நன்றி, இ. பரமசிவன் அவர்களே. படித்துப் பார்த்தேன்.
உங்கள் சங்கயாப்புக் கவிதை முயற்சிகள் மிக நன்று.
தொடருங்கள். தூய தமிழில் இயற்கையை அழகாகச்
சொல்லலாம் என்று இளைஞர்களுக்கு வழிகாட்டும்.
இந்தியாவிலும், மூன்றாம் உலக நாடுகளிலும்,
இயற்கை - மடம், செடி, கொடி, மணல், செம்மண், குன்று,
கருங்கல், பாலூட்டிகள், பறவைகள், தவளைகள், பூச்சிகள்,
மீன்கள், முதலைகள், .... எல்லாமும் பேரிடருக்கு உட்பட்டு
வரும் ஆண்டுகள் இவை. உயிர்பிழைத்து வாழுமா? - என்றே
அறியாத நிலையில். அவற்றின் தொகை ஏற்கெனவே இந்த
40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டனவாம். பல இனங்கள்
மீள முடியாத சிறு எண்ணிக்கையில்தாம் உள்ளன என்று
உயிரியியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்கள். அணுங்கு
(அழுங்கு என்று பிற பகுதிகளில்) என்று சொல்லும் எறும்புதின்னியை
சிறுவயதில் மலசர்கள் பிடித்துவருவார்கள். இன்று அவை எங்கே?
-----------
ஞாழல் = நாணல் என்று விளக்கம் தந்துள்ளீர்கள். ஆனால், ஞாழல்
என்பது ஒரு மரம். நாணல் அன்று.
ஞாழல் என்பது புலிநகக்கொன்றை என்று உவேசா எழுதிவிட்டார்கள்.
அது பிழை. பின்னர் அவரது மாணவர் இ.வை. அனந்தராமையர்
கலித்தொகைப் பதிப்பில் ஞாழல் என்பது என்ன மரம் என்று விளக்கமாக
எழுதியுள்ளார்கள். இ.வை. அ. கலித்தொகை உரை படிக்கவும்.
தமிழ்ப் பல்கலையில் வ.ஐ.சு காலத்து மறுஅச்சு ஆனது. வாங்கலாம்.
இணையப் பல்கலையிலும் சில மாதங்களாக இருக்கிறது.
நேர்ந்த பிழையால், பி. ஏ. கிருஷ்ணன் (பட்சிராஜையங்கார் அனந்த கிருஷ்ணன்)
டைகர்-க்லா ட்ரீ என்று ஆங்கிலத்தில் நாவல் எழுதிவிட்டார்.
கரிஞ்சம் (> க்ரௌஞ்சம்) என்னும் அன்றில் ஐபிஸ் பற்றிச் சொன்னேன் அல்லவா?
- அது ஐபிஸ் என தெரியாமல் சாருஸ் நாரை என்று ஜூலியா லெஸ்லி
எழுதப்போக, ஜூலியா எபக்ட்டால் (effect, like Raman effect) இணையத்தில்
ஆங்கிலத்தில் கரிஞ்சத்தைப் பிழையாக சாருஸ் க்ரேன் என எழுதுகின்றனர்.
அதைப் பார்க்கும் தமிழர்கள் சிலரும் கரிஞ்சத்தை சாருஸ் என்று எழுதுவதும் காண்கிறோம்.
17-ஆம் நூற்றாண்டில் கேரளம், தமிழ்நாடுகளில் உள்ள தாவரங்களைப்
பற்றி அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர்:
அதில் ஞாழல் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றனர். அதிசயம் என்னவென்றால்
இ.வை. அனந்தராமையரும் ஞாழல் பற்றி ’ஐடென்ண்டிஃபை’ அதனையே சரியாகச்
சொல்லியுள்ளார்.
வாஞ்சிநாதன் இணையத்தின் முதற்காலங்களில் ஞாழல் பற்றிக் கேட்டார்.
அதற்கான விடையை விரிவாகக் கட்டுரை வாயிலாய்ச் சொல்தல் கடன்.
சங்கநடைக் கவிஞர் உங்கட்கும் உதவும்.
கி.பி. 1683-ல் ஞாழல் பற்றி விளக்கியுள்ளனர்.
அதையே, 250 வருஷம் கழித்து இ.வை.அ சொல்லியுள்ளார்.
Aglaia elaeagnoidea (A.Juss.) Benth. [as niálel]
Rheede tot Drakestein, H.A. van, Hortus Indicus Malabaricus, vol. 4: t. 16 (1683)
Here is E. Vai. A's identification of ஞாழல் as Phalinii (=Pryangu, A. elaeagnoidea) tree.
Footnote 6, pp. 787-788.
"ஞாழல் - நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பூமரம்; (அ) அது “ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற், கொழுநிழன் ஞாழன் முதிரிணர்கொண்டு, கழுமமுடித்துக் கண்கூடு கூழை” (கலி. 56 : 1 - 3) என்பதன் விசேடவுரையில் ‘ஞாழன் முடித்தாளென நெய்தற்றலைவிபோலவும், ஊர்க்கா னிவந்த பொதும்பரென்றதனான் மருதத்துக்கண்டான் போலவுங்கூறி” என்றும் (ஆ) நெய்தற்கு, ‘மரம், புன்னையும் ஞாழலும் கண்டலும்’ (தொல். அகத். சூ. 18, உரை.) என்றும் இவ்வுரையாசிரியர் எழுதியிருத்தலானும் (இ) நெய்தற்றிணைக் கருப்பொருளுக்கு, “நறுஞாழல் கையினேந்தி என்பதனாற் பூவுங் கூறினார்” (சிலப். பதி. விசேடவுரை) என்று அடியார்க்குநல்லார் எழுதியிருத்தலானும் (ஈ) பரிபாடலும் புறநானூறு மொழிந்த மற்றைத் தொகை நூல்களினும் சீவக. சிலப். மணி முதலிய நூல்களிலும் நாற்கவி 24 - ஆம் சூத்திரத்திலும் இது நெய்தற்கே உரித்தாகக் கூறப் பட்டிருத்தலானும் அறியலாகும். இம்மரம் எக்கரிற்செழித்துவளர்வது; (உ) அது ஐங்குறுநூற்று ஞாழற்பத்தால் அறியலாகும். இதன் அரையும் கொம்பும் கருநிறமுடையன; அவற்றை (ஊ) “ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்” (கலி. 26 : 4) என்பதும் (எ) ‘ச்யாமா’ என வடமொழியிலுள்ள பெயரும் (ஏ) “செவ்வீ ஞாழற் கருங்கோட்டிருஞ்சினை” அகம். 240 : 1. என்பதும் வலியுறுத்தும். அவ்வரை பொரிந்திருப்பது; அது (ஐ) ‘பொரியரை ஞாழலும்’ சீவக. 515 என்பதனால், அறியப்படும். நெய்தனிலத்து மகளிர் இதன்குழை கொய்தும் இதனாலாக்கிய தழையுடுத்தும் இதிற்றூக்கிய ஊசலாடியும் இன்புறுவரென்பதுமரபு; அவற்றை (ஒ) “ஞாழன் மலரின் மகளி, ரொண்டழை யயருந் துறைவன்” ஐங். 147. (ஓ) “கொய்குழை யரும்பிய குமரி ஞாழல்” நற். 54 : 9. (ஒள) “கானன் ஞாழற் கவின்பெறு தழையள்” ஐங். 191. (ஃ) “ஞாழ லோங்குசினைத் தொடுத்த, தாழைவீழ் கயிற்றூசல்” அகம். 20 : 5 - 6. என்பவை வலியுறுத்தும். இது செறிந்தபூங் கொத்தினது; (அஅ) “இணர்ததைஞாழல்” பதிற். 30 : 1. என்பதனால் உணர்தற்பாலது. இது பசிய அரும்புள்ளது; (ஆஆ) “பசுநனைஞாழல்” குறுந். 81. என்பதனாற் பெறப்படும். இதன்பூ, பொன்னிறமும் சிறிய உருவமும் நன் மணமும் வண்டினமொய்த்தலுமுடையது; அவற்றை (இஇ) “பொன்னிணர் ஞாழல்” ஐங். 169. (ஈஈ) “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” குறுந். 50. (உஉ) “நறுவீ ஞாழல்” நற். 96 : 1. (ஊஊ) “கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல்” என்பவற்றால் அறிக. இப்பூ பசப்புக்கும் சுணங்குக்கும்உவமையாதல் இந்நூல் 131 : 11 - ஆம் அடிக்குறிப்பிற் காட்டப்படும். ஞாழலென்பது குங்குமம், ஒருவகைக் கொன்றை, கோங்கு, பலினி முதலிய பலமரத்துக்கும் பெயராமாயினும் நெய்தற் கருப்பொருளில் அது பலினியையே குறித்து வருமென்ப; பலினி யென்பது வடமொழிச் சிதைவு."
நன்றி.
நா. கணேசன்