[MinTamil] தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள்)

751 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 16, 2010, 11:34:29 PM4/16/10
to மின்தமிழ், santhav...@googlegroups.com
தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள்)

அக்டோபர் - டிசம்பர் 2006, பா.ஜெய்கணேஷ்

தமிழில் எழுதப்பட்ட பல ‘அபத்த’ இலக்கிய வரலாறுகள் போல ‘இலக்கண வரலாறுகள்’
பல தோன்றாமல் போனதற்கு காரணம் அவை பாடத்திட்டத்தில் வைக்கப்படாமல் போனதோ
என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய இருபதாம்
நூற்றாண்டு வரை பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் பலநூல்கள்
நமக்குக் கிடைத்ததுபோல எண்ணிலடங்கா பல நூல்கள் அழிந்தும் போயுள்ளன.
நமக்குக் கிடைத்த எல்லா இலக்கண நூல்களையும் ஒன்றுதிரட்டி அவற்றைக் கால
நிலையில் முறைப்படுத்தி ஒப்பிட்டு ஆய்ந்து இதுவரை ஒரு இலக்கண வரலாறு
எழுதப்பட்டுள்ளனவா? என்று நோக்கும் போது இல்லை என்றே தோன்றுகின்றது.
காலம் காலமாக ஓலைச்சுவடிகள் வழியாகவே நிலைபெற்றுவந்த இவ்விலக்கண நூல்கள்
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுவாகனம் ஏறி 20 ஆம் நூற்றாண்டின்
இறுதிக்குள் முழுமைத்தன்மை அடைந்துள்ளன எனலாம்.

அச்சில் நிலைபெற்றபிறகு தமிழ் இலக்கணங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஒரு
பரவலான வாசிப்புத் தன்மையைப் பெற்றன. இவ்வாசிப்பின் மூலமாக
இக்காலகட்டத்தில் இலக்கண நூல்கள் பலவும் பல்வேறு அறிஞர்களால் பலநிலைகளில்
ஆராயவும் பட்டன. இலக்கண நூல்களின் ஆராய்ச்சிகள் இவ்வாறு வளர்ச்சியடைந்து
வந்தகொண்டிருந்த நிலையில் அறிஞர் சோம. இளவரசு 1963ஆம் ஆண்டு ‘இலக்கண
வரலாறு’ ஒன்றை எழுதினார். இவரைப் பின்தொடர்ந்து 1985ஆம் ஆண்டு புலவர்
இரா. இளங்குமரன் சோம.இளவரசு அவர்கள் சொல்லாது விட்டுவிட்ட சில
செய்திகளையும், ஆராயாது விட்டுவிட்ட சில நுட்பங்களையும் சேர்த்து ‘இலக்கண
வரலாறு’ என்னும் அதே தலைப்பில் மற்றொரு நூலினை வெளியிட்டார். ‘இலக்கண
வரலாறு’ என்று இந்த இரண்டு நூல்களுக்கும் இவ்வறிஞர்கள் பெயர்
சூட்டியிருந்தாலும் அந்நூல்கள் முழுமையானதொரு இலக்கண வரலாற்றினைச்
சொல்லக்கூடிய நூல்களாக அல்லாமல் எல்லா இலக்கண நூல்களையும்
அறிமுகப்படுத்தும் ‘இலக்கண அறிமுக நூல்களாகவே’ தான் விளங்குகின்றன.
இவ்விர நூல்களும் இதுவரை வெளிவந்த எல்லா இலக்கணங்களையும் தனித்தனியே
அறிமுகநிலையில் மட்டுமே ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளன.

இந்நூல்களில் இருந்து சற்றேவேறுபட்ட ஒரு நூலாக 1979இல் வெளிவந்த
ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் ‘தமிழ் வரலாற்றிலக்கணம்’ நூலினைக்
குறிப்பிடலாம். இந்நூலினுள் ‘‘தமிழிலக்கண நூல்கள் வரலாறு’’ என்னும்
தலைப்பில் பத்து பக்க அளவில் ஒட்டுமொத்தமான ஒரு தமிழிலக்கண வரலாற்றைச்
சுருக்கமாக எழுதியுள்ளார். இந்நூலின் தன்மை குறித்து இரா. சீனிவாசன்
அவர்கள் ‘‘இது வரலாற்று முறையில் இலக்கணத்தைக் கூறும் புத்தகமாகும். எனவே
இதில் இலக்கண வரலாற்றை எதிர்பார்க்க இயலாது’’1 எனக் குறிப்பிடுகின்றார்.
ஆகவே இந்த நூலும் ‘தமிழ் இலக்கண வரலாற்றைக் கட்டமைக்கத் தவறவிட்டது
என்பதை நாம் உணர முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது 1985, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில்
ஆறு.அழகப்பன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘‘இலக்கணக் கருவூலம்’’
என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை வெளியிட்டது. இந்நூல்களில் மொத்தம் 34
கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழிலக்கண நூல்கள் பலவும் பலநிலைகளில்
எடுத்துக்கொள்ளப்பட்டு இலக்கணங்களில் ஆழங்கால்பட்ட ஆய்வறிஞர்களால் அவை
ஆராயவும்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பான நிலையில் இக்கருவூலத்தில்
உள்ள கட்டுரைகள் ஆராயப்பட்டிருந்தாலும் அவை வழமையான முறையிலேயே
தனிநூல்கள் குறித்த ஆய்வாகவே போய்விட்டன. இக்கட்டுரைகள் தனிநூல் ஆய்வு
என்பதில் போற்றத்தக்கவை. ஆனால் வரலாறு என்று பார்க்கும்போது
அவற்றிலிருந்து விலகியே நிற்கின்றன.

‘தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400 இலக்கண நூல்களும் உரைகளும்’
என்னும் தலைப்பில் 2000த்தில் வெளிவந்த இரா.சீனிவாசன் அவர்களின் நூலானது
இதுவரை தமிழ் இலக்கணங்களை நோக்கிவந்த கண்ணோட்டத்திலிருந்து விலகி
புதியதொரு வரலாற்று ரீதியானப் பார்வையை முன்வைத்துள்ளது. எனினும்
இந்நூலும் எல்லா இலக்கணங்களையும் எடுத்துக் கொள்ளாமல் குறிப்பிட்ட
காலப்பகுதியை (கி.பி.800-1400) எடுத்துக்கொண்டு அதுகுறித்து ஆய்வையே
நிகழ்த்தியுள்ளது. இது குறித்து இந்நூலாசிரியர் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்.

‘‘இலக்கண மரபுகள் குறித்த ஆய்வுக்குத் தமிழில் தோன்றிய எல்லா நூல்களையும்
எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும். அதுவே தமிழ் இலக்கண மரபுகளை
அறிந்துகொள்ள உதவும். எனினும் காலமும் இடமும் கருதியும் முனைவர் பட்ட
ஆய்வின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி
மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.’’2

கால வரையரைக்குள் வைக்கப்பட்டதால் இவ்வாய்வு நூலும் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்ளேயே தன்னை வரைந்தெடுத்துக்கொண்டு நிற்கிறது.

இதுவரை தமிழ் இலக்கண மரபுகள் குறித்து பொதுநிலையில் நிகழ்ந்த சில
ஆய்வுநூல்கள் பற்றியே இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்று
இத்துறையில் பல நூல்கள் உள்ளன. கட்டுரையின் விரிவஞ்சி அந்நூல்களின்
பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

இலக்கணப் பிரிவுநிலை ஆய்வுகள்...

தமிழிலக்கணங்களைப் பொதுநிலையில் நின்று ஆய்ந்த ஆய்வு நூல்களைப் போலவே
பிரிவு நிலையில் ஆய்ந்த சில நூல்களும் உள்ளன. ‘‘பிரிவு நிலை’’ ஆய்வு
என்பது தமிழிலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்,
நிகண்டு, அகராதி ஆகியவை குறித்து நிகழ்ந்த ஆய்வுகளே ஆகும்.

இவற்றில் ஒவ்வொரு துறையிலும் பல நூல்கள் தோன்றி அறிமுக நிலையிலும்,
கோட்பாட்டு நிலையிலும் மிகத் துல்லியமாக வரையறை செய்துள்ளன.

செ.வை.சண்முகம் அவர்களால் இயற்றப்பட்ட எழுத்திலக்கணக் கோட்பாடு,
சொல்லிலக்கணக் கோட்பாடு (பாகம் 1,2,3) ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தையும்
சொல்லிலக்கணத்தையும் கோட்பாட்டு அடிப்படையில் நின்று மிக விரிவாக
விளக்கயுள்ளன. எழுத்திலக்கணம் மற்றும் சொல்லிலக்கணத் துறையில் முன்னோடி
ஆய்வு நூல்களாக இந்நூல்கள் திகழ்ந்து வருகின்றன என்பதை நாம் மறுக்க
இயலாது.

எழுத்து மற்றும் சொல்லைப்போலவே பொருளிலக்கணம் குறித்து ‘தமிழ்
இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் என்னும் நூல் வசந்தாள் அவர்களால்
எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. இந்நூலானது பொருளிலக்கணத்தின் காலந்தோறும்
வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டே எழுதப்பெற்றுள்ளது என்பதை அந்நூலின்
வழியே நாம் அறியமுடிகின்றது.

தொல்காப்பியர் தனியொரு அதிகாரமாக வகுக்காதுவிட்ட யாப்பிலக்கணமானது
பிற்காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதை அதற்கு தோன்றிய இலக்கண
நூல்களின் எண்ணிக்கையிலிருந்தே நாம் அறிய முடிகிறது. அவ்வாறாகச் சிறப்பு
பெற்று வளர்ந்துவந்த யாப்பிலக்கணம் குறித்து முழுமையான நிலையில்
ஆராய்ந்தவர்கள் இருவர். ஒருவர் சோ.ந.கந்தசாமி அவர்கள், மற்றொருவர்
ய.மணிகண்டன் அவர்கள், சோ.கந்தசாமி அவர்கள் ‘‘தமிழ் யாப்பியலின் தோற்றமும்
வளர்ச்சியும்’’ என்னும் தலைப்பில் மூன்று பாகங்களை எழுதி
வெளியிட்டுள்ளார். இந்நூல்களானது தமிழ் இலக்கிய வகைகளின் யாப்பையும்,
அவற்றிற்கெழுந்த யாப்பிலக்கண நூல்களையும் ஒரு காலமுறைமையோடு ஒப்பிட்டு
ஆய்ந்துள்ளது. அவ்வகையில் யாப்பிலக்கணத்துறையில் இந்நூலின் பணி என்பது
போற்றத்தகுந்ததொன்றாகவே நிற்கிறது.

இவரைத் தொடர்ந்து ய.மணிகண்டன் அவர்களால் 2001ல் வெளியிடப்பெற்ற ‘தமிழில்
யாப்பிலக்கண வளர்ச்சி என்னும் நூலானது யாப்பிலக்கணத்துறையில் தனித்ததொரு
பங்களிப்பினைச் செய்துள்ளது. தமிழில் முறையாகத் தோன்றி வளர்ந்து வந்த
யாப்பிலக்கண மரபுகளைச் சீர்தூக்கி ஒரு முறைமையிலோடு காலவரலாற்று
வளர்ச்சிப் படிநிலைகளில் வைத்து ஆராய்ந்துள்ளது. இதைப் போலவே அணியியல்
துறைக்கு இரா. கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட ‘அணியிலக்கண வரலாறு’
இரா.அறவேந்தன் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழ் அணி இலக்கணமரபும்
மறுவாசிப்பும்’ ஆகிய நூல்கள் அணியியல் குறித்த ஆய்வு வரலாற்றில்
சுட்டத்தகுந்த நூல்களாகவே விளங்குகின்றன.

பாட்டியல் என்னும் துறைக்கு மருதூர் அரங்கராசனின் ‘இலக்கண வரலாறு
பாட்டியல் நூல்கள்’ என்னும் நூலானது ஒரு முன்னோடி ஆய்வுநூலாகவே
விளங்குகின்றது. பாட்டியலைத் தொடர்ந்து நிகண்டுகள் குறித்து மா.சற்குணம்
அவர்களின் ‘தமிழ் நிகண்டுகள் ஆய்வு’ என்னும் நூல் நிகண்டுகளின் வளர்ச்சி
வரலாறு, பதிப்பு வரலாறு, பொது அமைப்பு எனப் பலநிலைகளிலும் ஆராய்ந்து
எழுதப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து ‘தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப்
பார்வை’ (உருவ உள்ளடக்க ஆய்வு) என்னுந் தலைப்பில் பெ.மாதையன் அவர்கள்
தமிழ் நிகண்டுகள் காலந்தோறும் வளர்ந்துவந்த நிலையினை அவற்றின்
சமூகப்பின்புலத்தோடும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும் ஆராய்ந்து
வெளிப்படுத்தியுள்ளார்.

நிகண்டுகளிலிருந்து தனியொருதுறையாக வளர்ச்சி பெற்ற அகராதியியல் துறையும்
அறிஞர்களின் ஆய்வுப் பார்வைக்கு உட்பட்டுள்ளன. சுந்தரஞ்சண்முகனாரின்
‘தமிழ் அகராதிக்கலை’ மற்றும் வ.ஜெயதேவன் அவர்களின் ‘தமிழ் அகராதியியல்’,
‘தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு’ ஆகிய நூல்கள் இத்துறையில் தனித்த
அடையாளத்தோடு நிலைபெற்றுள்ளன.

இலக்கண உரை வரலாற்று ஆய்வு...

இலக்கண நூல்கள் குறித்த ஆய்வாவது தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்க அளவில்
நிகழ்ந்துள்ளது. ஆனால் இலக்கண உரை வரலாறு தொடர்பான ஆய்வு இதுவரை
குறிப்பிடும்படியாக நிகழ்த்தப்பெறவில்லை. உரைகள் குறித்த ஆய்வில்
முன்னோடி ஆய்வு நூலாக இதுவரை சொல்லப்பட்டு வருகின்ற மு.வை.அரவிந்தனின்
‘உரையாசிரியர்கள்’ என்னும் நூல் ‘இலக்கண உரைகளை’ மட்டும் மையப்படுத்தாமல்
இலக்கிய உரைகள், சமய உரைகள் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்த ஒரு
தொகுப்புநிலை ஆய்வாகவே அமைந்துவிட்டது. இலக்கண உரைகளை ஓர் அறிமுக
நோக்கிலேயே பதிவு செய்துள்ளது. இந்நூலைத் தொடர்ந்து உரைவிளக்கு,
உரைமரபுகள் போன்ற நூல்கள் இத்துறையில் எழுதப்பட்டிருப்பினும் அவை இலக்கண
உரை வரலாற்று ஆய்வை மையப்படுத்தத் தவறிவிட்டன. ஆகையால் இறையனார் களவியல்
உரை தொடங்கி 20 நூற்றாண்டு வரை உள்ள எல்லா இலக்கண உரைகளையும்
ஒன்றுதிரட்டி கால வரலாற்று நிலையில் ஆராயப்படுதல் வேண்டும்.

இலக்கண பதிப்பு வரலாறு...

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு உருவாக்கம் பெறத் தொடங்கிய இலக்கண
நூல்கள் இன்றைய காலத்தில் ஏறத்தாழ முழுமைத்தன்மை அடைந்துள்ளன எனலாம்.
ஆனால் இதுவரை எந்தெந்த இலக்கண நூல்கள் எத்தனைமுறை அச்சு பெற்றன, அவற்றின்
ஆண்டு விவரம், பதிப்பாசிரியர் விவரம், வெளியீட்டாளர் விவரம் நூலின் தன்மை
ஆகியவை குறித்த முழுமையான அடைவொன்று இதுவரை உருவாக்கப்படவில்லை.

ச.வே.சுப்பிரமணியம் அவர்களின் ‘தொல்காப்பியப் பதிப்புகள்’ மற்றும்
மதுகேசுவரன் அவர்களின் ‘நன்னூல் பதிப்பு வரலாறு (ஆய்வேடு நூலாக்கம்
பெறவில்லை) ஆகிய இரண்டும் இத்துறையில் முன்னோடி ஆய்வுகளாக அமைந்துள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த ‘தமிழ் இலக்கணப் பதிப்புகள்’
குறித்த அடைவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வடைவு தயாரிக்கப்பட்ட
பிறகு தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு கடந்த இரு நூற்றாண்டுகளில் எவ்வெத்
தன்மைகளில் வளர்ந்துவந்துள்ளது என்பதை வரலாற்று நிலைப்பார்வையோடு
மதிப்பீடு செய்யவேண்டும்.

தனி இலக்கண நூல் ஆய்வுகள்..

இதுவரை இலக்கண நூல்களின் பொது அமைப்பு பற்றி நிகழ்ந்த ஆய்வுகள்
குறித்தும், இலக்கணப் பிரிவுகள் பற்றி நிகழ்ந்த ஆய்வுகள் குறித்தும்
விவரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு இலக்கண நூலிற்கும், அவற்றின்
உரைகளுக்கும் நிகழ்த்தப்பட்ட தனிநிலை ஆய்வுகள் குறித்துப் பேசப்படவுள்ளன.

தொல்காப்பியம், இறையனார்களவியல், நன்னூல், யாப்பருங்கலம், காரிகை,
வீரசோழியம், தண்டியலங்காரம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை
இன்னும் பல இலக்கண நூல்களும், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர்
நச்சினார்க்கினியார், களவியல் உரைகாரர், மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர்,
சிவஞானமுனிவர் இன்னும் பலரின் இலக்கண உரைகளும் என அனைத்து இலக்கண
நூல்களுக்கும் உரைகளுக்கும் தனித்தனியே பன்முக நோக்கோடு ஆய்வுகள்
நிகழ்த்தப்பட்டுள்ளன.

சிறப்பு நிலை ஆய்வுகள்...

தனி இலக்கண நூல்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து இலக்கண நூல்களின் உள் உள்ள
சில சிறப்பான பகுதிகளும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள்
நிகழ்த்தப்பட்டுள்ளன. அவை சார்பெழுத்து, வேற்றுமை, பொருள்கோள், உள்ளுறை,
நோக்கு, இறைச்சி, இடையியல், உரியியல், மெய்ப்பாடு என இன்னும் பல கூறுகள்
சார்ந்து பல்வேறு ஆய்வுநூல்கள் எழுந்துள்ளமை கவனத்திற்குரிய ஒன்றாகும்.

மேற்சொல்லப்பட்ட ‘தனி இலக்கணநூல் ஆய்வுகள்’ மற்றும் ‘சிறப்பு நிலை
ஆய்வுகள்’ சார்ந்து எண்ணிலடங்கா நூல்கள் உள்ளன. இவற்றில் சில நூல்கள்
பின்னிணைப்பில் சான்றுக்காகத் தரப்பட்டுள்ளன.

இவ்வாறாக இலக்கணநூல்கள் மற்றும் அதன் உரைகள் பொதுநிலையிலும்,
பிரிவுநிலையிலும், தனித்த நிலையிலும், சிறப்பு நிலையிலும் ஆராயப்பட்டுப்
பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் இத்துறைகளில் தோன்றியுள்ளன. கடந்த
நூற்றாண்டில் இலக்கண ஆய்வுகள் இதுபோன்று வியக்குமளவு நடைபெற்றிருந்த
போதிலும் ஒரு ஒட்டுமொத்தமான ‘தமிழிலக்கண வரலாறு’ ஒன்று இதுவரை
உருவாக்கப்படாதிருப்பது நம் பேரிழப்பே.

‘‘இதுவரை தமிழில் இலக்கண வரலாறு பற்றிய கருத்தாக்கம் உருப்பெறவில்லை.
இலக்கிய வரலாறு எழுதுவதில் உள்ள சிக்கல்களை, கா.சிவத்தம்பி அவர்களின்
‘தமிழில் இலக்கிய வரலாறு’ புத்தகம் எடுத்துக் கூறியது போல இலக்கண
வரலாற்றுச் சிக்கல்கள் கூட விவாதிக்கப்படவில்லை. இலக்கண வரலாற்றில்
அடிப்படையான காலகட்டப் பிரச்சினை கூட எழுப்பப்படவில்லை.’’ 3

என்ற இரா.சீனிவாசனின் கூற்றுத் தமிழில் இதுவரை ஒரு முழுமையான
இலக்கணவரலாறு எழுதப்படாததன் நிலையையே சுட்டுகின்றது.

எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிலையில் இலக்கண வரலாறு எழுதப்படுவதற்கு
நாம் செய்யவேண்டிய பணி என்ன? இதுவரை தமிழ் இலக்கணங்களுக்கு எழுந்த எல்லா
வகையான ஆய்வு நூல்களையும், நூலாக வெளிவராத சிறப்பான ஆய்வேடுகளையும்,
முறையாக ஆராய்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் முதலில் ஒன்று திரட்ட
வேண்டும். அவற்றோடு தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வெளிவந்துள்ள எல்லா
மூல இலக்கண நூல்களையும் சேகரித்தல் வேண்டும். சேகரிக்கப்பட்ட மூலநூல்களை
முதன்மை ஆதாரமாகக் கொண்டு, அவற்றிற்கு எழுந்த ஆய்வுநூல்கள், ஆய்வேடுகள்,
கட்டுரைகள் ஆகிய அனைத்தையும் துணைமை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஒட்டுமொத்தமான
‘தமிழிலக்கண வரலாறு’ எழுதப்படல் வேண்டும்.

இப்பணியானது தனியொரு நபரால் செய்யப்படக்கூடியது அல்ல. கூட்டு முயற்சியாலே
இப்பணி நிறைவேறும். மைய அரசு தமிழுக்குச் செம்மொழித் தகுதி
அளித்திருக்கும் இவ்வேளையில் சில அடிப்படையானப் பணிகளை நாம் ஒவ்வொரு
துறையிலும் செய்ய வேண்டிய கட்டாயம் நம்முன் நிற்கிறது.

இந்திய வரலாறு, தமிழக வரலாறு எழுதுவதற்கு, அதற்காக ஒரு அறிஞர் குழுவை
நியமனம் செய்து அவ்வரலாறுகள் அவர்களால் எழுதப்பட்டது போல் ‘தமிழிலக்கண
வரலாறு’ எழுதப்படுவதற்கும் ஒரு சிறப்பான அறிஞர்குழு அமைக்கப்படல்
வேண்டும்.

இலக்கணங்களை நன்கு கற்ற நல்ல பல ஆய்வுகளைத் தந்த வரலாற்றுப் பார்வைகொண்ட
பத்து அறிஞர்களைத் தேர்வு செய்து ஒரு குழுவாக அமைத்தல் வேண்டும்.
அக்குழுவில் உள்ள அனைவர்க்கும் எல்லா மூலநூல்கள் மற்றும் ஆய்வுநூல்கள்
கிடைக்கும்படி வழிவகை செய்யவேண்டும். அவ்வப்போது அவரவர் செய்த பணிகளை
ஒன்றுகூடி விவாதித்தல் வேண்டும். இப்பணிகள் தடைபெறாமல் தொடர்ந்து
செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படியான சில செயல்பாடுகளின் மூலமாக
‘தமிழ் இலக்கண வரலாறு’ எதிர்காலத்தில் ஒரு முழுத்தன்மை அடையும் வாய்ப்பு
உள்ளது.

தமிழ் இலக்கண வரலாறு எழுதுவதோடு மட்டுமின்றி தமிழ் இலக்கண ஆய்வு வரலாறு,
தமிழ் இலக்கண உரை வரலாறு, தமிழ் இலக்கண உரை ஆய்வு வரலாறு, தமிழ் இலக்கணப்
பதிப்பு வரலாறு ஆகியனவும் தனித்தனியே எழுதப்பட வேண்டும். இவை அனைத்தும்
எழுதப்பட்டபிறகு இவற்றை ஒன்றுதிரட்டி ‘தமிழ் இலக்கண வரலாற்றுக்
களஞ்சியம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். இப்படி திட்டமிட்டு வேலைகளைச்
செய்வோமானால் இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கணத்துறையில் நாம் செய்த
மிகப்பெரிய பணியாக வரலாறு நம்மை நிலைநிறுத்தும்.

அடிக்குறிப்புகள்

1. சீனிவாசன். இரா.தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800-1400
இலக்கண நூல்களும் உரைகளும், தி.பார்க்கர், சென்னை, 2000, ப.12.
2. மேலது, ப.17.
3. மேலது, ப.11.

பின்னிணைப்பு
பொதுவகை ஆய்வுகள்.
1. இலக்கணச் சிந்தனைகள் - எஸ்.வையாபுரிப்பிள்ளை
2. தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - அ.சண்முகதாஸ்
3. இலக்கண வரலாறு - சோம. இளவரசு
4. இலக்கண வரலாறு - புலவர். இரா. இளங்குமரன்
5. இலக்கண உருவாக்கம் - செ.வை.சண்முகம்
6. இலக்கண எண்ணங்கள் - இரா.திருமுருகன்
7. இலக்கணமும் சமூக உறவுகளும் - கா.சிவத்தம்பி
8. இலக்கண ஆய்வு - செ.வை.சண்முகம்
9. இலக்கணக் கருவூலம் (1,2,3) - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
10. மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி
11. தமிழிலக்கணக் கோட்பாடு - பொற்கோ
12. இலக்கண உலகில் புதிய பார்வை (1,2,3)
13. தமிழ் வரலாற்றிலக்கணம் - ஆ.வேலுப்பிள்ளை
14. தமிழ் இலக்கண மரபுகள் - இரா. சீனிவாசன்
கி.பி.800-1400 இலக்கண நூல்களும் உரைகளும் இன்னும் பல நூல்கள்
இத்துறையில் உள்ளன.
15. தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
(பாகம் 9 முதல் 16 வரை)

பிரிவுநிலை ஆய்வுகள்.

எழுத்திலக்கணம்.
1. எழுத்திலக்கணக் கோட்பாடு -செ.வை.சண்முகம்

சொல்லிலக்கணம்.
1. சொல்லிலக்கணக் கோட்பாடு - செ.வை.சண்முகம்
(பாகம் 1,2,3)

பொருளிலக்கணம்

1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் - வசந்தாள்
2. அகத்திணைக் கொள்கைகள் - ந.சுப்புரெட்டியார்.

யாப்பிலக்கணம்

1. தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ.ந.கந்தசாமி
(பாகம் 1,2,3)
2. தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி - ய.மணிகண்டன்
3. புதிய நோக்கில் தமிழ் யாப்பு - பொற்கோ.
4. தமிழின் பா வடிவங்கள் - அ. சண்முகதாஸ்
5. யாப்பியல் - அன்னிதாமசு

அணியிலக்கணம்.

1. அணியிலக்கண வரலாறு -இரா.கண்ணன்
2. தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறுவாசிப்பும் - இரா. அறவேந்தன்

பாட்டியல்.

1. இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள் - மருதூர் அரங்கராசன்
2. பாட்டியல் ஓர் ஆய்வு - நலங்கிள்ளி

நிகண்டுகள்

1. தமிழ் நிகண்டுகள் ஆய்வு - மா.சற்குணம்
2. தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை - பெ. மாதையன்

அகராதியியல்

1. தமிழ் அகராதிக்கலை - சுந்தரசண்முகனார்
2. தமிழ் அகராதியியல் - வ.ஜெயதேவன்
3. தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு - வ.ஜெயதேவன்

இலக்கண உரைகள்

1. உரையாசிரியர்கள் - மு.வை. அரவிந்தன்
2. உரையாசிரியர்கள் - சு.அ.இராமசாமிப் புலவர்
3. உரைவிளக்கு - தமிழண்ணல்
4. உரைமரபுகள் - இரா.மோகன், நெல்லை ந. சொக்கலிங்கம்

இலக்கணப் பதிப்புகள்

1. தொல்காப்பியப் பதிப்புகள் - ச.வே. சுப்பிரமணியம்
2. நன்னூல் பதிப்பு வரலாறு (ஆய்வேடு) - மதுகேசுவரன்

தனி இலக்கண நூல் ஆய்வுகள்

தொல்காப்பியம்

1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - மு.இராகவையங்கார்
2. தொல்காப்பியர் காலத் தமிழர் - புலவர் குழந்தை
3. தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை - ந.சுப்புரெட்டியார்
4. தொல்காப்பியக் களஞ்சியம் - க.ப. அறவாணன்
5. தொல்காப்பியக் கடல் - வ.சு.ப. மாணிக்கம்
இவை தவிர இன்னும் பல்வேறு நூல்கள்.
6. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் - வெள்ளைவாரணன்.

நன்னூல்

1.எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் - க.ப.அறவாணன்
இவை போன்று இன்னும் பல நூல்கள் இத்துறையில் இயற்றப்பட்டுள்ளன.

சிறப்புநிலை ஆய்வுகள்

1. உள்ளுறையும் இறைச்சியும் - ஆ.சிவலிங்கனார்
2. உள்ளுறை, இறைச்சி, நோக்கு - தமிழண்ணல்
3. பொருள்கோள், வேற்றுமையியல் - மருதூர் அரங்கராசன்
இன்னும் பலப்பல நூல்கள் இத்துறையில் இயற்றப்பட்டுள்ளன

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Annakannan

unread,
Apr 17, 2010, 12:51:43 PM4/17/10
to மின்தமிழ்
மிக அருமையான கட்டுரை.

எழுதிய பா.ஜெயகணேசுக்கும் நம் பார்வைக்குக் கொணர்ந்த நா.கணேசனுக்கும்
பாராட்டுகள்.

இது, எந்த இதழில் வெளியானது?

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

On Apr 17, 8:34 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள்)
>
> அக்டோபர் - டிசம்பர் 2006, பா.ஜெய்கணேஷ்
>

N. Ganesan

unread,
Apr 17, 2010, 1:01:27 PM4/17/10
to மின்தமிழ்

On Apr 17, 11:51 am, Annakannan <annakan...@gmail.com> wrote:
> மிக அருமையான கட்டுரை.
>
> எழுதிய பா.ஜெயகணேசுக்கும் நம் பார்வைக்குக் கொணர்ந்த நா.கணேசனுக்கும்
> பாராட்டுகள்.
>
> இது, எந்த இதழில் வெளியானது?
>
> அன்புடன் என்றும்,
> அண்ணாகண்ணன்.
>

பழைய கீற்று இதழ் ஒன்றில் சேமித்தது. இக்கட்டுரையை இப்போது
காணோம். கிடக்கட்டும் என்று அனுப்பினேன்.

ஆய்வுக்காரங்கள் துழாவும்போது கிட்டுமே.
பின்னர் புஸ்தகங்களை தேடிக் கொஞ்சம் பேர் போவாங்க.

நா. கணேசன்

> On Apr 17, 8:34 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள்)
>
> > அக்டோபர் - டிசம்பர் 2006, பா.ஜெய்கணேஷ்
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Apr 17, 2010, 1:29:26 PM4/17/10
to mint...@googlegroups.com
திரு.நா. கணேசன் அவர்களுக்கு,

உங்களின் 'தமிழ் இலக்கண வரலாறு (முழுமையை நோக்கிய சில விவாதக்
குறிப்புகள்)' என்ற இடுகை மின் தமிழுக்கு நல்வரவு. தமிழ் மொழிக்கு நாம்
செய்ய வேண்டிய பணிகளில், நீங்கள் சுட்டிய ஆய்வுகளும் அடக்கம். மாணவனாகிய
எனக்கு, தமிழில் ஆய்வுகள் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தோன்றியது சரியா
என்ற ஐயம் உறுத்திக்கொண்டு இருந்தது. ஒப்புமை கடினம் என்பதால், பலர்
அப்பக்கம் போகவில்லை என்று நினைத்தேன். இலக்கியம் சம்பந்தப்பட்ட வரையில்,
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள் எனக்கு படிப்பினையாக இருந்தன.
இலக்கண ஆய்வுபோக்கு எப்படி இருக்கவேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது,
இந்த கட்டுரை. இத்தருணம், 'ஆய்வுக்காரங்கள் துழாவும்போது கிட்டுமே.
பின்னர் புஸ்தகங்களை தேடிக் கொஞ்சம் பேர் போவாங்க.' என்று நீங்கள்
சொல்வதின் தொடர்பாக, இரு செயல்கள் சாத்தியமே. 1. முதுநிலை தேர்வுக்கு ஒரு
ஆய்வு கட்டுரை தேவை என்பது; 2. முனைவர் பட்டம் நாடுவோருக்கு, இந்த
கட்டுரையின் பயனை எடுத்துக்காட்டுவது.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
2010/4/16 N. Ganesan <naa.g...@gmail.com>:

ananda rasa thiruma

unread,
Apr 17, 2010, 8:29:02 PM4/17/10
to mint...@googlegroups.com
இக்கட்டுரையை எழுதிய திரு பா.ஜெயகணேசுக்கும் மின்தமிழுக்குக் கொண்டுவந்த திரு நா.கணேசனுக்கும் நன்றி. திரு பா. ஜெயகணேசு அவர்களை மின்தமிழில் இத்தகைய நல்ல கட்டுரைகளை எழுதச் சொல்லுங்கள். தமிழ் இலக்கண வரலாறு சரியான கோணத்தில் எழுதப்படவில்லை என்னும் அவர் தாகத்தை அவர் முயன்றால் நிறைவு செய்யலாம். உழைக்கும் திறன் அவரிடம் உள்ளது. திட்டம் அவர் மனத்தில் இருந்ததால்தான் இக்கட்டுரை வந்துள்ளது. அத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்க்கு உண்டு. மேலும் அவர் கட்டுரையில் குறிப்பிட்ட முனைவர் யா.மணிகண்டன், முனைவர் இரா.அறவேந்தன் இருவரும் இவ்வாண்டு தமிழக அரசின் இளம் ஆய்வாளர் விருதினை அவர்தம் இலக்கண நூல்களுக்குப் பெற்றுள்ளனர். திரு பா.ஜெயகணேசு இத்தகைய பாராட்டைப் பெறத் தகுதியுள்ளவர் என அவர் கட்டுரை காட்டுகிறது. மேலும் முயல்க. தக்க இலக்கண வரலாற்றைக் கொணர்க.

அன்புடன்
ஆராதி

2010/4/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

kalpanasekkizhar92

unread,
Apr 18, 2010, 1:30:10 PM4/18/10
to mint...@googlegroups.com
வணக்கம் இலக்கணம் தொடர்பான இக்கட்டுரை படித்தேன் . இலக்கண வரலாறு  பறிய ஆய்வின் இன்றைய தேவையை உணர்த்துகின்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிபகத்தின் வழி இலக்கண ஆய்வடங்கல்  (இரண்டு தொகுதி )என்னும் நூல் 1992 இல் வெளி வந்துள்ளதும் குறிப்படத்தக்கது.

17 ஏப்ரல், 2010 5:29 pm அன்று, ananda rasa thiruma <aara...@gmail.com> எழுதியது:



--
அன்புடன்
முனைவர் கல்பனாசேக்கிழார்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
http://kalpanase.blogspot.com
mail -kalpanas...@gmail.com
அமிழ்தென்று தமிழுண்ணும்
அன்பர் வாழ்கவே!
Reply all
Reply to author
Forward
0 new messages