[MinTamil] ஒரு, ஓர்

17 views
Skip to first unread message

விஜயராகவன்

unread,
Apr 23, 2010, 5:49:18 PM4/23/10
to மின்தமிழ்
சிலர் ஒரு, ஓர் பயன்பாட்டில் கறாராக இருக்கின்றனர் (ஓர் அமைப்பு, ஒரு
நொடி). இதை அவ்வளவாக பலரும் பின்பற்றுவதில்லை என நமக்கு தெரியும்.
காலச்சுவடில் ஒரு தமிழாசிரியர் அதையே சொல்கிறார்.

அக்டோ பர் 2007 இதழில் மு. முரளிதரன் எழுதியிருந்த கடிதத்தில் 'ஒரு
அரசும் ஒவ்வொரு அரசும்' என்று எழுதுவது பிழை எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குரிய காரணமாக 'உயிர் எழுத்துச் சொல்லுக்கு முன்பு ஓர் என்றும் பிற
சொற்களுக்கு ஒரு என்றும் தொடர வேண்டுமென்பது இலக்கண நெறி' எனச்
சுட்டியிருந்தார். இலக்கண நெறியை மீறுவது குறையாகும் என்பது அவர்
கருத்து.

ஒரு, ஓர் இவற்றின் பயன்பாடு பற்றிய கறாரான இலக்கண விதி எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை. 'ஒன்றன் புள்ளி ரகரமாக இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ்
வருமே' என்பது நன்னூல் நூற்பா. ஒன்று, இரண்டு ஆகிய எண்ணுப் பெயர்கள்
புணர்ச்சியின்போது முறையே ஒரு, ஓர் எனவும் இரு ஈர் எனவும் மாறும் என்று
இந்நூற்பா கூறுகின்றது. வருமொழி முதலில் இருப்பது உயிரெழுத்துச் சொல்லா
மெய்யெழுத்துச் சொல்லா என்பது பற்றி நூற்பாவில் எதுவும் கூறப்படவில்லை.
உரையில்தான், 'ரகரமெய் உகரம் பெறுவது வருமொழி முதலில் மெய்வரின் எனவும்
உயிர் வரின் உகரம் பெறாது எனவும் கொள்க' என்று விளக்கம் வருகிறது.
அவ்விளக்கத்தையும் கட்டாயமான விதியாக உரை கூறவில்லை.

ஓராயிரம், ஈராயிரம் என்பவை ஒராயிரம் (ஒரு + ஆயிரம் = ஒராயிரம்), இராயிரம்
(இரு + ஆயிரம் = இராயிரம்) என்று வருவதையும் ஒரு யானை, இரு யானை என்பவை
ஓர் யானை, ஈர் யானை என்று வருவதையும் சான்று காட்டுகின்றது உரை.
'ஏற்புழி' என்று பொது நூற்பாவில் வருவதைக்கொண்டு இவற்றைக் கூறுகின்றது
உரை. உரையாசிரியர் காலத்திலேயே ஒரு, ஓர், இரு, ஈர் என்பவற்றின்
பயன்பாட்டில் கறார் தன்மை இல்லை என்பது இதனால் விளங்குகிறது.

இன்று தமிழ்மொழியின் பயன்பாட்டில் எத்தனையோ மாற்றங்கள். செய்யுள் நடைக்கு
எழுதப்பட்ட இலக்கண விதிகள் இன்றைய உரைநடைக்குப் பொருந்தாமல் போய்விட்ட
இடங்கள் பல. அதனால் அந்த விதிகளைச் சொல்லி இன்றைய உரைநடையைப் பிழை, குறை
என்றெல்லாம் குறிப்பிடுவது பொருத்தமல்ல. நாட்டுப்புறக் கதைகள் 'ஒரு ஊர்ல
ஒரு ராஜா', 'ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா' என்னும் வகையில் தொடங்குகின்றன.
ஜெயகாந்தன் எழுதிய நாவல் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'. 'அவளுக்கென்று
ஓர் மனம்', 'தங்கைக்கோர் கீதம்' என்பன திரைப்படத் தலைப்புகள். இவற்றைப்
பிழை என்று நிராகரித்துவிடலாமா?

சி. சந்திரன்
முதுகலைத் தமிழாசிரியர்
நாமக்கல்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages