edhugai

898 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jun 3, 2005, 10:35:33 AM6/3/05
to yAppu...@googlegroups.com
^^^^^^^^^^^^^^^^^^^^
எதுகை - பேரா. பசுபதி
^^^^^^^^^^^^^^^^^^^^

* மோனை என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில் ஒன்றுவது' என்று
பார்த்தோம். எதுகை என்பது ' இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது'
என்று சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன்,
வண்ணன்.

* எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப் போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக்
குறிலானால் (நெடிலானால்), எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக்
குறிலாக(நெடிலாக) இருக்கவேண்டும். (இது பலரும் செய்யும் தவறு) .தட்டு,
பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.

* சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் ஒத்த ஓசை கிடைக்கும்.
(உ-ம்) பண்டு, உண்ண ..ஓசை இனிமை இல்லை. பண்டு, உண்டு, கண்டு... இவை
இன்னும் சரியான எதுகைகள். அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி,
முடிந்தவரை மற்ற எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் இரண்டாவது
எழுத்தாவது ஒன்ற வேண்டும்!

* சில 'சிறப்பில்லா எதுகைகளும்' உண்டு . இவற்றில் முக்கியமானவை, வருக்க
எதுகை, இன எதுகை, ஆசிடை இட்ட எதுகை.

* வருக்க எதுகை:
----------------
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

இங்கே ல-விற்கு, லை-எதுகையாக வந்திருக்கிறது. இப்படியே ல,லி, லு,லெ, லொ
..இவையும் வரலாம். ல-குறிலாதலால், குறிலாகவே வந்தால் சிறப்பு. 'லை'
நெடிலானாலும், 'லய்' போலவே, குறிலாக ஒலிக்கிறது அல்லவா? 'ல' விற்கு அதன்
வருக்க எழுத்துகளில் ஒன்று எதுகையாக வருவது வருக்க எதுகை.


* இன எதுகை:
--------------
இஇரண்டாம் எழுத்துக்கள் ஒரே இஇனமாக இருப்பது.

(உ-ம்) தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (திருக்குறள்)

'தக்' கும் , 'எச்' சும் வல்லின எதுகைகள்.

அதே மாதிரி, 'அன்பு' 'நண்பு' மெல்லின எதுகை.

'வரவு' 'செலவு' இடையின எதுகை.

* ஆசிடை இட்ட எதுகை :
-------------------------
ஆசு என்றால் பற்றுக்கோடு.

எதுகையாக வரும் எழுத்துக்கு முன் 'ய்,ர்,ல்,ழ்' என்ற எழுத்துகள் நான்கில்
ஒன்று வந்தால், ஆசிடை எதுகை எனப்படும். இஇந்த விதியினால், 'வாய்மை-தீமை',
'மாக்கொடி-கார்க்கொடி', 'ஆவேறு-பால்வேறு' ,'வாழ்கின்ற-போகின்ற' என்ற
வார்த்தைகள் ஆசிடை எதுகை பெற்று விளங்குகின்றன. இந்த எழுத்துகள் நடுவில்
வந்தாலும் ஓசை கெடுவதில்லை என்பது இஇந்த விதியின் உட்பொருள். (
வாய்மை-தூய்மை; மாக்கொடி-பூக்கொடி; வாழ்கின்ற-தாழ்கின்ற ..இவை
'முதல்தரமான' எதுகைகள். ஆனால்... கருத்தைச் சொல்ல , முதல் தர எதுகைகளைப்
பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடையிட்ட எதுகை போன்ற சிறப்பில்லா
எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இவ்விதிகளின் பொருள்.)

* சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியா என்று பார்க்க வேண்டும்.
மின்னியல், பொன்தகடு..எதுகை அல்ல. ஏனென்றால், பொன்+தகடு= பொற்றகடு!

* ஒரு உதாரணம்.
வெய்யிற்(கு) ஏற்ற நிழலுண்டு
. . வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
. . கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. . தெரிந்து பாட நீயுமுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. . வாழும் சொர்க்கம் வேறுண்டா? ( கவிமணி தே.வி.பிள்ளை)

* இது ஆறு சீர் விருத்தம்; 4 அடிகள், 8 வரிகள் .

* நான்கு அடிகளின் முதற்சீர்களில் ஒரே எதுகை;
(வெய்யி, கையி, தெய்வ, வையம்)

வரிகளுக்குள்ளே மோனை. (வெ,வீ; கை,க; தெ,தெ; வை, வா) ( ஐ- சீரின்
முதலிலும் 'அய்' மாதிரி குறிலாக ஒலித்து, எதுகைக்குப் பயன்படுவதையும்
பாருங்கள்!)


* பொதுவாக, எதுகை மரபுக் கவிதையில் அடிகளைப் பிரிக்க உதவும்.
அடிகளுக்குள் பொதுவாக மோனை நயம் இருக்கும்.

* ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம்.
'எதுகை, மோனை' என்பது 'எகனை, மொகனை' ஆகும். 'ஆட்டம், பாட்டு' என்பது
'ஆட்டம், பாட்டம்' ஆகும். 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா'
என்பது 'வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு காய்க்குமா?" ஆகும்.

* இயைபு:
----------

அடித்தொடக்கத்தில் வருவது எதுகை. அடிகளின் இறுதியில் ஓர் எழுத்தோ, பல
எழுத்துகளோ ஒன்றி வருவது இயைபு.

காட்டு:

நந்தவ னத்திலோர் ஆண்டி -- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி --அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போடுடைத் தாண்டி !

இதில் "ண்டி" என்ற எழுத்துகள் ஒன்றிவருகின்றன.
(நந்த -கொண்டு ; மெல்லின எதுகை)

===

Pas Pasupathy

unread,
Jun 3, 2005, 10:38:15 AM6/3/05
to yAppu...@googlegroups.com
எதுகை-2
( இதை 'எதுகை' பற்றிய என் பழைய மடலுக்குப் பின்சேர்க்கையாகக் கருதலாம்.)

======
எதுகை என்றால் முதல் எழுத்து அளவில் ஒத்து, இரண்டாம் எழுத்து
ஒன்றுவது என்பதை முன்பு பார்த்தோம். இப்போது, முன்னோர்கள் பயன்படுத்திய சில வகை
எதுகைகளைப் பார்ப்போம். பழம் இலக்கியங்களில் வருகின்றதை நாம் அறியவேண்டும்
என்பதற்காகவே இவற்றிற்கு பெயர்கள் கொடுத்து, வகைப்படுத்தி உள்ளனர் இலக்கண
ஆசிரியர்கள். ( இது போலவே மோனைக்கும் பல பெயர்கள் கொடுக்கலாம்;
கொடுத்துள்ளனர்)

1. வருக்க எதுகை :
நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

"ணெ' என்பதற்கு எதுகையாக 'ண' வருக்கமான 'ணா' என்பது வருகிறதை வருக்க
எதுகை என்பார்கள். 'ண,ணா, ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணை, ணொ, ணோ, ணௌ'
இவை ணகர வருக்க எழுத்துகள். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் சொல்லலாம்.
* இந்தக் காட்டில் , குறிலான 'ணெ' விற்கு, நெடிலான 'ணா' வந்தாலும், பொதுவாக,
குறிலுக்குக் குறிலையும், நெடிலுக்கு நெடிலையும் எதுகையாகக் கொள்வது சிறப்பு.
* பொதுவாக, ஒரு உயிர்மெய் எழுத்திற்கு அதன் வருக்க எதுகையாக மெய்யெழுத்து
வராது. முக்கியமாக, வல்லின மெய்கள் இவ்வாறு உயிர்மெய்களுக்கு எதுகையாக வராது.
சில பாடல்களில், இடையின, மெல்லின மெய்கள் அவற்றின் உயிர்மெய்க்கு எதுகையாய்
வருவதைப் பார்க்கலாம்.
(காட்டு) வாய்மை, தூய, தீமை, தாய்மை (கம்பன் )
ஈர், கார்கள், ஊரில், தாரை (கம்பன்)
நாண்மதி, ஆணையின், மாண்வினை, பாணரின் (கம்பன்)

2. இன எதுகை:
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளின் தற்று.

'த்' என்பதற்கு அதே வல்லினத்தில் ஒன்றான 'க்' என்பது வருவது வல்லின எதுகை.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
இது இடையின எதுகை.

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
இது மெல்லின எதுகை.

* 'ர' வும், 'ற'வும் தற்காலத்தில் ஒலியில் நெருங்கினபடியால், ஒன்றுக்கொன்று
எதுகையாக வருகின்றன.

3. உயிர் எதுகை.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த புகழ்.

ணு, று இரண்டிலும் வருவது ஒரே உயிரான 'உ' என்பதால், இதை உயிர் எதுகை
என்பர்.

4. நெடில் எதுகை.
இதை உயிர் எதுகையின் ஒரு சிறப்பு வகையாய்க் கொள்ளலாம்.

(காட்டு)
ஆவா என்றே . .
கூ கூ என்றே . .
மா மா என்றே
ஏகீர் நாய்கீர் . .

இப்படி (வா,கூ,மா, கீ) ஒன்றுக்கொன்று எதுகையாய் வருவது நெடில் எதுகை .

5. மூவகை எதுகை.

சீர் முழுதும் ஒன்றுவது தலையாய எதுகை.
(காட்டு) கலைநவின்ற, நிலைநவின்ற, புலைநவின்ற, அலைநவின்ற

ஓரெழுத்து மட்டும் ஒன்றினால் இடையெதுகை.

( காட்டு) அகர, பகவன்

மற்றவை யாவும் கடைஎதுகை.

(காட்டு) தக்கார், எச்சத்தாற்

6. இரண்டடி எதுகை.
நான்கடிச் செய்யுள்களில், முதல் இரண்டடி ஓரெதுகையும், பின்னிரண்டு அடிகள்
வேறொரு எதுகையும் பெற்று வந்தால் இரண்டடி எதுகை.


(காட்டு)
துவைக்கும் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர்
அவைப்பதம் பல்லுக் கழகொவ்வா முத்தம்
மணங்கமழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின்
அணங்கமுத மந்நலார் பாட்டு.

* இவ்வெதுகையைப் பல வெண்பாக்களில் பார்க்கலாம். சம்பந்தர் அறிமுகப் படுத்தின
சில புதுப் பாவினங்களில் பார்க்கலாம். விருத்தங்களில் பார்ப்பது அரிது.

7. இடையிட்டெதுகை.

அடிகளில் இடையிடையே ஒவ்வொன்றை விட்டு எதுகை இருந்தால் அது
இடையிட்டெதுகை எனப்படும்.

(காட்டு)
நீடா ரிவணென நீமனம் கொண்டார்
கேளார் கொல்லோ காதலர் தோழி
வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி
பருவம் பொய்யாது வலனேர்பு வளைஇ
ஓடா மலையன் வேலிற்
கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.

8. மூன்றாம் எழுத்தொன்றெதுகை.
இரண்டாம் எழுத்து மட்டுமின்றி, மூன்றாம் எழுத்திலும் ஒன்றி வருவது இவ்வெதுகை.

(காட்டு) பவழமும், திகழரும்

9. வழியெதுகை

பல சீர்களிலும் எதுகை தொடர்ந்து வந்தால் வழியெதுகை ஆகும்.

(காட்டு)
மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் தொண்டியின்வாய்


========
குறிப்பு:
திருவள்ளுவர் மேற்கண்ட பலவித எதுகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
"இளங்கவிஞர்கள் தங்களையும் திருவள்ளுவராகக் கருதி இவ்வெதுகைகளைப்
பயன்படுத்திச் செய்யுள் இயற்றக் கூடாது என்பதறிக " என்கிறார் அ.கி.பரந்தாமனார்.
" சிறப்பில்லாத எதுகை மோனை வகைகள் சில உண்டு. முந்தையோர் செய்யுட்களில்
அவை இருந்தால் அவறிற்கு வகை இன்னதென்று தெரிந்து கொள்ளவே இவற்றை
வகுத்திருக்கிறார்கள். ஆதலின், நாம் புதிதாகப் பாடும் பாட்டில் எதுகை மோனைகளை
இந்த அளவில் அமைத்தால் போதும் என்று எண்ணக் கூடாது" என்கிறார்
கி.வா. ஜகந்நாதன்.

பசுபதி
~*~o0O0o~*~

Pas Pasupathy

unread,
Jun 3, 2005, 10:39:55 AM6/3/05
to yAppu...@googlegroups.com
எதுகை-3
=======
அன்பின் சுப்பிரமணியம்,

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றிச்,
சினம் எனும் சரக்கை ஏற்றிச், செறிகடல் ஓடும் போது,
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணா(து)
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.


அழகே புரிந்திட்டு அடி நாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே.

மேற்கண்ட இரண்டு பாடல்களையும் 'உயிர் எதுகை' க்குள் அடக்கலாம்.


இப்படிப் பல பாடல்கள் பழம் இலக்கியங்களில் வருவதைப் பார்த்துத் தான்
யாப்பருங்கலத்தில்(கலம்) இப்படிப்பட்ட பல எதுகை வகைகளுக்குப்
பெயரிட்டனர்.


மேலும், அடிஎதுகைக்குப் பதிலாக அடிமோனை; இப்போது மோனைக்கு மட்டும்
இனமாகக் கருதும் வ,ம வை (நீங்கள் கேட்ட மாதிரி) எதுகையில்
பயன்படுத்துவது, இரண்டடி எதுகை, ... இதெற்கெல்லாம் கலத்தில் காட்டுகள்
உண்டு! எல்லாவிதமான எதுகை, மோனைகளையும் , அவற்றின் பயன்பாட்டையும்
கலத்தில் பார்க்கலாம்.

கலத்தின் ஒரு காட்டு : ஒரு ஆசிரியப்பா வின் ஈற்றடிகளில் :

சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

என்று வருவதைக் குறிப்பிட்டு "...பாட்டினுள் ஈற்றடி இரண்டும் மகர வகாரங்கள்
எதுகையாய் வந்தன " என்று குறிப்பிடுகிறார் விருத்திகாரர். மேலும், ஒரு
கலிவிருத்தத்தின்
நான்கு அடிகளின் முதற் சீர்கள் " அமரீர், எமரீர், தமரீர், அவரூர் " என்று
வருவதையும்
அதே சமயத்தில் சுட்டிக் காட்டுகிறார்.

சிலம்பின் காலத்திலேயே, சில பாவின வித்துக்களை நாம் பார்க்க முடிகிறது;
இருப்பினும்
நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தைப் பாவினங்களில் பல சோதனை முயற்சிகள் நடந்த
காலமாகத்தான் கொள்ளவேண்டும்; விருத்தங்கள் போன்ற பாவினங்கள் முழு வளர்ச்சி
அடைந்துவிட்டன என்று சொல்லமுடியாது.
(சம்பந்தர் செய்த புது யாப்புப் பரிசோதனைகளைப்
பற்றி நிறைய எழுதலாம். பாவினங்கள் வளர்வதற்கு ஒரு பெரிய மூலகர்த்தா அவர் என்றே
சொல்லலாம். )


பிறகு, விருத்தம் போன்ற சில பாவினங்கள் நன்றாக வளர்ந்தபின், இவற்றின் ஓசைச்
சிறப்பைக் கருதி சில வகைகளையே கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
'விருத்தத்திற்குக் கம்பன்' என்பதற்குச் சரியாக , சிறப்பான ஓசை தரும்
எதுகைகளையும்,
மோனைகளையும் தான் கம்பனிடம் பார்க்கலாம். கம்பனிடம் அதிகமாய்த் தென்படுவது
தலையாய எதுகையும், இடையாய எதுகையுமே. ஏதோ... நான் கொடுத்த இரண்டு
காட்டுகள் போல்..ஒன்றிரண்டு விதிவிலக்குகள் மற்ற வகை எதுகைகளில் இருக்கும்.
அவ்வளவுதான்.

அதே மாதிரி, பொதுவில் மோனை அடிக்குள் வந்தால் அழகு; அடிகளிடையே எதுகை
அழகு..நீளமான அடிகள் அரை அடிகளாய்ப் பிரியும்போது, அவற்றுக்கிடையே மோனை ...
என்று ஓசை இலக்கணமும், சிறப்புத் தரும் வழிகளும் வளர்ந்திருக்கின்றன. ஓசைச்
சிறப்புத் தராத எதுகை, மோனை வகைகளைக் கவிஞர்கள் பயன்படுத்தவில்லை; அதற்கு
அவசியம் இல்லாமலேயே கருத்தைச் சொல்ல முடிகிறது என்று கண்டுபிடித்திருக்கலாம்.
மேலும், சித்தர்கள் காலத்தில் சிந்து போன்றவை
வளர்ந்து... இரண்டடி எதுகைக் கண்ணிகள் வந்து மக்கள் மனத்தைக் கவர்ந்திருக்கும்.
நெகிழ்ச்சியுள்ள பல புது வகைப் பாவினங்கள் வந்துவிட்டபடியால், ஓசைச் சிறப்பற்ற
மற்ற வகை எதுகைகளை விருத்தங்களில் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல்
போயிருக்கலாம்.

பசுபதி
=========
28-2-2005
பசுபதி: எதுகை வகைகள் பற்றிப் பயனுள்ள செய்திகளை (இங்கும், செய்தி எண்
2414-லும், கோப்பிலும்)
தொகுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி. வ-ம எதுகை எழுத்துகளாக வரும்
காட்டுகளைக் கண்டுபிடித்து
இட்டது அருமை. இதுபோல, 'ர'-'ற' தற்காலத்தில் ஒலியின் நெருக்கத்தால்
பயிலும் என்று செய்தி 2414-ல் குறிப்பிட்டிருந்தீர்கள். கம்பன் அவ்வாறு
பயன்படுத்திருக்கிறான் என்று ஹரி முன்பு (2003-ல்) ஒருமுறை
எடுத்துக்காட்டி இருக்கிறார்:

நூற்கடல் அன்னவர் சொற்கடன் நோக்கி
மால்கடல் பொங்கும் மனத்தவ ரோடும்
கார்க்கடல் போல்கருணைக் கடல் பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். (99)

சம்பந்தர் செய்த யாப்புப் பரிசோதனைகளைப் பற்றியும் விரிவாக (விரைவில்!) எழுத
வேண்டுகிறேன். (இத்தகைய செய்திகளை நீங்கள் சேமித்து வைத்திருப்பது
எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் சேமிப்பை முற்றுமாகப் பார்த்ததில்லை!)

அனந்த்
==========
ர, ற எதுகையில் அக்காலத்திற்கும், தற்காலத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு:

கம்பன் எதுகை கொடுக்கும் ஓசைச் சிறப்பிற்காக ர-வை ற வாக
மாற்றிவிடுவான் !

காட்டு:

செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார்
பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று
அறிந்திலர் அரக்கரும் அமர்த் தொழில் அயர்ந்தார்

இங்கே பிரிந்தனர் என்பது பிறிந்தனர் என்று அமைத்தான்.

தற்காலத்தில், பொதுவில் இம்மாதிரி சீர்களில் சொல்லை மாற்றாமலேயே நாம்
உள்ளிடுவோம்.

இதே மாதிரி மோனை இன்பத்திற்கு தசரதன்/தயரதன் என்று பொதுவில்
எழுதும் கம்பன்... 'தேசத்திற்கு' மோனையாக 'தெசரதன்' என்றும் அமைத்திருக்கிறான்!

பசுபதி
=============
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன்நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

(பிறிந்தேன்=பிரிந்தேன்)

அபிராமி அந்தாதி.
============

Reply all
Reply to author
Forward
0 new messages