alagidudhal

164 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jun 3, 2005, 12:04:02 PM6/3/05
to yAppu...@googlegroups.com
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அலகிடுதல் - பேரா. பசுபதி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

* நம் 'உலகம்' எழுத்துகளால் ஆனது. மூன்று வகை எழுத்துகளில் நம் உலகம்
சுழல்கிறது. குறில், நெடில், ஒற்று (மெய்). இந்த எழுத்துகள் சேர்ந்து
நேர், நிரை என்ற அசைகள் பிறக்கின்றன. ( பயிற்சி-1). ஒலிக்கும்
மாத்திரைகள் வேறானாலும், க, கல், கா, கால் யாவும் 'நேர்' அசையே!
'நிரை'யும் இப்படியே. அதனால், இப்போதைக்கு மாத்திரைகளை மருந்துக்
குப்பியிலேயே போட்டு வையுங்கள். வேண்டுமானால் பிறகு வெளியே எடுக்கலாம்!
அசைகள், அசைகள் சேர்ந்து சீர்கள், சீர்களுக்குள் உள்ள தளை.... இப்படியே
நாம் யோசிப்போம்.


* வெண்பாவின் விதிகளைப் பிறகு பார்ப்போம். ஆனால், குறளின் முதல் அடிக்கு
வேண்டிய விதிகளைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. அதில் ஈரசைச் சீர்கள்,
காய்ச்சீர்கள் தான் வரலாம். (இரண்டாம் அடியில் ஈற்றுச் சீரில் மட்டும்
ஓரசைச் சீர் வரலாம்) வெண்பா முழுதும் (அடியில் உள்ள சீர்களுக்குள்
மட்டும் அல்ல, முதல் அடியின் நான்காம் சீருக்கும், இரண்டாம் அடியின்
முதல் சீருக்கு இடையிலும்) 'வெண்டளை' தான் வரலாம். அதாவது,

மாவைத் தொடர்ந்து நிரை;
விளத்தைத் தொடர்ந்து நேர்;
காயைத் தொடர்ந்து நேர்.
[முதல் இரண்டையும் முன்பே பார்த்தோம், இல்லையா?]

அதனால், வெண்பா அடிகளில் சீர்கள் இந்த விதிகளுக்கு உட்பட அமையும்.
இவைதான் முக்கியம். மோனை போன்றவை பிறகுதான். சொல்லைச் சிதைத்து,
'வகையுளி' செய்தாயினும், வெண்டளையை அமைப்பது மிக அவசியம். வெண்டளை
தவறினால், தளை தட்டுகிறது என்பர்.


* குறில், நெடில், ஒற்று -இவற்றுக்குள் இல்லாதவை குற்றியலிகரம், அளபெடை,
ஆய்தம். ஐகாரக் குறுக்கமும் கவனிக்க வேண்டிய ஒன்று. இவற்றை எப்படி
அலகிடுவது? இதுவே கேள்வி.


* குற்றியலுகரம்:
---------------
[அப்புறம் சொல்கிறேன்! அல்லது வேறு யாராவது எழுதலாம்.]

'யகர' முதல் எழுத்துடன் சேரும்பொது 'குற்றியலிகரமாய்' ஆகிறது.
ஓட்டு +யந்திரம் = ஓட்டியந்திரம்; குன்று+ யாது = குன்றியாது

விதி: தளை சிதையும்போது, குற்றியலிகரம் (அது அரை மாத்திரைதான்!) அலகு பெறாது.

காட்டு:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.

'தியா' நிரை போல் இருக்கிறது. 'குழலினி' = கருவிளம். விளத்திற்குப் பின்
நிரை வந்தால் வெண்டளை தட்டும். அதனால், குற்றியலிகரச் சந்தியை நீக்கிப்
பார்த்தால், தளை தட்டவில்லை.

'யாதியாம் செய்வ தியம்பு' என்பது ஒரு வெண்பா ஈற்றடி.
[யாது+யாம்= யாதியாம்] இங்கே, குற்றியலிகரம் தளைக்கு இடைஞ்சல்
செய்யவில்லை. அதனால், அலகு பெறும். 'யாதியாம்'= கூவிளம் என்று கொள்ளலாம்.


* அளபெடை:
-------------
அளபெடை= முன்வரும் எழுத்தின் ஓசையை நீட்டும்.

இதில் பல வகை உள்ளன; நமக்கு இப்போது தேவையில்லை. உயிரளபெடை பார்ப்போம்.

சுருக்கமான விதி:
தளை தட்டாதபோது, அளபெடை குற்றியலிகரம் போல் அலகிடாது;
தளை தட்டும்போது, அலகிடும். அவ்வளவுதான்.

கற்றதால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்

தொழா= நிரை. ரெனின்= நிரை. வெண்பா விதிகளைக் கடைபிடிக்கவில்லை. 'அ' வை
குறிலாக வைத்தால், தொழாஅ= புளிமா... வெண்பாச் சரியாகும்.


* ஆய்தம்:
----------
விதி:
தளை தட்டாதபோது ஆய்தம்= ஒற்று;
தளை தட்டும்போது, ஆய்தம்= குறில்.

காட்டு:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்.

இங்கே , அஃ = 'அகு' மாதிரி ஒலித்து, ஓசையைச் சரி செய்கிறது.
[அஃதொப்ப = புளிமாங்காய்]

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
[இங்கே அஃ = 'அக் '; அஃதவள் = கூவிளம்.]


* ஐகாரக் குறுக்கம்:
-----------------
முன்பே பார்த்தது. 'ஐ' நெடிலாயினும், சீரின் நடுவிலும், ஈற்றிலும்
குறில்போல் இருக்கும். இதையே, "தளை தட்டும்போது ஐகாரம்= குறில்; தளை
தட்டாதபோது, நெடிலாய், தனி நேரசையாகும்" என்றும் எழுதலாம்.


*ஒற்று நீக்கி அலகிடல்:
---------------------
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் இடையின ஒற்றுகள்; ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் மெல்லின மெய்கள்.
தளை தட்டினால் இவற்றை நீக்கி அலகிடலாம். [அதாவது, அவை இல்லாதது போல்
அலகிடுதல்].

காட்டு:
ஔவையாரின் ஒரு வெண்பா முதலடி:

ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்

'ஈட்டல்பொருள்'= புளிமாங்கனி. கனிச் சீர் வெண்பாவில் வரக் கூடாது.
அதனால், 'ஈட்டபொருள்' [கூவிளங்காய்] போல் அலகிடவேண்டும்.

[வல்லின மெய்களை இப்படி நீக்கி அலகிடக் கூடாது.]
===

Reply all
Reply to author
Forward
0 new messages