"சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளை

Visto 186 veces
Saltar al primer mensaje no leído

Kannan Natarajan

no leída,
11 oct 2008, 17:35:1811/10/08
a Min Thamizh
திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலிச் சீமை செந்தமிழ்ப் பேரறிஞர் பலரை ஈன்று தந்த பெருமை சான்றது. இப்புலவர் பெருமக்கள் வரிசையில் இடம் பெறத்தக்க புகழ்சால் தோன்றல் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை ஆவார். "ஆழ்புலமை, அளவிலா அடக்கம், நடக்கையில் எளிமை, ஆரவாரமிலா வள்ளன்மை ஆகிய பண்புகளின் தன்னேரில்லா எடுத்துக் காட்டே இரா.பி.சேதுப்பிள்ளை," என்பார் சர்.ஏ.இலட்சுமணசாமி முதலியார். இவரைச் "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" எனப் போற்றினார் சுத்தானந்த பாரதியார். ஆம். இவர் பேச்சும், எழுத்தும் செந்தமிழ். அதுமட்டுமா! இவர் வாழ்வும் செந்தமிழ் வாழ்வு எனக் கூறுதல் சற்றும் மிகையன்று.
 


பிறப்பும் இளமையும்

திருநெல்வேலிப் பெருநகரின் வடகீழ்த் திசையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இராசவல்லிபுரம். இவ்வூரில் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1896 மார்ச் திங்கள் 2ம் நாள் கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

ஐந்தாண்டு நிரம்பிய சேதுவை உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகர் இவருக்கு,
  • மூதுரை
  • நல்வழி
  • நன்னெறி
  • நீதிநெறி விளக்கம்
ஆகிய நூல்களைக் கற்பித்தார்.
 
செப்பறையில் இருந்த அடிகளாரிடம்,
  • தேவாரம்
  • திருவாசகம்

போன்ற சமய நூல்களைக் கற்று சேது செந்தமிழ் அறிவும் சிவஞானமும் பெற்று வளர்ந்து வரலானார்.

பள்ளி - கல்லூரிக்கல்வி

சேது தம் பள்ளிப்படிப்பைப் பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் பயின்றார். இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியப் பிள்ளையும், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமப் பிள்ளையும் சேதுவின் தமிழார்வம் என்ற பயிரினை நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்த்த பெருந்தகையராவர்.

சட்டப்படிப்பும் நகர்மன்றப் பணியும்

பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். நெல்லையில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்ட சேதுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

பல்கலைக்கழகப் பணி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைத் தமிழ்ப் பேரறிஞர் கா.சு.பிள்ளை அணி செய்தபோது, சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் அருந்தமிழ்ப் பணி புரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினார்.

1930ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத் தமிழ் விரிவுரையாளர் பொறுப்பினை ஏற்றார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி இனிது நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். சேதுப்பிள்ளையின் முயற்சியினால்,
  • திராவிடப் பொதுச்சொற்கள்
  • திராவிடப் பொதுப்பழமொழிகள்

ஆகிய இரு நூல்களைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தொடர் சொற்பொழிவுகள்

பல்கலைக்கழகப் பணிகளைப் பாங்குறப் பேணிய சேதுப்பிள்ளை, சிந்தை கவரும் தம் செந்தமிழ்ப் பேச்சால் சென்னை மாநகர் மக்களை ஈர்த்தார். தமிழ் மக்கள் அனைவரும் மகிழும் வகையில் தமிழ்மழை பொழிந்துவந்தார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் அன்பர்கள் சென்னை மாநகரில் கம்பர் கழகத்தை நிறுவினர். சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.

எழுதிய நூல்களும் கட்டுரைகளும்

பேராசிரியர் சேதுப்பிள்ளை,
  • பதினான்கு கட்டுரை நூல்கள்
  • மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள்
எழுதியுள்ளார்.
 
நான்கு நூல்களை பதிப்பித்தார்.
 
இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்". சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழ்இன்பம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ்வீரம்
  • தமிழ்விருந்து
  • வேலும்வில்லும்
  • வேலின்வெற்றி
  • வழிவழி வள்ளுவர்
  • ஆற்றங்கரையினிலே
  • தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
  • செஞ்சொற் கவிக்கோவை
  • பாரதியார் இன்கவித்திரட்டு

போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.

பாராட்டுகள்

1950ம் ஆண்டு தருமை ஆதீனம் "சொல்லின் செல்வர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது அப்பல்கலைக்கழகம்.

பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை 25.4.1961ல் தம் 65ம் வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
 
முனைவர் ப.சுப்பிரமணியன்
 
நன்றி: தம்மிழமணி (தினமணி)

Subashini Tremmel

no leída,
12 oct 2008, 2:17:5612/10/08
a minT...@googlegroups.com
வணக்கம்.
ஒரு சிறு குறிப்பு: இரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் நூல் மலேசிய அரசாங்கத்தால் தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழி இலக்கண இலக்கணத்துறையில் ஒரு பாட நூலாக சேர்க்கப்பட்டிருந்தது(1990லிருந்து 1998 வரை. இப்போது தெரியவில்லை)
 
அன்புடன்
சுபா 

2008/10/11 Kannan Natarajan <thar...@gmail.com>

Narayanan Kannan

no leída,
12 oct 2008, 7:25:5812/10/08
a minT...@googlegroups.com
மிக்க நன்றி கண்ணன்!

இரா.பி.சேதுப்பிள்ளையின் அரும்பெரும் கொடை நம்மாழ்வாரின்
திருவாய்மொழிக்கு "பகவத் விஷயம்" என்றும் "ஈடு" என்றும் அழைக்கப்படும்
மணிப்பிரவாள வியாக்கியானத்தை புருஷோத்தம நாயுடுவை வைத்து தமிழாக்கம்
செய்ததுதான். இல்லையெனில் என்னைப் போன்ற திசைமாறிப்போன தமிழர்களுக்கு
நற்கதி ஏது? பாசுரமடல்கள்தான் ஏது?

உங்கள் கட்டுரை படித்த பின்தான் இரா.பியின் ஆர்வத்தின் பின்புலம்
புரிகிறது. நம்மாழ்வாரும், இரா.பியும் நெல்லை மக்கள். மேலும் இவர் இராமன்
அருளால் பிறந்தவர். மனைவி பெயர் ஆழ்வார்ஜானகி!! இறைவன் எப்படி
முடிச்சுப்போடுகிறான் பாருங்கள்!!

கண்ணன்

2008/10/12 Kannan Natarajan <thar...@gmail.com>:


>. இவ்வூரில் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள்
> தம்பதியருக்கு 1896 மார்ச் திங்கள் 2ம் நாள் கார்காத்த வேளாளர் குலத்தில் சேது
> பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம்
> மகனுக்கு சேது என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
>

Tthamizth Tthenee

no leída,
12 oct 2008, 8:02:0612/10/08
a minT...@googlegroups.com
இறைவன் போடும் முடிச்சுகள், புதிர்கள் மிக ஆச்சரியமாக இருக்கின்றன
 
இதனை இதனால் இவன் முடிக்கு மென்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 12 16:55 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:
Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos