இலக்கியத்தில் விருந்தோம்பல் # 2
சாம் பார் என்பதற்குப் பூமி என்று அர்த்தம். ஆக, சாம்பார் எனில் இறக்கும் பூமி. சாம்பார் இல்லாவிடில் ஏங்கி,
ஏங்கி இறக்கும் பூமி என்று வேடிக்கையாகச் சொல்லாகும். சுவை என்பதன் வடசொல் இரசம். பாய் ஆடு...
பாய்கிற ஆடு அன்று. ஆடு வடமொழியில் அசம் ஆகும். இனிய பாயசத்தைப் பாயாடு என்று சொற்சிலம்பம்
ஆடுகிறார் புலவர். நவக்கிரகங்களில் மெதுவாகச் சூரியனைச் சுற்றி வருவது சனி. மந்தன் என்ற பெயர்
சனிக்கோளுக்கு உண்டு. பூசனியைப் பிரித்து மலர் மந்தன் என்ற மாற்றுச் சொல்லமை தருகிறார் முனிவர்.
விடுகதை அவிழ்ந்தால், விருந்துப் பட்டியல் நாவில் சுவையூற வைக்கிறது.
குழந்தைகள், முதியோர், நோயுற்றோர் உட்பட அனைவர்க்கும் சிறந்த உணவு, எளிதில் செரிக்கும் இட்லி.
இட்லி என்பது தற்கால வழக்கு. இட்லி மாவில் செய்யப்படும் தோசையும் புகழ்பெற்றது. செந் நெல்லில் தீட்டிய
அரிசியையும், கரிய உறையை நீக்கி உழுந்தையும் சேர்த்து அரைத்த மாவிலிருந்து தோசையை இரும்புக்
கல்லில் ஒட்டாது உருவாக்கும் கலை தமிழச்சிகளுக்குக் கைவந்தது.
ஃ சுலுடன் தலைசாய் செந்நெல் அரிசியும்
ஃ மாலின் வண்ணமாம் மையார் உழுந்தும்
ஃ பாலின் நிறம்போல் படிய அரைத்த
ஃ ஓர்நாள் நன்கு புளித்து
ஃ வார்க்கத் தோசை வனப்பொடும் வருமே
ஃ கனியிடை ஏறிய சுளையும்,
ஃ முற்றல் கழையிடை ஏறிய சாறும்,
ஃ பனிமலர் ஏறிய தேனும்,
ஃ காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்,
ஃ நனிபசு பொழியும் பாலும்,
ஃ தென்னை நல்கிய குளிர் இளநீரும்,
ஃ செந்நெல் மாற்றிய சோறும்,
ஃ நெய் தேக்கிய கறியின் வகையும்,
ஃ தன்னிகர் தானியம் முதிரை,
ஃ கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
ஃ கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
ஃ நாவில் இனித்திடும் அப்பமும் நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன
--- ஃ என்று பாரதிதாசன் பாடுகிறார்.
இந்தியாவின் ஏனைய மாநிலங்கள், இலங்கை,சிங்கை, மலேசியா மேல்நாடுகளின் சமையல் முறைகள்,
தமிழரின் பரம்பரை உணவு வழக்கங்களோடு சேர்ந்து பெருகி வருகின்றன. இன்று நம் உணவு விதம்விதமான
முறைகளால் சமைக்கப்படுகிறது. அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளறல், சுடுதல், திரித்தல்,
துகைத்தல், துவட்டல், பிசைதல், பிழிதல், பொங்கல், பொரித்தல், மசித்தல், வடித்தல், வறுத்தல், வதக்கல்,
வாட்டல், வார்த்தல் போன்ற வகைகள் அவற்றின்பால் அடங்கும். உண்டி, உடை, உறைவிடம் என்னும்
தேவைகளுள் தலைமையிடம் வகிக்கும் உணவு அக்கத்தின் சொல்வளத்தால் தமிழரின் வாழ்க்கை
அனுபவமும், இரசனையும், நயமும் விளங்குகிறது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விருந்து என்ற சொல் இன்னொரு பொருளிலும் பயன்பட்டது.
இன்றைக்கு நாம் அந்தப் பொருளை ஏறத்தாழ மறந்துவிட்டோம். விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை
என்று பொருள். இந்தச் சொல்லுக்கு முதல்முதலில் இருந்த பொருளும் இதுதான்.
" வேடர்வா ராத விருந்துத் திருநாளில்..."
---- என்று குயில்பாட்டில் பாரதி எழுதியிருப்பதைப் பார்க்கலாம். வேடர்கள் வராத புதுமையான -
நாள் என்று பொருள். (பாரதிக்கு உரை எழுத வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
-அந்த அளவுக்குத் தமிழை மறந்துகொண்டிருக்கிறோம்.)
விருந்தளித்தல், விருந்தோம்பல் என்றால், நம்மைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு வரும் மாமா,
சித்தப்பா என்று உறவினர்களை உபசரித்தல். சிதைந்து வரும் கூட்டுக் குடும்ப அமைப்பில்
அண்ணனும் தம்பியும் கூட ஒருவன் வீட்டில் இன்னொருவன் விருந்தாளிதான்.
ஆனால் உண்மையில் விருந்தோம்பல் என்பது உறவினருக்கு உணவளித்தல் இல்லை.
அறிமுகமில்லாத ஒருவருக்கு உணவளித்தல். விருந்தாளி என்றால் புதியவன்;
அறிமுகமில்லாதவன் என்பது பொருள்
மாதவியிடமிருந்து திரும்பி வந்த கோவலனைக் கடிந்து கொள்கிறாள் கண்ணகி. அதாவது,
அவன் திரும்பி வந்த உடனே இல்லை. மதுரைக்குப் போன பிறகு. கொலைக்களக் காதையில்
நடப்பது இது. தான் இழந்தவை எவை எவை என்று ஒரு பட்டியல் போடுகிறாள்.
"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.......
வாழ்க்கையில் இழந்தவற்றில் எதை மிகப் பெரிதாக எண்ணுகிறாள்?
"ஒண்ணும் வேண்டாம்யா.விருந்தாளிகளை வரவேற்று உபசரிக்க முடிந்ததா என்னால்?
நீ பக்கத்தில் இல்லாத போது நான் என்ன செய்யமுடியும்?"
இதே போன்று ஆனால் வேறு மாதிரியான வருத்தம் சீதைக்கு.அசோக வனத்தில் இருந்து,
இராமனைப் பற்றி எண்ணுகிறாள்.
அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும் என்று விழுங்கும்
விருந்து கண்டபோது என்உறுமோ என்று விம்மும்
"நான் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டேனே. யார் அன்னமிடுவார்கள்?
நான் இடாமல் எப்படிச் சாப்பிடுவார்?
யாராவது விருந்தாளி வந்துவிட்டால் எத்தனைக் கஷ்டப்படுவார்?" ---- என்று விம்மினாளாம்.
அவனும் அவளும் இணைந்து, இருவரும் அவரவர் பங்கினைச் செய்து,விருந்தினரை
உபசாரிக்க வேண்டும். ஒருவாரில்லாமல் ஒருவர் மட்டும் செய்யும் காரியமில்லை அது.
இராமனும் சுக்கிரவனும் நண்பர்களாகிறார்கள்.
சுக்கிரவன் இராமனுக்கு விருந்தளிக்கிறான்.... . என்ன விருந்து?
கனி, கிழங்கு, காய்கள் என்று குரங்கு உண்ணும் பொருட்கள்.
பரிமாறுபவர்கள் அனைவரும் தடித்தடியாய் ஆண்களாகவே இருப்பதைப் பார்க்கிறான் இராமன்.
“ விருந்தும் ஆகிஅம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
" பொருந்து நன்மனைக்கு உ¡ரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின்" என்றான்.
"என்னப்பா சுக்கிரிவா! உன் மனைவியைக் காணோமே. என்னைப் போலவே நீயும் உன் மனைவியைப்
பிரிந்திருக்கிறாயா?" - என்று கேட்கிறான். அருமையைச் சுக்கிவன் பிரிந்திருப்பதும், வாலியின் ஆளுகைக்கு
அவள் உட்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தன்னைப் போன்றதொரு நிலையிலே சுக்கிரிவன் இருப்பதை
அறிகிறான். இந்த உணர்வு ஒற்றுமையே வாலியைக் கொல்வதற்கு உடனடிமுடிவை இராமன் எடுக்கக்
காரணமாகிறது.
விருந்துபசாரம் என்பது அவ்வளவு பெரிய கடமையாகக் கருதப்பட்டது. அது ஒரு சமூகக் கடமை.
இல்வாழ்க்கையில் கடமை என்று வள்ளுவர் எதைச் சொல்கிறார்?
'' தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.''
காளமேகத்தின் ,
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் - குத்தி
உலையிட ஊரடங்கும். ஓரகப்பை அன்னம்
இலையிட வெள்ளி எழும்
---- என்ற பாடலும் அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் என்ற பாரதி அன்னசத்திரங்கள் இருந்ததை
உறுதிப்படுத்துகின்றன. ஆனால் சாப்பிடுவதற்குக் காசு வாங்கும் வழக்கம் நிச்சயமாக இருந்ததில்லை
.காசில்லாமல் சாப்பிட்டதற்கே இதனைக் கார்வாரா என்று நீங்கள் காளமேகத்தைப் பற்றி எண்ணக்
கூடும்.அது ஒரு சமூகக் கடமை என்று கருதப்பட்டபோது இப்படிப் பாடியது மிக இயற்கையான ஒன்று.
'' ரொம்ப தூரத்திலிருந்து வாரிங்களோ?
களைச்சுப்போய் இருக்கீங்களே. என்ன தொழில் நமக்கு?
பிரயாணக் களைப்பு முகமெல்லாம் தெரிகிறதே.
இன்னிக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு. உள்ளே வரணும்."
-- என்றெல்லாம் உபசார மொழிகள் சொல்லி அவருடைய கூச்ச உணர்வை மாற்றி,
இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து அவருக்கு உணவளித்து வழியனுப்பி வைப்பார்.
இந்தச் சூழலை மனத்தில் வைத்து சொல்லப்பட்டவைதான் விருந்து புறத்ததா தானுண்டல்,
மோப்பக் குழையும் அனிச்சம் போன்ற குறட்பாக்கள்.
'' மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிமுட்
நோக்கக் குழையும் விருந்து'' (திருகுறள்)
இப்படி ஒருவர் பசியோடு வாயில் உட்கார்ந்திருக்கும் போது (விருந்து புறத்ததா) நாம் வீட்டுக்குள்ளேயிருந்து
உணவு வாசனை வெளியே சென்று தாக்கும்படி உண்ணுதல் எத்தனை அநாகாரிகம்!
இப்படி ஒரு நாளிலில் நம் வீட்டில் உண்ணும்போது, ஒரு தவறான சொல் வேண்டாம்;
முகம் மாறி நோக்கினாலே போதும். அவர் உள்ளம் என்ன பாடுபடும்?
முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று சொன்ன வள்ளுவர்
ஒரு உளவியல் வல்லுனர் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?
இரவலர்களுக்கு இடுவதற்கும், விருந்தோம்பலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமே உபசாரம்தான்.
ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாவது போட வேண்டுமென்றால், பையிலே கைவிட்டோமா, கையில் கிடைத்ததை
அவனிடம் தந்தோமா என்று நடந்து போய்விடலாம். விருந்தோம்பலில் அது முடியாது.அங்கே உபசாரம்
மிக முக்கியம்.
' செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு ''
வள்ளுவர் ஓர் அறத்தை வலியுறுத்தும் மூன்று விதங்களில் இது ஒன்று. உனக்குப் பெரிய நன்மைகள்
விளையும் என்று ஆசை காட்டுவார். இதைச் செய்யாவிட்டால் உனக்கு இப்படிப்பட்ட துன்பம் விளையும்
என்று அச்சுறுத்துவார். இப்படிச் செய்பவனுக்கு அடுத்த உலகிலும் பயன் விளையும் என்று மோட்ச
உலகத்தைப் பற்றி, இறப்பிற்குப் பிறகு பெறப்போகும் நன்மைகள் குறித்துப் பேசுவார். அம்மாவைப் போன்ற
உள்ளம். மாதானுபங்கி என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு.இந்தக் காரணத்தினால்தான். நம்மை எப்படியாவது
ஓர் அறம் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற பேராசை.
அதை விடுங்கள். இந்தக் காலத்துக்கு இது பொருந்துமா என்று குறுக்குக் கேள்வி போட்டார் நண்பர்கள்.
பசி இருக்கின்ற வரையில் நிச்சயம் இது பொருந்தும். உணவு விடுதியில் உண்ண முடியாத சூழல் சில
சமயங்களில் இன்னும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பசியோடு தவிக்கும் ஒரு ஜீவனைச்
சந்திக்க நேரிடலாம். வள்ளுவர் அப்போது நம்மிடம் பேசுவார். செவியுள்ளவன் கேட்கக் கடவன்.
(சரி நேரமாகிறது... சாப்பிட போகலாம்..., வாருங்கள்)
நன்று.ரசனையான பதிவு.
...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்று.ரசனையான பதிவு.
...