அத்தமக செம்பருத்தி.... (சிறுகதை)
புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.
ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு அசத்திபுட்டா அத்தக்காரி அஞ்சுகம்.
வாய்க்காவோர ஆலவிழுதுல அவ ஊஞ்சல் ஆடுற அழக ரசிக்க ஊருகண்ணெல்லாம் போட்டி போடும்......
செம்பருத்திக்கும் எனக்கும் ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு....
கோவத்துல நான் கத்த ஆரம்பிச்சா மாமான்னு ஒரு வார்த்த அவ சொல்லி தலைய சாச்சு பார்ப்பா....படக்குன்னு பஸ்ஸ புடிச்சு பட்டணம் போயிரும் கோவமெல்லாம்.
****************************************************************************************************************
ஒலகத்துல அழகானது நிலாவும் இல்ல மழையும் இல்ல புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான்.
தங்கம்போல தகதகக்குற அழகுமுகம்; வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.
காள பொறக்குமோ பசு பொறக்குமோன்னு தெரியலை...
ஒம்பது மாசமாச்சு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா நகர்ந்துச்சு..
முள்ளுகுத்தினா கூட தாங்கமாட்டா.. புள்ள பெக்குற வலிய
எப்படித்தாங்குவாளோன்னு படபடன்னு அடிக்குது நெஞ்சு...
பொம்பளைக்கு புள்ளய குடுத்துபுட்டு ஆம்பளைக்கு வலிய
குடுத்திருந்தா கையெடுத்து கும்பிட்டிருப்பேன் கடவுள....
அய்யோ அம்மான்னு கத்துறா என் உசிர சொமக்கற மகராசி...
தூரத்துல ஒரு வேதகோயில் சிலுவ தெரியுது
புள்ள நல்லா பொறந்தா நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..
புள்ள பொறந்த சேதிய அழுக சத்தம் சொல்லிடுச்சு.
ஓடிப்போயி பார்த்தேன் கறுப்புகலருல காளகன்னு
கையி கால ஆட்டுது..
இம்புட்டு சின்னதாவா இருக்கும் மூக்கும் முழியும்?
கட்டியிருந்த வேட்டி அவுந்ததுகூட தெரியாம சந்தோசத்துல மெதக்க ஆரம்பிச்சேன்.
**************************************************************************************************************
புள்ளய எங்கையில கொடுத்துபுட்டு இடிய எங்காதுல
சொல்லுறா நர்சு...
புள்ள சத்தம் கேட்டநிமிசம் செம்பருத்தி சத்தம்
நின்னுடுச்சாம்...
அய்யோ! அம்மா! ஊர்காவல் முண்டக்கன்னியாத்தா!
இந்த எழவெடுத்த நர்சு சொல்றது நிசந்தானா?
உடம்பெல்லாம் வேர்த்து போச்சு,காலுரெண்டும் கிடுகிடுன்னு நடுங்குது.
*************************************************************************************************************
பதினாறு நாள் விசேசம் முடிஞ்சுபோயாச்சு...
செம்பருத்திய பொதச்ச இடத்துல புல்லுபூண்டு
வளர்ந்தாச்சு..
கம்பியூட்டரு இருக்குன்னாக செகப்பு வெளக்கு
வேன்வண்டி இருக்குன்னாக
என்ன இருந்து என்னத்த செஞ்சாக..
வெள்ளச்சட்ட டாக்டரு மட்டும் இருந்தா போதுமா
வசதி ஏதும் இல்லைன்னா ஆசுபத்திரின்னு சொல்லலாமா?
புள்ள பெக்கற வசதி குறைவா இருந்த ஆசுபத்திரிய நம்பினதுக்கு
கை நடுங்கின மேலத்தெரு மருத்துவச்சிய
நம்பி இருக்கலாம்.
**************************************************************************************************************
-நிலாரசிகன்.
2008/3/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:
முடிவில்லாத கேள்வியோடு ஒரு சிறுகதை. நல்லா இருக்கு. வட்டார வழக்கு கையாண்ட விதம் அருமை.
2008/3/8 NilaRaseegan <nilara...@gmail.com>:
--என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
Help Ever Hurt Never
Love All Serve All
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.2008/3/13 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:அதைத் தானே சாப்பிட்டு வைக்கிறீங்க அப்பறம் கொல்லாமா என்ன செய்வான்.
On 3/18/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
பைத்தியங்கள் (ஒரு பக்க கதை)
இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது.
இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.
காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.
கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்
இல்லை.
தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.
கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.
இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.
குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்
ஒருவர்.
ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.
அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.
வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.
கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.
சத்தமிட்டு சிரிக்கத் துவங்கினான் கந்தபழனி.
பைத்தியமா அவனுக்கா? !! அப்படித்தெரியலியே!! :)) நிலவையும் குழந்தையாய் எண்ணும் பிள்ளை மனசுக்காரன் இயற்கை நேசிப்பாளன்..:))
--
-~----------~----~----~----~------~----~------~--~---
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
Help Ever Hurt Never
Love All Serve All
இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.
வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. குனிந்து முள்ளை எடுக்க நேரமில்லை. நொண்டிக்கொண்டே அடுத்த தெருவிற்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்று பார்த்தேன்.
தூரத்தில் நின்றிருந்தார் முருகேசு அண்ணன். கைகாட்டிக்கொண்டே நொண்டி நொண்டி அவரிடம் சென்றேன்.
பிளாஸ்டிக் செருப்பைஅவரிடம் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்கிய கோணிப்பைக்குள் போட்டுக்கொண்டார்.
"ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணா" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னேன்.
என் கையில் ஐஸ்ஸை தந்துவிட்டு ஐஸ்வண்டியை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.
கையில் வாங்கியவுடன், போன வருட கோவில் திருவிழாவில் சேமியா ஐஸ் வாங்க தேவையான ஒரு ரூபாயை சேர்க்க நான் பட்டபாடு நினைவுக்கு வந்தது.
இரண்டு மைல் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் கந்தசாமி அண்ணாச்சி தோட்டத்தின் வேலியோரம் விழுந்துகிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி, வரும் வழியில் வாய்க்காலில் கழுவியெடுத்து, கோவில் வாசலருகே பழைய பேப்பர் விரித்து நெல்லிக்காய்களை விற்று ஒரு ரூபாய் சேர்த்துதான் சேமியா ஐஸ்வாங்கினேன்.ரூபாய் இல்லாவிட்டால் கண்ணாடி பாட்டில்,பிளாஸ்டிக் செருப்பு,உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் ஏதேனும் கொடுத்தால் ஐஸ் வாங்கலாம்.
உள்ளங்காலில் முள் உறுத்தியது. கையில் வழிகின்ற சேமியா ஐஸ்ஸை விறுவிறுவென்று தின்றுமுடித்து அருகிலிருந்த தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்துகொண்டு உடைந்த முள்ளை விரல் நகத்தால் எடுத்தபோது "பளார்" என்று என் முதுகில் ஒரு அறை விழுந்தது.
வலியுடன் திரும்பி பார்த்தால், கண்கள் கோபத்தில் மின்ன,பத்தரகாளி போல் நின்றிருந்தாள் சின்னம்மா.எனக்குத் தெரியும் சின்னம்மாவிடம் சிக்குவேனென்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
ஆடுகளுக்கு புல் அறுக்க மட்டும்தான் சின்னம்மா வீட்டை விட்டு வாய்க்கால் ஓர தோட்டத்திற்கு வருவாள். மற்றபடி எப்பொழுதும் அடுப்பங்கரையிலும் ஆட்டுக்காடியிலும்தான் இருப்பாள்.
அவளுக்கு எதற்கு பிளாஸ்டிக் செருப்பு? சந்தைக்கு அப்பாவுடன் போகும்போதுகூட வெற்றுக்காலுடன் போவதுதான் சின்னம்மாவிற்கு பிடிக்கும். எதற்கும் உபயோகமில்லாத செருப்பால் இன்று ஒரு சேமியா ஐஸ்
என் வயிற்றுக்குள் இருக்கிறது. கூடவே முதுகில் விழுந்த அடியின் வலியும்.
சின்னம்மா கையில் சிக்கினால் வேப்ப மரத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடியால் அபிசேகம் பண்ணிவிடுவாள்.போன மாதம் கபடி விளையாடிவிட்டு விளக்குவைத்த பிறகு வீட்டிற்கு வந்ததற்கு இரவு இரண்டுமணிவரை வேப்பமரத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. செத்தாலும் சின்னம்மாவிடம் சிக்கக்கூடாது என்று ஓட ஆரம்பித்தேன். கொஞ்சதூரம் விரட்டிக்கொண்டு வந்தாள், பின் முடியாமல் இடுப்பில் கைவைத்து நின்று ஏதேதோ கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு திரும்பி போய்விட்டாள்.
இருட்ட ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்திருந்தேன். பசி தாங்கமுடியாமல் வயிறு வலிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்காது. மிளகாய் தூள் மட்டும் இனிப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசியுடன் உறங்ககூடாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. சரி வருவது வரட்டும் வீட்டிற்கு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.
வீட்டை நெருங்க நெருங்க இதயம் துடிக்கும் சத்தம் காதுகளில் கேட்டது. வாசற்கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்றேன். தோள்துண்டை சுருட்டி தலைக்கு வைத்து திண்ணையில் படுத்திருந்தார் அப்பா. நல்ல உறக்கத்தில் இருக்கிறார் என்பதை உரத்த குறட்டை சத்தம் சொல்லிற்று.
அடுப்பங்கரையின் ஓரத்தில் பாய்விரித்து படுத்திருந்தாள் சின்னம்மா. பக்கத்தில் தங்கச்சி பாப்பா வாயில் கைவைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தது. சின்னம்மாவின் தலைக்குமாட்டிலிருந்த சோற்றுப்பானை என்னை கூப்பிடுவதுபோல் இருந்தது.பூனைபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து சோற்றுப்பானையில் கைவைத்தேன்.
பானையை மூடியிருந்த அலுமினியத் தட்டு தவறி சின்னம்மாவின் கையில் விழுந்துவிட்டது. சட்டென்று எழுந்தவள் என்ன செய்தாள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.இரண்டு மணிவரை வேப்பமரத்துடன் இருப்பவன் இன்று ஐந்துமணிவரை வேப்பமரத்தில் ஒண்டியிருந்தேன். பிள்ளையார் கோவில் பாட்டுச்சத்தத்தில் எழுந்துவிட்டேன். அசதியில் நின்றுகொண்டே உறங்குவது பழக்கமான ஒன்றுதான். ஆனாலும் கால்வலி விண் விண் என்றது.
ஐந்துமணிக்கு சின்னம்மாவின் கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டபின்னரே என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் அப்பா. என்னவோ அறிவுரையெல்லாம் சொல்லியவாறே சோற்றை பிசைந்து ஊட்டினார். அரைப்பானை சோற்றை விழுங்கிவிட்டு திண்ணையில் படுத்துறங்கிவிட்டேன்.
திண்ணை சூடாக ஆரம்பித்த மதிய வேளையில் முழித்து சுவற்றில் பதிந்திருக்கும் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். சின்னம்மா அடித்த அடியால் கன்னம் இரண்டும் தக்காளிபோல் சிவந்து வீங்கியிருந்தது.
தூரத்தில் எங்கோ ஐஸ்வண்டிக்காரரின் மணிச்சத்தம் கேட்டதில் மனதில் சேமியா ஐஸின் பிம்பம் பெரியதாய் தோன்ற வீட்டிற்கு வெளியே கிடந்த சின்னம்மாவின் புதுச்செருப்பைக் கண்டு சிரித்து ஆரம்பித்தேன்.
-நிலாரசிகன்.
நட்புடன்,
ஜே கே | J K
சேமியா ஐஸ் - சிறுகதை
தனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?
துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கட்டையன்தான்
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.
தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.
நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.
கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும். "எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்"
"ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு"
எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.
ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.
"என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல" டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.
"வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்" என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.
இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.
தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.
"எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்"
அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.
தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.
திருமண நாளும் வந்தது.
பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.
நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
பின் கதைக்குறிப்பு:
ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் "தனலட்சுமி டாக்கீஸ்"க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
-நிலாரசிகன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
தாய்மை -சிறுகதை
கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். தலைப்பாகைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து குலுக்கிப்பார்த்து திறந்தபோது உள்ளே ஒரே ஒரு உடைந்த தீக்குச்சி மட்டுமே இருந்தது. தீப்பெட்டியை தூர எறிந்துவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த முதியவரை வழிமறித்தான்.
"நெருப்பு இருக்கா பெருசு?" கையில் அரிவாளுடன் நெருப்பு கேட்டால் யாருக்குத்தான் பயம் வராது? அதுவும் கண்கள் இரண்டும் சிவந்து உக்கிரத்துடன் அரை பனைமர உயரத்தில் ஒருவன் கேட்டால் குலைநடுங்காமல் என்ன செய்யும்? தீப்பெட்டியை கொடுக்கும் போது கை நடுங்கியது பெரியவருக்கு. பீடிக்கு நெருப்பு வைத்துவிட்டு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்கும்போது "இன்னைக்கு இந்த பீடி எரியுற மாதிரி நாளைக்கு எம் பொஞ்சாதி எரிவா" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் கந்தசாமி. ஒன்றும் புரியாமல் நகர்ந்து சென்றார் பெரியவர்.
மனதிற்குள் பல கேள்விகள் இருந்தாலும் தன்னுடன் வேலை செய்யும் இருளப்பன் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் கந்தசாமியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"என்ன கந்தா ஒம் பொஞ்சாதி அடிக்கடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூமுக்கு போயிட்டு வர்றா? காலம் கெட்டு கெடக்குது அவ்வளவுதான் சொல்லுவேன்"
இருளப்பன் வைத்த தீ கந்தசாமியின் கண்களில் தெரிந்தது.
நடையின் வேகத்தை கூட்டினான். அரிவாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்திருந்தது கந்தசாமியின் வலதுகை. இவனுடைய வேகத்தைக் கண்டு
ஊர்க்கோடியில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வெட்டியான் "ஊருக்குள்ள இன்னைக்கி ஒரு பொணம் விழுதுடோய்" என்று சந்தோஷமாக சங்கில் படிந்திருந்த தூசியை பழைய துணியால் துடைக்க ஆரம்பித்தான்.
கந்தசாமியின் அக்காள் மகள்தான் காமாட்சி. கட்டினால் மாமாவைத்தான் கட்டுவேனென்று ஒத்தைக்காலில் நின்று கந்தசாமியை திருமணம் செய்துகொண்டவள். அவளா இப்படி? இருளப்பன் முதலில் சொன்னபோது நம்பாமல் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு போய்விட்டான் கந்தசாமி.
ஆனாலும் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக தினமும் இரு முறை தோட்டத்திற்கு காமாட்சி போகவேண்டும். அதுவும் இந்த கருக்கல் நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனக்குள் இருந்த சந்தேக மிருகம் மெல்ல வளர்ந்து பெரு உருவமாய் காட்சியளிக்க ஆரம்பித்தவுடன் குடிசைக்கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
போன மாதம் நிறைமாத கர்ப்பிணியாக காமாட்சி இருந்தபோது இருந்த சந்தோசமும், இறந்தே குழந்தை பிறந்ததை தயக்கத்தோடும் கண்ணீரோடும் காமாட்சியிடம் சொன்னபோது கொஞ்ச நேரம் ஓவென்று அழுதவள் பின்னர் இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு "நீங்கதான் மாமா எனக்கு கொழந்த எல்லாமே" என்று அவள் உருகியபோது அடைந்த சந்தோஷமும் இப்போது அவளை வெட்டி எறிய போகின்ற நேரத்தில் கந்தசாமிக்கு நினைவுக்கு வந்தன.
தான் வேலைசெய்யும் தோட்டத்தின் முதலாளி நல்லவர்தான் ஆனால் அவரது மகன் தான் சரியில்லை என்பது கந்தசாமியின் நெடுநாளைய எண்ணம். வெளிநாட்டில் படித்தவன் என்பதால் எப்போதும் "டிப்-டாப்" ஆசாமியாக உலா வந்த முதலாளியின் மகனை ஊரிலுள்ள இளவட்ட பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்பிளந்தார்கள். போன வாரம்கூட முதலாளியின் வீட்டுவேலைக்கு காமாட்சி போய்வரும்போது கையில் பெரிய பெளடர் டப்பா ஒன்றை கொண்டுவந்தாள். "பாரு மாமா எவ்ளோ வாசமா இருக்கு, நம்ம சின்ன மொதலாளி தந்தாக" வெள்ளந்தியாக அவள் சொன்னதை அன்று இவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இத்தனைநாட்கள் தன்னை முட்டாளாக்கிவிட்டாளே அந்த பாதகி என்று கருவிக்கொண்டே தோட்டத்தை வந்தடைந்தான் கந்தசாமி. தூரத்தில் மோட்டார் ரூம் தெரிந்தது. அதற்குள்தானே இருக்கிறார்கள் இருவரும்? பெளடர் கொடுத்து மயக்கிய முதலாளியின் மகனின் தலையை இரண்டாக பிளக்காமல் இந்த அரிவாள் கீழே இறங்காது..
வரப்பில் விறுவிறுவென்று நடந்து மோட்டார் ரூம் நோக்கி முன்னேறினான்.
மோட்டார் ரூமின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சேற்றுக் காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் அந்த தகரக் கதவு படாரென்று திறந்துகொண்டது. சுவர்பக்கம் திரும்பி தன் ஆடையை சரிசெய்து கொண்டிருந்த காமாட்சி கதவு திறந்த சத்தத்தில் வெடுக்கென்று திரும்பி பார்த்தாள். கையில் அரிவாளும் கண்களில் வெறியுடனும் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தவுடன் ஆடிபோய்விட்டாள் காமாட்சி. பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள்.
"என்னை மன்னிச்சுடு மாமா. உனக்கு தெரியாம இங்க வந்தது எந்தப்புதான். நம்ம குழந்த செத்தே பொறந்ததால மாரு கட்டி வலி எடுக்கும்போதெல்லாம்
வீட்டு புறவாசல் பக்கத்துல நின்னு தாய்ப்பாலை பீச்சி வெளியேத்துவேன். அப்போதான் ஒரு தெருநாய் நம்ம வீட்டு வேலிக்கு பக்கத்துல ஆறு குட்டி போட்டிருக்கறது தெரிஞ்சது.
போன வாரம் கார்பரேசன் கார படுபாவிங்க அந்த தெருநாயயும் நாலு குட்டிகளையும் பிடிச்சிட்டு போயிட்டாங்க. பஞ்சாரத்துக்குள்ள ரெண்டு குட்டிங்க கிடந்ததால இந்த ரெண்டும் தப்பிச்சிடுச்சி. உனக்குதான் நாய்,பூனையெல்லாம் பிடிக்காதே. அதனாலதான் குட்டிகளை கொண்டு வந்து இந்த மோட்டார் ரூமுல வச்சிருக்கேன். வீணா போற தாய்ப்பாலை இந்த குட்டிங்க ரெண்டும் குடிக்கிறத பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? அங்க பாரு மாமா" கடகடவென்று பேசிவிட்டு அந்த சிறிய அறையின் மூலையை நோக்கி கைகாட்டினாள் காமாட்சி.
சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில் இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.
புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.
-நிலாரசிகன்.
சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில் இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.
புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.
முதலில் கிராமம்,பம்ப் ரூம்,மனைவியின் தவறென கென்னின் சிறிது காமம் சிறுகதையை நினைவு கூர்ந்தாலும் கடைசியில் அழகான கவிதையாக முடிந்தது உங்கள் சிறுகதை.
வாழ்த்துக்கள் நிலா :)
--
ssssuuuuuuuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrr
ஒடோகொயிலியஸ்
விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்கதை
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை
எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து
என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது
கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில் அவருடைய வலைப்பதிவை படித்ததிலிருந்து ஜெனியின்
பிடிவாதம் அதிகமாகிவிட்டது. "உலகிலேயே அதிக ருசி கொண்ட மாமிசம் மான்கறிதான்"
என்று ஜெனியின் கொள்ளுப்பாட்டன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதை படித்ததிலிருந்து தனக்கும்
மான்கறி வேண்டும் என்று அடம்பிடித்தாள் ஜெனி.
பிற உயிர்களை கொன்றால் என்ன நடக்கும் என்கிற எண்ணம் வந்தவுடன் ஜேம்ஸுக்கு பயம் தொற்றிக்கொண்டது. இரு புறாக்களை வேட்டையாடி சமைத்து தின்றதால் முதுமை ஊசி போடப்பட்டு ஒரே நிமிடத்தில் நாற்பது வயதை அடைந்துவிட்ட தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. நாற்பது வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள மரங்களை பராமரிப்பது, ஒவ்வொரு தெருவிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதும்தான் வேலை என்றாகிவிடும்.
ஜெனிக்காக மானை வேட்டையாடி பிடிபட்டால் நாளைக்கே நாற்பது வயதாக்கி விடுவார்கள். அதன்பிறகு இப்போது போல் மாதம் இருநூறு கோடி சம்பளம் கிடைக்காது. பென்சன் பணம் மாதம் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
இரண்டு கோடிக்கு ஒரு பழைய கார் கூட வாங்க முடியாது. ஆனாலும் ஜெனிக்காக இதைச் செய்தே ஆக வேண்டும். அதுவும் அரசிடம் பிடிபடாமல் செய்தாகவேண்டும். காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
"ஹாய் டியர் என்ன ரொம்ப யோசனையில இருக்க?"
பின்புறமாக வந்து
ஜேம்ஸைக் கட்டிக்கொண்டு அவன் முதுகில் கன்னம் பதித்தவாறே கேட்டாள் ஜெனி.
"நான் முடிவு பண்ணிட்டேன் ஜெனி. உனக்காக மானை வேட்டை ஆட போறேன்"
தீர்க்கமான குரலில் சொன்னான் ஜேம்ஸ்.
"வாவ்…எப்படி ஜேம்?"
"எப்படின்னு முடிவு பண்ணல ஆனா இன்னும் சரியா மூணு மாசத்துல என் செல்ல ஹனிக்கு மான்கறியை நானே ஊட்டிவிடுவேன்" என்றபடி அவளது இதழ்களை ஈரமாக்கினான்.
சொன்னதை செயல்படுத்த தினமும் பல மணி நேரம் உழைத்தான் ஜேம்ஸ். உலகில் மொத்தம் மிஞ்சியிருப்பது இரண்டு மான்கள் மட்டும்தான் என்கிற செய்தி படித்தவுடன் தன் மூதாதையர்களை திட்டித்தீர்த்தான். அந்த இருமான்களும் வல்லநாடு மலையில் வசிப்பதை அறிந்துகொண்டான். மலையை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயற்கைகோளை உருவாக்கி இருந்தது அரசு.
அந்த செயற்கைகோளை மீறி எப்படி அந்த மான்களை நெருங்குவது என்று யோசித்தான் ஜேம்ஸ்.
மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. அதன் பிறகு இரண்டு வாரங்களாக ஜேம்ஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்கு கீழே நூறு அடி ஆழத்திலிருந்த தன்னுடைய ரகசிய அறையில் மும்முரமாக ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஜேம்ஸ்.
இருவாரங்களாக ஜேம்ஸிடமிருந்து எவ்வித தொடர்புமின்றி துடித்தாள் ஜெனி.
தன் படுக்கை அறையின் சன்னல் வழியே கடந்து செல்கின்ற தூரத்து பறவைகளை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள் .
திடீரென்று தன் கன்னத்தில்
யாரோ கிள்ளுவது போன்று உணர்ந்து வெடுக்கென்று எழுந்து நின்றாள். அந்த அறையில் அவளைத்
தவிர யாருமில்லை.
சன்னமாய் அவள் காதருகே ஒரு குரல் கேட்டது. "ஹனி மை டியர் ஜெனி"
ஜேம்ஸ்ஸின் குரலைக் கேட்டவுடன் திடுக்கிட்டாள். "ஜேம்ஸ் வேர் ஆர் யூ" பதட்டத்துடன் கேட்டாள் ஜெனி. திடீரென்று அவள் கண்ணெதிரே தோன்றினான் ஜேம்ஸ்.
"ஹே ஜேம்ஸ் நீ எப்படி இங்கே வந்தே?"
"வெரி சிம்பிள் டியர், இப்போ நான் நினைச்சா யார் கண்ணுக்கும் தெரியாம மறைய முடியும். ரெண்டு வாரமா இதுக்காகத்தான் என்னோட ரகசிய அறையில உழைச்சேன் ஜெனி. இதோ பார் இந்த ஆரஞ்சு கேப்ஸூலை சாப்பிட்டா உடனே கண்ணுக்கு தெரியாம மறஞ்சுடலாம். எப்போ திரும்பவும் சகஜ நிலைக்கு வரணுமோ அப்போ இந்த வயலட் கேப்ஸூல் சாப்பிடணும். இனிமே அந்த மான்கறி இந்த மானுக்குத்தான்" என்றபடி அவள் கன்னத்தில் தட்டினான்.
தில்லியிலிருந்து தன்னுடைய காரில் மூன்று நிமிடத்தில் நெல்லைக்கு வந்து சேர்ந்தான் ஜேம்ஸ். திருநெல்வேலியில் காரை நிறுத்திவிட்டு ஆரஞ்சு மாத்திரையை விழுங்கி, அங்கிருந்து வல்லநாடு வந்து மூன்று மணி நேரத் தேடலுக்கு பின்னர் ஐம்பதடி தூரத்தில் ஒரு மானைப் பார்த்தான். கொஞ்சம் தழைகளை எடுத்து அதற்குள் ஆரஞ்சு மாத்திரையை வைத்து மானுக்கு கொடுத்தான். அதை தின்றவுடன் மானும் மறைந்துபோனது.
ஜெனி வீட்டு வாசற்கதவில் பொருத்தியிருந்த கணினியிடம் உள்நுழைய அனுமதி பெற்று வீட்டு வாசலில் மானுடன் நின்றுகொண்டிருந்தான் ஜேம்ஸ்.
ஜெனி வீட்டு வேலைக்கார ரோபோ ஜேம்ஸிற்கு வணக்கம் சொன்னது.
"குட் ஈவ்னிங்" என்றவாறே வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் மானை வைத்துவிட்டு ஜெனியைத் தேடினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
"அரசை ஏமாற்றி மானை கடத்த முயன்ற குற்றத்திற்காக உங்களுக்கு முதுமை ஊசி போடப்படும். பிற உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அந்த குற்றத்தை ஊக்கப்படுத்தியதற்காக மூன்று முதுமை ஊசிகள் போடப்பட்டிருக்கிறது உங்கள் காதலி ஜெனிக்கு. நாளையிலிருந்து இந்தத் தெருவின் கழிவறைகளை சுத்தம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்" கரகரத்த குரலில் பேசிவிட்டு எழுந்து சென்ற மான் வடிவ ரோபோவைக் கண்டு உறைந்து நின்றான் ஜேம்ஸ். மெல்ல அவன் தோள் தொட்டாள் மூதாட்டி ஜெனி.
(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)
-நிலாரசிகன்.
கதை நல்லாருக்கு நண்பா! கடைசியில் ஏதேனும் திருப்பம் இருக்கும் கதை என்று நினைத்துக்கொண்டேதான் படித்தேன்,ஆனால் இப்படிப்பட்ட திருப்பம் கொடுப்பாய் என நினைக்கவில்லை! வாழ்த்துக்கள்
On 6/25/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
2008/6/24 Dr. M. Sivasankar <sivasan...@gmail.com>:
நானும் முடிவை எதிர்பார்க்கவில்லை நிலா, ஆனால் எப்படியும் கள்ளத்தொடர்பு இருக்காது என்று யூகித்தேன், தல, இதையெல்லாம் ஏதேனும் வார இதழ்களுக்கும் அனுப்பலாமே? அற்புதமாக இருக்கின்றன, இல்லையென்றால் நிலா சிறுகதைகள் என்று அடுத்த தொகுப்பாக புத்தகமாக வெளியிடுங்கள் தலை....அற்புதம், வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
சிவா
2008/6/24 jmms <jmms...@gmail.com>:
--
Dr.M.Sivasankar, Wipro Technologies, Bangalore , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/
On 7/3/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்கதை
On 6/17/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
சேமியா ஐஸ் - சிறுகதை
நீங்கள் சிறுகதை எழுதும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நல்ல நடை.வாழ்த்துக்கள்.ப்ரியத்துடன்,கோகுல்
"குப்பைக்காரன்"
- அறிவியல் சிறுகதை
முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் "உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் "என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் தேடி
ஏமார்ந்து போனான்.
வில்லியம்ஸ் உலகப் புகழ் பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளிலேயே அதிபுத்திசாலியாக தானிருந்தும் மற்றவர்கள் "குப்பைக்காரன்" என்று தன்னை அழைப்பதை வில்லியம்ஸ் கொஞ்சமும் விரும்பவில்லை.இவனொன்றும் தெருவில் போடப்படுகின்ற குப்பைகளை அள்ளும் குப்பைக்காரன் அல்ல.
விண்வெளியில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சிறியதும் பெரியதுமாக பல லட்சம் ஓட்டை உடைசல்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் செயலற்றுப் போன செயற்கைக்கோள்களின் கழன்ற உறுப்புகள். செயற்கைக்கோள்களைச் செலுத்திய ராக்கெட்டுகளின் உடைந்த பாகங்களும் இதிலடங்கும். இந்த விண்வெளிக்குப்பைகளை லேசர் கற்றை மூலமாக இங்கிருந்தே அழிப்பதுதான் வில்லியம்ஸின் வேலை.
எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல ஜடாயுவின் பயணம் செய்யப்போகும்
வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அவர்கள் அனைவரையும் பழிவாங்கும் கொடூர எண்ணம் வில்லியம்ஸுக்கு தோன்றியது.
உடனடியாக செயலில் இறங்கிவிட்டான். விண்வெளியில் ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகம் சுற்றிக்கொண்டிருப்பதை தொலைநோக்கியில் பார்த்தவுடன் அவனது மூளைக்குள் குடிகொண்டிருந்த கொடூர எண்ணம் உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.
வழக்கமாக இது போன்ற குப்பைகளை லேசர் கற்றை செலுத்தி அழித்துவிடுவது இயல்பு. அதுதான் அவனது வேலையும் கூட. ஆனால் இப்போது அந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான் வில்லியம்ஸ். இரு வார கடும் முயற்சிக்குப் பின் வில்லியம்ஸ் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அந்த ராக்கெட் துண்டு பயணித்தது.
இதற்கிடையில், இவன் செய்கின்ற வேலையைக் கண்காணிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்குத் தெரியாமல் இதனை செய்தாகவேண்டும். ஏனெனில், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அந்த ரோபோ இவனது மேலாளருக்கு ரிப்போர்ட் அனுப்பும். ஆனால் அதிபுத்திசாலியான வில்லியம்ஸுக்கு அந்த இயந்திர மனிதனை கட்டுப்படுத்துவது பெரிய விசயமாக இருக்கவில்லை. ரோபோவுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் கணினியில் புதிதாய் ஒரு புரோக்ராம் எழுதி ரோபோவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா விண்ணுக்கு செலுத்திய கொலம்பியா ஓடத்தின் இறக்கை மீது ஏதோ ஒரு பொருள் மோதியதால் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் உட்பட ஏழு விஞ்ஞானிகளின் உயிர் பறிக்கப்பட்டது. அது ஒரு தற்செயலான நிகழ்வு.
அதே போல் இந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை மூலமாக செலுத்தி
இந்தியா விண்ணிற்கு அனுப்ப இருக்கும் "ஜடாயு" ஓடத்தில் மோதச்செய்துவிடுவதுதான் வில்லியம்ஸின் திட்டம். இதுவும் ஒரு தற்செயலான செயல் என்றே உலகம் எண்ணும். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன்னை கேலி செய்யும் மற்றவர்களுக்கு கிடைப்பதா?
14/ஆகஸ்ட்/2053.
விண்வெளியில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடைந்த ராக்கெட்துண்டு ஜடாயு மீது மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதும்படி கச்சிதமாக ஒரு புரோக்ராம் எழுதினான் வில்லியம்ஸ். அவனது இதழ்களில் கொடூரமான ஒரு புன்னகை உருவாயிற்று.
15/ஆகஸ்ட்/2053 அதிகாலை நான்கு மணி.
பெருத்த சத்தமுடன் விண்ணோக்கி கிளம்பியது ஜடாயு.
ஜடாயுவின் உள்ளே…
வில்லியம்ஸை சுற்றிலும் கவசமணிந்த சக பணியாளர்கள் ஜடாயு விண்வெளி ஓடத்திற்குள் மிதந்தவாறு கண்ணடித்தார்கள். தன் காதுகளில் மாட்டப்பட்டிருந்த
ஸ்பீக்கரில் அவர்களுடைய பாட்டுச் சத்தம் சன்னமாக கேட்டது. "ஹாப்பி பேர்த்டே டு யூ".
-நிலாரசிகன்.
(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)
மழை
(அறிவியல் புனைக் கதை)
இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?
தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும்
சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு இருந்ததால் தப்பிக்க
முடிந்தது. துடுப்பு வலித்து வலித்து உள்ளங்கை மரத்துப்போய்விட்டது. இனியும் என்னால்
இந்தப் படகை ஓட்ட முடியாது. எங்கே போகிறோம்,எங்கே சென்று சேருவோம் எதுவும் தெரியாமல்
ஏதோ ஒரு நம்பிக்கையில் மிதந்து கொண்டிருக்கிறது என் படகு. பசி உயிர் போகிறது.
மயக்கம் வருவது போலிரு....... விழித்துப் பார்த்தபோது தூரத்தில் பச்சை பசேலென்று மரங்கள்
தென்பட்டன. சிறிய தீவு போலிருந்தது. வேகவேகமாக படகை செலுத்தினேன்.
நிலம்! நிலத்தில் இறங்கி மரங்களை நோக்கி ஓடினேன். நிறைய மாமரங்கள் இருந்தன.மரத்தை சுற்றிலும்
மாம்பழங்கள் விழுந்து கிடந்தன. பொறுக்கி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
ஏழு பழங்கள் உண்டுமுடித்தபின் பயணக்களைப்பில் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தேன்.
நான் விழிப்பதற்கு முன் என்னைப் பற்றி அடைப்புக்குறிக்குள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
[என் பெயர் எக்ஸ். ஆங்கிலத்தில் டபிள்வியூக்கு பின் வரும் எக்ஸ். செயற்கை மழை உருவாக்க
அமைக்கப்பட்ட சர்வதேச குழுவின் தலைமை விஞ்ஞானி.
கேல்சியம் குளோரைடு,கேல்சியம் கார்பைடு,கேல்சியம் ஆக்ஸைடு, அமோனியம் நைட்ரேடும் கலந்த
கலைவையை காற்றில் செலுத்தினால்,காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உண்டுபண்ணும்
தன்மை உடையவை. மாதம் நான்கு முறை எட்டுமணி நேரம் செயற்கை மழை பொழியவேண்டும் என்று அரசு
ஆணை பிறப்பித்திருந்தது.
என் சிறுவயது முதலே பிற உயிர்களை கொன்று இன்பம் காண்பது எனக்கு பிடிக்கும். ஓணான்,அணில்,புறா,கிளி,குயில்
இவையெல்லாம் சிறுவயதில் நான் வேட்டையாடி கொன்றது. பிற உயிர்கள் சாகும்போது கிடைக்கின்ற
இன்பத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இதுதெரியாமல் இந்த குழுவிற்கு என்னை நியமித்தது
இந்த அரசின் தவறு!. மாதம் நான்கு முறை உருவாக்க வேண்டிய மழையை தொடர்ந்து இரண்டு நாட்கள்
பெய்வதுபோல் உருவாக்கிவிட்டு நான் மட்டும் தப்பித்துக்கொண்டேன். த்ரில்லாக பயணம் செய்ய
வேண்டும் என்று எண்ணியதால் ஒரு ரப்பர் படகு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன்.ஓரிரு
நாட்கள் பயணித்துவிட்டு உலகை அழித்தவன் நான் என்று சத்தம்போட்டு கத்திவிட்டு நானும்
செத்துவிடவேண்டும் என்பதே என் திட்டம்.இப்போது நிம்மதியாக மாம்பழம் சாப்பிட்டுவிட்டு
உறங்கிக்கொண்டிருக்கிறேன்]
உறக்கம் கலைந்து விழித்தபோது இருட்டிவிட்டிருந்தது. உலகை அழித்துவிட்டேன் என்றல்லவா
நினைத்தேன். எப்படி இந்த இடம் மட்டும் எப்படி தப்பித்தது.இங்கே மட்டும் மழை பெய்யவில்லையா?
கடலில் பெய்துகொண்டிருக்கும் மழை இந்த சிறிய தீவை மட்டும் நனைக்காமல் பெய்துகொண்டிருக்கிறதே!
ஆச்சர்யத்துடன் நடக்க ஆரம்பித்தேன். செடிகளையும் மரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை.
பூச்சிகளின் சத்தமும், உயர்ந்த மரங்களிடையே வசிக்கும் பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.
இவைகளை அழிக்க என்னால் இயலாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டது.
கவலையுடன் ஒரு பாறையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பாறைக்கு அருகே இருந்த மரத்திற்கு
பின் சலசலப்பு கேட்டது. ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. ஏதேனும் காட்டுமிருகமாக இருக்குமோ
என்றெண்ணியபடி கையில் ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு அந்த மரத்தின் அருகே சென்றேன்.
அங்கே....
ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளது உடலை மூட்டுவரை நீண்ட கருங்கூந்தல் மூடியிருந்தது.
வேறு உடைகள் இல்லை. அவள் அருகில் நீண்ட தாடியும் இறுகிய உடலுடன் ஒரு இளைஞன் நின்று
கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும் கொன்று விட்டால் போதும். உலகை அழித்தவன் நான் என்கிற சந்தோசத்தில்
நானும் மரித்துவிடலாம். சற்றுத் தொலைவில் கூரிய கல்லொன்று கிடந்தது. அதை எடுக்க வேகமாக
ஓடியதில் கால் இடறி அந்த கல்லில் விழுந்துவிட்டேன். நெஞ்சிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.
என் அருகில் அவர்கள் இருவரும் வந்து நின்றார்கள்..
மரண வலியுடன் "உன் பெயர் என்ன?" என்று அந்த இளைஞனை கேட்டேன்.
"இரண்டாம் ஆதாம்" என்று அவன் சொன்னதை கேட்க நான் உயிருடன் இல்லை.
-நிலாரசிகன்.
ஆஹா.. அறிவியல் புனைக்கதை.. எல்லா வகையான கவிதையிலும் கலக்குறீங்க நிலா..
--
நட்புடன்,
அகல்யா – அறிவியல் புனைக்கதை
சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், மழை எதிர்நோக்கும் தவளைகளின் சத்தமும் பெரிதாகிக்கொண்டே போனது. சைக்கிள் பஞ்சராகிவிட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. இவை எதைப்பற்றிய கவலையுமின்றி என் தோளை இறுகப்பற்றிக்கொண்டு ஏதோவொரு பாடலை பாடியபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.
அகல்யா என் உயிரில் கலந்துவிட்ட தேவதை. என்னுடன் கல்லூரியில் படித்தவள்.
பாறைமனதிற்குள் வேராக நுழைந்து இன்று விருட்சமாக மாறியவள். இன்று என் காதலி. நாளைய மனைவி. வழக்கமான சாதி பிரச்சினை என்றாலும் அவளது அப்பா ஊரின் மிகப்பெரிய மில்லுக்கு சொந்தக்காரர்.கொழுத்த பணம் படைத்தவர். அவரது கைகளில் சிக்கிவிடாமல் வெளியூர் சென்று வாழ முடிவெடுத்து இப்போது ஊரைவிட்டு சைக்கிளில் தப்பிச் செல்கிறோம். இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு சென்றுவிட்டால் தப்பிவிடலாம்.
அகல்யாவின் அப்பாவிற்கு இந்நேரம் தெரிந்து ஆட்களுடன் கிளம்பி இருப்பார்.
இவை எதைப்பற்றிய கவலையுமின்றி பாடிக்கொண்டிருந்தாள் அகல்யா.
"அகல் கொஞ்சம் பாடாம வாயேன் ப்ளீஸ்மா"
"அதெல்லாம் முடியாது பாடுறது என் இஷ்டம்…நீ சைக்கிளை மிதி" சொல்லிவிட்டு சத்தமாக பாட ஆரம்பித்தாள். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"ஏய் அறிவுகெட்டவளே ஒங்கப்பன் இந்நேரம் அரிவாளுடன் கிளம்பி இருப்பான். நானே மிதிக்க முடியாம சைக்கிள மிதிக்கிறேன். இதுல பாட்டு ஒண்ணுதான் முக்கியமா?"
"சரி நான் பாடலை. ஆமா நாம எங்கே போறோம்?"
இதற்குமேல் இவளிடம் பேசி பயனில்லை. எப்போது விளையாடுவது என்று தெரியாது! எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும். நினைத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன். என் தோளில் சாய்ந்தவள் மெல்ல என் இடுப்பைக் கிள்ளினாள். விளையாட்டுக்காரி! மறுநிமிடமே என் கோபம் மறைந்தது.
"கிள்ளாத செல்லம் வலிக்குது"
"எப்போ என்னை இறக்கி விடுவ? எனக்கு உட்கார முடியல ரொம்ப வலிக்குது"
"கொஞ்சம் பொறுத்துக்கமா இன்னும் நாலு கிலோமீட்டர்தான்"
மழை நின்றிருந்தது. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அகல்யாவிற்கும் எனக்கும் நாளை திருமணம் என்பதை நினைத்து மனசெல்லாம் பூக்களாக மலர்ந்திருந்த நேரத்தில் டவுனை அடைந்தேன்.
டவுனிலிருக்கும் என் நண்பனின் தம்பி ஒருவனுடைய வீட்டிற்கு சென்று
கதவை தட்டியபோது நடு இரவு. கதவை திறந்து எங்களை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் உள்ள குடிசைக்கு அழைத்துச் சென்றான் நண்பனின் தம்பி.
"அண்ணே நீங்களும் அண்ணியும் இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கிங்க,நாளைக்கு மத்த விசயத்த பேசலாம்" சொல்லிவிட்டு கொட்டாவிவிட்டபடி போய்விட்டான்.
குடிசைக்குள் கிடந்த கட்டிலில் களைப்புடன் அமர்ந்தேன்.
"அகல்யா உங்க அப்பாவை ஜெயிச்சுட்டேன். இனி என் கண்மணியை என்னைவிட்டு பிரிக்க யாராலும் முடியாது நாளைக்கு நம்ம கல்யாணம்"
அகல்யாவிடமிருந்து எந்த பதிலுமில்லை.
"இராத்திரி பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலையேன்னு பாக்குறியா தாயி…உங்க அப்பன என்ன கேணையன்னு நினைசுட்டானா அந்த பொடிப்பய? நேத்துதான் மெட்ராஸுல இருந்து உன்னைய மாதிரியே ஒரு ரோபோவ ஆர்டர் செஞ்சு வாங்கிட்டுவந்தேன். நீன்னு நெனச்சு அதை கூட்டிக்கிட்டு போயிட்டான். இந்நேரம் பாட்டரி தீர்ந்து அதுவும் செத்திருக்கும்" சொல்லிவிட்டு சிரித்தார் அகல்யாவின் அப்பா. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள் அகல்யா.
[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
-நிலாரசிகன்.
On 7/21/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:ஏலியன் - விஞ்ஞான புனைக்கதை<<<
புனைகதை என்பதை சரியாகப் புரிய வைத்திருக்கின்றீர்கள் நிலவா...:)))
.
என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது. <<<
நிலவா வர வர......ரொம்ப திடுக்கிடும் திகில் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல....
<<வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம். சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.<<<
நல்ல சொல்லாடல்...
ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். <<<
குறுக்கு விசாரணைகளுக்கு இடம் வைக்காமல் திட்டமிட்டுத்தான் கதையைச் செதுக்கி இருக்கீங்க.....
மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.
தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.
வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.
"அப்பா என்ன செய்றீங்க?" என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.
"
"இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?" ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.
"இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்" என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.<<<<
ஆஹா......கலக்கிட்டேபுள்ள.....நிலவா ஒவ்வோர் வார்த்தைகளையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கீங்க....
-
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
தூவல் - சிறுகதை
அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று அமர்ந்தேன். அறைத்தோழன் நல்ல உறக்கத்திலிருந்தான். உறங்க மறுத்தன என் கண்கள். நினைவுகள் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
பேனா கொண்டுவராமல் பள்ளிக்கு சென்றால் "பேனா(ய்) இல்லாமல் ஏன்னா(ய்) வந்தாய் போநா(ய்) வெளியே" என்று அழகாய்த் திட்டுவார் தமிழாசிரியர்.
அப்படி ஒரு நாள் பேனா இல்லாமல் சென்றதால் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்திருந்தார். தொடர்ந்து அழுது கொண்டே நின்ற என்னிடம் வந்தவர் "வெளிய நிக்கிறதுக்காக இப்படி தொடர்ந்து அழுவலாமா? நாளைக்கு மறக்காம பேனா கொண்டுவந்துரனும் சரியா?" என்றவாறே என் தோளில்தட்டி வகுப்பிற்குள் சென்று அமர வைத்தார். வெளியே நின்றதற்காக அழுவதற்கு நான் என்ன மூக்கொழுகி குமாரா? இரண்டு வாரம் என் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய "ஹீரோ" பேனா திருடுபோனதால் நான் அழுதேன் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் மிகச்சிறந்த பொருள் "ஹீரோ" பேனா தான் என்பது என்னுடைய எண்ணம்.
பன்னிரெண்டாம் வகுப்பு டியூசன் சென்டரில்தான் முத்துச்செல்வியை சந்தித்தேன்.எண்ணை தேய்த்து தலைசீவி இரட்டை ஜடைபின்னி பச்சைக்கலர் ரிபன்கட்டியிருப்பாள். எப்பொழுதாவது மரிக்கொழுந்தும் கனகாம்பரமும் அவள் கூந்தலை அழகாக்கும். என்னுடன் படித்தவர்கள் எல்லோரையும் விட முத்துச்செல்விக்கு என்னைத்தான் பிடித்திருந்தது. பெஞ்சிலிருந்து முன் பெஞ்சைக் கடந்துசென்று பிரம்பால் அடிவாங்கிவிட்டு திரும்பும்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும். காரணம் டியூசன் சென்டரிலேயே நான் தான் அடிமுட்டாள். அடிக்கடி அடிவாங்கும் முட்டாள். எல்லோரும் நான் அடிவாங்குவதை ரசிக்கும்போது இவள் மட்டும் பரிதாபமாய் பார்த்ததால் எனக்கும் அவளை பிடித்துப்போனது. அவளை பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் அவளிடமிருந்த விலையுயர்ந்த "பார்க்கர்" பேனா. முதல் நாள் கணக்கு நோட்டும் இரண்டாம் நாள் பேனாவும் கடன் வாங்கினேன். கணக்கு நோட்டை மட்டும் திருப்பித்தந்துவிட்டு டியூசன் சென்டரை மாற்றிக்கொண்டேன். முத்துச்செல்வி இரண்டுநாள் உம்மென்று இருந்துவிட்டு பின் சகஜமாகிப்போனதாக கேள்விப்பட்டு பேனாவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.
கஷ்டப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேறி கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் கண்ணில் பட்டவள்தான் ரஞ்சனி. அவளைப் பார்த்தவுடனே பிடித்துப்போனது. இவள்தான் என் மனைவி என்று உள்ளுக்குள் மணியடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் பேச முயற்சித்து வெற்றி பெற்றேன் ஒரு மழைநாளில். குடையில்லாமல் நனைந்தபடி நடந்தவளுக்கு ஓடிச்சென்று குடைகொடுத்துதவி வள்ளல் ஆனேன். சில மாதங்களில் என் உற்றத்தோழியாக மாறியவள் என் பிறந்த நாள் பரிசாக ஃபாரீன் பேனா ஒன்றை பரிசளித்தாள். தங்க நிறத்தில் மினுமினுத்தது அந்தப்பேனா. அழகிய வேலைபாடுகளுடன்கூடிய மூடியில் சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. பேனாவைக் கண்ட பரவசத்தில் ரஞ்சனியின் கைகளில் முத்தமிட்டுவிட்டேன். அன்று கோபித்துக்கொண்டு போனவள் அதன் பிறகு என்பக்கம் திரும்பவேயில்லை. மன்னிப்புக்கேட்டு நான்கு நாட்கள் அவள் பின்னால் அலைந்து சோர்ந்தபோது அவள் விட்டுச் சென்ற தங்கநிற பேனா மட்டுமே உடனிருந்தது.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு வந்த ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் வாழ்க்கை என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.
இரண்டுமணி நேர மின்சார ரயில் பயணமும்,பெரும் மக்கள்கூட்டத்தினூடாக நடப்பதும் வாடிக்கையானபோது தளர்ந்திருந்த எனக்கு ரயிலில் என்னோடு பயணிக்கும் சேட்டுப்பெண் மீது இனம்புரியாத ஒன்று உருவானது.அவளின் தங்கநிற தேகமும்,பச்சை நிற கண்களும் மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கின. மெல்ல அவளுடன் பழக ஆரம்பித்தபோது அவளுக்கு பிடித்த புத்தகமொன்றை பரிசாக தந்தேன். உடனே முகம் மலர்ந்தவள் ரயில் நிலையமென்றும் பாராமல் என் புறங்கையில் முத்தமிட்டாள். ரஞ்சனியின் ஞாபகம் வந்து போனது. முத்தமிட்டதோடு நில்லாமல் பரிசாக தங்கப்பேனா ஒன்றை தந்துவிட்டு "வில் யூ மேரி மீ" என்றாள். என் ஆங்கில அறிவு அவளுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள். அவளுடன் ஊர்சுற்ற அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வேலை பறிபோனது.
திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தவள் அவளது நிச்சயதார்த்த செய்தியை சொல்லி இருசொட்டு கண்ணீர்விட்டு பிரிந்துவிட்டாள். கையில் பணமில்லாமல் ரணப்பட்ட நெஞ்சுடன் மும்பை தெருக்களில் சுற்றி அலைந்தபோதுதான் பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிக்பாக்கெட் அடிப்பதும்,சிறுசிறு பொருட்களை மார்க்கெட்டில் திருடுவதும் அவனது தொழில். வேறு வழியின்றி அதைக்கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவினேன். அப்போதுதான் பேனாவில் கத்தியும் உண்டு என்பது தெரிந்தது.மும்பை நகர போலீஸில் ஒரு நாள் சிக்கியதில் அவர்கள் அடித்த அடியில் வலது கால் நரம்பு அறுந்துவிட்டது.
சில நாட்களில் வெளியே வந்துபோது ஒரு கூலிப்படையின் அறிமுகம் கிடைத்தது.
நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது அறைக்கதவு திறக்கும் சப்தம். அந்த அதிகாலையில் இரண்டுபேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். கருப்புத்துணியால் என் தலைமூடப்பட்டது. உயிர் பிரிகின்ற பொழுதிலும் பேனாவின் முனை உடைத்த நீதிபதியை திட்டிக்கொண்டேயிருந்தது மனம்.
-நிலாரசிகன்.
தூவல் - சிறுகதை
நல்ல கதை. ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ்கையில் திசை மாறிப் போகிறான்..? கடைசியில் தூக்கு மேடை ஏறுகிறான்.... சுருக்கென்று தைக்கிறது முடிவு.
புருவக்குட்டி - சிறுகதை
கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது.
அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது. இரண்டு நாட்களாக எப்போது குட்டி
போடும் என்று காத்துக்கொண்டிருந்தவள் சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தாள். ஆடு
குட்டி ஈனும் தருவாயிலிருந்தது.
அருகில் சென்று அதன்
முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். வலி பொறுக்க முடியாமல் தலையை ஆட்டியபடியே சத்தம்போட்டுக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டியின் சிறிய கால்களும் அதற்கிடையே தலையும் வெளியே வர
ஆரம்பித்தது. குட்டிபோடும் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து வைத்தாள் சரசு. குட்டியின்
உடல் முழுவதுமாய் வெளிவந்து சாக்குப்பை மீது பொத்தென்று விழுந்தது. பழைய துணி ஒன்றை
எடுத்து குட்டியை நன்றாக துடைத்துவிட ஆரம்பிக்கும்போது அடுத்த குட்டியையும் ஈன்றது
அந்த தாய் ஆடு. சத்தம்கேட்டு பக்கத்துவீட்டு செவ்வந்தி ஓடிவந்தாள்.
"என்ன சரசக்கா ஆடு ஈனிருச்சா? கெடாக்குட்டியா புருவக்குட்டியாக்கா?"
ஆர்வம் பொங்க கேட்டாள் அச்சிறுமி.
"ரெண்டும்தான்..நல்ல நேரத்துல வந்த கொஞ்ச நேரம் குட்டிய பார்த்துக்க,எதிர்தோட்டத்துல
போயி புல்லறுத்துட்டு ஓடியாந்துர்றேன். பாவம் ஆடு களச்சு போயிருக்கும்" என்றவள்
பனையோலை பெட்டியும் புல்லறுக்கும் அருவாளும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வாசலுக்கு
வந்தவளை வழி மறித்தான் சரசின் கணவன் சாமிக்கண்ணு. சாமிக்கண்ணு ஒரு மொடாகுடிகாரன். வேலை
வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன்.
அவள் கையை முறுக்கி, முதுகில் ஓங்கி அறைந்து கீழே தள்ளிவிட்டான்.
"யாத்தீ" என்று அலறியபடி விழுந்தாள் சரசு.
"ரெண்டு நாளா துட்டு துட்டுன்னு நானும் நாயா அலையறேன் ஒரு பயலும் துட்டு குடுக்கமாட்டேங்கறான். இப்ப துட்டு தர்றியா இல்லையா? அடுப்பகறையில ஒளிச்சு வச்சிருப்பியே? சனியன்புடிச்ச சிறுக்கி" கோபத்தில் கத்தினான் சாமிக்கண்ணு.
"இந்தா பாரு ஆடு குட்டி ஈனியிருக்கு. நான் போயி புல்லறுத்துட்டு
வரணும். ச்சும்மா என் கிட்ட அஞ்சு பைசா கிடையாது. அடுப்புல பழைய சோறு இருக்கு வெங்காயத்தை
கடுச்சுக்கிட்டு தின்னு இல்ல எங்கயாவது போயி சாவு. என் உசிர எடுக்காத" சொல்லிவிட்டு
சென்றுவிட்டாள்.
ஆடுகளுக்கு புற்கள்
அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்போது திமுதிவென்று ஆட்கள் ஓடுகின்ற சத்தம் கேட்டு
புரியாமல் நின்றாள். கூட்டம் கூட்டமாக எல்லோரும் குளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
என்ன ஏதுவென்று புரியாமல் சிறுவன் ஒருவனை மடக்கி நிறுத்தினாள்.
"ஏலே எல்லாரும் எங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம ஓடுதிய?"
"அக்கா உனக்கு சேதி தெரியாதா குளத்தாங்கரை பக்கத்துல சாராய கட இருந்துச்சுல்லா,
அதுல ஏதோ விசம் கலந்துருச்சாம். நாலு வேரு செத்துக்கெடக்காங்களாம்" மூச்சுவாங்கிக்கொண்டே
சொன்னவன் சரசைவிட்டு விலகி ஓடிவிட்டான். தூக்கிவாரி போட்டது சரசுக்கு. ஒருவேளை சாமிக்கண்ணு
குடிக்க போயிருந்தால்? தெரியாமல் புருஷனை சாபமிட்டது
பலித்துவிடுமோ? விறுவிறுவென்று வீட்டிற்கு வந்து தேடிப்பார்த்தாள். சாமிக்கண்ணு வீட்டில்
இல்லை. ஆடு கத்திக்கொண்டிருந்தது.
குளக்கரை நோக்கி ஓட்டமும் நடையுமாக படபடப்புடன் சென்றாள் சரசு. குளக்கரைக்கு பக்கத்திலிருந்த சாராய கடையை பெரும் கும்பல் சூழ்ந்திருந்தது.
ஒப்பாரிச்சத்தமும், அழுகையும் பலமாய் கேட்டது. நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர் பெண்கள். நான்கு உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. பயந்து அழுதுகொண்டே ஒவ்வொரு உடல்
அருகிலும் சென்று பார்த்தாள் சரசு. நான்காவது உடலை பார்ப்பதற்கு சென்றவள் தோள்மீது ஒரு கை விழுந்து தடுத்தது. யாரென்று திரும்பி பார்த்தாள்.
தலையை தொங்கபோட்டுக்கொண்டு நின்றிருந்தான் சாமிக்கண்ணு. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
"மச்சான் ஏம் மச்சான் அழுவற…மச்சான் என்னாச்சு மச்சான்" அவனைக் உயிருடன் கண்ட சந்தோசத்திலும், ஏன் அழுகிறான் என்கிற குழப்பத்திலும் அவனை உலுப்பினாள் சரசு.
"என்னை மன்னிச்சுடு புள்ள…எத்தனையோ நாளு நீ என்னைய குடிக்ககூடாதுன்னு நீ சொல்லியும் நான் கேட்கல. இன்னைக்கு நீ புல்லறுக்க போயிருந்தப்ப புதுசா பொறந்த ஆட்டுக்குட்டிய எவனுக்காச்சும் வித்து தண்ணி அடிக்கலாம்னு நெனச்சு புருவக்குட்டிய தூக்கிட்டு சந்தை பக்கம் போனேன். போகிற வழியில கையில இருந்து ரோட்டுல குதிச்சிருச்சு. ஓடிப்போயி எடுக்கறதுக்குள்ள பஸ்ஸுகாரன் அடிச்சு எறிஞ்சுட்டான். அந்த சின்னக்குட்டி துடிதுச்சு சாகறத கண்ணால பார்த்துட்டேன் சரசு. என்னால தாங்க முடியல. மனசு ஒடிஞ்சுபோயி அங்கேயே ஒட்கார்ந்திருந்தேன். அப்போதான் சாராயத்துல விஷம் கலந்த விசயம் தெரிஞ்சுது. அதோட உசுர விட்டு என் உசிர காப்பாத்திருச்சு அந்த ஆட்டுக்குட்டி. இனிமே அந்த ஆட்டுக்குட்டிமேல சத்தியமா நான் குடிக்கமாட்டேன் சரசு" சொல்லிவிட்டு கதறி அழுதான் சாமிக்கண்ணு.
சாராயத்தால் இறந்தவர்களுக்காக அழுகின்ற சத்தத்தைவிட அதிகமாய் கேட்டது ஆட்டுக்குட்டிகாக அழுகின்ற சாமிக்கண்ணுவின் அழுகைச்சத்தம்.
-நிலாரசிகன்.