தொடரடைவுத் தளத்துக்கு வயது பத்து.

39 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jun 15, 2024, 5:17:42 AM6/15/24
to மின்தமிழ்
அன்புடையீர்,
நேற்றுடன் (14-06-2024) என் தொடரடைவுத் தளத்துக்கு வயது பத்து நிறைவடைகிறது. இது உருவான வரலாறு இதுதான்:-

2010-இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்கு முன்னரேயே நான் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்கள் அனைத்துக்கும் தொடரடைவுகள் உருவாக்கிவிட்டேன். மற்ற எட்டுத்தொகை நூல்களுக்கும் தொடரடைவுகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த அனுபவங்களை
A WORD FREQUENCY DICTIONARY FOR SANGAM LITERATURE
என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை அந்த மாநாட்டில் படித்தேன். அந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிய மேனாட்டு அறிஞர் (George Hart என்று நினைக்கிறேன்) அதனை வெகுவாகப் பாராட்டினார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டுத் திரும்ப வந்து அவர் அருகில் அமர்ந்தவுடன் ”How long did you take” என்றார். “Five years” என்றேன். முகத்தில் வியப்புக்குறி காட்டினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக இருந்த மொழியியல் அறிஞர் பா. ரா. சுப்பிரமணியன் அவர்கள் சங்க இலக்கியத்திற்கு முழுமையான தொடரடைவு உருவாக்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த ஊக்க மொழிகளால் அடுத்த ஆறு மாதங்களில் சங்க இலக்கியம் முழுமைக்கும் தொடரடைவு உருவாக்கிவிட்டேன்.
முதலில், இத் தொடரடைவை என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. WORD DOCUMENT-இல் 4404 பக்கங்கள் வந்தது. பெரும் பொருட்செலவில் அதைப் பத்துத் தொகுதிகளாக ஒரு நகலகத்தில் அச்சிட்டுக் கெட்டி அட்டை போட்டு வைத்தேன். (இது இப்போது மதுரையில் இருக்கிறது). இதைப் புத்தகமாக வெளியிட்டால் யார் வாங்குவார்கள்? முதலில் யார் இதை வெளியிட முன்வருவார்கள்? சிலரை அணுகினேன். சுமார் 8 லட்சம் ஆகும் என்றார்கள். அரசுத் துறைகளை அணுகும் அளவுக்கு எனக்குச் செல்வாக்கு இல்லை. இதற்கிடையில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற வேறு சில நூல்களுக்கும் தொடரடைவுகள் உருவாக்கி அவற்றையும் பெரும் செலவில் புத்தகங்களாக அச்சிட்டு வைத்துக்கொண்டேன். (இவையும் இப்போது மதுரையில் – ஒரு அலமாரி நிறைய). என் மனைவி ஒன்றும் சொல்லமாட்டார் – அவருக்குப் புடவைகள் – எனக்குப் புத்தகங்கள்!!!!
நாள்கள் செல்லச் செல்ல அலமாரி நிறைய நிறைய, கம்பராமாயணம் வரை வந்துவிட்டேன். கம்பராமாயணம் தொடரடைவையும் புத்தகங்களாக அச்சிடக் கொடுத்துவிட்டு, நான்கு நாள் கழித்துச் சென்ற போது நான் கொடுத்த pen drive காணாமற்போய்விட்டதாகக் கூறிவிட்டார். என் மனைவிக்குச் சந்தேகம். அவர் யாரிடமோ விற்றுவிட்டார் என்று. அன்றோடு அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.
அப்போது எண்ணத்தில் வந்ததுதான் இந்த இணையதள முறை. ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் எல்லாவற்றையும் இலவசமாகவே கொடுத்துவிடலாம் என்று. யோசனை நல்லதுதான். யார் இதனைச் செய்வார்கள்?. எனக்கு computer programming தெரியும். அதை வைத்துத்தான் தொடரடைவுகளை உருவாக்குகிறேன். ஆனால் web designing தெரியாது. பல நண்பர்கள், என் முன்னாள் மாணவர்கள் (கல்லூரியில் நான் கணினித் துறை இயக்குநராக இருந்தேன்) உறவினர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டேன். ஆர்வத்துடன் முதலில் ஒத்துக்கொண்ட அவர்கள் பின்னர் காணாமற்போய்விடுவார்கள். மிகவும் களைத்து, சலித்து, நொந்துபோய் இருக்கும்போது, அந்த web designing பற்றிப் படித்தால் என்ன எண்ணினேன். அப்போது நான் அமெரிக்காவில் சின்ன மகள் வீட்டில் இருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் அம்மையார் இராஜம் அவர்கள் எனக்கு அவ்வித்தையைக் கற்றுக்கொடுக்க முன்வந்தார். மின்னஞ்சல் மூலமாகப் பல பாடங்களை அனுப்பினார். அவற்றின் மூலம் சில blog உருவாக்கும் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேன். அவருக்கு என் நன்றி. ஆனால் எனக்கு ஒரு முழு அளவில் இணையதளம் உருவாக்கும் நுட்பம் தெரியவேண்டும். எனக்கு ஓரளவுக்கு html programming தெரியும்.
இந்த நேரத்தில் மதுரையில் பக்கத்துவீட்டுப் பையன் – என்னைத் தாத்தா என்று அழைப்பான் – அந்தப் பேரன் ராகுல் வந்தான். என் அங்கலாய்ப்பை அவனிடம் தெரிவித்தேன். நான் மனத்துள் உருவாக்கியிருக்கும் இணையதளத்தின் முதல் பக்கத்தை அவனிடம் விவரித்தேன். அவன் ஏழாம் வகுப்பு மாணவன். என் கணினியில் அமர்ந்து என்னத்தையோ தட்டினான். சிறிது நேரத்தில் என் மனத்துள் இருந்த அந்த முதல் பக்கம் என் கண் முன் வந்தது. அது இன்னமும் என் இணையதளத்தின் முதல் பக்கமாகவே இருக்கிறது. அந்தப் பேரனுக்கும் மிக்க நன்றி.
அப்போதுதான் கிடைத்தது web designing என்ற சிறிய புத்தகம். அந்தப் பேரனின் அம்மா படித்தது. ஓடோடிச் சென்று அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தான். அதை வைத்துக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்கி இணைப்புகள் கொடுத்தேன்.
இப்போது இணையதளப் பக்கங்கள் ரெடி. இணையதளம்? மாலையில் நடைப்பயிற்சி செல்லும்போது ஒரு கணினி பயிற்சி நிலையத்தின் விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. மாடியில் இருந்தது. கஷ்டப்பட்டு ஏறிச் சென்றேன். அங்கு இருந்தவர் எங்கள் கல்லூரியில் பணிபுரிந்தவர். என்னை அடையாளம் கண்டுகொண்டு அன்புடன் வரவேற்றார். என் நிலையைச் சொன்னேன். உங்கள் இணையதளத்துக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்றார். sangamconcordance என்றேன். அப்போது என் மனத்தில் இருந்த பெயர் அது. உடனே தன் பணத்தைக் கட்டி ஒரு இணையதளம் உருவாக்கித் தந்தார். அதுதான் என் முதல் இணையதளம்.
அதன் பெயர் sangamconcordance.in
அவருக்கு என் நன்றி.

உடனே மளமளவென்று என் கோப்புகளை அதில் இணைத்தேன். இதற்கிடையில் மீண்டும் சென்னை பயணம். சென்னையில் மீதமுள்ள பணிகளை முடித்து, அதனை ஓரளவுக்கு ஒரு முழு இணையதளம் ஆக்கி முடித்தேன். முதன் முதலில் அதன் பெயரை இராஜம் அம்மையாருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அதனைக் கண்ட அவர் மிகவும் மகிழ்ந்து உடனே அதனை உலகுக்குத் தெரிவிக்கும்படி பணித்தார். இதனை எப்படி உலகுக்குத் தெரிவிப்பது? அப்போது என் நினைவுக்கு வந்தது, இன்றைக்கும் என்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் மின்தமிழ் மின்னிதழ்தான். 14-6-2014 அன்று காலை 9 மணியளவில் இதனை மின் தமிழ் இதழில் தெரிவித்தேன். இதோ அந்த அறிவிப்பு:
Pandiyaraja
Jun 14, 2014, 9:21:47 PM
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
இன்றைக்குக் காலையில் நான் வடிவமைத்து முடித்த ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடரடைவுகளை உருவாக்க எனக்கு ஓராண்டு ஆனது. வலைத்தளத்தை எனக்குக் கிடைத்த ஒரு எளிய HTML புத்தகத்தைப் படித்துப் படித்துச் செய்தேன்.
இது ஒரு சோதனை வெளியீடு. கிடைக்கும் பின்னூட்டங்களைப் பொருத்துச் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முகப்புகளைப் பற்றியும், உள்ளடக்கத்தைப் பற்றியும் ஆலோசனை கூறுங்கள்.
முடிந்த அளவுக்கு வேறு தளங்களுக்கும் தெரிவியுங்கள். .
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
தளம்: http://sangamconcordance.in

இதை வெளியிட்ட 15 மணித்துளிகளில் எனக்குப் பாராட்டுகள் வரத்தொடங்கிவிட்டன. ஏற்கனவே பாராட்டிய தமிழறிஞர் இராஜம் அம்மையாருக்கு அடுத்துப் பாராட்டியவர் தமிழறிஞர் முனைவர் தெய்வசுந்தரம். அவர் இப்படி எழுதினார்.
N Deiva Sundaram
Jun 14, 2014, 9:34:30 PM
to mint...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியருக்கு,
தங்களது இலக்கியத்தொடரடைவு வலைத்தளம் மிகச் சிறப்பாக உள்ளது.
மிகவும் தேவையான ஒன்று. தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு பணி.

தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வில் - தரவுமொழியியலில் - ஒரு மைல்கல் தங்களது பணி.

உளங்கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

இவை எனக்கு வெகுவாக ஊக்கம் அளித்தன. அடுத்தடுத்து, கம்பராமாயணம் உள்ளிட்ட பல நூல்களுக்குத் தொடரடைவுகள் உருவாக்கினேன்.
இப்பொழுது என் இணையதளத்தின் பெயர் sangamconcordance.in என்பது பொருளற்றதாக ஆகிவிட்டது. சங்க நூல் அல்லாத பல நூல்களுக்கும் தொடரடைவுகள் இதில் இடம்பெற்றதால், பின்னர் tamilconcordance.in என்ற பெயரில் வேறு இணையதளம் உருவாக்கி, அவற்றில் ஏற்கனவே உருவான தொடரடைவுகளை இணைத்தேன்.
நேற்றுடன் இப்பணிக்குப் பத்து ஆண்டுகள் நிறைவடைந்தன.

இப்பணி இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நன்றி,
ப.பாண்டியராஜா



தேமொழி

unread,
Jun 15, 2024, 12:24:16 PM6/15/24
to மின்தமிழ்
இன்று . . .  

தொடரடைவுத் தளத்துக்கு வயது பத்து !!!!

வாழ்த்துகள் ஐயா  💐💐💐

ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டியதை தனி  ஒருவர் சாதித்துள்ளீர்கள், வாழ்த்துகள் ஐயா. என்று 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி இருந்தேன்..அதில் மாற்றுக் கருத்து இல்லை. 
உங்களின் தொடர்ந்த தமிழ்ப்பணி போற்றத்தக்க தமிழ்த் தொண்டு. நன்றி 
அன்புடன் 
தேமொழி 

Pandiyaraja Paramasivam

unread,
Jun 16, 2024, 2:51:49 AM6/16/24
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேமொழி அம்மையே!
அன்புடன்,
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/dcb2da85-cc82-469c-b0b1-d791c6576e77n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages