பொங்கல் வந்ததே
(சிந்துப் பாடல்)
(பல்லவி)
பொங்கல் வந்ததே - இன்பம்
பொங்கு கின்றதே - எங்கும்
பொன் பொலிந்ததே - இன்னல்
பொன்று கின்றதே
(சரணம்)
பூதலம் களிக்க அன்பு பூத்து நின்றதே - மிகு
… போகமே தழைக்க வானம் வாழ்த்து கின்றதே
தீதெலாம் தொலைந்து வாழ்வு சீர்மி குந்ததே - நம்
… தேவை யாவும் தீர்த்து வைக்க ஏரெ ழுந்ததே (பொங்கல் வந்ததே)
காதல் மாதர் கண்கள் என்னும் வாள் ஒளிர்ந்ததே - இளம்
… காளையைக் கடந்த வீரர் நெஞ்சை வென்றதே
சோதி ஆதவன் சிறப்பை ஊரி சைத்ததே - ஒரு
… சோர்விலாத மாட்டினத்தின் மாண்பு ரைத்ததே (பொங்கல் வந்ததே)
- இமயவரம்பன்