15/10/2008 புதன் கிழமை இரவு 10 மணி தினமும் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர்,இன்று நல்ல பொழுதாக அமைத்தாய் இறைவா,நாளைப் பொழுது விடிதலும் நல்லதாக அமையட்டும் என்று வேண்டிக் கொண்டு தூங்குவது என் வழக்கம்,வேண்டுதலை முடித்து படுத்தேன்,,, இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் வருவதில்லை,ஏன் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் படுக்கை அறையில் குளிர்சாதன கருவி பொருத்தப்பட்டிருக்கிறது,அதிலிருந்து வரும் ஒரு துர்நாற்றம்தான் காரணம் என்று உள் மனது சொன்னது ,உடனே எழுந்து என்னுடைய குளிர்சாதன கருவியை நிர்வாகம் செய்யும் குட்டி அண்ட் ஸன்ஸ் நிர்வாக உரிமையாளரும் என்னுடைய மாமனார் திரு சௌந்தர்ராஜன் அவர்களிடம் குளிர்சாதனங்களைப் பற்றிய அனைத்து பாடங்களையும் டாடாமாடிக்ஸ் கல்வி நிறுவனத்தில் கற்றுக் கொண்டு ,திரு சௌந்தர்ராஜன் அவர்களை தன்னுடைய குருவாகவும் ஒரு நல்ல தகப்பனாகவும் மதித்து மரியாதை அளிக்கும்,என்னுடைய நல்ல நண்பருமான திரு கே பழனி அவர்களை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை கூறிவிட்டு படுத்தேன் 16/10/2008 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு குளிர்சாதனத்தை சரிசெய்ய இருவர் வந்தனர்,ஒருவர் பெயர் தினேஷ், மற்றொருவர் பெயர், வாசிம் அக்ரம் முதல்நாள் சரியான தூக்கமில்லாததால் அப்போதுதான் எழுந்தேன்,அவர்கள் இருவரும் குளிர்சாதனத்தை சாளரத்திலிருந்து வெளியே எடுத்து விட்டு உள்ளே பார்த்தால் அங்கே.....இரு மைனாக்கள் தங்கி இருந்து இல்லறம் நடத்தி முட்டையிட்டு மூன்று குஞ்சுகள் பொரித்து இருப்பது தெரியவந்தது, எங்களைப் பார்த்தவுடன் இரு பெரிய மைனாக்களும் எதிர் வாடையிலிருந்த மரத்தின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு கத்திக்கொண்டிருந்தன, ,அந்த இரு மைனாக்களின் பரிதாபமான பார்வையிலிருந்தே தங்களின் குழந்தைகள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டதே என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு தெரிந்தது இந்த மூன்று மைனாக்குஞ்சுகளும் பயந்துபோய் இன்னும் அடியிலே சென்று பதுங்கிக் கொண்டு பரிதாபமாய் எங்களைப் பார்த்தவண்ணம் இருந்தன,தாய்ப்பறவைகள் இரண்டும் எங்கள் வீட்டுக்கும் மரத்துக்குமாய்,கத்திக்கொண்டே மாறி மாறி அல்லாடிக்கொண்டிருந்தன அவற்றின் மொழி புரியாவிட்டாலும் எங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்துவிடாதீர்கள், ஒருதீங்கும் செய்யாதீர்கள்,என்று அந்ததாய்ப்பறவைகள் வேண்டுவது மனதுக்கு புரிந்தது இந்த மனதுக்கு மட்டும் இனம், மதம்,ஜாதி,,மொழி போன்ற எந்த பேதமும் இல்லை,மனது வைத்தால் ஊன்றிக்கவனித்தால்,யாருடைய மொழியும் நமக்கு தெரியாமலே அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நம் மனம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது நமக்குத் தெரியாத அனைத்து மொழிகளும் மனதுக்கு தெரிகிறது, அதனால்தான் சில சமையங்களில் மனம் சஞ்சலப்படும்போதோ, குழம்பும் போதோ நம்மை அறியாமல் நாம் நமக்குத்தெரியாத அன்னியமொழிகளையும் பேசுகிறோமோ என்னும் சந்தேகம் வருகிறது ,அன்னிய மொழிகளின் ஆதிக்கமும், அன்னிய மனங்களின் ஆதிக்கமும் நம்மை தாக்கும் போது நம்மை அறியாமலே நாம் நம்மால் முடியாத அசுர வேலைகளையும் செய்கிறோமோ, அதிக பலமும் வருகிறதோ நமக்கு,மனம் என்கிற இந்த ஒரு கருவியைக் கட்டுப்படுத்தினாலே ப்ரபஞ்ச உலா வரலாம் போலிருக்கிறது,ப்ரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் அறிந்து மீண்டும் நம் உடலுக்குள் வந்துவிடலாம் போல இருக்கிறது, நிகமாந்த மஹா தேசிகன், ஆதி சங்கரர் போன்ற மகான்கள் தங்களை விட்டு வெளியே சென்று பல சாதனைகளை செய்துவிட்டு, பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அவர்களின் இயல்பான உடலுக்குத் திரும்பியதுபோல நாமும் மனதை கட்டுப்படுத்தினாலே அத்தனை சித்துக்களும் சித்திகளும் நமக்கு வந்துவிடும் போல இருக்கிறது நம்மவர்கள் அதை பேய்பிடித்திருக்கிறது என்று பேதமையாய் சொல்கிறார்களோ என்றும் தோன்றியது மனம் குழம்பினாலே இவ்வளவு பாடுகள்,ஆத்மா குழம்ப ஆரம்பித்தால் என்னென்ன விளைவுகள் வருமோ...? பல ப்ரபஞ்ச புதிர்களில் இதுவும் ஒன்று தாய்ப்பறவைகள் இரண்டும் அந்த மரத்துக்கும் எங்கள் வீட்டுக்குமாய் பறந்து கொண்டே தவித்துக் கொண்டிருந்தன,நான் ஒரு மூங்கில் தட்டில் அந்த குளிர்சாதன கருவியிலிருந்து எடுத்த அத்தனை மரக்குச்சிகளையும் ஒரு கூடு போல அமைத்து,அதில் அந்த மூன்று குஞ்சுகளையும் பத்திரமாக வைத்து மாடிக்கு எடுத்துச் சென்று அங்கே வைத்தேன், ஒருவேளை அந்த தாய்ப்பறவைகள் வந்து அவைகளைத் தூக்கிச் செல்லுமோ என்னும் எதிர்பார்ப்புடன், ஆனால் அந்த தாய்ப்பறவைகள் மாடியில் வந்து உட்காருவதும் பின் மாறி மாறிக் கத்துவதும் பின் மீண்டும் அந்த மரத்துக்கு போய் உட்காருவதுமாய் அலைந்தன, என் மனதுக்கு புரிந்தது அந்த தாய்ப்பறவைகளால் கொஞ்சம் வளர்ந்துவிட்ட இந்தக் குஞ்சுகளை தூக்கிப் போக முடியவில்லை என்று,அதற்குள்ளாக மாடியில் பல காகங்கள் குவியத்தொடங்கின,எனக்கு பயம் வந்தது. காக்கைகள் இந்தக் குஞ்சுகளைக் குத்திக் கிழித்துவிடுமோ என்று, எந்த ஜென்மத்து தொடர்போ இந்தசின்னஞ்சிறு உயிர்கள், சின்னக் குஞ்சுகள் நம்மிடம் வந்திருக்கின்றன, அவைகளை காப்பாற்றி அந்த தாய்ப்பறவைகளிடம் பத்திரமாக ஒப்படைக்க என் உள் மனம் கட்டளையிட்டது.நான் எப்போதுமே உள்மனம் சொல்லும் கட்டளைகளை அலட்ஷியப் படுத்தாமல் அவைகளை மதிப்பேன்,ஏனென்றால் அடிக்கடி நம்மை எச்சரிக்கும் அந்த உள்மனம் தான் மனசாட்சியோ,அதுதான் நம்முள் உறைந்திருக்கும் இறையோ... என்று தோன்றியதன் விளைவுதான் அது நான் மீண்டும் அந்தக் குஞ்சுகளை மாடியிலிருந்து என் தாழ்வாரத்துக்கு மாற்றினேன்,அந்தக் குஞ்சுகள் தங்களின் செவ்வாய் திறந்து என்னைப்பார்த்து கத்தத்தொடங்கின , ஓ அவைகளுக்கு பசிக்குமே என்று தோன்றியது,என் மனைவிக்கும் அதே எண்ணம் உதித்ததுபோலும்,கையில் ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூனும் அதில் போட்டுக் கொண்டுவந்தாள், அந்தப் பாலைக் கண்டவுடன் அதன் நறுமணத்தை முகர்ந்தாற்போல அந்தக் குஞ்சுகள் செவ்வாய் திறந்தன என்னையே ஏக்கத்துடன் ஒரு தாயைப் பார்ப்பதுபோல பார்த்து தங்களுக்கு பசிக்கிறது என்பதை உணர்த்தின,அடடா எத்தனை முகபாவங்கள் அந்த சின்னக் குஞ்சுகளுக்கு, யார் ஐய்யா பெரிய நடிகர் இங்கே..?, எல்லா தலைசிறந்த நடிகர்களும்,அவர்களின் நடிப்பும் அத்தனையும் தோற்றுவிடும் இங்கே.... இந்த சின்னஞ்சிறு பறவைகளின் முகபாவத்துக்கும் ,அந்த தாய்ப்பறவைகளின் முகபாவத்துக்கும் முன்னால் எல்லாமே தூசாகிவிடும் அவைகளின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களும், தங்களின் உள்ளத்தில் நினைப்பதை நமக்குணர்த்தும் விதமாக அவைகள் இடும் கூக்குரல் , குரல் வளத்துக்கு முன்னால் உலகில் உள்ள அத்துணை குரல்வள சொந்தக்காரர்களையும் வெட்கித் தலை குனிய வைத்துவிடும் குரல் ஏற்ற இறக்க பாவங்கள், இறைவன் படைப்புக்கு முன்னால் கர்வப்பட நம்மிடம் ஒன்றுமே இல்லை என்பது நிதர்சனமான ஒன்று, இதையெல்லாம் பார்க்கும் போதுதான் பூர்வ ஜென்மம், மறு ஜென்மம் என்பதெல்லாம் உண்மைதான் என்று தோன்றுகிறது,இந்த மூன்று குஞ்சுகளும் போன ஜென்மத்தில் என்னவாய் இருந்திருக்கும், என்ன பிறப்பு எடுத்திருக்கும் ,என்னென்ன சுகங்களை அனுபவித்திருக்கும், எத்துணை புண்ணியங்கள் செய்திருக்கும் ,என்னென்ன பாவங்கள் செய்திருக்கும்,எவ்வளவு அறிவாளியாய் இருந்திருக்கும்,எத்தனை பேருக்கு உதவி இருக்கும் , எத்தனை பேருக்கு ஞானம் அளித்திருக்கும்....எல்லாமே கேள்விகள்தான் புறியவில்லை ப்ரபஞ்ச ரகசியங்கள் நானந்த ப்ளாஸ்டிக் ஸ்பூன் மூலமாக அந்தப் பாலை அவைகளுக்கு ஊட்டத்தொடங்கினேன் எதையுமே ஊன்றிக் கவனிக்கும் எனக்கு ஒரு விஷயம் மனதில் உரைத்தது, அந்த மூன்று குஞ்சுகளுமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தாமே ஆனால் ஒன்றுக்கொன்று அடிப்படையிலேயே எவ்வளவு வித்யாசம் ஒரு குஞ்சு நான் எவ்வளவு பால் கொடுத்தாலும் குடித்துக் கொண்டே இருந்தது அதன் கொள்ளவு தெரியாமல்,குடித்துவிட்டு துப்பிக் கொண்டே இருந்தது, அடுத்த குஞ்சு தனக்கு வேண்டிய அளவுக்கு செவ்வாய் திறந்து குடித்துவிட்டு,தன் அளவு தெரிந்து அதற்குப் பிறகு வாயையே திறக்க மறுத்தது, அடுத்த குஞ்சு சோம்பேரி என்று நினைக்கிறேன்,நல்ல பசி இருந்தும்கொஞ்சம்பால்குடித்துவிட்டுதூங்கஆரம்பித்துவிட்டது,ஆனால் அவை மூன்றுமே தங்கள் பயம் தெளிந்து நிம்மதியாக சிறிது நேரம் கழித்து தூங்க ஆரம்பித்தன, நான் அவைகளுக்கு செய்யும் பணிவிடைகளை எதிர் மரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்த தாய்ப்பறவைகள் தங்கள் கூக்குரலிடுவதை நிறுத்திவிட்டு அமைதியாய் அங்கிருந்தபடியே தங்கள் குழந்தைகளையும்கவனித்துக் கொண்டே இருந்தன, அவைகளுக்கும் என் மேல் நம்பிக்கை வந்துவிட்டது என்றே தோன்றியது, அதனால் ஒரு முடிவெடுத்தேன் அந்த மூன்று குஞ்சுகளும் இறகு ,தானாக பறந்து போய் அந்த தாய்ப்பறவைகளிடம் சேரும் வரை பாதுகாத்து அவைகளை பத்திரமாக ஒப்படைப்பது என்று,இறைவன்தான் அருளவேண்டும் குட்டி அண்ட் சன்ஸ் என்னும் நிறுவனம் பொறுப்பெடுத்துக்கொண்டு செய்வதால் என் குளிர்சாதன கருவி குட்டிகளாக போட்டுக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன் அதேபோல் ஒரு குளிர்சாதனத்தையும் குட்டியாக போட்டால் நன்றாக இருக்கும்,ஹூம் பார்ப்போம், குட்டி அண்ட் ஸன்ஸ் கே பழனியும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்து அவைகளைப் பார்வையிட்டார் 17/10/2008 வெள்ளிக்கிழமை காலை துபாயிலிருந்து என் மருமகனும் மகளும் வந்திறங்கினர், கேட்க வேண்டுமா என் மகளும் மருமகனும் மிக ஆசையாக அதைப்பார்த்தனர்,இரவு டார்ஜிலிங் சென்றிருந்த என் மகனும் மருமகளும் பேரன் நிகிலும் வந்தனர் வீடே விழாக்கோலம் பூண்டது, ஆனாலும் எங்கள் அனைவருக்குமே இந்த ப்ரதான விருந்தாளியான மைனாக் குட்டிகள் மேல்தான் கவனம் ,அந்தக் குட்டிகளுக்கு வெறும் பால் கொடுத்துக் கொண்டே வந்தேன்,ஆனால் அவைகளுக்கு அது போதவில்லை போலும் அடிக்கடி பசிக்கிறது என்று மூன்று குட்டிகளும் தெரிவித்துக் கொண்டே இருந்தன, அதனால் கொஞ்சம் சாதம் எடுத்து அதை சின்ன மிக்ஸியில் போட்டு கொஞ்சம் பாலையும் விட்டு நன்றாக அரைத்து ,அதில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து ஊட்டினேன்,மூன்று குட்டிகளும் அன்று இரவு மிகவும் நிம்மதியாக தூங்கின,இவ்வளவையும் என் பேரன் ஹரிப்ரசாதும் ,ஹயக்ரீவனும் ,நிகிலும், இந்த மூன்று குட்டிகளின் தாய்ப்பறவைகளும் என்னுடன் இருந்து கவனித்துக் கொண்டே வந்தனர் பிள்ளைகள், மருமகன் பெண்கள்,மருமகள் பேரக் குழந்தைகள் என்று எல்லோரும் இருந்ததால் நானும் என் மனைவியும், இன்னொரு படுக்கை அறையில் படுத்தோம் வெகு நேரம் எல்லோருடனும் அரட்டை அடித்துவிட்டு, பிறகு தூங்கியதால் நல்லதூக்கம், ஆனால் அந்த அறை ஏற்கெனெவே மைனாக்கள் குட்டி போட்ட அறை அல்ல, அதற்கு எதிர்பக்கமாக இருக்கும் அறை 18/10/2008 சனிக்கிழமை காலை 6.00 மணி , சாளரக் கதவுகளை மூடி குளிர்சாதனக் கருவியை இயக்கி இருக்கிறேன், அந்த சத்தத்தையும் மீறி காலை 6 மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன் ,கண்கள் எரிச்சல் சாளரக் கதவுகளைத்திறந்து பார்த்தால் அந்த தாய்ப்பறவைகளுக்கு எப்படி தெரியுமோ நான் அந்த அறையில் படுத்திருப்பது, அந்த அறையின் சாளரத்துக்கு வந்து குரல் கொடுக்கிறது என்னை எழுப்ப, என்ன ஆச்சரியம் எப்படிக் கண்டுபிடித்தது அந்த தாய்ப்பறவைகள் நான் அந்த அறையில் படுத்திருப்பதை...? என்னை எழுப்ப அந்த தாய்ப்பறவைகள் மூடியிருந்த சாளரக் கதவை முட்டி கத்தி என்னை எழுப்பின, இரவு அந்த மனிதன் நம் குட்டிகளுக்கு என்ன கொடுத்தானோ, காலை மணி ஆறு ஆகிறது வா அவர்களைப் போய் எழுப்புவோம் என்று அந்த தாய் மைனா தன் கணவனிடம் சொல்லி இருக்கும்,தந்தை மைனாவும் மனைவி சொல்லே மந்திரம் என்று உணர்ந்து இருவருமாக சேர்ந்து வந்து ஒலி எழுப்பி என்னை எழுப்பினர், தன் குட்டிகளுக்கு பசிக்குமென்று தாயைவிட உலகில் யாருக்கு புறியும்,,,? நான் அடுக்களைக்கு சென்று பால் எடுத்துக் கொண்டு வந்து அந்தக் குட்டிகளுக்கு ஊட்ட ஆரம்பித்ததை எதிர்பக்கம் வந்து, கவனித்துவிட்டு மீண்டும் மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டன தாய்ப்பறவைகள், ஒரு காரியத்தை செய்யவேண்டுமென்று முடிவெடுத்தால் அதற்குஎவ்வளவு இடையூறுகள் வருகின்றன,எங்கள் தாழ்வாராத்தில் அந்த மூன்று குட்டிகளையும் பிளாஸ்டிக் கூடையில் போட்டு வைத்திருந்தேன், திடீரென்று அந்தக் குட்டிகளின் கூக்குரல், என்னவென்று போய்ப்பார்த்தால் மழைபெய்து கொண்டிருக்கிறது, அவைகளின்மேல் சாரல் அடித்துக் கொண்டிருக்கிறது ,...அவைகளை எடுத்து ஒரு பாதுகாப்பாக அட்டைப் பெட்டியில் வைத்துவிட்டு யோசித்தேன், இன்னும் கொஞ்சம் பாதுகாப்பாக அவைகளை வைக்க என்ன செய்யலாம் என்று என் மகள் ஒரு யோசனை சொன்னாள், அப்பா என்னிடம் காய்கறிகள் போட்டு வைக்க ஒரு மூடி போட்ட இரும்புக் கூடை இருக்கிறது அதை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு அந்தக் கூடையை எடுத்து வந்தாள் ,அந்தக் கூடையில் கீழே ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பை விரித்து அந்தக் குட்டிகளை பத்திரமாக வைத்து, அந்த மூடியை மேலே மூடி அந்த கூண்டை ஒரு கயிற்றில் கட்டி தாழ்வாரத்தில் மேலே இருந்த ஒரு வளைவுக் கம்பியில் கட்டி தொங்கவிட்டேன்,அப்பாடி இப்போது காக்காய்களாலோ, மற்ற எறும்புகள் போன்றவைகளாலோ அந்தக் குட்டிகளுக்கு ஆபத்தில்லை என்பது நிம்மதியாக இருந்தது ,ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முறையாவது அந்தக் குட்டிகளை எடுத்து அவைகளை நனைந்த துணியினால் அவற்றை சுத்தம் செய்து,அந்தக் கூண்டை எடுத்து அதையும் சுத்தம் செய்யவேண்டி வந்தது,இல்லையென்றால் வீடே நாறுகிறது.... ஆனால் அந்தக் குட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கியது, இறகுகளின் நிறமும் மாறிக் கொண்டே வருகிறது, தத்திதத்தி நடக்க ஆரம்பித்துவிட்டன மூன்று குட்டிகளும்,தாவித்தாவி என் மடியில் வந்தமர்ந்தன,பறக்கவும் முயற்சி செய்ய ஆரம்பித்தன 24ம் தேதி இன்று மூன்று குட்டிகளும் ஒன்றாய்ப் பறந்து வானிலே உயர்ந்து தங்களின் தாய்ப் பறவைகளுடன் சேர்ந்து பறக்கத் தொடங்கின, என்னைக் கடைக்கண்ணால் நன்றியுடன் பார்த்தபடி அன்புடன் தமிழ்த்தேனீ