “பாம்பன் சுவாமிகள் விதி” என அழைக்கலாம். அது வெண்பா எழுதத் தொடங்குவோருக்கு உதவுகிறது. சங்க நூல்களின் சுருக்கங்கள், சிலப்பதிகார வெண்பாக்கள், காரைக்காலம்மை பாடிய திருமுறைகளில் உள்ள மூத்த வெண்பாக்கள், புறப்பொருள் வெண்பாமாலை, திருமுருகு வெண்பா, ... என ஏராளம்.
வெண்பாவின் அருமை
-----------------------------------
செந்தமிழ்த்தாய் மின்மகுடச் சீர்வைரம், கற்பனைவான்
வந்து தவழும் வளர்நிலவு,- சிந்தையெனும்
வெற்புவிழும் சொல்லருவி, மேகமழை போல்கருத்தின்
அற்புதம்தான் வெண்பா அறி!
-தில்லைவேந்தன்
பொதுயுகம் 1000-ம் ஆண்டின்பின் ஏற்பட்ட திண்ணைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கணபதியை வணங்கித் தொடங்கும் கடவுள்வாழ்த்துப் பாடல்கள் மிகுதி. ஔவையார் எழுதிய நல்வழி, மூதுரை (வாக்குண்டாம்) முதற்கொண்டு பல முதற்பாட நூல்கள் வெண்பாவில் இருக்கின்றன. அவ்வகையில் உள்ள ஒரு வெண்பாப் போல ஒரு வாழ்த்து 19-ம் நூற்றாண்டுக் கடைசியில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பாடப்பெற்றது, முதலடி தவிர, மூன்று அடிகளும் வெண்பா. எனவே, முதலடி பிறழ்ந்துள்ளது எனலாம். ஒரு நூற்றாண்டு முந்தைய பழய அச்சுப்புஸ்தகங்களைக் கொடுத்துள்ளேன்.
முத்தமிழின் பெருமை
-------------------------------------
ஓங்க லிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்! ஏனையது
தன்னேர் இல்லாத் தமிழ்!
தண்டியலங்கார உரைமேற்கோளாக விளங்கும் வெண்பா மூவடி அளக்கும் சூரியனுடன் முத்தமிழை ஒப்பிடுகிறது. மக்கள் அனைவரும் அறிந்த சூரியனின் செயலை உவமையாகக் குறிப்பிடும் புகழ்பெற்ற பழைய வெண்பா. கதிரோனின் மூவடிகளுடன் தமிழின் மூவிலக்கணங்களை - எழுத்து, சொல், பொருள் (தொல்காப்பியம்) - ஒப்பிட்டுப் பேசும் சீரிய வெண்பா. சங்க கால முடிவில் முத்தமிழ் என்றால் எழுத்து, சொல், பொருள் இலக்கணங்கள். நாடக நூல்களோ, நாடக இலக்கண நூல்களோ சங்கத் தமிழ் இலக்கியங்களில் இல்லை. இதையே அழிபட்ட பரிபாடலில் 2 வரிகள் (பரிமேலழகர், 17-ஆம் நூற்றாண்டின் திருக்குறள் நுண்பொருள் மாலை) புலப்படுத்துகின்றன. “தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்” (குறள். 23, உரை). திருமேனி காரி இரத்தின கவிராயரின், திருக்குறள் நுண்பொருள்மாலையில் இருந்து அழிபட்ட பரிபாடல் வரிகளைக் கண்டு எழுதியவர் தமிழ்த்தாத்தா உவேசா ஆவார்.
"தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையிற் பரந்தன்று வையை'' - இரண்டு வரிகளே மிஞ்சிய பரிபாடல். இதில், தமிழ் மும்மை என்பது என்ன? *இயற்றமிழுக்கு இலக்கணம் செய்த அகத்தியருக்கு* மாணவர் பன்னிருவர் என்பது நாற்கவிராசநம்பி என்னும் சமணர் எழுதிய அகப்பொருள்விளக்கத்தின் பாயிரம். எனவே, தமிழ் மும்மை என்ற பரிபாடலில் உள்ள மூன்று தமிழ் எழுத்து, சொல், பொருள் இலக்கணம் செய்த அகத்தியர் வாழும் பொதியில் எனக் கொள்ளலாம். இருமை என இக பர வாழ்க்கையைக் குறிப்பிடும் குறளுக்கு எழுதிய உரையில், மும்மை என அகத்தியரோடு தொடர்புடைய மூன்று தமிழ் என்ற பரிபாடல் வரியை மேற்கோள் ஆகத் தருகிறார் பரிமேழலகர். முச்சங்கங்கள் என்னும் கதையில், முதல் இரு சங்கங்களில் அகத்திய முனிவர் தமிழ் வளர்த்ததாய் இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உரையிலே உள்ள செய்தி. பொதிகை மலை பாண்டியன் குலபர்வதம், அவன் கொடி. மலயத்வஜ பாண்டியன், மீனாட்சியின் தந்தை என்பது திருவிளையாடல் புராணம். அகத்திய முனியிடம் தமிழ் கேட்டவன் பாண்டிய மகாராசா எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மலயம் என்னும் பொதியில் மலையில் இருந்த தென்னன் என்னும் கடவுள் யார் என்பதில் கருத்து பேதங்கள் உண்டு. தொன்முது கடவுள் (1) சிவபிரான் என்றும், (2) பௌத்த சமயத்தின் போதிசத்துவர் ஆகிய அவலோகிதேசுவரன் என்றும், (3) அகத்திய முனிவன் என்றும் கூறுவர். தென்னன்+பொருப்பு புணர்ந்து தென்னம்பொருப்பு எனப் பரிபாடல் வரியிலும் உள்ளது காண்க. கலைவரலாற்றில் தென்னன் என்னும் தட்சிணாமூர்த்தி வடிவம் அவலோகிதனின் வடிவத்தில் இருந்து அமைக்கப்பட்டது என்பதும், கண்டவியூக சூத்திரம் என்னும் பௌத்த நூலில் அவலோகிதனின் இருப்பிடம் பொதியில் (பொதாலா) என்பதும் பற்றி என் ஆய்வுக்கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன். திபெத்தின் தலைநகரில் உள்ள பொதலா என்னும் அரண்மனை பொதியில் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு என்றும், தலாய் லாமா அவலோகிதனின் அவதாரம் என்ற நம்பிக்கையால் பொதாலா எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
அகத்தியரின் 12 மாணவர்கள் பெயரை முதல்முதலாகத் தொகுத்த பெருமை ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்க்குரியது. தமிழின் பிரிவுகளாக, இயல், இசை, நாடகம் என முதலில் எழுதிய நூல் எது எனப் பார்ப்போமானால், சிலப்பதிகாரம் தான். இயல், இசை, நாடகம் சேர்த்த முத்தமிழின் ஆசான் என அகத்தியரைக் குறிப்பிடும் மரபு சிலப்பதிகார உரை, மற்றும் பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்ற இருவரின் தொல்காப்பிய உரைகளில் காண்கிறோம். கொங்குநாட்டுச் சமணர் ஆகிய அடியார்க்குநல்லார், தமது சிலப்பதிகார உரைப்பாயிரத்துள் “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்துபட்டன” என்கிறார். பரதம் பரதமுனியின் நாட்டிய சாத்திரத்தின் பொழிப்பாகத் தமிழில் எழுதப்பட்ட நூல் போலும். முத்தமிழ் என இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் பற்றி விரிவாக உரைத்தவர் அடியார்க்குநல்லார். “ஓரும் தமிழ் ஒரு மூன்றும் உலகு இன்புற வகுத்துச் சேரன் தெரித்த சிலப்பதிகாரம்” என்றும், “காங்கெயர்கோன் அளித்த சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்று உரை சொல்வித்ததே” (Cf. காங்கேயம்) என்றும் புகழ்ந்துள்ளார்.
எனவே, அகத்தியர், முத்தமிழ் இரண்டையும் சேர்த்துத் திண்ணைப்பள்ளிக்கூட வெண்பாவின் முதலடி எனச் சமைத்துள்ளேன்:
நான் கருதும் செப்பனிட்ட வடிவம் (முதலடி).
அகத்தியர் முத்த மிழரிச் சுவடி
செகத்தலப்ர காசமுடன் செப்ப மிகுத்தெனக்கு
வாரா எழுத்தும் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு
இந்தியாவில் இரு செவ்வியல் மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளன. செந்தமிழ் என்ற சொல்லை மதுரன் தமிழவேள் பாவித்துள்ளார்.
NG> வகையுளி வாராமல் முதலடிக்கு வேறு வடிவம் கொடுக்க முடியுமா? முயன்று பாருங்களேன்..
> ஆம் புரிந்துகொண்டேன்... தமிழ் என்று ஒரு நிரை அசையைக் கூடுதலாகக் கொணர முயலும்போது இடமில்லாமல் போய்விடுகிறது...
அகத்தியர்சீர்ச் செந்தமிழ ரிச்சுவடி முற்றும்
செகத்தலப்ர காசமுடன் செப்ப மிகுத்தெனக்கு
வாரா எழுத்தும் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு
- மதுரன் தமிழவேள்
நா. கணேசன்
திண்ணைப் பள்ளிக்கூடப் பாட்டு
-------------------------------------------------
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி (தொடக்கம் 1864-ம் ஆண்டு! ) ஒரு மாணவர் மலரில் இருந்தது. அது திண்ணைப்பள்ளிக் கூடச் சிறார் சொல்லும் கணபதி வணக்கம் எனத் தெரிகிறது. இது 5 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மடல்.
இப்போது இப்பாட்டின் முழுவடிவம் கிடைக்கிறது. பரவலாக இப் பாடல் இருந்துள்ளது.
(1)
T(TirumaNam) Chelvakesavaroya Mudaliar, M.A.
Tamil, An Essay.
New Impression, Madras Diocesan Press, Vepery [Original Edition, January 1906]
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007428_Tamil.pdf
பக்கம் 57,
“அகத்தியமா முனியருளா லருந்தமிழா லரிச்சுவடி
செகத்திற் ப்ரகாசமுடன் செப்பவே - மிகுத்தெனக்கு
வாரா வெழுத்தெல்லாம் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு”
என நெடுங்காலமாய் வழங்கும் அரிச்சுவடி எக்காலத்ததோ? அக்காலத்தில் அட்சராப்பியாச காலத்தில் முதலில் என்ன புஸ்தகம் வழங்கினரோ? இதுபோன்றவைகளை இப்பொழுது எவ்வாற்றானும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ”
(2) இதே திண்ணைப் பள்ளிக்கூடப் பாட்டு இந்த “ஹரிச்சுவடி” நூலிலும் உள்ளது. (1924).
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0016868_பெரிய_ஹரிச்சுவடி.pdf
அகத்தியமா முனியருளா லருந்தமிழா லரிச்சுவடி
ஜெகத்திற்பிரகாசமுடன் செப்பவே - மிகுத்தெனக்கு
வாரா வெழுத்தெல்லாம் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு
முதலடிதான் சிக்கல், ஏனைய அடிகள் எளிது.
நான் கருதும் செப்பனிட்ட வடிவம்.
அகத்தியர் முத்த மிழரிச் சுவடி
செகத்தலப்ர காசமுடன் செப்ப மிகுத்தெனக்கு
வாரா எழுத்தும் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு
(இன்னும் சிறப்பாக முதலடி அமையக்கூடும்.)
கோத்தல் > கோர்த்தல், சேவை > சேர்வை, கோவை > கோர்வை, வேவை > வேர்வை... போல, நாட்டுப்பாடல்களில் காத்தல் > கார்த்தல் என்றும் வரும்.
காருமம்மா, காருமையா எனக் கிராமப்புறப் பாட்டுகளில் கேட்கிறோம். காரும் என்பது
போலக், “காராய்” என இந்த திண்ணைப் பள்ளிக்கூடப் பாட்டில் உள்ளது. காராய் = காக்க.
மிகப் பின்னால் ஏற்படும் சொல், கார்த்தல். எனவே, இந்தப் பள்ளிப் பாட்டு ~17 அல்லது 18-ம் நூற்றாண்டில் தோன்றியதாகலாம்.
முதலடிக்கு வேறு வடிவம் கொடுக்க முடியுமா? முயன்று பாருங்களேன். நன்றி.
நா. கணேசன்