எட்டாயிரம் பேர்
======================================ருத்ரா
மாமனிதர் மோடிஜியின்
பதவியேற்பு விழாவுக்கு
எட்டாயிரம் பேர் குவிந்திருந்தனர்.
நேரே வாக்குப்பெட்டிகளிலிருந்து
வந்த ஈசல்கள்
தங்களை தேர்ந்தெடுத்த
அந்த மகா ஈசல்களுக்குப்பதிலாக
மந்திரக்கோல் ஆட்டும் மந்திரிகளாக
அங்கே அந்த மேடையில்
அடையாளப்படுத்தப்பட்டனர்.
ஈசல்கள் என்றாலும் ஈசன்கள் தான்.
மந்திரிகளையே படைக்கும்
பிரம்மாக்கள் அல்லவா அவர்கள்!
இந்த வெற்றியின்
வண்ண வண்ண விளக்குகளின்
அசைவுகளில்
அந்த இறக்கைகள் எல்லாம்
உற்சாகத்தின் இறக்கை கட்டிப்பறந்தன.
எண்ணிக்கைகளின் இறக்கைகள் அவை.
பின்னர் நிகழும்
லாபங்களின்
கூட்டல் கழித்தல்களில்
இந்த இறக்கைகள் உதிரலாம்.
மதம்
ஒரு தேவனா? அரக்கனா?
தனக்கு
பலிகளும் பூசைகளும்
தேவைப்படும்
கடவுள் முன்னே
மனிதனின்
உள்ளொளியெல்லாம்
உறிஞ்சப்பட்ட பின்
இந்த சக்கைகளே
தினம் தினம் கை குவிக்கின்றன.
மேலும் மேலும்
மலர்ச்சியுற வேண்டிய மனிதன்
மக்கிய குப்பையாய் கிடக்கின்றான்.
குப்பைக்கிடங்குகளில்
கோபுரங்கள்
மிச்சமாகி நிற்கின்றன
ஆத்மா இறந்த எலும்புக்கூடுகளாய்.
====================================================
30.05.2019