பசுபதி
இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் அடிக்கடி அரசியல் தூதுவர்களைப் பற்றிப்
படிக்கிறோம்.
பல நாடுகளுக்கு அடிக்கடி மேலே ஏறும் 'ரத்த அழுத்தத்தை'க் குறைக்கும்
மருத்துவர்களாக அவர்கள்
பணிபுரிவதையும் பார்க்கிறோம். அரசியலில் தூதுவருக்கு இருக்கும்
முக்கியத்வம் இன்று வந்ததன்று; காலம் காலமாக இருப்பதுதான் என்பதை நம்
பழம் புராண,இலக்கியங்களில் இருந்தே உணரலாம். இதிகாசங்களில்
உள்ள மிகப் பிரபலமான தூதுகள்; ராமாயணத்தில் அனுமன், அங்கதன் தூதுகள்,
பாரதத்தில் கிருஷ்ணன் தூது,
கந்த புராணத்தில் வீரபாகுத் தேவரின் தூது . இவற்றைச் சுருக்கமாக, "
ராமாயணத் தூது 'பெண்'ணை(சீதையை) விடுதலை செய்வதைப் பற்றியது, பாரதத்
தூது கௌரவரிடம் இருந்த ' மண்ணை' விடுவிக்கும் பொருட்டு, கந்த
புராணத்தில் வீரபாகுத் தேவரின் தூது சூரபத்மன் பற்றியிருந்த 'விண்ணை'
(தேவருலகை) விடுவிக்கும் பொருட்டு " என்று சமயப் பேருரையாளர்கள்
சொல்வர். இப்படிப்பட்ட தூதுகளைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதலாம்; ஏன்,
'யார் சிறந்த தூதுவர்?' என்று பட்டி மண்டபமே வைப்பதும் உண்டு!
'தூது' என்று ஒரு அதிகாரத்தையே படைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
சிலசமயம், தன் அரசன் கூறியனுப்பியதைப் பகையரசர்முன் சொன்னால், தன்னுயிர்க்கே
ஆபத்து வரும் என்று தெரிந்தாலும் , அதற்கு அஞ்சாமல் தன் மன்னனுக்கு நன்மை
விளையுமாறு
நடப்பவனே சிறந்த தூதுவன் என்கிறது கீழ்க்கண்ட குறள்.
இறுதி பயப்பினும் எஞ்சா(து) இறைவற்
குறுதி பயப்பதாந் தூது.
தனக்குத் துயர்வரினும் பொருட்படுத்தாத தூதுவனுக்கு ஒரு நல்லுதாரணம்
என்று ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள்
நளனை நமக்கு நினைவுறுத்துகிறார்.
அவருடைய 'சோமேசர் முதுமொழி வெண்பா' நூலில், ஒவ்வொரு வெண்பாவின் கடைசி
இரண்டடிகளிலும் ஒரு
குறளை வைத்து, முதல் இரண்டடிகளில் அக்குறளுக்கேற்ற ஒரு சான்றைச் சமய, பிற
இலக்கியங்களிலிருந்து
எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த வெண்பா வருமாறு.
தன்றுயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேஉறுதி
துன்றமொழிந் தான்நிடதன் சோமேசா -- வென்றும்
இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது.
(நிடதன் - நிடத நாட்டரசன் நளன் , தன் துயர் நோக்கான் - தனக்கு ஏற்படும்
துன்பத்தை எண்ணாமல்,
தனை விடுத்தோர்க்கே - தமயந்தி பால் தூதாகச் செல்லும்படி தன்னை அனுப்பிய
இந்திரன் முதலிய
தேவருக்கு , உறுதி துன்ற மொழிந்தான் -- உறுதி ஏற்படுமாறு சொன்னான் )
இந்த 'நளன் தூது' நைடதத்தில் உள்ள ஒரு கதை. தமயந்தியின் அழகைப் பற்றி
அறிந்த இந்திரன்
அவளை மணம்புரிய ஆசைப்பட்டு , சுயம்வரத்திற்கு வருகிறான். ஆனால், அங்கே
வந்திருக்கும் நளனின்
அழகைக் கண்டு திகைக்கிறான்; தமயந்தி நளனுக்கே மாலையிடுவாள் என்று
பயப்பட்டு, நளனையே
தன்னுடைய தூதுவனாகத் தமயந்தியிடம் அனுப்புகிறான். நளனே தூது சென்றால்,
தமயந்தி தன்னை மணக்க
இசைவாள் என்பது இந்திரனின் எண்ணம். நளனும் , தான் தமயந்தியிடம் காதல்
கொண்டிருந்தும், இந்திரனின்
வேண்டுகோளை மதித்து, தமயந்தியிடம் சென்று இந்திரனை மணக்க வேண்டும் என்று
தமயந்தியிடம்
தூதுரைத்தான்.
தன்னுயிர்க்கு வரக்கூடிய துன்பத்தையும் பொருட்படுத்தாது சென்ற இன்னொரு
தூதுவர் வீரபாகுத் தேவர்.
சூரபத்மனிடம், ' தாரகனைக் கொன்ற வேல் உன்னையும் 'ஒருகை' பார்க்கத்
தயாராக இருக்கிறது" என்று
தைரியமாகச் சொல்கிறார்.
அண்டர் ஆற்றலை வவ்விய தாரகன் ஆவி
உண்ட கொற்றவேல் இருந்தது; விடுத்திடின் உனையும்
கண்ட துண்டமது ஆகுமால்; அறநெறி கருதித்
தண்டம் வல்லையிற் புரிந்திலன், இத்துணை தாழ்ந்தான்.
'குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது ' என்று
திருப்புகழ் குறிக்கும்
'அனுமன் தூதி'ற்குப் பின் நடந்ததைக் கம்பர் அழகாய் ஓரிடத்தில்
சொல்கிறார்:
ஒருகுரங்கு வந்து இலங்கையை மலங்கு எரி ஊட்டி,
திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, அரக்கியர் புலம்ப,
கருகு சேனைமாக் கடலையும்; கடலையும் கடந்து.
கண்ணன் தூது சொல்லும் பாரதக் கதை தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம்
அக்காலத்திலேயே பரவி இருந்தது
என்பதைக் கீழ்க்கண்ட சிலப்பதிகாரச் செய்யுள் காட்டுகிறது.
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செங் கமல
இரண்டு அடியான் மூ உலகும் இருள் தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற
படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே
திருவள்ளுவர் ஒரு திருக்குறளில் தூதுவருக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத
குணங்கள் அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை என்று ரத்னச் சுருக்கமாகச்
சொல்கிறார் .
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று .
இந்தக் குணங்கள் யாவும் கொண்ட ஒரு பெண்மணி பழந்தமிழ் நாட்டில்
இருந்திருக்கிறார். அவர்தான் ஔவையார்.
ஔவையார்...ஔவை யார்? ஔவையார் பெயரை அறியாத தமிழர்கள் இருக்க
முடியாது. ஆனால் ஔவையார் என்ற பெயரில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள்
மூன்று, நான்கு பேர்கள் என்பது பலருக்குத்
தெரியாமலிருக்கலாம். சங்க காலத்தில் (கி.மு.100-கி.பி.100) இருந்தவர்
முதல் ஔவை. அடுத்தாற்போல்,
நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. 700-900) வாழ்ந்தவர் இரண்டாம் ஔவை.
மூன்றாவது ஔவையார் கி.பி.12-ஆம் நூற்றா ண்டில் ஒட்டக்கூத்தர், கம்பர்
காலத்தில் வாழ்ந்து ஆத்திச்சூடி போன்ற நூல்களை இயற்றினார். மேலும்
வினாயகர் அகவல்
பாடியவர் மற்றுமோர் ஔவை என்பர் அறிஞர்.
முதல் ஔவை பாடிய 59 பாடல்களைச் சங்கத் தொகை நூல்களில்
பார்க்கலாம். வீரம், பொது வாழ்க்கை பற்றி 33 ப ¡டல்களும், காதல்,
குடும்ப வாழ்வு பற்றி 23 பாடல்களும் உள்ளன. அவற்றுள் புறநானூறில் உள்ள
ஒரு பாடலைப் பார்ப் போம்.
அதியமான் என்ற மன்னன் தொண்டைமான் என்ற இன்னொரு மன்னன் தன்னுடன்
போர் செய்ய ஆயத்தமாவதை அறிந்தான்.
அந்தச் சமயத்தில் போரை விரும்பாத அதியமான் சமரசம் பேசிச் சமாதானம்
செய்து கொள்ள விரும்பி, ஔ
வையாரைத் தொண்டைமானிடம் தூது அனுப்பினான். இக்காலத்தில் பல பெண்கள்
அரசியலில் இருப்பதையும், வேறு நாடு களுக்குத் தூதுவராகப் போவதையும்
பார்க்கிறோம். ஆனால் மிகப் பழங்காலத்தில் தமிழ் நாட்டைத் தவிர வேறெந்த
நாட்டுச் சரித்திரத்திலும் ஒரு அரசன் ஒரு பெண்மணியைத் தூது அனுப்பியதாக
நாம் படித்ததில்லை. அப்படிப்பட்ட பெருமையும், புத்திகூர்மையும்
வாய்ந்தவரே நம் ஔவையார்.
தொண்டைமான் ஔவையாரைத் தன் ஆயுதச் சாலைக்கு அழைத்துக் சென்று
பல்வேறு படைக்
கலங்களைக் காட்டி அவளுடைய கருத்தைக் கேட்கிறான். அவற்றைப் பார்த்து
அவ்வை பிரமித்து, அதியமான் போரில்
தோல்வி அடைவது நிச்சயம் என்று நினைப்பாள் என்பதே அரசனின் நோக்கம்.
அவ்வையின் நிலையோ மிக்க
கடினமானது. படைக் கலச்சாலையைப் புகழ்ந்தால், தன் புரவலனான
அதியமானின் பெருமைக்கு இழிவு. ஆயுதச் சாலையை இகழ்ந்தாலோ தொண்டைமானின்
கோபத்திற்கு இலக்காகக் கூடும். வீரப் பெண்மணியான ஔவையார் கூறுகிறார்:
"இவ்வே பீலியணிந்து மாலை சூடிக்
கண்திரள் நோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ "
" மன்ன! உன் ஆயுதச் சாலையைப் பார்வையிட்டேன். மயிற்பீலியும் மாலையும்
சூட்டப்பட்டு கைப்பிடிகள் நன்கு வலி¨ மயுடையதாய் அமைக்கப்பட்டு
நெய்யணிந்ததாய் காவலையுடைய உன் ஆயுதச் சாலையிலேயே உள்ளன. ஆனால் எங்கள்
அதியமானின் படைக்கலங்களோ போரிலெதிர்த்த பகைவர்களைக் குத்தி அதனால் முனை
மழுங்கி, பழுது பார்ப்பதற்காக ¦ கால்லன் உலைக்களத்திலே
கிடக்கின்றன"
எள்ளல்(irony), அங்கதம் (satire) என்பதற்கெல்லாம் ஒரு இலக்கணமாகத்
திகழ்கிறது அல்லவா இப்பாடல்?
போருக்குப் புதியவனான தொண்டைமானின் ஆயுதங்கள் வெறும் காட்சிபொருள்கள்
போல் அங்கு மிளிர, பல
போர்களில் வெற்றி பெற்ற அதியமானின் படைக் கலங்கள் உலையில் புத்துருவம்
பெறுகின்றன என்று கூறி,
அத்தகைய வீரனிடம் 'வாலாட்டாதே' என்று கூறாமல்
கூறினாள் ஔவை!இதைக் கேட்ட தொண்டைமான் அதியமான் மீது
படையெடுக்கும் முடிவை மாற்றிக் கொண்டான் என்று
வரலாறு கூறுகிறது.
சேது சமஸ்தான மகாவித்வான் ரா. இராகவய்யங்கார் சொல்கிறார்: "
இத்தகைய வீரம் ததும்பும் பாட
லைப் பகையரசனிடம் அவன் ஆயுதச்சாலையில் கூறியது ஒரு போர் வீரனன்று.
வீரமற்றவரென்று மக்கள் தவறாகக் கருதும் பெண்டிர்க் குலத்திற்கே ஒரு
திலகம் போன்று விளங்கும் ஔவையென்னும் கிழவி பாடியது. இப்பாடல் நம்
நாட்டு மங்கையர் ஒவ்வொருவரும் பொன் தகட்டில் பொறித்து நெற்றியில்
கட்டிக்கொள்ள வேண்டியதன்றோ!"
============
From:
http://sify.com/tamil/columns/fullstory.php?id=14833795
Pasupathy
16-1-09