சிமிழ்த்தல் - closing or shutting down the bird trap
குறிஞ்சிப்பாட்டிலும், மலைபடுகடாத்திலும் சங்கினால் ஆன
வளையல்களுக்குப் புள் என்று இருப்பதை நச்சினார்க்கினியர்
விளக்கியிருக்கிறார். குருகு (அ) புள் என்று Egrets இனங்களால்
சங்கு வளைகள் தமிழ் இலக்கியங்களில் ஒரு 1500 வருஷமாய்
அழைக்கப்படுகின்றன.
புள் எனப்படும் வளையல்கள் என்ற பழைய பொருளை விட்டுவிட்டு
மேலுள்ள இலக்கியங்களின் வேறு பொருள் உள்ளதா? - எனப் பார்க்க முயற்சி.
புள் என்றால் பறவை ஒலி போல தலைவன் தலைவி எழுப்பும் ஒலிகள் என்று
விளக்க முற்படும்போது, சிமிழ்த்தல் என்ற குறளின் சொல்லுக்கு
ஒரு புதிய பொருளை திரு. சரவணன் முன்வைக்கிறார். அதாவது,
சிமிழ்த்தல் = (வேடர்) ஒலி எழுப்புதல்.
இதனைத் தொடர்ந்து சிமிழ்த்தல் = மிமிக்ரி செய்தல் என்று சங்கப் பாடல்
போல புதுப்பாடல் செய்யும் கவிஞர் ருத்ரா பயன்படுத்தத்
தொடங்கியுள்ளார்.
"...புதல் மறைத்து வேட்டுவன்
புள் சிமிழ்த்தற்று"
வாழ்க்கையின் தேடலே இங்கு வேட்டை.
நம் மனங்களுக்குள் மறைந்து கொண்டு
நம்மையே (மன சாட்சி) "நடித்துக்காட்டி"
(புள்ளின் குரல் போல் மிமிக்ரி செய்து)
புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ
[...]
மறைந்திருந்து பலப்பல புள்ளின் பல்குரல் ஒலித்து ஒரு வேடனைப்போல்
பறவைஒலி காட்டி (புள் சிமிழ்த்து..மிகிக்ரி செய்து) மாயம் செய்கிறாள்.
அந்த வேடனின் கள்ள அம்பு போல் (அக்குரல்கள் போல்) ஆகினாள் தலைவி.
வேந்தன் சரவணன்:
”இந்த புள் ஒலி பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு பறவையின் ஒலியாகவே இருக்க வேண்டும். இப்படி பறவையின் ஒலியை எழுப்பி வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதுமுண்டாம். இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் கூறுகிறார்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274
அம்மா
புள் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஒரு சங்கேத ஒலிக்குறிப்பாக இருக்கலாம். அதாவது, தலைவன் தான் வந்துவிட்டதை தலைவிக்குத் தெரிவிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவான். அதைக்கேட்டதும் தலைவி அவனைச் சந்திக்கத் தயாராவாள்.
இந்த புள் ஓசையினை தலைவியின் குடும்பத்தார் அறிந்துவிட்டதனால் தலைவியை வெளியே விடாமல் இற்செறித்தனர். இதனால் தலைவியை தனிமைத் துன்பம் அலைக்கக் கழிக்கத் துவங்கியது. ”
---------------------------
ஆனால், வள்ளுவர் சிமிழ்த்து என்று பயன்படுத்தும் போது வேடன் “மிமிக்ரி”
செய்தான் என்று சொல்லவில்லை.
சிமிழ் என்றால் மூடி உள்ள செப்பு. கண் இமை மூடுதலைச் சிமிட்டுதல் என்கிறோம்.
பறவைக் கண்ணியை மூடிப் புள்ளைப் பிடித்தலைச் சிமிழ்த்தல் என்கிறார்
வள்ளுவர். இங்கே, சிமிழ்த்தல் = மூடுதல், மூடிப் பிடித்தல் என்பது பொருள்.
ஒலி எழுப்புதல், மிமிக்ரி செய்தல் என்றெல்லாம்
சிமிழ்த்தல் என்ற வினைக்கு அர்த்தமில்லை.
இமிழ்- < சிமிழ்-
சிமிழ்த்தல் - closing like a shutter (of a bird trap).
Think of a camera lens shutter while photographing.
(It looks imai 'eye lid' has to do with this verb, cimizttal. And, cimizttal obviously has nothing to
do with mimicry or making simulation of bird sounds).
காழ் - காழ்த்தல், காழ்த்து, காழ்ப்ப, காழ்த்த
சிமிழ் - சிமிழ்த்தல், சிமிழ்த்து, சிமிழ்ப்ப, சிமிழ்த்த
குழிழ் - குமிழ்த்தல், குமிழ்த்து, குமிழ்ப்ப, குமிழ்த்த
ஊழ் - ஊழ்த்தல், ஊழ்த்து, ஊழ்ப்ப, ஊழ்த்த
முற்றிலே காழ்த்தவன, காழ்க்கும், சிமிழ்த்தன, சிமிழ்க்கும் முதியனவாய் வரும். காழ்த்தல் - முதிர்தல், உறைத்தல். “ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு’’ (வள்ளு.). “காழ்க்கும் வெள்ளிலை’’ (சிந்தா.). சிமிழ்த்தல் - கட்டுதல், அகப்படுத்தல். “சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட’’ (சிந்தா.). குமிழ்;தல் - திரண்டெழல். ஊழ்த்தல் - உதிர்தல், பதனழிதல், மலர்தல். “மரங்களிலைய+ழ்த்து’’, “மதுக்கலந்தூழ்த்து’’ (சிந்தா). “இணரூழ்த்து நாறாமலர்’’ (வள்ளு.). “அலரூழ்க்கும்’’ (தணிகை.). இயைபின்படி விகுதிகள் சேர்தலாற் பலவிதமாகிய பெயர்களும் இங்கே தோன்றும்.
1246: துவல்-உதிரிப் பூ, அருச்சிக்கும் பூ; 'துவலைச் சிமிழ்த்து நிற்பவள்'-(திருப்.280)- தினைப் புனக்காவலில் வள்ளியம்மை பூ கட்டிக் கொண்டிருந்தது). சிமிழ்த்தல்- கட்டுதல். 'அடியார் இடு துவல்' சம்பந்தர் 377-2.
“முன்னை நான் செய்த வல்வினைச் சிமிழ்ப்பால் மோகவாரியில் மூழ்கினேன்” என உரைக்கின்றார். சிமிழ்த்தல் - பிணித்தல். பறவை வேட்டுவர் புள்ளினங்களை வலைவீசிப் பிணித்தலைச் சிமிழ்த்தல் என்பர். “புதல் மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று” (குறள். 274) என வருதல் காண்க.
தேடிய கால தூதர் சி்மிழ்த்தல் விட்டொழிவரே
தேடிய காலதூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே - (உயிரை)
தேடிப்பற்றிய எமதூதர் கட்டிச் செல்லுதலை விடுத்து நீங்குவரோ? (நீங்கார்)
குறளில் சிமிழ்த்தல் என்றால் விரைந்து மூடுதல் - பறவைக் கண்ணியை
காமிரா ஷட்டர் போல் மூடுதல், கண்ணிமை இமைப்பது போல் விரைந்து
மூடுதல், கட்டுதல்/பிணித்தல் எனப் பொருள். குறளில் சிமிழ்த்தல் என்றால் மிமிக்ரி என்னும்
ஒலிகளை எழுப்புதல் என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.
குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் வரிகளில் புள் = வளை. இங்கே பறவை ஒலி என்ற பொருள் இல்லை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274
இக் குறளிலும் வள்ளுவர் எங்கும் பறவை ஒலி என்றோ, அதை மிமிக்ரி செய்கிறான் வேடன் என்றோ
குறிப்பிடவேயில்லை.
நா. கணேசன்