அயோத்தி மக்கள் இராமனுக்கு முடிசூட்டு விழா என்று வள்ளுவன் பறையறைந்தது கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்கள்.
முதிய பெண்மணிகள் கோசலையைப் போலவும், வேதம் வல்ல அந்தணர்கள் வசிட்டனைப் போலவும், மணமான இளம்பெண்கள் சீதையைப் போலவும், சீதை திருமகளைப் போலவும், அவ்வூரில் வாழ்ந்த ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்கள் தயரதனைப் போலவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார்கள்.
இதனை,
மாதர்கள் கற்பின் மிக்கார்
கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்;
வேறுள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள்
திருவினை ஒத்தாள்; அவ்வூர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம்
தயரதன் தன்னை ஒத்தார்.
என்று அழகாக விளக்கியுள்ளார் கம்பர்.
ஒவ்வொரு கம்பர் பாட்டையும் சுண்டிப் பார்த்து "இது கம்பன் பாட்டு", "இது கம்பன் பாட்டு அன்று" என்று விளக்கியவர் இரசிகமணி டி.கே.சி. அவர் சொல்லும் திருத்தங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பது அறிஞர் உலகம் அறிந்த உண்மை. ஆயினும் சில பாடல்களுக்கு அவர் செய்துள்ள திருத்தங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
இப்பாட்டில் இரு திருத்தங்களை இரசிகமணி டி.கே.சி. செய்து, தமது "கம்பர் தரும் இராமாயணம்" முதற்பாகத்தில் வெளியிட்டுள்ளார்.
-
"மாதர்கள் கற்பின் மிக்கார்" என்பதற்கு மாறாக, "மாதர்கள் ஆண்டின் மிக்கார்" என்பது முதல் திருத்தம்.
-
"சாதுகை மாந்தர் எல்லாம்" என்பதற்கு மாறாக, "சாதன மாந்தர் எல்லாம்" என்பது இரண்டாவது திருத்தம்.
இவற்றில் இரண்டாவது திருத்தம் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை.
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை, "திருமழிசைப்பிரானின் நான்முகம் திருவந்தாதியில் உள்ள,
"சாதுவராய்ப் போதுமின்கள்" என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு". (68)
என்னும் வெண்பாவைக் காட்டி, "சாதுகை மாந்தர்" என்பது "சாதுவ மாந்தர்" என்று இருத்தல் வேண்டும் என்று குறித்துள்ளார்.
இது நல்ல பாடமாகத் தோன்றுகிறது.
முதல் திருத்தம் இரசிகமணியின் அறிவு நுட்பத்தைக் காட்டுகிறது. கோசலை கற்பில் சிறந்தவள் என்பது உண்மையே. இராமன் அவ்வன்னையை,
"அருங்கற்பினோய்" (1619) என்று விளித்துப் பேசுகிறான். கம்பர் அவளைக் "கற்புறுத்திய கற்புடையாள்" (1620) என்று குறிக்கிறார். ஆனால் இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதைக் கேட்டுக் கோசலையைப் போல மகிழ்வதற்கும் கற்பொழுக்கத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இங்கு மாதர்கள் கற்பைப் பற்றிய பேச்சு வேண்டாததாக அமைகிறது. அதனால் அவர் "ஆண்டின் மிக்கார்" என்று திருத்தம் செய்தார்.
நீதிபதி மகராஜன், தென்மாவட்டத்தில் கிடைத்த ஓர் ஏட்டுச்சுவடியில் "ஆண்டின்" என்பதற்கு மாறாக "வயதின்" என்னும் பாடம் காணப்பட்டதாகத் தம் கட்டுரை
ஒன்றில் தெரிவித்துள்ளார். இத்திருத்தங்களின் பொருத்தத்தை அறுதியிடக் கோசலையின் பண்புநலனைப் பற்றிய தெளிவு துணைபுரியும்.
கோசலை மற்ற பட்டத்தரசிகளைப் போல அரச குடும்பத்தில் பிறந்தவள்.
-
கோசல மன்னனின் மகள் கோசலை என்றும்,
-
மகதநாட்டரசன் மகள் சுமித்திரை என்றும்,
-
கேகயநாட்டு மன்னனின் மகள் கைகேயி
என்று இரகு வம்சம் (சருக்கம் - 11,17) தெரிவிக்கிறது.
கோசலை நான்கு பிள்ளைகளையும் "தன் பிள்ளை இவன்", "மற்றவர் பிள்ளைகள் இவர்கள்" என்னும் எண்ணமின்றி எல்லோரையும் சமமாகக் கருதினாள்.
அவளை மற்ற இருவரிடமிருந்து பிரித்துக் காட்டும் பண்பு அவள் பிள்ளைகளிடம் கொண்ட அளவற்ற அன்பு ஆகும். கம்பர் அவளை, "நால்வர்க்கும் மறுவில்
அன்பினில் வேற்றுமை மாற்றினாள்" (1609) என்று குறிக்கிறார்.
கோசலை கேகயத்திலிருந்து திரும்பிய பரதனிடம் கைகேயியின் வஞ்சனையை அறியாயோ என்று வினவினாள். அவன் அது கேட்டுக் குமுறினான்.
"யான் அவ்வஞ்சனையை அறிந்திருந்தால் பற்பல தீமைகள் செய்த பாவத்தை அடைவதற்குரியவன் ஆவேன்" என்று சூளுரைத்தான்.
அவன் கூறியவற்றைக் கேட்டுக் காட்டுக்குச் சென்ற இராமன் திரும்பி வரக் கண்டதுபோல மகிழ்ந்து அன்பினால் அழுது அவனைத் தழுவிக்கொண்டாள். அவள் மார்பகத்திலிருந்து பால் உக, விம்மி, விம்மி அவனோடு பேசினாள் என்கிறார் கம்பர்.
இத்தகைய தன்மை தாயன்பு மிக்கவர்களிடம் காணப்படுவது ஒன்றாகும்.
திருஞானசம்பந்தரைக் கண்ட மங்கையர்க்கரசியார் இத்தகைய நிலையினை அடைந்தார் என்கிறார் சிவப்பிரகாசர் தம்முடைய "நால்வர் நான்மணி மாலை"யில்.
இதனால் அன்பின் மிக்க மாதர்கள் கோசலை மனத்தை ஒத்தார்கள் என்று கூறுவதே பொருத்தமாக அமையும்.
அன்பு என்பதனை "அற்பு" என்று வழங்குவது பொதுவாகக் கவிஞர்களிடம் சிறப்பாகக் கம்பரிடமும் காணப்படும் போக்கு ஆகும்.
"அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே". (90)
"அற்பின்நல் திரைபுரள் ஆசை வேலையினான்". (3344)
"தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பின்அத் தலைவனும் அமைய நோக்கினான்".(10011)
என்று சில இடங்களில் அன்பினை அற்பு என்று குறித்துள்ளார்.
இவ்விடங்களில் எல்லாம் எதுகை நோக்கி அவ்வாறு அமைந்துள்ளன.
இப்பாடலில் எதுகை நோக்கி அவ்வாறு அமையாமல் ஓசையின்பம் நோக்கி அவ்வாறு அமைந்துள்ளது.
முதலடியின் பிற்பாதி "கோசலை மனத்தை ஒத்தார்" என்று வல்லொற்றுப் பெற்று வருவதால் அதற்கேற்ப வல்லோசை அமைந்தால் இனிமைபயக்கும் என்பதால் அற்பின் என்று பெய்துள்ளார்.
பாடவேறுபாடுகள் பெரும்பாலும் ஓர் எழுத்தைப் பிறிதோர் எழுத்தாகக் கொள்வதால் நிகழ்வன. அதனினும் குறைவாக ஒரு சீருக்கு மாறாக மற்றொரு சீரினைப் பெய்வதாலும், அதனினும் மிகக் குறைவாக ஓர் அடிக்கு மாறாக வேறோர் அடியினை மறதியால் அமைப்பதாலும் நேரிடுகின்றன.
எழுத்து மாற்றத்தால் ஏற்படும் பாட வேறுபாடுகள் மிகுதியும் ஏட்டில் உள்ள எழுத்தினைத் தவறாகக் கொள்வதால் நிகழ்வனவாகும்.
இப்பாட்டில் "மாதர்க ளற்பின்" என்பதைத் தவறாக "மாதர்கள் கற்பின்" என்று படித்ததால் பிழை நேர்ந்துள்ளது.
இரசிகமணி "கற்பின்" என்பது பிழை என்று கண்டறிந்தார், நோய் முதல்நாடி அறியும் தேர்ந்த மருத்துவர்போல. ஆனால், அதற்கு மாற்றாக அவர்
பரிந்துரைத்த மருந்து வீரியம் மிக்கதாக இல்லை.
நோய் கண்டறிந்து சொன்ன மருத்துவரைப் போற்றி, அப்பாட்டினை,
மாதர்கள் அற்பின் மிக்கார்
கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்;
வேறுள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள்
திருவினை ஒத்தாள்; அவ்வூர்ச்
சாதுவ மாந்தர் எல்லாம்
தயரதன் தன்னை ஒத்தார்.
என்று படித்து மகிழ்வோமாக!
முனைவர் தெ.ஞானசுந்தரம்
நன்றி:- தினமணி