ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை
அளந்திடவே முடியுமா ?
அகிலத்தில் திருக்குறள் போல் ஆச்சரியம் உண்டா ?
கார்கால மேகம் போல் ,கருத்துமழை பொழியும் ,
கவின்குறள்பா வள்ளுவர்போல்
இயற்றயார் உள்ளார் ?
பார்புகழும் பாயிரத்தில் இறைவாழ்த்து தொடக்கம்!
பகுத்துஉண்ணும் இல்லறமும், வான் சிறப்பும் அடக்கம் !
ஊர்மெச்ச வாழ்ந்துசென்ற நீத்தாரைப் புகழ்ந்தார் !
ஊழ்வலிமை, வல்லான்கை வகுத்தவகை என்றார் !
துறவறத்தில்,வாய்மையும் ,கருணையும் வேண்டும் !
துன்பத்தை சிரித்தபடி ஏற்கவும் வேண்டும்!
இறப்பையும் வெல்வதற்கு நற்செயல்கள் வேண்டும்!
இன்பத்தில் உண்டுதுன்பம் இதைஉணர வேண்டும் !
பறக்கின்ற காக்கைக்கும்,
பரந்தகுணம் உண்டு
படிக்காத மூடருக்கோ விலங்கறிவே உண்டு !
சிறப்பான குறளாலே சிந்திக்க வைத்தார் !
சீர்திருத்தக் கருத்தால்நல் சமுதாயம் விதைத்தார் ;
வாழ்க்கைக்கு தேவையாம் வள்ளுவரின் அதிகாரம்!
வாடாமல் கடைப்பிடிப்போம்
வளம்சேர்க்கும் அதிகாரம் !
காழ்ப்புணர்ச்சி ,கோபதாபம் விட்டொழிக்கும் அதிகாரம் !
கல்விநட்பு ,புகழ்என்றே பலசொல்லும் அதிகாரம் !
பாழ்வினைகள் தரும்துன்பம் பகன்றிடும் அதிகாரம் !
படை,மாட்சி தூது,நாடு பலபேசும் அதிகாரம் !
சூழ்நிலைகள் அறிவுறுத்தும் ஈற்றடிகள் அதிகாரம் !
சுகம்பெறவே தினம்படிப்போம் வள்ளுவரின் அதிகாரம் !
வான்புகழ் வள்ளுவத்தை வாழ்க்கையாக்கி,
வளம் பெறுவோம் !
உளம் களிப்போம்!
நன்றி
வணக்கம்
சுதா வேதம்