இலந்தை சு. இராமசாமி

199 views
Skip to first unread message
Message has been deleted

Pas Pasupathy

unread,
Mar 22, 2010, 5:33:21 PM3/22/10
to yAppulagam / யாப்புலகம்

இலந்தை சு. இராமசாமி -1

 

பசுபதி, கனடா

 

 

 கனடா நாட்டு டொரான்டோ நகரில் 2005-இல் ஒரு தமிழ் அரங்கம்.

'பாரதியின் பன்முகங்கள்' என்ற தலைப்பில் கம்பீரமாக உரையாற்றிக் கொண்டிருந்த  அந்த மீசைக்காரரின் பேச்சை யாவரும் மெய்மறந்து பருகிக்கொண்டிருந்தனர்.

உரை முடிந்ததும், மீசைக்காரர் பேச்சாளர் வேடத்தைக் களைந்தார்; ஒரு கவியரங்கத் தலைவராக மாறி, தன் கவிதைகளைப் பொழிந்தார். கவிஞர்களை கவிகளால் வரவேற்று, அதுவரை யாரும் கேட்காத அந்த அரங்கக் கவிஞர்களின் பாடல்களைக் கேட்டதும், உடனே காலம் தாழ்த்தாமல்  பொருத்தமான நன்றிக் கவிதைகளை அவர்

புனைந்து வழங்கியதை ஆச்சர்யத்துடன் ரசித்தனர் எல்லோரும். பிறகு நடந்த கலந்துரையாடலில் அவர் சிறுகதைகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள்,  .. இப்படிப் பல துறைகளிலும் தேர்ந்தவர் என்பதை அறியமுடிந்தது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் சொன்னார்: " இவருக்கே பன்முகங்கள்; அதனால் தான் பன்முகங்கள் கொண்ட பாரதியைப் பற்றி இவ்வளவு ஆணித்தரமாகப் பேச முடிந்தது போலிருக்கிறது" என்றார்.  அந்த மீசைக்காரர் தான் இலந்தை  இராமசாமி ; எல்லோராலும் 'இலந்தை' என்றும் , 'இலந்தையார்' என்றும் அன்புடன் அழைக்கப் படுபவர்.

 

இராமசாமி  திருநெல்வேலியில் , கயத்தாற்றுக்கு அருகில் உள்ள  தெற்கு இலந்தைக் குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.  அவர் தன் கிராமத்தைப்பற்றி ஒரு பதிகமே படியிருக்கிறார்.  அதிலிருந்து ஒரு துளி இதோ:

 

தென்பொதிகை மலைத்தோன்றித் தவழ்ந்துவரும் தென்றல்

            செந்தமிழ்த்தேன் நறவத்தைத் தேக்கிவரும் தென்றல்

என்றுமிளம் பொருநைநதி ஏறிவரும் தென்றல்

            ஏந்திழையார் சேலையிலே இழையோடும் தென்றல்

மன்னுமுயர் காந்திமதி நெல்லையப்பன் பாதம்

            மாறாது பணிந்தருளை மாந்திவரும் தென்றல்

தென்னைமர உச்சியிலே சேர்ந்திசைகள் பாடும்

            தெற்கிலந்தைக் குளமென்னும் ஊரெங்கள் ஊரே!

           

இந்திய அரசாங்கத்தில் தொலைபேசித் துறையில் பல ஆண்டுகள் பொறியியல் வல்லுநராகப் பணிபுரிந்தார். ஏமன் நாட்டிலும் தொலைத் தொடர்புத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார்.அங்கே இருந்த பொழுது அங்கே தமிழ்ச்சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.  1996- முதல் அமெரிக்காவிற்கு ஆண்டுக்கொரு முறை வந்து போகிறார். 1959- முதல் கவிதை எழுதி வரும் இலந்தையார் 'அமுதசுரபி நடத்திய குறுநாவல் போட்டியிலும், கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். அண்மையில் 'கலைமகள்'  நடத்திய கி.வா.ஜகந்நாதன் நூற்றாண்டு விழாக் கவிதைப் போட்டியிலும்,  'இலக்கியப்பீடம்'  பத்திரிக்கை நடத்திய சிறுகதைப்போட்டியிலும் 

பரிசுகள் பெற்றுள்ளார். நூற்றுக்கணக்கான கவியரங்கங்களுக்குத்  தலைமை தாங்கி இருக்கிறார். சிறப்பாக, FETNA (Federation of north american tamil  associations) நியூயார்க்கில் நடத்திய தமிழ்ப்பேரவை மாநாட்டில்

2006-இல் கவியரங்கத் தலைமை தாங்கினார். 'சந்த வசந்தம்' என்ற யாஹூ இணையக் குழு ஒன்று தொடங்கி, இணையத்தின் முதல் கவியரங்கத்தையும், கவிதைப் பட்டிமன்றத்தையும் நடத்தி இருக்கிறார்.

 

 

இவருடைய நூல்களில் பொருநை வெள்ளம்(1992), சந்த வசந்தம் (2000) வள்ளுவ வாயில் (2002)என்பவை குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள். பஜகோவிந்தம், கனகதாரா, கீதகோவிந்தம் போன்றவற்றை  தமிழ்க் கவிதைகளாக மொழிபெயர்த்திருக்கிறார்.  மொழியாக்கத்தில் இவருடைய பாணி தனியானது. மூலக்கவிஞனுடைய கருத்துச் சிதையாமாலும் இட்டு நிரப்புவதற்காக அதைவிட அதிகமாகவோ குறைத்தோ சோல்லாமலும், அதே சமயம் மூலத்தின் சந்தத்தை இயன்றவரை அப்படியே கொணர்ந்தும் எழுதுவதே இவர் கையாளும் முறை.   'திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்' என்ற கட்டுரைத் தொடர் பம்பாய் சீர் வரிசை  இதழில்  வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

1996ம் ஆண்டில் மிசிகன் பல்கலைக்கழகத்தில் “Public relations and Government as given in thirukkuRal” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.  . "விருத்தம் எழுத வருத்தம்எதற்கு?" என்ற இலக்கணத்தொடர் 'தினம் ஒரு கவிதை' யாஹூ குழுமத்தில் வெளிவந்தது. வீரபத்திர முதலியார் எழுதிய விருத்தப்பாவியலுக்கு'ப் பிறகு  இந்தக் கட்டுரைத்தொடரே(77 கட்டுரைகள்) விருத்தங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.  தமிழ்நாட்டில் பல இடங்களில் கவிதைப் பட்டிமண்டபங்களில் பங்கேற்றும், நடுவராகப் பொறுப்பேற்றும்  சிறப்பித்த பெருமை இவர்க்குண்டு. அமெரிக்காவில் வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' பத்திரிகையில்  "அமெரிக்காவின் ஐம்பது மணிகள்" எனும் தலைப்பில்  அமெரிக்க மாநிலங்களைப்பற்றிய தொடர் எழுதிவருகிறார். இவருடைய பாடல்கள் ஒலிநாடாவாகவும், குறுந்தகடாகவும் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய 'பாரதி வில்லுப்பாட்டு  நிகழ்ச்சியைப் பல இடங்களில் நடத்தியுள்ளார். இலந்தையார்

பெற்ற பல பட்டங்களில் குறிப்பிடத்தக்கவை  பாரதி கலைக் கழகத்தின் 'கவிமாமணி'யும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'பாரதி பணிச்செல்வ'ரும் , கவியோகி வேதத்தின் சக்தி பீடம் வழங்கிய' சந்தத் தமிழ்க்கட'லும் ஆகும்..

 

அண்மையில் தமிழகத்தில் புனைவிலி நூல்களுக்கு ( non-fiction) வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.  இந்த வரிசையில் இலந்தையார் எழுதிய பல நூல்கள், அவருடைய கவிதை நூல்களைவிட,  மக்களிடையே அவர் பெயரைப் பிரபலப் படுத்தியுள்ளன. இவற்றில்  குறிப்பிடத்தக்கவை: 'பனி கண்டேன் -

பரமன் கண்டேன்' (கைலாய யாத்திரை), 'அலாஸ்கா -அழகின்  சிலிர்ப்பு' என்ற பயண நூல்களும், ‘கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிஸன்', ஹென்றி ஃபோர்ட், பற்றிய வரலாற்று நூல்களும்.  மேலும், அவருடைய குருநாதரான பேராசிரியர் அ.சீநிவாச ராகவனின் வரலாற்றைச் சொல்லும்  'இலக்கியச் சீனி -அ.சீ.ரா; வாழ்வும், வாக்கும்' என்பதும், 'பாரதியில் அறிவியல்' என்ற நூலும்  மிகத் தனித்தன்மை வாய்ந்தவை.   

 

இவருடைய கவிதை நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பெற்றுள்ளன. அவற்றில் ஊனமா, எங்கேஎன்ற கவிதை நாடகம் டெல்லி வானொலி நிலையத்தில் பல முறை ஒலிபரப்பப்பெற்றது. அது அங்கேயே இருக்கட்டும்    என்ற கவிதை நாடகம் தொலைத்தொடர்புத் துறை மேடைகளில் நடிக்கபெற்றது. அதில் இவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். குழந்தை எழுத்தாளர் யார், எவர் என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இவர் குழந்தைகளுக்காக நூறுபாடல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள கவிதை நாடகங்கள்  

காட்டுக்குள்ளே ஒரு கல்யாணம்'. “துருவன் கதை” ‘ஏகலைவன்” “ மார்க்கண்டேயன்ஆகியவை.

 

இவருடைய எழுத்துகளுக்கு ஆதார சுருதி எது? அவருடைய கவிதைத் தொகுதி ஒன்றின் முகவுரையில் அவரே சொல்கிறார்:

 

" எப்படி வந்தது இந்த உயிர்ப்பு? எண்ணிப் பார்க்கிறேன். கும்மி, கோலாட்டம், வில்லுப்பாட்டு இவை தவிர வேறு இலக்கியம் எதுவுமே தெரியாத குக்கிராமத்திலே பள்ளிப் பருவத்தைக் கழித்த எனக்கு , எப்படி வந்தது இந்த உயிர்ப்பு? கடன் வாங்கி அடிக்கிற கயத்தாற்றுக் காற்று, சுழித்தோடுகிற காட்டாறு,  சேவல், காகம், குயில், வேப்பமர நிழல், தென்னை மரத்தில் சிக்குகிற நிலவு, முட்டிக்குடிக்கும் பசுங்கன்று, தாம்புக் கயிற்றில் கட்டுண்டு தகரக் குவளையை நிறைக்கிற பசு, இப்படி இப்படி அன்றாடம் பார்க்கும் அழகுகள் என் உள்ளத்தில் ஒரு பந்தை மேலே எழுப்பிக் கீழே போடுமே அப்பொழுது  உயிர்த்ததா?”.

 

 கவிதைகளைப் பற்றி இலந்தையார் சொன்னது அவருடைய இன்னும் பல நூல்களுக்கும் பொருந்தும். அவருடைய எழுத்துகளில் கிராமியப் பண்பா டும், பழக்க வழக்கங்களும் அதிகமாக  இருக்கும். இதன் கூடவே, இவருடைய பணி மூலம் இவர் சந்தித்த பல தரப்பட்ட மக்களும்  இவருடைய இந்திய, அமெரிக்கப் பயணங்களும் கொடுத்த பரந்த பட்டறிவு, அறிவியலில் இவர்க்கு இருக்கும் ஆர்வம், ஆழ்ந்த பார்வை, ஆற்றொழுக்கான நடை, உரைநடையிலும் கவிஞனுக்கே உரிய '  சுவையுடன் சுருக்கிச் சொல்லும் ஆற்றல்', எந்த எழுத்துக்கும் பின்னுள்ள

ஒரு கம்பீரமான அமைதி  போன்றவை இலந்தை இராமசாமியின் எழுத்துகளுக்கு நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.

 

.

 



--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Pas Pasupathy

unread,
Mar 22, 2010, 5:35:19 PM3/22/10
to yAppulagam / யாப்புலகம்

இலந்தை சு. இராமசாமி -2

 

அவருடைய எழுத்துகள்: ஒரு தொகுப்பு

 

1. பாரதியில் அறிவியல்

 

பாரதி வாழ்ந்த காலத்தில் உலகம் புதுமை செய்தது. அறிவுக்குதிரை அதிக வேகம் பாய்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இந்த உலகம் பெற்றிருந்த அறிவுத் தொகுப்பைப் பிற்பகுதி இரட்டிப்பாக்கியது. அறிவுக்கண்கள் அகலமாயின. அவற்றின் பார்வை ஆழம் கண்டது. எங்கும் மாற்றம் எதிலும் மாற்றம். உண்மையில்,

உலகம் சோபை கண்டது

சாத்திய கதவு சடாரெனத் திறந்தது.

பாய்ந்துவந்த ஒளிவெள்ளத்தைக் கண்டுப் பதுங்கிக்கொண்டவர் பலபேர்.

இந்த அதீத ஒளிக் கண்ணைக் குருடாக்குகிறதே என்று ஒதுங்கிக்கொண்டவர் பலபேர்.

வருகிற வளத்தை வாரிக்கொள்ள மறுத்தவர் பலபேர்.

முன்னவர் சொன்னார்' என்ற போர்வையில் முடங்கிக்கொண்டவர் பலபேர். கிணற்றுத் தவளைகளாகக் கிறங்கிக் கிடந்தவர் பலபேர்.

பாரதி கண்களைத் திறந்து வைத்திருந்த காரணத்தால் வந்து நிறைந்த ஒளியின் வளமையைக் கண்டான். செந்தமிழ் தோய்ந்த நெஞ்சம் புதிய ஒளிக்குச் சிந்து பாடியது.

 

அவனது அரிமா நோக்கு அந்த ஒளியின் சாயல் இங்கும் படிந்திருந்ததை

உணர்ந்தது. பிறகு தூசி படிந்து கிடக்கும் அதன் அவலநிலையையும் தேர்ந்தது. நாமும் ஒளிப்பிள்ளைகள்தாம் என்பதை மறந்து உறங்கிக் கிடக்கும் நம்மை உசுப்பியது. வரப்போவதைப் பார் என்று வரைபடம் போட்டுக்காட்டியது.

 

 

 

2. தமிழ் டைம்ஸில் வந்த நியூயார்க்  மாநிலம் பற்றிய கட்டுரையில் இரு துளிகள் :

 

 

அமெரிக்காவின் சுவாசம் -நியூயார்க்

 

பட்டினம் என்றால் காவேரிப்பூம் பட்டினம்

பட்டணம் என்றால் சென்னைப் பட்டணம்

கோயில் என்றால் பெரிய கோயில்

அமெரிக்கா என்றால் மனக்கண்முன் வருவது நியூயார்க்

பழமையானது ஆனால் புதுமையானது

தொன்மையானது , ஆனால் இளமையானது.

நியூஎன்ற சொல்லைத் தன்னுடன் அது சேர்த்துக்கொண்டிருக்கிறதல்லவா?

 

1996ம் ஆண்டு நவம்பர் மாதம். நியூயார்க்கை முதன் முதல் பார்த்தேன். கட்டடங்களைப் பார்த்தே கழுத்து வலித்தது.

 

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என்மனைவியிடம் சொன்னேன்:

அம்மாடி , இம்மாடி எங்கெங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி

 

வோர்ல்ட் டிரேட் செண்டரைப் பார்த்த வியப்பில்

 

வானம் இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லும் மாடிகள்.

என்று சொன்னேன்.

 

எனக்கு வியப்பை அளித்த வோர்ல்ட் டிரேட் செண்டர் இன்று இல்லை. ஆனால் அவற்றின் நிமிர்வு இன்னும் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.

 

நியூயார்க்கை நெருங்கும் போதே அதோ கடலுக்குள் நின்றுகொண்டு விளக்கை ஏந்தி நம்மை வரவேற்கிறாள் சுதந்திர தேவி..   என்றும் அவள் நம் நெஞ்சில் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானோ அவளுக்குப் பச்சை வண்ணம் தீட்டியிருக்கிறார்கள்!.

 

நயகராப்பேரருவி

 

விண்ணை மண்ணோடிணைக்கும் வெள்ளை அமுதம்.

ஏந்தித்தான் பாரேன் என்று மண்ணுக்குச் சவால் விடும் வேக ஐராவதம்.

விழும் உயரத்துக்குத் தூவானம் எழுப்பும் விந்தை நாட்டியம்

விழுவதால் உயரம் காணும் விம்மிதம்

இயற்கை நடத்தும் தாளவாத்தியக் கச்சேரி

கண்ணுக்கு விருந்து

காதுக்குத் தேன்

கருத்துக்கு இனிமை

இன்னும் கொஞ்சம் பார்த்துவிட்டுப்போ என்று சொல்லும் இங்கிதம்

பார்க்கும் கணத்தை பசுமையாக்கும் பதிவு நிலையம்

ஈரப்படுத்தும் வீரம்

எடுத்துக்கொடுக்கும் மின்சாரம்

அழகுக்கு ஆதாரம்

பாய்கிற உற்சாகம்

பரவச ராகம்

கூத்தாடும் கொண்டாட்டம்

இன்னும்  எத்தனைதான் சொல்லிக்கொண்டே போனாலும் எதையோ சொல்லாது விட்டது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் அற்புதம்

ஆம் அதுதான் நயகராப் பேரருவி.

 

3. கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்

 

எடிசன் போனோகிராஃப் கண்டுபிடித்த மறுநாள் காலை.. .. ..

 

இயற்கைக்கும் ஒரு புது உற்சாகம் வந்ததைப்போல், பறவைகள் மிக இனிமையாகப் பாடின. காற்று சற்று அதிகச் சத்தத்தோடு வீசியது. மழைகூடச்  சோஎன்று பெய்தது.  சோதனைச் சாலையின் கதவுகள் திறந்து மூடும் போது சற்று அதிகமாகக் கிறீச்சிட்டன.அவையெல்லாம் தமது குரலை எடிசன் பதிவுசெய்யாமாட்டாரா என ஏங்கிற்றோ என்னவோ?

 

மின் விளக்கைக் கண்டுபிடித்த போது

 

1879ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் நாளன்று தையல் நூலைக் கரியில் தோய்த்து  குதிரைலாடம் மாதிரி வளையமாக்கி கண்ணாடிப்பல்பில் பொருத்தி  வெற்றிடம் உருவாக்கி அடைத்தார்.   அதற்கு மின்சார இணைப்புக்கொடுத்தார். . அது பிரகாசமான ஒளியுடன்  40 மணி நேரம் எரிந்தது. 

இயலாது என்று பௌதிகப் பேராசிரியர்களும் கணித நிபுணர்களும் சாதித்த ஒன்றை முடியும் என்று சாதித்துக்காட்டினார்.  இந்தச் சாதனைதான்  மற்ற எல்லாச் சாதனைகளையும் விட  எடிசனைப் புகழின் உச்சிக்குத் தூக்கியது.  உலகம் ஒளிபெற்றது இரவுப்போதில் ஆட்டம் போட்ட இருளரக்கனுக்கு இடது கண் துடித்தது.  எரிவாயு மூலம் ஒளியூட்டிவந்த  எரிவாயுத் தொழில்நிறுவனத் தலைவர்கள் நடுக்குற்றனர். சாதாரண மக்களைச் சென்றடையும் வகையில் எடிசன் இம்மின்விளக்குகளை உருவாக்கிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டனர்.   இருபதாம் நூற்றாண்டு சென்றுவிட்ட மற்ற நூற்றாண்டுகளைவிடத் தான் ஒளிபெற்றதை எண்ணி இறும்பூது அடைந்தது.

 

4.அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

 

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடிக்கும் முன் உலகம் பரந்து விரிந்து கிடந்தது.

காலம் மெதுவாக நகர்ந்தது.

உலக மக்களிடையே குரல்வழித் தொடர்பு ஒதுங்கிக் கிடந்தது.

பக்கத்து ஊரும் தொலைவாகத் தெரிந்தது.

சாலைகளும் ஊர்திகளும் ஓரளவுதான் உலகைக் குறுக்கின.

ஆனால் தொலைபேசி கண்டுபிடிக்கப் பட்ட பின்பு

தொலைவு தொலைந்து போனது.

அதுவரை சோம்பிக் கிடந்த உலகம் சோம்பல் முறித்துக் கொண்டது.

தனிமை விடுப்பெடுத்தது.

தொலை பேசி, காட்டுக் குடிசைக்குள் காவல் செய்தது.

அண்டார்ட்டிக்காவின் பனிப்பொழிவிடையே கூடாரத்தில் குரல்கொடுத்தது,

விரிந்த உலகம் சுருங்கிப் போனது.

அண்டம் ஒரு புள்ளியானது

கணம் யுகமானது.

எங்கோ ஒலிப்பது  இங்கே கேட்டது.

வானம் கூட வசப்பட்டுப்போனது.

விவரங்கள்  வீடு தேடி வந்தன.

கலாச்சாரம் கரைகடந்தது

பண்பாடு படகில் சென்றது.

 

ஊடகம் கடந்த ஒலி வீடகத்தே விவரம் சொன்னது

சமையல் கட்டு , சவாரி போனது.

வணிகம் வளர்ந்தது தொலைபேசியாலே

மருத்துவம் சிறந்தது தொலைபேசியாலே

அறிவு செழித்தது தொலைபேசியாலே

ஆள முடிந்தது தொலைபேசியாலே

காதல் வளர்ந்தது தொலைபேசியாலே

கல்வி சிறந்தது தொலைபேசியாலே

நெரிசல் குறைந்தது தொலைபேசியாலே

நெருக்கமானது தொலைபேசியாலே

இத்தகு பயனுள தொலைபேசியைக் கண்டு பிடிக்கப் பெல்

எடுத்த முயற்சிகள்

எதிர்கொண்ட இன்னல்கள்

சந்தித்த தாக்குதல்கள்

தாங்கிய சவால்கள்

மீறிய தடைகள்

ஒன்றா இரண்டா?

 

கூரையைப் பிய்த்துக்கொண்டு வெற்றி அவரது காலடியில்வந்து விழவில்லை.

கூர்த்த மதியும் ஆழ்ந்த ஆய்வும்,  கொண்டது விடாமையும் அவரது வெற்றியின் அடித்தளங்கள்.

 

எனக்கு மின்சாரத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது, அந்த அறிவுக் குறைவு எனது ஆராய்ச்சிகளுக்குத் தடையாக இருக்கிறதுஎன்று ஹென்றி

என்ற மின்னியல் விஞ்ஞானியிடம் அலெக் கூறிய போது ஹென்றி சொன்னார்

பெறுக!”(GET IT) .  அதுவே அவரது தாரக மந்திரமானது.  அதுதான் எனது வாழ்வின் திருப்பு முனைஎன்று தன் தந்தைக்கு எழுதினார் அலெக்.

 

 

 

5. ஹென்றி ஃபோர்ட்

 

காரின் தொடர்ச்சி ஊர்களின் வளர்ச்சி

எட்டாக் கனியென ஏழை நினைத்தது , வீட்டு வாசலில் வீற்றிருந்தது

கிராமக் கால்கள் நகரில் நடந்தன, தொலைவு தகர்ந்தது, வாணிபம் நகர்ந்தது

ஃபோர்டின் பிடிவாதம் மக்களுக்கு வரப்ரசாதம்.

குறைப்பேன் குறைப்பேன் குறைத்துக்கொண்டிருப்பேன்' என்பது போர்டின் உறுதிமொழி

உறுதி மொழிதான் இறுதிமொழி. 

சொன்னதைச் செய்வது அவரின் வழி. அவரது துணிச்சல் அபாரமானது. தனக்குச் சரியில்லை என்று தோன்றினால் ஜனாதிபதியிடமும் சண்டைபோடுவார்.

தனக்கு மாறாய்த் தன் மகன் சொன்னாலும் தள்ளிவைக்கத் தயங்கிட மாட்டார்.

அவர் ஒரு சர்வாதிகாரி. அதுதான் அவரது பலம். அதுவே அவரது பலவீனம்.

அவருக்கு விருப்பங்கள் பல.  அவர் வாழ்க்கையில் திருப்பங்கள் பல.

 

 

6.திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்

 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

 

அரசு நிறுவனம் ஒன்றில் அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமேலாளர் அவ்வாண்டுக்கான செயல்திட்டங்களை விளக்கிக்கொண்டிருந்தார்.  அவருக்குத் திக்குவாய். அவர் திட்டங்களை விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவருக்கு இடதுகைப்பக்க வரிசையில் சற்றுத்தொலைவில் அமர்ந்திருந்த ஒரு அதிகாரி அருகில் அமர்ந்திருந்தவரின் காதில் எதையொ சொல்லிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு மற்றவர் சற்றே நகைத்தார்.

 

மருநாள் அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் வேண்டத்தகாத இடத்துக்கு மாற்றல் உத்திரவு கொடுக்கப்பட்டது மேலாளரைச் சந்திக்கவேண்டும் என்று இரண்டு அதிகாரிகளும் முயன்றார்கள். முடியவில்லை. பொதுமேலாளரின் செயலாளரைச் சந்தித்த போது அவர் சொன்னார்:

நீங்கள் இருவரும் நேற்று அதிகாரிகள் கூட்டத்தில் ஒருவர் காதில் மற்றவர் எதையோ சொல்லிச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? அவரது திக்குவாய்த் தன்மையைத் தான் நீங்கள் கிண்டல் செய்வதாகப் பொது மேலாளர் எண்ணிவிட்டார். அவருக்குக் கடுமையான கோபம். அதன் விளைவுதான் இந்த மாற்றல் உத்திரவு.

இத்தகைய நிகழ்ச்சிகள் அந்தக்காலத்திலும் நடந்திருக்கும் போலும்.

வள்ளுவர் சொல்லுகிறார்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்  அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.”-694 வது குறள்

 

 

7.கவிதைகள்

 

* சந்தையா இவ் வாழ்க்கை இங்கே சாரும் பேதம் ஏதடா?

 தந்து போகும் ஒருகரம்பின் சஞ்சலங்கள் தீதடா

 எந்தவண்ணம் என்றே எண்ணி எண்ணிப்பார்த்து நோவதேன்?

 பொந்துக்குள்ளே பாம்புதானா புதையலும் இருக்கலாம்.

 

*          இந்திய இளைஞனே எதனைப் படிக்கிறாய்?

எழுதி எழுதி எதனைப் பிடிக்கிறாய்?

சிந்தனை வண்டியைத் தூக்கி நிறுத்து

சீக்கிரம் சீக்கிரம் அச்சைப் பொருத்து

 

ஒருகணத் துடிப்பில் உச்சியைப் பிடிப்பாய்

உதவிய மகிழ்ச்சியில் மீண்டும் கிடப்பாய்

இருகணத் தொடர்ச்சி ஏன் கிடையாது?

இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?

 

 

 

*பாரதி

 

தொடுத்தெடுத்த சொல்லிலே

            சூடு போட்ட நாயகன்

கொடுக்க என்றே தோன்றினான்

            கோயில் நெஞ்சில் ஊன்றினான்

முடுக்கிவிட்ட வார்த்தைகள்

            மூச்சு விட்டு வாழவே

சொடுக்கி விட்ட சாரதி

            சுப்ர மண்ய பாரதி?

 

*அவள் கடிதம்

 

 

கடிக்கும் பனிக்கோர் கடிவாளம், கிட்டிப்

பிடிக்கும் தனிமைப் பிணிக்கோர் சிறுவிடுப்பு

எட்டாத் தொலைவை இணைக்கும் பெரும்பாலம்

கட்டாது போகவிட்ட கற்பனைக்கோர் உல்லாசம்

முன்னை நினைவை முடுக்கும் தொலைக்காட்சி

என்னவள் கைபட்ட இன்பப் பெருமயக்கு

மின்னல், இளந்தென்றல், மென்சாரல், வீழருவி

இன்றைக்கிதுதான் இரண்டாவது சொர்க்கம்!

 

 

* எல்லாம் உன்கைக்குள்

 

யாரடா சிறியன்? நீயா அப்படி யார்சொன்னார்கள்?

பாரடா, இமயம் நீதான், பாய்ந்திடும் கங்கைநீதான்

வேரடா நீ, விண் ணோங்கும் விருட்சமும் நீதான், தம்பி

தேரடா, உன்னை வென்று ஜெயிப்பவர் இல்லை இல்லை

 

எதனைநீ அடைவதற்கே எண்ணுகின்றாயோ, தம்பி

அதனைநீ அடையக்கூடும் ஐயமே இல்லை உன்னை

முதலில் நீ நம்பிக்கொண்டு முயற்சியில் இறங்க வேண்டும்

பதவிகள் உன்றன் வீட்டுப் படியினில் காத்திருக்கும்

 

*எழுதுகோல் தெய்வம்

 

நெஞ்சிலே வானம் பாடி நினைவுகள் பாடும் போது

விஞ்சையைச் சொல்நிலத்தில் வித்திடச் செய்யும் தெய்வம்

கஞ்சமே இல்லாத் தெய்வம், கவிஞர்கள் தெய்வம், என்றும்

எஞ்சிடும் தெய்வம், எங்கள் எழுதுகோல் தெய்வம் தெய்வம்

 

சோகமா, சுகமா, ஞானச் சூக்கும் தானா? பக்தி

யோகமா, கற்பனை சேர் யூகமா, உணர்வா,,காதல்

தாகமா, தவிப்பா, செஞ்சொல்  சாரமா , யாவும் வாங்கி

ஏகமாய் அளிக்கும் தெய்வம், எழுதுகோல் தெய்வம் தெய்வம்!

 

*தமிழ் கேட்கும் இரு பெரிய செவியான்

 

வஞ்சத்தில் ஒன்றானை, நெஞ்சத்தில் நின்றானை,

மாசற் றானை

. . வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை , வயிற்றானை

     துதிக்கை யானை

விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை

            மாற்றிட் டானை

. . வித்தானை மறையானை, குறையானை, வள்ளியினை

            வெருட்டி னானை

கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை,

கருணை யானை

. . கமண்டலத்தைக் கவிழ்த்தானை, காவிரியை விரித்தானை

     கவிதை யானை

தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை, புரப்பானை,

தாங்கு வானை

. . தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகிறேன்

            காக்க நன்றே!

 

<><>--o0O0o--<><>

Message has been deleted

பசுபதி

unread,
Nov 4, 2018, 9:37:13 PM11/4/18
to yAppulagam / யாப்புலகம்

கவிதை உறவு நவம்பர் 2018 இல் வந்த ஒரு கட்டுரை. இலந்தை ராமசாமியின் கவிதைகளைப் பற்றிய ஒரு திறனாய்வு. 
kavithaialaivarisai_95.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages