தமிழறிவோம் !

396 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 14, 2021, 12:36:47 AM8/14/21
to மின்தமிழ்
தெள்ளு தமிழ் என்றால் என்ன?
--துரை.ந.உ. 

முதலில் ஒரு தெளிவு : தமிழறிவோம் !

ல்,ள் / ற்,ட் / ன்,ண் → மொழிமுதலில் வராத இவ்வெழுத்துகளுக்கு , பிற எழுத்துகளுக்கு இல்லாத பல சிறப்புக் குணங்கள் உண்டு. அவற்றில் இங்கு தேவைப்படும் ஒரு குணத்தை மட்டும் பார்ப்போம்.

புணர்ச்சியின் போது இரட்டிக்கும் குணம் :
குற்றியலுகரத்தில் ற்,ட் —- இரட்டிக்கும்
குறில்-மெய்யில் ல்,ள் — உகரத்துடன் இரட்டிக்கும்

ற், ட் :
ஆறு+தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர்
நாடு+பற்று = நாட்டுப்பற்று

ல்,ள் :
வில்+பாட்டு = வில்லுப்பாட்டு
புல்+கட்டு = புல்லுக்கட்டு
சில்+கருப்பட்டி = சில்லுக்கருப்பட்டி
கள்+கடை = கள்ளுக்கடை
எள்+துவையல்= எள்ளுத்துவையல்

அதுபோலவே …
தெள்+பூச்சி = தெள்ளுப்பூச்சி ( உள்ளிருப்பது தெளிவாகத் தெரியும் பூச்சி (transparent) )
தெள்+தமிழ் = தெள்ளுத்தமிழ் (தூய தமிழ்)
(தெள் - முன்னடையாய் இருந்தால் தெள்ளுதமிழ் ஆகும்)

தமிழில்
தெள் = தெளிவு, தெண்மை, தூய்மை என்று பொருள் உள்ளது.

தேமொழி

unread,
Aug 14, 2021, 6:08:35 PM8/14/21
to மின்தமிழ்
தமிழ் மாலை
-------------------------

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-
 • எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயிர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயிர் எழுத்துக்கள் - 12
  • வகைகள் - 2 
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
 • வகைகள் - 3 
வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
 •  ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல் 
 •  சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
 •  பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)

1. பகாபதம்:-
 •   பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
 •   பகாப்பதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
 •  பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
 •  பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)

 •  பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
 
•  வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)

 •  பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
 •  இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
 •  பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
 •  வினை இடைநிலை வகைகள் - 3 
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
 •  பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
 •  ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
 •  அகப்பொருள் உள்ள திணைகள் - 5
 •  இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
 •  இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
 •  அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
 •  முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
 •  நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
 •  பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
 •  ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
 •  குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
 •  முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
 •  முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
 •  நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
 •  பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
 •  புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

4. யாப்பிலகணம்:-
 •  யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

1. எழுத்து:-
 •  எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
 •  எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
 •  அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
 •  அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
 •  சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
 •  சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
 •  தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
 •  அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
 •  தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

5. அணி இலக்கணம்:-
 •  அணி என்பதன் பொருள் - அழகு
 •  அணிகள்  வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
 •  சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
 •  பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
 •  இல்பொருள் உவமையணி
 •  ஏகதேச உருவக அணி
 •  பிறிது மொழிதல் அணி
 •  வேற்றுமை அணி
 •  வஞ்சிப்புகழ்ச்சி அணி
 •  இரட்டுற மொழிதலணி
 •  சொற்பொருள் பின்வருநிலையணி
 •  தற்குறிப்பேற்ற அணி
 •  நிரல்நிறை அணி



தேமொழி

unread,
Aug 21, 2021, 8:46:27 PM8/21/21
to மின்தமிழ்
source:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/jan/01/இலக்கணம்-சொல்லாத-புதிய-விதி-439913.html

*செப்டெம்பர் - 2012 கட்டுரை 

"இலக்கணம் சொல்லாத புதிய விதி!

 - முனைவர் மலையமான் 

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் (எ.கா. கொத்தனாரின் கொல்லூறு) காலப்போக்கில் குறுகிச் சிறியதாய்விடும். இந்த வடிவக் குறுக்கம் மொழிக்கும் பொருந்தும். தமிழ் சிறிய சொற்களைக்கொண்ட மொழி. இதில் ஐந்து எழுத்துகளுக்கு மேற்பட்ட அடிப்படைச் சொற்கள் கிடையாது. தமிழ் நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றிய மொழி என்பதற்கு இந்தச் சிறு சொற்களே சான்றாக அமையும்.      

தமிழின் சொற் சுருக்கத்திற்கு இலக்கணம் வழி வகுத்துள்ளது. முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்பது அது அளித்துள்ள வழிகளுள் ஒன்று.      
தாமரை - மரை - முதற்குறை      
உள்ளம் - உளம் - இடைக்குறை      
நீலம் - நீல் - கடைக்குறை      
இவற்றில் எழுத்து மறைந்தாலும் பொருள் மாறாது. 
இடுசொற்களின் சேர்க்கையில் (புணர்ச்சியில்) எழுத்து மறையும் (தேன்+மொழி-தேமொழி). 
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சச் சொல்லிலும் ஓர் எழுத்து குறையும் (பறவாத+வண்டு - பறவா வண்டு).      

மற்றொரு வழியிலும் சொற்சுருக்கம் ஏற்படுகிறது. எந்த இலக்கணமும் சொல்லாத புதிய விதியாக இது உள்ளது. இது சமுதாய நடைமுறையில் அமைந்திருக்கிறது; சில சொற்களில் மட்டும் இது காணப்படுகிறது.      

ஒரு சொல்லில் அடுத்தடுத்து இரு குறில் எழுத்துகள் இருந்தால், முதல் குறில் நெட்டெழுத்தாகிறது, இரண்டாம் குறில் மறைகிறது; சொல் சுருங்குகிறது. இந்த விதி நடைமுறையிலுள்ள சொற்களுக்கு விளக்கம் தருவதாயுள்ளது.      

இவ்விதிப்படி சுருங்கிவிட்ட சொற்கள்: 
அகலமரம் - ஆலமரம்; 
அகப்பை - ஆப்பை; 
அகங்காரம் - ஆங்காரம்; 
இடுதல் - ஈதல்; 
கழனி - கானி-காணி; 
குதித்தாடல் - கூத்தாடல்; 
சிகழிக்காய் - சீழிக்காய்;-சீக்காய்; 
சிவப்பு; செய்தி - சேதி; 
செய்யவன் - சேயவன்-சேயோன்; 
தரு - தா; 
தந்தை - தாதை; 
தெய்வ ஆரம் - தேவஆரம் -தேவாரம்; 
தொகுப்பு - தோப்பு; 
பகுதி - பாதி; 
பெயரன் - பேரன்; 
பரவுதல் - பாவுதல்; 
மிகுதி - மீதி; 
விழுதல் - வீதல் 
இப்படிப் பல சொற்கள் உள்ளன.      

மரத்தின் கனக்கோட்டம் (மிகுதியான கோணலை) தீர்க்கும் நூல்போல் மனக்கோட்டம் தீர்ப்பதால், "நூல்' என்பதை உவமை ஆகுபெயராகக் கொண்டார் பவணந்தியார் (நன்னூல்). ஆனால், நுவல், நுதல் (சொல்லுதல்) என்ற சொல், மேற்கூறிய புதிய விதியின்படி "நூல்' என்றாகிவிடும். இது ஏற்கத்தக்கது. இந்த விதி ஒரு சொல்லின் முதற் பகுதியில் மட்டுமன்றி, பிற்பகுதியிலும் அமைந்து சொற்சுருக்கத்துக்கு வழி வகுக்கிறது. இதைப் பின்வரும் சொற்களில் காணலாம்.      
அஞ்சாதவர் - அஞ்சாதார்; 
அடங்கியவன் - அடங்கியான்; 
அதியன் மகன் - அதியன்மான்-அதியமான்; 
அரவு - அரா; 
இல்லவள் - இல்லாள்; 
கனவு - கனா; 
சிறியவர் - சிறியார்; 
கோமகன் - கோமான்; 
நிலவு - நிலா.      

சொல் மாறிய நிலையிலும் இந்த விதி பொருந்தியுள்ளது. இல்வழி (வீட்டுக்குள் செல்லும் வழி) இது, வழியில் (வழி இல்) என்று மாறுகிறது. இவ்விதிப்படி, வழியில் என்பது "வாயில்' என்றாகிறது. முந்தையர் என்பது மூதையர் என்றாகி, மூதாதையர் என்று கூறும்போதும் இந்த விதி பொருந்துகிறது.      

இவ்விதி மலையாள மொழியிலும் அமைந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. 
மகனே - மானே-மோனே; 
மகளே - மாளே-மோளே; 
என்று மலையாளத்திலும் இவ்விதி ஆட்சி செலுத்துகிறது.    


தேமொழி

unread,
Aug 24, 2021, 3:33:02 PM8/24/21
to மின்தமிழ்
பாடலுக்குச் சுவைகூட்டும் எதுகையும் மோனையும்

-- திரு. இரா.மகேஸ்வரன்


நல்லா எகனை மொகனையா பேசறாண்டா! ஆனா செயல்ல ஒண்ணும் கிடையாது! என்று சொல்வார்கள்! நமது அரசியல்வாதிகளும் இப்படித்தான் எகனை மொகனையா பேசி நம்மை ஏமாளிகள் ஆக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

கவிதை படைப்பதில் இந்த எகனை மொகனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கவிதைக்குச் சுவை கூட்டும்.

அத்தகைய எதுகை மோனை பற்றி:
மோனை:
செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும். இதை அடி மோனை என்றும் சொல்வார்கள்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
முதல் அடியின் முதல் எழுத்தும் இரண்டாம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வந்துள்ளதால் மோனை என்பார்கள்.

எதுகை:
அடி தோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது அடி எதுகை என்று அழைக்கப்படும்.
  
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இந்த குறட்பாவில் முதல் அடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம் எழுத்தும் ஒத்து வந்துள்ளது இதனால் இது எதுகை தொடை ஆகும்.

நாலடி கொண்ட சீருள் முதல் இரு சீர்களில் முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பது இணைமோனை எனப்படும்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

ஓர் அடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

ஓர் அடியுள் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

ஓர் அடியுள் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது கூழை மோனை ஆகும்.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

ஓர் அடியுள் முதல் மூன்று நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று  டற்றும் பசி

ஓரடியுள் முதல் இரண்டு நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இதே போல் எதுகையும் 7 வகைப்படும்  மோனையில் முதல் எழுத்து ஒன்றி வந்ததை போல இதில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அந்த வகையில் இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என ஏழு வகைப்படும்.




திரு. இரா.மகேஸ்வரன், 
கல்வி சார் நூலகர், 
பேராதனைப் பல்கலைக்கழகம், 
கண்டி, இலங்கை.


தேமொழி

unread,
Sep 6, 2021, 2:12:38 AM9/6/21
to மின்தமிழ்
தமிழில்அரபுச்சொற்கள் .. 

அசல்   أصل மூலம்
அத்தர் عطر மணப்பொருள்
அத்து حد வரம்பு
அமுல் عمل  நடைமுறை
அல்வாحلوه  இனிப்பு
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ஆபத்துآفت  துன்பம்
ஆஜர்حاظر  வருகை
இலாகாعلاقة  துறை
இனாம்انعام  நன்கொடை
ஃபிர்கா அலகு
கஜானாخزانة  கருவூலம்
காய்தாقاعدة  தலைமை/வரம்பு  
காலிخالي  வெற்றிடம்
காஜிقاضي  நீதிபதி
கைதிقيد  சிறையாளி
சரத்துشرط  நிபந்தனை
சர்பத்شربة குளிர்பானம்
சவால்سوال  அறைகூவல்/கேள்வி  
தகராறு تكرار வம்பு
தாவாدعوة  வழக்கு
திவான்ديوان  அமைச்சர்
பதில்بدل  மறுமொழி
பாக்கிباقي  நிலுவை
மகசூல்محصول  அறுவடை
மஹால்محل  மாளிகை
மாமூல்معمول  வழக்கம்
மாஜிماضي  முந்தைய
முகாம்مقام  தங்குமிடம்
முலாம்ملام  மேற்பூச்சு
ரசீதுرصيد  ஒப்புப் படிவம்
ரத்துرد  விலக்கு/நீக்கம்
ராஜிراضي  உடன்பாடு
ருமால்رمال  கைக்குட்டை
ருஜுرجوع  உறுதிப்பாடு
லாயக்لائق  தகுதி
வகையறாوغيره  முதலான
வக்காலத்துوكالة  பரிந்துரை
வக்கீல்وكيل  வழக்குரைஞர்
வசூல்وصول  திரட்டு
வாய்தாوعده  தவணை
வாரிசுوارث  உரியவர்
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஜாமீன்ضمان  பிணை
ஜில்லாضلعة  மாவட்டம்

#whatsappshare

தேமொழி

unread,
Sep 26, 2021, 5:32:46 PM9/26/21
to மின்தமிழ்
source  - https://kural.blogspot.com/2013/07/blog-post_28.html

”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?
 
-- மணி மு. மணிவண்ணன்

அண்மையில் "non-fiction" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ”அபுனைவு” என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.  கவிஞர் ஹரிகிருஷ்ணன் இது அவருக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாகச் சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது என்கிறார். 

Fiction என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புனைவு என்ற சொல்லைப் புழங்கி வருகிறார்கள் எனத் தெரியும்.  ஆனால், புனைவுக்கு எதிர்மறைச் சொல்லாக, அதன் முன் அகர முன்னொட்டு இட்டு ‘அபுனைவு’ என்று சொல்லுவது தமிழின் மரபு இல்லை.  இப்படி அகர முன்னொட்டு இட்டு எதிர்மறையாக்குவது சமஸ்கிருதத்தின் மரபு.  
bhaya          abhaya
pūrva           apūrva
maṅgala     amaṅgala
mārga         amārga

அமரர் என்ற சொல்லும் இப்படித்தான் மரணமற்றவர்கள் என்ற பொருள்தரும் வடசொல் வேரிலிருந்து வந்தது.
ஆங்கிலத்திலும் இதே போன்ற மரபு உண்டு.
chromatic            achromatic
morphous           amorphous
symmetric          asymmetric
typical                 atypical
இவை பெரும்பாலும் கிரேக்க வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.  ஆனால், சென்னைப் பேரகரமுதலியில் தேடிப்பார்த்தால், இந்த அகர எதிர்மறை முன்னொட்டு எந்தத் தமிழ் வேர்ச்சொல்லின் முன்னும் இல்லை. ‘அபு’ என்று தொடங்கும் சொற்கள் மூன்று மட்டுமே. (http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.950993.951293). அவை:

*அபுத்திபூருவம் aputti-pūruvam, n. < a- buddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது
*அபுத்திரகன் a-puttirakaṉ, n. < a-put- raka. One without male issue; புத்திரனைப் பெறாதவன்.
*அபுதன் aputaṉ, n. < a-budha. Fool, dolt: மூடன்.
இந்த மூன்றும் வடசொற்கள்.

அபுனைவு என்ற சொல்லை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதைப் படிக்கும்போது  abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று இடைவெளி விட்டுப் படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார். அதை அபிராமணர் என்று உச்சரிக்காமல் ‘அப்ராமணர்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று விளக்கினார் ஹரி.  அதாவது
bhrāman          abhrāman

தமிழில் அபிராமணர் என்று சொல்ல முடியாது.  அப்பிராமணர் என்றால் அது அந்தப் பிராமணர் என்றுதான் பொருள்தரும். இது நிச்சயம் தமிழல்ல
பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவு என்ற சொல்லுக்கு அபுனைவு என்று எதிர்மறைச்சொல் படைத்தவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, வடமொழியும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி ஒரு மொழியின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் சொற்களைப் புனைபவர்களும், அதை எடுத்து ஆள்பவர்களூம்தான் இன்று இலக்கியவாதிகள். காப்பியைக் குளம்பி என்று தமிழ்ப்புலவர்கள் அழைத்தால் நக்கலடிக்கும் அதே இலக்கியவாதிகள் இப்படித் தமிழும் தெரியாமல் வடமொழியும் தெரியாமல் அபுனைவு என்று படைப்பதைப் பார்த்தால், மாமியார் உடைத்த ‘மண்குடம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது. 

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!
புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை. இது பற்றிப் பேரா. செல்வகுமாரின் தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் உரையாடினோம். (காண்க: https://groups.google.com/forum/#!topic/tamilmanram/XMnHR-o4bWk )

புனைவறு’ என்று எழுதுவேன் என்று நாக. இளங்கோவன் சொல்கிறார். ‘அல்’ என்ற முன்னொட்டை இட்டு அல்புனைவு என்றும் சொல்லலாமே என்கிறார்.  பேரா. செல்வகுமார் அல்புனை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.  அல் முன்னொட்டுப் பல தமிழ்ச்சொற்களில் பயின்று வருகிறது என்று சுட்டுகிறார்.
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.
ஆனால் தமிழில் அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)அல்வழக்கு,
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை),
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல் வெளிச்சம் இல்லாதது).இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும் தமிழில். 
அல்லங்காடி என்ற சொல் மாலையில் கூடும் சந்தையைச் சுட்டுகிறது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆனால், அங்கே அல் என்பது இருளையும், இரவையும் சுட்டுகிறது.  அங்காடி அல்லாதது என்று சொல்லவில்லை.  எனவே அல் என்ற முன்னொட்டு எல்லா இடங்களிலும் பொருந்தாது என்றும் புரிகிறது.

இராமகி சொல்கிறார்:
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. ”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை   என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
அல்புனைவோ அல்லது அல்புனையோ இவ்விரண்டுமே அபுனைவை விட மேலானவை. கொட்டைவடிநீர், குளம்பி, மூத்த குரங்கு தமிழ்க்குரங்கு என்றெல்லாம் தமிழ்ப்புலவர்களை நக்கலடிக்கும் ‘இலக்கியவாதிகள்’ அபுனைவு என்று தாம் படைத்தது தவறு என்று ஏற்றுக் கொண்டு அல்புனைவு சரி என்று ஏற்றுக்கொண்டு தாம் அறிவு நேர்மை உடையவர்கள் என்று உறுதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. 

செய்வார்களா? “இலக்கியவாதிகள்” செய்யாவிட்டாலும் தாழ்வில்லை.  தமிழைப் பற்றி அக்கறையுள்ளவர்களாவது செய்யலாமே?


--மணி மு. மணிவண்ணன் 

Mahalakshmi K

unread,
Sep 27, 2021, 4:09:29 PM9/27/21
to mint...@googlegroups.com
Super I really appreciate mam

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/89f477d2-be0e-4bc9-a5c0-2f4f70a1f548n%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 23, 2021, 5:51:20 AM10/23/21
to மின்தமிழ்
ஒன்பது வந்தது எப்படி?


'பாழெனக் காலெனப்
பாகென ஒன்றென இரண்டென மூன்றென
நான்கென ஐந்தென ஆறென ஏழென
எட்டெனத் தொண்டென நால்வகை பூழிளண்
நவிற்றும் சிறப்பினை'
ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட -பரிபாடலில் வரும் பாடல் ஒன்றின் சிறுபகுதி இது. இதில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். மற்ற எண்கள் எல்லாம் தற்போதைய வழக்குப்படியே இருக்க, ஒன்பது மட்டும் 'தொண்டு' என்னும் பெயரில் வந்திருக்கிறது.
ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர் 'தொண்டு' என்பது. தொல்காப்பியர் காலத்திற்கு முன் அப்படித்தான் வழங்கியது. தொல்காப்பியர், அதற்குப் பிற்பட்ட காலத்தில் செய்யுளில் மட்டும் தொண்டு என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.
தொண்டுடன் அதாவது ஒன்பதுடன் பத்து சேர்ந்தால், தொண்பது என்று அழைக்கப்பட்டது.
(தொண்டு + பத்து = தொண்பது)
தொண்பது, 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களைப் போலவே தொண்பதும் அழைக்கப்பட்டது.
தொண்ணூறு என்னும் பெயர், 900 என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + நூறு = தொண்ணூறு. அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்று குறிப்பிடுவது போல.
தொள்ளாயிரம் என்பது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. (தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்)
ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம் என்னும் பிற எண்களைப் போலவே இதுவும் அழைக்கப்பட்டது.
தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து,
'நொ(தொ)ண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே.' (செய்.101)
என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். 'தொண்டுபடு திவ்வின்' (மலைபடு கடாம். 21) என்கிறார் பெருங்கெளசிகனார்.
தொண்டு என்பது பின்னர் வழக்கொழிந்தது.
பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரம் நூறாம் இடத்திற்கும் வந்தன.
தொன்பது என்னும் பெயர், முதன்மெய் (தொ) நீங்கி, ஒன்பது என்று வழங்கப்படுகிறது. தெலுங்கில் தொம்மிதி என்று வழங்கப்படுகிறது. ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது.

எண் - பண்டைப்பெயர் - இன்றைப்பெயர்
9 - தொண்டு - ஒன்பது
90 - தொண்பது - தொண்ணூறு
900 - தொண்ணூறு - தொள்ளாயிரம்
9000 - தொள்ளாயிரம் - ஒன்பதினாயிரம்
ஆதாரம்: தேவநேயப்பாவாணரின் 'ஒப்பியன் மொழிநூல்'

VIGNESHVARAN P

unread,
Oct 24, 2021, 1:23:20 PM10/24/21
to mint...@googlegroups.com
அருமை 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

KJ

unread,
Oct 25, 2021, 10:49:41 AM10/25/21
to மின்தமிழ்
Fiction -  புனைவு
non-fiction - புனைவறு  அல்லது  புனைவிலி என்று தான் இருக்க வேண்டுமா?

உண்மை என்றே எழுதலாமே?

புனைவுக் கதை
உண்மைக் கதை

கற்பனை என்ற சொல் என்பதைத் தான் புனைவு என்பதற்கு உபயோகித்தோம். அதற்கு என்ன?

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 25, 2021, 10:44:38 PM10/25/21
to mint...@googlegroups.com
புனைவுக் கதை
உண்மைக் கதை

“உண்மைக் கதை” என்பதே பொருத்தமான சொல்லாகப்படுகிறது. நான் “உண்மைக் கதை” என்பதைத் தான் பயன்படுத்துகிறேன்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 30, 2021, 3:57:30 AM10/30/21
to மின்தமிழ்
விவேக சிந்தாமணி.png

தண்டா மரையி னுட் பிறந்தும் தண்டேனுகரா மண்டூகம்
வண்டோ கானத் திடையிருந்து வந்து கமல மதுவுண்ணும்
பண்டே பழகி யிருந்தாலு மறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்தங் குறவாடி தம்மிற் கலப்பர் கற்றோரே.
                                                                 (விவேக சிந்தாமணி - 8)

பொருள்: குளிர்ந்த தாமரையின் அருகிலேயே பிறந்தும், இருந்தும் அதில் இருக்கும்  சுவையான தேனை உண்ணத் தெரியாத நிலையில்  தவளை இருக்கும்.  ஆனால், கானகத்தில்  எங்கிருந்தோ பறந்து வரும் வண்டானது, அத் தேனை உண்டு மகிழும். 
அதுபோல, அற்பமானவர்கள் நல்லவர்களோடு நெருங்கிப் பழகினாலும், அவர்களுடைய சிறப்பை  உணராது அவர்களின் அருமையைப் பாராட்டாது இருப்பார்கள். மாறாக,  கற்றறிந்தவர்களோ  மற்ற அறிஞர்களைத் தேடியடைந்து அவர்களின் உறவைப் பாராட்டி மகிழ்வர். 

தேமொழி

unread,
Nov 2, 2021, 10:27:07 PM11/2/21
to மின்தமிழ்
பாயிர வகைகள்;

நன்னூல், கீழ்வருவனவற்றை, பாயிரத்துள் அடங்கும் என்கிறது:
1. முகவுரை 2. பதிகம் 3. அணிந்துரை 4. நூன்முகம் 5. புறவுரை 6. தந்துரை 7. புனைந்துரை. 

ஆனால், பல பாயிர உரைகள் புதிதாய் தோன்றியுள்ளன. மேலும் பலவும் தோன்றும். சாத்தியப்படும் சில, கீழ் உள்ளன: 
  • கருத்துரை 
  • குறிப்புரை 
  • குறித்துரை 
  • சிறப்புரை 
  • சீருரை 
  • செறிப்புரை 
  • செறித்துரை 
  • செழிப்புரை 
  • தகவுரை 
  • நல்லுரை 
  • பதிப்புரை 
  • பயனுரை 
  • பாராட்டுரை 
  • பரிந்துரை 
  • மதிப்புரை 
  • முன்னுரை 
  • வல்லுரை 
  • வளவுரை 
  • வாழ்த்துரை 
வேறு பாயிர உரைகள், எப்பெயரில், எப்பொருளுடன் உருவாகும்? சிந்தனை, பொதுசொத்து!

--- சொல்லாக்கியன்

(தீனதயாளன், கனடா)

தேமொழி

unread,
Nov 9, 2021, 7:28:22 PM11/9/21
to மின்தமிழ்
தமிழ் மழை...! 

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!  
அடைத்த மழை  
அடைக்கின்ற மழை  
அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!  
தமிழில், 14 வகையான மழை உண்டு!:)

தமிழில், மழை!

1. மழை  
2. மாரி  
3. தூறல்  
4. சாரல்  
5. ஆலி  
6. சோனை  
7. பெயல்  
8. புயல்  
9. அடை (மழை)  
10. கன (மழை)  
11. ஆலங்கட்டி  
12. ஆழிமழை  
13. துளிமழை  
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!  
இயற்கை நுனித்த தமிழ்!

மழ = தமிழில் உரிச்சொல்!  
மழ களிறு= இளமையான களிறு  
மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..  
மழை எனும் சொல்! 
மழ + ஐ

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை என்ற காரணப் பெயர்!

மழை வேறு/ மாரி வேறு!  
அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!

மழை/மாரி ஒன்றா?

மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!  
மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!

மார்+இ= மாரி!  
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!  

அதான் மாரி+அம்மன் என்று ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!

தமிழ்மொழி,  
பிறமொழி போல் அல்ல!  
வாழ்வியல் மிக்கது!

அட்டகாசம்...!

இன்னும் கொஞ்சம்...

1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது

2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..

3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...

சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)  
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..  
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.  
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்  
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..

அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..  

5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).

7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.  

(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)

#whatsappshare

தேமொழி

unread,
Dec 7, 2021, 12:53:00 AM12/7/21
to மின்தமிழ்
குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு

------ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்


           well.jpg

துவளம்
tuvaḷam
n. cf. தோவாளம்.
Parapet wall of a well;
கிணற்றின் கைப்பிடிச்சுவர்

பார்க்க:
மற்றும் 
https://agarathi.com/word/துவளம்

தோவாளம் (கிணற்றுச்சுவர்) என்பது திருநெல்வேலி வட்டார வழக்கு  உச்சரிப்பில் மாறுபாடு 
>>பார்க்க: https://ta.wikisource.org/s/6djt 

Mohanarangan V Srirangam

unread,
Dec 7, 2021, 3:33:54 AM12/7/21
to min tamil

துவளம் -- புதிதாக ஒரு சொல்லை அறிந்து கொண்டேன். 
நன்றி. 

*** 

தேமொழி

unread,
Dec 30, 2021, 3:18:26 AM12/30/21
to மின்தமிழ்
தமிழில் எழுதுவோம் தவறில்லாமல் 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
துச்சில் கனடா.


   நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.

    முன்பு ஒருநாள் உணவுப் பொருள் பங்கீட்டுக் கடையில் பொருள்களை வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். நீண்ட வரிசையில் நின்றபடி நோட்டமிட்டேன்.

     கடையில் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது என எழுதப் பட்டிருந்தது. ஒரு வரியில் இரு பிழைகள். அரிசி, பருப்பு வழங்கப்படுகின்றன என அமைய வேண்டும். And என்பதன் மொழிபெயர்ப்பு மற்றும் என்பது. ஆங்கிலத்தில் bread and  butter, ladies and gentlemen என்று எழுதுவது அவர்கள் மரபு. நாமும் அவர்களைப்போல ரொட்டி மற்றும் பால் கிடைக்கும் என்று எழுதுவது சரியன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. சேர மற்றும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என எழுதுவது தவறு.

    கபிலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என எழுதுவது ஆங்கில மரபு. கபிலர் கலை அறிவியல் கல்லூரி என எழுத வேண்டும். இதுதான் தமிழ் மரபு.

    ஒரு வாக்கியத்தை ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் முடிக்க வேண்டும். பன்மையில் தொடங்கினால் பன்மையில் முடிக்க வேண்டும். அரிசி, பருப்பு என ஒன்றுக்கும் மேற்பட்டப் பொருள்களை வழங்குகிறார்கள். வாக்கியம் பன்மையில் தொடங்குகிறது; வழங்கப் படுகின்றன என்று பன்மையில் முடிய வேண்டும். மாடுகள் மேய்கிறது என எழுதலாமா? மாடுகள் மேய்கின்றன என எழுத வேண்டும். உதடுகள் ஒட்டாது என்பது தவறு. உதடுகள் ஒட்டா என்பதே சரி.

    அங்கே இருந்த கரும்பலகையில், அரிசி இருப்பு - முன்னூறு மூட்டைகள் என எழுதப்பட்டிருந்தது. முன்னர் நூறு மூட்டைகள் இருந்தன என்றால் இப்போது இருப்பில் எத்தனை மூட்டைகள் உள்ளன என்று கேட்கத் தோன்றியது. முந்நூறு மூட்டைகள் என எழுதுவதே சரியாகும். அதே கரும்பலகையில் இக் கடைக்கு ஐநூறு அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என எழுதப் பட்டிருந்தது. ஐநூறு என்பது தவறு. ஐந்நூறு என எழுதுவதே முறையாகும்.

    வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தது. எதிரில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. போவோர் வருவோரைக் கவரும் “இன்றைய ஸ்பெஷல்” பலகையில் அக்கடைக்காரர் எழுதியிருந்த பட்டியலைப்  பார்த்தேன். மீன் குழம்பு, மீன் வருவல், கேரட் பொறியல் எனப் பட்டியல் நீண்டது. கடைசியில் அன்புடன் வரவேற்க்கிறோம் என்று எழுதி “முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்னும் பொன்மொழியுடன் முடித்திருந்தார்.

    பொரிப்பதால் பொரியல், வறுப்பதால் வறுவல். இது தெரியாமல் பொறியல், வருவல் என எழுதிவிட்டார். பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம், கருவி எனப் பல பொருள்கள் உண்டு. எலியைப் பிடிக்க உதவும் கருவிக்கு எலிப்பொறி என்று பெயர். வருவல் என்றால் வருக என்று பொருள். கோழி வருவல் என்றால் கோழியே வருக என்றாகிவிடும்! வரவேற்க்கிறோம் முயற்ச்சி என்பனவும் பிழையுடைய சொற்கள்தாம். இரண்டு வல்லின மெய்கள் இணைந்து வாரா என்பது விதி. அதாவது க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு மெய் எழுத்துகளில் எந்த இரண்டு எழுத்துகளும் அருகருகே அமைவது தவறு.

    அங்கே சாலை ஓரத்தில் காவல் துறையினர் வைத்திருந்த ஒரு வாசகம் கண்ணில் பட்டது.  சாலை  விதிகளைக் கடைபிடிப்பீர் என்பதாகும். கடைப்பிடிப்பீர் என எழுதியிருக்க வேண்டும். நடுவில் ப் போடாமல் கடைபிடிப்பீர் என்று எழுதினால், கடையை வாடகைக்குப் பிடித்தல் என்றுதான் பொருள் தரும்.

   அந்த வழியாக ஒரு கல்லூரிப் பேருந்து கடந்து சென்றது. அதன் பின்புறம் ‘மாணவியர்கள் உள்ளே’ என எழுதப் பட்டிருந்தது. வாழும் வழியிலும் சரி, பேசும் மொழியிலும் சரி கள்ளின் ஆதிக்கம் அதிகம். மாணவி என்பது ஒருமை; மாணவியர் என்பது பன்மை. பிறகு எதற்கு மேலும் ஒரு கள்? மாணவியர்கள் என்று  எழுதலாமா? கூடாது.

      அப்போது அவசரமாக வந்த ஒருவர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தபோது, மற்றொருவர், ”அங்கே என்ன எழுதியிருக்கு? பாருங்க” என்றார். வரிசையில் நிற்கவும் என்று எழுதியிருந்தார்கள். வரிசையில் நிற்க என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லோரும் வரிசையில் வரவும் என்பது தவறு. விரைந்து செல்லவும் என  எழுதினால் தவறு. செல், செல்க, செல்ல வேண்டும் என எழுதலாமே. வரிசையில் வருக என்பதே சரி. உம் என்னும் ஓசையுடன் வாக்கியம் முற்றுப்பெறுவது தமிழ் மரபு அன்று.

      என் பணியை முடித்துத் திரும்பினேன், எனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாக ஒலித்தது. ஒரு நண்பர், ”இன்று இரவு எட்டு மணிக்கு என் உரை திருச்சி வானொலியில் ஒளி பரப்பாகிறது” என்று செய்தி அனுப்பியிருந்தார். வானொலியில் ஒலிபரப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழும். இந்த வேறுபாட்டை அவர் அறியவில்லை. அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராக உள்ளார்!

    கட்சித் தொண்டர்கள், நடிகர்களின் இரசிகர்கள் வைக்கும் பதாகைகளில் காணப்படும் பிழைகளுக்கு அளவே இல்லை. செய்தித் தாள்களின் தலையங்கக் கட்டுரைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன. வணிக எழுத்தாளர்களின் படைப்புகளில் எண்ணற்றப் பிழைகள்! சமூக வலைத் தளங்களில் காணப்படும் பதிவேற்றங்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை.

    “இவை எல்லாம் பெரிய பிழைகளா? பிழை இருந்தாலும் விஷயம் புரிகிறது. அது போதாதா?” இப்படிக் கேட்டவர் ஒரு தமிழர். இன்னொருவர் இப்போது காணப்படும் பிழைகளுக்கு ஏற்பளித்துப் புதிய இலக்கணம் எழுத வேண்டும் என்கிறார். இப்படி ஒரு சமரசம் நம் மூதாதையர்களிடம் இருந்திருந்தால் இன்றைக்குத் திருக்குறளும், தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நமக்குச் சிந்தாமல் சிதறாமல் கிடைத்திருக்குமா?

   ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்வது ஒரு வாழ்வியல் திறனாகும். இந்தத் திறமை வாய்க்கப் பெறாதவர்கள், திறனுடையாரை அணுகித் தவறில்லாமல் எழுதிட ஆவன செய்வது தாய்மொழிக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

      இப்போது பாரதியார் இருந்தால், நம்மைப் பார்த்துப் ‘பிழை மலிந்த மொழியினாய் போ போ போ’ என்று பாடியிருப்பார்; இல்லை இல்லை  சாடியிருப்பார்!

தேமொழி

unread,
Dec 30, 2021, 3:20:55 AM12/30/21
to மின்தமிழ்
this is a
#whatsappshare
👇

K S Ilamathi's Paranchudar Gnanam

unread,
Jan 4, 2022, 11:47:20 AM1/4/22
to mint...@googlegroups.com
வணக்கம். 
எங்கு திரும்பினாலும் பிழைகள் ‘பிழைத்துக் கிடக்கும் தமிழகம்‘ என்பதை அழகுறச் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். மிகவும் அற்புதமான விளக்கம் அளித்துள்ளீர்கள். தங்களுக்கு எழுதும் இப்பதில் கடிதத்தில்கூடப்  பிழை வந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சியே அடியெடுத்து வைக்கிறேன்.  பாசி படர்ந்து கிடக்கும் பாதை வழியே தெரியாமல் நடந்து வழுக்கி விழ நேர்வது போல,  இலக்கணம் தெரியாமல் எழுதவும் கைகூசுகிறது, எங்கே தப்பு தலைகாட்டிவிடுமோ என்று! 

.இவற்றை எல்லாம் பள்ளிகளிலேயே ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் தமிழக மக்ககளிடம் தமிழ் படிக்கத்தான் மனம் இல்லையே. அதை எண்ணும்போது வேதனையாக உள்ளது. தங்களைப் போன்ற தமிழ் அவதாரங்கள் இதுபோன்ற அறிவுரைகளை அனுப்பி வைத்தால், அதைக்காணும் அடியேனைப் போன்ற சிலரேனும் மனம் திருந்த வாய்ப்பாக இருக்குமே என்று நம்புகிறேன். 

நன்றி, வணக்கம்.

கே.எஸ்.இளமதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
K.S.Ilamathy, Writer & Yoga Instructor
+91 99405 88046
Soorya Namashkar
www.sooryanamashkar.com

Reply all
Reply to author
Forward
0 new messages