அரிட்டாபட்டி ஒரு பிரம்மிப்பு!
மதுரை பயணத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாக அரிட்டாபட்டியை வைத்திருந்தேன். இம்மலை 'கழிஞ்ச மலை' என அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயராக 'திருபிணையன் மலை' என சொல்கிறார்கள். இங்குள்ள குடைவரை கோவிலில் உள்ள லகுலீசர் சிற்பம் இந்தியாவில் அரிதாக காணப்படும் சிற்பங்களில் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களின் குடைவரையாக கூறப்படுகிறது.
இதே மலையில் பாண்டிய மன்னன் துறவிகளுக்கு படுகைகள் எடுப்பித்திருக்கிறான். அதற்கான கல்வெட்டு தமிழியில் உள்ளது. கல்வெட்டு வாசகத்தை கீழே இணைத்துள்ளேன். இவ்வாசகத்தில் 'அதினன்' என குறிப்பிடப்படும் வார்த்தை 'ஐதினன்' என்பதாக இருக்குமோ என நான் கருதுகிறேன்.
தமிழியில் இதுவரை 'ஐ', 'ஒள' கிடைக்கவில்லை என்பதாகவே நிறுவப்பட்டுள்ளது. முதன் முதலில் கிபி 4 ஆம் நூற்றாண்டில் செஞ்சியை அடுத்த திருநாதற்குன்றில் வட்டெழுத்தில் 'ஐ' கிடைத்ததாக நிறுவியிருக்கிறார்கள்.
இந்நிலையில் அரிட்டாபட்டியில் கிடைத்த கல்வெட்டில் 'அ' என்பது சந்தேகிக்கும் வகையிலும் ஆய்வுக்குரியதாகவும் நான் கருதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் எடுத்த புகைப்படத்தையும், கடந்த வாரம் நான் பார்த்த புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். நிற்க!
தமிழியில் 'ஐ' எனும் குறியீடு grafitti to brami யில் முற்கால எழுத்துகளின் தோற்றத்திற்கு வித்திட்ட எழுத்தாக இருக்கலாம் என கருதுகிறேன். அதுபோக 'ஐ' எனும் எழுத்திற்கு 'முன்னோர், மூத்தோர்,அரசன்' என பொருள் கொள்ளலாம் என்று ஆய்வாளர் திரு சாந்தலிங்கம் மற்றும் திரு ராசேந்திரன் அவர்கள் தனது புத்தகத்தில் கூறியிருந்தார்கள். அதனடிப்படையில் எனக்கு இன்னொரு யோசனையும் தோன்றியது. எங்கள் ஊரில் பொதுவாகவே காஞ்சி சுற்றுவட்டாரத்தில் பொங்கல் அன்று வீட்டிற்கு வெள்ளையடித்து தெருவில் இருபக்க சூலம் மாதிரியான ஒரு குறியீட்டை வரைவர். அதற்கான அர்த்தம் என்னவென்று இதுவரை யாரும் தெளிவாகக் கூறவில்லை. கைவிடப்படாத ஒரு வழக்கமாக காலம் காலமாக செய்துவருகின்றனர்.
மேலும் சிந்து சமவெளியில் கிடைத்த 'கனக குறியீடு' முதல் வட ஆப்பிரிக்காவில் கிடைத்த இம்மாதிரியான குறியீட்டின் காலம் கிமு 1500 ஐ தாண்டி செல்கிறது. இதே மாதிரியான குறியீடு தான் தமிழியில் வரும் 'ஐ' என நான் கருதுகிறேன்.
ஆக கிமு 1500 முதல் கிபி 2018 வரை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து இந்த குறியீடு பயன்பட்டு வருகிறது எனில் அது தமிழியில் கிடைக்காமல் போவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரிட்டாபட்டி கல்வெட்டில் சந்தேகத்திற்கு இடமாக வரும் 'அ' எனும் எழுத்து 'ஐ' யாக இருக்கலாம் என்பது என் கணிப்பு!
விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன!