பகை முறித்து அமைதி உடன்படிக்கை

74 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 29, 2019, 10:01:16 PM7/29/19
to seshadri sridharan, thiru-th...@googlegroups.com, வல்லமை, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com

பகை முறித்து அமைதி உடன்படிக்கை

திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில் 

arangulanathar.jpg

பண்டை நாளில் வழங்கிய முடியாட்சி என்பது ஒரு அப்பட்டமான குடும்ப ஆட்சி என்பதைத் தான் கல்வெட்டுகள் விளம்புகின்றன. இதனால் தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்க எல்லா வகையான வழிகளையும் அரசகுடும்பத்தார் கைக்கொண்டனர். தம்பி, பிள்ளை, பேரன், மருமகன், மைத்துனன் என பலரும் இதற்காகத் தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.  இதைத் தான் வேந்தன், மன்னன், அரையன், கிழான் உள்ளிட்ட நான்கு அடுக்கு அதிகாரப் பிரிவு குடும்பத்தாரும் செய்தனர்.

ஆனால் தமிழகத்தில் தான் இந்த வரலாற்று உண்மை மறைக்கப்பட்டு தனிமனிதனான ஒரு அரசகுரு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்துவிட்டான் என்று சொல்லி பகுத்தறிவின் பெயரால் தமிழ் மக்களின்அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை நீங்களே இதில் உள்ள விளக்கப் பகுதியை படித்து தெளியலாம்.

தமது ஆட்சி அதிகாரத்தை நிலைபெறச் செய்ய மக்கள் விரும்பாத போரை மக்களை மீது திணித்து மக்களை வருத்தி வெற்றி கண்டவர்கள் தமது இயலாமையின் போது போர் ஒழித்து அமைதி உடன்படிக்கை கண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்காக அல்ல அரசகுடும்பம் அழிவில் இருந்து தப்பவே இந்த அமைதி உடன்படிக்கை என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கோவில்களில் இவ்வகை அமைதி உடன்பாட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை இனி படித்து அறிந்துகொள்வோம்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்னாண்டார்கோயில் பர்வதகிரீசுவரர் கோவிலின் கிழக்கு திருச்சுற்றில் குறுக்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வாஸ்திஸ்ரீ  கோச்சடை பன்ம திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தே
  2. வற்க்கு யாண்டு 12 காத்திகை மாதம் ஜெயசிங்க குலகால வளநாட்டு  வடபன
  3. ங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றாக்குடி உடைய நாயனார் கோஇல் தானத்து முத
  4. லிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலை நாட்டு அரையகளோம் எங்களில் இசைந்து
  5. பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது நாங்கள் பகை கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல்
  6. ஆன ஊர்கள் வழிநடைக் குடிமக்கள், இடை குடிமக்கள் இவர்களை அழுவு செய்
  7. யக்கடவோ மல்லவாகவும். ஒருவன் அழிவு செய்யில் நூறுபணம் தெண்டம் 
  8. வைக்கவும். ஒரு ஊராக அழிவுசெய்யில் அஞ்நூறு பணம் வைக்கவும் கடவதாகவும் 
  9. இப்படி செய்யும் இடத்து வெட்டியும் குத்தியும் செத்து நோக்க கடவர்களாகவும்.

தானத்து முதலி- கோவில் பொறுப்பாண்மைத் தலைவர்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; எய்யுமிடத்து – அம்பு எய்தி போர் நிகழ்த்து; பரிசாவது – முறை, விதம், வகைமை யாதெனில்; அழிவுசெய்யில் – அழித்தால்; தண்டம் – குற்றத் தொகை. 

விளக்கம்: 13-14 –ம் நூற்றாண்டில் ஜடவர்ம சுந்தரபாண்டியனின் 12-ம் ஆட்சிஆண்டில் கார்த்திகை மாதம் செயசிங்க குலகால வளநாட்டு வடபனங்காட்டு நாட்டு திருக்குன்றாக்குடி இறைவர் கோவிலில் அதன் பொறுப்பாண்மைத் தலைவருக்கு வடபனங்காட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களும் இசைந்து இனி நடந்து கொள்வதற்கான வழிகாட்டுநெறி என்று தாம் நடந்துகொள்ளப்போகும் முறையை பற்றி சொல்கிறார்கள். பகையால் அம்பு எய்யும் போது எங்கள் காவலுக்கு உட்பட்ட ஊர்களில் வழிநடையில் வாழும் மக்கள், ஊர் இடையே வாழும் மக்கள் ஆகியோருக்கு இனி எந்த அழிவையும் செய்ய மாட்டோம் என்று உறுதி மேற்கொள்கின்றனர். அவ்வாறு எவரையாவது ஒருவரை கொன்று விட்டால் 100 பணத்தை தண்டத் தொகையாக கட்டுவோம். அதே நேரம் ஊரையே அழித்தால் 500 பணத்தை தண்டத் தொகையாகக் கட்டுவோம். இப்படி ஆவதற்கு காரணமானவரை வெட்டியும் குத்தியும் செத்துப் போகச்செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர்.

இக் கல்வெட்டு பொதுவாகப் போரின் போது வழிநடையில் வாழ்வோர், ஊர்நடுவே வாழ்வோர் போர்செய்யும் படைகளால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்படுவதை மறைமுகமாகச் சுட்டுகின்றது. இந்த உடன்படிக்கையில் அத்தகு தாக்குதலை இனி தவிர்ப்பதாக இருதரப்பு அரையர்களும் ஒப்புக் கொள்கின்றனர். நாம் பொதுவாக இந்நாள் போரில் தான் போரின் போது நாடே போரில் ஈடுபடுவதாகவும் அதனால் நாட்டின் எப்பகுதியும் தாக்கப்படும் என்று எண்ணுகின்றோம். ஆனால் பண்டைய போர் முறையில் எங்கேனும் ஆறு, ஏரிக் கரை ஒரங்களில் தான் போர் நடக்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். இக்கல்வெட்டு இக்கருத்தை உடைத்து பொய் என்றாக்கிவிட்டது. போர் இரு தரப்பாரிடையே மூண்டால் பொது மக்களும் தாக்கப்பட்டு அவரும் அவர் உடைமையும் அழிவிற்கு ஆளாவதை தெளிவாக விளக்குகின்றது.  அப்படி என்றால் போரில் நாடே பங்கு பெற்றதாகத் தானே பொருள். கோவிலை ஆட்சியாளர் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதால் தான் மலைநாட்டு அரையர்கள் இருவரும் கோவில் பொறுப்பு தலைவர் முன்னிலையில் போர்நெறி உடன்படிக்கையில் ஈடுபடுகின்றனர். இப்படி கோவில் பொறுப்பாளர் முன்னிலை நேர்ந்த உடன்படிக்கை என்பதால் இந்த வரலாற்று நிகழ்வு கோவிலில் ஒரு கல்வெட்டாக இடம்பெற்றது. இல்லாவிட்டால் இது நம் அறிவிற்கு எட்டி இருக்காது.

முன்னம் போர்க் காலத்தில் ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது முன்னோர்களே காரணம் என்று இந்நாளிலே தம்மை ஆண்ட பரம்பரையர், ஆளப் பிறந்தவர், அடக்கி ஆண்டவர், மண்ணாண்டவர், பாரண்டவர் என்று மார்தட்டுவோர் பொறுப்பேற்பார்களா? ஏன் பொறுப்பு ஏற்க கூடாது என்பதே கேள்வி?

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 330.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நாங்குபட்டி எனும் மடத்துக்கோவில் அம்பாள் சன்னதி மேற்கு அடித்தளத்தில் வெட்டிய 8 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீமந் மகாமண்டலீசுரன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ வீர இராயண்ண உடையார் திருஇராச்சியம் பண்ணி அருளாநின்ற விகாரி வருஷம் ஆனி மாதம் 25 நாள். பேராம்பூர் [வரந்]தரு [தேவ]ன் அழகியார் ஆன நரசிஞ்க தேவர் உள்ளிட்டாரோம்
  2. கீழைக்குறிச்சி ஊரவற்குப் பகை ஒருக்கம் தீந்து கல்வெட்டிக் குடுத்தபடி முன்பே எங்கள் பேர[னார்] சேமநரசிஞ்கத் தேவர் நாள் முதல் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கதேவர் நாள்அளவாக உற்று நிலை அற்ற வினோதப் பகையாய் அங்கும் இஞ்கும் நால்பது நூறு
  3. மனிதரும் பட்டு சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாக கிடக்கையில் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கத்தேவர் நாளிலே இவரும் மேற்படி சேமரும் மேற்படி குமு[த]ய நாயநாரும் நாங்களும் எங்களில் பொருந்தி கீழைக்குறிச்சி
  4. ஊரவரை அழைத்து விட்டு உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு உற்று நிலை அற்ற பகைக்கு விபரீதமாய் இருக்க வேண்டுவதில்லை என்றும் அங்குப்பட்டது அறுதியாக மேல்பட்டு பேராம்பூர் கீழைக்குறிச்சியும் கீழைக்குறிச்சி பேராம்பூருமாக ஒன்றுபட
  5. நடத்திப் போதக்கடவோம் என்று நாங்கள் அரன்குளவர் சன்னதியிலே அறுதி பண்ணிக்குடுத்து அந்த அறுதிபடியிலே இற்றை வரையும் நடத்தி போதுகையில் இற்றை நாள் தென்மலை நாட்டாரும் _ _ _ னூர் புதுவயல் ஊரவரும் முதுசொற்குடி நாட்டாரும்
  6. முன்பாக கல்வெட்டிக் குடுக்கையில் இன்னாள் முதல் சந்திரஆதித்தவரையும் பேராம்பூர் அரசு வெறுத்த இடம் கீழைகுறிச்சி வெறுத்தும் கீழைகுறிச்சி வெறித்த இடம் பேராம்பூர் அரசு வெறுத்தும் இரண்டு நினையாமல் நடத்தப் போதக் கடவோமாகவும்
  7. இரண்டு நினைத்தோமாகில் எங்கள் வழிபடு தெய்வமான நாயனார் திருப்பெருமானாண்டார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு நரசிஞ்க தேவர் எழுத்து. இப்படி அறிவோம் தென் மலைநாட்டவரோம். இப்படி அறிவோம் கீரனூர் புதுவயல் ஊரவரோம்
  8. இம்மரியாதி ஒழுந்து கீழைகுறிச்சி ஊரவர் இரண்டு நினைத்தோம் ஆகில் நாயனார் உடைய நாயனார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு ஊற்கு சமைந்து இவ்வூர் கணக்கு உடையான் ஒடுவாய் நாட்டு வேளான் எழுத்து.

தீந்து – முடித்து வைத்து; உற்றுநிலை – உண்மைக் காரணம்; அங்குபட்டது –அவ்வாறு தோன்றிய எண்ணம்; அறுதி – வரையறை, முடிவு; ஒன்றுபட – ஒற்றுமையாக; இரண்டு நினையாமல் – மாற்று கருத்து கருதாமல், second thought; சிறீபாதம் தப்பினோம் – திருப்பாதம் விலகினோம்; வெறுத்த – விரும்பாத; மரியாதி – ஏற்று, மதித்து நடக்கும் வழக்கம்

விளக்கம்: 1419 பொ. ஊ. விகாரி ஆண்டு ஆனி 25-ம் நாள் (சூன் 21) விசயநகர வேந்தர் இராயண்ண உடையார் ஆட்சிக் காலம். பேராம்பூர் வரந்தரு தேவன், அழகியார் ஆன நரசிங்க தேவர் உள்ளிட்டார் கீழைக்குறிச்சி ஊராரோடு பகை உணர்வை முடித்து வைத்த வகைமை யாதெனில் முன்பே இவர்களது பேரன் சேமநரசிங்கத் தேவர் தொடங்கி அடைக்கலங்காத்த நரசிங்கதேவர் வரை உண்மைக் காரணம் இல்லாத பகையாக அங்கும் இங்கும் 40 பேர் 100 பேர் இறந்தும் மாடுகளை சிறைபிடித்தும் நீங்காத பகை ஏற்பட்டு இருந்தது. அடைக்கலங்காத்தார் நரசிங்க தேவர் காலத்தில் அவரும் மேலே குறிப்பிட்ட சேமரும் மேற்படி குமுதய நாயநாரும் பேராம்பூராரும் நரசிங்க தேவருடன் கூடி  கீழைக்குறிச்சி ஊராரை அழைத்து வந்து உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையான பகைக்கு காரணம் இல்லாத போது நமக்குள் இனி பகை வேண்டாம் என்றும் முடிவாகி அதன்மேற்பட்டு பேராம்பூர்  கீழைக்குறிச்சியாகவும் அவ்வண்ணமே கீழைக்குறிச்சி பேராம்பூராகவும்  ஆகி ஒற்றுமையாய் நடந்துகொள்வோமாக இறைவன் அரனகுளவர் திருமுன்பாக முடிவு செய்து அந்த முடிவுப்படியே இன்றுவரை நடந்துவருகின்றனர். இப்போது தென்மலை நாட்டார், புதுவயல் ஊரார், முதுசொற்குடி நாட்டார் முன்பாகவும் அந்த முடிவைக் கல்வெட்டிக் கொடுக்கும் இந்நேரத்தில் இன்று முதல் ஞாயிறும் நிலவும் உள்ள நாள் வரையில் பேராம்பூர் அரசு கீழைக்குறிச்சியை விரும்பாமல் பகை கொண்டது என்றும் அதே போல் கீழைக்குறிச்சி விரும்பாமல் பகை கொண்ட இடம் பேராம்பூர் அரசு என்ற இரண்டாம் கருத்து, மாற்று கருத்து கருதாமல் நடந்து கொள்வோம். அவ்வாறு மாற்று கருத்து கருதினால் நாங்கள் வழிபடும் தெய்வமான திருப்பெருமானாண்டார் திருப்பாதத்தை விலகினோம் என்றாவதாகும் என்று தென்மலைநாடு, புதுவயல் ஆகிய ஊரார் முன்னிலையிலும் நரசிங்க தேவர் மீண்டும் உறுதி ஏற்கின்றார்.  இந்த உறுதியை ஏற்று, மதித்து நடக்கும் வழக்கத்தை விட்டு கீழைகுறிச்சி ஊரார் மாற்று கருத்து கொண்டால்  அவரது இறைவனான உடைய நாயனாரின் திருப்பாதத்தை விட்டு விலகியவர் என்று ஆகிவிடுவார் என்று ஊரின் விருப்பிற்கு இசைந்து கீழைக்குறிச்சி கணக்கு உடையவனான ஒடுவாய்நாட்டு வேளான் எழுதி கையொப்பமிட்டான்.   

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 318-319.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பழைய மடைபள்ளியின் மேற்கு சுவரில் வெட்டிய 20 வரிக் கல்வெட்டு

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறு பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்
  2. க்கு யாண்டு 29 வது காத்திகை 29 ள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு உடையா
  3. ர் திருவரகுளமுடைய நாயநார் திருக்கொயில் தானத்தார்க்கும் ஊரார்க்கு
  4. ம் பூவரசகுழி அரைய மக்களில் சூரியன் தொண்டைமானு மக்கள் மருமக்களும் சோழி
  5. யன் உலக மாணிக்கப் பரையனும் மக்களும் பாணித் தேவரான ஈழத்தரை
  6. யர் மகன் வீரமூவன் விசையர் தேவனும் வீரமூவன் ஈழத்தரையுனும் தம்பி[யெ] 
  7. க்கனும் கல்வெட்டி குடுத்த பரிசாவது அடியார்க்கு நல்லான் துண்டராயரை சு[ந்]
  8. தன் நாரசிங்க தேவந் குத்துகையில் இந்த பகையை நோக்கி இன்பன் உலக மா
  9. ணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையரும் வாழ்வனாந
  10. ஈழத்தரையனும் சுந்தந் நாரசிங்க தேவரையும் சோழன் உலக மா
  11. ணிக்கப் பரையனையும் குத்துகையில் இந்தப் பகையென்று சொ
  12. ல்லக் கடவதல்ல என்று சந்திராயித்தவரைக்கு சூரியன் தொண்
  13. டைமாநாரும் இவர் மக்களும் தொண்டைமாநாரும் மருமக்களான சேர
  14. சோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டாரை
  15. யனும் உடப்பாண்டானும் உள்ளிட்டாரும் ஆக இவ்வநைவரும் இந்தப
  16. கை என்று சொல்லக் கடவோமல்ல என்று பகை ஒருங்க திரு
  17. மலையில் கல்வெட்டிக் குடுத்தோம். இந்த இரண்டு வகையில்
  18. மனித்தரும் இந்தப் பகையை நோக்கி வரும் நலந்[தீ]ங்கு
  19. ஒருத்தர்க்கு வந்தது அனைவர்க்கும் என்று அனுபவி
  20. க்க கடவோமாகவு _ _ _ _

விளக்கம்: 1325 பொ.ஊ. வீரபாண்டியனின் 29 ஆம் ஆட்சி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 29-ம் நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டின் திருவரங்குளமுடைய இறைவர் கோயில் பொறுப்பாளருக்கும் ஊராருக்கும் பூவரசகுழியைச் சேர்ந்த அரையர்கள் சூரிய தொண்டைமான் பிள்ளைகளும் மருமக்களும் சோழன் உலக மாணிக்கப் பரையனும் அவன் பிள்ளைகளும் ஈழத்தரையன் வீரமூவ விசைய தேவன் அவன் தம்பி இயக்கன் ஆகியோர் சேர்ந்து கல்வெட்டைவெட்டிக் கொடுத்த விதமாவது அடியார்க்கு நல்லான் துண்டராயனை சுந்தன் நாரசிங்க தேவன் குத்தியதால் ஏற்பட்ட பகையை வைத்து இன்பன் உலகமாணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையனும் வாழ்வனான ஈழத்தரையனும் சுந்தன் நரசிங்க தேவனையும் சோழன் உலகமாணிக்கப் பரையனையும் குத்தினர். இது பகை என்று சொல்லக் கடவதல்ல என்று ஞாயிறும்நிலவும் நீடிக்கும் காலம் வரை சூரியன் தொண்டமானும் இவனுடைய பிள்ளைகளும் மருமக்களான சேரசோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டரையனும் உடப்பாண்டானும் ஆகிய இவ்வனைவரும் இந்த பகையை பகை என்று கருதாமல் பகை ஒடுங்க திருமலையில் கல்வெட்டுவித்தோம். இந்த இரண்டு பிரிவு மனிதரும் இந்த பகையால் வரும் நல்லது தீது எது வந்தாலும் ஒருவருக்கு வரும் துன்பம் மற்றவருக்கும் எல்லாருக்கும் ஏற்பட்டதாக அனுபவிப்போம் ஆக. பறையர் படைப்  பிரிவிலும், போரிலும் மிக முக்கியமான நிலையை பெற்றிருந்தனர் என தெரிகின்றது.  

இக்கல்வெட்டு அரையர் குடும்பத்தார் எல்லோரையும் இந்த உடன்படிக்கைக்கு இணங்க வைத்ததை பார்க்கும் போது ஒவ்வொரு அரையர் குடும்பமும் அதன் தலைமை அரையனை கம்பளிப் பூச்சி போல சூழ்ந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. அப்படியானால் அந்த குடும்பமே ஆட்சி செய்ததாக ஆன்றோ பொருள். பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி தனிமனிதனாக ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?

 பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 288-289.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பைரவ மண்டபசுவரில் வெட்டிய 18 வரிக் கல்வெட்டு.

  1. கா[ல]யுத்த வருஷம் புரட்டாதி மாதம் 18 நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு பூ[வரச]குழி அரை _ _ _ ல் கெ_ _ _ நாரசிங்க தேவனை
  2. _ _ _ ண்டராயரும் தம்பிமாரும் மக்கள் மருமக்களும் கு[த்து]கையில் இந்தப் பகையிலே [நா]டு இரண்டு வரிசையும் பட்டும் கெட்டும்
  3. _ _ கையில் தெற்காட்டூர் வாணாதராயர் வ[கை] [யறு]த்தபடி கொ[ப்ப]ணன் நாரசிங்க தேவன் பழிக்கு இன்பன்
  4. _ _ ட்டது பழி ஆகக்கடவதாகவும் வாழவன் துண்டராயற்கும் தம்பிமாற்கும் மருமக்களுக்கும் [மச்சினனாற்கும்]
  5. _ _ வதரையன் படுகையில். இவன் பட்டதும்_ _  _ _ வன் துண்டராயன் தம்பித் தமையன்மாரிலும் மக்கள் மருமக்களிலும்
  6. பெண்டாட்டி இன்பர் பட்டதும் மிகுதிக்க _ _ _ பலநாளும் ப(ல்)ல நாட்டிலும் _ _  வகையிலுமிலட்டூர்
  7. _ _ _ _ _ ளும் பகுதிக்காறர் சொம்மாய் அழிந்த முதல்களும் வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மருமக்களும் பொரு
  8. _ _ _ _ வாகவும் வாழவன் துண்டராயர் மகன் இராகுத்தனும் எழு_ _ம் புதனுக்[கு]த் தானும்_ _ _ 
  9. _ _ _ வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மக்களும் மருமக்களும் உடன் இந்தப்பகைக்கு _ _ _ _சேர_ _லக்கடலுக்கு _ _
  10. _ _ _ _ _ கொப்பணன் நாரசிங்கதேவன் மகன் [அடி]யாற்கு நல்லானுக்கும் மருமக்களுக்கும் _ _ _ இன்னும் [வாழ]வன்தானுக்கும்_ _ _ _ _ _
  11. _ _ _ _ _ _ _ சொம்மாய_ _ மாகவும் அடியாற்கு நல்லானும் கொப்பணன் [மருமக்களும்] _ _ _ ல்லக் கடவ_ _ _ _
  12. _ _ இப்படி பகைத்து _ _ _ _ _ இடுகையில் இம்மரியாதி நிற்கு செய்வர்களாகவும் இம்ம[ரியாதி]ல்லாமல் இருக்கிற_ _  _
  13. _ _ _ உடையார் திருவரன்குளமுடைய நாயனார் திருக்கோயில் தான[த்தாரும்] _ _ _ [ண்டாரும்]_ _ _
  14. _ _ க் கடவர்களாகவும் கேட்கு _ _ ன்பது_ _க் கொண்டா_ _ _ பத்து பணமும்_ _ _
  15. _ _  இருபது பணமும் உதிரத்த _ _ தால_ _[செய்]த பாண்டியற்கு [ஈ]ழத்தரை_ _ __
  16. _ _ லத்தால் திருமேனியும் சமைத்துத் திரண _ _ _ _  _ _ _    ___
  17. _ _ _ வாகவும் இப்படிக்கு இரண்டும்_ _ _ நிலைகா_ _ காட்டுராயர் _ _ _ _
  18. _ _ _ நாட்டுக்கு ஆவுடைநாடன் எழுத்து.

இரண்டுவரிசை –இரண்டு பிரிவு, இரண்டு அணி; கெட்டும் – அழிந்தும்; 

விளக்கம்: 1318 பொ.ஊ ஆகுமோ? என்று தொல்லியலாளர் குறித்துள்ளனர். இதில் உள்ள மாந்தரின் பெயர் பிற கல்வெட்டுகளில் இடம் பெறுவதை வைத்து ஒரு ஒப்பீட்டில் இந்த ஆண்டை சுட்டினர் போலும். கல்வெட்டில் வேந்தர் பெயர் இல்லை. காலயுத்த ஆண்டு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் இந்த அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்று கூறுகிறது கல்வெட்டு. இராசராச வளநாட்டு வல்லநாட்டு பூவரசகுழி அரைசரில்  கோப்பண்ண  நரசிங்க தேவனை துண்டராயனும் அவன் தம்பிமார், பிள்ளைகள், மருமக்கள் ஆகியோர் குத்தி ஏற்பட்ட பகையில் நாடு இரண்டு பிரிவாகி அழிந்து போகையில் தெற்காட்டூர் வாணாதராயர் வகையறுத்தபடி கோப்பண்ண நாரசிங்க தேவன் கொலைகப் பழிக்கு இன்பன் இறந்தது பழிக்கு ஈடு ஆக்கப்பட்டுவிட்டதாகவும்; அப்படியே வாழவன் துண்டராயற்கும் தம்பி தமையன்மார் பிள்ளைகளும் மருமகன்களும் மைத்துனர்களுக்கும் துண்டராயர் இறந்ததையும் ஈடுகட்டப்பட்டது. துண்ட ராயன், அவன் தம்பி, தமையன் மருமக்களிலும் பெண்டாட்டி இன்பர் இறந்ததும் பலநாள்களாக  பல நாட்டிலும் பேசப்பட்டது.  வாணாதராயர் வகையறுத்தபடி  கோப்பண்ணன் நரசிங்கதேவன் மகன் அடியார்க்கு  நல்லானுக்கும் துண்டராயன் மகன் இராகுத்தனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு அதை மதித்து நடக்க வேண்டும் என்றும் திருவரன்குள கோவில் பொறுப்பாளர்களும் இதை கவனித்து வருவராக என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து பணம், இருபது பணம் என்பது தண்டத் தொகையா?

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 282.

SII 34 330 pakai ozhippu.jpg
SII 34 318.jpg
SII 34 319.jpg
SII 34 288.jpg
SII 34 289.jpg
SII 34 282.jpg

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2019, 9:55:31 AM7/30/19
to vallamai, seshadri sridharan, thiru thoazhamai, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com
<பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி தனிமனிதனாக ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?>

நல்ல வினவல். எனக்கு சகுனிமாமா நினைவுக்கு வருகிறார்.

திங்., 29 ஜூலை, 2019, பிற்பகல் 7:01 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQYwFaFOB5RM8Lrmpx4Nj4f4CyY%3DAYSEeWD%2BG8D8%3DjQVQ%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Jul 31, 2019, 9:57:21 PM7/31/19
to வல்லமை
On Tue, 30 Jul 2019 at 19:25, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி தனிமனிதனாக ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?>

நல்ல வினவல். எனக்கு சகுனிமாமா நினைவுக்கு வருகிறார்.

எப்படி எல்லாம் திராவிடம் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகளே சான்று  

Reply all
Reply to author
Forward
0 new messages