*பா : நான்கு வகை. வெண்பா, ஆசிரியப்பா (அகவற்பா), கலிப்பா,
வஞ்சிப்பா.
பாவினம்: ;தாழிசை, துறை, விருத்தம். நான்கு பாக்களுக்கு இந்த மூன்றைப்
பொருத்தினால் மொத்தம் 12 பாவினம் வரும்.
குறள் வெண்செந்துறை
===================
* அளவொத்த இரண்டு அடிகள். அளவொத்தல் = ஓரடியில் எத்தனை சீர்
உள்ளதோ அத்தனை சீர் அடுத்த அடியிலும்
இருக்கவேண்டும்.
* எந்தத் தளையும் இருக்கலாம். எவ்வகைச் சீரும் வரலாம். எத்தனை சீர்கள்
வேண்டுமானால் வரலாம். ( பொதுவாக, கனிச் சீரையோ, நாலசைச்
சீரையோ இந்தப் பாவினக் காட்டுகளில் அதிகமாகப் பார்ப்பதில்லை.
நான்கு சீர் அடிகள் தான் அதிகமாய்ப் பார்க்கிறோம். )
* பொதுவில், இரண்டடியில் பொருள் முற்றுப் பெறும்; இந்த விதியை
நெகிழ்த்தி, கு.வெ.செ -யைப் பல அடிகளுக்குத் தற்காலத்தில் நீட்டலாம்.
*யாப்பருங்கலத்தில் உள்ள முதற்காட்டு:
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை. (முதுமொழிக் காஞ்சி)
குறிப்பு: அடி எதுகை இல்லை; முதல் அடியில் மோனை இல்லை.
* பிறகு, இரண்டு அடிக்கு ஒரு எதுகை ; அடி நடுவே மோனை
( அளவடியில் (நான்கு சீர் அடி) 3-இல்; அறுசீரில் 4; எண்சீரடியில்
5-ஆம் சீரில்) இவை சிறப்பு என்று உணர்ந்தனர்.
காட்டுகள்:
* 1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே -ஔவையார்
2) செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்(து)
அம்பொன் மேருவுக்(கு) அடிமுடி ஒன்றே --குமரகுருபரர்
3) மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே
விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக்
கண்ட மாதர் பெறுவது காமமே --சிவப்பிரகாசர்(17-ஆம் நூற்றாண்டு)
* காட்டுகளை அலகிட்டால், அளவொத்தல் என்பது 'இரண்டடிகளும் சீருக்குச் சீர்
ஓசையில் ஒத்துப் போகவில்லை ' என்பது தெரியும். ( இந்த உத்தியைப்
பின்னர் பயன்படுத்தி, இந்தப் படிவம் தாழிசை, கண்ணி போன்ற படிவமாய்
மலர்ந்தது என்றும் சொல்லலாம். இதற்குக் காட்டுகளையும் பார்க்கலாம். )
4) சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே
அருட்சபை நடம்புரி அருட்பெரும் சோதி
தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே -- வள்ளலார் (18-ஆம்
நூ.)
5) அம்மை அப்பனை ஆர்வ மாய்த்தொழ
இம்மை நற்பயன் எய்தும் திண்ணமே
பொறிவழிச் செல்லும் பொல்லா மனத்தை
அறிவால் அடக்கில் ஆனந்தம் ஆமே -- சிவயோக சுவாமிகள்
--(நற்சிந்தனை)
* எதுகை இன்றி, 1-3 மோனை மட்டும் உள்ள காட்டுகள்:
6) தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சம் கிடையாது பாண்டி வளநாட்டில் -- அல்லி அரசாணி மாலை
* 1-3 எதுகை பெற்று வந்த காட்டு .
7) ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வாளாம்
(தொடரும்)
=================
பின் குறிப்பு :
கு.வெ.செந்துறையை சுருக்கமாக 'குறள்துறை' என்றே சொல்லலாம். குறள்துறை,
ஒருவகைத் தாழிசை, கண்ணி இவற்றிற்கு
அதிகம் வேறுபாடில்லை. இன்னும், சோதனைகள் நடந்து கொண்டே
இருக்கின்றன. (உதாரணம், சிந்துகளில் இருக்கும் தனிச்சொல் )
அதனால், நாம் பெயரைப் பற்றி அதிகம் கவலைப் படக் கூடாது.
( பழங்காலத்தில் இவற்றைப் பற்றி பல வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன
என்பது தெரிகிறது. தொல்காப்பியர் சொன்ன இலக்கணத்திலேயே எல்லா
புதுமைகளையும் விளக்க நினைத்தவர் ஒரு பக்கம்;
பாவினம் என்ற கொள்கையினர் ஒருபக்கம். பெரிய அறிஞர்கள்
இருபக்கமும். )
ஓரடிச் செய்யுள் உண்டு. அதற்கு நூற்பா என்று பெயர்.
இரண்டடியைச் சிற்றெல்லையாக வைத்த வடிவம், குறள் வெண்பா.
அதனால், இந்த வடிவத்தை 'குறளுக்கு'த் துறையாக வைத்தனர் பாவினக்
கொள்கையார்.
வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.காட்டுகளைக் கவனமாகப்
பார்க்கவேண்டும். அதன் இலக்கணத்தைப் புரிந்து கொண்டு ,
அதே மாதிரி செய்தால் போதும். பெயர் முக்கியம் அன்று.
ஓசையுடன் எந்தக் கருத்தையும் சொல்ல நம் மரபு அனுமதிக்கிறது.
அது தான் உண்மை.
குறள் துறையில் 'இயைபு' கொணர்ந்தால் , அதுவும் புதுமைதானே?
இரண்டடியில் பொருள் முற்றுப் பெற்றால், அதுவும் சரியே.
முற்றுப் பெறாவிட்டாலும், அதுவும் சரியே ! வெண்டளையா,
சரி? இல்லையா, அதுவும் சரி! கட்டளை அடிகளா, அதுவும் சரி!
பசுபதி
* பிறகு இன்னும் கொஞ்சம் 'அதிகமாய் அளவொத்த' காட்டுகள். (அலகிடுக)
இவற்றைத், தனிச் சொல் இல்லாத, கண்ணிகள் என்றே சொல்லலாம்.
8) நன்றி யாங்கள் சொன்னக்கால்
. நாளும் நாளும் நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள்
. குடிலம் செய்து கொள்ளாரே. (யாப்பருங்கலம்..அறு சீர்)
9) மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ
. வணிககுலத் திலகமென வாழ்வளொரு மங்கை
எண்ணரிய குணமுடையாள்; இவள்வயிற்றி லுதித்தோர்
. இருமகளிர் ஒருபுருடர் என்னவவர் மூவர். (எண்சீர் )(
மனோன்மணீயம்)
* பாரதி பயன்படுத்திய ஒரு காட்டு . ( ஓரசைச் சீர் வந்திருப்பதைக்
கவனிக்கவும் )
10) இஇரட்டைக் குறள் வெண் செந்துறை
==========
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
. மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
. காற்றும் புனலும் கடலுமே நான். ..பாரதி...
* இன்னும் சில உத்திகள் .
11) சம்பந்தரின் மாலை மாற்று (Palindrme) ஒரு கு.வெ.செ
யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா
இவை 'கட்டளை' அடிகள் (எழுத்தெண்ணிக்கையில்... ஒற்றைக் கணக்கிடக்
கூடாது) 'தேமா தேமா தேமாங்காய்' என்னும் வாய்பாட்டுச் சீர்கள்
வருவதைக் கவனிக்கவும். ஒரடிக்கு 14 எழுத்துகள் .
12) பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டின் காப்புச் செய்யுளும் ஒரு கு.வெ.செ
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்மணி வண்ணாஉன் செவ்வடி செவ்வி திருக்காப்பு
ஒற்று நீக்கி 19 எழுத்துகள் வருவதைப் பார்க்கவும்.
கு.வெ. செ அடிகளுக்கு கட்டளை வேண்டியதில்லை; ஆனால் பாடுபவரின் திறம்
பொறுத்து கட்டளை பெறுதல் உண்டு என்று கொள்ளலாம்.
* கு.வெ.செ -வில் வெண்டளை வருதல். ( வெண்டளை வருதல் இந்தப்
பாவகையில் விதியன்று என்பதை நினைவிற் கொள்க.) இவற்றைக் கண்ணி என்ற
இசைப்பாடல் என்றும் சொல்ல வாய்ப்பு உண்டு.
13)பூமாது நாமாது போதசுக மாமாது
நாமேவு போரூர்ச் சரவண நாயகனோ -- சிதம்பர சுவாமிகள் (17-ஆம்
நூற்றாண்டு)
வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே --தாயுமானவர்
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே !
ஓசை அளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே ! --பாரதிதாசன்
14) பாரதியின் 'கண்ணன் -என் சேவகன்' ..இதுவும் வெண்டளை பயின்ற
கு.வெ.செ என்று சொல்லலாம். ( இதில் கடைசி அடி வெண்பா போல்
மூன்று சீராய் முடிந்திருந்தால்,
இது ஒருவகை வெண்பா (கலிவெண்பா) என்றே சொல்லியிருப்பர்.)
பசுபதி
*****
(தொடரும்)
=================
பின் குறிப்பு:
யாப்பிலக்கண நூல்களில் 'கு.வெ.செந்துறை' 'விழுமிய' பொருளுடையதாக
இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கும். தற்காலத்தில், இதை யார்
நிர்ணயிப்பது? ஆபத்தான வேலை!
(விழுமிய பொருள் சிறிதும் இல்லாத,) நான் படித்த ஒரு துணுக்கின்
கு.வெ.செ வடிவம்.
ராமன் விளைவு
=============
பசுபதி
பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் !
'இதற்கென்ன காரணம்?' என்றவர்க்(கு) உரைத்தார்:
"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"
ராமன் விளைவு= Raman Effect
~*~o0o~*~
அ)
நிலை மண்டில ஆசிரியப்பா
++++++++++++++++++++++++
ஒரு காட்டு:
சிலம்பு:
1)
"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்று...."
2)
வாழிய செந்தமிழ்!
=================
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இஇன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
(பாரதி)
-----
பாரதியின் பாடல் நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும். பார்த்தால், குறள்
வெண்செந்துறைகள் அடுக்கியபடி தோன்றுகிறது அல்லவா? இதன்
(தற்காலத்திற்கேற்ற) விதிகள்:
1) ஒவ்வோர் அடியிலும் 4 சீர்கள் ( அளவடிகள்) . ( நடுவில், சிற்சமயம்,
தனிச்சொல் வருவதுண்டு; காட்டுப் பிறகு)
2) குறைந்த அளவு மூன்று அடிகள்.
3) ஈரசைச் சீர்கள் வரும். அருகி மூவசைக் காய்ச் சீர் வரும்.
4) 1, 3 சீரில் மோனை சிறப்பு
5) இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகை சிறப்பு. (இது மிகக் கடினம். முடிந்தவரை,
எதுகை அமைத்து, அங்கங்கே அடி எதுகை இல்லாமலும் இயற்றலாம்) ( பாரதி
பாட்டில்: அறம் என்று தொடங்கும் அடியைப் பார்க்க)
6) ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
7) 'அகவல் ஓசை' இருக்கவேண்டும். ( கவிதைக் கருத்தை மனதில் கொண்டு,
ஈரசைச் சீர்களைப் பயன்படுத்தி ஆசிரியப்பா எழுதினால் இயற்கையாகவே,
ஆசிரியத்தளையும், வெண்தளையும்
விரவி வரும். கவிதை முழுதும் வெண்டளை வந்தால் பிறகு அதை ஆசிரியப்பா
என்று சொல்ல முடியாது! )
ஆ)
தனிச்சொல் பெற்றுவந்த நிலை மண்டில ஆசிரியம்.
===========
3)
காட்டு: பாரத மாதா நவரத்னமாலை
****************
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்
குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர்,
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திர னாகிய ரவிந்திர நாதன்
சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி"யென் றுரைத்தான்
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இஇதனால் படைஞர்தம்
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
(வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! )
---பாரதி-----
**************
(தொடரும்)
=======
பின் குறிப்பு:
--- parimels <parimels@y...> wrote:
>> >
> > 6) ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
> >>>
> ஓ, ஆய், என் எல்லாம் தற்காலத்துக்கு ஒத்து வராதா?
>
> (ஏகாரம் மட்டும் இருந்தா போரடிக்குமே அதுக்காகக் கேக்கறேன்.)
>
> -பரி
* ஏகாரத்தில் முடிவது சிறப்பு ; அதுவே பெரும்பான்மை மரபு. ( சிறப்பு
என்றால் மற்றவை வரக்கூடாது என்ற பொருளில்லை!)
(காரிகை உரை: "ஆசிரியப்பா நான்கிற்கும் 'ஏ' என்னும் அசைச் சொல்லால்
இறுவது சிறப்புடைத்து".) ( ஓ,என்,ஈ,ஆய்,ஐ ..என்ற மற்ற முடிவுகளையும்
சொல்கிறது யாப்பருங்கலம்) .
*ஒற்றுகளில் முடிவதற்கும் பழைய இலக்கணம் வழிகொடுக்கிறது.
( பாரதிதாசன் 'ல்' என்று ஒன்றை முடித்திருக்கிறார்.)
* பாரதியின் 'வந்தே மாதர'த்தில் 'ஐ' 'ஈ' 'இ' பார்க்கலாம் ;
கவிமணி தே.வி.பிள்ளையின் 'ஆசிய ஜோதி' பல அகவல்கள் கொண்ட ஒரு
நீண்ட கதை; அதில் நிலை மண்டில அகவல்களில் 'ஆ' 'ஏ', க, ம், ள்,ர்,ன்
என்ற ஈற்றுகளைப் பார்க்கலாம்.
நேரிசை அகவல்கள் எல்லாம் 'ஏ'காரத்தில் முடியும்.
பசுபதி
நேரிசை ஆசிரியப்பா
===============
நிலை மண்டிலம் மாதிரியே எல்லா விதிகளும். ஆனால், ஈற்றயலடி (கடைசி
அடிக்கு முதல் அடி)யில் மூன்றே சீர்கள் வரும்.
4)
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே.
யாய் = என் தாய்; ஞாய் = உன் தாய்;
எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை;
கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்.
(குறுந்தொகை)
5)
கடமை யாவன, தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உமையெனுத் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும், பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி, நின் இஇருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்ட
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.
(பாரதி)
*****
ஈ)
இன்னொரு வகை ஆசிரியப்பா
================
1, 3 சீர்களில் எதுகை வரும்; இதனால் தனியான, அழகான ஒரு ஓசை
எழும். இப்படிப்பட்ட ஆசிரியப் பாக்களில் இரண்டடிக்கு ஒரு எதுகை, அடிதோறும்
மோனையோ வேண்டியதில்லை.
காட்டு:
6)
......
இமைப்பொழு தேனும் தமக்கென அறிவிலா
ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை
எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை
இன்பம் எனவே துன்பம் இலையெனப்
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க
ஆதர வாகக் காதலும் அமைத்திட்டு
ஊகம் இன்றியே தேகம் நான்என
.....
(தாயுமானவர்)
உ)
இணைக்குறள் ஆசிரியப்பா
============
இடையிடையில் , இரு சீரடிகள், மூன்று சீரடிகள் வரும் ஆசிரியப்பா.
(முதலடியும், கடைசி அடியும் அளவடிகளாகவே இருக்கும்). இவ்வகையில்
தற்காலத்தில் பலர் இயற்றுவதில்லை. (குறிப்பு: இது , வடிவில், தற்காலப்
புதுக்கவிதை மாதிரி இருக்கும் !)
காட்டு: திருமுருகாற்றுப்படை; திருஞானசம்பந்தரின், நக்கீரரின்
திருவெழுக் கூற்றிருக்கைகள், பாரதிதாசனின் சில பாடல்கள் ( காட்டு:
கடற்மேல் குமிழிகள் 29 )
******************************
ஊ)
அடிமறி மண்டில ஆசிரியப்பா
==============
எல்லா அடிகளும் அளவடியாய்(நான்கு சீர்) வந்து, எந்த அடியை முதலில்
வைத்தாலும் பொருள் மாறாதபடி இருக்கும் ஆசிரியப்பா.
7)
தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி உரைத்தல் அறிஞர்தங் கடனே.
(புலவர் குழந்தை)
========
பசுபதி
(தொடரும்)
வஞ்சித் துறை
===========
* வஞ்சிப்பாவில் இருசீரடியும், முச்சீரடியும் வரும். அதன் இனமாக வருவது
வஞ்சித் துறை.
* இருசீர் கொண்ட அடி நான்கு என்பது வஞ்சித் துறையின் இலக்கணம். ஆனால்
சீர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கூறவில்லை இலக்கண நூல்கள்.சான்றுகளைப்
பார்த்துப் பழக வேண்டும்.
*சான்று:
அற்றது பற்றெனில்
உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே . (நம்மாழ்வார்)
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. (நம்மாழ்வார்)
மங்கை பங்கினீர்
துங்க மிழலையீர்
கங்கை முடியினீர்
சங்கை தவிர்மனே (சம்பந்தர்)
* கட்டளை அடிகளும் வரும்.
கல்லா நெஞ்சின்
நில்லான் ஈசன்
சொல்லா தாரோ
டல்லோம் நாமே ( சம்பந்தர் )--(அடிக்கு 4 எழுத்துகள்.)
ஓடும் புள்ளேறிச்
சூடும் தண்துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானை . ( நம்மாழ்வார்) -- (5 எழுத்துகள்.)
அரனை உள்குவீர்
பிரம னூருளெம்
பரனை யேமனம்
பரவி உய்ம்மினே. (சம்பந்தர் -- 6 எழுத்துகள்)
நீதியன் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே (நம்பியாண்டார் நம்பி - 7 எழுத்துகள்.)
*கம்பனின் சந்த வஞ்சித் துறை
உண்டநெ ருப்பைக்
கண்டனர் பற்றிக்
கொண்டணை கென்றான்
அண்டரை வென்றான்.
உற்றக லாமுன்
செற்றகு ரல்கைப்
பற்றுமி னென்றான்
முற்றுமு னிந்தான் ( அடிக்கு 5 எழுத்துகள்.)
(சந்தப் பாடல்களில் மோனையை உரிய இடத்தில் அமைப்பது கடினம்.
ஈற்றடியில் வரும் 'மு'வைக் கவனிக்கவும். வகையுளி வரும்.)
(தொடரும்)
========
பசுபதி
* முடுகியல் ஓசை (இருகுறில் இணைந்து வருவது) வரும் பாடல்கள் உண்டு.
வழிதரு பிறவியின்உறு
தொழிலமர் துயர்கெடுமிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணை அடிஇசைமினே ( நம்மாழ்வார் )
( கருவிளம், கருவிளங்கனி -- என்ற வாய்பாடு)
* அடி மறியாய் வருவதை வஞ்சி 'மண்டில'த் துறை என்றும்
சொல்வர்.
(காய், கனிச்சீர்கள்)
முல்லைவாய் முறுவலித்தன
கொல்லைவாய்க் குருந்தீன்றன
மல்லல்வான் மழைமுழங்கின
செல்வர்தேர் வரவுண்டாம் (யாப்பருங்கலம்)
* அந்தாதித் தொடை.
பாரதி 'கண்ணன் திருவடி' என்னும் பாடலில் எட்டு வஞ்சித் துறைப் பாடல்களை
அந்தாதி முறையில் பாடியுள்ளார்.
காட்டு: (முதல் இரண்டு மட்டும்):
கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே. ( நம்மாழ்வாரின் தாக்கம் கண்கூடு.)
தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.
* வஞ்சித் தாழிசை
ஒரே பொருளைப் பற்றி , மூன்று வஞ்சித் துறைகள் இயற்றினால், அவற்றை
'வஞ்சித் தாழிசை' என்று சொல்வர்.
இருவ ரும்எதிர்
பொருதும் வேலையின்
அருகு நின்றவர்
வெருவி ஓடினார். (1)
வாளி னால்ஒரு
தோளை வீழ்த்தஓர்
தோளி னாலவன்
வாளை இட்டனன். (2)
இட்ட வாள்கரம்.
ஒட்டித் தட்டிப்பின்
நட்ட மாகென
வெட்டி வீழ்த்தினான். (3) ( சூளாமணி)
வஞ்சி விருத்தம்
============
* முச்சீரடிகள் நான்கில் அமைவது வஞ்சி விருத்தம்.
சான்றுகள்:
========
*
திண்ணம் காணீர்! பச்சை
வண்ணன் பாதத் தாணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம். (பாரதி)
* மா, விளம், விளம் என்ற வாய்பாடு
கொந்தார் திருமகிழ் மார்பினர்
செந்தா மரையடி சேர்பவர்
தந்தா வளமுறை நாரணன்
அந்தா மந்தனை ஆள்வரே (மாறன் பாப்பாவினம்)
* புளிமா, கூவிளம், கூவிளம்
நரக வாதையில் வன்புறார்
தரணி மீதொரு கொன்பெறார்
சுரரு லோகமும் இன்புறார்
அருணை நாயகர் அன்பறார் ( எல்லப்ப நாவலர்)
(அடிக்கு 6 எழுத்துகள். )
* விளம், மா, மா என்ற வாய்பாடு
கூறுவார் கோடி பாவம்
நீறுமே நெஞ்சில் எண்ண
ஆறுவார் அகத்தில் ஈசன்
சேருமே சிந்திப் பாயே (சிவயோக சுவாமிகள்.)
* கருவிளம், தேமா, புளிமாங்காய்
உழையென வெங்கை உவப்பானார்
தழலுரு என்ற தரத்தாலோ
விழவெமை இன்று வெதுப்பாமே
லெழுமதி ஒன்றை எடுத்தாரே (சிவப்பிரகாசர்)
( அடிக்கு 10 எழுத்துகள் )
*இயற்சீர் வெண்டளை பயிலும் விருத்தம்
ஈடும் எடுப்புமில் ஈசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமென் அங்கம ணங்கே (நம்மாழ்வார்)
(அடிக்கு எட்டு எழுத்துகள்)
* சீர் வாய்பாடு வேறுபடினும், கட்டளை அடிகளாய்ப் பல
வஞ்சி விருத்தங்கள் அமையும்.
சுற்றினர் சுற்றி வளைத்தார்
பற்றினர் பற்றி மிதித்தார்
எற்றினர் எற்றி அடித்தார்
பற்றலர் சட்டினி ஆனார். (சுத்தானந்த பாரதி)
( அடிக்கு 8 எழுத்துகள்.)
*கம்பனின் சந்த வஞ்சி விருத்தங்கள்
===========================
*விருத்தம் -1
தத்தா தந்தன தந்தானா என்ற சந்தம்
கைத்தோ டுஞ்சிறை கற்போயை
வைத்தா னின்னுயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோ டொப்பது யாதுண்டே ! (கம்பன்)
*விருத்தம் -2
தத்தன தத்தன தந்தா என்ற சந்தம் .
பற்றுதிர் பற்றுதி ரென்பார்
எற்றுதி ரெற்றுதி ரென்பார்
முற்றினர் முற்றுமு நிந்தார்
கற்றுணர் மாருதி கண்டான் (கம்பன்)
*விருத்தம் -3
தான தந்தன தத்தனா என்ற சந்தம்
ஊனு வுயர்ந்தவு ரத்தினான்
மேனி மிர்ந்தமி டுக்கினான்
தானு யர்ந்தத வத்தினான்
வானு யர்ந்தவ ரத்தினான் (கம்பன்)
*விருத்தம் -4
தந்த தான தானனா என்ற சந்தம்
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையே
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன் (கம்பன்)
(1-3 மோனை)
பசுபதி
=========
(தொடரும்)
கலிவிருத்தம்
===========
* எல்லா விருத்தங்கள் போல் கலிவிருத்தத்திலும் நான்கு அடிகள் .
ஒவ்வொரு அடியிலும் 4 சீர்கள் . நான்கு அடிகளுக்கும் ஒரே எதுகை;
ஒவ்வோர் அடியிலும் 1-3 சீரில் மோனை இருப்பது சிறப்பு.
* சில காட்டுகள்:
கலி விருத்தம் -1
=============
விளம் விளம் மா கூவிளம் என்ற அமைப்பு
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில் ,
நெடில்+ஒற்று வராது)
சான்று:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசி வாயவே. (அப்பர் தேவாரம்)
* கம்பன் பாடிய மிகுதியான கலிவிருத்தங்கள் இந்த வகையே .
வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்
செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் . (கம்பன்)
கலிவிருத்தம் -2
===========
மா கூவிளம் கூவிளம் கூவிளம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே . (கம்பன்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
* விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில்
தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்.)
சான்று:
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ (கம்பன்)
* கம்பன் மிகுதியாகப் பாடிய இன்னொரு வகை இது.
*
கலி விருத்தம் -3
=============
மா கூவிளம் மா கூவிளம்
வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுனர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரையி லாமையால்
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால் (கம்பன்)
(தொடரும்)
பசுபதி
கலி விருத்தம் - 4
===========
மா புளிமா புளிமா புளிமா
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே . (கந்தர் அநுபூதி)
* இயற்சீர் வெண்டளை பயில்வதைக் கவனிக்கவும்.
*
கலி விருத்தம் -5
=============
விளம் விளம் விளம் மா
எறிந்தன எய்தன இடியுரு மெனமேல்
செறிந்தன படைக்கலம் இடக்கையின் சிதைத்தான்
முறிந்தன தெறுங்கரி முடிந்தன தடந்தேர்
மறிந்தன பரிநிரை வலக்கையின் மலைந்தான் (கம்பர்)
*
கலி விருத்தம் -6
=============
புளிமா புளிமா புளிமா புளிமா (சந்தக் கலிவிருத்தம்)
மலையே மரனே மயிலே குயிலே
கலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைநே டினிர்போய்
உலையா வலியா ருழைநீ ருரையீர் (கம்பன்)
கலி விருத்தம் -7
=============
காய் காய் காய் மா (சந்தக் கலி விருத்தம்)
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி
அஞ்சலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் (கம்பன்)
*
கலி விருத்தம் - 8
===============
கனி கனி கனி மா (சந்தக் கலி விருத்தம்)
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளை சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இவரே. (சம்பந்தர்)
=====
*
கலிவிருத்தம்- 9
===========
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
* அடிகளுக்குள் வெண்டளை இருக்கும் ; அடிகள் நடுவே தளை
பார்க்க வேண்டியதில்லை. இவ்வகையை 'வெண்டளையால் வந்த கலிவிருத்தம்'
என்று சொல்லலாம். வெண்டளை தவறாமல் மா, விளம், காய் ஆகிய சீர்கள்
எங்கும் வரலாம்.
கம்பர் 90-க்கு மேல் இப்படி பாடியுள்ளார்.
ஒரு காட்டு:
கிள்ளையொடு பூவை அழுத கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை அழுத உருவறியாப்
பிள்ளை அழுத பெரியோரை என்சொல்ல?
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்.
(அயோத்தியா. நகர் நீங்கு.96)
* இன்னும் பல வகைகள் உள்ளன. இலக்கியங்களில் பார்த்தறிக.
பின் குறிப்பு:
4-உம், 6-உம் ஒரே வகைதான் என்பதை எழுதி அனுப்பியபின் தான்
பார்த்தேன்.
அனுபூதியில்
தேமா புளிமா புளிமா புளிமா என்றும் வரும் .
ஆடும் பரிவேல் அணிசே வலென
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கரிமா முகனைச் செருவில்
சாடும் தனியா னைசகோ தரனே
1. வகை-1
*******
அரையடி = விளம் +மா + தேமா என்ற வாய்பாடு.
1,4 சீர்களிடை மோனை வருதல் சிறப்பு.
காட்டுகள்:
நீரிடை உறங்குஞ் சங்கம்
. நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு
. தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை
. துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்
. பொழிலிடை உறங்கும் தோகை
--கம்பன் --
* கம்பன் இவ்வகையைத் தான் அதிகம் பாடியிருக்கிறான்.
( கம்பனின் அறுசீர் விருத்தங்களில் 75% இவ்வகைதான்)
இதந்தரு மனையி னீங்கி
. இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
. பழிமிகுந் திடருற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
. விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
. தொழுதிடல் மறக்கி லேனே!
--பாரதி --
===========
இந்த வகையில் சிறிது வேறுபட்டிருக்கும் இன்னொரு வாய்பாடு :
அடி = காய் +மா+தேமா+விளம்+மா+தேமா
காட்டு:
தோள்கண்டார் தோளே கண்டார்
. தொடுகழற் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
. தடக்கைகண் டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
. வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
. உருவுகண் டாரை ஒத்தார்
--- கம்பன்==
(விருத்தங்களில் முதற்சீர் எந்த அசையோ, அதே அசையில் மற்ற அடிகளின் முதற்
சீர்களும் இருக்கவேண்டும். மேற்கண்ட விருத்தம் போல், முதலடியில் முதற்சீர்
தேமாங்காயாக வந்தால், மற்ற அடியின் முதற்சீர்களும் தேமாங்காயாக இருக்கவேண்டும் ;
கூவிளங்காய் வரக்கூடாது! )
=============
இன்னொரு வேறுபாடு: அரைஅடி = காய் +மா+தேமா
காட்டு:
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
. இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
. துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
. மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
. கால்வண்ணம் இங்குக் கண்டேன்.
---கம்பன் ---
( விருத்தங்களில், அருகி , விளத்திற்குப் பதிலாய் காயோ, காய்க்குப் பதிலாக விளமோ
வரும்.)
2. வகை-2
********
அரையடி = மா+மா+காய்
1,4 சீர்களில் மோனை வருதல் சிறப்பு.
வாழி யவன்றன் வளநாடு
. மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி
. ஒழியாய் வாழி காவேரி
ஊழி யுய்க்கும் பேருதவி
. ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன்
. அருளே வாழி காவேரி !
--சிலப்பதிகாரம்---
கடலோ மழையோ முழுநீலக்
. கல்லோ காயோ நறும்போதோ
படர்பூங் குவளை நாள்மலரோ
. நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மடவார் உயிர்உண்ப
. தியாதோ என்று தளர்வாள்முன்
மடல்சேர் தாரான் நிறம்போலும்
. அந்தி மாலை வந்ததுவே .
-- கம்பன் --
( நெடில் ஈற்று உள்ள கூவிளம் (கூவிளாம்?) (பானலோ) காய்க்குப் பதிலாய்ப்
பயன்படுத்தப் பட்டதைப் பார்க்கவும்)
பேயாய் உழலும் சிறுமனமே!
. பேணா என்சொல் இன்றுமுதல்
நீயாய் ஒன்றும் நாடாதே
. நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
. தருமம் எனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்;
. உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
--பாரதி ---
வெய்யிற்(கு) ஏற்ற நிழலுண்டு
. . வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
. . கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. . தெரிந்து பாட நீயுமுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. . வாழும் சொர்க்கம் வேறுண்டா?
-- கவிமணி தே.வி.பிள்ளை--
3. வகை-3
**********
அடி= நான்கு காய் + மா +தேமா
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்
. கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் பொருளைத்தான் கொடுத்துத்தான்
. இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோகத்தான்
. ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான்
. பண்ணி னானே !
-- இராமசந்திர கவிராயர் --
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதான
. தெங்கும் காணோம்!
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல்லப்
. பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
. நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
. செய்தல் வேண்டும்.
-- பாரதியார்---
கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே
. கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்நகையே அணிதந்த செந்தமிழே
. அன்பே கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்எழிலை
. ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல
. வாய்ப தைக்கும்
--பாரதிதாசன் --
* சிறிது வேறுபாட்டுடன், முதற்சீர்கள் மட்டும் விளமாய் (விளா) வருவதுண்டு.
எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தில்
. எரிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில்
. புகுத லோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின்
. றூசல் ஆடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் எனஉழந்தான் கடுந்துயரம்
. கால வேலான்.
--கம்பன் --
* பாரதியார் பாடிய அறுசீர் விருத்தங்களில் இவ்வகையே அதிகம்.
* இவ்வகையில் 1, 5- சீர்களில் மோனை வருதல் சிறப்பு. சில விருத்தங்களில்
1,3,5 -இலும் மோனை வந்து ஓசையில் சிறப்பதைப் பார்க்கலாம்.
* மற்ற சில வகைகளை வாய்பாடு மட்டும் சொல்லி நிறுத்துகிறேன்.
4. வகை 4:
அடி = ஆறு மா
5. வகை-5
அடி = மா+ கூவிளம் + விளம் மூன்று + மாங்காய்
6. வகை-6
அடி = மாச்சீர் 5 + மாங்காய்
(தொடரும் )
நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ
. நிறைநெடு மங்கல நாணோ
இலகுபூண் முலைமேல் ஆரமோ உயிரின்
. இருக்கையோ திருமகட் கினிய
மலர்கொலோ மாயோன் மார்பினன் மணிகள்
. வைத்தபொற் பெட்டியோ வானோர்
உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி
. உறையுளோ யாதென உரைப்பாம் .
--கம்பன் --
தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்
. தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப்
. பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
. புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
. அம்மையப் பாவினி யாற்றேன் .
-- வள்ளலார்--
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
. அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை
. பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கருமயோ கத்தில்
நிலைத்திடல் என்றிவை அருளாய்!
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
. குலவிடு தனிப்பரம் பொருளே
..பாரதி..
~*~o0O0o~*~
(தொடரும் )
இவ்விருத்த வகையில் பொதுவாய் 1,5 சீர்களில் மோனை இருக்கும்; அதுவே சிறப்பு.
1,3,5,7 சீர்களில் மோனை உள்ள சில விருத்தங்கள்/அடிகள் ஓசையில் இன்னும்
சிறந்திருப்பதையும் சில கவிதைகளில் காணலாம். நான்கு அடிகளின் முதற்சீர்கள்
ஒரே வகைக் காய்ச் சீர்கள் என்பதையும் கவனிக்கவும்.
1. அரையடி = காய்+காய்+மா+தேமா
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
. மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
. தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
. சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
. மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே !
-----உலகநீதி -------
எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா
. யானும்வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
. மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
. செய்யமணித் தாமரைநேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
. வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்
---பாரதி-----
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
. கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
. தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டால்
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
. மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
. தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.
-- பாரதிதாசன் ---
2. அரையடி = காய்+காய்+காய்+மா
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
. சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்
. தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
. எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !
. அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே !
--வள்ளலார் --
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
. முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் டோ டும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
. கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
. தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
. வளம்பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே .
--திருக்குற்றாலக் குறவஞ்சி--
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
. வயதுபதி னாறிருக்கும் ; இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
. புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
. தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ அடடா
. அழகென்னும் தெய்வந்தான் அதுவன்றே அறிந்தேன்
--பாரதி --
*சில காட்டுகள்:
1. கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவன் உயர்தோளான்
வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான்
கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னும் குறியுடையான்
--கம்பன் --
கலித்தளையும், வெண்டளையும் விரவிவந்த தரவு இது.
அடியெதுகை, அடியில் 1,3 சீர் மோனை இவற்றைக் கவனிக்கவும்.
2. ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்
மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே
ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்
பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே.
--தாயுமானவர்---
மூவசைச் சீர்கள் மிகுதியாகவும், சில ஈரசைச் சீர்களும் வந்து, வெண்டளை
பயிலும் தரவு இது.
3. பாயுமொளி நீஎனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீஎனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா
--பாரதி --
( கடைசி அடியில் , கனிச்சீர் அருகி வந்துள்ளது.)
4. வெள்ளைத் துகிலுடுத்து வெட்டிருந்த பட்டணிந்து
கள்ளக் குறிசிறிதும் காட்டா முகத்தினளாய்
அள்ளிச் செருகிவிட்ட அழகான கூந்தலுடன்
பிள்ளை மொழிவதெனப் பின்னுகின்ற சொற்பேசி
மெள்ளத் தலைகுனிந்தே மெல்லியலாள் நின்றிருந்தாள்
-நாமக்கல் கவிஞர்--
ஒரு ஐந்தடித் தரவு.
5. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த திருமேனி பாடுதும்காண் அம்மானாய்
-- மாணிக்கவாசகர்---
ஒரே விகற்பம் (ஆறு அடிகளுக்கும் ஒரே எதுகை) வெண்டளை பயிலும் ஆறடித் தரவு
இது. தலையாய எதுகையைக் கவனிக்கவும்.
6. திருப்பாவையும், திருவெம்பாவையும் ஒருவிகற்பத்தில் வெண்டளையால்
வந்த எட்டடித் தரவுகள்.
பின் குறிப்பு:
1. கேள்வி: நான்கடித் தரவிற்கும் கலிவிருத்தத்திற்கும் வேறுபாடுகள் யாவை?
பதில்: (கி.வா.ஜ "கவி பாடலாம்") தரவில் மாச்சீர், விளச்சீர்,
காய்ச்சீர் மூன்றும்
விரவி வரும். மாச்சீர் வரும்போது வெண்டளை அமையும். நான்கு சீரும்
காய்ச்சீராகவும்
வரலாம். ஓரடியில் மாச்சீர் வந்த இடத்தில் மற்ற அடிகளில் மாச்சீரே வரவேண்டும் என்ற
வரையறை இல்லை. கலிவிருத்தத்தில் அந்த வரையறை உண்டு. மூவசைச் சீர்களே
நான்கு வருவது கலிவிருத்தத்திற்கு அமையாது.
2. கி.வா.ஜ "கலிவிருத்தத்தில் அந்த வரையறை உண்டு" என்றதற்கு ஒரு
விதிவிலக்கு உண்டு! பாடல் படிவங்கள் -5 -இல் கலிவிருத்தம்-9 என்ற வகையைப்
பார்க்கவும்.
"வாரணம் ஆயிரம்" என்ற நாச்சியார் திருமொழி. மாச்சீர், விளம், காய் எல்லாம்
கலந்து, வெண்டளையில் வரும். *ஓர் அடியின் ஓர் இடத்தில் மாச்சீர் வந்தால் மற்ற
அடிகளின் அதே இடத்தில் மாச்சீர் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு* இங்கு இல்லை.
மற்ற கலிவிருத்த வகைகளில் இருக்கும் இந்தக் கட்டுப்பாடு இந்த வகைக்கு இல்லை
என்பதைக் கவனிக்கவும். இப்படி , நான்கடிகளும் வெண்டளை பயின்று, மா, விளம்,
காய் விரவி வந்தால் அதைக் கலிவிருத்தம் என்பதா? தரவுக் கொச்சகம் என்பதா? என்ற
கேள்வி எழலாம்; குறிப்பாக, "வாரணம் " என்ற செய்யுளையும் , இந்த மடலில்
உள்ள காட்டு-2 -ஐயும் ("ஏசற்ற") ஒப்பிடவும். மூவசைச் சீர்கள் அதிகமாக
இருப்பதால், "ஏசற்ற" தரவாகிறது; ஈரிசைச் சீர்கள் மிக்கதால், "வாரணம்"
கலிவிருத்தமாகிறது.
மேலும், வெண்டளையை இந்த இருவகைச் செய்யுள்களும் பயில்கின்றன என்பதுதான்
முக்கியமே அன்றி, அதன் பெயர்கள் அல்ல! ( பாடல் படிவங்கள்-5 -இல்
"வாரணம்" பாடலுக்குப் பின் நான் கொடுத்த கம்பனின் " கிள்ளையொடு" என்ற
காட்டில் காய்ச்சீர்களே அதிகம்! இதைக் கலிவிருத்தம் என்பதை விட,
வெண்டளையால் வந்த நான்கடித் தரவு என்று சொல்வதே மேலும் பொருத்தமாகத்
தோன்றுகிறது, இல்லையா? )
பசுபதி
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி.
கொல்லியந் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லிநம் மானுள் வருமே லவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.
--- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை ---
இவை, ஒரே பொருளின் மேல் அமைந்த,
வெண்டளை பயின்ற, நாற்சீரடிகள் கொண்ட பாடல்கள்.
( இதற்கும் நான்கு அடிகள் கொண்ட கலிவிருத்தத்திற்கும், மூன்றடி
வெண்பாவிற்கும் உள்ள தொடர்புகளை ஆய்ந்து அறிக.)
2. வலிய அடியேன் மனத்துவந் தெய்தினான்
மலியும் அமுதுணும் வானவர் தேடியே
மெலிய அணுகலா வெங்கையில் ஈசனே
-- சிவப்பிரகாசர், திருவெங்கைக் கலம்பகம்---
( இதனையும் நிலைமண்டில ஆசிரியப்பாவையும் ஒப்பிடுக.)
3. சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்
அத்தமு மாகலின் அனந்தன் கண்களே
உத்தம னைந்தெழுந் துருவம் காண்பன.
--குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட் கோவை ---
4. திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள் ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே !
--பாரதிதாசன், 'சங்கநாதம்'.
* அளவொத்த ஈரடிகளில் வரும் பாவினங்கள் பல உண்டு; அவை ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை தான். யாப்பில் நடந்த புதிய பரிசோதனைகளையே இத்தொடர்புகள்
காட்டுகின்றன. குறள் வெண்செந்துறை பிற்காலத்தில் சிந்துவாக வளர்ந்தது/இன்னும்
வளரும் என்று கூடச் சொல்லலாம். அதே மாதிரி, 'பரணித் தாழிசை'க்கும்
குறள்வெண்செந்துறைக்கும் தொடர்புண்டு. இரண்டும் அளவொத்த ஈரடிகள் தான்.
பழங்காலத்தில் கு.வெ.செ அறம் பற்றித்தான் இருக்கும்; பரணி வீரத்தைப்
பற்றி இருக்கும். மேலும், பரணித் தாழிசை விருத்தத்தின் செம்பாதி போல
இருக்கும். இந்த ஓசையே பரணித் தாழிசைக்கு ஒரு தனிப் பொலிவைத் தரும். கீழே
கொடுத்திருக்கும் காட்டுகளில் உள்ள ஓசையைக் கேளுங்கள்; வடிவத்தைப்
பாருங்கள். பெயர் அவ்வளவு முக்கியமில்லை!
பரணி இலக்கியங்களில் இரு சீரடித் தாழிசை முதல் பதினாறு சீரடித் தாழிசை வரை
காட்டுகள் கிடைக்கின்றன.
சில காட்டுகள்:
* இருசீரடித் தாழிசை
பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய்
மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவே . . தக்க யாகப் பரணி (த) . .
* முச்சீரடித் தாழிசை
முழங்கின முழங்கின முரசமே
தழங்கின எதிர்எதிர் சங்கமே .. த ..
( இதை வஞ்சி விருத்தத்தில் பாதி எனலாம்)
* நாற்சீரடித் தாழிசை
அ) பூவைத் தாலும் புகுதற் கரும்பொலங்
காவைத் தாலைந்து சோலை கவினவே. .. த ..
இவை கட்டளை அடிகள். நேர் அசையில் தொடங்கினால் 11 எழுத்துகளும் ,
நிரையில் தொடங்கினால் 12 எழுத்துகளும் வரும். முதல் சீருக்கும், இரண்டாம்
சீருக்கும் இடையே நேரொன்றாசிரியத் தளை ( மாவைத் தொடர்ந்து நேர்.)
அடியில் மற்றபடி வெண்டளை பயிலும். ( கலிவிருத்தம் வகை-2 -ஐப் பார்க்கவும் )
(இப்படிப் பட்ட அடிகள் இரட்டித்தால் ... அல்லது கலிவிருத்தம்-2 அடிகள்
இரட்டித்தால்... கட்டளைக் கலிப்பா என்ற வடிவம் வரும் என்பதைப் பின்னால்
பார்க்கலாம். )
ஆ) அடி = காய் + காய் + காய் + மா
அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார்
நகவனசம் மலர்குவிய வலம்வருவர் நகரே. . . த . .
இ) அடி = கனி +கனி + கனி + மா
அலைநாடிய புனல்நாடுடை அபயற்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின் . . கலிங்கத்துப் பரணி (க) . .
இதைக் கலிவிருத்தம்-8 -இன் பாதி என்று சொல்லலாம்.
இப்படியே பலவகைக் கலிவிருத்த வாய்பாடுகளிருந்து பரணித் தாழிசை
வடிவங்களைப் பெறலாம். (அல்லது நாற்சீரடிப் பரணித் தாழிசைகளை இரட்டித்துக்
கலிவிருத்தப் படிவங்கள் பெறலாம். )
* ஐஞ்சீரடித் தாழிசை
சதகோடி விததாள சதிபாய முகபாகை குதிபாய்கடாம்
மதகோடி உலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம். . . த . .
இதில் அடி = நான்கு புளிமாங்காய் + புளிமாங்கனி . 21 எழுத்துகள் கொண்ட
கட்டளை அடி.
அடி= நான்கு ஈரசைச் சீர்கள் + மூவசைச் சீர் என்றும் வரும்.
(காட்டு)
பொங்க மளிபுண ரித்துயில் வல்லி புறங்கடையில்
சங்கம் அளிப்பன ரத்னவி தஞ்ச தகோடியே . . த . .
இந்த வகை இரட்டித்தால் கலித்துறை என்ற பாவினம் வரும் என்பதைப் பின்னர்
பார்க்கலாம்.
* அறுசீரடித் தாழிசை
முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ . . க . .
* எழுசீரடித் தாழிசை
விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
. வெகுளி மென்குதலை துகிலினைப்
பிடிமின் என்றுபொருள் விளைய நின்றருள்செய்
. பெடைந லீர்கடைகள் திறமினோ . . . க . .
இதில் 25 எழுத்துகள் கொண்ட கட்டளை அடிகள் இருப்பதைப் பார்க்கவும்.
* எண்சீரடித் தாழிசை
விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
. மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே உண்ணப்
. பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின் . . க . .
* பரணிகளில் பதின்சீரடி, பன்னிருசீரடி, பதினாறு சீரடிச் சந்தத் தாழிசைகளுக்குப்
பல காட்டுகள் உள்ளன; பார்த்தறிக.
~*~o0O0o~*~