https://cinema.vikatan.com/amp/story/kollywood/vairamuthu-interview-about-jnanpith-award
”விருதுகளுக்காக நான் ஆசைப்படுவதில்லை... விருது வந்தால் தவிர்ப்பதும் இல்லை!”
செவ்வி எடுப்பவர்: நா. கதிர்வேலன், 19-மார்ச்-2026
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இந்திய இலக்கியத்தின் உயரிய ‘ஞானபீட விருது'
கிடைத்திருக்கிறது. அவருடைய நண்பர்களும், வாசகர்களும் பெசன்ட் நகர்
வீட்டில் சந்தோஷமாகக் கூடி நிற்கிறார்கள். பூங்கொத்துகள், மாலைகள்,
புத்தகங்கள் எனக் கைகளில் ஏந்திக் களிப்பில் காத்திருக்கிறார்கள்.
இலக்கியத்தின் பெரும்பாலான வடிவங்களிலும் எழுதிச் செல்கிறவர். கம்பீரக்
குரலில், தாளகதியான உடல் மொழியில், கேள்விக்கும் பதிலுக்கும் இடையே நொடி
தாமதமற்று வந்து விழும் உணர்ச்சி நிரம்பிய உரைநடைத் தமிழில் நம்மிடம்
மனம்விட்டுப் பேசினார்.
‘‘23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஞானபீட விருது பெறுகிற மகிழ்ச்சியை
எப்படி உணர்கிறீர்கள்?’’
‘‘என் மனநிலை மகிழ்ச்சியில் இருக்கிறது. இது நான் எதிர்பாராத விருது
அல்ல. இந்தியாவில் பிறந்த ஒவ்வோர் எழுத்தாளரும் `ஞானபீட விருது’ பெற
வேண்டும் என்பதை வாழ்க்கைக் கனவாக வைத்திருக்கிறார். அது இந்திய
இலக்கியத்தின் உச்சம். சொல்லப் போனால், `இந்தியாவின் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு’ என்றால் அது ஞானபீட விருதுதான். இந்த விருதுக்குள் நுழைவது
அவ்வளவு எளிதல்ல. அறிவுஜீவிகளின் அரண் அது. அங்கே சிறிதும் சமரசம்
கிடையாது. நாடாளுமன்ற அரசியலோ, ஆட்சி அதிகாரமோ உள்ளே நுழைய முடியாத
இடங்களில் ஒன்று ஞானபீடம். அது தகுதியால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
இன்னும் ஞானபீட விருது பெறாத இந்திய மொழிகளும் உண்டு. 23 ஆண்டுகளுக்குப்
பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதோ நான் வாங்கியதையும் சேர்த்து
மூன்றாவது முறை. `வைரமுத்து ஞானபீட விருது பெற்றான்’ என்று மகிழ்வதைவிட,
‘தாமதங்களோடு தமிழுக்கு ஞானபீட விருது வந்துவிட்டதே’ என்ற பெருமைதான் என்
நெஞ்சில் நிறைந்து வழிகிறது. இன்னொன்று... முன்பு இரு விருதுகளும்
எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த மூன்றாவது விருது கவிஞனுக்கு
வழங்கப் பட்டிருக்கிறது. ஞானபீட விருது வழங்கும்போது நீண்ட அனுபவத்தைப்
பார்க்கிறார்கள். தொடர்ச்சியாக, தொய்வில்லாமல் எழுதுகிறார்களா என்று
கவனிக்கிறார்கள். எத்தனை தடைகளைக் கடந்தான், எந்த அரசியலிலும் இயங்காதவனா
என்றும் பார்க்கிறார்கள். பெருந்தகையாளர்கள் எம்.டி.வாசுதேவன் நாயர்,
வி.ஸ.காண்டேகர், மகாதேவி வர்மா, குல்சார், ஓ.என்.வி.குரூப், நாராயண
ரெட்டி என்ற ஞானபீடப் பட்டியலில் நானும் வருகிறேன். அது எனக்கான பெருமை.
இந்த ஞானபீட விருது பெற்ற பிறகு எனக்கு நான்கு சிறகுகளில் பறக்க ஆசையாக
இருக்கிறது. பறந்து காட்டுவேன்.’’
‘‘வைரமுத்து என்ற பெயர் இத்தனை வருடங்களாக, தமிழின் கவிதை அடையாளங்களில்
ஒன்றாகவும், தொடர்ச்சியாகவும் கருதப்படுவது எப்படி?’’
‘‘ `எமக்குத் தொழில் கவிதை’ என்று பாட்டன் சொன்னானே, அதை வார்த்தையாக
இல்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தமிழைத் தவிர வேறு
ஒன்றும் தெரியாத மாதிரி என்னைப் பார்த்துக்கொள்கிறேன். வேறு ஏதாவது
எனக்குத் தெரிந்திருந்தால், தமிழை விட்டுத் தடம் மாறியிருப்பேன்.
என்னுடைய வலது கைக்குப் பிடித்தமான துணைக்கரம் தமிழ் மட்டும்தான்.
தமிழைவிட்டு வெளியே போனால் எனக்குப் பிழைக்கத் தெரியாது. தமிழைத் தவிர
எதிலும் செயல்படவும், உருவாக்கவும் தெரியாது. களிமண்ணோடும் சக்கரத்தோடும்
எப்படி ஒரு மண்பாண்டத் தொழிலாளி தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொள்கிறாரோ,
அது மாதிரி தமிழோடும், சொல்லோடும் என் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்ட
தமிழ் மண்பாண்டக்காரன் நான்.’’
‘‘வாழ்வு அனுபவம், வாசிப்பு அனுபவம் இவை இரண்டும் ஒரு படைப்பாளியை
உருவாக்குவதில் முக்கிய இடம்பெறுகின்றன. உங்களின் ஆரம்பகால வாசிப்பனுபவம்
எப்படியானது?’’
‘‘எனது ஆரம்பகால வாசிப்பு அனுபவம் சொற்களின் சுகத்தின் பின்னால் ஓடியது.
பள்ளி நாள்களில் ஆழமான இலக்கியம் பரிச்சயமாகவில்லை. கல்லூரி வாழ்க்கைக்கு
வந்த பிறகுதான் அழுத்தமான இலக்கியத்தை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகுதான் ஆழமான இலக்கியத்தைக் கற்க ஆரம்பித்தேன். பிற மொழிகளின்
இலக்கியங்கள், கவிதைகள் எனத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பழைய
பாதிப்புகளைத் தூக்கி எறிந்தேன். கொஞ்சம் கண்ணதாசன், சுரதா, பாரதிதாசன்
போல் எழுதிக்கொண்டு திரிந்த காலம் போய் ‘எப்போதடா வைரமுத்துவைப்போல்
எழுதுவாய்' என்று கேள்வி கேட்டு, ஒரு தனித்துவத்துக்கு வந்தேன். நிறைய
நகல் எடுத்த பிறகுதான் ஒருவன் அசலுக்கு வருகிறான், நானும் அப்படித்தான்.
உள்ளிருக்கும் தீயைத் தூண்டிவிடுவதுதான், உள்ளிருக்கும் தீயை தீப்பந்தம்
செய்வதுதான் அனுபவம், வாசிப்பு இரண்டும். அந்தத் திரியைத் தூண்டித்
தூண்டி எரிமலை செய்வதும் அப்படித்தான். ஆழமான இலக்கியங்கள் எனக்கு
வாசிப்பின் மீது தனி ருசியை ஏற்படுத்த, பக்குவமாகி வெளியே வந்தேன்.’’
‘‘திடீரெனக் கவிதையிலிருந்து உரைநடைக்கு நாவல் வடிவத்தில் வந்து
சேர்ந்தீர்களே, ஏன்?’’
‘‘கவிதை என்பது ஒரு சுவைக்கூறுக்காக இருக்கட்டும், உரைநடை
வாழ்வனுபவத்தைத் தரட்டும் என முடிவுசெய்தேன். நல்ல கவிதை, உணர்ச்சிகளை
விரிவாக்கத்தக்கது. நல்ல நாவல் என்பது வாழ்க்கையை விவரிக்கத்தக்கது.
அதனால் உரைநடையின் பக்கம் திரும்பினேன். அப்போது என் மக்களின் மொழியை,
வலியை, வட்டார வழக்கைக் கொண்டுவர முடிந்தது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்'கூட
உரைநடை அல்ல. அதுவும் கவிதைதான். நான் கவிதையில் பெற்ற பயிற்சியை,
தொட்டுக்கொண்ட வண்ணங்களை, உரைநடைக்குப் பூசியபோது கவிதைக்கும்
உரைநடைக்கும் மத்தியில் கல்யாணம் போன்ற ஒரு புதிய உறவைக்
கண்டுபிடித்தேன். ‘தண்ணீர் தேச'த்தைப் படித்துவிட்டு கலைஞர், ‘கவிதையைப்
படிப்பதுபோல் இருக்கிறதே' என்றார். `இது கவிதையே அதிகம் கலந்துகொண்ட
உரைநடை’ என்றேன். ‘இவ்வளவு கவிதை உரைநடையில் கூடாது' என்றார். அதற்குப்
பிறகுதான் ‘கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும், ‘கருவாச்சி காவிய'த்தையும்
கவிதையைத் தொட்டுக்கொண்டு பயணப்பட்டு உரைநடையாக மாற்றினேன். கவிதை
முழுக்க இருந்துவிடாமலும், கவிதையே இல்லாமல் போய்விடாமலும் இருக்கிறது
என்றால் அது வாசகனைச் சலிக்கவிடாமல் செய்வதற்கு! லா.ச.ரா-வின் நடை
அப்படித்தான். புதுமைப்பித்தன் நடையும் அவ்விதமே. தி.ஜா-வின் சில
குறிப்பிட்ட பகுதிகள் அப்படித்தான். எனவே, கவிதையைப் பூசிக்கொண்டு
உரைநடையைக் கண்டுபிடித்தேன். `இவன் கவிஞனா, எழுத்தாளனா, ஆராய்ச்சிக்
கட்டுரையாளனா?’ என விவாதித்து, கடைசியில் இவன் யாரென்று
கண்டுபிடித்தார்கள். `அது எல்லாம் கலந்தவன்தான் வைரமுத்து’ என்று.
என் இலக்கியப் பயணத்தில் விகடனை மறக்க இயலாது. ஐயா எஸ்.பாலசுப்ரமணியன்
அவர்கள் என்மீது மகன் போன்ற அன்பு வைத்திருந்தார். ‘தண்ணீர் தேசம்',
‘கள்ளிக்காட்டு இதிகாசம்', ‘கருவாச்சி காவியம்', ‘மூன்றாம் உலகப்போர்' என
நான்கு நாவல்களும் வெளியானது விகடனில்தான். விகடன் இல்லையென்றால் இந்த
நான்கு நாவல்களையும் எழுதியிருக்கவேண்டிய கட்டாயம் எனக்கு
நேர்ந்திருக்காது. எனக்குக் கிடைத்த ஞானபீட விருதுடன் விகடனுக்கும்
தொடர்பு இருக்கிறது.’’
‘‘தமிழில் தகுதியான படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா?’’
‘‘எல்லாப் படைப்புகளுக்கும் அங்கீகாரம் என்பது சாத்தியம் இல்லை. எல்லா
பூக்களும் பிஞ்சுகளாகவோ, காய்கனியாகவோ ஆவது இல்லை. ஒவ்வொரு பருவத்திலும்
சில விஷயங்கள் உதிர்ந்துபோகும். சில `பூ’ என்ற பருவத்திலேயே
உதிர்ந்துவிடும். சில `பிஞ்சு’ என்பதிலேயே உதிரும். ஆனால், எந்தப்
பருவத்தில் அது தன் ஆயுளை உதிர்த்துக் கொண்டாலும் அந்தப் பருவத்துக்குள்ள
பலன், பயன்பாடு இந்தச் சமூகத்துக்கு இருக்கிறது. விருது பெற்ற படைப்புகள்
மட்டும்தான் அங்கீகாரத்துக்கு உரியவையா, அங்கீகாரம் பெற்றதுதான்
சிந்தனையா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இந்தக் கேள்விக்கு இடமே
இல்லை. ஏழு பாடல்களுக்குத்தான் எனக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
எனது 8,000 பாடல்களில் அந்த ஏழு பாடல்கள் மட்டுமே தேசிய விருது
பெறத்தக்கது என நீங்கள் கருதினால் நான் உங்களைச் சும்மா விட மாட்டேன்.
அப்போது மற்ற பாடல்களெல்லாம்? ‘காதல் ஓவியம்', ‘சிந்து பைரவி', ‘திருடா
திருடா', ‘பம்பாய்', ‘முத்து' என ஏன் விருது கொடுக்கவில்லை என்று
சொல்லிக்கொண்டே போவேன். விருதுகளுக்காக நான் ஆசைப்படுவதில்லை. விருது
வந்தால் தவிர்ப்பதும் இல்லை. விருது வந்தால் மகிழ்ச்சியை மறைப்பதும்
இல்லை.’’
‘‘ஒரு நேர்காணலில் ஞானபீட விருதுக்குத் தகுதியானவர்களாக கி.ரா.,
அசோகமித்திரன் என இருவரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள்
படைப்புக்கும், அவர்களின் படைப்புக்கும் இடைவெளி என்னவாக இருக்கிறது எனக்
கருதுகிறீர்கள்?’’
‘‘காலம்தான் இடைவெளி. என்னைவிட அரை நூற்றாண்டுக்கு முன்னால் அவர்கள்
எழுதினார்கள். அவர்களின் காலம், விழுமியங்கள், மொழி நடை என்பது அவர்கள்
காலத்தோடு சம்பந்தப்பட்டது. நான் என் சமகால இளைஞர்களுக்குப் புதிய மொழி
நடையைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன். நான், யதார்த்தம் எவ்வளவு
முக்கியமோ, அதில் கலைத்தன்மையும் முக்கியம் என்று நினைக்கிறேன். அவரவர்
காலத்துக்கு அது நியாயம். என் காலத்துக்கு இது நியாயம். இந்த நியாயங்களை
ஒப்பிடக் கூடாது. இரண்டுக்கும் தனித்தனி அளவுகோல் எனக் கருத வேண்டும்.
காலத்தின் நியாயங்களை அழிப்பதற்கு நாம் யார்... என்னுடைய காலத்தன்மை,
இலையில் பசுமைபோல், மலரில் மகரந்தம்போல் இளைஞர்கள் உடம்பில் உதிரம்போல்
உள்ளே இருக்க வேண்டும். இதுதான் என் எழுத்துக் கொள்கை.’’
‘‘தமிழாற்றுப்படை மீண்டும் வருமா!’’
‘‘தமிழாற்றுப்படை 24 ஆளுமைகள் கொண்ட படைப்பாக இருக்கிறது. தமிழ் 24
பேரோடு முடிந்துபோவதில்லை. இன்னும் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள்.
அவர்களையும் தீவிரமாக வாசிக்க வேண்டும். இன்னும் தமிழுக்காகக் கொடுக்க
வேண்டும் என நினைக்கிறேன். ‘இதுவரை நான்', ‘தமிழாற்றுப்படை' என
இரண்டையும் தொடர்வேன் என்று நம்புகிறேன். இன்னும் காலம் கைகூடி வரும்போது
கண்டிப்பாக எழுதுவேன். இப்போது எனது 1,000 திரையிசைப் பாடல்களைத்
தொகுத்தேன். அடுத்த தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் எழுதி
இடம் பெறாத பாடல்களும் இதில் அடக்கம். ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு
எழுதிய வெளிவராத பாடல்களும் இதில் இருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கு
பெரிய வரவேற்பு இருக்கும்.’’
‘‘நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருக்கிறதா, இனிமேல் வருமா?’’
‘‘அரசியலில் நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகவில்லையே தவிர
அரசியலோடு எனக்குத் தொடர்பில்லை எனச் சொல்ல முடியாது.
அரசியல்வாதிகளுடனும் தொடர்பு இருக்கிறது. ஆனால், எதுவொன்றிலும் 100%
ஈடுபடும் கருத்துடையவன் நான். இரண்டாவது... என் சுதந்திரத்தை யாரும்
தடுக்கக் கூடாது. எனக்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது. அப்படிப்
பார்த்தால் எந்த அரசியல் கட்சியிலும் என்னால் முழுமையாக
ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. இன்னொன்று, என் சுதந்திரம் என்பது என்
நேரத்தை நானே தீர்மானிப்பதில் இருக்கிறது. அதனால் அரசியல் நுழைவு
சாத்தியம் இல்லை.’’
‘‘சாதித்துவிட்ட அலுப்பு தெரிகிறதா?’’
‘‘சாதித்ததாக நினைத்தால்தானே அலுப்பு வரும்... எதுவுமே இல்லை. நான்
தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பது, எதிர்கால எழுத்தாளர்களையும்,
கவிஞர்களையும் கருத்தில் கொண்டுதான். ஏனென்றால், எதிர்காலத் தலைமுறைக்கு
ஓர் அளவுகோலை விட்டுச் செல்கிறேன். இந்த அளவுகோல்களைத் தாண்டி நீங்கள்
தமிழை வளர்க்க வேண்டும் என விரும்புகிறேன். ஏழு தேசிய விருதுகள், ஆறு
மாநில விருதுகள், சாகித்ய அகாடமி, பத்ம, பத்மபூஷண் விருது, சாதனா
சம்மான் விருது, மூன்று பல்கலைக்கழக டாக்டர் பட்டங்கள், 8,000 பாடல்கள்,
41 புத்தகங்கள், ஞானபீடம் என இவ்வளவு அளவுகோல்களை நான் எதிர்காலத்
தலைமுறைக்கு விட்டுப் போகிறேன். எதிர்காலத்தில் வருகிற இளைய தலைமுறை
இதைத் தாண்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.’’