’சோ’- சுரதா : கவிதைப் போர் - 1
[நன்றி: ஆனந்த விகடன்]
1.
இதுதான் கவிதையா? 'சோ'வின் (கேள்விக்) கவிதை
கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா
எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
என்ன வென்று இப்போது புரிந்தது.
எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை
நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!
மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்
எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.
வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்
கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!
தற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல கம்பாஸிடர்தான்
என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி!
விகடனுக்கு நன்றி!
கவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு
சுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்
இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!
மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!
பழுதென்ன கண்டீர் என் பாட்டில்? 'சுரதா'வின் (பதில்) கவிதை
சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச் சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்
பலரெழுதிக் கெடுக்கின்றார்! துக்ளக் என்னும்
பத்திரிகை நடத்திவரும் நண்பர் சோவோ,
அலைவரிசை வசனந்தான் கவிதை என்னும்
அவதாரம் என்றிங்கே வாதிக் கின்றார்!
தலைவரிசைக் கவிஞர்களைத் தாக்கு கின்றார்
தாக்குமிவர் தாக்கெல்லாம் பள்ளத் தாக்கு!
ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? கம்பாசிட்டர்
உதவியெனக் கெதற்காக? இவர்க்குச் சொல்வேன்:
மீனெதற்குச் சைவனுக்கு? விளக்கைக் காட்ட
விளக்கெதற்கு? பாப்புனையும் நூல்கள் கற்றே
நானெழுதி வருகின்றேன். நீரூற்றாமல்
நகம்தானாய் வளராதா? வளரு மன்றோ?
ஆடுதற்குத் தெரியாத பருவ மங்கை
அழகான முற்றத்தைக் கோணல் என்றால்
வீடுகட்டி வைத்தவர்கள் சிரிப்ப தன்றி
வேறென்ன செய்வார்கள்? இலக்கியத்தில்
ஈடுபடா திருக்குமிவர் என்றன் பாட்டை
எடைபோட வந்துவிட்டார்! எந்த நாளும்
மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வ தில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவ தில்லை!
4.
மோதுவது சரியா?
'வசைபாடும் காளமேகம் நான்தான்' என்று
வரிந்துகட்டிப் புறப்பட்ட 'சோ'வே! தமிழில்
வசைமட்டு மேயுண்டோ? 'இசை' என்றும் ஒன்று
வளம்சேர்க்க உண்டு; அதனை நான் சொல்லக் கேளீர்!
தமிழ்எழுத வந்தவரே! தமிழ்கற்ற தெங்கே?
'தரம்' என்ற ஒரு சொல்லைக் காணீரோ அங்கே?
'தமிழ்' என்ற சொல்லுக்கே பொருளாவார் சுரதா!
சமமின்றி அவரோடு மோதுவது சரியா?
- வித்வான் வே.லட்சுமணன்
(தொடரும்)
3.
பகைச் சுவையை வளர்க்கின்றார்
பூப்படையாப் பெண்மையினால்
பிள்ளைபெறக் கூடுமெனில்
யாப்பறியாப் பேதையரால்
பாப்புனையக் கூடுமென்பேன்!
மூப்பறியாத் தமிழ்மகளின்
முகமலரில் ஏற்பட்ட
தீப்புண்போல் நினைக்கின்றேன்
'சோ'ப்புலவர் பாட்டை நான்!
நகைச்சுவையை வளர்க்கட்டும்
நாமெல்லாம் சுவைத்திருப்போம்!
பகைச்சுவையை வளர்க்கின்றார்
பரிதாபப் படுகின்றேன்!
சிகைகொண்டார் பூமுடிப்பார்;
சிறுமுடியும் முளைப்பதற்கு
வகையறியா மொட்டைதான்
வயிற்றெரிச்சல் படுவதுண்டு!
உவமையிலே பெருங்கவிஞன்
உணர்ச்சிகளைத் தருங்கவிஞன்
தவமியற்றித் தமிழ்கற்றுத்
தான்பாடும் அருங்கவிஞன்
புவிபோற்றும் 'சுரதா'வின்
பாட்டுக் கிழுக்குரைத்தால்
கவிபோற்றும் நாமெல்லாம்
கைகட்டி நிற்பதுண்டோ?
- வாலி
5.
'கம்போஸ்' பண்ணாத கவிதை
கம்பாசிடர் தய வின்றியே - ஒரு
கவிதை புறப்பட்டு வருகுது
நம்பாத நண்பர் சோ படிக்கட்டும் - ரொம்ப
நல்ல கவியென்று சொல்லட்டும்
சோவாலே சூடு பிடிச்சுதோ - அன்றி
சுரதாவின் நெஞ்சே துடிச்சுதோ
பாவாணர் பாடித் துதிக்கவே - நல்ல
பாட்டொன்று ஏட்டில் கிடைச்சுது.
சோவும் சுரதாவும் கூடியே - ஏதோ
'ஷோ' பண்ணுறா ரென்றே தோணுது
பாவம் இதற்குக் கவிகளை - வைத்தா
பகடை பனிரெண்டு ஆடணும்?
அஞ்சாறு வாரத்தைத் தள்ளவே - யாரோ
'அய்யம்பேட்டை வேலை' செய்யுறார்
நெஞ்சாரப் போற்றிடும் 'ஆவி'க்கு - இது
நேரல்ல; வேறென்ன சொல்வது?
- கொத்தமங்கலம் சுப்பு
(அச்சுக் கோக்காமல், கையெழுத்தையே பிளாக் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது இக்கவிதை.)
6.
சோ சொல்கிறார்...நாலு பேருக்கு நன்றி
கவிதை என்றால் என்னவென்று தெரியாது
என்ற என் சுயசரிதையை சொல்லித்தான்
'சுரதா' கவிதையை கம்பாஸிடர் கவிதையா
என்று கேட்டேன் நான்.
வரிந்து கட்டிக்கொண்டு இப்போது சுரதாவிற்கு
பரிந்து பேசும் கவிஞர்கள் என்கம்பாஸிடர்
கவிதையின் முதல்வரியை படிக்கவில்லை, வருந்துகிறேன்.
எழுத்தை எழுதுவதில்தான் அவசரம்
எழுதியதைப் படிப்பதிலுமா அது தேவை?
'பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?'
சுரதா கேட்கின்றார் - கேட்கட்டும்
பாட்டல்ல உமது கம்பாஸிடர் கவிதைகள்
அழுதென்ன பயன், நான் கண்ட குற்றம் அதுவே!
தளை, சீர், அசை, தொடை, அடிகள்
என்றோரிடத்தில் மார் தட்டும் சுரதாவிற்கு
களை கட்டும் பதில் சொல்ல விரும்பி
சான்றோர் ஒரு புலவரிடம் சென்றேன்.
இலக்கணம் முறையாகப் பயின்றவர்
விளம்பரம் அவ்வளவாக இல்லாதவர்
பாவேந்தனாவார் என்று பாரதிதாசனால்
போற்றப்பட்ட புலவர் அவர்
'கோ வேந்தன்' எனும் பெயருடையார்
தூற்றுகிறார் கம்பாஸிடர் கவிதையை
தாங்குவது எழுதியவர் பொறுப்பு
ஏங்குவது யாரோ எனக்கென்ன தெரியும்?
- என்று தொடங்குகிற 'சோ'வின் கவிதை, சுரதா பாட்டில் கோவேந்தன் கண்டுபிடித்த குற்றங்களை நீளமாகப் பட்டியலிட்டுவிட்டு, கடைசியாக இப்படி நையாண்டியோடு முடிகிறது...
ஐயா கவிஞர்களே! நீவிர் ஏன் ஒன்று
சேர்ந்தீர்? இலக்கணமறியாத என்னைக்கண்டு
'தையா தக்கா' என்று குதித்தீர்
நான் கண்ட ஒரே குற்றம் சுரதாவின் பாட்டு
உரைநடை என்பதே! கம்பாஸிடர் கவிதை என்பதே!
சுரதா மட்டும் சுமந்துவந்தார்
கம்பாஸிடர் கவிதை ஒன்றை
'சேர்ந்தே சுமப்போம்' என்று சேர்ந்தீரே மூன்று கவிகள்
சுரதாவோடு மூவர் சேர்ந்து நால்வர் ஆனீர்!
சுமந்து வந்தீரே நால்வரும் சேர்ந்து
கம்பாஸிடர் கவிதையைத்தான் - உங்கள் தோள்மீது!
ஐயா நால்வரே, நீவிர் கண்ட பலன் என்ன? நால்வர்
சுமந்தால் சென்றிடும் இடம் எது?
சிந்தித்துப் பார்க்காமல் ஏன் சுமந்தீர் ஐயா?
நால்வரும் சுமந்து அக்கவிதையை எக்கதிக்கு
கொண்டு போய் விட்டீர்! நால்வர்
சுமக்கலாகா தய்யா எதையும்!
அது சரி, கோவேந்தன், சுரதாவின்
பாட்டை மட்டும் படிக்கவில்லை. உங்கள்
மூவர் பாட்டையும் படித்து விட்டார்! - நான்
என்ன செய்ய?
(தொடரும்)
7.
'சோ' தனது பாட்டில் முன்வைத்திருந்த கேள்விகளுக்குப் பதிலாக, தன் பாட்டில் இலக்கணப் பிழை ஏதும் இல்லை என்பதை விரிவாக விளக்கியுள்ள சுரதாவின் கவிதை இப்படித் தொடங்குகிறது.
சுரதாவின் நன்றிக் கவிதை
எனது கவிதையில் என்ன பிழை கண்டீர்?
சொல்லும் தோழரே! துக்ளக் வீரரே!
என்று நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா?
அதற்கிவர், உடனே ஆனந்த விகடனில்,
எனது கவிதையில் எண்ணற்ற பிழைகள்
இருப்பதாகவும், இவற்றையெல்லாம்
கோவேந்தன் தம்மிடம் கூறியதாகவும்,
எழுதியிருக்கிறார். இவரும், இவர்க்கு
வாதாட வந்துள இலக்கண வக்கீல்
கோவேந்தனாரும் கூக்குரலிடுகிறார்.
தாதன் என்பவன் தமிழ்மழைக் கம்பனைச்
சரக்கில்லாதவன், சாமான்யமானவன்
என்று நினைத்தே எதிர்த்தது போலே,
பாட்டிற் சிறந்த படிக்காசுப் புலவரைக்
கும்பகோணத்துக் கும்பகவி என்பவன்
இடைவிடாமல் எதிர்த்தது போலே,
சோவும் எதிர்க்கிறார்! கோவும் எதிர்க்கிறார்.
இலக்கணக் கேள்விகள் என்னிடம் கேட்கிறார்.
நாலைந்து வாரங்களுக்கு நீண்ட இந்தச் சர்ச்சை சுரதாவின் இந்தக் கவிதையுடன் முற்றுப்பெறுகிறது.
===================================