-பசுபதி
1. அறிமுகம்
கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது! உணர்ச்சியும், கற்பனையும்
ஒருங்கிணைந்து மனத்தில் எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள்.
ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர, ஒரு நல்ல வடிவில்
கவிதையை அமைக்கக் கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி.
பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை. தற்காலத் திரை இசைப்
பாடல்களிலும், பல புதுக் கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப்
பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர்
கண்டுபிடித்த ஒரு அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை
யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம் நமக்கும் உதவும்.
திறமையுடன் வானில் திரியத் துடிக்கும்
பறவைக்குத் தன்சிறகேன் பாரம்? -- செறிவுடனே
தொய்விலா ஓசையுடன் சொல்லுலகின் மேல்பறக்கச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.
பறவைகள் வேறுபடும் பாய்ச்சலில்; கோல
இறகுகள் வண்ணம் இறைக்கும் ! -- சிறப்புடனே
ஒய்யாரம் தந்துபல ஓசை உணர்த்திடச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.
பாப்புனையும் யுக்தி பலவற்றை உள்ளடக்கும்
யாப்போர் மரபணு ஆகுமன்றோ? -- மூப்பிலா
வையமாம் தென்னிசை வானில் உயர்ந்திடச்
செய்யுளுக்கு யாப்பே சிறகு.
2. கவிதை உறுப்புகள்
மரபுக் கவிதை இலக்கணத்தைச் சில எளிய பாடங்கள் , பயிற்சிகள் மூலமாக
முதலில் பயில்வோம். பின்னர் வெவ்வேறு பாடல் படிவங்களுக்குக் காட்டுகளாக
மரபிலக்கியப் பாடல்களை அலசுவோம்.
முதலில் ஒரு பாடலைப் பார்ப்போம். மரபுக் கவிதையில் ஓசை நயம் முக்கியம்.
அதனால், உரக்கப் படியுங்கள். ஓசை தானே வெளிப்படும்!
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
. . வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
. . கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. . தெரிந்து பாட நீயுமுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. . வாழும் சொர்க்கம் வேறுண்டா? ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
கவிஞன் ஒருவன் இதைப் பார்த்தவுடன் என்ன சொல்வான் ?
"இந்தக் கவிதையில் நான்கு 'அடி'கள் உள்ளன; எட்டு 'வரி'கள் உள்ளன. ஒவ்வொரு
வரியிலும் மூன்று பகுதிகள் உள்ளனவே, அவை 'சீர்'கள் எனப்படும். அதனால்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன என்பது தெரிகிறது. 'வெய்யிற்'
'கையிற்' 'தெய்வ' 'வையம்' இந்த நான்கு சீர்களும் ஒரே 'எதுகை' உள்ளவை. ஒரே
எதுகை உள்ள நான்கு அடிகள் கொண்டிருப்பதால், இந்தப் பாடலுக்கு விருத்தம்
என்று பெயர். மேலும், ஒவ்வோரு அடியிலும் ஆறு சீர்கள் இருப்பதால், அறுசீர்
விருத்தம் என்று இதைச் சொல்லலாம். ஒவ்வொரு அடியிலும் , முதல் சீரின்
முதல் எழுத்தும், நான்காம் சீரின் முதல் எழுத்தும் ஓசையில் ஒத்துப்போவதை
'மோனை' என்போம். அதாவது, ' வெ''வீ' மோனை எழுத்துகள்; அதேபோல், 'கை', 'க'
; 'தெ''தெ' ; 'வை' 'வா' ; -- இவை யாவும் மோனை இரட்டையர். தொடுப்பது தொடை;
கவிதையில் அழகான ஓசை எழக் காரணமாக இருக்கும் 'எதுகை' 'மோனை' இரண்டையும்
'தொடை' என்று சொல்வர். ஒவ்வொரு சீரையும் 'அசை' களாகப் பிரித்தால், இந்தக்
கவிதையின் இலக்கணம் புலப்படும். காட்டாக, 'வெய்யிற்' என்ற சீரை வெய்-யிற்
என்று இரு 'அசை'களாகவும், 'நிழலுண்டு' என்ற சீரை 'நிழ-லுண்-டு ' என்று
மூன்று அசைகளாகவும் பிரிக்கவேண்டும். ஒவ்வோரு 'அசை'யையும் மேலும்
பிரித்தால் மெய், உயிர்மெய் போன்ற 'எழுத்து'கள் தெரிகின்றன. "
கவிஞன் மேற்கண்ட விருத்தத்தைப் பிரித்தது (அலகிட்டது) போல், பல மரபுக்
கவிதைகளையும் பிரித்துப் புரிந்து கொள்ள முயல்வதே இந்தத் தொடரின் முதல்
நோக்கம்! அலகிடத் தெரிந்தால், பல பாடல் வகைகளின் இலக்கணத்திற்கேற்ப
'எழுத்து'களைச் சேர்த்து 'அசைகளையும், 'அசைகளை'ச் சேர்த்துச்
சீர்களையும், சீர்களைக் கொண்டு அடிகளையும், மேலும் எதுகை, தொடை போன்ற
நயங்களையும் சேர்த்து எப்படி நாமும் எழுதலாம் என்பதைக் காட்டுகள் மூலம்
பார்ப்பதே இந்தத் தொடரின் இரண்டாம் இலக்கு.
'எழுத்து', 'அசை' 'சீர்' 'அடி' 'தொடை' இந்த ஐந்தைத் தவிர, பல
கவிதைகளுக்கு வேண்டிய இன்னொரு முக்கிய உறுப்பு 'தளை' ; ஒரு சீருக்கும் ,
அதைத் தொடர்ந்து வரும் சீருக்கும் உள்ள ஓசைப் பந்தத்தைக் குறிப்பது தளை.
அதைப் பற்றிப் பின்னர்ப் பார்ப்போம்.
அழகுத் தமிழிறைக்(கு) ஆறுமுகம் போல
எழுத்(து),அசை சீர்,தளை ஏற்ற அடி,தொடையென்(று)
ஆறங்கங் கொண்ட அருமைக் கவிதையை,
கூறச் சுவைதரு(ம்) ஓசை குறையாமல்
காப்பாற்றிக் காவல்செய் கன்னி, தமிழழகி
யாப்பிற்கு மூப்பென்ப தேது.
(தொடரும்)
( from: http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930
)
- பசுபதி
3. எழுத்துகள்
யாப்பிலக்கணத்தில் நாட்டமுள்ளோர் ஓர் அடிப்படைத் தமிழிலக்கண நூலையும்,
ஒரு நல்ல தமிழகராதியையும் கையில் வைத்திருத்தல் நலம். (சில காட்டுகள்:
'நற்றமிழ் இலக்கணம்' ,சொ.பரமசிவம் ; 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?'
,அ.கி.பரந்தாமனார்; 'கழகத் தமிழ் அகராதி' திருநெல்வேலி, தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; லிப்கோ தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி.)
உரைநடை இலக்கணத்திற்கும், கவிதை இலக்கணத்திற்கும் பொதுவான அம்சங்களே
அதிகம்; சில சமயங்களில் உரைநடை இலக்கணம் கவிதையில் நெகிழ்த்தப் படுவது
உண்டு. ( காட்டு: 'ஓர்', 'ஒரு' பயன்படுத்தும் விதிகள்.)
'எழுத்துகள்' பற்றி யாவருக்கும் தெரிந்த சில அடிப்படைகளை, இப்போது
யாப்பிலக்கணக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
எழுத்துகளைப் பலவகையாகப் பிரிப்பதை நாம் அறிவோம். உயிர் (12), மெய்(18)
உயிர்மெய் (216) , ஆய்தம்(1) என்ற நான்கு வகைகள் மொத்தம்
247 தமிழ் எழுத்துகளைத் தருகின்றன. மேலும், வல்லினம், இடையினம்,
மெல்லினம் என்ற பாகுபாட்டையும் அறிவோம். ஆனால், முதல் நிலை யாப்பிலக்கணப்
பயிற்சிக்கு நாம் அறியவேண்டியது மூன்றே வகைகள் தாம்! அவை குறில், நெடில்,
ஒற்று .
மெய்யெழுத்துகள் (புள்ளி வைத்தவை) க், ச், . . ,ன்; இவை ஒற்றுகள்
எனப்படும். ஆய்த எழுத்து உயிரும் இல்லை, மெய்யும் இல்லை என்று கருதி
அதைத் 'தனிநிலை' எழுத்து என்பர். ஆனால், பல இடங்களில் ஆய்தம்
மெய்யைப்போலவே ஒலிக்கும்.
உயிர் எழுத்துகளில் : அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ,
ஓ, ஔ இவை ஏழும் நெடில்.
க், ச் . . போன்ற 18 மெய்யெழுத்துகளுடன் ஐந்து உயிர்க்குறில்கள்
சேர்ந்தால் விளையும் க, கி, . . ,சி, போன்ற உயிர்மெய் எழுத்துகளெல்லாம்
குறில். அதே மாதிரி, மெய்யெழுத்துகளுடன் ஏழு நெடில் உயிரெழுத்துகள்
சேர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துகள் நெடில்.
பின்னர் வரும் சில நுட்பங்களுக்கு ஒர் அறிமுகம்:
* 'அ+இ' சேர்ந்து 'ஐ' ஆயிற்று என்பர். 'அ+உ' சேர்ந்தது 'ஔ' என்பர்.
'ஐ' நெடிலானாலும், பொதுவாகச் சீர்களின் இடையிலும், கடையிலும் குறில் போல
உச்சரிக்கப்படும் என்பதைப் பார்ப்போம். ( 'குழந்தையோ' என்பது 'குழந்தயோ'
என்றே ஒலிக்கும்.) இது 'ஐகாரக்
குறுக்கம்' எனப்படும். அதேபோல், பல முறை 'ஐ' 'அய்' போல் ஒலிக்கும்,
'ஔ' 'அவ்' போல் ஒலிக்கும் என்பதையும் பார்ப்போம். 'ஔவையார்'
'அவ்வையார்' என்றும், 'ஐயர்' அய்யர்' என்றும் வருவது நமக்குத்
தெரியுமே?
* தற்காலக் கவிதைகளில் ஆய்தம் அதிகமாகப் பயன்படவில்லை எனினும், பழம்
பாடல்களில் ஆய்தம் சிலசமயம் மெய்யாகவும், சிலசமயம் குறிலாகவும் ஒலிக்கும்
என்பதைப் பின்னர்ப் பார்ப்போம்.
* சொற்கள் சேரும்போது நடுவில் சில ஒற்றுகள் .. க், ச், த், ப் . .
சந்தி விதியால் தோன்றலாம். இவை பொருளை வேறுபடுத்துவதுடன், சீர்களைப்
பிரிப்பதிலும் வேறுபாடுகளைக் கொடுக்கும். 'முத்து கவிதை' என்றால் 'முத்து
என்பவரின் கவிதை' என்று பொருள்; 'முத்துக் கவிதை' என்றால் 'முத்தைப்
போன்ற கவிதை' என்று பொருள் ! இப்படிப்பட்ட புணர்ச்சி விதிகளை நல்ல
தமிழிலக்கண நூல்களில் படிப்பது நலம்.
* குறில், நெடில், ஒற்று என்ற மூவகை எழுத்துகள் தற்போது நமக்குப்
போதுமெனினும், மிகக் கடினமான 'திருப்புகழ்' போன்ற வண்ணப் பாடல்களில்
இவற்றின் இனங்களையும் . . வல்லினமா, இடையினமா, மெல்லினமா என்று . . நாம்
கவனிக்க வேண்டி வரும்.
* சீர் பிரிக்கப்பட்டுச் சரியாக எழுதப் பட்டிருக்கும் கவிதையைப்
பார்த்தால், எந்தச் சீரும் பொதுவாக ஒற்றில் தொடங்காது என்பதைப்
பார்ப்பீர்கள். விதிவிலக்காக, சில பாடல்களில் ( 'த்யாகா சுரலோக சிகாமணியே
!, கங்கா நதிபால க்ருபாகரனே! - கந்தர் அனுபூதி) மெய்யில் தொடங்கும்
சீர்கள் வரும்.
பயிற்சிகள்:
3.1. தமிழ் எழுத்துகளில் எத்தனை குறில் ? எத்தனை நெடில்? எத்தனை
ஒற்றுகள்?
3.2. குறிலுக்கு ஒரு மாத்திரை; நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள்,
மெய்யிற்கு அரை மாத்திரை என்று நூல்களில் படிக்கிறோம். 'மாத்திரை'
என்றால் என்ன?
3.3. தமிழ்ச் சொற்களில் எந்த எழுத்துகள் முதலில் வரும்? எவை வாரா?
3.4. 'தமிழ்' என்ற சொல்லில் மூன்று இனங்களும் உள்ளன. இதேமாதிரி,
மூவினங்களும் வரும் சில மூன்றெழுத்துச் சொற்களை எழுதுக.
3.5 'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்ற வாக்கியத்தில் உள்ள
குறில்கள் எவை? நெடில்கள் எவை? இதுபோல இன்னும் சில வாக்கியங்களை எழுதுக.
3.6 ' ராமா! நேரே பார்க்காதே! ' இந்த வாக்கியத்தின் விசேஷம்
என்ன? இதுபோல இன்னும் சில வாக்கியங்களை எழுதுக.
3.7 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்று தொடங்கும் தேவாரத்தை
முழுதும் எழுதி, அதில் எந்த வகை எழுத்து *இல்லை* என்று சொல்லவும்.
இம்மாதிரிப் பாக்கள் இசைப் பாடலுக்கு அனுகூலமா? ஆராய்க.
3.8 'அளபெடை' என்றால் என்ன? இதற்கும் இன்னிசை மேடைகளில் நாம்
கேட்கும் 'சங்கதிகளுக்கும்' தொடர்பு உண்டா? ஆய்ந்தறிக.
***
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402
)
- பசுபதி
(முந்தைய பகுதிகள்: 1, 2)
4. நேரசை
அசைகள் மரபுக் கவிதைகளின் ஜீவநாடிகள் .
எழுத்துகள் சேர்ந்து எழுப்பும் ஓசையையும், இசையையும் அறிவியல் வழியில்
ஆராய நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பொக்கிடங்களே அசைகள். எழுத்துகளை
'அசை'ப்பதால் வருவது 'அசை'.
நேரசை, நிரையசை என்று இருவகைகள் உண்டு. இவையே யாப்பிலக்கணத்தின்
அஸ்திவாரங்கள். இவற்றை நன்றாகப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அசைகளை
ஆங்கிலத்தில் 'metric syllables' என்று சொல்லலாம்.
முதலில் நேரசை என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.
நேரசை பொதுவாக நான்கு வகைகளில் வரும் :
1) தனி நெடில்
( போ ; 'வாளி' என்ற சொல்லில் 'வா')
2) தனிக்குறில் (பொதுவாக, இது சீரின் கடைசியில் தான் வரும் )
( 'வாளி' என்ற சொல்லில் 'ளி' . 'காடு' என்ற சொல்லில் 'டு' )
3) நெடில்+ஒற்று(கள்)
( கார் ; வாள்; 'வார்ப்பு' என்ற சொல்லில் 'வார்ப்' )
4) குறில்+ஒற்று(கள்)
( 'கர்த்தன்' என்ற சொல்லில் 'கர்த்' 'தன்' இரண்டும் நேரசைகள்.)
இந்த நான்கு வகைகளிலும் ஓர் உயிரெழுத்து மட்டுமே இருப்பதைப் பாருங்கள்.
அதனால் , 'நேரசையை' 'ஓருயிர்' அசை என்றும் சொல்லலாம்.
இதை விளக்க இரண்டு எடுத்துக் காட்டுகள்:
1) வாலி வந்தான் என்ற வாக்கியத்தில் இரு சொற்கள் உள்ளது. ஒவ்வொரு
சொல்லையும் அசை பிரித்துப் பார்த்தால் (இதற்கு அலகிடுதல் (scanning)
என்று பெயர்), நான்கு வகையான நேரசைகளும் வகைக்கொரு முறை வருவதைப்
பார்க்கலாம். எப்படி?
வா -தனி நெடில் ; லி - தனிக் குறில் ; வந் - குறில்+ஒற்று ; தான் -
நெடில்+ஒற்று .
2) 'பார்த்துப் போக வேண்டும் ' ..என்ற சொற்றொடரில் மூன்று பகுதிகள்
உள்ளன; இவற்றைச் சீர்கள் என்று சொல்லலாம். மூன்று சீர்களுள்ள இந்த
வாக்கியத்திலும் 'பார்த்' - நெடில்+ஒற்றுகள் ; 'துப்' - குறில்+ஒற்று
;'போ'- தனி நெடில் ; 'க' -தனிக் குறில் ; 'வேண்'-நெடில்+ஒற்று ;
'டும்' -குறில்+ஒற்று . . யாவும் நேரசைகள் ! ( ஒவ்வொரு சீரையும்
தனித்தனியாக அலகிடவேண்டும். சீர்களைச் சேர்த்து அலகிடக் கூடாது! )
'பார்த்துப் போக வேண்டும் ' என்பதை 'பார்த்/துப் போ/க வேண்/டும் '
என்று அசை பிரித்து எழுதலாம். ( எந்த இடங்களில் ' / ' போடுவது என்று
கண்டுபிடிப்பதே அசை பிரித்தல்; அலகிடுதல்!)
இதிலிருந்து நாம் (தோராயமாக) அறிந்து கொள்வது : நேரசை என்றாலே ஓருயிரைக்
குறிக்கும் . ( நேர் என்றால் 'தனிமை' என்று ஒரு பொருள்; அதனால் நேரசையைத்
'தனியசை' என்றும் சொல்வர்). யாப்பிலக்கணத்தில் ஒற்றுகளுக்கு மதிப்புக்
கிடையாது ! அதனால், 'பா' என்றாலும் , 'பார்' என்றாலும், 'பார்த்'
என்றாலும் , யாவும் நேரசையே! ( ஆனால், ஒரு சீரில் ஒற்றுகள் எப்படி
அசைகளைப் பிரிக்கின்றன என்பதையும் காண்க).
'நேர்' என்ற பெயரே நேரசையின் தன்மையை நமக்குச் சொல்லும் ஒரு நினைவுச்சொல்
(வாய்பாடு) (mnemonic) . ( இந்த நினைவுச் சொல்லைப் பார்த்து, 'ஓஹோ,
நேரசையென்றால் நெடில்+ஒற்று மட்டும் தானா?'என்று நினைக்கக் கூடாது.
நான்கு வகைகளிலும் நேரசை வரும்! 'வாலி வந்தான்' என்ற வாக்கியத்தை
மனத்தில் வைத்துக் கொண்டால், நான்கு வகை நேரசைகள் எவை என்பது எளிதில்
விளங்கும். ) 'நாள்' என்ற நினைவுச் சொல்லையும் நேர் அசைக்குப்
பயன்படுத்துவது உண்டு.
பயிற்சிகள் :
4.1 ஆபத்து, ஆயர்பாடி, கண்ணாடி, காட்டேரி, காவற்சோலை, சந்தானம்,
சோமாஸ்கந்தர், பேரானந்தம், மெய்ப்பித்தல், வாக்குண்டாம் ; இச்சொற்களை அலகிடுக.
4.2 போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதர் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே .
இது ஒரு ஆசிரியப்பா; 'யாப்பருங்கலக் காரிகை' ( சுருக்கமாக,
'காரிகை') என்ற யாப்பிலக்கண நூலில் வரும் ஓர் உதாரணச் செய்யுள்.
இதில் வருபவை எல்லாம் நேரசைகளே! அலகிட்டுப் பார்க்கவும்.
4.3
தக்கன் வேள்விப்
பொக்கந் தீர்த்த
மிக்க தேவர்
பக்கத் தோமே . (தேவாரம்)
என்ற பாடலை அலகிடுக.
4.4 வா/லி வந்/தான். இப்படிச் சில சொற்றொடர்களை எழுதுக. ஒவ்வொரு
சொற்றொடரிலும் ஒவ்வொரு வகை நேரசையும் ஒருமுறைதான் வரவேண்டும். (இந்தச்
சொற்றொடரில் இரு வகைகள் குறில்+ ஒற்று , நெடில்+ஒற்று என்ற காட்டுகளாக
வந்திருக்கின்றன. ஆனால், நீங்கள் எழுதும் உதாரணங்களில், இந்த இரு அசை
வகைகளைக் குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றுகள் வந்தாலும் தவறில்லை. )
(தொடரும்)
from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787
)
- பசுபதி
(முந்தைய பகுதிகள்: 1,2,3)
5. நிரையசை
நிரையசை பொதுவாக நான்கு வகையாக வரும் :
1)குறில்+குறில்
( பரி; கொடு)
2)குறில்+நெடில்
(சுறா, கனா)
3)குறில்+குறில்+ஒற்று(கள்)
(பரண், படம்)
4)குறில்+நெடில்+ஒற்று(கள்)
(விரால், மகான்)
நேரசையின் இலக்கணத்தை மனத்தில் வைத்துப் பார்க்கும்போது, நிரையசை
'ஈருயிர்கள்' வரும் அசை என்று புரிகிறது. 'நிரை' என்ற சொல்லே அதற்கு ஒரு
நினைவுச் சொல் என்பதும் தெரிகிறது! ( 'மலர்' என்ற சொல்லையும் நிரையசைக்கு
ஒரு குறியீடாகப் பயன்படுத்துவர்.)
ஒரு காட்டு:
பரி/மளா பதுங்/கினாள் . இதில் நான்கு வகை நிரையசைகளும் ஒவ்வொரு முறை
வருவதைப் பார்க்கலாம்.
பரி - குறில்+குறில் ; மளா - குறில்+நெடில்; பதுங் - குறில்+குறில்+ஒற்று
; கினாள்- குறில்+நெடில்+ஒற்று
( குறிப்பு: 'ப' என்பது குறிலாயிற்றே, அதனால் பரிமளா என்பதை ப/ரி/ம/ளா ..
நேர், நேர், நேர்,நேர் என்று அலகிட வேண்டுமோ என்ற கேள்வி எழலாம்; 4-ம்
பாடத்தில் சொன்னபடி, *தனிக் குறில்* , பொதுவில், சீரின் முதலிலோ, இடையிலோ
நேர் அசையாகாது ; எல்லா அசைகளும் அலகிடப் பட்டபின், சீரின் கடைசியில்
வரும் தனிக் குறில் தான் நேர் அசையாகும்! அதனால் சீர்முதலிலும்,
இடையிலும் வரும் குறில்களை அடுத்து வரும் எழுத்து(கள்) உடன் சேர்த்துத்
தான் அலகிடவேண்டும். அதனால் பரி/மளா என்றே சொல் அலகிடப் படுகிறது. சில
பாடல்களில் , சில பெயர்களை 'இடைவெளி' விட்டு நாம் உச்சரிக்கிறோம் அல்லவா
? உதாரணமாக, வ. உ. சி என்போம். ஒவ்வொரு எழுத்துக்கும் பின் இடைவெளி
இருப்பதால், இத்தகைய சொற்களை வ/உ/சி = நேர் நேர் நேர் என்று பிரித்து
அலகிடுவோம். இத்தகைய காட்டுகள்/விதிவிலக்குகள் இருந்தாலும், சீரின்
முதலிலும், இடையிலும் வரும் தனிக் குறில்கள் நேர் அசையாகா என்ற பொது
விதியை இப்போது மனத்தில் வைத்தால் போதும்!)
நேரசையில் வந்தது போல், நிரையசையிலும் அசையின் இறுதியில் ஓர் ஒற்று
வந்தாலும், இரண்டு ஒற்றுகள் வந்தாலும் சரி. அசையின் குணம் மாறாது!
'சராய்' என்ற சொல்லும், உராய்ந்து என்ற சொல்லில் 'உராய்ந்' என்ற
பகுதியும் இரண்டுமே நிரையசைகள் தாம்.
சில குறிப்புகள்:
* நிரையசை குறிலில் தான் தொடங்கும்.
* சிவா = நிரை ; இச் சொல்லைத் திருப்பி எழுதினால், வாசி = வா/சி = நேர் நேர்!
* ஐகாரக் குறுக்கத்தையும் நினைவு படுத்திக் கொள்வோம். சீரின் இடையிலும், கடையிலும்
'ஐ' குறிலாகத் தான் ஒலிக்கும். அதனால், 'வாழையால்' என்ற சொல்லில் 'ழை'
'ழ' என்றே ஒலிக்கும்;
அதனால், சொல் வா/ழையால் = நேர்/நிரை என்றுதான் பொதுவில் அலகிடப் படும்.
பயிற்சி :
5.1 அகச்சுவை, இடையுவா, உதயணன், புரோகிதன், நிரந்தரம், மகாநதி,
திலோத்தமை, மலைபடுகடாம், வயோதிகர், பராங்குசர் : இச் சொற்களை அலகிடுக.
5.2 பரி/மளா பதுங்/கினாள். இதைப் போல நிரையசையை விளக்க இரு சீர்கள் கொண்ட
சில சொற்றொடர்களை எழுதுக. ஒவ்வொரு வகை நிரையசையும் தொடரில் ஒருமுறைதான்
வரவேண்டும்.
5.3 காரிகையில் உள்ள ஒரு எடுத்துக் காட்டு; ஓர் ஆசிரியப்பா.
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே .
இதில் ஓர் அசையைத் தவிர ( எது?) மற்ற எல்லா அசைகளும் நிரை அசைகளே.
செய்யுளை அலகிட்டு, நிரை அசை வகைகளைக் குறிப்பிடவும். (ஒவ்வொரு சீரையும்
தனித்தனியாக அலகிட வேண்டும்.)
5.4 அசையின் தொடக்கத்தில் ஒற்று வராது; அதனால் எல்லா அசைகளும் குறிலிலோ,
நெடிலிலோ தான் தொடங்கும். ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்துகள் --
இவற்றில் வரக்கூடிய எல்லா உறழ்ச்சிகளையும் இப்போது பார்க்கலாம்.
ஓரெழுத்து:
1. குறில் 2. நெடில்
ஈரெழுத்துகள்; ( முதல் எழுத்து 'குறில்' 'நெடில்' என்று இருவகையில்
வரும்; இரண்டாம் எழுத்தோ ' குறில்' 'நெடில்' 'ஒற்று' என்ற மூன்றில்
ஒன்றாய் வரும். அதனால், ஈரெழுத்து உறழ்ச்சிகள் :ஆறு . )
3. குறில்+ஒற்று 4. குறில்+ குறில் 5. குறில்+ நெடில்
6. நெடில்+ஒற்று 7.நெடில்+குறில் 8. நெடில் +நெடில்
இதே மாதிரி , மூவெழுத்து உறழ்ச்சிகளை எழுதவும். ( மொத்தம் 18 வரும்.ஏன்? )
மேற்கண்ட 26 (2+6+18) -உறழ்ச்சிகளில் எவை ஓரசைகள்? ஈரசைகள்? மூவசைகள்?
அவற்றை அலகிடுக.
ஓரசைகள் எவ்வளவு? அவை நாம் ஏற்கனவே பார்த்த எட்டுத் தானா? அல்லது நாம்
எந்த உறழ்ச்சியையாவது விட்டுவிட்டோமா? முடிந்தால், இந்த 26-க்கும்
காட்டுகள் கொடுக்கவும். இந்த 26 உறழ்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அலகிடத்
தெரிந்தால் எந்தப் பாடலையும் அலகிடலாம்!
(தொடரும்)
( from :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4)
6. பாடலை அலகிடுதல்
மரபுக் கவிதைகளின் இலக்கணத்தைப் புரிந்து கொள்வதற்கும், அப்படிப்பட்ட
பாக்களை எழுதுவதற்கும் சீர்களை அசை பிரிக்கக் கற்றுக் கொள்வது மிக
அவசியம். முந்தைய பாடங்களில் நேர், நிரை என்ற அசைகளை எப்படிக்
கண்டுபிடிப்பது என்பதைப் பார்த்தோம்.
வாசகர்க்கு எளிதில் புரிய , பல இடங்களில் மரபுக் கவிதைகளைச் சந்தி
பிரித்து எழுதுவது வழக்கம் . அத்தகைய ஒரு திருக்குறள் வெண்பா உதாரணம்
பார்ப்போம்.
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.
இந்தக் குறளை அப்படியே எழுதி, இதில் வரும் சீர்களை அலகிட்டால், இந்தக்
குறள் வெண்பா இலக்கணத்திலிருந்து வழுவி விட்டது என்ற முடிவுக்கே வருவோம்!
( எப்படி என்பதைப் பின்னர்ப் பார்ப்போம்! )
ஆனால், மரபுக் கவிதைகளை நாம் பொதுவில் சந்தி சேர்த்து, நல்ல ஓசையுடன்
படிப்பதே வழக்கம். அதனால், அவை யாப்பிலக்கண விதிகளை மீறுகிறதா ? இல்லையா?
என்று தெரியச் சந்தி சேர்த்த **பின்னர்** தான் , அலகிடவேண்டும். அப்படி
எழுதினால்,
செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.
என்று மாறும்.
இப்படி எழுதிப் பின்னர் அலகிட்டால், திருவள்ளுவர் ஒரு பிழையும்
செய்யவில்லை என்பது புரியும்! வெண்பா விதிகளைப் பற்றி இப்போது நமக்குத்
தெரிய வேண்டாம். ஆனால், வார்த்தைகளைச் சந்தி சேர்த்து, பின்னர் சீர்களைச்
சரியான முறையில் எழுதின பின்னரே அலகிட வேண்டும் என்ற குறிப்பை மனத்தில்
வைப்பது மிகவும் அவசியம். இது பலர் முதலில் செய்யும் தவறு. சந்தி
பிரித்து எழுதப்பட்ட பாவின் இலக்கணம் சரியாக இருக்கும்; ஆனால், சந்தி
சேர்த்தபின்னர், தவறாக மாறிவிடும்! காட்டாக , 'போருக்கு அழைத்தான்'
என்பதில் மூன்று அசைகள் கொண்ட 'போருக்கு' என்ற சீர், சந்திக்குப்
பின்னர், 'போருக் கழைத்தான்' என்று ஆகும்போது, அந்தச் சீரில் ஓர் அசை
குறைந்து விடும்!
அதனால்,
* சந்தி சேர்த்த பாடலையே அலகிடவேண்டும். (அலகிட்ட பின்னர், அந்த மரபுக்
கவிதையின் இலக்கணம் பின்பற்றப் பட்டுள்ளது என்று தெரிந்தபின்,
வாசகர்களுக்குப் புரிய அந்தப் பாடலைச் சந்தி பிரித்து எழுதலாம்;
தவறன்று.)
* மரபுக் கவிதைகளில் அந்தந்தக் கவிதையின் இலக்கணத்திற்கு ஏற்றபடி சீர்கள்
பிரிந்திருக்கும். சீர்கள் ஒரு சொல்லாக இருக்கலாம், இரு சொற்களாக
இருக்கலாம், பாதி சொல்லாக இருக்கலாம். அதை அலகிடும்போது அதன் பொருளைப்
பற்றிக் கவலைப்படக் கூடாது! தொடர்ந்து வரும் சீரைச் சேர்த்தும் அலகிடக்
கூடாது ! ஒவ்வோரு சீரையும் தனித் தனியாகவே அசை பிரிக்க வேண்டும்.
* ஒற்றுகளுக்கு அசைகளில் மதிப்பில்லை என்பதைப் பார்த்தோம். 'கா', 'காய்',
இரண்டும் நேர் அசைதான். ஒன்றுக்கு மேல் ஒற்றுகள் இருப்பினும் அப்படியே.
'காய்ந்தான்' என்பது காய்ந்/தான் என்று பிரிவதால், 'காய்ந்' என்பதும்
நேர் தான். அதே சமயம், ஒற்று அசைகளைப் பிரித்து விடுகிறது என்பதையும்
கவனிக்க வேண்டும். அதாவது, ஒற்றைத் தாண்டி ஓர் அசை நீளாது! 'மார்பு'
எனும் சொல் 'மார்' 'பு' என்று இரு அசைகளாய்ப் பிரிகிறது. இரண்டு ஒற்றுகள்
வந்தால், அவை முந்தைய அசையின் இறுதியில் சேருமே தவிர, தொடரும் அசையுடன்
சேராது! ( அசை ஒற்றில் தொடங்காது ! ஆனால் அசை ஒற்றில் முடியலாம். )
அதனால் தான், 'காய்ந்தான் ' 'காய்ந்/தான்' என்றே பிரியும். 'மடி' நிரை
அசை. மண்டி = மண்/டி = நேர்-நேர் .
* சீர்களின் முதலிலும், இடையில் வரும் குறில்கள் நேர் அசையாகா. தொடரும்
எழுத்துகளுடன் சேர்த்தே, அலகிட வேண்டும். சீரின் இறுதியில் , எஞ்சி
நிற்கும் தனிக்குறில் நேர் அசையாகும். 'வந்தவாசி' = 'வந்/தவா/சி' . இதில்
'சி' நேர் ; ஆனால் நடுவில் வரும் 'த' நேர் அசை அன்று !
* ஒற்றைத் தாண்டி அசை போகாதது போல, நெடில்+(ஒற்றுகள்) -ஐத் தாண்டியும்
அசை நீளாது. 'வால்மீகி = வால்/மீ/கி .
* நேர் அசையில் ஓர் உயிரெழுத்தே இருக்கும்; நிரை அசையில் இரண்டு உயிர்களே
இருக்கும் என்பதையும் பார்த்தோம். எந்த அசையிலும் இரண்டிற்கு மேல்
உயிரெழுத்துகள் இருக்காது! அதனால், நேர், நிரை அசைகளுக்கு '1' , '2' என்ற
எண்களைக் குறியீடுகளாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தி ஒரு
பாடலை இப்போது அலகிடலாம்.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் -- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பா/லுந் தெளி/தே/னும் பா/கும் பருப்/புமி/வை
நா/லுங் கலந்/துனக்/கு நான்/தரு/வேன் -- கோ/லஞ்/செய்
துங்/கக் கரி/முகத்/துத் தூ/மணி/யே நீ/யெனக்/குச்
சங்/கத் தமிழ்/மூன்/றுந் தா.
11 211 11 221
11 221 121 -- 111
11 221 121 121
11 211 1.
இன்னொரு வெண்பாவைப் பார்ப்போம்:
வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் -- இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து .
இதில் உள்ள சீர்களில் உள்ள அசைகளைப் பார்க்கையில், அலகிடுதல் பற்றிய சில
விதிகளையும் மீண்டும் அசை போடுவோம்!
1) 'வைய' என்பது முதல் சீர். 'வை' என்பது சீரின் முதலில் வருவதால்,
'ஐகார'க் குறுக்கத்தின்படி, ஒன்றரை மாத்திரை ஒலித்து, நேரசையாகிறது. சீர்
முதலில் ஒரு மாத்திரைக்கு மேலான உச்சரிப்புக் கொண்ட எந்த எழுத்தையும்
ஓரசையாக்கலாம் என்பதும் தெரிகிறது. அதனால், இரண்டு மாத்திரைகள்
உச்சரிப்புள்ள நெடிலும், ஒன்றரை மாத்திரை ஒலிக்கும் ஐகார, ஔகாரங்களும்
சீர்முதலில் தனியே நின்று நேரசைகளாகும். 'கோதையாள்' என்ற சீரில், 'கோ'
நெடிலாகையால் நேரசையாகிறது. எஞ்சிய 'தையாள்' என்பதிலுள்ள 'தை' ஐகாரக்
குறுக்கத்தால் 'த' என்று குறிலாகவே ஒலிக்கும். அதனால், ' தையாள்' என்று
பிரித்து, நிரையசையாகக் கொள்ள வேண்டும்.
2) நெடிலின் வலப்புறம் ஒரு மெய் , அல்லது இரு மெய் வந்தாலும் அவற்றை
நெடிலோடு சேர்த்து ஓரசையாகக் கொள்ளவேண்டும். 'கேட்டவா' என்ற சீரில்
'கேட்' ஓரசையாகும். 'சோர்ந்து' என்னும் சீரில் 'சோர்ந்' நேரசையாகும்.
(நெடிலுக்குப் பின் குறில் வந்தால்? 'சில்பாடல்' என்பது 'சில்-பா-டல் '
என்றே பிரியும் !)
3) மெய்யெழுத்து ஒருபோதும் சீர் முதலில் வராது என்பதையும் கவனிக்கவும்.
மெய்யெழுத்தை அதன் முன்னிருக்கும் எழுத்துடன் சேர்த்தே அலகிட வேண்டும்.
'மகரயாழ்' என்னும் சீரில், 'மக' சேர்ந்து ஓரசையாகும். ( ஏன் 'மகர'
ஓரசையாகாது? எந்த அசையிலும் இரண்டு உயிர்களுக்கு மேல் வராது!)
4) சீர் முதலில் இருக்கும், ஒரு மாத்திரை உடைய தனிக்குறில் அசையாகாது.
'வைய' என்பதில் 'ய' என்பது சீரின் கடைசியில் இருப்பதால் ஓரசையாயிற்று.
மற்ற இடங்களில் குறில், அதற்கு வலப்புறம் வரும் மெய்யுடனோ, குறிலுடனோ,
நெடிலுடனோ சேர்ந்து ஓரசையாகும். 'முடையான்' என்பதில் 'மு டையான் ' என்று
பிரிப்பது தவறு.
'முடை' என்பது ஓரசையாகும். 'தெய்வச்' என்பதில்' தெய்' ஓரசையாகும். 'வச்'
என்பதும் ஓரசை. 'மகரயாழ்' சீரில் ' 'ரயாழ்' என்பதும் ஓரசையாகும்
பயிற்சிகள்:
6.1 'செயற்..' என்று தொடங்கும் குறளைச் சந்தி பிரித்தது/ சந்தி சேர்த்தது
என்ற இரண்டு வடிவங்களிலும் அலகிடவும்.
6.2 உங்கள் பெயரை அலகிடவும்.
6.3 'தொல்காப்பியம்' 'திருமுருகாற்றுப்படை' 'திருக்குறள்' 'மணிமேகலை' '
சிலப்பதிகாரம்' 'நீலகேசி', 'வளையாபதி', இராமாவதாரம், குண்டலகேசி,
சிந்தாமணி, ஔவையார், கௌரி, கௌசிகன், வாழைமரம் என்ற சொற்களை அலகிடவும்.
6.4 கீழ்க்கண்ட பாடற் பகுதியை அலகிடவும். ('/' குறிகளால் பாடலை அசைகளாகப்
பிரித்துப் பிறகு 1,2 -என்ற எண்களை மேலே கண்ட முறையில் பயன்படுத்திக்
காட்டவும்)
லகானையிழுத்துச் சிமிட்டாக்கொடுத்தான் ராஜா தேசிங்கு
சிமிட்டாக்கொடுத்த வேகத்தினாலே சீறிப் பாய்கிறது.
காடுமலைகள் செடிகளெல்லாம் கலங்கி நடுங்கிடவே
மலைகளிடிந்து தவிடுபொடியாய் மண்மேல் விழுந்திடவே
குன்றுமலைகள் தாண்டிக்குதிரை குதித்துப் போகுதுபார்
6.5 கீழ்க்கண்ட பாடலை அலகிடவும்.
சகமலாது அடிமை இல்லை
தானலால் துணையும் இல்லை
நகமெலாம் தேயக் கையால்
நாள்மலர் தொழுது தூவி
முகமெலாம் கண்ணீர் மல்க
முன்பணிந்து ஏத்தும் தொண்டர்
அகமலால் கோயில் இல்லை
ஐயன்ஐ யாற னார்க்கே!
(அப்பர் -நான்காம் திருமுறை)
6.6 'வைய முடையான்' என்ற வெண்பாவை அலகிடவும்.
7. சீர்கள் -1
எழுத்துகள் சேர்ந்து நேரசையாகவோ, நிரையசையாகவோ ஆவதைப் பார்த்தோம். அசைகள்
சேர்ந்தால் சீர்கள் ஆகும். பொதுவாக, மரபுப் பாடல்களில் உள்ள சீர்களில்
நான்கு அசைகளுக்கு மேலிருக்காது.
(நாலசைச் சீர்கள் அருகியே வரும்.)
ஓரசைச் சீர்கள்
ஓரசைச் சீர்கள் இரண்டே: நேரசைச் சீர், நிரையசைச் சீர்.
இவற்றை வெண்பாக்களின் இறுதியிலும், சில விருத்தங்களிலும், சில
சிந்துகளிலும் பார்க்கலாம்.
திருக்குறள் காட்டுகள்:
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். ( யார்- நேரசை)
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். ( செயல் - நிரை )
வெண்பாவில் வரும் ஓரசைச் சீர்களை நாள், மலர் என்ற வாய்பாடுகளால்
குறிப்பிடுவது வழக்கம்.
ஈரசைச் சீர்கள்:
இரண்டு வகை அசைகள் இருப்பதால், ஈரசைச் சீர்கள் (2x2=4) நான்கு
வகைப்படும். அவற்றிற்கு வாய்பாடுகள் உண்டு. அவை 'நேர் நேர் ' - தேமா ;
'நேர் நிரை - கூவிளம்; 'நிரை நேர்' - புளிமா ; 'நிரை நிரை'- கருவிளம்.
நேரில் (அல்லது நிரையில்) முடியும் ஈரசைச் சீரைச் சுருக்கமாக 'மாச்சீர்'
(அல்லது 'விளச்சீர்') என்று அழைப்பர்.
ஒரு குறளைப் பார்ப்போம்.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
இதை அலகிட்டால்,
கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் தேமா மலர். ( நிரைச் சீரை 'மலர்' என்று குறிப்பிட்டிருக்கிறேன்.)
என்று வருவதைப் பார்க்கலாம்.
பயிற்சிகள் :
7.1 நான்கு வகை ஈரசைச் சீர்களும் வரும்படி சில பொருள் பொதிந்த
வாக்கியங்கள்/சொற்றொடர்கள் எழுதுக. ஒவ்வொரு வரியிலும் 4 சீர்கள் தான்
வரவேண்டும்; ஒவ்வொரு வகைச் சீரும் ஒரு முறைதான் வரவேண்டும்.
காட்டு: காதலன்(காதலி) ஒருநாள் கண்ணைச் சிமிட்டினான்(சிமிட்டினாள்)
(கூவிளம் புளிமா தேமா கருவிளம் .)
இந்த வரியைத் தொடர்ந்து இன்னும் சில வரிகள் எழுதி, ஒரு கவிதையையும்
யாக்கலாம்! (எதுகை, மோனை ..தெரிந்தால் ஓசையழகு மேலும் மிகும்.)
7.2 பயிற்சி 7.1 -இன் கண்வழியாகப் பார்த்தால், 'இனைத்துணை' என்று
தொடங்கும் திருக்குறளின் முதல் அடியில் உள்ள 'சிறப்பு' என்ன? இதே மாதிரி
சில திருக்குறள்களைத் தேடிக் கண்டு பிடித்து இங்கே இடவும்.
(தொடரும்)
(from :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/may06/?t=6664
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5)
8. மோனை
'தொடையற்ற கவிதை நடையற்றுப் போகும்' என்பது ஒரு பழமொழி. 'தொடை' என்பது கவிதையின்
ஓர் உறுப்பு. (தொடுப்பது தொடை.) கவிதைக்கு நடையழகைக் கொடுப்பதில் மோனை,
எதுகை, இயைபு
போன்றவை மிக முக்கியப் பங்கேற்கின்றன. மேலும், கவிதையை மனப்பாடம் செய்வதற்கும்
இவை உதவுகின்றன. முதலில் மோனை( alliteration)யைப் பற்றி அறிந்துகொள்வோம்.
மோனை: ஒரு சீருக்கும் இன்னொரு சீருக்கும் முதலில் உள்ள எழுத்துகள் ஒத்த
ஓசையுடன் இருப்பது.
(கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாயே" என்பதில் க-க-கா என்பது மோனை
எழுத்துகள். 'க' என்ற
எழுத்துக்கு மோனையாக 'க' மட்டும் அன்றி, 'கா' வும் வருகிறது , இல்லையா?
அதே மாதிரி, ஒவ்வொரு
எழுத்துக்கும் எந்த, எந்த எழுத்துகள் மோனை எழுத்துகளாகும் என்று முன்னோர்
சொல்லியிருக்கின்றனர்.
* உயிர் எழுத்தில் மோனை:
அ, ஆ, ஐ, ஔ --ஓரினம்
இ, ஈ, எ, ஏ --ஓரினம்
உ, ஊ, ஒ, ஓ -- ஓரினம்
காட்டுகள்:
அகல உழுவதை ஆழ உழு (1-3 சீர்கள் மோனை: அ, ஆ)
இருதலைக் கொள்ளி எறும்பு போல ( இ-எ)
ஓட்டைச் சங்கால் ஊத முடியுமா? (ஓ-ஊ)
* உயிர் மெய்யெழுத்தில் மோனை:
க, கா, கை, கௌ -ஒரே இனம்
'க' என்று தொடங்கும் சீருக்கு மோனையாக உள்ள சீர் க, கா, கை, கௌ என்ற நான்கில்
ஒன்றில் தொடங்க வேண்டும்; 'கி' 'கீ' போன்றவை மோனையாகா. அதாவது, 'அ' என்ற
உயிர் ஏறிய
'க்' என்ற மெய்யெழுத்துக்கு மோனை அதே மெய்யெழுத்தில் ('க்') அந்த 'அ'
என்ற உயிருக்கு மோனையான
நான்கு உயிர் எழுத்துகளுள் (அ, ஆ, ஐ, ஔ) ஒன்று ஏறிய சீரே மோனையாக
வரவேண்டும். இதே போல்
மற்ற உயிர்மெய்யெழுத்துகளுக்கும் மோனை எழுத்துகளைப் பட்டியலிடலாம்.
கி, கீ, கெ, கே - ஒரே இனம் ; கு,கூ, கொ, கோ-ஒரே இனம்; ப, பா, பை, பௌ -மோனை இனம்.
.....இப்படியே.
* சில விசேஷ இனங்கள்: சில மெய்யெழுத்துகளுக்கு -- அந்த எழுத்துகளில்
தொடங்கும் தமிழ்ச் சொற்கள்
அதிகமாக இல்லாதலால் -- விசேஷ சலுகைகள் உண்டு.
# ச,த -ஒரே இனம்
காட்டு: தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (தொ,சு-மோனை)
அதாவது, 'தொ' என்னும் எழுத்திற்கு மோனை எழுத்துகள் எட்டு: தொ, தோ, து, தூ, சொ, சோ,
சு, சூ. இந்த எட்டில் உள்ள எந்த எழுத்துக்கும் எட்டில் எந்த எழுத்தும்
மோனையாக வரலாம்.
# ம, வ -ஒரே இனம் ( ம-வுக்கு உள்ள எட்டு மோனை எழுத்துகள் எவை?)
காட்டு: வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ,மா -மோனை)
# ந,ஞ -ஒரே இனம்
காட்டு: நலிந்தோர்க் கில்லை ஞாயிறும் திங்களும் (ந, ஞா --மோனை)
# பழம் இலக்கண நூல்களில், யா-விற்கு, இ,ஈ,எ,ஏ.. மோனை என்பர்.
தற்காலத்தில், யா -விற்கு அ,ஆ, ஐ, ஔ-வும் மோனை என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
(பழந்தமிழில் 'ய' வர்க்கத்தில் 'யா' ஒன்றில் தான் தமிழ்ச்சொற்கள்
தொடங்கும்; இப்போது
'யயாதி' போன்ற சொற்களும் வருவதைப் பார்க்கலாம்.) தற்காலத்தில், ஜ, ர
போன்ற எழுத்துகளும்
சொற்களின் தொடக்கத்தில் வருகின்றன, அல்லவா? அதனால், ஜ வுக்கு ச,த மோனை,
ர, ல வுக்கு இ, ஈ, எ, ஏ மோனை என்றும் கொள்ளலாம்.
* மோனை வாய்பாட்டை நினைவுறுத்த, ஒரு பழம் வெண்பா உண்டு. மேற்சொன்ன
பல விதிகளை அது சுருக்கிச் சொல்வதைப் பார்க்கலாம்.
அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு. (அநு- வழி, பின்)
* கோல மலருக் குள்ளே மணமுண்டு என்ற வாக்கியத்தில் மோனை உண்டா?
பார்த்தால் கோ, கு மோனை மாதிரி இருக்கிறது. ஆனால், இது மோனை இல்லை.
ஏனென்றால், அங்கே
இருக்கும் சொல் 'உள்ளே'; ஆனால் கோ-உ மோனை இல்லை!
* மரபுப் பாடல்களில் பொதுவாக பாடல் அடிகளில் மோனை வருவதைப் பார்க்கலாம்.
மோனை அடிகளில் எங்கே வரவேண்டும் ? பொதுவாகச் சொன்னால், நான்குசீர்
அடிகளில் 1,3 சீர்களில்
மோனை வருதல் சிறப்பு. ஐந்துசீர் அடிகளில் 1,5 சிறப்பு; 1,3,5 மோனை
இன்னும் சிறக்கும்.
ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாட்டைப்
பொறுத்து மோனை வருதல் சிறப்பு.
பயிற்சிகள்:
8.1 கீழ்க்கண்ட மோனைப் பட்டியலை நிறைவு செய்க.
--------------------------------------------
அ,ஆ,ஐ, ஔ : க, . . ; ச, . . .; ந, . . ; ப, . . ; ம, . .
இ, ஈ, எ, ஏ; கி, . . ; சி, . . ; நி, . . ; பி, . . ; மி, . . ;
உ,ஊ, ஒ, ஓ; கு, . . ; சு, . . ; நு, . . ; பு, . . ; மு, மூ,மொ, மோ.
8.2 பயிற்சிகள் 4.4, 5.2- ஐ மோனையுடன் செய்யவும்!
வாலி வந்தான் ; பரிமளா பதுங்கினாள் போன்ற மோனை உடைய சொற்றொடர்கள் எழுதவும்.
குறிப்பு: வாக்கியங்கள் எழுதும்போது, முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு
பாதி, அடுத்த சீரில்
இன்னொரு பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. மேலும் ,மோனை 'முழுச்
சொற்களுக்கு'த்தான் பார்ப்பது வழக்கம். தந்திருந் தான்பையன் என்ற தொடரில்,
த-தா மோனை யல்ல!
8.3 முன்பு சொன்ன 4.4, 5.2 பயிற்சிகளையும் சேர்த்து ஒரே வாக்கியம் எழுதலாம்.
காட்டு:
மருமகள் வந்தாள் ; மாமி விளாசினாள்.
இதில் நான்கு வகை நேரும், நான்கு வகை நிரையும் வருவதைப் பார்க்கலாம்.
இதே மாதிரி, 4-சீர் அடியில் 1-3 மோனையுடன், வகைகள் ஒரே முறை மட்டும்
வரும்படி, சில வாக்கியங்கள்
எழுதவும்.
8.4 காதலன் ஒருநாள் கண்ணைச் சிமிட்டினான். (1,3 மோனை)
(கூவிளம், புளிமா, தேமா, கருவிளம்)
செந்தமிழ் நாட்டின் சிறப்பினைப் புகழ்வோம் (1,3 மோனை)
(கூவிளம், தேமா, கருவிளம், புளிமா)
1-3 மோனையுடன், நான்கு வகை ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா, கூவிளம்,
கருவிளம்..ஒரே ஒரு முறை)
வரும்படி மேற்கண்ட காட்டுகளைப் போல சில வாக்கியங்கள் எழுதவும்.
* வாக்கியங்கள் எழுதும்போது , முடிந்தவரை சொற்களை ஒரு சீரில் ஒரு பாதி,
அடுத்த சீரில் இன்னொரு
பாதி என்று பிரிக்காமல் எழுதுவது அழகு. தளை சரியாக இருக்கச் சிலசமயம்
இப்படிச் செய்ய வேண்டும்.
இதற்கு 'வகையுளி' என்பார்கள். இப்போது, நாம் தளைக் கட்டுப்பாடு இல்லாமல்
தான் எழுதுகிறோம்.
அதனால் , சிறுசிறு சொற்களையே பயன்படுத்தி , பயில முயலுங்கள்.
8.5 ஒவ்வொரு திருக்குறளிலும் முதல் அடியில் நான்கு சீர்கள் இருக்கும்.
இவற்றில்,
1,3 -மோனை;
1,2 -மோனை;
1,4 -மோனை;
1,2,4 -மோனை;
1,3,4 -மோனை;
1,2,3 -மோனை;
1,2,3,4-மோனை
இவற்றிற்கு வகைக்கொரு காட்டுக் கொடுக்கலாம்.
காட்டுகள்;
*1,2 சீர்களில் மோனை.
(உ-ம்.) பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் (பி,பெ)
* 1,3 சீர்களில் மோனை
(உ-ம்.) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் (ம,மா)
*1,4 சீர்களில் மோனை
(உ-ம்.) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி (அ,ஆ)
*1,2,3 சீர்களில் மோனை.
(உ-ம்.) தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் (தா,த,த)
*1,2,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் (இ,இ,இ)
*1,3,4 சீர்களில் மோனை.
(உ-ம்.) வானின் றுலகம் வழங்கி வருவதால் (வா,வ,வ)
* நான்கு சீர்களிலும் மோனை(முற்று மோனை)
(உ-ம்) வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் (வை,வா,வா,வா)
இம்மாதிரி, திருக்குறளிலிருந்து வேறு காட்டுகள் கொடுக்கவும் .
( நான்கு சீர் அடியில், 1-3 மோனை சிறப்பு; அதற்கு அடுத்தபடி, 1-4 மோனை
சிறப்பு என்று சொல்லலாம்.)
8.6 எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
இப்படி மோனையுடன் இருக்கும் சில பழமொழிகளை எழுதவும்.
காலத்திற்கேற்ற 'புது'ப் பழமொழிகளும் எழுதலாம்!
8.7
ஈரசைச் சீர்களின் வாய்பாட்டைப் பல்வேறு வகைகளில் சொல்லலாம்.
பழம் நூல்களில் சொல்லப் பட்டிருக்கும் ஒரு வரிசை: தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம். இவற்றை, சுருக்கி,
1,2,3,4 என்றழைக்கலாம்.
இந்த வாய்பாட்டைத் திரும்பத் திரும்பச் சொன்னால் எழுகிறதே ஒரு அழகான
ஓசை... அதுதான்
'ஈரசைக்குரிய வெண் தளை' விளைக்கும் ஓசை! ஒரு சீரும் அடுத்த சீரும் உரசும்
போது/ முத்தமிடும் போது
எழும்பும் ஒருவகை 'செப்பலோசை'. (தளை-பந்தம்; ஒரு சீருக்கும் தொடரும்
சீருக்கும் உள்ள பந்தம்)
1, 2, 3, 4, 1, 2, 3, 4 .... என்று சொல்லிக்கொண்டே போங்கள். ஒரு
சீருக்குப் பின் எந்தவகை சீர் வருகிறது என்பது ஒரே இலக்கண விதியைக்
கடைபிடிப்பது தெரியும்.
மாச் சீரைத் தொடர்ந்து வரும் சீரில் முதல் அசை நிரை; அதே மாதிரி, விளச்
சீரைத் தொடர்ந்து வரும்
சீரில் முதல் அசை நேர்.
சுருக்கமாகச் சொன்னால்,
மாவைத் தொடர்ந்து நிரை
விளத்தைத் தொடர்ந்து நேர்.
இதுவே 'ஈரசைச் சீர்கள் வரும் அடிக்குரிய வெண்டளை' விதி! (இயற்சீர் வெண்டளை என்பர்)
சரி, இந்த வாய்பாடு 1-இல் தான் தொடங்க வேண்டுமா? இல்லை! 2,3,4,1;
3,4,1,2; 4,1,2,3-இலும்
சொல்லலாம், வெண்டளை தட்டாது! (பயிற்சி- 7.2 -இல் வரும் திருக்குறளின்
முதல் அடி எந்த வகை?
பார்த்துக் கொள்ளுங்கள் ! )
சரி, இந்த நான்கு வகைகளை எழுதி , ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
வாக்கியம் பார்ப்போம்.
* தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
பாய்ந்தால் புலியார்; பதுங்கினால் பூனையார்.
* புளிமா, கருவிளம், கூவிளம், தேமா
புலியாய் வருபவன் பூனையாய்ப் போவான்.
* கருவிளம், கூவிளம், தேமா, புளிமா
புலிகளின் வேலையைப் பூனை செயுமோ?
* கூவிளம், தேமா, புளிமா, கருவிளம்
பூனையைப் பெற்றால் புலியாய் வளருமோ?
இந்த நான்குவகைகளுக்கு 'வெண்டளை வாக்கிய'க் காட்டுகளை, ஒவ்வொரு ஈரசையும் ஒரே முறை
வரும்படி, 1-3 மோனையுடன் எழுதவும்.
***
(தொடரும்)
( from :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6 ]
9. எதுகை
மோனை(alliteration) என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில்
ஒன்றுவது' என்று பார்த்தோம்.
தமிழ்ச் செய்யுள்களில் எதுகை(Rhyme) என்பது ' இரு சீர்களின் இரண்டாம்
எழுத்து ஒன்றுவது' என்று
சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன், வண்ணன்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளைக் காட்டாகப் பார்க்கலாம். பொதுவாகச் சொன்னால்,
தமிழ்ச் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் உள்ள சீர்களுக்குள் மோனை அழகு (அகர
- ஆதி போல்)
இருக்கும். அடிகளுக்கிடையே எதுகை . . முதற்சீர்களில் இரண்டாம் எழுத்து
எதுகையில் ஒன்றும் அழகு
(அகர -பகவன் போல்) . . இருக்கும்.
எதுகையை வைத்துக் கொண்டே செய்யுளுக்கு எவ்வளவு அடிகள் என்றும் கணக்கிட்டு விடலாம்!
'பல' அடிகள் கொண்டவை என்று நாம் கருதும் திருப்புகழ் போன்ற பாடல்களும் 'நான்கு'
அடிகள் கொண்ட விருத்தங்கள் தான் என்று நாம் எதுகையின் துணை கொண்டு
தீர்மானிக்கலாம்!
க.இ.க -2 -இல் பார்த்த கவிமணியின் கவிதை மீண்டும் இதோ:
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
. . வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
. . கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. . தெரிந்து பாட நீயுமுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. . வாழும் சொர்க்கம் வேறுண்டா?
இது எட்டு 'வரிக'ளில் இங்கிடப் பட்டிருப்பினும் , வெய்யிற்-
கையிற்-தெய்வ-வையம் இவற்றிலுள்ள
எதுகையை வைத்து இது அடிக்கு ஆறு சீர்கள் கொண்ட நான்கு அடிகள் (எட்டு வரிகள்) கொண்ட
பாடல்தான் என்று சொல்ல முடிகிறது. ( ஐ-காரம் சீரின் முதலிலும் 'அய்'
மாதிரி குறிலாக ஒலித்து,
எதுகைக்குப் பயன்படுவதையும் பாருங்கள்!) மேலும், வெ-வீ, கை-க, தெ-தெ, வை-வா போன்ற
மோனை எழுத்துகள் ஒவ்வொரு அடியிலும் சரிப்பாதியில் , 1-4 சீர் மோனையாக வந்து ,
வரிகளுக்கிடையே மோனையழகு கொடுப்பதையும் பார்க்கலாம். அடிகளுக்கிடையே எதுகை ;
வரிகளுக்கிடையே மோனை . . இதுதான் தமிழ்க் கவிதைகளில் உள்ள பொது நிலை.
* எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப்
போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக் குறிலானால் (நெடிலானால்), எதுகைச்
சீரிலும் முதல்
எழுத்துக் குறிலாக (நெடிலாக) இருக்கவேண்டும். (இது தொடக்கத்தில் பலர்
செய்யும் தவறு) .
தட்டு, பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.
* சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் முதல் தரமான, ஒத்த ஓசை
கிடைக்கும்.
(உ-ம்) பண்டு, உண்ண .. இவற்றில் ஓசை இனிமை அதிகமாக இல்லை. பண்டு, உண்டு, கண்டு...
இவை இன்னும் சரியான எதுகைகள். அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி,
முடிந்தவரை மற்ற
எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் இரண்டாவது எழுத்தாவது ஒன்ற வேண்டும்!
* தற்காலத்தில் அதிகமாகப் பயன்படும் மற்ற சில எதுகை வகைகளை இப்போது பார்ப்போம்.
* வருக்க எதுகை:
=============
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. (கம்பர்)
இங்கே ல-விற்கு, லை-எதுகையாக வந்திருக்கிறது. இப்படியே ல-வருக்க உயிர்மெய்களான
ல,லி, லு,லெ, லொ, ..இவற்றில் எந்த எழுத்தும் வரலாம். ல-குறிலாதலால்,
எதுகை எழுத்தும்
குறிலாகவே வந்தால் சிறப்பு. 'லை' நெடிலானாலும், சீரின் நடுவில் வரும்போது
'ஐகாரக் குறுக்கம்'
என்ற விதியால் குறிலாகவே ஒலிக்கிறது. ஓரெழுத்திற்கு அதன் வருக்க
எழுத்துகளில் ஒன்று
எதுகையாக வருவது வருக்க எதுகை. பல இலக்கண நூல்கள் இதை 'இரண்டாந்தர' எதுகை
என்று சொன்னாலும், தற்காலப் பாடல்களில் இந்தவகை எதுகைகள் பெரும்பாலும் வருவதைக்
காணலாம். (பொதுவாக, ஒரு உயிர்மெய் எழுத்திற்கு அதன் வருக்க எதுகையாக மெய்யெழுத்து
வராது. முக்கியமாக, வல்லின மெய்கள் இவ்வாறு உயிர்மெய்களுக்கு எதுகையாக வராது.
அருகிச் சில பழமிலக்கியப் பாடல்களில், இடையின, மெல்லின மெய்கள் அவற்றின்
உயிர்மெய்க்கு எதுகையாய் வருவதைப் பார்க்கலாம். )
* இன எதுகை:
===========
இரண்டாம் எழுத்துக்கள் ஒரே இனமாக இருப்பது.
(உ-ம்) தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (திருக்குறள்)
'தக்' கும் , 'எச்' சும் வல்லின எதுகைகள். அதே மாதிரி, 'அன்பு' 'நண்பு'
மெல்லின எதுகை.
'வரவு' 'செலவு' இடையின எதுகை. இந்தச் சிறப்பற்ற எதுகைகளில் தற்காலப்
பாடல்களில் 'அன்பன் -
நண்பன்' போன்ற மெல்லின எதுகைகளைத் தான் அவ்வப்போது பார்க்கிறோம். (அதே போல்,
'ர' வும், 'ற'வும் தற்காலத்தில் ஒலியில் நெருங்கினபடியால், ஒன்றுக்கொன்று
( மறையில் - கரையில் போல்)
எதுகையாக வருகின்றன.)
* ஆசிடை இட்ட எதுகை :
===================
ஆசு என்றால் பற்றுக்கோடு.
எதுகையாக வரும் எழுத்துக்கு முன் 'ய்,ர்,ல்,ழ்' என்ற எழுத்துகள் நான்கில்
ஒன்று வந்தால், ஆசிடை
எதுகை எனப்படும். இந்த விதியினால், 'வாய்மை-தீமை', 'மாக்கொடி-கார்க்கொடி',
'ஆவேறு-பால்வேறு' ,'வாழ்கின்ற-போகின்ற' என்ற வார்த்தைகள் ஆசிடை எதுகை பெற்று
விளங்குகின்றன. இந்த எழுத்துகள் நடுவில் வந்தாலும் ஓசை கெடுவதில்லை
என்பது இந்த வகையின்
உட்பொருள். ( வாய்மை-தூய்மை; மாக்கொடி-பூக்கொடி; வாழ்கின்ற-தாழ்கின்ற ..இவை
'முதல்தரமான' எதுகைகள். ஆனால்... கருத்தைச் சொல்ல , முதல் தர
எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடையிட்ட எதுகை போன்ற சிறப்பில்லா
எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்தச் சலுகைக்குப் பின்னுள்ள பொருள்.)
* சொற்புணர்ச்சி செய்தபின் தான் எதுகை சரியா என்று பார்க்க வேண்டும். மின்னியல்,
பொன்தகடு..எதுகை அல்ல. ஏனென்றால், பொன்+தகடு= பொற்றகடு!
* ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் இயற்கையாக எதுகையை ஆள்வதைப் பார்க்கலாம்.
'எதுகை, மோனை' என்பது 'எகனை, மொகனை' ஆகும். 'ஆட்டம், பாட்டு' என்பது
'ஆட்டம், பாட்டம்' ஆகும். 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா' என்பது
'வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு காய்க்குமா?" ஆகும்.
* இயைபு:
========
அடித்தொடக்கத்தில் வருவது எதுகை. அடிகளின் இறுதியில் ஓர் எழுத்தோ,
பல எழுத்துகளோ ஒன்றி வருவது இயைபு.
காட்டு:
நந்தவ னத்திலோர் ஆண்டி -- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி --அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி !
இதில் "ண்டி" என்ற எழுத்துகள் ஒன்றிவருகின்றன.
(நந்த -கொண்டு - மெல்லின எதுகை; ந-நா, கொ-கூ மோனைச் சீர்கள்)
===
பயிற்சி:
9.1
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
அகத்தின் அழகு முகத்திலே
அடியாத மாடு படியாது
வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
இப்படி அடிக்குள் எதுகை இருக்கும் சில பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதவும்.
'புது' மொழிகளும் எழுதலாம்!
10. சீர்கள் -2
க.இ.க -7 -இல் நான்கு வகையான ஈரசைச் சீர்களைப் பற்றியும், அவற்றின் வாய்பாடுகளாகிய
தேமா(நேர்நேர்), புளிமா(நிரைநேர்), கூவிளம்(நேர்நிரை),
கருவிளம்(நிரைநிரை) என்பதையும் பார்த்தோம்.
மூவசைச் சீர்கள்
============
ஈரசைச் சீர்களுக்குப் பின் நேரோ, நிரையோ வந்தால் மூவசைச் சீர்கள்
விளையும். காய் என்ற சொல்
நேரசையாதலால் , தேமாவிற்குப் பின் நேர் வந்தால் 'தேமாங்காய்' என்று
சொல்லலாம். அதேமாதிரி,
மற்ற ஈரசைச் சீர்களின் வாய்பாடுகளின் பின்னும் காய் என்பதைச் சேர்த்தால்
நேரசையில் முடியும்
நான்கு மூவசைச்சீர்களின் வாய்பாடு கிடைக்கும் .
நேர் நேர் நேர் - தேமாங்காய் ; நிரைநேர்நேர் - புளிமாங்காய்;
நேர்நிரைநேர் - கூவிளங்காய்;
நிரைநிரைநேர் - கருவிளங்காய் .
இப்படி நேர் அசையில் ( அதாவது, 'காயில்') முடியும் மூவசைச் சீர்களைக்
காய்ச்சீர் என்பர்.
அதேபோல், 'கனி' என்பது 'நிரை' அசைக்கு வாய்பாடாக இருப்பதால், நிரையில்
முடியும் மூவசைச்
சீர்களான 'கனிச்' சீர்கள் நமக்குக் கிடைக்கின்றன.
நேர்நேர்நிரை- தேமாங்கனி; நிரைநேர்நிரை-புளிமாங்கனி ; நேர்நிரைநிரை - கூவிளங்கனி;
நிரைநிரைநிரை -கருவிளங்கனி.
ஈரசைச் சீர்கள் நான்காதலால் , அவற்றுடன் நேர், நிரை சேர்த்தால், மொத்தம்
(4x2=8) மூவசைச்
சீர்கள் ( 4 காய் +4 கனி) கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது.
நான்கசைச் சீர்கள்
=============
நாலசைச் சீர்கள் ஈரசைச்சீர்கள் நான்கின் பின் 'தண்பூ' (நேர்நேர்),
நறும்பூ'(நிரைநேர்),
தண்ணிழல்( நேர்நிரை), நறுநிழல்( நிரைநிரை) என்ற நான்கு ஈரசைச் சீர்களின்
வாய்பாடுகளைப்
பெருக்கினால் (4x4=16) நான்கசைச் சீர்கள் கிடைக்கும். இவை அருகியே
தமிழ்ப் பாடல்களில்
வரும்.
நேர் அசையில் முடியும் நான்கசைச் சீர்கள் எட்டு; அவை 'பூச்'சீர்கள் என்று
அறியப்படும்.
அவை : தேமாந்தண்பூ (தேமா+தேமா), புளிமாந்தண்பூ(புளிமா+தேமா),
கூவிளந்தண்பூ (கூவிளம்+தேமா),
கருவிளந்தண்பூ(கருவிளம்+தேமா), தேமாநறும்பூ( தேமா+ புளிமா),
புளிமாநறும்பூ( புளிமா+புளிமா),
கூவிளநறும்பூ( கூவிளம்+புளிமா), கருவிளநறும்பூ(கருவிளம்+புளிமா) ,
இப்படியே 'நிரை'யில் முடியும்
நான்கசைச் சீர்களை 'நிழற்'சீர்கள் என்று சொல்வார்கள். அந்த எட்டு நிழற்சீர்கள்:
தேமாந்தண்ணிழல் (தேமா+கூவிளம்), புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்,
கருவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல்(தேமா+கருவிளம்), புளிமாநறுநிழல், கூவிளநறுநிழல், கருவிளநறுநிழல்.
பயிற்சிகள் :
10.1
மூவசைக் காய்ச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான நினைவுத்தொடர்கள்:
தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்
தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள்பெருக்கும், பொன்பெருக்கும்
எல்லா வகைக் காய்ச்சீர்களும் ஒரே ஒரு முறை வரும்படி, 1-3 மோனை உள்ள, 4-சீருள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.(ஒவ்வொரு வாக்கியமும் வெவ்வேறு வகை காய்ச்சீரில்
தொடங்கினால் நல்ல பயிற்சி)
காட்டு:
என்னவளே ! இனியவளே! என்காதல் மறந்தாயோ?
(கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்)
10.2
மூவசைக் கனிச் சீர்களுக்கு முன்னோர் வகுத்த சில அழகான வாய்பாடுகள்:
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி
மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, மீன்மறிதுறை, சுறமறிதுறை
(சுற-சுறா ; மறி-திரிதல்; துறை-நீர்த்துறை )
எல்லா வகைக் கனிச் சீர்களும் ஒரே ஒருமுறை வரும்படி, 1-3 மோனை உள்ள சில
வாக்கியங்கள் எழுதுக.
காட்டு:
செந்தாமரைப் பூஉறைபவள் திருமகள்பதம் துதிசெய்திடு!
10.3 நான்கு கனிகள் கொண்ட அடிகள் அதிகமாக மரபுக் கவிதைகளில்
வருவதில்லை. ஆனால், 'கனி கனி கனி மா' என்ற வாய்பாடு பயிலும் அடிகள்
உள்ள சந்தக் கவிதைகள் பல உள்ளன. இதற்கு 1-3 மோனையுடன் உள்ள, சில
உதாரணங்கள் காட்டுக. (கனிச் சீர்கள் எந்த வகையானாலும் சரியே; ஒரே
வகை வந்தாலும் சரி. )
காட்டுகள்:
நம்நாட்டினர் கொண்டாடிடும் நவராத்திரி நாளில்
நயவஞ்சக அசுரர்களை நசித்தாள்ஜய துர்க்கை.
நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க
அரிமாவென எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்.
கரம்சந்திரர் கரம்பற்றின கஸ்தூரியென் றொருவள்
அறவாழ்விலும் சிறைவாழ்விலும் அண்ணல்வழிச் சென்றாள்;
(தொடரும்)
( from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7 ]
11. அலகிடுதல் : சில நுண்மைகள்
நம் கவிதை இலக்கண 'உலகம்' எழுத்துகளால் ஆனது. மூன்று வகை
எழுத்துகளுக்குள் நம் உலகம் சுழல்கிறது. குறில், நெடில், ஒற்று (மெய்).
இந்த எழுத்துகள் சேர்ந்து நேர், நிரை என்ற அசைகளைத் தோற்றுவிக்கின்றன.
ஒலிக்கும் மாத்திரைகள் வேறானாலும், க, கல், கா, கால் யாவும் 'நேர்'
அசையே! 'நிரை'யும் இப்படியே. அதனால், இயற்பாக்களைப் பொறுத்தவரை,
இப்போதைக்கு மாத்திரைகளை மருந்துக் குப்பியிலேயே போட்டு வைக்கலாம்!
வேண்டுமானால் பிறகு வெளியே எடுக்கலாம்! அசைகள், அசைகள் சேர்ந்து சீர்கள்,
சீர்களுக்குள் உள்ள தளை.... இப்படியே நாம் யோசிப்போம். ( இசைப் பாடல்களான
சந்த விருத்தங்கள், திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்கள் இவற்றில் அசைகளின்
மாத்திரைகள், வல்லின, மெல்லின, இடையின வேறுபாடுகள் போன்றவை எல்லாம்
முக்கியமாகும்.)
* வெண்பாவின் விதிகளைப் பிறகு பார்ப்போம். ஆனால், குறளின் முதல் அடிக்கு
வேண்டிய விதிகளை இப்போது தெரிந்து கொள்வதில் தவறில்லை. அதில் ஈரசைச்
சீர்கள், காய்ச்சீர்கள் தான் வரலாம். இரண்டாம் அடியில் ஈற்றுச் சீரில்
மட்டும் ஓரசைச் சீர் வரலாம்.) வெண்பா முழுதும் (அடியில் உள்ள
சீர்களுக்குள் மட்டும் அல்ல, முதல் அடியின் நான்காம் சீருக்கும்,
இரண்டாம் அடியின் முதல் சீருக்கு இடையிலும்) 'வெண்டளை' தான் வரலாம்.
அதாவது,
மாவைத் தொடர்ந்து நிரை;
விளத்தைத் தொடர்ந்து நேர்;
காயைத் தொடர்ந்து நேர்.
[முதல் இரண்டையும் முன்பே பார்த்தோம், இல்லையா?]
அதனால், வெண்பா அடிகளில் சீர்கள் இந்த விதிகளுக்கு உட்பட அமையும்.
இவைதான் முக்கியம். மோனை போன்றவை பிறகுதான். சொல்லைச் சிதைத்து,
'வகையுளி' செய்தாயினும், வெண்டளையை அமைப்பது மிக அவசியம். வெண்டளை
தவறினால், தளை தட்டுகிறது என்பர்.
* குறில், நெடில், ஒற்று -இவற்றுக்குள் இல்லாதவை குற்றியலிகரம், அளபெடை,
ஆய்தம். ஐகாரக் குறுக்கத்தையும் கவனிக்க வேண்டும். இவற்றை எப்படி
அலகிடுவது? இதுவே கேள்வி.
* குற்றியலிகரம்:
குற்றியலுகரம் 'யகர' முதல் எழுத்துடன் சேரும்பொது 'குற்றியலிகரமாய்'
ஆகிறது. ஓட்டு +யந்திரம் = ஓட்டியந்திரம்; குன்று+ யாது = குன்றியாது
விதி: தளை சிதையும்போது, குற்றியலிகரம் (அது அரை மாத்திரைதான்!) அலகு பெறாது.
காட்டு:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.
'தியா' நிரை போல் இருக்கிறது. 'குழலினி' = கருவிளம். விளத்திற்குப் பின்
நிரை வந்தால் வெண்டளை தட்டும். அதனால், குற்றியலிகரச் சந்தியை நீக்கிப்
பார்த்தால், தளை தட்டவில்லை.
'யாதியாம் செய்வ தியம்பு' என்பது ஒரு வெண்பா ஈற்றடி.
[யாது+யாம்= யாதியாம்] இங்கே, குற்றியலிகரம் தளைக்கு இடைஞ்சல்
செய்யவில்லை. அதனால், அலகு பெறும். 'யாதியாம்'= கூவிளம் என்று கொள்ளலாம்.
* அளபெடை:
அளபெடை= முன்வரும் எழுத்தின் ஓசையை நீட்டும்.
இதில் பல வகை உள்ளன; அவை நமக்கு இப்போது தேவையில்லை. உயிரளபெடை மட்டும்
பார்ப்போம்.
சுருக்கமான விதி:
தளை தட்டாதபோது, அளபெடை குற்றியலிகரம் போல் அலகு பெறாது;
தளை தட்டும்போது, அலகு பெறும். அவ்வளவுதான்.
கற்றதால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்
தொழா= நிரை. ரெனின்= நிரை. அடி வெண்பா விதிகளைக் கடைபிடிக்கவில்லை. 'அ'
வைக் குறிலாக வைத்தால், தொழாஅ= புளிமா... அடியில் வெண்டளை பயிலும்.
* ஆய்தம்:
விதி:
தளை தட்டாதபோது ஆய்தம் = ஒற்று;
தளை தட்டும்போது, ஆய்தம் = குறில்.
காட்டு:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அ·தொப்ப தில்.
இங்கே , அ· = 'அகு' மாதிரி ஒலித்து, ஓசையைச் சரி செய்கிறது.
[அ·தொப்ப = புளிமாங்காய்]
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ·தவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
[இங்கே அ· = 'அக் '; அ·தவள் = கூவிளம்.]
* ஐகாரக் குறுக்கம்:
இதை முன்பே பார்த்தோம். 'ஐ' நெடிலாயினும், சீரின் நடுவிலும், ஈற்றிலும்
குறில்போல் இருக்கும். இதையே, "தளை தட்டும்போது ஐகாரம்= குறில்; தளை
தட்டாதபோது, நெடிலாய், தனி நேரசையாகும்"
என்றும் எழுதலாம்.
* ஒற்று நீக்கி அலகிடல்:
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் இடையின ஒற்றுகள்; ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் மெல்லின மெய்கள்.
தளை தட்டினால் இவற்றை நீக்கி அலகிடலாம். [அதாவது, அவை இல்லாதது போல்
அலகிடுதல்].
காட்டு:
ஔவையாரின் ஒரு வெண்பா முதலடி:
ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
'ஈட்டல்பொருள்'= புளிமாங்கனி. கனிச் சீர் வெண்பாவில் வரக் கூடாது.
அதனால், 'ஈட்டபொருள்' [கூவிளங்காய்] போல் அலகிடவேண்டும்.
[வல்லின மெய்களை இப்படி நீக்கி அலகிடக் கூடாது.]
===
பயிற்சிகள்:
11.1
மரபுக் கவிதைகளில் அதிகமாய் வருபவை, ஈரசைச் சீர்களும், காய்ச் சீர்களும்
உள்ள அடிகள் தான்.
ஒரு அடியில் , ஈரசைச் சீர்களும் , மூவசைக் காய்ச் சீர்களும் மட்டும்
வந்தால், வெண்டளை விதி என்ன?
1) மாவைத் தொடர்ந்து நிரை (அதாவது, மாச் சீருக்குப் பின், புளிமா,
கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய்... இவற்றில் எதுவும் வரலாம்)
2) விளத்தைத் தொடர்ந்து நேர்
அடியில் காய்ச் சீரும் வருவதால், கூட இன்னொரு விதியைச் சேர்த்துக் கொள்ளவும்.
3) காயைத் தொடர்ந்து நேர்.
2) , 3)..இரண்டையும் சேர்த்து ஒரே விதியாகவும் சொல்லலாம். விளம், காய்-
இவற்றைத் தொடர்ந்து நேர். (அதாவது, காய்ச் சீரானாலும், விளச் சீரானாலும்
தொடரும் சீர் தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய் ...இவற்றில் ஒன்றாக
இருக்க வேண்டும்)
காட்டு:
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி என்றுசொன்னான்
இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்?
(பாரதி)
இதேமாதிரி, இரண்டு அடிகளுக்குள் ஒரு எதுகை வைத்து, அடிக்குள் 1-3 மோனை
வைத்து, மா,விளம், காய்ச் சீர்கள் மட்டும் வரும் சில 4-சீர் ' இரட்டை
வெண்டளை வாக்கியங்கள்' எழுதுக.
( அடிகளுக்கிடையிலும் வெண்டளை இருக்கவேண்டும்.)
சில குறிப்புகள்:
* வெண்தளை = வெண்டளை = வெண்பாவுக்குரிய தளை என்று பொருள். அதனால்,
வெண்டளை வெண்பாவில் தான் வரும் என்ற பொருளில்லை. பல மரபுக் கவிதை
வடிவங்களில். இசைப் பாடல்களில், கும்மிகளில், சிந்துகளில்... வரும்;
இதைப் பற்றிப் பிறகு பார்ப்போம். வெண்டளை ஆட்சி செய்யும் வடிவங்களில்
முக்கியமான ஒரு வடிவம் வெண்பா; அவ்வளவுதான்.
* மரபுக் கவிதை அடிகளில் ஓரசை வந்து, வெண்டளை வரவேண்டிய இடங்கள் பொதுவாகக் குறைவே.
(காட்டு: வெண்பாவின் கடைசி அடி) அப்படி ஓரசைச் சீர், ஈரசைச் சீர், காய்ச்
சீர் இவற்றுடன் ஓரடி வந்தாலும், அந்த அடியில் வெண்டளை அமைய மேலே சொன்ன
அதே விதிகள் தான். மாற்றம் இல்லை.
மாச் சீரைத் தொடர்ந்து நிரை ( காயரைத்து வைப்பாய் கறி. )
விளம்(காய்) சீரைத் தொடர்ந்து நேர் ( சங்கத் தமிழ்மூன்றும் தா!)
வெண்பாவின் ஈற்றுச் சீரைப் பற்றித் தனியாகப் பிறகு பார்ப்போம்.
* வெண்டளை அடிகளில் கனிச் சீரோ, நாலசைச் சீரோ வரக் கூடாது.
*வெண்பா இலக்கண விதிகள் எல்லாக் காய்ச் சீர்களையும் அனுமதிக்கிறது. அதே
சமயம் 'செப்பலோசை' இருக்கவேண்டும் என்றும் சொல்கிறது. 'விளம்' (நிரை)
நடுவில் வரும் காய்ச்சீர்கள் இரண்டு. கூவிளங்காய், கருவிளங்காய். நிரை
நான்கு வகையாய் வரும் என்று உங்களுக்குத் தெரியும். இதில் 'விளம்'=
குறில்+நெடில் அல்லது விளம்= குறில்+நெடில்+ஒற்று(கள்) வந்தால் அந்தச்
சீர்களை 'விளா'ங்காய்ச் சீர்கள் என்று சொல்லலாம். (அதாவது, 'வட்டமாக',
'குறிப்பிடாது', 'வந்திடாதோ', 'கண்ணதாசன்' 'நமச்சிவாய''சாமிநாதன்',
'ரங்கராஜன்' போன்றவை. ) இப்படிபட்ட 'விளா'ங்காய்ச் சீர்களை வெண்பாவில்
உபயோகித்தால், செப்பல் ஓசை சிறிது குறைந்துவிடுகிறது. அதனால்,
'விளாங்காய்'ச் சீர்களைப் பொதுவில், வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது
நன்று. அந்த 'விளாங்காய்'ச் சொல்லைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும்,
ஆனால் ஒசையும் குறையக்கூடாது என்றால், வகையுளியைத் தவிர வேறு வழியில்லை.
காட்டு: 'கண்ணதா சக்கவிஞன்' என்று ஒரு வெண்பாவில் எழுதுகிறார்
கிருபானந்த வாரியார்.
* 'விளாங்காய்'ச் சீர்களை நாம் பழமிலக்கிய வெண்பாக்களில்.... மிகச் சில
விதிவிலக்குகள் தவிர்த்து... பார்ப்பதில்லை. விருத்தங்களிலும் பொதுவாகக்
காண்பதில்லை. (விருத்தங்களில் 'வந்தி' 'டாதோ' என்று இரு மாச்சீர்களாகப்
பயன்படுத்துவதைப் பற்றி இங்கே பேசவில்லை. காய்ச்சீராக வருவதில்லை என்பதே
விஷயம்.) ஆனால், திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்களின் 'தொங்கல்களில்'
'விளாங்காய்ச்' சீர்கள் வரும் ('தம்பிரானே', 'கந்தவேளே' 'சந்தியாவோ')
11.2
வெண்பாவின் முதலடியில் நான்கு வகை ஈரசைச் சீர்கள் எப்படி, எந்த வரிசையில்
வரும் என்று 8.7-ஆம் பயிற்சியில் பார்த்தோம். இப்படியே
நான்கு வகைக் காய்ச்சீர்களும் ஒரு வெண்பாவின் முதல் அடியில் வருமா? வராது
!(ஏன்? இது உண்மையா? பரிசோதிக்கவும்)
*மூன்று காய்ச்சீர்கள் வெண்டளையில் வரக் கூடிய ஒரு வரிசை:
தேமா, கருவிளங்காய், தேமாங்காய், கூவிளங்காய் (1,2,3,4) என்று
கூப்பிடலாம். 2,3,4,1 ; 3,4,1,2 ; 4,1,2,3 இவையும் வெண்டளை பெறும்
என்பதைப் பார்க்கவும்.
* கருவிளங்காய் <---> புளிமாங்காய் பயன்படுத்தலாம்
* தேமாங்காய் <--> கூவிளங்காய் . இடம் மாறலாம்.
அ) வெண்பாவின் முதல் அடியில் மூன்று வேறுபட்ட காய்ச்சீர்கள் வரக்கூடிய
வேறு வரிசைகள் உண்டா?
ஆ) மூன்று வெவ்வேறு வகையான காய்ச்சீர்களுடன், ஓர் ஈரசை வெவ்வேறு
சீர்களில் வரும் இலக்கிய வெண்பா முதலடிகள் நான்கினைக்
காட்டுகளாய்க் கொடுக்கவும். ( நள வெண்பா, முதலாழ்வார்கள் அந்தாதிகள்,
ஔவையார், காளமேகம்... இவற்றில் தேடலாம் )
குறிப்பு: இந்தப் பயிற்சிகளை நான் கொடுக்கும் ஒரு முக்கிய காரணம்: மரபுக்
கவிதைகளில் வரும் வேறுபட்ட 'ஓசை' களை , வாய்விட்டுப் படித்துப்
புரிந்துகொள்ளல். அந்த 'ஒசை'கள் உண்டானது எப்படிப்பட்ட
கட்டுப்பாடுகளினால் என்று புரிந்துகொள்ள உதவுவதே இலக்கணம். 'ஓசை'
வடிவங்களை 'உங்களுடைய'வாக ஆக்கிக்கொள்வதே இலக்கணப் பயிற்சிகளின் நோக்கம்.
'ஓசை'யும், 'இசையும்' தம் கவிதை முயற்சிகளில் இடம் பெற வேண்டுமெனின் ஓசை
இலக்கணம் மனதில் ஊறவேண்டும்! பிறகு கருத்துகள் தானே வெவ்வேறு வடிவங்களில்
புறப்படும்! 'உருவேறத் திருவேறும்' ! )
காட்டுகள்:
மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம் ( நள வெண்பா--63)
(தேமா, கருவிளங்காய், தேமாங்காய், கூவிளங்காய்)
பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச் ( நள வெண்பா -- 15)
(கூவிளங்காய், தேமா , கருவிளங்காய், தேமாங்காய்)
வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் (நள வெண்பா -- 6)
(கூவிளங்காய், தேமாங்காய், தேமா , புளிமாங்காய்)
மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன் (நள வெண்பா --11)
(கருவிளங்காய், தேமாங்காய், கூவிளங்காய், தேமா)
ஆ) மேற்கண்டவற்றை மாதிரிகளாக வைத்துக் கொண்டு, 1-3 மோனையுடன் வரும்
4-சீர் வெண்டளை வாக்கியங்களை எழுதவும். (விளாங்காய்ச் சீர்களையும்,
வகையுளியையும் தவிர்க்கவும்.) ஈரசை வெவ்வேறு சீர்களில் வரும்படி
வாக்கியங்களை அமைத்துப் பழகவும்.
ஒரு காட்டு:
சின்னஞ் சிறுகிளியே! சிங்காரச் சித்திரமே!
11.3
*வெண்பாவின் முதலடியில் இரண்டு வேறுபட்ட ஈரசைச்சீர்களும் இரண்டு
வித்தியாசமான மூவசைச் சீர்களும் பல வகைகளில் வரலாம்.
அ) ஒரு வரிசை:
தேமா, புளிமா, கருவிளங்காய், தேமாங்காய்; 1,2,3,4 என்று
சுருக்கினால், 2,3,4,1; 3,4,1,2; 4,1,2,3 .. என்ற சுழற்சிகளும்
வெண்டளை வரிசைகள்தான்.
* (தேமா, புளிமா) <--> ( கூவிளம், தேமா) என்று மாற்றலாம்
* கருவிளங்காய் <---> புளிமாங்காய் என்று மாற்றலாம்.
* தேமாங்காய் <---> கூவிளங்காய் என்று மாற்றலாம்.
காட்டுகள்:
பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால் (நள வெண்பா -- 7)
( தேமா , புளிமா , கருவிளங்காய், தேமாங்காய்)
கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை (நள வெண்பா - 4)
( புளிமா , கருவிளங்காய், தேமாங்காய், தேமா )
கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான் (நள வெண்பா - 10)
( கூவிளம் , தேமா , புளிமாங்காய், கூவிளங்காய்)
வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த (நள வெண்பா --27)
(கூவிளங்காய், தேமா , புளிமா , புளிமாங்காய்)
அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின் (நள வெண்பா --403)
(கருவிளங்காய், கூவிளங்காய், தேமா , புளிமா )
ஆ) இன்னொரு வரிசை:
தேமா, கருவிளங்காய், கூவிளம், தேமாங்காய் (5,6,7,8);
இங்கும் (6,7,8,5)... என்றெல்லாம் வரிசை வரலாம்.
இங்கும் கருவிளங்காய்<--> புளிமாங்காய்,
தேமாங்காய் <--> கூவிளங்காய் போன்ற மாற்றங்கள் வரும்.
காட்டு:
வாழி அருமறைகள் வாழிநல் அந்தணர்கள் (நள வெண்பா -427)
( தேமா , கருவிளங்காய், கூவிளம் , கூவிளங்காய்)
இ) இன்னொரு வரிசை:
தேமா, கருவிளம், தேமாங்காய், கூவிளங்காய்
இன்னும் வரிசைகள் உள்ளனவா?
இப்படிச் சில பழந்தமிழ் இலக்கிய வெண்பா முதலடிகளை, வகைகொன்றாக,
முடிந்தவரை காட்டவும். வெவ்வேறு ஈரசைகள் வெவ்வேறு சீர்களில் வரும்
உதாரணங்கள் நன்று. அவற்றை மாதிரிகளாய் வைத்துக் கொண்டு, சில வெண்டளை
அடிகளை 1-3 மோனையுடன் இயற்றுக.
11.4
வெண்பாவின் முதலடியில் மூன்று வெவ்வேறு ஈரசைச் சீர்களும், ஒருமூவசைச்
சீரும் பலவகைகளில் வரும்.
சில வரிசைகள் :
தேமா, புளிமா, கருவிளம், கூவிளங்காய்.
தேமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய்
கூவிளம், தேமா, கருவிளம், தேமாங்காய்
கூவிளம், தேமா, புளிமா, கருவிளங்காய்
எப்படி மற்ற சுழற்சி வரிசைகளும், ஓரசை(ஈரசை) சீருக்குப் பதிலாய் வேறு
எந்த வகைச் சீர்(கள்) வரலாம் என்பதையும் , முன்பு செய்த
பயிற்சிகளிடமிருந்து ஊகிக்கலாம்.
அ) மற்ற வரிசைகளை எழுதுக.
சில காட்டுகள்:
அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்கு (நள வெண்பா - 37)
(தேமா, புளிமா, கருவிளம், தேமாங்காய் )
இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல் ( நள வெண்பா --45)
(கூவிளம், தேமா, புளிமா, புளிமாங்காய்)
வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோர் (நள வெண்பா -- 114)
( கூவிளங்காய், தேமா, புளிமா, கருவிளம் )
ஆ) இப்படி வரும் சில வெண்பா முதலடிகளைத் தேடிக் காண்பிக்கவும்.
இ) அவற்றை காட்டுகளாய் வைத்துக் கொண்டு, சில புதிய வெண்டளை அடிகளை, 1-3
மோனையுடன் இயற்றவும். வழக்கம்போல், ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக
இருக்கட்டும். வெவ்வேறு காய்ச்சீர்கள் வெவ்வேறு இடங்களில் வரும்படி
அமைத்தல் நல்ல பயிற்சி.
(தொடரும்)
( from :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ]
12. வெண்பாவின் ஈற்றடி
வெண்பாவின் ஈற்றடியின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
வெண்டளை பயிலும் இந்தக் கடைசி அடியில் மூன்று சீர்கள் தான் இருக்கும்.
முதல் சீரும், இரண்டாம் சீரும் ஈரசைச் சீராகவோ, மூவசைச் சீராகவோ
இருக்கும். மூன்றாம் சீர் : ஓரசையாகவோ (நேர், நிரை ) , அல்லது உ-கர
உயிர்மெய்யில் முடியும் ஈரசைச் சீராகவோ ( நேர்பு, நிரைபு என்று இவற்றைக்
குறிப்பிடலாம்) இருக்கவேண்டும்.
* 'நேர்' வரும் என்பதால் நான்கு வகை நேரசைகளும் (க, கல், கா, கால்)
ஈற்றுச் சீரில் வரலாம்.
'நேர்' -இல் முடியும் சில வெண்பா ஈற்றடிக் காட்டுகள்:
தொன்மைசால் நன்மருந் து
கண்ணோட்டம் இல்லாத கண்
சங்கத் தமிழ்மூன்றும் தா
சான்றோன் எனக்கேட்ட தாய்
(இலக்கணம் அனுமதித்தாலும், பழைய இலக்கிய வெண்பாக்களின் ஈற்றுச் சீரில்,
ஓசைநயம் கருதித் 'தனிக்குறி'லை அதிகமாகப் பார்க்கமுடியாது)
வெண்பா ஈற்றுச் சீரில் வரும் 'நேர்' அசைக்கு வாய்பாடு 'நாள்' . (வாய்பாடு
'நாள்' என்பதால் 'நெடில்+ஒற்று' கொண்ட நேர் தான் வரவேண்டும் என்றில்லை;
'நாள்' நான்குவகை நேருக்கும் ஒரு குறியீடு; அவ்வளவே. ஆனால், ஓசை கருதி
நான்கு வகைகளில் சில வகைகளையே அதிகம் பார்க்கலாம். )
* 'நிரை'யில் முடியலாம் என்பதால் நான்கு வகை நிரையசைகளும் ( கட, கடல்,
கடா, கடாம்) ஈற்றுச் சீரில் வரலாம்.
கல்லாதான் கற்ற கவி
கல்லின்மே லிட்ட கலம்
பருவத்தா லன்றிப் பழா
பெருங்காள மேகம் பிளாய்.
( இவற்றிலும் சில வகைகளை அதிகமாய்ப் பார்க்க முடியாது. முதல் இரண்டு
வகைகளே அதிகம் வரும்)
வெண்பா ஈற்றுச் சீரில் வரக்கூடிய நான்கு வகை நிரைக்கும் வாய்பாடு 'மலர்'.
* 'நேர்பு' என்பதால் தனிக்குறில் தவிர்த்த மற்ற மூன்று நேரசைகளும் உ-கர
உயிர்மெய்யுடன் சேர்ந்து வரும். வாய்பாடு = காசு
(தனிக்குறில் + உ-கரம் -->'நிரையாகி விடும்; அதைத்தான் ஏற்கனவே 'நிரை'
வரலாம் என்று சொல்லிவிட்டோ ம் அல்லவா ? காட்டு: கொ+டு =
நிரை ; கொட்+டு= நேர்பு ; கோடு, கோந்து --> நேர்பு)
வேறு காட்டுகள் : பற்று, பேறு, போற்று. பெரும்பான்மை குற்றியலுகரம் தான்
வரும். ( குற்றியலுகரங்கள் கு, சு, டு, து, பு, று என்ற ஆறு
எழுத்துகளில் முடியும்.) சிறுபான்மை முற்றியலுகரமும் வரும் (காட்டுகள்:
சொல்லு, எண்ணு )
* 'நிரைபு' = நான்குவகை நிரையசைகள் + உ-கர உயிர்மெய் . வாய்பாடு =
பிறப்பு. காட்டுகள் : விறகு, கிழக்கு, தகாது, நடாத்து (இங்கும்
பெரும்பான்மைக் காட்டுகள் குற்றியுலகரங்கள் தான். இவற்றிலும் சில
வகைகளைத்தான் அதிகமாகப் பார்க்கலாம்)
* சுருக்கமாக, இவ்விதியை, " வெண்பா ஈற்றுச் சீர் 'நாள், மலர், காசு,
பிறப்பு' என்னும் வாய்பாடுகளுக்கேற்றபடி தான் வரவேண்டும்," என்பர்.
* 'காசு, பிறப்பு' வெண்பாவின் மற்ற சீர்களில் வந்தால் 'தேமா' புளிமா'
என்ற வாய்பாடு பெறும். நேர், நிரை என்ற ஓரசைச் சீர்கள் வெண்பாவின்
இறுதியில் தான் வரலாம்; வெண்பாவின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து, வெண்பாவின்
வேறு எந்தச் சீரிலும் ஓரசைச் சீர் வரக்கூடாது.
* நீங்கள் உகரத்தில் முடியும் ஈரசைச் சீரை வெண்பாவில் எங்கேனும்
அமைத்தால், அவை சிலசமயம் சொற்புணர்ச்சி விதியால் சந்திக்குப் பின் ஓரசைச்
சீராக மாறிவிடும் ; உஷார்! 'பிறப்பு எடுத்தானே' என்று பாடலில் இருசீர்கள்
அமைத்தால் அது ' பிறப் பெடுத்தானே ' என்று மாறிவிடும் ! அதனால் தான்,
சொற்புணர்ச்சிக்குப் பின்னர் தான் வெண்பா இலக்கணம் சரியா? என்று
பார்க்கவேண்டும். ( இதை எல்லா மரபுப்பாக்களுக்கும் உரிய பொதுவிதியாகவே
கொள்ளலாம்.)
* 'காசு, பிறப்பு' ஈரசைச்சீர்கள்தான். ஆனால் எல்லா விதமான ஈரசைச்
சீர்களும் வெண்பாவின் ஈற்றுச் சீரில் வரக் கூடாது ! நினைவிற் கொள்க.
பயிற்சிகள் :
12.1
பழம் இலக்கிய வெண்பாக்களிலிருந்து, 1-3 மோனை உள்ள சில ஈற்றடிக் காட்டுகள் எழுதுக.
12.2
ஈற்றுச் சீர் வரக் கூடிய எல்லா வகைகளிலும், 1-3 மோனையுள்ள சில 'புதிய'
வெண்பா ஈற்றடிகளை இயற்றுக. ( காட்டு: கவிதை இயற்றிக் கலக்கு!)
12.3 'சராசரிக்' குறள்
குறள் வெண்பாவில் முதல் அடியில் 4 சீர்கள். இரண்டாம் அடியில் 3 சீர்கள்.
வெண்பாவின் முதல் ஆறு சீர்களில் ஈரசைச் சீர்களோ, மூவசைச் சீர்களோ வரலாம்.
ஈற்றுச் சீரில் , ஓரசையோ (நேர்,நிரை), ஈரசையோ (நேர்பு, நிரைபு) வரலாம்.
* குறளின் அசைகள் : பேரெல்லை (maximum) 20 அசைகள் இருக்கலாம். (ஏன்?)
சிற்றெல்லை (miniumum) 13 இருக்கலாம். (ஏன்?)
* 20-அசைகளுள்ள காட்டு:
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .
இப்படிப்பட்ட குறளில் மூவசைச் சீர்களே அதிகமாக வருவதால் , இதில் வரும்
ஓசையை 'ஏந்திசைச் செப்பலோசை' என்பர்.
* 13-அசைகளுள்ள காட்டு:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.
இதில் ஈரசைச் சீர்களே அதிகமாய் வருவதால் , 'தூங்கிசைச் செப்பலோசை' அமையும்.
* அப்போது, 'சராசரி' குறளுக்கு எவ்வளவு அசைகள்? (20+13)/2 = 16.5
! (17-என்று வைத்துக் கொண்டால் , 'ஹைக்கு' வில் வரும் 17- 'அசை'
களுக்கும் இதற்கும் ஒரு 'பொருத்தம்' காட்டலாம்! )
காட்டு:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (17- அசைகள்)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (16-அசைகள்)
இப்படிபட்ட குறள்களில், மூவசைச் சீர்களும், ஈரசைச் சீர்களும் விரவி
வருவதால், அமையும் ஒசை ' ஒழுகிசைச் செப்பலோசை' எனப்படும்.
* குறிப்பு : இந்த ஓசைப் பெயர்கள் தற்காலத்தில் அவ்வளவு முக்கியமில்லை.
ஓசைகள் வேறுபடும் என்பதை முன்னோர்கள் நுண்மையாகப் பார்த்து
வைத்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
அ) 13, 20, 16, 17 -அசைகள் உள்ள நான்கு குறள்களை எடுத்துக் காட்டுக.
ஆ) இது போலவே, (பழம் இலக்கிய) நான்கடி வெண்பாக்களில் பேரெல்லை,
சிற்றெல்லை, சராசரி என்று காட்டுகள் காட்டுக ('போனஸ்' மதிப்பெண் கேள்வி!)
12.4
'குடத்திலே கங்கை அடங்கும்' 'தீரமுள்ள சூரிக் கத்தி' என்பவற்றைக்
காளமேகத்தின் வெண்பா ஈற்றடிகளாகப் பல நூல்களில் பிரசுரித்துள்ளதைக்
காணலாம்.இவை வெண்பா ஈற்றடியின் இலக்கணத்தை மீறுகிறதா? விளக்குக.
13. தளைகள்
*பல 'பாடல் படிவங்களை'ப் புரிந்துகொள்ள நாம் இதுவரை பார்த்த இலக்கணம்
போதும். ( இதுவே கொஞ்சம் அதிகம்தான்!:-)) இருப்பினும், சில சமயங்களில்
சந்திப்போம் என்ற காரணத்திற்காக, தளைகளைப் பற்றிய சில குறிப்புகளுடன்,
இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
1) ஈரசைச் சீர் ஆசிரியப்பா அல்லது அகவலில் வருவதால், அதற்கு 'ஆசிரிய
உரிச்சீர்' ,'அகவற்சீர்' அல்லது 'இயற்சீர்' என்ற பெயர் உண்டு.
2) 'காய்ச்சீர்' வெண்பாவிற்குரிய சீணராதலால், 'வெண்சீர்' அல்லது 'வெண்பா
உரிச் சீர்' என்றும் அழைப்பர். அதே போல், கனிச்சீர் வஞ்சிப்பாவிற்கு உரிய
சீராதலால், 'வஞ்சிச் சீர்' என்றும் அழைக்கப்படும்.
தளைகள் மொத்தம் ஏழு:
1) மாச்சீரைத் தொடர்ந்து நேர் அசை வருதல்--> நேரொன்றாசிரியத் தளை
2) விளச்சீரைத் தொடர்ந்து நிரை அசை வருதல்--> நிரையொன்றாசிரியத் தளை
3) மாவைத் தொடர்ந்து நிரை, விளத்தைத் தொடர்ந்து நேர் --> இயற்சீர் வெண்டளை.
4) காயைத் தொடர்ந்து நேர் --> வெண்சீர் வெண்டளை
5) காயைத் தொடர்ந்து நிரை --> கலித் தளை
6) கனியைத் தொடர்ந்து நிரை --> ஒன்றிய வஞ்சித் தளை
7) கனியைத் தொடர்ந்து நேர் ---> ஒன்றாத வஞ்சித் தளை
* நூல்களில் , மா முன் நேர், விளம் முன் நேர், ..என்றெல்லாம் தளைகளை
விளக்குவர். இங்கே 'முன்' என்பதை 'வலது பக்கம்' அல்லது 'தொடர்ந்து' என்று
பொருள் கொள்ளவேண்டும்.
(தொடரும்)
(from :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9]
14. குறள் வெண்செந்துறை
இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளில் கவிதைகளின் அடிப்படை இலக்கணத்தைப்
பற்றித் தெரிந்துகொண்டோம்.
இனிவரும் பகுதிகளில் , வெவ்வேறு பாடல் படிவங்களையும், அவற்றிற்குரிய
இலக்கணங்களையும் , காட்டுகளுடன்
பயில்வோம்.
* இயற்றமிழில் பாக்கள் நான்கு வகை: வெண்பா, ஆசிரியப்பா (அகவற்பா),
கலிப்பா, வஞ்சிப்பா.
ஒவ்வொரு பாவிற்கும் இனங்கள் மூன்று : தாழிசை, துறை, விருத்தம்.
நான்கு பாக்களுக்கு இந்த மூன்றைப் பொருத்தினால் மொத்தம் 12 பாவினங்கள்
வரும். பாக்கள், பாவினங்கள் என்று வரிசையாக அவற்றின் இலக்கணத்தைப்
பயிலாமல் எளிதாக இருக்கும் சில வடிவங்களில் தொடங்கிப் பிறகு கடினமான
வடிவங்களை நாம் பார்ப்போம்.
* நாம் பார்க்கப் போகும் முதல் பாடல் படிவம்: குறள் வெண்செந்துறை. ( சில
நூல்களில் இந்த வடிவம் 'தாழிசை'
என்றும் சொல்லப்படும். ) பொருளுக்கேற்ப எளிதில் பாடுவதற்கு ஏற்ற பாவகை இது.
* இலக்கணம்:
1. அளவொத்த இரண்டு அடிகள் .
இந்தப் பாவினத்தில் 'அளவொத்தல்' என்பதை 'ஓரடியில் எத்தனை சீர் உள்ளதோ
அத்தனை சீர் அடுத்த அடியிலும்
இருக்கவேண்டும்' என்று எடுத்துக் கொண்டால் போதும். ( ஓசை நயம் கருதி,
சிலர் இந்தப் பாவினத்தில்
இன்னும் சில கட்டுப்பாடுகள் புகுத்தி, மேலும் 'அளவொத்து' வரும்படியும்
செய்வர். இவற்றைப் பற்றிக் காட்டுகளில்
பார்க்கலாம்.)
2. சீர்களுக்குள் எந்தத் தளையும் இருக்கலாம். எவ்வகைச் சீரும் வரலாம்.
எத்தனை சீர்கள்
வேண்டுமானால் வரலாம். ( பொதுவாக, கனிச் சீரையோ, நாலசைச் சீரையோ
இந்தப் பாவினக் காட்டுகளில் அதிகமாகப் பார்ப்பதில்லை. நான்கு சீர் அடிகள்
(அளவடிகள்) தான்
அதிகமாய்ப் பார்க்கிறோம். )
3. பொதுவில், இரண்டடியில் பொருள் முற்றுப் பெறும்; இந்த விதியை நெகிழ்த்தி,
கு.வெ.செ -ஐப் பல அடிகளுக்குத் தற்காலத்தில் நீட்டலாம்.
*யாப்பருங்கலத்தில் உள்ள முதற்காட்டு:
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை. (முதுமொழிக் காஞ்சி)
குறிப்பு: இந்தக் காட்டில் அடி எதுகை இல்லை; முதல் அடியில் மோனை இல்லை
என்பதைக் கவனிக்கவும். இது
இந்தப் பாடல் படிவத்தின் தொடக்க நிலையைக் காட்டுகிறது.
* பிறகு, இரண்டு அடிக்கு ஒரு எதுகை ; அடி நடுவே மோனை இவை ஓசையில்
சிறக்கும் என்று உணர்ந்தனர்.
( அளவடியில் (நான்கு சீர் அடி) 1-3- மோனை, அறுசீரில் 1-4 மோனை ;
எண்சீரடியில் 1-5-மோனை சிறக்கும்)
* காட்டுகள்:
1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே -ஔவையார்
2) செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்(து)
அம்பொன் மேருவுக்(கு) அடிமுடி ஒன்றே --குமரகுருபரர்
3) மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே
விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக்
கண்ட மாதர் பெறுவது காமமே -- சிவப்பிரகாசர் (17-ஆம் நூற்றாண்டு)
* மேற்கண்ட காட்டுகளை அலகிட்டால், அளவொத்தல் என்பது 'இரண்டடிகளும் சீருக்குச் சீர்
ஓசையில் ஒத்துப் போகவில்லை ' என்பது தெரியும். ( இந்த உத்தியைப் பின்னர்
பயன்படுத்தி, இந்தப் படிவம் ஒரு வகைத் தாழிசை, கண்ணி போன்ற படிவங்களாய்
மலர்ந்தது என்றும் சொல்லலாம். இதற்குக் காட்டுகளையும் பின்பு பார்க்கலாம். )
4) சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே
அருட்சபை நடம்புரி அருட்பெரும் சோதி
தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே -- வள்ளலார் (18-ஆம் நூ.)
5) அம்மை அப்பனை ஆர்வ மாய்த்தொழ
இம்மை நற்பயன் எய்தும் திண்ணமே
பொறிவழிச் செல்லும் பொல்லா மனத்தை
அறிவால் அடக்கில் ஆனந்தம் ஆமே -- சிவயோக சுவாமிகள் --(நற்சிந்தனை)
* அடி எதுகை இன்றி, 1-3 சீர் மோனை மட்டும் கொண்ட அடிகள் உள்ள சில காட்டுகள்:
6) தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சம் கிடையாது பாண்டி வளநாட்டில் -- அல்லி அரசாணி மாலை
* 1-3 சீர்களில் எதுகை பெற்று வந்த காட்டு .
7) ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வாளாம்
* பிறகு இன்னும் கொஞ்சம் 'அதிகமாய் அளவொத்த' காட்டுகள் இயற்றப் பட்டன. (அலகிட்டால்
எப்படிச் சீர்கள் அளவொத்து இருக்கின்றன என்பது புரியும். )
(இவற்றைத், தனிச் சொல் இல்லாத, கண்ணிகள் என்றும் சொல்லலாம்.) சில காட்டுகள் இதோ:
8) நன்றி யாங்கள் சொன்னக்கால்
. நாளும் நாளும் நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள்
. குடிலம் செய்து கொள்ளாரே. (யாப்பருங்கலம்..அறு சீர்)
9) மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ
. வணிககுலத் திலகமென வாழ்வளரு மங்கை
எண்ணரிய குணமுடையாள்; இவள்வயிற்றி லுதித்தோர்
. இருமகளிர் ஒருபுருடர் என்னவவர் மூவர். (எண்சீர்) ( மனோன்மணீயம் )
* பாரதி பயன்படுத்திய ஒரு காட்டு .
10)
இரட்டைக் குறள் வெண் செந்துறை
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
. மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
. காற்றும் புனலும் கடலுமே நான். ..பாரதி...
இதில் முதல் இரண்டு வரிகளை ஒரு குறள் வெண்செந்துறையாகவும், பின்னிரண்டு வரிகளை
இன்னொரு கு.வெ.செ -ஆகவும் கொள்ளலாம். அல்லது, முதல் இரண்டு வரிகளை ஓர் அடியாகவும்,
மற்ற இரு வரிகளை மற்றொரு அடியாகவும் எண்ணலாம்.
* இன்னும் சில உத்திகள் .
11) சம்பந்தரின் மாலை மாற்று (Palindrome) ஒரு கு.வெ.செ
யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா
இவை 'கட்டளை' அடிகள் (எழுத்தெண்ணிக்கையில்... ஒற்றுகளைக் கணக்கிடக் கூடாது)
'தேமா தேமா தேமாங்காய்' என்னும் வாய்பாட்டுச் சீர்கள் வருவதைக் கவனிக்கவும்.
ஒரடிக்கு 14 எழுத்துகள் .
12) பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டின் காப்புச் செய்யுளும் ஒரு கு.வெ.செ
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்மணி வண்ணாஉன் செவ்வடி செவ்வி திருக்காப்பு
ஒற்று நீக்கி 19 எழுத்துகள் வருவதைப் பார்க்கவும்.
கு.வெ. செ அடிகளுக்கு கட்டளை வேண்டியதில்லை; ஆனால் பாடுபவரின் திறம் பொறுத்து
கட்டளை பெறுதல் உண்டு என்று கொள்ளலாம்.
* கு.வெ.செ -வில் வெண்டளை வருதல். ( வெண்டளை வருதல் இந்தப் பாவகையில்
விதியன்று என்பதை நினைவிற் கொள்க.) இவற்றைக் கண்ணி என்ற இசைப்பாடல்
என்றும் சொல்ல வாய்ப்பு உண்டு. இதனால் பாடலுக்கு ஓசை நயம் மிகுவதைப் பார்க்கலாம்.
13)
பூமாது நாமாது போதசுக மாமாது
நாமேவு போரூர்ச் சரவண நாயகனோ -- சிதம்பர சுவாமிகள் (17-ஆம் நூற்றாண்டு)
வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே --தாயுமானவர்
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே !
ஓசை அளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே ! --பாரதிதாசன்
14) பாரதியின் 'கண்ணன் -என் சேவகன்' .. 64-அடிகள் கொண்ட இதுவும் வெண்டளை
பயின்ற கு.வெ.செ என்று சொல்லலாம்.
இந்தப் பாடலின் முதல் இரண்டு அடிகள்:
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
( இதில் கடைசி அடி வெண்பா போல் மூன்று சீராய் முடிந்திருந்தால்,
இது ஒருவகை வெண்பா (கலிவெண்பா) என்றே ஆய்வாளர்கள் சொல்லியிருப்பர்.)
*யாப்பிலக்கண நூல்களில் 'கு.வெ.செந்துறை' 'விழுமிய' பொருளுடையதாக இருக்க வேண்டும்
என்று எழுதியிருக்கும். தற்காலத்தில், இதை யார் நிர்ணயிப்பது? ஆபத்தான வேலை!
நான் எழுதிய இரண்டு குறள் வெண்செந்துறைகள் இதோ!
15). ராமன் விளைவு
பசுபதி
பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் !
'இதற்கென்ன காரணம்?' என்றவர்க்(கு) உரைத்தார்:
"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"
ராமன் விளைவு= Raman Effect
16).சொல்லின் செல்வன்
பசுபதி
அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
"என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும்?"
தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
"ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். "
ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். "
சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.
" 'திருமால் மாருதி!' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி'தான் ! தெளிந்தவர் களித்திடுக!"
இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !
14.1 பயிற்சி
தற்காலத்திற்கேற்ற ஒரு பொருளில் சில குறள் வெண்செந்துறைகளை எழுதுங்கள்.
~*~o0o~*~
(தொடரும்)
( from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10]
15. ஆசிரியப்பா
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்வர். சங்க காலத்தில் இந்தப் பாவினம்
அதிகமாகப் பயன்பட்டது.
நான்கு வகைகள் இதனில் உண்டு; நிலை மண்டிலம், நேரிசை , இணைக்குறள், அடிமறி
மண்டிலம்.
அ) நிலை மண்டில ஆசிரியப்பா
முதலில் இரு காட்டுகளைப் பார்ப்போம்:
சிலப்பதிகாரத்தில் இருந்து ஒன்று:
1)
"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்று...."
2) பாரதியின் பா இன்னொன்று.
வாழிய செந்தமிழ்!
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
(பாரதி)
-----
பாரதியின் பாடல் நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும். பார்த்தால், குறள்
வெண்செந்துறைகள் அடுக்கியபடி தோன்றுகிறது அல்லவா? இதன்
(தற்காலத்திற்கேற்ற)
விதிகள்:
1) ஒவ்வோர் அடியிலும் 4 சீர்கள் ( அளவடிகள்) . ( நடுவில், சிற்சமயம், தனிச்சொல்
வருவதுண்டு; காட்டுப் பிறகு)
2) குறைந்த அளவு மூன்று அடிகள்.
3) ஈரசைச் சீர்கள் வரும். அருகி மூவசைக் காய்ச் சீர் வரும். கருவிளங்கனி,
கூவிளங்கனி
என்ற வஞ்சிக்குரிய சீர்கள் வரக் கூடாது.
4) 1, 3 சீரில் மோனை சிறப்பு
5) இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகை சிறப்பு. (இது மிகக் கடினம். முடிந்தவரை, எதுகை
அமைத்து, அங்கங்கே அடி எதுகை இல்லாமலும் இயற்றலாம்)
6) ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
7) 'அகவல் ஓசை' இருக்கவேண்டும். ( கவிதைக் கருத்தை மனதில் கொண்டு, ஈரசைச்
சீர்களைப்
பயன்படுத்தி ஆசிரியப்பா எழுதினால் இயற்கையாகவே, ஆசிரியத்தளையும்,
வெண்தளையும் விரவி வரும். கவிதை முழுதும் வெண்டளை வந்தால் பிறகு அதை
'அகவல் ஓசை' கொண்ட ஆசிரியப்பா என்று சொல்வது கடினம்! )
குறிப்பு:
i. ஆசிரியப்பா ஏகாரத்தில் முடிவது சிறப்பு ; அதுவே தற்காலத்தைய பெரும்பான்மை மரபு.
( சிறப்பு என்றால் மற்றவை வரக்கூடாது என்ற பொருளில்லை!)
(காரிகை உரை: "ஆசிரியப்பா நான்கிற்கும் 'ஏ' என்னும் அசைச் சொல்லால்
இறுவது சிறப்புடைத்து".)
( ஓ,என்,ஈ,ஆய்,ஐ ..என்ற மற்ற முடிவுகளையும் சொல்கிறது யாப்பருங்கலம்) .
ஒற்றுகளில் முடிவதற்கும் பழைய இலக்கணம் வழிகொடுக்கிறது. ( பாரதிதாசன்
'ல்' என்று ஒன்றை முடித்திருக்கிறார்.)
ii. பாரதியின் 'வந்தே மாதர'த்தில் 'ஐ' 'ஈ' 'இ' என்ற முடிவுகளைப் பார்க்கலாம் ;
கவிமணி தே.வி.பிள்ளையின் 'ஆசிய ஜோதி' பல அகவல்கள் கொண்ட ஒரு நீண்ட கதை;
அதில் நிலை மண்டில அகவல்களில் 'ஆ' 'ஏ', க, ம், ள்,ர்,ன் என்ற ஈற்றுகளைப்
பார்க்கலாம்.
நேரிசை அகவல்கள் எல்லாம் 'ஏ'காரத்தில் முடியும்.
iii. சிலம்பு, மணிமேகலை, பெருங்கதை..இவற்றின் ஆசிரியப்பாக்கள் 'என்' என்ற
அசையில் முடிகின்றன.
iv. சங்ககால நேரிசை அகவல்கள் 'ஏ'யிலும், நிலை மண்டில அகவல்கள் 'என்'
னிலும் முடியும்.
ஆ) தனிச்சொல் பெற்றுவந்த நிலை மண்டில ஆசிரியம்.
3)
காட்டு:
பாரத மாதா நவரத்னமாலை
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்
குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்,
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திர னாகிய ரவிந்திர நாதன்
சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி"யென் றுரைத்தான்
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர்தம்
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
(வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! )
---பாரதி-----
இ) நேரிசை ஆசிரியப்பா
நிலை மண்டிலம் மாதிரியே எல்லா விதிகளும். ஆனால், ஈற்றயலடி (கடைசி அடிக்கு
முதல் அடி)யில் மூன்றே சீர்கள் வரும்.
4)
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே.
யாய் = என் தாய்; ஞாய் = உன் தாய்;
எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை;
கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்.
(குறுந்தொகை )
5)
கடமை யாவன, தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உமையெனுத் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும், பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்ட
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.
(பாரதி)
ஈ) அடிக்குள் எதுகை பெற்று வரும் ஆசிரியப்பா
ஒவ்வொரு அடியிலும் 1, 3 சீர்களில் எதுகை வரும்; இதனால் அகவல் தனியான,
அழகான ஒரு ஓசை பெறும் .
இப்படிப்பட்ட ஆசிரியப் பாக்களில் இரண்டடிக்கு ஓர் எதுகையோ, அடிதோறும்
மோனையோ வேண்டியதில்லை.
காட்டு:
6)
......
இமைப்பொழு தேனும் தமக்கென அறிவிலா
ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை
எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை
இன்பம் எனவே துன்பம் இலையெனப்
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க
ஆதர வாகக் காதலும் அமைத்திட்டு
ஊகம் இன்றியே தேகம் நான்என
.....
(தாயுமானவர்)
உ) இணைக்குறள் ஆசிரியப்பா
இடையிடையில் , இரு சீரடிகள், மூன்று சீரடிகள் வரும் ஆசிரியப்பா.
(முதலடியும், கடைசி அடியும் அளவடிகளாகவே இருக்கும்). இவ்வகையில்
தற்காலத்தில் பலர் இயற்றுவதில்லை. (குறிப்பு: இது , வடிவில், தற்காலப்
புதுக்கவிதை மாதிரி இருக்கும் !)
காட்டு: திருமுருகாற்றுப்படை; திருஞானசம்பந்தரின், நக்கீரரின் திருவெழுக்
கூற்றிருக்கைகள், பாரதிதாசனின் சில பாடல்கள் ( காட்டு: கடற்மேல்
குமிழிகள் 29 )
ஊ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
எல்லா அடிகளும் அளவடியாய்(நான்கு சீரடி) வந்து, எந்த அடியை முதலில்
வைத்தாலும் பொருள் மாறாதபடி இருக்கும் ஆசிரியப்பா.
7)
தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி உரைத்தல் அறிஞர்தங் கடனே.
(புலவர் குழந்தை )
( தொடரும் )
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11]
16. வஞ்சித் துறை
<><><><><><><>
* வஞ்சிப்பாவில் இருசீரடியும், முச்சீரடியும் வரும். அதன் இனமாக வருவது
வஞ்சித் துறை.
* 'இருசீர் கொண்ட அடி நான்கு' என்பது வஞ்சித் துறையின் இலக்கணம். ஆனால்
சீர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பழம் இலக்கண நூல்கள் கூறவில்லை.
இலக்கியச் சான்றுகளைப் பார்த்துப் பழக வேண்டும்.
*சில சான்றுகள்:
அற்றது பற்றெனில்
உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே . (நம்மாழ்வார்)
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. (நம்மாழ்வார்)
மங்கை பங்கினீர்
துங்க மிழலையீர்
கங்கை முடியினீர்
சங்கை தவிர்மனே (சம்பந்தர்)
* கட்டளை அடிகளும் வரும்.
கல்லா நெஞ்சின்
நில்லான் ஈசன்
சொல்லா தாரோ
டல்லோம் நாமே ( சம்பந்தர் )--( அடிக்கு 4 எழுத்துகள்.)
ஓடும் புள்ளேறிச்
சூடும் தண்துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானை . ( நம்மாழ்வார் ) -- (5 எழுத்துகள்.)
அரனை உள்குவீர்
பிரம னூருளெம்
பரனை யேமனம்
பரவி உய்ம்மினே. (சம்பந்தர் -- 6 எழுத்துகள்)
நீதியன் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே ( நம்பியாண்டார் நம்பி - 7 எழுத்துகள்.)
*கம்பனின் சந்த வஞ்சித் துறை
உண்டநெ ருப்பைக்
கண்டனர் பற்றிக்
கொண்டணை கென்றான்
அண்டரை வென்றான்.
உற்றக லாமுன்
செற்றகு ரல்கைப்
பற்றுமி னென்றான்
முற்றுமு னிந்தான் ( அடிக்கு 5 எழுத்துகள்.)
(சந்தப் பாடல்களில் மோனையை உரிய இடத்தில் அமைப்பது கடினம். ஈற்றடியில்
வரும் 'மு'வைக் கவனிக்கவும். வகையுளி வரும்.)
* முடுகியல் ஓசை (இருகுறில் இணைந்து வருவது) வரும் பாடல்கள் உண்டு.
வழிதரு பிறவியின்உறு
தொழிலமர் துயர்கெடுமிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணை அடிஇசைமினே ( நம்மாழ்வார் )
( கருவிளம், கருவிளங்கனி -- என்ற வாய்பாடு)
* அடி மறியாய் வருவதை வஞ்சி 'மண்டில'த் துறை என்றும் சொல்வர்.
(காய், கனிச்சீர்கள்)
முல்லைவாய் முறுவலித்தன
கொல்லைவாய்க் குருந்தீன்றன
மல்லல்வான் மழைமுழங்கின
செல்வர்தேர் வரவுண்டாம் (யாப்பருங்கலம் )
* அந்தாதித் தொடை.
பாரதி 'கண்ணன் திருவடி' என்னும் பாடலில் எட்டு வஞ்சித் துறைப் பாடல்களை
அந்தாதி முறையில் பாடியுள்ளார்.
காட்டு: (முதல் இரண்டு மட்டும்):
கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே. ( நம்மாழ்வாரின் தாக்கம் கண்கூடு.)
தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.
* வஞ்சித் தாழிசை
ஒரே பொருளைப் பற்றி , மூன்று வஞ்சித் துறைகள் இயற்றினால், அவற்றை
'வஞ்சித் தாழிசை' என்று சொல்வர்.
இருவ ரும்எதிர்
பொருதும் வேலையின்
அருகு நின்றவர்
வெருவி ஓடினார். (1)
வாளி னால்ஒரு
தோளை வீழ்த்தஓர்
தோளி னாலவன்
வாளை இட்டனன். (2)
இட்ட வாள்கரம்.
ஒட்டித் தட்டிப்பின்
நட்ட மாகென
வெட்டி வீழ்த்தினான். (3) ( சூளாமணி )
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ]
17. வஞ்சி விருத்தம்
<><><><><><><><>
* 'முச்சீரடிகள் நான்கில் அமைவது வஞ்சி விருத்தம்' என்பதே இந்தக்
கவிதையின் இலக்கணம். மூன்று சீர்கள் வஞ்சிப்பாவில் வருமாதலால், இந்த
விருத்தத்தை வஞ்சிப் பாவின் இனமாகக் கருதினர் முன்னோர். மற்றபடி சீர்
வாய்பாடு, தளை போன்ற வேறு கட்டுப்பாடுகள் இலக்கணத்தில் கொடுக்கப்
படாதலால், இதுவும் ஒரு நெகிழ்ச்சியான வடிவம் தான். அதிகக் கட்டுப்பாடுகள்
இன்றி, கருத்துக்கேற்பப் பாக்கள் இயற்றலாம்.
சான்றுகள்:
*
திண்ணம் காணீர்! பச்சை
வண்ணன் பாதத் தாணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம். ( பாரதி )
இந்த விருத்தம் 'பாரத மாதா நவரத்தின மாலை' யில் உள்ளது. முதல் இரண்டு
அடிகள் 'மூன்று தேமா' என்ற வாய்பாட்டிலும் ( 6 எழுத்துகள்) , மூன்றாம்
அடி ' தேமா, புளிமா, தேமா' ( 7 எழுத்துகள்) என்ற வாய்பாட்டிலும்,
நான்காம் அடி ' தேமா, கருவிளம், தேமா' ( 8 எழுத்துகள்) என்ற
வாய்பாட்டிலும் இருக்கின்றன.
நாமக்கல் கவிஞரின் ஒரு வஞ்சி விருத்தம்.
அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
அன்னையை மறந்தோம் நேசர்களே!
முன்னைய பெருமைகள் முற்றிலுமே
முயன்றால் தமிழகம் பெற்றிடுமே.
( 'முன்னைய, முயன்றால்' சீர்களுள் உள்ள மோனையைப் பார்க்கவும்)
இந்தக் காட்டுகள் வஞ்சி விருத்தம் இயற்றுவதில் உள்ள நெகிழ்வைச்
சுட்டுகின்றன. மேலும் சில கட்டுப்பாடுகளை ( சீர் வாய்பாடு, கட்டளை அடிகள்
போன்றவை) வைத்தும் வஞ்சி விருத்தங்கள் இயற்றலாம். அதற்குச் சில
சான்றுகளைக் கீழே பார்க்கலாம்.
* மா, விளம், விளம் என்ற வாய்பாடு
கொந்தார் திருமகிழ் மார்பினர்
செந்தா மரையடி சேர்பவர்
தந்தா வளமுறை நாரணன்
அந்தா மந்தனை ஆள்வரே ( மாறன் பாப்பாவினம் )
* புளிமா, கூவிளம், கூவிளம்
நரக வாதையில் வன்புறார்
தரணி மீதொரு கொன்பெறார்
சுரரு லோகமும் இன்புறார்
அருணை நாயகர் அன்பறார் ( எல்லப்ப நாவலர் )
(அடிக்கு 6 எழுத்துகள். )
* விளம், மா, மா என்ற வாய்பாடு
கூறுவார் கோடி பாவம்
நீறுமே நெஞ்சில் எண்ண
ஆறுவார் அகத்தில் ஈசன்
சேருமே சிந்திப் பாயே ( சிவயோக சுவாமிகள் )
* கருவிளம், தேமா, புளிமாங்காய்
உழையென வெங்கை உவப்பானார்
தழலுரு என்ற தரத்தாலோ
விழவெமை இன்று வெதுப்பாமே
லெழுமதி ஒன்றை எடுத்தாரே ( சிவப்பிரகாசர் )
( அடிக்கு 10 எழுத்துகள் )
*இயற்சீர் வெண்டளை பயிலும் விருத்தம்
ஈடும் எடுப்புமில் ஈசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமென் அங்கம ணங்கே ( நம்மாழ்வார் )
(அடிக்கு எட்டு எழுத்துகள்)
* சீர் வாய்பாடு வேறுபடினும், கட்டளை அடிகளாய்ப் பல வஞ்சி விருத்தங்கள் அமையும்.
சுற்றினர் சுற்றி வளைத்தார்
பற்றினர் பற்றி மிதித்தார்
எற்றினர் எற்றி அடித்தார்
பற்றலர் சட்டினி ஆனார். ( சுத்தானந்த பாரதி )
( அடிக்கு 8 எழுத்துகள்.)
* கம்பனின் சந்த வஞ்சி விருத்தங்கள்
*விருத்தம் -1
தத்தா தந்தன தந்தானா என்ற சந்தம்
கைத்தோ டுஞ்சிறை கற்போயை
வைத்தா னின்னுயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோ டொப்பது யாதுண்டே ! ( கம்பன் )
*விருத்தம் -2
தத்தன தத்தன தந்தா என்ற சந்தம் .
பற்றுதிர் பற்றுதி ரென்பார்
எற்றுதி ரெற்றுதி ரென்பார்
முற்றினர் முற்றுமு நிந்தார்
கற்றுணர் மாருதி கண்டான் ( கம்பன் )
*விருத்தம் -3
தான தந்தன தத்தனா என்ற சந்தம்
ஊனு வுயர்ந்தவு ரத்தினான்
மேனி மிர்ந்தமி டுக்கினான்
தானு யர்ந்தத வத்தினான்
வானு யர்ந்தவ ரத்தினான் ( கம்பன் )
( ஊ,உ; மே,மி; தா, த ; வா,வ 'மோனை'களைக் கவனிக்கவும். சந்தப் பாக்களில்
இப்படி 'உள்மோனை' வருவதுண்டு. இப்படிபட்ட மோனைகளைக் 'கள்ளமோனை' என்று
சொல்வாரும் உண்டு. )
*விருத்தம் -4
தந்த தான தானனா என்ற சந்தம்
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையே
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன் ( கம்பன் )
(அடிகளுள் உள்ள 1-3 மோனையைப் பார்க்கவும்)
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13]
18. கலிவிருத்தம்
<><><><><><><>
* எல்லா விருத்தங்களைப் போல் கலிவிருத்தத்திலும் நான்கு அடிகள் . ஒவ்வொரு
அடியிலும் 4 சீர்கள் . நான்கு அடிகளுக்கும் ஒரே எதுகை; ஒவ்வோர் அடியிலும்
1-3 சீரில் மோனை இருப்பது சிறப்பு.
* சில காட்டுகள்:
கலி விருத்தம் -1
=============
விளம் விளம் மா கூவிளம் என்ற அமைப்பு
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில் ,
நெடில்+ஒற்று வராது)
சான்று:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசி வாயவே. ( அப்பர் தேவாரம் )
* கம்பன் பாடிய மிகுதியான கலிவிருத்தங்கள் இந்த வகையே .
வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்
செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் . ( கம்பன் )
கலிவிருத்தம் -2
===========
மா கூவிளம் கூவிளம் கூவிளம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே . ( கம்பன் )
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
* விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில்
தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை
அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்.)
சான்றுகள்:
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் ( சேக்கிழார் )
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ ( கம்பன் )
* கம்பன் மிகுதியாகப் பாடிய இன்னொரு வகை இது.
கலி விருத்தம் -3
=============
மா கூவிளம் மா கூவிளம்
வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுனர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரையி லாமையால்
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால் ( கம்பன் )
கலி விருத்தம் - 4
===========
தேமா புளிமா புளிமா புளிமா .
ஆடும் பரிவேல் அணிசே வலென
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கரிமா முகனைச் செருவில்
சாடும் தனியா னைசகோ தரனே. ( கந்தர் அனுபூதி )
கலி விருத்தம் -5
=============
விளம் விளம் விளம் மா
எறிந்தன எய்தன இடியுரு மெனமேல்
செறிந்தன படைக்கலம் இடக்கையின் சிதைத்தான்
முறிந்தன தெறுங்கரி முடிந்தன தடந்தேர்
மறிந்தன பரிநிரை வலக்கையின் மலைந்தான் ( கம்பன் )
கலி விருத்தம் -6
=============
புளிமா புளிமா புளிமா புளிமா ( சந்தக் கலிவிருத்தம் )
தனனா தனனா தனனா தனனா
மலையே மரனே மயிலே குயிலே
கலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைநே டினிர்போய்
உலையா வலியா ருழைநீ ருரையீர் ( கம்பன் )
முதற்சீர் தேமா ( தன்னா, தந்தம் ) என்று தொடங்குவதும் உண்டு.
கலி விருத்தம் -7
=============
காய் காய் காய் மா ( சந்தக் கலி விருத்தம் )
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி
அஞ்சலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ( கம்பன் )
* முதற்சீர் நிரையில் தொடங்குவதும் உண்டு.
கலி விருத்தம் - 8
===============
கனி கனி கனி மா ( சந்தக் கலி விருத்தம் )
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளை சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இவரே. ( சம்பந்தர் )
*
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையானொடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான் ( கம்பன் )
கலிவிருத்தம்- 9
===========
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் ( ஆண்டாள் )
* அடிகளுக்குள் வெண்டளை இருக்கும் ; அடிகள் நடுவே தளை பார்க்க
வேண்டியதில்லை. இவ்வகையை 'வெண்டளை பயிலும் கலிவிருத்தம்'
என்று சொல்லலாம். வெண்டளை தவறாமல் மா, விளம், காய் ஆகிய சீர்கள் எங்கும் வரலாம்.
கம்பர் 90-க்கு மேல் இப்படி பாடியுள்ளார்.
ஒரு காட்டு:
கிள்ளையொடு பூவை அழுத கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை அழுத உருவறியாப்
பிள்ளை அழுத பெரியோரை என்சொல்ல?
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். ( கம்பன் )
* இன்னும் கலிவிருத்தத்தில் பல வகைகள் உள்ளன. சான்றாக , ' மூன்று
கூவிளம், தேமா' ' கூவிளம் புளிமாங்காய், கருவிளம், புளிமாங்காய்' '
நான்கு கருவிளம்' ' கூவிளம், கருவிளம், கருவிளம், தேமா' போன்ற
வாய்பாடுகளில் பல சந்தக் கலிவிருத்தங்களைக் கம்பன் பாடியிருக்கிறான்.
பார்த்தறிக.
பின் குறிப்பு:
==================
உருவாய்
அருவாய்க்
குருவாய்
வருவாய் ! ( ஒருசீர் அடி 'விருத்தம்'!)
உருவாய் அருவாய்
மருவாய் மலராய்க்
கருவாய் உயிராய்க்
குருவாய் வருவாய் ! ( வஞ்சித் துறை --இருசீர் அடி விருத்தம் )
வஞ்சித்துறையை இரட்டித்தால் :
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ( கலிவிருத்தம் )
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் குகா. ( இயற்சீர்கள் வரும் வெண்பா )
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/may07/?t=9719
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14]
19. தரவு கொச்சகக் கலிப்பா
<><><><><><><><><><><><>
முந்தைய பகுதியில் பலவகைக் கலிவிருத்தங்களைப் பார்த்தோம். நான்கு சீர் அடிகள்
நான்கு அளவொத்து வருவதைக் கலிவிருத்தம் என்றறிந்தோம். கலிவிருத்தம்
போலவே தோன்றும் ஒரு செய்யுள் நான்கடித் தரவு கொச்சகக் கலிப்பா. தரவின்
இலக்கணத்தையும், சில காட்டுகளையும் இப்போது பார்க்கலாம்.
* நான்கு சீர், நான்கடித் தரவு கொச்சகங்களைத்தான் அதிகமாக இலக்கியங்களில்
பார்க்கலாம். ஐந்தடி, ஆறடி, எட்டடிப் பாக்களும் உள்ளன. மிக எளிதாக, இனிமையுடன்
இயற்ற இடங்கொடுக்கும் கவிதை வடிவம் இது.
* தரவில் பெரும்பாலும் காய்ச்சீர்களே வரும்; விளச் சீர்களும் அவ்வப்போது
வரும். செய்யுளில்
கலித்தளையும் , வெண்டளையும் அமைந்திருக்கும். (இவ்விரு தளைகளே இப்பாடலுக்குச்
சிறப்பு.). மாச்சீர் தரவில் அருகியே வரும்; அப்படி வந்தால், மாவைத் தொடர்ந்து நிரை
வந்து, இயற்சீர் வெண்டளை அமையும். மிக அருகி, விளத்தைத் தொடர்ந்து நிரை (
நிரையொன்றிய ஆசிரியத்தளை) வரும்.
* முழுதும் வெண்டளையே பயிலும் கொச்சகக் கலிப்பாக்களும் உண்டு.
*சில காட்டுகள்:
1.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
-- மாணிக்கவாசகர் --
கற்பகத்தின் பூங்கொம்போ காமந்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன்என் றதிசயித்தார்
-- சேக்கிழார் --
கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவன் உயர்தோளான்
வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான்
கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னும் குறியுடையான்
-- கம்பன் --
கலித்தளையும், வெண்டளையும் விரவிவந்த தரவுகள் இவை.
அடியெதுகை, பல அடிகளில் 1,3 சீர் மோனை இவற்றைக் கவனிக்கவும்.
2.
ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்
மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே
ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்
பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே.
-- தாயுமானவர் ---
மூவசைச் சீர்கள் மிகுதியாகவும், சில ஈரசைச் சீர்களும் வந்து, வெண்டளை
பயிலும் தரவு இது.
'மாச்சீரைத் தொடர்ந்து நிரையசை' வருவதைப் பார்க்கவும்.
3.
பாயுமொளி நீஎனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீஎனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா
-- பாரதி --
( கடைசி அடியில் , கனிச்சீர் அருகி வந்துள்ளது.)
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்
வேதனைகள் இனிவேண்டா; விடுதலையோ திண்ணமே .
-- பாரதி --
4.
வெள்ளைத் துகிலுடுத்து வெட்டிருந்த பட்டணிந்து
கள்ளக் குறிசிறிதும் காட்டா முகத்தினளாய்
அள்ளிச் செருகிவிட்ட அழகான கூந்தலுடன்
பிள்ளை மொழிவதெனப் பின்னுகின்ற சொற்பேசி
மெள்ளத் தலைகுனிந்தே மெல்லியலாள் நின்றிருந்தாள்
-- நாமக்கல் கவிஞர் --
இது ஒரு ஐந்தடித் தரவு.
5.
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த திருமேனி பாடுதும்காண் அம்மானாய்
-- மாணிக்கவாசகர் ---
ஒரே விகற்பம் (ஆறு அடிகளுக்கும் ஒரே எதுகை) வெண்டளை பயிலும் ஆறடித் தரவு இது.
தலையாய எதுகையைக் கவனிக்கவும்.
6.
திருப்பாவையும், திருவெம்பாவையும் ஒருவிகற்பத்தில் (ஒரே எதுகை) வெண்டளையால்
வந்த எட்டடித் தரவுகள்.
ஏற்ற கலங்க ளெதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றா ருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணிய மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!
-- திருப்பாவை --
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதெனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே!
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்!
-- திருவெம்பாவை --
(தொடரும்)
(from:http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869
)
. . பசுபதி .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15]
20. பரணித் தாழிசை
<><><><><><><><>
* பரணித் தாழிசையில் அளவொத்த ஈரடிகள் பயிலும். பரணி நூல்கள் இவ்வகைத்
தாழிசைகளால் மட்டுமே யாக்கப் பட்டன. இத்தாழிசைகளில் உள்ள ஓசை நயம்
ரசிக்கத்தக்கது.
* அளவொத்த ஈரடிகளில் வரும் பாவினங்கள் பல உண்டு; அவை ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை தாம். யாப்பில் நடந்த புதிய பரிசோதனைகளையே இத்தொடர்புகள்
காட்டுகின்றன. குறள் வெண்செந்துறை பிற்காலத்தில் சிந்துவாக வளர்ந்தது
(இன்னும் வளரும் என்று கூடச் சொல்லலாம்.) அதே மாதிரி, 'பரணித்
தாழிசை'க்கும் குறள்வெண்செந்துறைக்கும் தொடர்புண்டு. இரண்டும் 'அளவொத்த'
ஈரடிகள் தான். பழங்காலத்தில் கு.வெ.செ அறம் பற்றித்தான் இருக்கும்; பரணி
வீரத்தைப் பற்றி இருக்கும். மேலும், பரணித் தாழிசை விருத்தத்தின்
செம்பாதி போல இருக்கும். (கு.வெ.செ -இல் இவ்வளவு கட்டுப்பாடு
வேண்டியதில்லை; இருந்தால் தவறன்று.) இந்த ஓசையே பரணித் தாழிசைக்கு ஒரு
தனிப் பொலிவைத் தரும். கீழே கொடுத்திருக்கும் காட்டுகளில் உள்ள ஓசையைக்
கேளுங்கள்; வடிவத்தைப் பாருங்கள். பெயர் அவ்வளவு முக்கியமில்லை!
பரணி இலக்கியங்களில் இரு சீரடித் தாழிசை முதல் பதினாறு சீரடித் தாழிசை
வரை காட்டுகள் கிடைக்கின்றன. சந்தம் பயிலும் சில தாழிசைகளைச் சந்தக்
குறள் தாழிசை என்றும் சிலர் அழைப்பர்.
சில காட்டுகள்:
* இருசீரடித் தாழிசை
பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய்
மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவே
. . தக்க யாகப் பரணி (த) . .
( இதை நாற்சீரடித் தாழிசையாகவும் முச்சீரடித் தாழிசையாகவும் எழுதலாம்.)
* முச்சீரடித் தாழிசை
முழங்கின முழங்கின முரசமே
தழங்கின எதிர்எதிர் சங்கமே .. த ..
( இதை வஞ்சி விருத்தத்தில் பாதி எனலாம்)
* நாற்சீரடித் தாழிசை
அ) பூவைத் தாலும் புகுதற் கரும்பொலங்
காவைத் தாலைந்து சோலை கவினவே. .. த ..
இவை கட்டளை அடிகள். ( நேர் அசையில் தொடங்கினால் 11 எழுத்துகளும் ,
நிரையில் தொடங்கினால் 12 எழுத்துகளும் வரும். முதல் சீருக்கும், இரண்டாம்
சீருக்கும் இடையே நேரொன்றாசிரியத் தளை ( மாவைத் தொடர்ந்து நேர்.)
அடியில் மற்றபடி வெண்டளை பயிலும். ( கலிவிருத்தம் வகை-2 -ஐப் பார்க்கவும்
)(இப்படிப் பட்ட அடிகள் இரட்டித்தால் ... அல்லது கலிவிருத்தம்-2 அடிகள்
இரட்டித்தால்...கட்டளைக் கலிப்பா என்ற வடிவம் வரும் என்பதைப் பின்னால்
பார்க்கலாம். )
குறிப்பு:
நாற்சீரடித் தாழிசை அளவொத்திருந்தால் போதும் . கட்டளை அடிகளாக
அமையவேண்டும் என்ற அவசியமில்லை. அமைந்தால் நன்று.
அளவொத்து வருதல் என்பதே தாழிசையின் பொதுவிதி .நாற்சீரடித் தாழிசை
வடிவங்கள் இரண்டு வகையில் வருகின்றன: ஏதாவது ஒரு கலிவிருத்தத்தில் பாதி
போல் இருக்கும் அல்லது கட்டளைக் கலிப்பாவின் செம்பாதி அமைப்புடன் ஒத்துப்
போகும். சில வாய்பாட்டில் தானாகவே கட்டளை அடிகள் வந்து விடுகின்றன.
ஆ) அடி = காய் + காய் + காய் + மா
அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார்
நகவனசம் மலர்குவிய வலம்வருவர் நகரே
. . . த . .
இ) அடி = கனி +கனி + கனி + மா
அலைநாடிய புனல்நாடுடை அபயற்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின் . . கலிங்கத்துப் பரணி (க)
இதைக் கலிவிருத்தம்-8 -இன் பாதி என்று சொல்லலாம். இப்படியே பலவகைக்
கலிவிருத்த வாய்பாடுகளிருந்து பரணித் தாழிசை வடிவங்களைப் பெறலாம்.
(அல்லது நாற்சீரடிப் பரணித் தாழிசைகளை இரட்டித்துக் கலிவிருத்தப்
படிவங்கள் பெறலாம். )
* ஐஞ்சீரடித் தாழிசை
சதகோடி விததாள சதிபாய முகபாகை குதிபாய்கடாம்
மதகோடி உலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம். . . த . .
இதில் அடி = நான்கு புளிமாங்காய் + புளிமாங்கனி . 21 எழுத்துகள் கொண்ட கட்டளை அடி.
அடி= நான்கு ஈரசைச் சீர்கள் + மூவசைச் சீர் என்றும் வரும்.
(காட்டு)
பொங்க மளிபுண ரித்துயில் வல்லி புறங்கடையில்
சங்கம் அளிப்பன ரத்னவி தஞ்ச தகோடியே . . த . .
( இரண்டாம் அடியில் மூவசைச் சீரிடத்தில் 'தகோடியே' என்ற ஈரசைச் சீர்
வந்ததைக் கவனிக்கவும். மரபுப் பாக்களில் காய்ச்சீருக்குப் பதில்
விளச்சீர் சிலசமயம் வரும்/வரலாம். மேலும் விசேஷமாக, கடைசி நிரை அசை
'குறில்-நெடில்'(டியே) ஆக வந்து ஈரசைச் சீர் 'விளா'ச் சீராக
இருக்கும்போது, அது மூவசைச்சீருக்கு ஒத்த ஓசையைக் கொடுக்கும். )
இந்த வகை இரட்டித்தால் கலித்துறை என்ற பாவினம் வரும் என்பதைப் பின்னர்
பார்க்கலாம்.
* அறுசீரடித் தாழிசை
முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ . . க . .
எடும்எடும் எடுமென எடுத்ததோர்
. இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
. விடும்விடும் எனும்ஒலி மிகைக்கவே
* எழுசீரடித் தாழிசை
விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
. வெகுளி மென்குதலை துகிலினைப்
பிடிமின் என்றுபொருள் விளைய நின்றருள்செய்
. பெடைந லீர்கடைகள் திறமினோ . . . க . .
இதில் 25 எழுத்துகள் கொண்ட கட்டளை அடிகள் இருப்பதைப் பார்க்கவும்.
பொரிந்த காரை கரிந்த சூரை
. புகைந்த வீரை எரிந்தவேய்
உரிந்த பாரை எறிந்த பாலை
. உலர்ந்த ஓமை கலந்தவே
அளக பாரமிசை அசைய மேகலைக
. ளவிழ ஆபரண வகையெலா
மிளக மாமுலைக ளிணைய றாமல்வரு
. மியன லீர்கடைக டிறமினோ . . க. .
* எண்சீரடித் தாழிசை
விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
. மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே உண்ணப்
. பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின் . க .
தரைமகளும் தன்கொழுநன் உடலந் தன்னைத்
. தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்ணாட்
டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
. ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்
* பரணிகளில் பதின்சீரடி, பன்னிருசீரடி, பதினாறு சீரடிச் சந்தத்
தாழிசைகளுக்குப் பல காட்டுகள் உள்ளன; பார்த்தறிக.
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056
)
. பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16]
21. ஆசிரியத் தாழிசை
<><><><><><><><><>
* அளவொத்த மூன்று அடிகளில் வருவது ஆசிரியத் தாழிசை. அடியில் எத்தனை
சீர்களும் இருக்கலாம்; எந்தத் தளையும் வரலாம். மூன்று அடிகளிலும் ஒரே எதுகை
இருப்பதும், அடியின் நடுவே மோனையும் இருப்பதும் சிறப்பு. இப்பாவினம் தனியாகவும்
வரலாம்; ஒரே பொருளில் மூன்று தாழிசைகள் வருவதும் உண்டு. இலக்கண
நூலாசிரியர்கள் வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை முதலியவை வரும்
பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
* காட்டுகள் :
1.
கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே லவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி.
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி.
கொல்லியந் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லிநம் மானுள் வருமே லவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.
--- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை ---
இவை, ஒரே பொருளின் மேல் அமைந்த,
வெண்டளை பயின்ற, நாற்சீரடிகள் கொண்ட பாடல்கள்.
( இதற்கும் நான்கு அடிகள் கொண்ட கலிவிருத்தத்திற்கும், மூன்றடி
வெண்பாவிற்கும் உள்ள தொடர்புகளை ஆய்ந்து அறிக.)
2.
சிற்றம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
கற்றைச் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
மற்றப் புனல்மங்கை வாணுதலை யொக்குமால்
பேரம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
வார்செஞ் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
நீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால்
பொன்னம் பலத்து நடிக்கும் சிவபெருமான்
மின்னும் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள்
அந்நங்கை செங்கைக்கு அணிவளையு மொக்குமால்
--- சிதம்பரச் செய்யுட் கோவை ---
இதுவும் ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வந்த
ஆசிரியத் தாழிசை.
3.
வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்
---யாப்பருங்கலம்---
4.
முன்னந் தமிழகத்தை மூவா முறைபுரந்த
தன்னந் தனைநேர் தகுவண் புகழ்மூவர்
தென்னன் பொறையன் செம்பியன் என்பரால்
--- புலவர் குழந்தை ---
இவை ஆசிரியத்தளை பயிலும் நாற்சீரடிகள் கொண்டு , தனியாக வந்த
ஆசிரியத் தாழிசைகள்.
5.
வலிய அடியேன் மனத்துவந் தெய்தினான்
மலியும் அமுதுணும் வானவர் தேடியே
மெலிய அணுகலா வெங்கையில் ஈசனே
--- சிவப்பிரகாசர், திருவெங்கைக் கலம்பகம் ---
( இதனையும் நிலைமண்டில ஆசிரியப்பாவையும் ஒப்பிடுக.)
6.
சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்
அத்தமு மாகலின் அனந்தன் கண்களே
உத்தம னைந்தெழுந் துருவம் காண்பன.
-- குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட் கோவை --
7.
திங்களடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள் ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே !
-- பாரதிதாசன், 'சங்கநாதம்' --
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168
)
. . பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17]
22. கலித்தாழிசை
கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும்; இரண்டிற்கு அதிகமான பல அடிகளிலும் வரும்.
முக்கியமாக, கடைசி அடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும்.
மற்ற அடிகளின் சீர்கள்
அளவொத்தும் வரும்; அளவொவ்வாமலும் வரும். (20-இல் நாம் பார்த்த பரணித் தாழிசையில்
எப்போதும் அளவொத்த இரண்டடிகள் தாம் வரும் என்பதை நினைவிற் கொள்க.)
மேலும், கலித்தாழிசை
தனியாகவும் வரலாம்; ஒரே பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும்
வரலாம். இலக்கியத்தில் பரந்து
காணப்படும் எடுத்துக் காட்டுகள் மூலம் இந்த பாவினத்தின் இலக்கணத்தையும்,
எதுகை, மோனை
நயங்களையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
* ஈரடிக் கலித்தாழிசை
1.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற!
. ஒருங்குடன் வெந்தவா(று) உந்தீபற!
( திருவாசகம் )
இதன் முதலடியில் நான்கு சீர்கள்; இரண்டாம் அடியில் ஆறு சீர்கள்.
2.
செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!
முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான
புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள் !
ஆங்கற் பசுக்கன் றளித்தருளும் தில்லைவனப்
பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!
( சிதம்பரச் செய்யுட் கோவை )
இவை ஒரே பொருள்மேல் மூன்று அடுக்கி வந்த கலித்தாழிசை.
முதல் அடியில் நான்கு சீர்கள்; இரண்டாவதில் ஐந்து சீர்கள்.
* மூன்றடிக் கலித்தாழிசை
3.
பொன்னி லங்கு பூங்கொ டிப்பொ லஞ்செய் கோதை வில்லிட
மின்னி லங்கு மேக லைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்த டித்துமே
. தேவ ரார மார்பன் வாழ்க என்று பந்த டித்துமே
( சிலப்பதிகாரம், கந்துக வரி )
இது ஒரு சந்தக் கலித்தாழிசை. ( பிற்காலத்து எழுசீர் சந்த விருத்தத்திற்கு
இது ஒரு முன்னோடி.)
4.
செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே
புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர்
செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே
தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;
தோமிலாத பார்வைகொண்டு தொன்மைநூல்கள் ஆய்ந்தவன்;
சாமிநாத ஐயனுக்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சங்கநூல்கள் மீட்டவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே
இன்றுநேற்றி ரண்டுகாலங் கூடும்பால மாகியே
கண்டகாட்சி சொந்தவாழ்வு காகிதத்தில் வார்த்தவன்;
தென்னிசைக்கு நண்பர்முன்பு சென்னியென்றுந் தாழுமே
. . . செந்தமிழ்தன் பாட்டனுக்கென் சென்னியென்றுந் தாழுமே.
( பசுபதி )
இது மூன்று அடுக்கி வந்த சந்தக் கலித்தாழிசை.
* நான்கடிக் கலித்தாழிசை
5.
காளி யாடக் கனலுமிழ் கண்ணுதல்
மீளி யாடுதல் பாருமே!
மீளி யாடல் வியந்தவள் தோற்றெனக்
கூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே!
( சிதம்பரச் செய்யுட் கோவை )
இந்தப் பாடலில் முதல், மூன்றாம் அடிகளில் நான்கு சீர்கள்;
ஆனால் இரண்டாம் அடியில் மூன்று சீர்கள். ஐந்தாம் அடியில்
ஐந்து சீர்கள்.
6.
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
. கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?
( சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை )
இத்தகைய பாடலில் ஒவ்வொரு அடியிலும் வெண்டளை பயில வேண்டும். ஆனால்
எண்சீர்கள் கொண்ட ஈற்றடியின் நான்காம் சீருக்கும் , ஐந்தாம் சீருக்கும் இடையே
(கண்ணே - கண்ணிமைத்து) வெண்டளை வேண்டியதில்லை.
7.
முடியொன்றி மூவுல கங்களு மாண்டுஉன்
அடியேற் கருளென் றவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரதநம் பிக்குஅன்(று)
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற!
. அயோத்தியர் கோமானைப் பாடிப்பற!
( பெரியாழ்வார் )
இதுவும் வெண்டளையால் வந்த நான்கடிக் கலித்தாழிசை.
8.
இருகூற்றி றுருவத் திருந்தண் பொழிற்றில்லை
ஒருகூற்றின் கூத்தை உணராய் மடநெஞ்சே!
ஒருகூற்றின் கூத்தை உணரா யெனின்மற்றப்
பொருகூற்றம் தோற்றப் புலம்பேல் வாழி மடநெஞ்சே!
இது இடைமடக்காய் வந்த கலித்தாழிசை.
9.
தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலர்காண் அம்மானை
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே யாமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை?
. தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை.
இது ஈற்றடி எண்சீராய் வந்த கலித்தாழிசை.
மற்ற அடிகளில் நான்குசீர்கள் வந்துள்ளன.
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329
)
. . பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18]
23. சந்தப் பாக்கள்
இந்தத் தொடரில் சீர் வாய்பாட்டுக்கேற்பப் பல பாவினங்கள் அமைப்பதைப்
பற்றிப் பார்த்தோம்.
சந்தப் பாடல்களையும் படித்தோம். சீர் வாய்பாட்டிற்கேற்பச் சந்தமற்ற பாடல்
ஒன்றை அமைப்பதற்கும், சந்தக் குழிப்பிற்கேற்பச் சந்தப் பாடல்
புனைவதற்கும் உள்ள வேறுபாடென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
16-ஆம் பகுதியில்( வஞ்சித்துறை) நாம் பார்த்த கம்பனின் ஒரு சந்த வஞ்சித்
துறையைக் காட்டாக எடுத்துக் கொள்வோம்.
உற்றக லாமுன்
செற்றகு ரல்கைப்
பற்றுமி னென்றான்
முற்றுமு னிந்தான்
இதன் சந்தத்தைத் 'தந்தன தானா' என்று சொல்லாம். இப் பாடலை
'கூவிளம் தேமா' என்ற வாய்பாடு மட்டும் கொண்டு விளக்க முடியாது.
சீர்களுக்கு உள்ள சந்த மாத்திரைகளைக் கொண்டுதான் விளக்கமுடியும்.
எழுத்திலக்கணத்தில் சொல்லப்படும் மாத்திரைக் கணக்குச் சந்தப் பாவில்
வரும் எழுத்துகளுக்குப் பொருந்தாது. சந்தப் பாடலில்
விதி 1. குறில் = ஒரு மாத்திரை ( உதாரணம்: ப ) (இதை லகு என்று குறிப்பர்.)
விதி 2. நெடில் = குறில்+ஒற்று = நெடில் +ஒற்று = இரு மாத்திரை
(உதாரணங்கள் : பா, பல், பால்) அதாவது, குறில் மட்டும் ஒரு மாத்திரை;
மற்றவை எல்லாம் இரண்டு மாத்திரை. (இதைக் குரு என்பர்)
'பாடு ' என்ற சீர் 'தேமா'; 'போட்டான்' என்பதும் 'தேமா' தான். ஆனால் ,
'பாடு' = மூன்று சந்த மாத்திரைகள்; 'போட்டான்' = 4 மாத்திரைகள். அதுபோல,
' பாடு' என்ற 'தேமாவும், ' பருகு' என்ற புளிமாவும் ஒரே (3) மாத்திரை அளவு
கொண்டவை. அதனால், சந்தப் பாடல்களை மாத்திரைகள் மூலம் புரிந்து கொள்ள
வேண்டும்; இது அவற்றைப் புனையவும் உதவும். மேற்கண்ட சந்த வஞ்சித்துறையில்
எல்லாச் சீர்களும்
4 மாத்திரைச் சீர்கள். ( கம்பனின் வஞ்சித் துறையில் கூவிளமும், தேமாவும்
ஒரே சந்த மாத்திரைகள் கொண்டிருப்பதைக் கவனிக்கவும்.)
சந்தப் பாடலில் உள்ள மற்றொரு விதி:
விதி 3. அடியின் இறுதியிலோ, (சமமாக வரும்) அரையடியின் இறுதியிலோ வரும்
குறில்கள் இரண்டு மாத்திரைகள் பெறும்.
இந்த மூன்று விதிகளைக் கூறும் ஒரு பழம் வெண்பா:
குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும்; நெட்டெழுத்தும்
குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் -தெற்றக்
குருவென்ப தாகும்; குறிலும் குருவாம்
ஒருகால் அடியிறுதி உற்று.
காட்டு:
22-ஆம் பகுதியில்( கலித்தாழிசை) உள்ள கந்துக வரிப் பாடலைப் பார்ப்போம்.
பொன்னி லங்கு பூங்கொ டிப்பொ லஞ்செய் கோதை வில்லிட
மின்னி லங்கு மேக லைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்த டித்துமே
. தேவ ரார மார்பன் வாழ்க என்று பந்த டித்துமே
இதில் முதல் ஆறு சீர்கள் மூன்று மாத்திரைகள். ஏழாம் சீருக்கு ஐந்து மாத்திரைகள்.
('வில்லிட' என்பதில், 'ட' இரு மாத்திரைகள் பெறும்)
இன்னொரு விதி:
விதி 4. சந்தப் பாடலின் சீர்களின் இடையில் வரும் ய ர ல வ ழ ள
ஒற்றுகளுக்கும், சிறுபான்மை ன ண ம மெய்களுக்கும் மாத்திரைக் கணக்குக்
கிடையாது.
சந்தப் பாடல்களுக்கும் திருப்புகழ்ப் பாக்களைப் போன்ற வண்ணப்
பாடல்களுக்கும் வேறுபாடு
உண்டு. வண்ணப் பாடலில் 'தன்ன' என்பது ' குறில் + மெல்லின ஒற்று + மெல்லின
உயிர்மெய்க் குறில்'. அதே போல், 'தய்ய' = ' குறில் +இடையொற்று +
உயிர்மெய்க்குறில் '; 'தத்த'= 'குறில்+ வல்லின ஒற்று+ வல்லின
உயிர்மெய்க்குறில்' . 'தந்த' = 'குறில்+மெல்லொற்று+வல்லின
உயிர்மெய்க்குறில்' .
ஆனால், சந்தப் பாடல்களில் வரும் சந்தக் குழிப்புகளுக்கு இத்தகைய
கட்டுப்பாடுகள் கிடையாது. அங்கே, 'தன்ன' என்ற சந்தக் குழிப்பை 'குறில் +
ஒற்று+ உயிர்மெய்க்குறில்' என்று மட்டும் கொள்ளவேண்டும். அதனால், 'தன்ன'
என்பது , 'தத்த', 'தய்ய', 'தந்த' என்பவற்றையும் குறிக்கும்.
சில காட்டுகள்:
17 -ஆம் பகுதிலிருந்து( வஞ்சி விருத்தம்) ஒரு சந்த வஞ்சி விருத்தம்.
தத்தா தந்தன தந்தானா என்ற சந்தம்
கைத்தோ டுஞ்சிறை கற்போயை
வைத்தா னின்னுயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோ டொப்பது யாதுண்டே ! ( கம்பன் .)
முதற்சீர் 4-மாத்திரை கொண்ட மாச்சீராக இருக்கவேண்டும். (தன்னா, தானா,
தனனா, தந்தா, தந்தம் முதலியவை வரலாம்) இரண்டாம் சீர் 4 மாத்திரை கொண்ட
விளச்சீராக இருக்கவேண்டும். மூன்றாம் சீராக 6 மாத்திரை கொண்ட காய்ச்சீர்
வரும். (தன்னானா, தானானா, தந்தானா, தானந்தா, தத்தந்தா முதலியவை வரலாம்.)
18 ஆம் பகுதியில்(கலி விருத்தம்) உள்ள ஒரு சந்தக் கலிவிருத்தம்.
காய் காய் காய் மா ( சந்தக் கலி விருத்தம் )
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
பஞ்சியொளி(ர்) விஞ்சுகுளி(ர்) பல்லவம னுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி
அஞ்சலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ( கம்பன் )
அடிகளின் முதல் மூன்று சீர்கள் ஐந்து சந்த மாத்திரைகள். நான்காம் சீர்
நான்கு மாத்திரை.
( விதி 3-ஐ நினைவில் கொள்ளவும் (னுங்க, ஆகி . . இரண்டும் அடியின் ஈற்றில்
வருவதால், 4 மாத்திரை பெறும்; விதி -4 -இன்படி அடைப்புக் குறிக்குள்
இருக்கும் (ர்) மாத்திரைக் கணக்குப் பெறாது. )
இலக்கண நூல்கள் அடிகளின் எழுத்துகள் ஒத்தும், குருவும், லகுவும் ஒத்து
வந்த பாடல்களை அளவியற் சந்தம் என்று அழைக்கின்றன; அவை ஒவ்வாத அடிகளால்
வருவன
அளவழிச் சந்தம் எனப்படும். இருபத்தேழு எழுத்துகளுக்கு மேல் இருக்கும் அடிகளுடைய
பாடல்களில் எழுத்துகளும், குரு லகுவும் ஒத்து வந்தால் அளவியல் தாண்டகம் எனப்படும்;
அவ்வாறு ஒவ்வாது வருவன அளவழித் தாண்டகம் எனப்படும்.
சில பழமிலக்கியக் காட்டுகள்:
ஆதி நாதர்
பாத மூலம்
நீதி யாய்நின்
றோது நெஞ்சே ( வஞ்சித்துறை )
தக்கன் வேள்விப்
பொக்கந் தீர்த்த
மிக்க தேவர்
பக்கத் தோமே (தேவாரம்)
இவை நாலெழுத்தடி அளவியற் சந்தப் பாக்கள் . (இச்சந்தம் பிரதிட்டை எனப்படும்)
கருவி வானமே
வருவ மாதிரம்
பொருவி லாமிதே
பருவ மாவதே
இது ஆறெழுத்தடி அளவியற் சந்தம். ( காயத்திரி எனப்படும்)
பாடு வண்டு பாண்செயும்
நீடு பிண்டி நீழலான்
வீடு வேண்டு வார்க்கெலாம்
ஊடு போக்கும் உத்தமன். ( வஞ்சி விருத்தம் )
இது ஏழெழுத்தடி அளவியற் சந்தம்.
ஆதி யானற வாழியி னானலர்ச்
சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
காதி வென்ற பிரானவன் பாதமே
நீதி யாநினை வாழிய நெஞ்சமே ( கலி விருத்தம் )
இது பதினோரெழுத்தடி அளவியற் சந்தம்.
பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க பீடம் அமர்ந்தவெங்
கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ணானடி சேர்மினே. ( வஞ்சி விருத்தம் )
இது எழுத்தொத்துக் குரு லகு ஒவ்வாது வந்த அளவழிச் சந்தம்.
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573
)
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18, 19]
24. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
அடிப்படைச் சந்தங்கள் எட்டு. அவை : தந்த ( காட்டு: மஞ்சு ) , தாந்த (
பாங்கு ) , தத்த ( பட்டு ) , தாத்த ( பாட்டு ), தய்ய ( பல்லி ), தன்ன (
கும்மி ) , தன ( நரி ) , தான ( நாரி ) . இவற்றின் நீட்சிகள் இன்னொரு
எட்டு: தந்தா ( அந்தோ ) , தாந்தா ( சேந்தா ), தத்தா ( அக்கா) , தாத்தா (
மாற்றா ), தய்யா ( மெய்யோ ), தன்னா ( அண்ணா ) , தனா ( நிலா ), தானா (
காசா ) . சந்தப் பாவிலக்கணத்தில் தன, தனா இரண்டும் தாம் நிரை அசைக்கு
ஒத்தவை. மற்ற பதிநான்கு சந்தங்களும் தேமா என்ற ஈரசைக்கு ஒத்தவை.
முன்பு சொன்னதுபோல், வண்ணப் பாக்களைப் போலன்றி, சந்தப் பாக்களில் தந்த,
தய்ய, தத்த, தன்ன மூன்றுமே 'உயிர்+மெய்+உயிர்மெய்க்குறில்' வரும்
சீரைத்தான் குறிக்கும்; சந்தப் பாக்களில் மற்ற சந்தங்களையும் இப்படியே
அணுகவேண்டும். மேலும், சில இடங்களில் சீரின் இடையிலும், சீரின் ஈற்றிலும்
வரும் மெல்லின, இடையின ஒற்றுகள் சந்த மாத்திரையை அதிகப் படுத்தாது.
காட்டாக, முத்தி, பித்தர், மட்டம், உய்த்து, பொய்ப்பல், கர்த்தர் இவை
யாவும் மூன்று மாத்திரைச் சந்தங்களே. இப்படியே மற்ற சந்தங்களையும்
கவனித்து, சந்தத்தைப் பொறுத்து, இடையின, மெல்லின ஒற்றுகளைச் சில
இடங்களில் மாத்திரைக் கணக்கிலிருந்து நீக்கி விடலாம்.
ஓரசைச் சீரைச் சந்தப் பாட்டில் பயன்படுத்துவதில்லை. (தன என்ற ஓரசைச்
சந்தமும் இரட்டித்தோ, மற்ற சந்தங்களுடன் சேர்ந்தோதான் வரும்.)
சந்தத்துடன் சில எழுத்துகளைச் சேர்த்தோ, ஒன்றுக்கு மேற்பட்ட சந்தங்களைச்
சேர்த்தோ தொடர் சந்தங்கள்( அல்லது கலப்புச் சந்தங்கள்) ஆக்கலாம்.
காட்டுகள்: தனதன, தந்தன, தந்ததன, தானந்தன . இவற்றைச் சீர்களென்று
அழைப்பதில்லை; சந்தக் குழிப்புகள் என்பர்.
அடிகளில் வரும் எழுத்துக் கணக்கை ஒட்டி 1 -இலிருந்து 26- வரை எழுத்தடிகள்
வரும் சந்தங்களுக்குப் பெயர்கள் உண்டு. வடமொழியில் விருத்தரத்னாகரம்
போன்ற நூல்களிலும், தமிழில் குமாரசுவாமிப் புலவரின் காரிகை உரை ,
வீரசோழிய உரை போன்ற நூல்களிலும் இவற்றைப் பார்க்கலாம். ஓரெழுத்து முதல்
மூன்று எழுத்துகள் வரும் அடிகளுக்குப் பழந்தமிழ் இலக்கிய காட்டுகள்
இல்லாததால், நான்கு முதல் இருபத்தாறு எழுத்தடிச் சந்தங்களின் காட்டுகளை
யாப்பருங்கல உரை போன்ற நூல்கள் விவரிக்கின்றன.
23-ஆம் பகுதில் சில காட்டுகளைப் பார்த்தோம்; இப்போது சந்த வஞ்சித் துறை,
சந்த வஞ்சி விருத்தம் என்ற இரண்டு பாவினங்களிலிருந்து மேலும் சில
காட்டுகளைப் பார்க்கலாம்.
24.1 நான்கெழுத்தடி அளவியற் சந்தம் ( பிரதிட்டை; நிலை) ; வஞ்சித் துறை
தாத்த தானா
கூற்று தைத்த
நீற்றி னானைப்
போற்று வார்கள்
தோற்றி னாரே. ( சம்பந்தர் )
முதற்சீர் : மூன்று மாத்திரை. இரண்டாம் சீர்: நான்கு மாத்திரை.
(அடியீற்றில் வருவதால் 'தைத்த' என்ற சீரில் வரும் 'த' என்ற லகு குருவாகக்
கருதப் படும்.)
24.2 ஐந்தெழுத்தடி அளவியற் சந்தம் ( சுப்பிரதிட்டை; நன்னிலை) : வஞ்சித் துறை
கட்டளை அடிகளை வெவ்வேறு சந்தக் குழிப்புகளால் எப்படிப் பெறலாம் என்பதைச் சில
பாடல்களின் மூலம் பார்க்கலாம்.
தந்த தனந்தா
எல்லை இகந்தார்
வில்ல(ர்); வெகுண்டார்
பல்அ திகாரத்
தொல்ல(ர்), தொடர்ந்தார். ( கம்பன் )
தந்தன தானா
உற்றக லாமுன்
செற்றகு ரங்கைப்
பற்றுமி னென்றான்
முற்றுமு னிந்தான் ( கம்பன் )
தானன தந்தா
சாரய(ல்) நின்றார்
வீர(ர்)வி ரைந்தார்
'நேருது' மென்றார்
தேரின(ர்) சென்றார். ( கம்பன் )
தந்த தானனா
அண்ண லாலவாய்
நண்ணி னாந்தனை
எண்ணி யேதொழத்
திண்ண மின்பமே ( சம்பந்தர் )
இவற்றில் சில பாடல் அடிகளில் வெண்டளை பயின்று வருதலைப் பார்க்கவும்.
24.3 ஆறெழுத்தடி அளவியற் சந்தம் ( காயத்திரி ) : வஞ்சித் துறை
தனன தானனா
கருவி வானமே
வருவ மாதிரம்
பொருவி லாமிதே
பருவ மாவதே
24.4 ஏழெழுத்தடி அளவியற் சந்தம் ( உட்டிணிக்கு ) : வஞ்சி விருத்தம்
தத்த தான தானனா
கள்ள மாய வாழ்வெலாம்
விள்ள ஞான(ம்) வீசுதாள்
வள்ளல் வாழி கேளெனா
உள்ள வாறு ண(ர்)த்தினான் . ( கம்பன் )
தான தந்த தானனா
பாடு வண்டு பாண்செயும்
நீடு பிண்டி நீழலான்
வீடு வேண்டு வார்க்கெலாம்
ஊடு போக்கும் உத்தமன்.
24.5 எட்டெழுத்தடி அளவியற் சந்தம்: ( அனுட்டுப்பு ) : வஞ்சி விருத்தம்
தாந்தா தந்தன தானானா
நீந்தா இன்னலி(ல்) நீந்தாமே
தேய்ந்தா றாதபெ ருஞ்செல்வம்
ஈந்தா னுக்குனை ஈயாதே
ஓய்ந்தா லெம்மினு யர்ந்தார்யார் ? (கம்பன்)
தந்தன தந்த தனந்தா
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
வெந்திறல் வீரன் வியந்தான்
'உய்ந்தனெ'ன் என்ன உயர்ந்தான்
பைந்தொடி தாள்கள் பணிந்தான் (கம்பன்)
தான தந்தன தானனா
கால னாருயிர்க் காலனால்
காலின் மேல்நிமிர் காலினான்
மாலி னார்கெட வாகையே
சூல மேகொடு சூடினான். ( கம்பன் )
24.6 ஒன்பதெழுத்தடி அளவியற் சந்தம்: ( விருகதி ) : வஞ்சி விருத்தம்
தனந்தா தானனா தன்னானா
படுத்தான் வானவர் பற்றாரைத்
தடுத்தான் தீவினை தக்கோரை
எடுத்தான் நன்வினை எந்நாளும்
கொடுத்தான் என்றிசை கொள்ளாயோ? ( கம்பன் )
தனனத் தானனத் தந்தனா
வினயத் தான்வினைத் தொண்டினீர்
அனகத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே .
24.7 பத்தெழுத்தடி அளவியற் சந்தம் : ( பந்தி) : வஞ்சி விருத்தம்
தனனத் தனனா தனனானா
கருதிற் கவினார் கயனாட்டத்
திருவிற் புருவத் திவளேயாம்
மருவற் கினியாள் மனமென்னோ
உருவக் கமலத் துறைவாளே.
தனதன தந்த தனனானா
உழையென வெங்கை உவப்பானார்
தழலுரு என்ற தரத்தாலோ
விழவெமை இன்று வெதுப்பாமே
லெழுமதி ஒன்றை எடுத்தாரே ( சிவப்பிரகாசர்)
(தொடரும்)
(from:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743
)
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21]
26. வெண்பா - 2: அளவியல்
<><><><><><><><><><><>
நான்கடி (அளவியல்) வெண்பா
நான்கடி(அளவடி) வெண்பாக்களே வழக்கத்தில் அதிகமாக இருப்பதால், பொதுவில்
'வெண்பா'க்கள் என்றாலே
இவைதாம் குறிக்கப்படும்.
26.1 நேரிசை வெண்பா:
காட்டுகள்:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். ( பூதத்தாழ்வார் )
மல்லிகையே வெண்சங்கா வந்தூதே வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது. ( நளவெண்பா )
நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் -- உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய். ( பாரதி )
மின்னிடையும் தானசைய மேலாடை யும்பறக்க
அன்னநடை போடும் அழகுகண்டும் -- அன்னவளின்
பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல்
நெஞ்சேற நின்றான் நிலைத்து. ( பாரதிதாசன் )
தில்லைப் பதியுடையான் சிற்றம் பலம்தன்னில்
அல்லும் பகலும்நின் றாடுகிறான் -- எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து. ( கவிமணி )
இட்டலி யெண்ணைய்நற் சட்டினி யிச்சைகள்
கெட்டதென்றே யெச்சரிக்கை யிட்டாளே ! -- திட்டியெனக்
கில்லையில்லை யென்ற தலையாட்ட லிங்கென்ற
னில்லத்தி லில்லாள் செயல். ( பசுபதி ; இது ஒரு இதழகல் வெண்பா )
பெரும்பான்மை நேரிசை வெண்பாக்கள் இருவிகற்பம் பெற்றிருக்கும்; அதாவது,
முதல் இரண்டடிகளுக்கு
( கூடவே, தனிச்சொல்லிலும்) ஒருவகை எதுகையும், கடைசி இரண்டு அடிகளுக்கு
வேறு ஒரு எதுகையும் வரும்.
நான்கு அடிகளுக்கும் ஒரே எதுகை வரும் ஒரு விகற்ப நேரிசை வெண்பாக்களும் உண்டு.
நேரிசையில் ஓசை:
வெண்பாவிற்கு 1, 3 மோனைதான் சிறப்பு என்று பலரும் சொல்வர். இருப்பினும்,
நேரிசை வெண்பாவின் இரண்டாம் அடியில் வெவ்வேறு மோனை, எதுகை நயங்களைப் பயன்படுத்தி
வெவ்வேறு சிறப்பான ஓசைகளை விளைவித்திருப்பதையும் பழம் இலக்கியங்களில் பார்க்கலாம்.
சில காட்டுகள்:
இரண்டாம் அடியில் முற்று மோனை ( 1, 2, 3, 4 )
விருப்பில்லார் இலாத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம் -- விருப்புடைத்
தன்போல்வர் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து. ( நாலடியார் )
இரண்டாம் அடியில் முற்றெதுகை (1, 2, 3, 4 எதுகை)
பொன்னிணர் ஞாழல் புகல்வதியும் நாரைகாள்
கன்னியரும் புன்னைமேல் அன்னங்காள் -- என்னைநீர்
இன்னொலிநீர்ச் சேர்ப்பன் இரவில் வருவதன்முன்
கொன்னே குறிசெய்த வாறு. ( யாப்பருங்கல உரை )
இரண்டாம் அடியில் 1, 3, 4 மோனை
இவ்வளவில் செல்லுங்கொல் இவ்வளவில் காணுங்கொல்
இவ்வளவில் காதில் இயம்புங்கொல் -- இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று
ஆளுங்கொல் யானை அரசு. ( நளவெண்பா )
இரண்டாம் அடியில் 1, 3, 4 எதுகை
சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் -- திட்டமுடன்
ஆடிவந்த சோணேசா அன்றழைத்த போதுபிள்ளை
ஓடிவந்த(து) எவ்வா(று) உரை. ( காளமேகம் )
இரண்டாம் அடியில் 1, 2, 4 மோனை
மாநீல மாண்ட துகிலுமிழ்வ(து) ஒத்தருவி
மாநீல மால்வரை நாடகேள் -- மாநீலங்
காயும்வேற் கண்ணாள் கனையிருளில் நீவர
வாயுமோ மன்றநீ ஆய். ( திணைமாலை )
இரண்டாம் அடியில் 1, 2, 4 எதுகை
மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய -- நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றாள் ஈங்கு. ( நளவெண்பா )
வெண்பாக்களில் முடிந்தவரை வகையுளி இல்லாமல் இருப்பது நலம். சிலசமயம் , வகையுளி
தவிர்க்க முடியாமல் போய்விடும். முக்கியமாக, வெண்பாவின் கடைசி அடியில்
இதைப் பலமுறை பார்க்கலாம்.
காட்டுகள்: (காளமேகத்தின் வெண்பாக்களில் இருந்து சில ஈற்றடிகள்)
தீரமுள்ள சூரிக்கத் தி
குடத்திலே கங்கையடங் கும்
( பொதுவாக, 1,3 சீர் மோனையை வகையுளிப் பட்ட சொற்களுக்கு அமைப்பதில்லை;
ஆனால், மேற்கண்ட
காட்டுகளில் இருப்பதுபோல், வெண்பாவின் ஈற்றடியில் , விதிவிலக்குகளாக, இத்தகைய மோனை
இருப்பதைப் பார்க்கலாம். )
மேலும், விளாங்காய்ச் சீர்களைத் தவிர்க்கவும் வகையுளி வெண்பாக்களில்
பயன்படுத்தப் படுவதைப்
பார்க்கலாம்.
காட்டுகள்: (காளமேகத்தின் சில ஈற்றடிகள்.)
ஐயாநீ ஏழையா னால்
வடப்பாகு சேலைசோ மன்.
இருகாலும் சந்துபோ னால்.
'கண்ணதா சக்கவிஞன்' 'சாமிநா தைய்யன்' போன்ற வகையுளிகள் வெண்பாவின் மற்ற அடிகளிலும்
வரும்.
26.2 இன்னிசை வெண்பா :
வெண்பாவின் பொது இலக்கணங்கள் எல்லாம் பொருந்தி, நேரிசை வெண்பாவிற்கு
மாறுபட்டு இருக்கும் நாலடியுள்ள எல்லா வெண்பாக்களையும் இன்னிசை
வெண்பாக்கள் என்று சொல்லலாம்.
இன்னிசை வெண்பாவில் நாலடியும் ஒரே எதுகை பெறல் சிறப்பு. மற்றபடி,
பல எதுகை பெற்றும், அடிதோறும் தனிச்சொல் பெற்றும், இரண்டாமடியிலும், மூன்றாம்
அடியிலும் தனிச் சொற்கள் வந்தும் ,அல்லது மூன்றாம் அடியில் தனிச்
சொல்லும் வந்துள்ள காட்டுகள்
இலக்கியங்களில் உண்டு. தற்காலத்தில், இன்னிசை வெண்பாக்கள் அதிகமாக
புனையப்படுவதில்லை.
சில காட்டுகள்:
தனிச்சொல் வராத, ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்:
வைகலும் வைகல் வரக்கண்டும் அ·துணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்நம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். ( நாலடியார் )
வண்ணத்தைத் தேடி மலியத் தொகுத்துவைத்துக்
கிண்ணத்தி லூற்றிக் கிழியெடுத்துத் தூரிகையை
நண்ணவைத்துத் தீட்டும் நயமில்லா ஓவியனே
எண்ணமெங்கே வைத்தாய் இசை. ( கி.வா.ஜ )
தனிச்சொல் வராத, இரு விகற்ப இன்னிசை வெண்பா:
தெள்ளுதமிழ் நூலுள் திருவள்ளு வர்தந்த
ஒள்ளியநூ லாங்குறள்போல் உள்ளதுவே றுண்டோசொல்
வையம் புகழ்ந்து மதிக்கும் கருத்துடைத்தால்
செய்யதமிழ்ப் பாவும் சிறந்து. ( கி. வா. ஜ )
தனிச்சொல் வராத, மூன்று விகற்ப இன்னிசை வெண்பா:
அருணகிரி நாதர் அயில்வேல் முருகன்
தருணஇளந் தாமரைத்தாள் சார்ந்தின்பம் பெற்றதனை
வண்ணத் திருப்புகழால் வாய்மலர்ந்தார் இவ்வுலகில்
பாடிமகிழ் வுற்றார் பலர். ( கி. வா. ஜ )
அடிதோறும் தனிச்சொல் வந்த மூன்று விகற்ப இன்னிசை வெண்பா:
இன்னாமை வேண்டின் இரவெழுக - இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்வது வேண்டின அறஞ்செய்க -- வெல்வது
வேண்டின் வெகுளி விடல். ( நான்மணிக்கடிகை )
இரண்டாம், மூன்றாம் அடிகளில் தனிச்சொல் வந்த , மூன்று விகற்ப இன்னிசை வெண்பா:
மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும் -- மலிதேரான்
கச்சி படுவ கடல்படா -- கச்சி
கடல்படுவ எல்லாம் படும்.
26.3 பின்முடுகு வெண்பா:
கரைதெரியா இன்பக் கடலில்மூழ் காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே -- உரையிறந்த
ஒசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில். ( பட்டினத்தார் )
சீர்மணக்கும் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல -- ஓர்மணக்கு
ளத்தனப்ப னற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்ப
னெத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு . ( பாரதிதாசன் )
நினைத்தார் வினைத்தா நெரிக்குமரு ளைத்தா
வெனைத்தா வுனைத்தா வெனத்தா -- வனத்தார்கள்
சேர்புவளர் மாதரசி சேர்தலைவ வாசிறலை
யேர்புமயி லேறிறைவ னே. ( பாம்பன் சுவாமிகள் )
பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா! கடவூரா! - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்(து)அங் கங்கருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள். ( அபிராமிபட்டர் )
ஆதரவாய் என்னருகில் அஞ்சலென்று வந்துநின்று
போதரவு செய்யும்எப் போதுமே - ஓதுதமிழ்ச்
சந்தமுந்த லங்கிர்தம்செ றிந்துநன்கு யர்ந்துதங்கு
விந்தைகொண் டிலங்குசெந்தில் வேல்
சங்கக் கவிதை, தரமிக்க காவியம்போல்
மங்காப் புதுமையில்லை வானத்தில் -- பங்கமற்ற
விண்ணவர்பி றந்திடவி ரும்புவர்பொ ருட்சிறந்த
தண்டமிழ்த னைப்படிப்ப தற்கு. ( பசுபதி )
பலபின்முடுகு வெண்பாக்களில் ஈற்றடிகளில் தளையைப் பொருட்படுத்துவதில்லை ;
மேலும் சில வெண்பாக்களில் விளாங்காய்ச் சீர்கள் இருப்பதையும் பார்க்கலாம்.
காட்டுகள்:
என்று தொழுவேன் எளியேன்; அளிமுரலும்
கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானே! - துன்றும்
கனற்பொறிகட் பகட்டிலுற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குளுரத்
தனைச்சினத்திட் டுதைத்தபத்மத் தாள். ( அபிராமி பட்டர் )
மேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)
ஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் - மாகடவூர்ப்
பூதநாதா! வேதகீதா! பூவிதாதா! தேடுபாதா!
மாதுபாகா! காலகாலா! வா. ( அபிராமி பட்டர் )
26.4 முன்முடுகு வெண்பா
ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ -- கோனிறைவ
என்று துத்திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே யுணர். ( பாம்பன் சுவாமிகள் )
26.5 முழுமுடுகு வெண்பா
கட்டளைக்க லித்துறைக்குக் கட்டமின்றி யுக்திசொல்லிப்
பட்டரன்று தந்தனர்சொற் பெட்டகத்தை -- துட்டரஞ்சும்
பத்திரையைப் பத்திரவில் பத்திசெய யுக்திசொலும்
வித்தகரின் நற்கவிதை மெச்சு. ( பசுபதி )
காய்ச்சீர்களில் நடுவில் உள்ள குறிலிணை நிரை அசையால் முடுகோசை
எழுவதை மேற்கண்ட பாடல்களை வாய்விட்டுப் படிப்பதின் மூலம் அறியலாம்.
26.6 இருகுறள் நேரிசை வெண்பா
காட்டு:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு -- நடைமுறையின்
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
'நடைமுறையின்' என்ற தனிச்சொல்லை நீக்கிப் பார்த்தால், இரண்டு குறள்கள்
( திருக்குறள்கள் 381 , 382 ) வெவ்வேறாய் இருப்பது தெரியும். முதல் குறள்
' காசு' அல்லது
'பிறப்பு' என்ற வாய்பாட்டால் முடிந்தால் தான், இவ்வாறு தனிச்சொல் ஒன்றைப்
பயன்படுத்தி
இரு குறள்களைச் சேர்த்து ஒரு நேரிசை வெண்பாவாக்கலாம் என்பதைக் கவனிக்கவும்.
இருகுறள் நேரிசை வெண்பாக்கள் நிரையசையில் தான் தொடங்கும். (ஏன்?)
26.7 ஆசிடை நேரிசை வெண்பா
இருகுறள்களை ஒன்று சேர்த்து, ஒரு நேரிசை வெண்பாவாக்க முயலும்போது,
முதல் குறள் 'நாள்' அல்லது 'மலர்' என்ற ஓரசைச் சீரில் முடிந்தால், அந்த ஓரசையுடன்
ஒன்றோ, இரண்டோ அசைகள் சேர்த்தால் தான், தளை தட்டாத நேரசை வெண்பா
(தனிச்சொல்லுடன்) உருவாகும். (ஏன்?) 'காசு', 'பிறப்பு' என்று
முடிந்தாலும் , பொருத்தமான எதுகையுடைய
தனிச்சொல்லைத் தேர்ந்தெடுக்க ஒன்றோ, இரண்டோ அசைகளைச் சேர்க்க நேரிடும்.
இவற்றை 'ஆசிடை நேரசை வெண்பா'க்கள் என்பர். 'ஆசு' என்பது உலோகத் துண்டுகளை
இணைப்பதற்குப் பயன்படுத்தும் பற்று.
காட்டுகள்:
கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அ·தென்ப
பட்டினம் பெற்ற கலம். ( நாலடியார் )
இந்த இரு விகற்ப வெண்பாவில் 'செய்யா' என்பதில் 'யா' என்ற ஓரசை ஆசு. ஆசினையும் ,
தனிச்சொல்லையும் நீக்கிப் பார்த்தால் இரு குறள்கள் இருக்கும்.
வஞ்சியேன் என்றவன்றன் ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் -- வஞ்சியான்
'வஞ்சியேன் வஞ்சியேன்' என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய்! வஞ்சியார் கோ.
இந்த ஒரு விகற்ப வெண்பாவில் 'நேர்ந்தேன்' என்ற இரண்டு அசையுள்ள ஆசு உள்ளது.
(தொடரும்)
[From:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22]
27. வெண்பா - 3; ப·றொடை, கலி, சவலை, மருட்பா, வெண்கலிப்பா
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
27.1 ப·றொடை வெண்பா
இந்த வகை பல தொடை பெற்று வருவதால், ப·றொடை எனப்பட்டது.
( பல்+தொடை =ப·றொடை).
ஐந்து அடிகள் முதல் 12 அடிகள் வரை வரும் இந்த வெண்பா
நேரிசை, இன்னிசை என்று இருவகைப் படும். நேரிசைப் ப·றொடை
வெண்பா இரண்டடி ஓரெதுகையாய், இரண்டு அடிகளுக்கு
ஒருமுறை அந்த இரண்டடி எதுகையுடைய தனிச் சொல் பெற்று
வரும். இப்படி வராத மற்ற ப·றொடை வெண்பாக்கள் இன்னிசைப்
ப·றொடை வெண்பாக்கள் எனப்படும்.
27.1.1 நேரிசைப் ப·றொடை வெண்பா:
ஆறடி வெண்பா:
ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் - தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்னனையாள்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் -நெல்லிருக்கக்
கற்கறிந்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்ம். ( புலவர் குழந்தை )
பன்னிரண்டு அடி வெண்பா:
பூக்காரி யின்மகனைப் பூங்காவில் நம்பிள்ளை
நோக்கிய நோக்கின் நிலையினைநான் -- போய்க்கண்டேன்
கீழ்மகனைப் பிள்ளைமனம் திட்டிற்றா? அல்லதவள்
தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? -- வாழ்வில்
தனக்குநிக ரில்லாத் தையல்பால் பிள்ளை
மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் -- எனினும்
தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை
துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும் - வெடுக்கென்று
வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம்
செய்துவைத்தல் நல்லதெனச் செப்பினாள் -- துய்யதென்று
மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச்
சொன்னான்; தொடர்ந்தாள்அம் மாது ( பாரதிதாசன் )
27.1.2 இன்னிசைப் ப·றொடை வெண்பா:
ஐந்தடி வெண்பா:
தோடுடைய காதால் துரகவால் நீள்முடியால்
ஆடும் நடையழகால் அத்தரொத்த வாசனையால்
பாடிடும் இன்னிசையால் பட்டாடை வண்ணத்தால்
பெண்பாதிப் பெம்மானோ யென்றுநான் நண்ணிடின்
கண்டவனோர் காளைதான் காண். ( பசுபதி )
ஏழடி வெண்பாக்கள்:
வையக மெல்லாம் கழனியாய் -- வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் -- செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு -- வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -- சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -- கட்டியுள்
தானேற்ற மான சருக்கரை -- மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.
ஒன்றுமிரு உள்ளம் உலாவிடும் மின்பூங்கா;
முந்தையப் பண்பாட்டின் முக்காலப் பெட்டகம்;யார்
சொன்னாலும் நம்பவொணா மென்கலச் சொர்க்கம்;மின்
அஞ்சலைத்தன் ஆறாக்கி ஏழுலகம் எட்டிவிடும்;
எண்ணம் நவநவமாய் ஈன்றிடும்மின் சம்பத்து;
சென்றநூற் றாண்டின் சிறப்பான அன்பளிப்பு
விஞ்சையின் விந்தையிணை யம். ( பசுபதி )
வானே நிலனே கனலே மறிபுனலே
ஊனேஅவ் வூனில் உயிரே உயிர்த்துணையே
ஆனேறும் ஏறே அரசே அருட்கடலே
தேனே அமுதே எளியோங்கள் செல்வமே
யானே புலனும் நலனும் இலனென்றே
ஆனாலும் என்போல்மற் றார்பெற்றார் அம்பலத்துள்
மானாட கம்காணும் வாழ்வு ( குமரகுருபரர் )
எட்டடி வெண்பா:
வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை
தரைமட்டம் ஆயினதா? அந்தோ தனிமையிலே
ராணி விசயா நடத்திவந்த சூழ்ச்சிதனைக்
காண இதயம் கலக்கம் அடைந்திடுதே
வேந்தன் மகனுக்கு வித்தையெலாம் வந்தனவாம்
ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில்
போதித்த தார்இதனைப் போய்அறிவோம் வாவாவா
வாதிக்கு தென்றன் மனம் ( பாரதிதாசன் )
பத்தடி வெண்பா:
தாழ்சடையும் நீள்முடியும் சூழரவும் தாங்கிப்பேய்
ஆழ்வார்முன் அன்றொருநாள் ஈருருவாய்த் தோன்றியவா!
மூவாசைச் சாகரத்தில் மூழ்கும் எனைக்காக்க
மூவா மருந்துன(து) ஓருருவம் முன்வருமோ?
நாமகளைக் கைபிடித்த நான்முகனின் தாதையே!
மாமன் பரிந்துரைப்பின் வாணியருள் கொட்டாதோ?
அஞ்சன வண்ணனே! ஆறறிவு தந்தென்றன்
அஞ்சனம் போன்ற அறியாமை நீக்கிடுவாய்!
ஏழுமலை ஆண்டவனே! எண்ணெழுத்(து) ஈந்தருளாய்!
ஏழைபால் ஈசா! இரங்கு. ( பசுபதி )
பன்னிரண்டு அடி வெண்பா:
கார்தவழ் நீண்ட கழைவளர் மாமலையின்
சாரல் அருகில் சரிந்த சிறுபாறை
மேலுதிர்ந்த பூக்கள் விலையுயர்ந்த கம்பளத்தை
ஆடரங்கின் மேலே அமைத்ததைப் போலிருக்கும்
உச்சி மலையின் ஒருபுறத்தில் தேனடையில்
நாவற் பழவண்டு நல்யாழ் இசைத்திருக்கும்!
வேரிற் பழுத்த பலாத்தூக்கும் மந்தியெலாம்
சேர முழவோசை சேர்க்க வருவோராம்!
மான்களோ பார்க்க வருவோராய் மாறுமே !
மயிலாடு பாறை மகளிர் கலைமன்றம்!
என்றும் அழியா இயற்கையின் பேரழகு
குன்றாக் குறிஞ்சி நிலம். ( வாணிதாசன் )
27.2. கலிவெண்பா
கலிவெண்பாவில் பன்னிரெண்டு அடிகளுக்கு மேல் இருக்கும்.
இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை வரவேண்டும்.
நேரிசைக் கலிவெண்பாவில் தனிச் சீர் (எதுகையுடன்) வரவேண்டும்.
இன்னிசைக் கலிவெண்பாவில் தனிச் சீர் வரவேண்டியதில்லை.
கலிவெண்பாவில் இரண்டு அடிகளைக் கண்ணி என்று சொல்லும் வழக்கம்
உண்டு.
நேரிசைக் கலி வெண்பாக்களைத் தூது , உலா, மடல் ஆகியவற்றில் காணலாம்.
காட்டுகள்:
27.2.1 நேரிசைக் கலி வெண்பா:
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் -- தேமேவு ( 1 )
. . .
இம்மைப் பிறப்பில் இருவா தனையகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத் ( 120 )
தாயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் -- சேய ( 121 )
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்
டடியேற்கு முன்நின் றருள் . ( 122 ) ( கந்தர் கலி வெண்பா)
27.2.2 இன்னிசைக் கலிவெண்பா:
இன்னிசைக் கலிவெண்பாவிற்கு மாணிக்கவாசகரின் சிவபுராணம், திருமங்கையாழ்வாரின்
சிறிய மடல், பெரிய மடல் ஆகியவை நல்ல எடுத்துக் காட்டுகள்.
காட்டுகள்:
நமச்சிவாய வாஅழ்க! நாதந்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
. . .
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே, ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து . ( சிவபுராணம் )
காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை,
சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப் பேராற்று. ( 1 )
பேரார மார்வின் பெருமா மழைக்கூந்தல்
நீரார வேலி நிலமங்கை என்னுமிப் ( 2 )
பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பமென்று ( 3 )
. . .
ஊரார் இகழினும் ஊரா தொழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல். ( 77 )
( சிறிய திருமடல் )
( ஒரே வகையான எதுகையை வைத்துப் புனையப்பட்டவை சிறிய திருமடலும்,
பெரிய திருமடலும் என்பதைக் கவனித்தறிக .)
பதினாறு அடிகள் கொண்ட கலிவெண்பா.
நாட்டுக்கே நன்மைசெய நாடும் அரசியலைக்
கேட்டுக்கே ஆக்கிக் கிடைத்தவெலாம் சுற்றுகிற
தந்நலத்தை நாடும் தகவில்லாத் தன்மையரை
இந்நிலத்தே காணுங்கால் ஏங்கித் தவிக்கின்றேன்
இங்கொன்றும் அங்கொன்றும் ஏற்ற படியுரைத்துத்
தங்கள் நலங்காக்கச் சண்டைகளை மூட்டிவிட்டும்
ஒட்டி யிருந்தானை வெட்டிப் பிரித்துவிட்டும்
கிட்டும் பொருள்சுருட்டும் கீழ்மை நரிகுணத்தார்
நேற்றொன்றும் இன்றொன்றும் நேரியல்போல் பேசிவிட்டுக்
காற்றடிக்கும் பக்கம் கடிதோடிச் செல்பவர்கள்
ஏழையர்தம் வாழ்வுக்கே இப்பிறவி கொண்டதுபோல்
வேளையெலாம் பொய்சொல்லி வேட்டை புரிபவர்கள்
சாதி ஒழிப்பதெனச் சாற்றிவிட்டுத் தேர்தலுக்குத்
தேதி வரும்போது சாதிக்குக் காப்பளிப்போர்
கூடி அரசியலைக் கொண்டு நடத்துவரேல்
நாடிங் குருப்படுமோ நன்கு! ( முடியரசன் )
பாரதிதாசனின் 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' என்ற இன்னிசைக் கலிவெண்பா
பலநூறு அடிகளைக் கொண்டது.
குயில்கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு கனிமரங்கள் மிக்கவுண்டு
. . .
அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே
இன்பமும் நாமும் இனி. ( பாரதிதாசன் )
27.3. வெண்பாவின் தொடர்புள்ள மற்ற சில படிவங்கள்
27.3.1 சவலை வெண்பா
இரு குறள் வெண்பாக்களை ஆசு அல்லது இணைப்புச் சொற்கள் மட்டும் சேர்த்துப்
புனைந்தால் 'சவலை வெண்பா' உருவாகும். இதில் தனிச்சொல் இருக்காது; இரண்டாம்
அடியில் மூன்று சீர்களே இருக்கும். அதனால், வெண்பாவின் முழு இலக்கணம் மேவாமல்
மெலிவுற்று இருப்பதால், இது சவலை எனப்பட்டது.
காட்டு:
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். ( நாலடியார் )
இதில் இரண்டாம் அடியில் 'அல்லர்' என்ற ஆசை நீக்கினால், இரு குறள்கள்
இருப்பது தெரியும்.
27.3.2 மருட்பா
சில வெண்பா அடிகள் முதலிலும், பின்பு ஆசிரியப்பா அடிகள் சிலவும் வரும் பா மருட்பா.
முற்காலத்தில் வாழ்த்து, ஒருதலைக் காமம், வாயுறை வாழ்த்து போன்ற சில பொருள்கள்
கொண்ட பாடல்களுக்கு மட்டும் இந்த வடிவத்தைப் பயன்படுத்தினர். வெண்பா அடிகளும்,
அகவல் அடிகளும் சமமாக இருந்தால் , 'சமநிலை மருட்பா' என்பர்; இல்லையேல்
'வியநிலை மருட்பா' என்பர்.
காட்டு:
சமநிலை மருட்பா:
கண்ணுதலான் காப்பக் கடல்மேனி மால்காப்ப
எண்ணிருந்தோன் ஏர்நகையாள் தான்காப்ப -- மண்ணியநூற்
சென்னியர் புகழுந் தேவன்
மன்னுக நாளும் மண்மிசைச் சிறந்தே.
27.3.3 வெண்கலிப்பா
வெண்டளையும், கலித்தளை ( காயைத் தொடர்ந்து நிரை) யும் விரவிவந்த நான்கு சீரடிகளைப்
பெற்று, ஈற்றடி மூன்று சீர்களைப் பெற்றிருந்தால் அது வெண்கலிப்பா ஆகும்.
நான்கு அடிகளுக்கு
மேல் எவ்வளவு அடிகளும் வரலாம்.பெரும்பாலும் காய்ச்சீரடிகளைப் பயன்படுத்தி,
இரண்டு இரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை வைப்பது வழக்கம். சிறுபான்மை
நிரையொன்றாசிரியத் தளை வரலாம்.
(எல்லாம் காய்ச்சீர்களாக இருந்தால் தளையைப்பற்றி யோசிக்க வேண்டியதில்லை.)
சேல்செய்த மதர்வேற்கண் சிலைசெய்த சுடிகைநல்
மால்செய்த குழற்பேதை மகிழ்செய்த நடஞ்செய்யும்
தருணஇளம் பிறைக்கண்ணித் தாழ்சடைஎம் பெருமானின்
கருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்
வாமஞ்சால் மணிக்கொங்கைக்கு ஒசிந்தொல்கு மருங்குலவர்
காமஞ்சால் கடைநோக்கிர் கரைந்துருகா நிற்குமால்
அவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட்டு
எவ்வண்ண மாறிநிற்ப தின்று. ( குமரகுருபரர் )
ஆலமுண்ட நீலகண்டா! ஆலைகக்கும் புகைமிகுந்த
ஞாலத்துச் சூழலுறை நஞ்செல்லாம் உறிஞ்சிடுவாய்!
வாகனத்து வாந்தியினால் மார்வலித்து மகவெல்லாம்
சாகாமல் குணமடையச் சடிதியிலே றங்குவையோ?
அன்றஞ்சு பூதமென அமைத்தவெழிற் படைப்பில்நாம்
அஞ்சிடுமோர் அழிவுதரும் அசுத்தங்கள் நிறைந்தனவே;
மயானத்தில் நடஞ்செய்யும் மகிழ்வதனைத் துறந்தேயுன்
மயானமெனப் புவிமுழுதும் மாறாமல் தடுத்திடுவாய் !
வியாதிகளை விளைத்திடுமிவ் விடந்தன்னைக் குடித்திடவே
தியாகேசா! சீக்கிரமே தோன்று. ( பசுபதி )
பயிற்சிகள்
========
27.1
சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோர்விலடை யாற்றெளிந்தோம் சோமேசா -- ஓரில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ( சோமேசர் முதுமொழி வெண்பா)
இதைப் போலவே, உங்களுக்குப் பிடித்த ஒரு திருக்குறளுக்கு முன்னிரண்டு
அடிகள் சேர்த்து , ஒரு நேரிசை அளவியல் வெண்பாவாக ஆக்கவும். ( மாதவ சிவஞான
யோகிகள் முன்னிலையில் வைத்த 'சோமேசா' என்பதற்குப் பதிலாக வேறு பெயர்
வைத்தோ, முன்னிலையே இல்லாமலோ இயற்றலாம்)
27.2
'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற ஈற்றடியை வைத்து ஒரு 1) குறள் 2) நேரிசை 3)
இன்னிசை 4) முன்முடுகு 5) ஆறடி நேரிசை ப·றொடை வெண்பா அல்லது 6)
வெண்கலிப்பா இயற்றுக.
27.3
நாதன் அரங்கநகர் நாரா யணன்நறைசேர்
சீதநளி னத்திற் சிறந்த -- காதற்
கனிநா னிலக்கிழத்தி கட்கினிய காந்தித்
தனிநாய கன்தாள் சரண். ( மாறனலங்காரம் )
இது ஓர் இதழகல்/நிரோட்ட வெண்பா.
உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்து உயிரெழுத்துகளும் , ப, ம, வ என்ற மூன்று
மெய்யெழுத்துகளும் இல்லாமல் பாடப்படும் செய்யுள் இதழகல்/நிரோட்டச்
செய்யுள் எனப்படும். இதனால் இந்த வகைப் பாவில் 119 தமிழ் எழுத்துகளைப்
பயன்படுத்த முடியாது என்கிறார் ஒரு நண்பர். அவர் சொல்வது சரியா?
27.4
திருக்குறளில் உள்ள ஒரே இதழகல் வெண்பாவை 25.1 -ஆம் இயலில் பார்த்தோம்.
ஆனால் திருக்குறளில் அந்த விதிகளை மீறாத சில ஈற்றடிகள் மட்டும் உண்டு. அவற்றில்
ஒன்றை ஈற்றடியாக வைத்து, ஓர் இதழகல் குறள் வெண்பா இயற்றுக.
27.5
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக
வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் , வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும்
செய்யுள்.
மன்னவா! வேலவா! மாறில்அரு ணைச்சிகரி
பின்அணிசேர் மேலவனே! வீறிசைய - வெல்நலத்தாய்!
சீலம்மிகும் ஆறிருதோள் சேமணியே! என்றுசெப்பும்
மால்அடைந்தும் மாறிலன்அம் மா. ( வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் )
இந்த வெண்பா மும்மண்டில வெண்பாவா? சோதிக்கவும்.
( தொடரும் )
[ From :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்:
1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23]
28. சந்தக் கலிவிருத்தங்கள் -1
<><><><><><><><><><><>
இத்தொடரின் 18-ஆவது இயலில் சில சந்தக் கலிவிருத்தங்களைச் சுருக்கமாகப்
பார்த்தோம். இப்போது மேலும் சில வகைகளை , சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக்
கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில்
விரிவாய்ப் பார்ப்போம். இவ்வகையான கலிவிருத்தங்களின் முன்னோடிகள்
சிலப்பதிகாரத்திலும், திருமுறைகளிலும், பாசுரங்களிலும் இருக்கின்றன.
இருப்பினும் கம்பன் காலத்தில் அவை பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்பது
தெரிகிறது; அதனால் கூடியமட்டும் நாம் கம்பனின் எடுத்துக் காட்டுகளைப்
பயன்படுத்துவோம். பயிற்சிகளில் மற்ற சில பாடல்களை ஆராயலாம்.
28.1 பத்தெழுத்தடி அளவியற் சந்த விருத்தம்
சந்த விருத்தங்களின் அடிகள் சந்த மாத்திரையின்படி ஒத்துப் போகவேண்டும்.
அவற்றில் கட்டளை அடிகள் இருக்க வேண்டியதில்லை; இருப்பினும், பல
சந்த விருத்தங்கள் அளவியற் சந்தங்களாக இருப்பதால் , அவற்றை முதலில் அறிவது நலம்.
28.1.1
ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி,
மாசறு தானை மர்க்கட வெள்ளம்,
'நாசமிவ் வூருக் குண்'டென, நள்ளின்
வீசின, வானின் மீன்விழு மென்ன ( கம்பன் )
இதன் அடிவாய்பாட்டை
கூவிளம்(4) தேமா(4) கூவிளம்(4) தேமா(4)
என்றும், சந்தக் குழிப்பை
தானன தானம் தந்தன தன்ன
என்றும் சொல்லலாம். [ கூவிளம்(4) என்றால் நான்கு சந்த மாத்திரைகள் கொண்ட
கூவிளம் என்று பொருள். அதனால், 'தானன' என்பதற்குப் பதிலாக ' தந்தன'
வரலாம். அதேபோல், 'தன்ன' விற்குப் பதிலாக ' தான ' 'தன்னா' போன்ற 4
-மாத்திரைத் தேமாச் சீர்கள் வரலாம் ] . ( அடியீற்றில் குறில் இரு
மாத்திரை பெறும் என்பதை நினைவில் கொள்ளவும் )
28.1.2
வேறு ஒரு வாய்பாட்டில் அமைந்த இன்னொரு பத்தெழுத்தடி அளவியற் சந்தம்.
தேமா(4) கூவிளம்(4) கூவிளம்(4) தேமா(4)
தானத் தந்தன தானன தன்னா
வீரன் திண்திறல் மார்பினி(ல்) வெண்கோ
டாரக் குத்திஅ ழுத்திய நாகம்
வாரத் தண்குலை வாழை மடல்சூ
ழீரத் தண்டென, இற்றன எல்லாம். ( கம்பன் )
முன்பு சொன்னதுபோல், ' தானத்' என்ற இடத்தில் 'தனனா' ' தன்னா' போன்ற
சீர்கள் வரலாம். 2,3 -ஆம் இடங்களில் 'தந்தன' வரும். 4-ஆவது இடத்தில் '
தன்னா' 'தன்ன' 'தான' என்பவை வரலாம். இதேபோல், கீழ்க்கண்ட காட்டுகளிலும்
சந்தக் குழிப்பை மாற்றி அமைக்கலாம் என்றறிக. அதனால் , இவ்வகை
விருத்தங்களை மாத்திரைகளைக் குறிக்கும் சீர் வாய்பாட்டாலோ, சந்தக்
குழிப்பாலோ குறிக்கலாம்.
மேலும், தேமாவில் தொடங்கும் ஒரு விருத்தத்தை புளிமாவில் தொடங்குவதால் ,
ஓரெழுத்துக்
கூடிய இன்னொரு வகை விருத்தத்தை அடையலாம். இப்படியே பலவகை சந்த
விருத்தங்களுக்குள் தொடர்பிருப்பதைப் பார்க்கலாம்.
28.2 பதினொன்றெழுத்தடி அளவியற் சந்த விருத்தம்
28.2.1
'காந்தி' விருத்தம்: ( 11 எழுத்தடி)
தேமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமா(4)
தந்தா தனனா தனனா தனனா
கோதா வரியே! குளிர்வாய்! குழைவாய்!
மாதா! அனையாய்! மனனே! தெளிவாய்!
ஓதா துணர்வா ருழையோ டினைபோய்
நீதான் வினையேன் நிலைசொல் லலையோ?
(கம்பன் )
28.2.2
கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) தேமா(4)
தந்தன தந்தன தந்தன தந்தா
" மா(ய்)ந்தவ(ர்) மா(ய்)ந்தவ ரல்ல(ர்)க(ள்); மாயா
தேந்திய கைகொடி ரந்தவ- ரெந்தாய் ! -
வீந்தவ ரென்பவ(ர்): வீந்தவ ரேனு
மீந்தவ ரல்லதி ருந்தவ(ர்) யாரே? " ( கம்பன் )
அடிகளில் வெண்டளை பயிலும் வாய்பாடுகள் இவை என்பதைக் கவனிக்கவும்.
28.2.3
தேமா(3) கூவிளங்காய்(5) கூவிளம்(4) தேமா(4)
தந்த தந்ததன தந்தன தானா
நஞ்சு கக்கியெரி கண்ணின(ர்) நாமக்
கஞ்சு கத்த(ர்),கதை பற்றிய கையர்,
மஞ்சு கக்குமுறு சொல்லின(ர்) வல்வா(ய்)க்
கிஞ்சு கத்தகிரி ஒத்தன(ர்), சுற்ற ( கம்பன் )
28.2.4
தேமா(3) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(5)
தான தானன தானன தானனா
ஆதி யானற வாழியி னானல(ர்)ச்
சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
காதி வென்றபி ரானவ(ன்) பாதமே
நீதி யாநினை வாழிய நெஞ்சமே! ( சூளாமணி )
28.3 பன்னிரண்டெழுத்தடி அளவியற் சந்த விருத்தம்
28.3.1
'தோடக' விருத்தம் : ( 12 எழுத்தடி)
( 'காந்தி' ( 28.2.1) விருத்தத்துடன் ஒப்பிடவும்)
புளிமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமா(4)
தனனா தனனா தனனா தனனா
சுமையா ளடுமென் னுயிர்கா வலினின்
றிமையா தவனித் துணைதாழ் வுறுமோ
சுமையா வுலகூ டுழறெல் வினையேன்
அமையா துகொல்வாழ் வறியே னெனுமால் (கம்பன்)
இவற்றில் பயிலும் வெண்டளையைக் கவனிக்கவும். அருணகிரியின்
'கந்தர் அனுபூதி' ( எடுத்துக் காட்டு: 'உருவாய் அருவாய் . . என்று
தொடங்கும் பாடல்)
யையும் பார்க்கவும்.
28.3.2
12 எழுத்தும், 16 மாத்திரையும் கொண்ட வேறொரு வகை .
( 28.2.4 -உடன் ஒப்பிடுக.)
புளிமா(3) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(5)
தனன தானன தானன தானனா
குரவு தான்விரி கொங்கொடு கூடின
மரவ மாமலர் ஊதிய வண்டுகாள்!
இரவி போலெழி லார்க்கெம ராகிநீர்
கரவி றூதுரை மின்கடிக் காகவே ( யா.கலம் )
28.3.3
கூவிளம்(4) புளிமா(4) கூவிளம்(4) புளிமா(4)
தந்தன தனனா தந்தன தனனா
குஞ்சர மனையார் சிந்தைகொ ளிளையார்
பஞ்சினை யணிவார் பால்வளை தெரிவார்
அஞ்சன மெனவா ளம்புக ளிடையே
நஞ்சினை யிடுவார் நாண்மலர் புனைவார் ( கம்பன் )
28.4 பதின்மூன்றெழுத்தடி அளவியற்சந்தம்
28.4.1
கருவிளம்(5) கருவிளம்(5) தேமா(3) கூவிளம்(5)
தனதனா தனதனா தந்த தந்தனா
கலையெலா முதற்கணே கண்டு கொண்டுபெண்
கொலையினாம் கொடுந்தொழில் பூண்டு கோலவெஞ்
சிலையினான் செழுஞ்சரம் சேர்த்த செவ்வனே
மலையமா ருதத்தொடும் வந்து தோன்றுமே
28.4.2
தேமாங்காய்(5) கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) தேமா(4)
தந்தத்த தத்ததன தத்ததன தத்தா
நாகால யங்களடு நாகருல குந்தம்
பாகார்ம ருங்குதுயில் வென்னஉயர் பண்ப;
ஆகாய மஞ்சஅகல் மேருவைய னுக்கும்
மாகால்வ ழங்குசிறு தென்றலென நின்ற
( கம்பன் )
பயிற்சிகள்
'விருத்தப் பாவியல்' என்ற நூலில் உள்ள சில கலிவிருத்த எடுத்துக் காட்டுகளை
மாத்திரை, சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை என்று பல கோணங்களில்
ஆய்வது பலனைத்தரும். கீழ்கண்ட பயிற்சிகளில் உள்ள கலி விருத்தங்களை அந்த
முறைப்படி
ஆராய்ந்து, உங்கள் முடிவுகளைக் குறிக்கவும்.
28.1
வாம தேவ னென்னு மாமுனி
காம ரன்னை கருவின் வைகுநாட்
பேமு றுக்கும் பிறவி யஞ்சினா
னேமு றாமை யிதுநி னைக்குமால்
வன்பு பூண்ட மனவ கப்படா
வென்பு மீண்ட விறைவர் தம்மடிக்
கன்பு பூண்ட வறிவின் மேலவர்
துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார் . ( காஞ்சி புராணம் )
28.2
நீரும் மலருந் நிலவுஞ் சடைமே
லூரும் மரவம் முடையா னிடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நரையூர் சித்தீச் சரமே ( சுந்தரர் )
பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயனா கேச்ச ரநகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே ( சம்பந்தர் )
28.3
சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங்க ணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே ( சம்பந்தர் )
பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோங்
கலவம் மயில்கா முறுபே டையோடாடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டக்
நிலவும் பெருமா னடிநித் தநினைந்தே ( சம்பந்தர் )
28.4
எண்ணியி ருந்துகி டந்துந டந்தும்
அண்ணலெ னாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாட
புண்ணிய னாருறை பூவண மீதோ ( சுந்தரர் )
28.5
சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
சங்கா ரத்தணி தந்த செங்கையா
ளுங்கா ரத்தினு ரத்த வாடையா
ளுங்கா ரத்தினு ரப்பு மோதையாள் ( கந்த புராணம் )
( தொடரும் )
[ From :
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334
- பசுபதி
[ முந்தைய பகுதிகள்:
11,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24]
29. சந்தக் கலிவிருத்தங்கள் - 2
சில சந்தக் கலிவிருத்தங்களை 28-ஆம் இயலில் கட்டளை அடிகளுக்கேற்ப
வகைப்படுத்திப் பார்த்தோம். இப்போது மேலும்
சில வகைகளை மாத்திரைக் கணக்கின் வரிசையில் காண்போம்.
29.1 பதினாறு மாத்திரைச் சந்தம்
29.1.1
கூவிளம்(4) கருவிளம்(4) கருவிளம்(4) புளிமா(4)
தானன தனதன தனதன தனனா
கோகிலம் நவில்வன இளையவர் குதலைப்
பாகியல் கிளவிக ளவ(ர்)பயி(ல்) நடமே
கேகயம் நவி(ல்)வன; கிளரிள வளையின்
நாகுக ளுமி(ழ்)வன; நகைபுரை தரளம் ( கம்பன் )
இது ஒரு அளவியற் சந்தம்; பதினான்கெழுத்தடிகள் கொண்டது.
29.1.2
புளிமா(3) கருவிளங்காய்(5) புளிமா(3) கருவிளங்காய்(5)
தனன தனனதன தனன தனனதன
இனைய செருநிகழு மளவி னெதி(ர்)பொருத
வினய முடைமுத(ல்)வ ரெவரு முட(ன்)விளிய
அனைய படைநெளிய அமர(ர்) சொரிமலர்கள்
நனைய விசையினெழு துவலை மழைநலிய ( கம்பன் )
இதுவும் 14- எழுத்தடிகள் கொண்ட அளவியற் சந்தம்.
29.1.3
கருவிளம்(4) கருவிளம்(4) கருவிளம்(4) கருவிளம்(4)
தனதன தனதன தனதன தனதன
துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய
வெடிபட வருபவ ரெயின(ர்)க ளரையிரு
வடுபுலி யனையவ(ர்) குமரிநி னடிதொடு
படுகட நிதுவுகு பலிமுக மடையே ( சிலம்பு )
இது முடுகியல் பயின்ற , ஓர் அளவழிச் சந்தம் (ஏன்? ஈற்றுச்
சீரைப் பார்க்கவும்)
கம்பன் கடைசிச் சீரையும் 'தனதன' என்று அமைத்து இந்த வாய்பாட்டில்
ஓர் அளவியற் சந்தம் அமைக்கின்றான்.
பருமமும் முதுகிடு படிகையும் வலிபடர்
மருமமும் அழிபட நுழைவன வடிகணை
உருமினும் வலியன உருள்வன திசைதிசை
கருமலை நிகர்வன கதமலை கனல்வன ( கம்பன் )
29.2 பதினொன்பது மாத்திரைச் சந்தம்
29.2.1
கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) தேமா(4)
தந்ததன தந்ததன தந்ததன தத்தா
பஞ்சியொளி(ர்) விஞ்சுகுளி(ர்) பல்லவம னுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ( கம்பன் )
இதை 'வனமயூர' மென்றும், 'இந்துவதனா' என்றும் வடமொழியில் அழைப்பர் என்கிறார்
'விருத்தப் பாவியல்' ஆசிரியர். இது 14 - எழுத்தடிகள் கொண்ட அளவியற் சந்தம்.
29.2.2
கருவிளங்காய்(5) கருவிளங்காய்(5) கருவிளங்காய்(5) மா(4)
தனனதன தனனதன தனனதன தனனா
தகவுமிகு தவமுவிவை தழுவவுயர் கொழுநர்
முகமுவ ரருளுநுகர் கிலர்கடுயர் முடுக
அகவுமிள மயில்களுயி ரலசியன வனையார்
மகவுமுலை வருடவிள மகளிர்கடு யின்றார் . ( கம்பன் )
இது ஓர் அளவழிச் சந்தம் . ( 29.2.1 -உடன் ஒப்பிடவும். என்ன வேறுபாடுகள்?)
29.3 இருபது மாத்திரைச் சந்தம்
29.3.1
கூவிளம்(5) கூவிளம்(5) கருவிளம்(5) கூவிளம்(5)
தந்தனா தந்தனா தனதனா தானனா
அந்தியாள் வந்துதான் அணுகவே அவ்வயின்
சந்தவார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்துதேய் பொழுதுதெறு சீதநீர்
இந்துவான் உந்துவான் எரிகதிரி னானென . ( கம்பன் )
இது 20 - மாத்திரைகள் கொண்ட ஒரு சந்தவிருத்தம்; ஆனால்
1,2 அடிகளில் 13 எழுத்துகளும், 3,4 அடிகளில் 14 எழுத்துகளும்
இருப்பதைப் பார்க்கவும். ( 3,4 அடிகளில் 3-ஆம் சீரில்
'தனதனா' விற்குப் பதிலாக ' தனதனன' வந்திருப்பதைக் கவனிக்கவும்.)
அதனால் இது ஒரு அளவழிச் சந்தம்.
29.3.2
கருவிளம்(4) விளங்காய்(6) கருவிளம்(4) விளங்காய்(6)
தனதன தனதனனா தனதன தனதனனா
பொழிறரு நறுமலரே புதுமண(ம்) விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரு மின்னிடையே எனையிடர் செய்தவையே ( சிலம்பு )
இது ஓர் அளவழிச் சந்தம் . ( ஏன்?)
29.3.3
தேமா(3) கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) கூவிளங்கனி(7)
தந்த தந்ததன தந்ததன தந்ததனனா
குன்று துன்றினஎ னக்குமுறு கோபமதமா
ஒன்றி னொன்றிடைய டுக்கினத டக்கையுதவ
பின்று கின்றபில னின்பெரிய வாயினொருபால்
மென்று தின்றுவிளி யாதுவிரி யும்பசியொடே. ( கம்பன் )
இது 15- எழுத்தடிகள் கொண்ட ஓர் அளவியற் சந்தம்.
29.3.4
கூவிளம்(5) கூவிளம்(5) கூவிளம்(5) கூவிளம்(5)
தந்தனம் தந்தனம் தானனா தானனா
திங்க(ள்)மே வுஞ்சடைத் தேவ(ன்)மேல் மாரவேள்
இங்குநின் றெய்யவு மெரிதரும் நுத(ல்)விழிப்
பொங்குகோ பஞ்சுடப் பூளைவீ யன்னதன்
அங்க(ம்)வெந் தன்றுதொட் டனங்கனே ஆயினன். ( கம்பன் )
இது 16- எழுத்தடிகள் கொண்ட ஓர் அளவியற் சந்தம்.
மேற்கண்ட வாய்பாட்டிலேயே வேறு ஒரு சந்தக் குழிப்பின்படி
வந்த இன்னொரு கம்பன் பாடல்.
தந்தனத் தனனதன தந்தனத் தனனதன
தேவருக் கொருதலைவ ராம்முதல் தேவரெனின்,
மூவர்மற் றிவரிருவர்; மூரிவில் சுரரிவரை
யாவரொப் பவருலகில்? யாதிவர்க் கரியபொருள்?
கேவலத் திவர்நிலைமை தேர்வதெக் கிழமைகொடு? ( கம்பன் )
29.4 இருபத்திரண்டு மாத்திரைச் சந்தம்
29.4.1
மாங்கனி(6) மாங்கனி(6) மாங்கனி(6) மா(4)
தந்தானன தந்தானன தந்தானன தனனா
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான் ( கம்பன் )
இது ஓர் அளவழிச் சந்தம். ( கம்பன் புளிமாங்கனி, தேமாங்கனி
இரண்டையும் பயன்படுத்துகிறான்; அதேபோல் தேமா, புளிமா
இரண்டும் ஒரே விருத்தத்தில் வருகின்றன. )
இன்னொரு காட்டு:
பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம் வெருவத்துணி விலகா
ஊசற்கரம் எதிர்சுற்றிட உரறிப்பரி உழறா
வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால் ( பெரிய புராணம் )
இவ்வகைக்கு ஒரு முன்னோடி :
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழி(ல்) அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழ(ல்) புனைசேவடி நினைவார்வினை இலரே ( சம்பந்தர் )
29.4.2
அதே 22 மாத்திரைக் கணக்கில்
' அடி = மூன்று தேமாங்கனி(6)+ தேமா(4) ' என்ற வாய்பாட்டைப்
பயன்படுத்தினால் 'மதனார்த்தை' என்ற அளவியற் சந்தம்
அமைக்கலாம்.
காட்டு:
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னின்றானிடம் வீழிம்மிழ லையே ( சம்பந்தர் )
29.4.3
இதுபோலவே 'அடி = மூன்று புளிமாங்கனி(6) + புளிமா(4) ' என்ற
வாய்பாட்டைப் பயன்படுத்தி 'அதிகரிணீ' என்ற அளவியற் சந்த
விருத்தம் அமைக்கலாம்.
காட்டு:
மயிலாலுவ குயில்கூவுவ வரிவண்டிசை முரல்வ
மயில்பூவைகள் கிளியோடிசை பலவாதுகள் புரிவ
வயில்வாள்விழி மடவாரென வலர்பூங்கொடி யசைவ
வெயிலாதவர் புறமேகுற விரிபூஞ்சினை மிடைவ ( விநாயக புராணம் )
29.4.4
கருவிளங்கனி(6) கருவிளங்கனி(6) கருவிளங்கனி(6) மா(4)
தனதனதன தனதனதன தனதனதன தானா
நனைசினையன நகுவிரையன நலனுடையன நாகம்
நினையுடையன பொழுதிவையென விரிவனகனி வேங்கை
சுனைசுட(ர்)விடு கதி(ர்)மணியறை களனய(ர்)வன காந்தள்
இனியனபல சுனையயலென விறுவரையன குறிஞ்சி ( நீலகேசி )
இது ஒரு அளவழிச் சந்தம்.
பயிற்சிகள்
29.1
'விருத்தப் பாவியல்' என்ற நூலில் உள்ள சில காட்டுகள்
கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை சீர் வாய்பாடு,
சந்த மாத்திரைக் கணக்கு, கட்டளை அடிகள், வெண்டளை
போன்ற கோணங்களின் மூலம் ஆராயவும்.
29.1.1
சொன்றிமலை துத்துமுத ரத்தெழுசு டுந்தீ
யன்றைவட வைக்கனலெ னப்பெரித லைப்ப
குன்றினைநி கர்த்திடுகு றட்டனுவ ருந்தா
நின்றுசிவ னைப்பரவி நேர்படவு ரைக்கும்
( திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் )
29.1.2
தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்
வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்
வீசப்பு லார்த்தியிட விண்படரும் வெய்யோன்
ஆசுற்ற தானவர மர்ந்திவணி ருந்தார் ( கந்த புராணம் )
29.1.3
மிடற்றகுவர் சூழ்வரலு வீரனெழுந் தன்னோர்
முடிச்சிகையொ ராயிரமு மொய்ம்பினொரு கையால்
பிடித்தவுணர் மன்னனமர் பேரவைநி லத்தி
னடித்தனனொ டிப்பிலவ ராவிமுழு துண்டான் ( கந்த புராணம் )
29.1.4
மேதாவி கொண்டகதிர் வெய்யவனை வெஞ்சூர்
செய்தான்வ லிந்துசிறை செய்திடலின் முன்ன
மேதாமி னங்கொலென வெண்ணியவ னென்றூழ்
வாதாய னங்கடொறும் வந்துபுக லின்றே. ( கந்தபுராணம் )
29.1.5
அங்கோல் வளைமங்கை காண வனலேந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாய
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ நமையாள்வான் நல்லம் நகரானே
29.1.6
கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே ( சம்பந்தர் )
29.1.7
ஒன்றோ டொன்றுமுனை யோடுமுனை யுற்றுறவிழும்
ஒன்றோ டொன்றுபிள வோடவிசை யோடுபுதையும்
ஒன்றோ டொன்றுதுணி பட்டிடவொ டிக்குமுடனே
யொன்றோ டொன்றிறகு கவ்வுமெதி ரோடுகணையே ( நல்லாப்பிள்ளை பாரதம் )
29.1.8
கொம்பன் நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை யெவ்வுயிர்க்கும் வைப்பினை யொப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்
கென்பொனை யென்மணியை யென்றுகொ லெய்துவதே ( சுந்தரர் )
29.2
கம்பனின் நான்கு பாடல்கள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன.
சில ஆய்வாளர்கள் இவ்வகைகளைக் கம்பன் பாடிய கட்டளைக் கலிவிருத்தங்கள்
என்று குறிப்பிடுகின்றனர். இவற்றின் வாய்பாடு, அடியிலுள்ள எழுத்துகள் போன்றவற்றை
ஆராய்க.
சிற்கு ணத்தர் தெரிவரு நன்னிலை
எற்கு ணர்த்தரி தெண்ணிய மூன்றனுள்
முற்கு ணத்தவ ரேமுத லோரவர்
நற்கு ணக்கட லாடுத னன்றரோ
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
மத்தச்சின மால்களி றென்னம லைந்தார்
பத்துத்திசை யும்செவி டெய்தின பல்கால்
தத்தித்தழு வித்திரள் தோள்கொடு தள்ளிக்
குத்தித்தனிக் குத்தென மார்புகொ டுத்தார்
நிலையிற்சுட ரோன்மகன் வன்கைநெ ருங்கக்
கலையிற்படு கம்மியர் கூட மலைப்ப
உலையிற்படி ரும்பென வன்மை ஒடுங்க
மலையிற்பிள வுற்றது தீயவன் மார்பும்
29.3
கீழ்க்கண்ட கலிவிருத்தத்தின் இலக்கணத்தை ஆராய்க. இதன் ஓசையை
எப்படி விவரிக்கலாம்?
இடிமுழங்கின முகிலொடும்கடல் இணைமுழங்கின ஒலிஎனா
துடிமுழங்கின தொனிஎழுந்திவர் துறுவிவெஞ்சமர் பொருதகால்
படிமுழங்கின ஒலிநிகர்த்தன பருப்பதங்களும் அதிரவே
கடிமுழங்கின வலமுகம்சமர் கனல்சினந்தென விளையுமால் ( வீரமாமுனிவர் )
29.4
' தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில் உள்ள
கீழ்க்கண்ட கலிவிருத்தக் காட்டுகளின் இலக்கணங்களை விவரிக்கவும்.
உரிய நாயகி ஓங்கதி கைப்பதித்
துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
பிரிய நாயகி பேரருள் நாயகி
பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம் ( வள்ளலார் )
ஒப்பி லாதஉ யர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்
தப்பி லாதத ருமமும் கொண்டுயாம்
அப்ப னேநின் அடிபணிந் துய்வமால் ( பாரதியார் )
ச¡த்தி ரங்கள் சரிதங்கள் மன்னவர்
கோத்தி ரங்கள் குலங்கள் இலக்கண
சூத்தி ரங்கள் தொகுத்து விரித்துநான்
ஆத்தி ரத்தொடு கற்ற தளவுண்டோ ( தேசிக விநாயகம் பிள்ளை )
தலைசி றந்த தலைவனைப் போற்றுமின்
நிலைசி றந்த நினைவுடன் செய்யன
கலைசி றந்த கருத்துடன் ஆற்றுமின்
மலையின் மாண்புடன் வாழ்வகை வாழுமின் ( சுத்தானந்த பாரதியார் )
அழியா அழகா அறிவாம் முருகா
கழியா இளமைக் கடலே முருகா
மொழியா இன்பம் அடையும் முறையை
ஒளியா தருள்வாய் ஒருவா முருகா ( நாமக்கல் கவிஞர் )
கட்டிடத்தைக் கட்டிவிடக் காலெடுத்த பின்பு
விட்டுவிட்டுப் போகிறவன் வீண்மனிதன் அன்றோ?
தொட்டவுடன் காரியத்தைக் கட்டிவிட வேண்டும்
சுட்டபின்னர் தேறுவதை விட்டுவிட வேண்டும் ( கண்ணதாசன் )
( தொடரும் )
[ From:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/may08/?t=11431
. . பசுபதி . .
[ முந்தைய பகுதிகள்:
1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25]
30. கலித்துறை - 1
கலித்துறைப் பாடலை ஓர் ஐந்துசீர் விருத்தம் என்று அணுகினால் அதன் இலக்கணம் எளிதில்
புலப்படும். (ஐந்து சீர்கள் கொண்ட அடிகள் நெடிலடிகள் எனப்படும்).
இந்தப் பாவினத்தின் ஒரு முக்கியமான வகையான கட்டளைக் கலித்துறையைப்
பற்றிப் பின்னர்ப் பார்க்கலாம்.
கலித்துறையைக் கலிநிலைத் துறை என்றும் கூறுவர்.
கலித்துறையில் நான்கு அடிகள்; ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள்.
விருத்தங்கள் போலவே
நான்கு அடிகளிலும் ஒரே எதுகை. ஒவ்வோரு அடியிலும் 1,5 சீர்களில் மோனை
வருதல் சிறப்பு.
1,3,5 மோனை மிகச் சிறப்பு. 1,5 மோனை வராதபோது 1,3 அல்லது 1,4 மோனை
பல பாடல்களில் வரும்.
இப்போது சில பழம் இலக்கியக் காட்டுகளைப் பார்க்கலாம். இவை நமக்கு எந்த
அடி/சீர் வாய்பாடுகள்
நல்ல ஓசைகளைத் தரும் என்று சொல்கின்றன. 'தொடையதிகாரம்' 'விருத்தப் பாவியல்'
போன்ற நூல்கள் மேலும் பலவகைகளைக் கொடுத்துள்ளன.
30.1
மா கூவிளம் விளம் விளம் மா
திரண்ட தாள்நெடுஞ் செறிபணை மருதிடை ஒடியப்
புரண்டு பின்வரும் உரலொடு போனவன் போல
உருண்டு கால்தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே
இரண்டு மாமரம் இடையிற நடந்ததோர் யானை. ( கம்பன் )
பூந டுங்கின பணிக்குல நடுங்கின புரைதீர்
வாந டுங்கின மாதிர நடுங்கின வரைக
டாந டுங்கின புணரிக ணடுங்கின தறுகட்
டீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல ( கந்த புராணம் )
கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ ? ( திருவிளையாடற் புராணம் )
(இவற்றில் , பொதுவாக, முதல் சீரில் குறிலீற்றுடைய 'மா' (தேம/புளிம ) தான் வரும். )
( கூவிளத்திற்குப் பதில் தேமாங்காயும், கருவிளத்தின் இடத்தில்
புளிமாங்காயும் சில பாக்களில் வரும்.)
ஐந்தாம் சீரில் காய்ச்சீர் வருவதும் உண்டு.
இரதி யின்னணம் வருந்திடத் தொன்மைபோ லெங்கோமான்
விரத மோனமோ டிருத்தலு முன்னரே விறற்காமன்
கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்
சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம் ( கந்தபுராணம் )
30.2
தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா
பெய்யார் முகிலிற் பிறம்பூங்கொடி மின்னின் மின்னா
நெய்யார்ந் தகூந்தல் நிழற்பொன்னரி மாலை சோரக்
கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா
நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளத்தார் ( சிந்தாமணி )
தெள்வார் மழையும் திரையாழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ ( கம்பன் )
வெல்லும் தமிழின் விதியொன்றையும் கற்றி டாது
நெல்லாய்ப் பதரை நினைத்தேகவி பாடு கின்றேன்!
கல்விக் கரசி! கலைவாணி!உன் தாள்ப ணிந்தேன்!
சொல்லில் பொருளின் சுடரோங்கிடச் செய்கு வையே! ( பசுபதி )
இதில் 14 எழுத்துகள் கொண்ட கட்டளை அடிகள் உள்ளன. கம்பீரம் வாய்ந்த
இந்தக் கலித்துறையை விருத்தக் கலித்துறை அல்லது காப்பியக் கலித்துறை
என்றும் அழைப்பர். (இங்கே 4-ஆவது 'தேமா'ச் சீர் குறிலில் தான் முடியும். )
கனிச்சீர் வரும் இவ்வகையில் புளிமா (அல்லது புளிமாங்காய்) என்று
தொடங்கும் கலித்துறைகளும் உண்டு.
மயில்போல் வருவாள் மனம்காணிய காதல் மன்னன்
செயிர்தீர் மலர்க்கா வினொர்மாதவிச் சூழல் சேர
பயில்வாள் இறைபண் டுபிரிந்தறி யாள்ப தைத்தாள்
உயிர்நாடி ஒல்கும் உடல்போலல மந்து ழந்தாள். ( கம்பன் )
காய் தேமா புளிமாங்கனி தேமா தேமா
செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்ம னாம
மெறிகின்ற வேலை யமுதிற்செவி யேக லோடு
மறிகின்ற துன்பிற் சயந்தன்மகிழ் வெய்தி முன்ன
ரறிகின்றி லன்போற் றொழுதின்னவ றைத லுற்றான் ( கந்த புராணம் )
புளிமாங்கனிச் சீர் முதலில் வரும் கலித்துறைக்கு ஒரு காட்டு:
புளிமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா தேமா
ஆர்த்தாரணி கூரலர் மாமழை யால்வி சும்பைத்
தூர்த்தார்துதித் தார்மதித் தார்நனி துள்ளு கின்றார்
போர்த்தானவர் தஞ்செருக் காற்படு புன்மை யெல்லாம்
தீர்த்தனிவ னென்றகல் வானுறை தேவ ரெல்லாம் ( வில்லி பாரதம் )
தேமாங்கனிச் சீர் முதலில் வரும் ஒரு கம்பன் பாடல்:
செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும்
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும்
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்
30.3.
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
'என்னை நிகழ்ந்ததிவ் வேழு ஞாலம் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்ற தெல்லாம்
சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லி' டென்றான். ( கம்பன் )
வாய்பாடு : முதல் இருசீர்கள் மா அல்லது விளம்; 3-ஆம் சீர் மா: 4, 5 தேமா.
முதல் மூன்று சீர்களில் இயற்சீர் வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கினால்
12 எழுத்துகள் கொண்ட கட்டளை அடிகளும், நிரையில் தொடங்கினால் 13 எழுத்துகள்
கொண்ட கட்டளை அடிகளும் இந்தக் கலித்துறையில் வரும்.
30.4
காய் காய் மா மா காய்
அழல்பொதிந்த நீளெ·கின் அலர்தார் மார்பற் கிம்மலைமேற்
கழல்பொதிந்த சேவடியாற் கடக்க லாகா தெனவெண்ணி
குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி னீங்கிக் கொண்டேந்தி
நிழல்பொதிந்த நீள்முடியான் நினைப்பிற் போகி நிலத்திழிந்தான் ( சிந்தாமணி )
பண்ணழகாம் இன்குரல்போல் அழகாம் நாவில் பனிச்சொல்லே
விண்ணழகாம் பெய்துளிபோல் அழகாம் சீர்க்கு விளைகொடையே
கண்ணழகாம் கண்ணோட்டம் என்ன வீயாக் காட்சியொளி
நண்ணழகாம் தவவிளக்குள் எறிப்பக் கண்டான் நடந்தொத்தான் ( தேம்பாவணி )
30.5
விளம் காய் விளம் மா மா
உலனல னடுதிண்டோள் ஊழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெய்கைக் கோவொடொப் பார்கள் வாழும்
நலனமர் நளிகம்மைத் தொன்னகர் நண்ணி னானே. ( சூளாமணி )
30.6
காய் காய் காய் காய் கனி
மலிவாச மலர்பூசி யளியாடு நறையோதி மயிலேயவன்
ஒலியேறு திரைமோது முவராழி யுலகேழும் உடனாகவே
வலியோர்க ளெளியோரை நலியாம லசையாத மணிவாயிலான்
புவியேறு வடமேரு கிரிமீதி லிடுமீளி புனல்நாடனே ( அரிச்சந்திர புராணம் )
நீடாழி உலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூர்எ ழுத்தாணிதன்
கோடாக எழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ ( வில்லி பாரதம் )
பயிற்சிகள்
கீழ்க்கண்ட எட்டுக் கலித்துறைகள் 'தமிழ் யாப்பியலின் தோற்றமும்
வளர்ச்சியும்' என்ற நூலில்
எடுத்துக் காட்டுகளாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சீர்
வாய்பாடு, கட்டளை, வெண்டளை
போன்றவற்றின் துணை கொண்டு ஆராய்க.
30.1
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாளதும் எந்தைவ லஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே ( சம்பந்தர் )
30.2
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்றுகு னிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவள ராளிமு ழக்க றாமுது குன்றரே ( சம்பந்தர் )
30.3
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலது நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே ( பெரியாழ்வார் )
30.4
கடியன் கொடியன் நெடிய மால்உல கம்கொண்ட
அடியன் அறிவரு மேனிமா யத்தன் ஆகிலும்
கொடியான் நெஞ்சம் அவன்என்றே கிடக்கும் எல்லே
துடிகொள் இடைமடத் தோழீ! அன்னைஎன் செய்யுமே ( நம்மாழ்வார் )
30.5
தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரரும் சொற்பொருள் ஆகிநின் ற,எம தாதியான்
காரிளம் கொன்றைவெண் திங்களா னும்கட வூர்தனுள்
வீரமும் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே ( சம்பந்தர் )
30.6
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயென
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் த,இரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் ல,பர மேட்டியே. ( சம்பந்தர் )
30.7
விளைத்த வெம்போர் விறல்வாள் அரக்கன்நகர் பாழ்பட
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும்கொணர்ந் துந்திமுன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே ( திருமங்கையாழ்வார் )
30.8
தீர்ப்பாரை யாம்இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே ( நம்மாழ்வார் )
(தொடரும்)
From:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jun08/?t=11533
கவிதை இயற்றிக் கலக்கு! - 42
. . பசுபதி . .
46. கலிப்பா -1
கலிப்பாவில் நான்கு வகைகள் உண்டு: 1. ஒத்தாழிசைக் கலிப்பா 2. கொச்சகக் கலிப்பா 3. வெண்கலிப்பா 4. உறழ்கலிப்பா
ஒத்தாழிசைக் கலிப்பா:
இது மூன்று வகைப்படும்: 1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
கொச்சகக் கலிப்பா:
வெண்கலிப்பாவைப் பற்றி நாம் 27 -ஆவது இயலில் படித்திருக்கிறோம்.
உறழ்கலிப்பாவும் ஒரு வகைக் கலிப்பா தான். ஆக, கலிப்பா பத்து வகைப்படும்.
கலித்தொகை என்ற சங்கநூல் கலிப்பாவால் ஆகிய நூல். கலம்பகங்களில் முதல் செய்யுளாய் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வரும். மற்றபடி தற்காலத்தில் கலிப்பாக்களை நாம் பார்ப்பதில்லை. நாம் இக்கட்டுரைத் தொடரில் இதுவரை பார்க்காத சில கலிப்பா வகைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
46.1 கலிப்பாவின் பொது விதிகள், உறுப்புகள்
1. கலிப்பாவிற்கு உரிய ஒசை துள்ளலோசை. காய்ச்சீரைத் தொடர்ந்து நிரை வந்தால் ஏற்படும் கலித்தளை தரும் ஓசையே துள்ளலோசை. அதனால் , கலிப்பாவில் புளிமாங்காய், கருவிளங்காய்ச் சீர்கள் அதிகம் வரும்.
2. ஈரசைச் சீர்களில் கருவிளச்சீர்கள் தாம் அதிகம் வரும். கூவிளச் சீர்கள் அருகி வரும். மாச்சீர்கள் வரக் கூடாது. (அவை மிக மிக அபூர்வமாய்த் தென்படும்.) கனிச்சீர்கள் அபூர்வமாய் வந்தாலும், நிரை நடுவில் உள்ள கூவிளங்கனி, கருவிளங்கனிச் சீர்கள் வரக் கூடாது.
3. ஆசிரியப்பா, வெண்பா போல் நான்கு சீர்கள் உடைய அடிகளே பெரும்பாலும் கலிப்பாவில் வரும்..
பொது உறுப்புகள் : 1. தரவு . இது கலிப்பாவின் முதல் உறுப்பு. இதற்கு எருத்து ( பிடரி) என்ற பெயரும் உண்டு. பெரும்பாலும் விளச்சீர்களும், காய்ச்சீர்களும் வரும் நான்கு சீர்கள் கொண்ட அடிகள் கொண்டது.
2. தாழிசை : தாழம்பட்ட ஓசையுடையது. இடைநிலைப் பாட்டு என்ற பெயரும் இதற்குண்டு. இரண்டு முதல் நான்கு அடிகள் வரை கொண்ட தாழிசைகள் வரும். தாழிசையின் அடிகள் தரவுக்குள்ள அடிகளை விடக் குறைவாக இருக்கவேண்டும்.
3. தனிச்சொல்: பாட்டின் ஓசையோடு இசையாமல், தனித்து நிற்கும். இதற்கு விட்டிசை, தனிநிலை, கூன் என்ற பெயர்களும் உண்டு.
4. சுரிதகம் : பாட்டின் கடைசிப் பகுதி. இதற்குப் போக்கியல், அடக்கியல், வாரம், வைப்பு என்ற பெயர்களும் உண்டு.
2. அராகம்: பெரும்பாலும் கருவிளச் சீர்கள் பயிலும் அராகத்தில் முடுகோசை வரும். இதை வண்ணகம், முடுகியல், அடுக்கியல் என்றும் சொல்வர்.
46.2 நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
இதில் தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், தனிச்சொல்லும், சுரிதகமும் வரும். சுரிதகத்தில் வெண்பாச் சுரிதகம், ஆசிரியப்பாச் சுரிதகம் என்று இரண்டு வகைகள் உண்டு.
46.2.1
-- தரவு ---
கொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண்
மின்செய்த சிறுமருங்குற் பேருந்தேவி விழிகுளிர்ப்பப்
பொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள்.
-- தாழிசை --
முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட்
பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே
தேன்மறிக்கும் வெறித்தொங்கலறற் கூந்தற்றிருந் திழைகண்
மான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே.
பிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட்
சிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதும்பரே.
அதனால் ( தனிச்சொல் )
-- சுரிதகம் --
மதுவிரி கோதை மடவரற் கம்ம
புதுவிருந் துண்ண வுண்ண
அதிசயம் விளைக்குநின் னற்புதக் கூத்தே. ( சிதம்பரச் செய்யுட் கோவை )
46.2.2
-தரவு-
பண்டைக்குக் குடமஞ்ஞை பண்ணியதீ தாலிழிந்து
பண்டப்பொற் புயர்காஞ்சிப் பதியெய்தித் தவம்புரிநாள்
வண்டற்ற கதியவைகட் களித்தமுது மழவோய்கேள்.
-தாழிசை-
ஈரிரண்டு கணத்தலைவர் இழைத்ததெவ் வாலிறந்த
பேருவண மோடனமும் பிழைக்கவருள் கூர்ந்ததுநீ.
அக்காலத் தரியயன்மா லாள்பதிக ணலிவோர்ந்து
மிக்காரும் வளமுன்போல் விளங்கவருள் செய்ததுநீ.
பராசரன் மகாரறுவர் படுசாபந் தீர்த்தவர்க்குச்
சுராசுரர்க ளுறற்கரிய தூய்மதியன் றீந்ததுநீ.
-தனிச்சொல்
எனவாங்கு
-வெண்பாச் சுரிதகம்
எண்ணிடு மெற்கு மருள்வாயென் றேத்துமென்
கண்ணுமுற் றுள்ளங் கவர்ந்தரு ளாலெனைத்
திண்ணவிண் வீட்டிற் செலுத்து. ( பாம்பன் சுவாமிகள் )
46.3 அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
ஒத்தாழிசைக் கலிப்பாவில் அம்போதரங்கம் சேர்ந்து வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அம்போதரங்கம் முதலில் நாற்சீர் அடி, பிறகு முச்சீர் அடி, பின்னர் இருசீர் அடி என்று வரும். பொதுவாக, நாற்சீர் ஈரடி இரண்டு, நாற்சீர் ஓரடி நான்கு , முச்சீர் அடிகள் எட்டு , இருசீர் அடி பதினாறு என்று அமையும். சிறுபான்மை முச்சீர் அடிகள் நான்கு, இருசீர் அடிகள் எட்டு என்றும் வரும். நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் நான்கு உறுப்புகள் இருக்கும். அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவில் ஐந்து உறுப்புகள் இருக்கும்.
46.3.1
-- தரவு --
பேதைமீர் பேதைமீர்
பூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும்
காமன்னு புரந்தரனுங் கடவுளரும் புடைநெருங்க
இருகோட்டுக் கிடைந்தவிடு கிடையவர்பல் லாண்டிசைப்ப
ஒருகோட்டு மழகளிறு மிளங்கோவு முடன்போத
அம்பொன்மணி மதிற்றில்லை நடராச னணிமறுகில்
செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்
-- தாழிசை --
பாரித்த பேரண்டஞ் சிறுபண்டி கொளப்பெய்து
வாரித்தண் புனற்றுஞ்சு மாலுக்கு மால்செய்வீர்
வேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ
பூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர். ........(1)
சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய்
நன்மாலைக் குழலியர்பா னள்ளிருளிற் செலவல்லீர்
பன்மாத ருயிர்கொள்ளல் பழியன்றே பகைகொள்ளும்
வின்மார னுயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர். ........(2)
அங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா வையமிடும்
மங்கையர்க ணலங்கவர்வான் பலிக்குழலு மாதவத்தீர்
தங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே தலையன்பின்
நங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர். (3)
-- ஈரடி அம்போதரங்கம் --
அருங்கலை கவர்ந்துநீ ரளிக்கப் பெற்றநும்
இருங்கலை யினிதெமக்கென்ப ரோர்சிலர்.
நன்னிறங் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும்
பொன்னிற மினிதெனப் புகல்வ ரோர்சிலர்.
-- நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் --
தேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்.
ஏரினை நோக்கியே யெழுவர் சிற்சிலர்.
தாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்.
மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.
-- முச்சீரோரடி அம்போதரங்கம் --
நலனழிந்து நிற்பார் சிலர்.
நாண்டுறந்து நிற்பார் சிலர்.
கலனழிந்து நிற்பார் சிலர்.
கண்கலுழ்ந்து நிற்பார் சிலர்.
-- இருசீர் ஓரடி அம்போதரங்கம் --
பாடு வார்சிலர். ஆடுவார்சிலர்.
பரவு வார்சிலர்.விரவு வார்சிலர்.
வாடு வார்சிலர்.ஓடு வார்சிலர்.
மகிழு வார்சிலர்.புகழு வார்சிலர்.
ஆங்கொருசார் ( தனிச்சொல் )
-- சுரிதகம் --
முதிரா விளமுலை மழலையந் தீஞ்சொல்
மங்கை மற்றிவ ணங்குலக் கொழுந்து
கணங்குழை யவரொடும் வணங்கின ணிற்பச்
சோர்ந்தது மேகலை நெகிழ்ந்தன தோள்வளை
சாந்தமுங் கரிந்தது தரளமுந் தீந்தன
இவ்வா றாயின ளிவளே செவ்விதின்
ஆம்பற் பூவின் முல்லையு முகைத்தில
இளையோள் சாலவு மம்ம
முதியோள் போலுங் காம நோய்க்கே. ( குமரகுருபரர் )
( இது 'பேதைமீர் பேதைமீர்' என்ற ஒரு கூனுடன் தொடங்குகிறது )
46.3.2
-தரவு
கெடலரும் மாமுனிவர் கிளந்துடன் தொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க
ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடல்நனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்!
-தாழிசை
முரசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரள்திண்டோள் போர்மலைந்த மறமல்லர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? (1)
கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க
வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வும்
மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்மலைந்து
சேணுயர் இருவிசும்பிற் சேர்த்ததுநின் சினமாமோ? (2)
படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக
எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ? (3)
- பேரெண் ( நாற்சீர் ஈரடி இரண்டு )
இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅல்! நின்னிறம். (1)
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை. (2)
- அளவெண் ( நாற்சீர் ஓரடி நான்கு)
கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை; 1
தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; 2
ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; 3
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. 4
- இடையெண் ( முச்சீர் ஓரடி நான்கு )
போரவுணர்க் கடந்தோய் நீ; 1
புணர்மருதம் பிளந்தோய் நீ; 2
நீரகலம் அளந்தோய் நீ; 3
நிழல்திகழைம் படையோய் நீ. 4
சிற்றெண் ( இருசீர் ஓரடி எட்டு )
ஊழி நீ; உலகம் நீ (1,2)
உருவு நீ; அருவு நீ; (3,4)
ஆழி நீ; அருளு நீ; (5,6)
அறமு நீ; மறமு நீ. (7,8)
-தனிச்சொல்
எனவாங்கு,
-ஆசிரியச் சுரிதகம்
அடுதிறல் ஒருவ!நிற் பரவுதும்; எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன்
ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே. ( விளக்கத்தனார் பாட்டு )
இதில் தரவு ஆறடி என்பதால், தாழிசையின் அடிகள் ஆறுக்குக் குறைவாக, நான்காய் இருக்கின்றன. இங்கே முச்சீர் அடிகளிலும், இருசீர் அடிகளிலும் இறுதியில் உள்ள நீ என்ற அசைச் சீர் இருப்பதைக் கவனிக்கவும். ( அசையடி, சொற்சீரடி என்று அம்போதரங்கத்தைச் சொல்வதற்கு இதுவே காரணம்.)
46.4 வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
வண்ணகம் என்பது அராகத்திற்கு இன்னொரு பெயர். இந்தக் கலிப்பாவில் ஆறு உறுப்புகள் இருக்கும். தாழிசைக்கும் அம்போதரங்கத்திற்கும் இடையே அராகம் வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. 'தனதன தனதன' என்ற ஓசையுடன் முடுகுடன் அராகம் நடப்பதால் முடுகியல் என்ற பெயர் அராகத்திற்கு வந்தது.
46.4.1
-- தரவு --
தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும்
பல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய
அந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த
இந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச்
சூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப
ஆடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய்.
-- தாழிசை --
முன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த
வன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும்
பொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்ததென்ன
வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. ........(1)
கடநாக மெட்டும்விடங் கானாக மோரெட்டும்
தடநாக மவையெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும்
உடனாக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும்
அடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே. ........(2)
வருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும்
அருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும்
கருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும்
திருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே. ........(3)
-- அராகம் --
கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல்
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. ........(1)
உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்
மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய
புலவரு மடிகளொர் புகலென முறையிட
அலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை. ........(2).
விசையிலே மிறைவியும் வெருவர விரசத
அசலம தசைதர வடல்புரி தசமுக
நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென
வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. ........(3)
இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம
துலைவற நடவிடு மொருவனும் வெருவர
அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு
சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. ........(4)
-- நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் --
அருவமு முருவமு மாகி நின்றுமவ்
வருவமு முருவமு மகன்று நின்றனை. 1
சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச்
சொல்லையும் பொருளையுந் துறந்து நின்றனை. 2
-- நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் --
அந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை. 1
பொன்னலம் விழைந்தவர் பொருளு மாயினை. 2
இன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயினை. 3
மெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயினை. 4
-- முச்சீரோரடி அம்போதரங்கம் --
முத்தொழிலின் வினைமுத னீ. மூவர்க்கு முழுமுத னீ. 1,2
எத்தொழிலு மிறந்தோய் நீ.இறவாத தொழிலினை நீ. 3,4
இருவிசும்பின் மேயோய் நீ. எழின்மலரின் மிசையோய் நீ. 5,6
அரவணையிற் றுயின்றோய் நீ.ஆலின்கீ ழமர்ந்தோய் நீ. 7,8
-- இருசீரோரடி அம்போதரங்கம் --
பெரியை நீ. சிறியை நீ. பெண்ணு நீ. ஆணு நீ. 1-4
அரியை நீ. எளியை நீ. அறமு நீ. மறமு நீ. 5-8
விண்ணு நீ. மண்ணு நீ. வித்து நீ. விளைவு நீ. 9-12
பண்ணு நீ. பயனு நீ. பகையு நீ. உறவு நீ. 13-16
என வாங்கு ( தனிச்சொல் )
-- சுரிதகம் --
கற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்
வெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத்
தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற்
செங்கா லன்னமும் வெண்மருப் பேனமும்
கீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய்
நின்றநின் றன்மையை யுணர்த்தும்
பொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே. ( குமரகுருபரர் )
46.4.2
-தரவு
விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்கால் துருமலர நறும்பைந்தார்ப்
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய்! குறையிரந்து முன்னாட்கண்
மாயாத அன்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும்
தாயாகித் தலையளிக்கும் தண்டுறை ஊர!கேள்;
-தாழிசை
காட்சியாற் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி
மாட்சியால் திரியாத மரபொத்தாய் கரவினால்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
அணிநலம் தனியேவந் தருளுவது மருளாமோ?
அன்பினால் அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுவதற் கிருளுடைத் தமியையாய்க்
கதிர்வளைத்தோள் கதிர்ப்பிங்கும் காதலும் காதலோ ?
பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கண்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த்
தடமலர்த்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ?
-அராகம்
தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
. தழலென விரிவன பொழில்
போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு
. கருநெய்தல் விரிவன கழி
தீதுறு திறமறு கெனநனி முனிவன
. துணையொடு பிணைவன துறை
முதுறு மொலிகலி நுரைதரு திரையொடு
. கழிதொடர் புடையது கடல்;
-அம்போதரங்கம்
-நாற்சீர் ஈரடி
கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால்
இடுங்கழி இராவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ? 1
கருநிறத் தடுதொழிற் கராம்பெரி துடைமையால்
இருணிறத் தொருகானல் இராவாரல் என்றிலமோ? 2
-நாற்சீர் ஓரடி
நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலந்தகையே; 1
துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே 2
அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே; 3
நயப்பொடு கழிந்தன்றான் நனவது நன்னுதற்கே; 4
-மூச்சீர் ஓரடி
அத்திறத்தால் அசைந்தன தோள்; அலரதற்கு மெலிந்தன கண்;
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்தன முலை;
அழலினால் அசைந்தது நகை; அணியினால் ஒசிந்தத் திடை;
குழலினால் நிமிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை; (1 -- 8)
-இருசீர் ஓரடி
உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த அலர்த்தொருபால்;
கட்கொண்டல் துளித்தொருபால்; கழிவெய்தும் படித்தொருபால்;
பரிவுறூஉம் தகைத்தொருபால்; பசப்புவந் தணைந்தொருபால்;
இரவுறூஉம துயரொருபால்; இளிவந்த தலைத்தொருபால்;
மெலிவுவந் தலைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்;
ஏதில்சென் றணைந்தொருபால்; இயல்நாணிற் செறிந்தொருபால். ( 1 -- 16)
-தனிச்சொல்
எனவாங்கு
- அகவற் சுரிதகம்
இன்னதிவ் வழக்கம் இத்திறம் இவள்நலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்த வண்மையை யாயினும் நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே. ( யாப்பருங்கலம் )
இது ஆறடித்தரவு, மூன்று தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் யாவும் முறையே வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
(தொடரும் )
கவிதை இயற்றிக் கலக்கு! - 43
. . பசுபதி . .
47. கலிப்பா - 2
கலிப்பாவின் ஒரு வகையான ஒத்தாழிசைக் கலிப்பாவின் மூன்று பிரிவுகளை 46-ஆவது இயலில் பார்த்தோம். இப்போது கொச்சகக் கலிப்பாவைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
* கலிப்பாவின் ஆறு உறுப்புகளுள் சிலவற்றைப் பெற்றும், மற்றவற்றை விட்டும் நடப்பது கொச்சகக் கலிப்பா.
* கலிப்பாவில் தேமா,புளிமாச் சீர்கள் வரக் கூடாது; நிரை நடுவான வஞ்சிச் சீர்கள் ( கூவிளங்கனி, கருவிளங்கனி) வரக் கூடாது. ஆனால், இவை கொச்சகத்தில் வரலாம்.
* கொச்சகம், (கொசுவம்) என்பது பெண்டிர் புடைவைகளில் வரும் தலைப்பு. மகளிர் உடை போல் சிறிதும், பெரிதும் சமமுமாகிய உறுப்புகள் அடுக்கப் படுவதால் இதற்குக் கொச்சகம் என்ற பெயர் வந்தது என்பர்.
* சிறப்பில்லாதவற்றைக் கொச்சை அல்லது கொச்சகம் என்று வழங்குவர். இதுவும் இப்பெயருக்கு ஒரு காரணமாக இருக்கலாம். கலிப்பாவின் இலக்கணம் இப்பாவகையில் பிறழ்வதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
கொச்சகக் கலிப்பாவின் ஐந்து பிரிவுகள் : 1. தரவு கொச்சகம் 2. தரவிணைக் கொச்சகம் 3. சிஃறாழிசைக் கொச்சகம் 4. பஃறாழிசைக் கொச்சகம் 5. மயங்கிசைக் கொச்சகம்
இந்தக் கட்டுரையில் முதல் நான்கு வகைகளைப் பற்றி ஆராய்வோம்.
47.1 தரவு கொச்சகக் கலிப்பா
ஒரு தரவு மட்டும் பெற்று வரும் பாடலை 'இயற்றரவு கொச்சகக் கலிப்பா' என்பர். ( இதைத்தான் நாம் 19-ஆம் இயலில் பார்த்தோம்.) ஒரு தரவுக்குப் பின் தனிச்சொல்லும், சுரிதகமும் வந்தாலோ அது 'சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா' எனப்படும். [ வெண்கலிப்பாவும் ஒரே ஒரு தரவு கொண்ட பாவினம் தான்; இதற்கும் 'இயற்றரவு கொச்சக'த்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? )
காட்டுகள்:
47.1.1 இயற்றரவு கொச்சகக் கலிப்பா
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தோறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. ( திருக்கோத்தும்பி )
ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுள்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழியெமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய் ( திருவம்மானை )
பொதுவாக, தரவின் சிற்றெல்லை 3 அடிகள், பேரெல்லை 12 அடிகள் என்பர்.
47.1.2 சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா
குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப ( நான்கடித் தரவு )
எனவாங்கு ( தனிச்சொல் )
ஆனொடு புல்லிப் பெரும்பூதம் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே. ( ஆசிரியச் சுரிதகம் )
குறிப்பு: இயற்றரவு கொச்சகக் கலிப்பாவையும், சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பாவையும் தரவு கொச்சகம் என்ற பெயரால் அழைப்பர் சிலர். வேறுசிலர் , தரவோடு நிற்பதைத் தரவு கொச்சகம் என்றும், தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவதைத் தரவு கொச்சக ஒருபோகு என்றும் கூறுவர்.
47.2 தரவிணைக் கொச்சகக் கலிப்பா
இரண்டு தரவுகள் இணைந்து வரும் ' தரவிணைக் கொச்சக'த்திலும் இரண்டு வகைகள் உண்டு. இரு தரவுகள் தனிச்சொல் பெற்றோ, பெறாமலோ வருவது 'இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா'. தனிச் சொல்லைப் பெற்றோ,
பெறாமலோ வரும் இரு தரவுகளுடன் தனிச்சொல்லும், சுரிதகமும் அமைவது ' சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா' ( அல்லது ' தரவிணைக் கொச்சக ஒருபோகு' ) ஆகும்.
47.2.1 இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா
முந்நான்கு திருக்கரத்து முருகவேள் தனைப்பணிந்தார்
இன்னாங்கு தவிர்ந்தென்றும் இன்பவாழ் வடைவரெனப்
பன்னாளும் பெரியோர்கள் பாடுவது கேட்டிருப்போம்.
அதனால்
பிறவியெனும் பிணிதொலையப் பிணிமுகமேற் கொண்டருளி
அறவுருவாம் தேவியர்கள் அணைந்திருபா லுஞ்சுடரத்
திறவிதின்நற் பவனிவரும் திருவுருவைப் போற்றுதுமே. ( கி.வா.ஜ )
இரண்டு தரவுடன், நடுவே தனிச்சொல் வந்த பாடல் இது.
47.2.2 சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
இதைத் தரவிணைக் கொச்சக ஒருபோகு என்றும் சிலர் அழைப்பர்.
(தரவு)
வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க்
கொடிபடு வரைமாடக் கோழியார் கோமானே!
(தனிச்சொல்)
எனவாங்கு,
(தரவு)
துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங்
கிணைமலர்ந்தார் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?
(தனிச்சொல்)
அதனால்,
(சுரிதகம்)
செவ்வாய்ப் பேதை இவள்திறத்
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே. ( யா.க.விருத்தியுரை )
47.3 சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், இடையிடையே தனிச்சொல்லும்,
இறுதியில் சுரிதகமும் பெற்று வருவது ' இயல் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா'. ( நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புகள் வரும். ஆனால், இந்தக் கொச்சகப் பாவில் தாழிசைகளுக்கு இடையே தனிச்சொற்கள் வருவதே வேறுபாடு). தாழிசைகளின் ஈற்றடி ஒரு சீர் குறைந்து நின்றால், 'குறைச் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' ஆகும். ( சில்+தாழிசை =சிஃறாழிசை; மூன்று தாழிசைகள் மட்டுமே வரும்.)
47.3.1 இயல் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
(தரவு)
மறைதங்கு திருமன்றில் நடங்கண்டு மகிழ்பூத்துக்
கறைதங்கு படவரவ மிமையாது கண்விழிப்பக்
குறைதங்கு கலைநிறையின் கோளிழைக்குங் கொல்என்று
நிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும்
பிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்.
எனவாங்கு
(தாழிசை)
1.
வெள்ளெருக்குங் கரும்பாம்பும் பொன்மத்து மிலைச்சிஎம
துள்ளிருக்கும் பெருமானின் திருமார்பி னுறவழுத்தும்
கள்ளிருக்கும் குழலுமையாள் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும்
முள்ளெயிற்ற கறையரவ முழையென்று நுழையுமால்.
அதாஅன்று
2.
சிலைக்கோடு பொருமருப்பில் புகர்முகனின் திருமார்பில்
முலைக்கோடு பொருசுவட்டைக் கண்டுநின் முழவுத்தோள்
மலைக்கோடி விளையாடும் பருவத்து மற்றுந்தன்
கொலைக்கோடு பட்டஎனக் குலைந்துமனங் கலங்குமால்
அதாஅன்று
3.
விடமார்ந்த சுடரிலைவேல் விடலைநின் மணிமார்பில்
வடமார்ந்த முலைச்சுவட்டைக் கண்டுதன் மருப்பெந்தை
தடர்மார்பம் இடர்செய்யச் சமர்செய்தான் கொல்லென்று
கடமார்வெங் கவுள்சிறுகண் கயாசுரனை வியக்குமால்.
அதனால்
(சுரிதகம் )
சிலைமுகம் கோட்டுமச் சில்லரித் தடங்கண்
முலைமுகம் கோட்டினள் நகுமால்
மலைமுகம் கோட்டுநின் மற்புயம் மறைந்தே. (குமரகுருபரர் )
47.3.2 குறைச் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
மாயவனாய் முன்தோன்றி மணிநிரைகாத் தணிபெற்ற
ஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடி
மணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார்
அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே
தானவ்வழி
எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்ப
விழுக்குற்று நின்றாரும் பலர்.
ஆங்கே
வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக்
கொளுற்று நின்றாரும் பலர்.
ஆண்டே
இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்
பற்றாது நின்றாரும் பலர்.
அதுகண்டு
மைவரை நிறத்துத்தன் மாலை இயல்தாழக்
கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்ப
அழுங்கினர் ஆயம், அமர்ந்தது சுற்றம்
எழுந்தது பல்சனம், ஏறுதொழ விட்டன
கோல வரிவளை தானும்
காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே!. (யா.க.)
இடையிடையே தனிச்சொல் பெற்று, தாழிசைகளின் ஈற்றடி சிந்தடியாய்க் குறைந்து வந்த பாடல் இது.
47.4 பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு ஒன்றும், (தனிச்சொல் பெற்றோ, பெறாமலோ வரும்) மூன்றுக்கு மேற்பட்ட தாழிசைகளும், தனிச்சொல்லும், சுரிதகமும் வந்தால் அது 'பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' எனப்படும். ( நேரிசை ஒத்தாழிசைக்
கலிப்பாவில் மூன்று தாழிசைகள் இருக்கும். பஃறாழிசைக் கொச்சகத்தில் மூன்றுக்கு மேற்பட்ட( பெரும்பாலும் ஆறு) தாழிசைகள் அமையும். இந்தப் பாவிலும் இரு வகைகளைச் சொல்லாம். தாழிசையின் அடிகள் நாற்சீர் பெற்ற அளவடிகளாய் வந்தால் 'இயல் பஃறாழிசைக் கொச்சகம் ' என்பர்.
தாழிசையின் ஈற்றடி சிந்தடியாய்க் குறைந்தால், 'குறைப் பஃறாழிசைக் கொச்சகம்' என்பர்.
47.4.1 இயல் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்
1.
கடிக்கமலப் பார்வைவைத்துங் கண்ணனார் காணாநின்
அடிக்கமல முடிக்கமலம் அறியாதே அறிதுமே.
2.
முத்தொழிலின் முதல்தொழிலோன் முடியிழந்தான் தனைஇகழ்ந்த
அத்தொழிலிற் கெனில்தமியே மறிதொழிற்கும் வல்லமே.
3.
இருக்கோல மிட்டுமின்னு முணராதால் எந்தைநின்
திருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.
4.
நான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்
கூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே.
5.
தாமடிகள் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல
மாமடிகள் யாமடிகள் மறவாமை யுடையமே.
6.
பலகலையும் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளாது
உலகலையும் சிலகலையும் உணராதேம் உணர்துமே.
அதனால்
அம்மநின் தன்மை எம்மனோ ருணர்தற்கு
அரிதே யெளிதே யாதல்
பெரிதே கருணை சிறிய மாட்டே.
குறிப்பு: தாழிசையின் அடிகள் தரவினுடையதை விடக் குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவு கொள்ளவும்.
47.4.2 குறைப் பஃறாழிசைக் கொச்சகம்
இதற்கு முனைவர் மருதூர் அரங்கராசன் கொடுக்கும் ஒரு காட்டைப் பார்க்கலாம்.
தரவு
தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியும் உடனிறையும் உடன்றளர முன்னாட்கண்
கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையின் நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ?
தாழிசை
1.
இளநலம் இவள்வாட இரும்பொருட்குப் பிரிவாயேல்
தளநல முகைவெண்பல் தளர்வாளோ?
2.
தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநலம் வாடிஇல் இருப்பாளோ?
3.
அணிநலம் இவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநலம் மாசடைய மடிவாளோ?
4.
நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியோம் என்றசொல் பழுதாமோ?
5.
குன்றளித்த திரள்தோளாய் கொய்புனத்துக் கூடியநாள்
அன்றளித்த அருள்மொழியும் அருளாமோ?
6.
சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலும் அருளியதும் பழுதாமோ?
எனவாங்கு
அரும்பெறல் இவளினுந் தரும்பொருள் அதனினும்
பெரும்பெறல் அரியன வெறுககையும் அற்றே
விழுமிய தறிமதி அறிவாம்
கழுமிய காதலின் தரும்பொருள் சிறிதே.
தாழிசைகளின் ஈற்றடி சிந்தடியாக இருப்பதைக் கவனிக்கவும்.
கவிதை இயற்றிக் கலக்கு! - 44
. . பசுபதி . .
48. கலிப்பா -3
கலிப்பாவின் ஆறு உறுப்புகளும் தமக்கு விதிக்கப் பட்ட இடமும் முறையும் மயங்கியும் மிகுதியாகவும், குறைவாகவும், வந்தால் அது 'மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா'வாகும். வண்ணக ஒத்தாழிசைக்கு இயல்பான எல்லா உறுப்புகளும் மிகுந்தும், குறைந்தும், முறை மாறி வரும் பாவை
'இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும் அழைப்பர். இவ்வியல் மயங்கிசைக் கொச்சகத்தில் , ஆசிரியப்பா, வெண்பா போன்ற பிற பாக்களும் கலந்து வந்தால், அதை 'அயல் மயங்கிசைக் கொச்சகம்' என்று அழைப்பர்.
'மயங்கிசைக் கொச்சகத்தில்' சில கலியுறுப்புகள் வரவில்லை என்றால், அது 'ஒருபோகு' எனப்படும். இதில் மூன்று வகைகள் உண்டு. தரவின்றித் தாழிசை, தனிச்சொல், சுரிதகம் பெற்று வருவது 'தாழிசை ஒருபோகு'. இந்த வகையில் தனிச்சொல், சுரிதகமின்றித் தாழிசை தனித்து வருவதும் உண்டு.
தரவு அல்லது தாழிசை இல்லாமல் அம்போதரங்க உறுப்பு மிகுந்து வருவது 'அம்போதரங்க ஒரு போகு'. தரவோ, தாழிசையோ இல்லாமல் அம்போதரங்க உறுப்புகள் சில வந்தாலும், அராக உறுப்பு மிகுந்து நடந்தால்
'வண்ணக ஒருபோகு' ஆகும். 'ஒரு போகு'க்குக் காட்டுகளை யாப்பருங்கல விருத்தியுரையிலும், கே.ராஜகோபாலாச்சாரியாரின் 'யாப்பிய'லிலும் பார்க்கலாம்.
'மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா' எல்லாக் கலம்பகங்களில்
வருவதாலும், அதனுள் கலிப்பாவின் எல்லா உறுப்புகளும் வருவதாலும் எல்லா வகைக் கலிப்பாக்களையும் பற்றி அறிந்து கொள்ள நல்ல உதாரணமாக ஆகிறது. அதனால் அதன் காட்டுகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
பொதுவில், 'தரவு' செய்யுளின் விஷயத்தைத் தொடங்கித் தரும்; ஒருவனைக் கூப்பிடுவது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். 'தாழிசை' தரவு சொல்லிய விஷயத்தை வளர்க்கும். அழைத்தவனிடம் ஒன்றைக் கேட்பது, அல்லது எடுத்துச் சொல்வது போல் அமைவது தாழிசை. ஒன்றைப் பாராட்டி வர்ணிக்கும் இயல்பு கொண்டது 'அராகம்'. 'அம்போதரங்கம்' ஒன்றின் அருள், வீரம் முதலியவற்றால் நடக்கும் காரியங்களின் பெருமைகளைச் சொல்லும். செய்யுளின் முடிவைச் சொல்ல வரும் உறுப்பு தனிச்சொல்.
சுரிதகம் கலிப்பாவை முடித்து வைக்கும் இறுதி அங்கம். இவற்றை மனத்தில் வைத்து எடுத்துக் காட்டுகளைப் படித்தால், பலவகைக் கலிப்பாக்களின் இலக்கணம் மேலும் விளங்கும்.
காட்டுகள்:
48.1.1
-- தரவு --
சூன்முகத்த சுரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய்
வான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக்
கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த்
தேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய். ........1
புற்புதமுந் தொலைவெய்த நிலையெய்தாப் புலையுடம்பின்
இற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு
நற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன்
அற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள். ......2
-- தாழிசை --
எவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ
வெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே. ........(1)
எண்பயிலா வுலகடங்க வொருநொடியி லிரித்திடுநீ
விண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே. ........(2)
பெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை
பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே. ........(3)
மாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர்
சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே. ........(4)
மேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல்
மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே. ........(5)
ஓருருவாய் நிறைந்தநீ யிருவர்க்கன் றுணர்வரிய
பேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே. ........(6)
-- அராகம் --
அறிவினி லறிபவ ரறிவதை யலதொரு
குறியினி லறிவுறு குறியினையலை. ........(1)
உளவயி னுளவள வுணர்வதை யலதுரை
அளவையி னளவிடு மளவினையலை. ........(2)
அருவெனி னுருவமு முளையுரு வெனினரு
வுருவமு முளையவை யுபயமுமலை. ........(3)
இலதெனி னுளதுள தெனினில திலதுள
தலதெனி னினதுரு வறிபவரெவர். ........(4)
-- தாழிசை --
எத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து
மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே. ........(1)
சீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற்
பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே. ........(2)
மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற
அத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே. ........(3)
இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த
அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே. ........(4)
எவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே
அவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே. ........(5)
நின்னலா தவளில்லை யவளலா னீயில்லை
என்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால். ........(6)
அதனால்
-- இருசீரோரடி அம்போதரங்கம் --
தந்தை நீ தாயு நீ. தமரு நீ. பிறரு நீ.
சிந்தை நீ. உணர்வு நீ. சீவ னீ. யாவு நீ.
எனவாங்கு
-- சுரிதகம் --
நெஞ்சகங் குழைந்து நெக்குநெக் குருகநின்
குஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும்
மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்
செம்மாந் திருப்பது தீர்ந்து
மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே. ( சிதம்பரச் செய்யுட் கோவை )
48.1.2
மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
--- தரவு ---
நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான
கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க
இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்
சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்
கண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்
விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். .......(1)
நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்
கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே
பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை
வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட
உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை
வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. .......(2)
--- தாழிசை ---
நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ
தோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே. .......(1)
என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்
முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே. .......(2)
செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்
றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே. .......(3)
பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்
எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே. .......(4)
நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை
மணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே. .......(5)
முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்
கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. .......(6)
--- அராகம் ---
உளதென விலதென வொருவரொ ரளவையின்
அளவினி லளவிட லரியதொ ருருவினை. .......(1)
இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்
அதுவல வெனுமெனி னெவருனை யறிபவர். .......(2)
அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்
எவனவ னிவனென வெதிர்தரு தகைமையை. .......(3)
அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு
நெறியல தொருவரு மறிவரு நிலைமையை. .......(4)
--- நாற்சீரோரடி அம்போதரங்கம் ---
ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.
பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.
எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.
தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.
-- முச்சீரோரடி அம்போதரங்கம் --
வடவரை குழைய வளைத்தனை.
மலைமகண் முலைக டிளைத்தனை.
விடமமிர் தமர விளைத்தனை.
விசயனொ டமர்செய் திளைத்தனை.
வரிசிலை வதனை யெரித்தனை.
மதகரி யுரிவை தரித்தனை.
அருமறை தெரிய விரித்தனை.
அலகில்பல் கலைக டெரித்தனை.
-- இருசீரோரடி அம்போதரங்கம் --
அழல்வி ழித்தனை பவமொ ழித்தனை.
ஆற ணிந்தனை மாற ணிந்தனை..
மழுவ லத்தினை முழுந லத்தினை.
மாந டத்தினை மானி டத்தினை..
அலகி றந்தனை தலைசி றந்தனை..
அருள்சு ரந்தனை இருடு ரந்தனை..
உலக ளித்தனை தமிழ்தெ ளித்தனை.
ஒன்று மாயினை பலவு மாயினை..
-- தாழிசை --
அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்
கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே. .......(1)
பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்
கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. .......(2)
அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்
விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே. .......(3)
இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்
அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே. .......(1)
எனவாங்கு
-- சுரிதகம் --
உலகுசூற் கொண்ட தலைவியு நீயும்
மலைபக வெறிந்த மழவிளங் குழவியை
அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்
வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்
கண்களிற் பருகியக் காமரு குழவி
எழுதாக் கிளவி யின்சுவை பழுத்த
மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்
செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்
புன்மொழிக் கடுக்கொளப் புகட்டினன்
இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே. ( காசிக் கலம்பகம் )
48.1.3
மாமேவு செங்கமல மலருறையுந் திருமகளும்
பூமேவு வெண்கமலப் பொகுட்டுறையுங் கலைமகளும்
பிரியாமே யெஞ்ஞான்றும் பெருநட்புக் கொண்டுறையச்
சரியாமே புகழோங்கத் தழைந்துவளர் சோணாட்டில்
வரைக்கருஞ்சந் தனக்குறடு மால்யானைக் கோடுகளுந்
திரைக்கரத்தி னெடுத்தெறியுஞ் செழும்பொன்னி நதித்தென்பாற்
றனியவிரும் வாட்போக்கித் தடங்கிரிமேற் பேரருளா
லினியகரும் பார்குழலோ டியைந்துறையு மருமருந்தே! (1)
குப்பாயங் கொடுப்பவனோ கொழுங்கண்மல ரிடுபவனோ
செப்பாய முலையுமையாய்த் திகழ்ந்திடப்பா லுறைபவனோ
வெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோ
மருவாழி யென்றுரைக்கு மடைப்பள்ளி காப்பவனோ
கையம்பா யெழுபவனோ கருமுகிலாய்ச் சுமப்பவனோ
வையம்பாய் வெள்விடையாய் வண்கொடியா யுறுபவனோ
தேராவோர் மனையாளைச் சேர்ப்பவனோ நெடுமாலென்
றோராவோர் புலவரெலா முவந்தேத்தப் பொலிவோய்கேள்! (2)
(இவை இரண்டும் எட்டடித்தரவு.)
1. அடித்தழும்பு புறத்திருக்க வாரியர்கோ மகன்கொடுத்த
முடித்தழும்புங் கொண்டனைவெம் முலைத்தழும்பிற் சீரியதோ!
2. அருகாக முப்புவன மடங்கவெரித் தருளுநினக்
கொருகாக மெரித்தனையென் றுரைப்பதுமோர் புகழாமோ!
3. சீரியர்கைப் புனல்கொல்லோ திருந்துமைகைப் புனன்முடிமே
லாரியர்கைப் புனல்கொள்வா யடங்கநனைத் திடுங்கொல்லோ!
4. தருநிதிக்கோ விருக்கவொரு சார்வணிக ரொடுகலந்தாய்
பெருநிதிக்கோ வெனிற்பெருமான் பேராசை பெரிதன்றே !
5. தொடிமுழங்க மணியொலித்துத் துணைவிபுரி பூசைகோலோ
விடிமுழங்கப் புரிபூசை யெஞ்ஞான்று மினிதுவப்பாய் !
6. உனையடைந்தார் பயமகன்றின் புறுவரெனற் கணியுரகங்
கனையடைந்த விடிநோக்கி களித்துறைதல் கரியன்றே!
(இவை ஆறும் தாழிசை.)
1. அவனவ ளதுவென வறைதரு வகைமையு
ளிவனிவ ளிதுவென வியைதர லருமையை;
2. அருவமு முருவமு மருவமொ டுருவமு
மொருவற வுளையெனி னிலையென வொளிருவை;
3. இதுவலை யதுவலை யுதுவலை யெதுவென
முதுமறை கதறவு மதன்முடி மருவுவை;
4. இருளென நிலவென வெழுதரு கதிரென
வருளுயி ருறுதர மணிதர நிலவுவை.
(இவை நான்கும் அராகம்.)
1. அருநாம மெனச்சொலுநின் னாயிரநா மத்துளொரு
திருநாமங் கூற்றடுநின் றிருவடிதாக் குதன்மிகையே!
2. பிரமநீ யெனவழுதி பிரம்படியே யுணர்த்தியது
சிரமம்வே தாகமங்கள் செப்புதனின் றிருவாய்க்கே!
3. உள்வாரு ளொருவரே யொருகோடிக் கமைந்துறவுங்
கள்வாரே வுடைக்கோவைக் காயவிழி மலர்த்தியதென்!
4. கண்டவிட நித்தியத்தைக் காட்டவுங்கங் காளமுத
லண்டவிடந் தரவைத்தா யம்புயஞ்செய் குற்றாமெவன்!
5. ஒருங்கருவி வரை நிகர்சோ வொருங்கெரிக்கு நகையிருக்கப்
பெருங்கருவி பலகொண்டாய் பித்தனெனல் விளக்கினையோ!
6. ஓரெழுத்துக் குரியபொரு ளொருநெடுமா லயனென்பார்
நீரெழுத்து நிகர்மொழிநின் னிலவிதழி முன்னெவனாம்!
(இவை ஆறும் தாழிசை)
1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு
மருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;
2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு
மெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.
(இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்.)
1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;
2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;
3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;
4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.
(இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்.)
1. சடைநெடு முடியமர் செல்லினை;
2. தவமுயல் பவர்வினை கல்லினை;
3. கடையரு வடவரை வில்லினை;
4. கவினுற நெடுமறை சொல்லினை;
5. மிடைவலி யினர்தரு பல்லினை;
6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;
7. அடைதரு மிடையதள் புல்லினை;
8. அளவிட லரியதொ ரெல்லினை;
(இவை எட்டும் முச்சீரோரடி அம்போதரங்கம்.)
1. அருள் கொடுத்தனை;
2. இருள் கொடுத்தனை;
3. ஆல மாந்தினை;
4. சூல மேந்தினை;
5. இசைவி ரித்தனை;
6. வசையி ரித்தனை;
7. எங்கு நீடினை;
8. சங்கு சூடினை;
9. மதிய ணிந்தனை;
10. கொதித ணிந்தனை;
11. மழுவ லத்தினை;
12. தொழுந லத்தினை;
13. பொருவி றந்தனை;
14. கருவ றந்தனை;
15. பொய்யி னீங்கினை;
16. மெய்யி னோங்கினை.
(இவை பதினாறும் இருசீரோரடி அம்போதரங்கம்.)
எனவாங்கு,
(இது தனிச்சொல்.)
பசித்தழூஉ ஞானப் பாலுண் மழவு
மேற்றொடு சூல மேற்றதோ ளரசு
மவிர்தரு செம்பொ னாற்றிடை யிட்டுக்
குளத்தி லெடுத்துக் கொண்ட கோவுங்
கனவிலு மமரர் காணரு நின்னைப் (5)
பரிமா மிசைவரப் பண்ணிய முதலுங்
கரைதரு தமிழ்க்குக் காணி கொடுத்த
நின்றிருச் செவிக்க ணெறிகுறித் தறியாப்
பொல்லாப் புலைத்தொழிற் கல்லாச் சிறியே
னெவ்வகைப் பற்று மிரித்தவர்க் கன்றி (10)
மற்றையர்க் கொல்லா வயங்கருள் பெறுவான்
கொடுவிட மமுதாக் கொண்டதை யுணர்ந்து
குற்றமுங் குணமாக் கொள்வையென் றெண்ணிப்
புன்மொழித் துதிசில புகட்டின
னன்மொழி யெனினு மருளுதி விரைந்தே. (15)
(இதுபதினைந்தடி நேரிசையாசிரியச்சுரிதகம்.) ( வாட்போக்கிக் கலம்பகம் )
48.1.4
தரவு
மணிகொண்ட திரையாழி சுரிநிமிர மருங்கசைஇப்
பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும்
பூந்தொத்துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல்வளர்
தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையும்
மனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத்
தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலைநிற்ப
அம்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லியொடுஞ்
செம்பொன்மதிற் றமிழ்க் கூடற் திருநகரம் பொலிந்தோய் கேள்.
தாழிசை
விண்ணரசும் பிறவரசுஞ் சிலரெய்த விடுத்தொருநீ
பெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே. 1
தேம்பழுத்த கற்பகத்தி னறுந்தெரியல் சிலர்க்கமைத்து
வேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி மிலைச்சினையே. 2
வானேறுஞ் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த
மீனேறோ வானேறும் விடுத்தடிக ளெடுப்பதே. 3
மனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே
கனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே. 4
விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பொருநைத்
தண்ணாறு குடைந்துவைகைத் தண்டுறையும் படிந்தனையே. 5
பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்
வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே. 6
அராகம்
அவனவ ளதுவெனு மவைகளி லொருபொரு
ளிவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை. 1
இலதென வுளதென விலதுள தெனுமவை
யலதென வளவிட வரியதொ ரளவினை. 2
குறியில னலதொரு குணமில னெனநினை
யறிபவ ரறிவினு மறிவரு நெறியினை. 3
இருமையு முதவுவ னெவனவ னெனநின
தருமையை யுணர்வுறி நமிழ்தினு மினிமையை. 4
தாழிசை
வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை
செய்கைக்கென் றறியேமாற் றிருமுடிமண் சுமந்ததே. 1
அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவ
டரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே. 2
முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே
மலைகொண்ட புயத்தென்னீ வளை கொண்டுசுமந்ததே. 3
ஊண்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர்
மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே. 4
அம்போதரங்கம்
முச்சீர்
போகமாய் விளைந்தோய் நீ
புவனமாய்ப் பொலிந்தோய் நீ
ஏகமா யிருந்தோய் நீ
யெண்ணிறந்து நின்றோய் நீ
இருசீர்
வானு நீ
நிலனு நீ
மதியு நீ
கதிரு நீ
ஊனு நீ
யுயிரு நீ
யுளது நீ
யிலது நீ
எனவாங்கு,
தனிச்சொல்
சுரிதகம்
பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக் 1
கருஞ்சினை வேம்பு பொன்முடிச் சூடி
அண்ண லானேறு மண்ணுண்டு கிடப்பக்
கண்போற் பிறழுங் கெண்டைவல னுயர்த்து
வரியுடற் கட்செவி பெருமூச் செறியப் 5
பொன்புனைந் தியன்ற பைம்பூண் டாங்கி
முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசிற்
பசும்பொனசும் பிருந்த பைம்பொன்முடி கவித்தாங்
கிருநிலங் குளிர்தூங் கொருகுடை நிழற்கீழ்
அரசுவீற் றிருந்த வாதியங் கடவுணின் 10
பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும்
ஐம்புல வழக்கி னருஞ்சுவை யறியாச்
செம்பொருட் செல்வநின் சீரடித் தொழும்புக்
கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக
பிறிதொரு கடவுட்குப் பெரும்பயன் றரூஉம் 15
இறைமையுண் டாயினு மாக குறுகிநின்
சிற்றடி யவர்க்கே குற்றேவ றலைக்கொண்
டம்மா கிடைத்தவா வென்று
செம்மாப் புறூஉந் திறம்பெறற் பொருட்டே. (1) ( மதுரைக் கலம்பகம் )
48.2 வெண்கலிப்பா
கலிப்பாவில் நான்கு வகைகள் உண்டு: 1. ஒத்தாழிசைக் கலிப்பா 2. கொச்சகக் கலிப்பா 3. வெண்கலிப்பா 4. உறழ்கலிப்பா
முதல் இரண்டு வகைகளைப் பற்றி இதுவரை பார்த்தோம். கடைசி இரு வகைகளைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
'வெண்கலிப்பா'வைப் பற்றி நாம் முன்பே 27-ஆவது இயலில் ஆராய்ந்துள்ளோம். மீண்டும் அதன் இலக்கணத்தைப் பார்ப்போம்.
* கலிப்பாவின் தரவு மட்டும் வரும் வெண்கலிப்பாவின் சிற்றெல்லை 4 அடிகள்; பேரெல்லை கிடையாது.
*கலித்தளை மிகுதியாக வரும். மற்ற தளைகள் ஓரோவழி வரும்.
* ஈற்றடியில் மூன்று சீர்களே உண்டு. ( இது வெண்டளையில் அமைய வேண்டியதில்லை). மற்ற அடிகள் நாற்சீர்கள் கொண்ட அளவடிகள்.
ஒரு காட்டு மட்டும் இங்கே கொடுப்போம்.
பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா
விண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாளும் வேந்தரா வார். (யா.க.)
48.3 உறழ்கலிப்பா
'உறழ்கலிப்பா' என்ற வகை வினா-விடை வடிவில் வரும். " ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச்சென்று பின்னர் அவற்றை அடக்குவதோர் 'சுரிதகம்' (போக்கு) இன்றி முடிவது உறழ்கலியாம்" என்கிறார்
நச்சினார்க்கினியர்.
உதாரணம்: சங்க நூலாகிய கலித்தொகையின் 87 -ஆவது பாடல்
தலைவி:
ஒரூஉநீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை
வெரூஉதும், காணும் கடை;
தலைவன்:
தெரி இழாய்! செய் தவறு இல் வழி, யாங்குச் சினவுவாய்,
மெய் பிரிந்தன்னவர் மாட்டு?
தலைவி:
ஏடா! நினக்குத் தவறுஉண்டோ? நீ வீடு பெற்றாய்;
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப்பால் அறியினும், நின் நொந்து நின்னைப்
புலப்பா டுடையர் தவறு;
தலைவன்:
அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இல்லேன் யான்;
தோழி:
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ, இனி?
தலைவி:
'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்
தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப்
பாடு இல் கண் பாயல் கொள!
உரையாடலாக, வினா-விடையாக, நாடகப் பாணியில் அமைந்துள்ள இந்தப் பாடலில் தரவும் இல்லை; சுரிதகமும் இல்லை. கலித்தொகையின் 'நலமிக நந்திய' என்ற 133-ஆம் பாடலும் உறழ்கலிக்கு ஒரு நல்ல உதாரணம்.
( தொடரும் )
கவிதை இயற்றிக் கலக்கு! - 45
. . பசுபதி . .
49. வண்ணப் பாடல்கள் - 1
இசைப்பாடல்களில் தாளம் உள்ளவை, தாளம் இல்லாதவை என்ற இரண்டு வகைகள் உண்டு. தாளம் உள்ள இசைப்பாடல்களில் முக்கியமானவை : சந்தப் பா, வண்ணப் பா, சிந்து, கீர்த்தனை( உருப்படி) . சந்தப் பாக்களைப் பற்றி முன்பே ஆராய்ந்திருக்கிறோம். இப்போது வண்ணப் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
கவிதை இலக்கணத்தை விளக்கும்சில நூல்களை இத் தருணத்தில் குறிப்பிடுவது பொருந்தும். பொதுவாக, தொல்காப்பியம், யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்கள் இயற்றமிழ்ப் பாக்களைப் பற்றித்தான் விவரமாகச் சொல்லியுள்ளன. விருத்தங்களைப் பற்றி
முதலில் விரிவாக எழுதிய நூல் வீரபத்திர முதலியாரின் 'விருத்தப் பாவியல்'. அதில் இசைப் பாக்களில் ஒன்றான சந்தப் பாக்களைப்
பற்றியும் விவரங்களும் உள்ளன. பிறகு, கவிமாமணி இலந்தை இராமசாமி மேலும் விவரமாக 'விருத்தம் எழுத வருத்தம் எதற்கு' என்ற
ஒரு கட்டுரைத் தொடரை இணைய மடற் குழுவொன்றில் எழுதினார்.( இது நூலாக இன்னும் வெளியாகவில்லை.) 'வண்ணப் பாக்களின்'
இலக்கணத்தை முதன் முதலாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 'வண்ணத்தியல்பு' என்ற நூலில் எழுதினார். அருணகிரி நாதரின்
திருப்புகழ்ப் பாக்களை இலக்கணமாகவும், இலக்கியமாகவும் கொண்டு படைக்கப் பட்ட இலக்கண நூல் 'வண்ணத்தியல்பு'. நாம் இப்போது
வண்ணப்பாவின் இலக்கணத்தையும், சில காட்டுகளையும் பார்ப்போம்.
சந்தப் பாக்கள் சந்த மாத்திரைக்கேற்ப இயற்றப் படுகின்றன. வண்ணப் பாக்கள் சந்தக் குழிப்புக்கேற்பப் பாடப் படுகின்றன. அவற்றின்
இலக்கணத்தைப் புரிந்து கொள்ளச் சந்தக் குழிப்பில் வரக் கூடிய
அடிப்படைச் சந்தங்களையும், அவற்றை நீட்டி வரும் தொடர் சந்தங்களையும் புரிந்து கொள்வது அவசியம். சந்தப் பாடல்களைப் பற்றி நாம் ஆராயும் போது, இவற்றைப் பற்றி நாம் முன்பே பேசியிருக்கிறோம். ஆனால், சந்தப் பாடலில் இல்லாத இன எழுத்து வேறுபாடுகள் வண்ணப் பாவில் வரும். இவற்றைப் புரிந்து கொள்ள சந்தங்களின் இலக்கணத்தை மீண்டும் கவனமாகப் பார்ப்போம்.
49.1 சந்தங்கள்
அடிப்படை சந்தங்கள் எட்டு ; அவற்றின் நீட்சிகள் இன்னொரு எட்டு. ஆக மொத்தம் பதினாறு.
============================
1. 'தத்த'ச் சந்தம் = குறில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க் குறில் .
இதுவே முக்கிய விதி. "கூடவே" இடையின, மெல்லின ஒற்றுகள் (சான்றுகளைப் பார்க்கவும் ) வந்தாலும் சந்தம் கெடாது.
சான்றுகள்: முத்து, வற்றல், விட்டம், மொய்த்த, மெய்ச்சொல், கர்த்தன்.
இதன் நீட்சியாகத் 'தத்தா' வரும்.
இனிமேல், இத்தகைய நீட்சிகளுக்குச் சான்றுகள் மட்டும் தருவோம்.
3. 'தாத்த ' = நெடில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க் குறில்
சான்றுகள்: பாட்டு, பாட்டன், கூத்தன், வார்ப்பு, தூர்த்தன், வாழ்த்தல்.
4. 'தாத்தா' = தாத்தா, மூச்சால், சாத்தான், வேய்ப்பூ, மாய்த்தோர், வார்த்தோன்.
5. 'தந்த' = குறில் + மெல்லொற்று + வல்லின உயிர்மெய்க்குறில்
சான்றுகள்: பந்து, உம்பர், சுண்டல், மொய்ம்பு, மொய்ம்பர், மொய்ம்பன்
6. 'தந்தா' = அந்தோ, வந்தார், தந்தேன், மொய்ம்பா, மொய்ம்போர், மொய்ம்போன்
8. 'தாந்தா' = சேந்தா, வாங்கார், நான்றான், நேர்ந்தோ, சார்ந்தார், மாய்ந்தான்
10. தனா = குகா, சிறார்,கவான்
12. தானா= மாறா, போகார், மேவான், ஓர்பூ, கூர்வேல், சேர்மான்,
கேண்மோ, மான்வா, மாண்மான், கூன்வாள், வான்மேல், தேன்வீண்
14. தன்னா = அண்ணா, மன்வா, முன்னோன், அன்னோர், பொன்வேல், தண்வான்
16.தய்யா = மெய்யே, நெய்தோ, தள்ளார், செய்தோர், வல்லோன், ஒல்கேன்
49.2 தொடர் சந்தங்கள்
* 16- அடிப்படைச் சந்தங்களுக்குப் பின் 'ன' , னா, னத் . . போல் சேர்த்து மற்ற
தொடர்களை உருவாக்கலாம். 'தத்த' என்ற ஒரு சந்தத்தை மட்டும் நாம் பயன்படுத்தி இப்போது தொடர்சந்தங்கள் சிலவற்றை
வரிசைப் படுத்துவோம். இப்படியே மற்ற சந்தங்களுக்கும் செய்யலாம்.
சான்று: தத்தன ( கற்றது), தத்தனா (விட்டதா), தத்தனத் (கத்தியைக் ), தத்தனாத் ( சுற்றுலாப் ), தத்தனந் ( கட்டிளம் ),
தத்தனாந் ( வெட்டலாம் ), தத்தத் ( முத்தைத் ), தத்தந் ( கப்பம் ), தத்தத்த ( கட்டற்ற ), தத்தத்தா ( தப்பப்பா ),
தத்தந்த ( கட்டின்றி ), தத்தந்தா ( முத்தந்தா )
* ஒரு சந்தத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தங்களையும் சேர்ப்பது உண்டு.
சான்று : தன+த்+தந் = தனத்தந் ( மயக்கம் ) , தான+ந்+தந் = தானந்தந் (ஆனந்தம்)
*
இப்போது ஒரு திருப்புகழின் வண்ண அமைப்பைப் பார்க்கலாம்.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
. . கப்பிய கரிமுக னடிபேணிக்
. கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
. . கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
. . மற்பொரு திரள்புய மதயானை
. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
. . மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
. . முற்பட எழுதிய முதல்வோனே
. முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
. . அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
. . அப்புன மதனிடை இபமாகி
. அக்குற மகளுட னச்சிறு முருகனை
. . அக்கண மணமருள் பெருமாளே.
இதன் சந்தக் குழிப்பு:
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான
என்ற குழிப்பைக் கவனிக்கவும்
இந்தப் பாடலில் மூன்று துள்ளல்கள் சேர்ந்து ஒரு 'குழிப்பு' -ஆக வருகிறது. பொதுவாக, பல திருப்புகழ்களில் ' துள்ளல்' ஒன்றாகவோ, மூன்றாகவோ அடுக்கப் பட்டுக் 'குழிப்பாக' வரும். ( சந்தக் கலவையாக வரும் திருப்புகழ்கள் உண்டு. அவற்றை நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போவதில்லை.)
7. குழிப்பும் தொங்கலும் சேர்ந்து 'கலை' எனப்படும்.
8. இரண்டு கலைகள் மோனையால் இணைந்து அடியாகும்.
9. ஒரே எதுகை பயிலும் நான்கு அடிகளால் ஆனது இந்த வண்ணப் பாடல்.
பல சந்த விருத்தங்களை நாம் இம்மாதிரியே சந்தக் குழிப்புகள் மூலம் முன்பு ஆராய்ந்திருக்கிறோம். அசைச் சீர்களின் அடிப்படையில் தொடங்கி,
பிறகு சந்த மாத்திரைப்படி அமைந்த இந்தச் சந்த விருத்தங்களை 'அசைச் சந்த விருத்தம்' என்றும் சிலர் அழைப்பர். அப்படியென்றால், அசைச்
சந்த விருத்தத்திற்கும் ( திருப்புகழ் போன்ற ) வண்ண விருத்தத்திற்கும் என்ன வேறுபாடு? அசைச் சந்த விருத்தங்கள் சந்த மாத்திரையை
அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், வண்ணப் பாக்கள் சந்தக் குழிப்புக்கு எழுதப் பட்டவை. அசைச் சந்த விருத்தத்தில் , 'தத்த' என்ற மூன்று சந்த மாத்திரைச் சீருக்குப் பதிலாக, சில சமயம், 'தய்ய', தந்த', 'தான' போன்ற மூன்றெழுத்துச் சந்தங்கள் வரலாம். ஆனால், வண்ணப் பாடலில் அம்மாதிரி வரக்கூடாது. அதனால், வண்ணப் பாடல்கள் யாவும் அசைச் சந்தப் பாடல்கள் தாம். ஆனால், எல்லா அசைச் சந்தப் பாடல்களும் வண்ணப் பாடல்களாகா. அதாவது, வண்ணப் பாடலில் சந்தக் குழிப்பில் உள்ள வல்லின, இடையின, மெல்லின பேதங்கள் கடைபிடிக்கப் பட வேண்டும். இந்த வேறுபாட்டை மேலே உள்ள திருப்புகழை ஆராய்வதின் மூலம் கண்டு தெளியலாம்.
திருப்புகழ் ஒன்றுதானா வண்ணப் பாடல்? இல்லை, எல்லாப் பாவினங்களிலும் வண்ணப் பாக்களை நாம் இயற்றலாம். அவற்றுள் சில காட்டுகளை அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். தொங்கல் என்ற பகுதியைச் சேர்ப்பதின் மூலம், அருணகிரிநாதர் ஒரு புதிய பாவினத்தைத் தோற்றுவித்தார். வண்ணப் பாடல்களிலேயே 'திருப்புகழ்' மிகவும் கடுமையான இலக்கணம் கொண்டது என்றால் மிகையாகாது.
49.3 சந்தங்களும், தாள ஜாதிகளும்
திருப்புகழ் முழுவதையும் மேற்கண்ட ஐந்து ஜாதிகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். பெரும்பாலான திருப்புகழ்களில் ஒரு
லய அமைப்பு மூன்று முறை மடங்கி வந்து தொங்கலில் முடிவடைவதைப் பார்த்தோம். இவற்றை ஐந்து ஜாதிகளில் உள்ள பாடல்கள்,
இந்த ஐந்து ஜாதிகளின் கலப்புச் சந்தத்தில் அமைந்துள்ளவை என்று பிரிக்கலாம். எடுத்துக் காட்டாக ஐந்து நடைகளில் வரும் சில
காட்டுகளின் முதல் வரியை இப்போது இங்குப் பார்ப்போம். (இவற்றில் தொங்கல் அடிப்படைச் சந்தத்தை நீட்டி, ஒரு ஆவர்த்தனமாகப்
பாடப்படுகிறது என்று கொள்ளலாம். )
1) திஸ்ர நடை. 'தனன தனன'
தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத்
2) சதுரஸ்ர நடை. 'தனதன தனதன'
நிறைமதி முகமெனு மொளியாலே
3) கண்ட நடை: 'தனாதன தனாதன'
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் பிரபையாகி
4) மிஸ்ர நடை. 'தனதன தான' .
அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி அகமாகி
5) சங்கீர்ண நடை. 'தானாத் தனதான'
தீராப் பிணிதீர சீவாத் துமஞான
கலப்புச் சந்தத்திற்கு ஒரு காட்டு:
(திஸ்ரம்+சதுரஸ்ரம்+கண்டம்) என்ற அமைப்பு. 'தத்த தானா தனாத்தன' .
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம விந்துநாத
(தொடரும்)
கவிதை இயற்றிக் கலக்கு! - 45
. . பசுபதி . .
கலப்புச் சந்தத்திற்கு ஒரு காட்டு:
(திஸ்ரம்+சதுரஸ்ரம்+கண்டம்) என்ற அமைப்பு. 'தத்த தானா தனாத்தன' .
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம விந்துநாத
கவிதை இயற்றிக் கலக்கு! - 46
. . பசுபதி . .
50. வண்ணப் பாடல்கள் - 2
50.1 வண்ண வஞ்சித் துறை
தனத்த தானன
செனித்த சீவருள்
மனத்தின் மாவொளி
மினுக்கும் வேலவ
எனக்கு மீயொளி. ( பாம்பன் சுவாமிகள் )
50.2 வண்ண வஞ்சி விருத்தம்
தந்தத் தனதன தந்தானா
பந்தக் கடமுறை பண்பீரே
சந்தக் கடமதி தந்தேயாள்
எந்தக் கடவுளு மென்கோள்போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே ( பாம்பன் சுவாமிகள் )
50.3 வண்ணக் கலி விருத்தம்
தய்யன தய்யன தய்யன தய்யன
நல்லவர் மல்கவெ ணௌவலில் வைகிய
வல்லவ னுள்ளகம் வெளவெழில் வல்லிக
ணல்லலில் செல்வமு மள்ளுறு கல்வியு
மெல்லவன் வெள்கறி வெல்லையு நல்குமே. ( வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் )
50.4 வண்ணத் தரவு கொச்சகம்
50.4.1 பன்னிரு எழுத்தடிகள்
50.4.1.1
தானத் தனதான தானத் தனதான
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
கோதற் றமுதானே கூடற் பெருமாளே. ( அருணகிரிநாதர் )
50.4.1.2
தத்தத் தனதான தத்தத் தனதான
அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாதே பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே ( திருப்புகழ் )
50.4.1.3
தானாத் தனதான தானாத் தனதான
தீராப் பிணிதீர சீவாத் துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே. ( திருப்புகழ் )
இவற்றைக் கலிவிருத்தங்களாகவும் கருதலாம்.
50.4.2 பதினாறு எழுத்தடி
50.4.2.1
தானதனத் தனதான தானதனத் தனதான
காலனிடத் தணுகாதே காசினியிற் பிறவாதே
சீலஅகத் தியஞான தேனமுதைத் தருவாயே
மாலயனுக் கரியோனே மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே நாககிரிப் பெருமாளே. ( திருப்புகழ் )
50.4.2.2
தனதனனத் தனதான தனதனனத் தனதான
புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே
சமரி லெதிர்த் தசுர்மாளத் தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே. ( திருப்புகழ் )
50.5 வண்ணக் கலிநிலைத் துறை
தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தந்தத்தன
கதைகொண்ட சமன்வந்து பொருமுன்பு மலர்கின்ற கஞ்சக்குழல்
இடையங்கொ டுனைநம்பும் நிலைதந்து சுகமிஞ்சும் இன்புய்த்திடாய்
குதையொன்று சிலையங்கை யினர்நின்று புகழ்கின்ற குன்றக்குடி
அதைஎன்றும் அரசென்க அயிலுங்கொ டமரும்பொன் அந்தத்தனே ( வண்ணச் சரபம் )
50.6 அறுசீர் வண்ண விருத்தம்
50.6.1 பதினாறு எழுத்தடி
தானத் தானத் தனதான
நாடித் தேடித் தொழுவார்பால்
. நானத் தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதிஞான
. வாழ்வைச் சேரத் தருவாயே
பாடற் காதற் புரிவோனே
. பாலைத் தேனொத் தருள்வோனே
ஆடற் றோகைக் கினியோனே
. ஆனைக் காவிற் பெருமாளே ( திருப்புகழ் )
50.6.2 பதினெட்டு எழுத்தடி
தந்தனந் தந்தத் தனதானா
சந்ததம் பந்தத் தொடராலே
. சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
. கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
. சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
. தென்பரங் குன்றிற் பெருமாளே. ( திருப்புகழ்)
50.6.3 இருபது எழுத்தடி
தய்யதன தானத் தனதானா
துள்ளுமத வேள்கைக் கணையாலே
. தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
. மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
. செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
. வள்ளிமண வாளப் பெருமாளே ( திருப்புகழ் )
50.6.4 இருபத்திரண்டு எழுத்தடி
தனதான தந்தனத் தனதானா
அபகார நிந்தைபைட் டுழலாதே
. அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
. உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
. இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
. திருவாவி னன்குடிப் பெருமாளே. ( திருப்புகழ் )
50.6.5 இருபத்து நான்கு எழுத்தடி
தனதனன தாத்தனத் தனதானா
பிறவியலை யாற்றினிற் புகுதாதே
. பிரகிருதி மார்க்கமுற் றலையாதே
உறுதிகுரு வாக்கியப் பொருளாலே
. உனதுபத காட்சியைத் தருவாயே
அறுசமய சாத்திரப் பொருளோனே
. அறிவுளறி வார்க்குணக் கடலோனே
குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே
. குமரகுரு கார்த்திகைப் பெருமாளே. ( திருப்புகழ் )
பயிற்சிகள்:
50.1 மேலே உள்ள காட்டுகளில் வெண்டளை பயிலும் வண்ண விருத்தங்களைக் குறிப்பிடுக. வெண்டளை பயிலும் வேறு சில சந்தக் குழிப்புகளையும், அவை பயிலும் அறுசீர் திருப்புகழ்ப் பாக்களையும் காட்டுக.
50.2 வல்லின ஒற்றுகள் இல்லாத பாடல்கள் இசைக்கு மிகவும் ஏற்றவை. ( காட்டு: மாசில் வீணையும் என்று தொடங்கும் தேவாரம்). வல்லின ஒற்றுகள் இல்லாத சில திருப்புகழ்களைக் குறிப்பிடுக. ( இதை 'இழைபு' என்கிறது தொல்காப்பியம்.)
50.3 வல்லின(மெல்லின/இடையின) எழுத்துகள் அதிகமாக வரும் சில சந்தக் குழிப்புகளையும், அவற்றைத் தழுவி வரும் திருப்புகழ்களின் முதல் அடிகளையும் காட்டுக.
கவிதை இயற்றிக் கலக்கு! - 47
. . பசுபதி . .
51. வண்ணப் பாடல்கள் - 3
51.1 எழுசீர் வண்ண விருத்தம்
51.1.1 இருபத்தொன்று எழுத்தடி
தந்தனந் தனன தந்தனந் தனன
. தந்தனந் தனன தந்தனா
அம்புகண் குவடு கொங்கையென் றபொய
. றைந்துமன் றுசில ருய்ந்துளார்
நம்புதொண் டுவிழை கின்றவென் றதைந
. லிந்துடும் படித ணந்திடேல்
சிம்புளென் ரவடி வஞ்சமைந் தரிசி
. தைந்திடும் படித டிந்ததோர்
சம்புலிங் கரித யங்கவர்ந் தணைத
. ரும்பெருந் தகைம டந்தையே ( வண்ணச் சரபம் )
51.1.2 இருபத்தெட்டு எழுத்தடி
தனதன தத்ததந்த தனதன தத்ததந்த
. தனதன தத்ததந்த தனதான
மடவிய ரெச்சிலுண்டு கையில்முத லைக்களைந்து
. மறுமைத னிற்சுழன்று வடிவான
சடமிக வற்றிநொந்து கலவிசெ யத்துணிந்து
. தளர்வுறு தற்குமுந்தி யெனையாள்வாய்
படவர விற்சிறந்த இடமிதெ னத்துயின்ற
. பசுமுகி லுக்குகந்த மருகோனே
குடமுனி கற்கவன்று தமிழ்செவி யிற்பகர்ந்த
. குமரகு றத்திநம்பு பெருமாளே. ( திருப்புகழ் )
51. 2 எண்சீர் வண்ண விருத்தம்
51.2.1 இருபத்திரண்டு எழுத்தடி
தனன தான தத்த தனதான
எதிரி லாத பத்தி தனைமேவி
. இனிய தாள்நி னைப்பை யிருபோதும்
இதய வாரி திக்கு ளுறவாகி
. எனது ளேசி றக்க அருள்வாயே
கதிர காம வெற்பி லுறைவோனே
. கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
. வழுதி கூனி மிர்த்த பெருமாளே. ( திருப்புகழ் )
51.2.2 இருபத்து நான்கு எழுத்தடி
தனனந் தனன தந்த தனதானா
அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
. அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
. இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
. இறைவன் தனது பங்கி லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
. பலகுன் றிலும மர்ந்த பெருமாளே. ( திருப்புகழ் )
51.2.3 இருபத்தாறு எழுத்தடி
தனதனன தான தந்த தனதான
உலகபசு பாச தொந்த மதுவான
. உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச லமதாலென்
. மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை யணிசேயே
. சரவணப வாமு குந்தன் மருகோனே
பலகலைசி வாக மங்கள் பயில்வோனே
. பழநிமலை வாழ வந்த பெருமாளே. ( திருப்புகழ் )
51.2.4 இருபத்தெட்டு எழுத்தடி
தனனதன தனன தந்தத் தனதானா
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
, இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
. உனையெனது ளறியு மன்பைத் தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
. வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே
. கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே. ( திருப்புகழ் )
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் புதமான
. செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட
. இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் பொரும்வேலா
. கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் கொருபாலா
. பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் பெருமாளே. ( திருப்புகழ் )
51.3 பதின்சீர் வண்ண விருத்தம்
51.3.1 இருபத்தாறு எழுத்தடி
தான தான தானான தானத் தனதானா
பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே
. பேதை மாத ராரோடு பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன்
. ஆவி சாவி யாகாமல் நீசற் றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க் கெளிவாயா
. தோகை யாகு மாரா கிராதக் கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் பெரியோனே
. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே. ( திருப்புகழ் )
51.3.2 முப்பது எழுத்தடி
51.3.2 முப்பத்தொன்று எழுத்தடி
தந்தந்தந் தந்த தனந்தன
. தந்தந்தந் தந்த தனந்தன
. தந்தந்தந் தந்த தனந்தன தனதனா
துன்பங்கொண் டங்க மெலிந்தற
. நொந்தன்பும் பண்பு மறந்தொளி
. துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
. கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
. யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சர
. ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
. நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
. குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
. பம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே. ( திருப்புகழ் )
51.3.3 முப்பத்திரண்டு எழுத்தடி
தனந்த தானந் தந்தன தனதன தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு முறுகேளும்
. இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே
. விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே
. குரங்கு லாவுங் குன்றுரை குறமகள் மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே
. சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே. ( திருப்புகழ் )
51.3.4 முப்பத்தாறு எழுத்தடி
தனத்த தானன தனதன தனதன தனதானா
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும்
. அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது நினையாதுன்
. தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே
எருத்தி லேறிய இறைவர் செவிபுக வுபதேசம்
. இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை
. பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை பெருமாளே. ( திருப்புகழ் )
இனி 12-க்கு மேற்பட்ட சீர்கள் உடைய சில திருப்புகழ்களின் முதல் அடியை மட்டும் சந்தக் குழிப்புடன் குறிப்போம்.
51.4 பன்னிரு சீர் வண்ண விருத்தம்
தானதந் தனதனன தனனதா தத்த தந்த தனதான
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
. ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே
51.5 பதிநான்கு சீர் வண்ண விருத்தம்
தான தத்த தான தத்த தான தத்த தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு மபிராம
. வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய
51.6 பதினாறு சீரடி வண்ண விருத்தம்
தனதன தந்த தனதன தந்த
. தனதன தந்த தானாந் தனனா
குடர்நிண மென்பு சலமல மண்டு
. குருதிந ரம்பு சீயூன் பொதிதோல்
குலவுகு ரம்பை முருடுசு மந்து
. குனகிம கிழ்ந்து நாயேன் தளரா
51.7 இருபது சீரடி வண்ண விருத்தம்
தத்தத்தன தத்தத் தனதன
. தத்தத்தன தத்தத் தனதன
. தத்தத்தன தத்தத் தனதன தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
. அத்திக்கிறை சத்திச் சரவண
. முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
. முற்பட்டது கற்பித் திருவரும்
. முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
51.8 இருபத்து நான்கு சீரடி வண்ண விருத்தம்
தனனதன தான தானன
. தனனதன தான தானன
. தனனதன தான தானன தந்தத் தந்தத் தனதானா
அருணமணி மேவு பூஷித
. ம்ருகமதப டீர லேபன
. அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின்
. முழுகியபி ஷேக மீதென
. அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் கிதமாகி
வரிகளில் மோனை எங்கு வருகிறது என்பதைக் கவனிக்கவும். ஆறு வரிகளில் மடங்கும் அடிகளில், பொதுவில் இப்படித்தான்
(1,3,4,6 வரிகளில்) வரும்.
51.9 இருபத்தாறு சீரடி வண்ண விருத்தம் : எழுபத்து நான்கெழுத்தடி
தான தந்தன தானான தானன
. தான தந்தன தானான தானன
. தான தந்தன தானான தானன தனதான
நாத விந்துக லாதீந மோநம
. வேத மந்த்ரசொ ரூபாந மோநம
. ஞான பண்டித ஸாமீந மோநம வெகுகோடி
நாம சம்புகு மாராந மோநம
. போக அந்தரி பாலாந மோநம
. நாக பந்தம யூராந மோநம பரசூரர்
முழுப்பாடல்களைத் திருப்புகழ் நூலில் பார்க்கவும். இந்த வண்ண விருத்தங்களில் விளாங்காய்ச் சீர்கள், கனிச்சீர்கள் வருவதைக்
கவனிக்கவும். அருணகிரிநாதர் இயற்றிய வகுப்புகளிலும் அதிக சீர்களடிகள் கொண்ட வண்ண விருத்தங்கள் உள்ளன.
[ காட்டு: புயவகுப்பு, 112 சீரடி; பூதவேதாள வகுப்பு, 160 சீரடி; சித்து வகுப்பு, 196 சீரடி] இவர் வழியில் பின்னர் வந்த வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சாதுராம் சுவாமிகள் போன்றவர்களும் பல வண்ணப் பாடல்கள் இயற்றினர். முனைவர் சோ.ந. கந்தசாமி சொல்வது போல், " வரிப்பாடல்களில் தொடங்கிய சந்தம், திருவிராகப் பதிகம் போன்ற திருமுறைப் பாடல்களில் தவழ்ந்து திருப்புகழ்ப் பாடல்களில் வளர்ச்சி பெற்றுப் பின்னர்த் தோன்றிய வண்ணப் புலவர்கள் பலர்க்கும் வழிகாட்டியாக வழங்குதல் குறிப்பிடத் தக்கது."
கவிதை இயற்றிக் கலக்கு -7கவிதை இயற்றிக் கலக்கு : ஒரு மதிப்புரை“கவிதை இயற்றிக் கலக்கு” என்ற யாப்பிலக்கண நூலைப் பற்றிய
கவிமாமணி குமரிச்செழியன்
சில விவரங்கள்
க.இ.க -5 -இலும்
அதைப் பற்றி “அமுதசுரபி”யில் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது
க.இ.க -6 -இலும் உள்ளன.
நூல் வெளியீட்டு விழா நடந்ததும், எனக்குப் பாரதி கலைக் கழகத் தலைவர்
கவிமாமணி குமரிச் செழியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் நூலை மிக ஆழமாகப் படித்து எழுதிய ஒரு மதிப்புரையாக அது விளங்குகிறது என்பதால், அந்தக் கடிதத்தை தட்டச்சுச் செய்து, இங்கு வெளியிடுவதில் மகிழ்கிறேன்.மேலும் படிக்க: