வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1940/42)
====================
* வடுவூரார் எழுதிய சில பிரபல நாவல்கள்: கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர
சாமியார் (2-பாகங்கள்); அதன் தொடர்ச்சி--- மாயாவினோதப் பரதேசி
(2-பாகங்கள்); பூர்ணசந்திரோதயம் (4-பாகங்கள்); மதனகல்யாணி
(3-பாகங்கள்);சௌந்தர கோகிலம் (3-பாகங்கள்); மேனகா(2-பாகங்கள்);
பாலாமணி; வஸந்தமல்லிகா; வித்தியாசாகரம், திகம்பர சாமியார்; பால்ய லீலை (2-பாகங்கள்) ,
திடும் பிரவேச மாயா ஜாலப் பரதேசியார், திரிபுர சுந்தரி, மருங்காபுரி மாயக்கொலை
(Hound of Baskerville)...
* இவருடைய மிகப் பிரபல துப்பறியும் பாத்திரம் மன்னார்குடி திகம்பர
சாமியார். (இயற்பெயர் சொக்கலிங்கம் பிள்ளை)மனைவி சிவகாமி
அம்மாள். சாமியாரின் மைத்துனர்... குமாரசாமிப் பிள்ளை சாமியாருக்குத்
துப்பறிவதில் உதவுவார்கள்.
* இவருடைய நடைக்கு சில காட்டுகள்:
என்னிடம் இருக்கும் 'கும்பகோணம் வக்கீலி'ன் ஆரம்பம்:
"திருக்கண்ணமங்கை என்னும் சிற்றூர் தஞ்சை ஜில்லாவிலுள்ள மிக்க இரமணீயமான
ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தங்களது
தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த
தென்னஞ்சோலைக்கிடையில், அச்சிற்றுரின் வேளாளரது தெரு அமைந்திருந்தது.
"
பழமொழிகள் நிறைய வரும். பாடல்கள்..தாயுமானவர், குறள்..இப்படி
எட்டிப்பார்க்கும். காட்டு:
ஒரு வெண்பா (ஔவை-நல்வழி)
ஆன முதலில் அதிகம் செலவானால்
மான மழிந்து மதிகெட்டுப் -போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாய் நாடு. (கு.வக்கீல்)
" ரமாமணியம்மாள் தன்னை முற்றிலும் மறந்து குதூகலமும் ஆநந்தமுமே வடிவெடுத்து
வந்தனவோ வென்னலாம்படி மாறி பக்கிரியா பிள்ளையிடத்தில் குழந்தை
போலக் கொஞ்சி விளையாடத் தொடங்கி,
ஓங்கு மலைக்காட்டின் உள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ர மஞ்சமிசைத் தூங்கு நவரசத்தேன்
மொய்த்த மலைநாட்டு முள்ளூ டலையாமல்
மெத்தையில் மேலேறி விளையாடும் தோகைமயில்
என்ற லக்ஷணங்கள் வாய்ந்தவளாய்ப் பக்கிரியா பிள்ளையை இன்பவெள்ளத்தில்
ஆழ்த்தி அபரிமிதமான சுகத்தால் அவனைச் சித்திரவதை செய்யத்
தொடங்கினாள்.... ( மாயா வினோதப் பரதேசி)
* மேடைப் பிரசங்கங்கள் மாதிரி நிறைய சம்பாஷணைகள் இருக்கும். தாசி
திரைக்கண்ணு -சட்டைநாத பிள்ளையிடம் விபசாரத்திற்குக் காரணங்கள் ஐந்து,
பத்து வகையாகப் பிரிக்கலாம், விபசாரிகளை 34 அறிகுறிகளால் கண்டு
பிடிக்கலாம்..என்றெல்லாம் பட்டியல் போடுவார்! ஆங்கிலப் படிப்பின்
அபாயங்களைப் பட்டியல் போடுவார் இன்னொரு இடத்தில் ... " யாராவது ஒரு இஞ்சினீயர்
தோன்றி, புதியமாதிரியான ஆகாய விமானமொன்று கண்டுபிடித்துவிட்டால்,
அவர்கள் அதன்மூலமாகப் பறந்துபோய் நவக்கிரகங்களை அடைந்து, அங்கேயுள்ள
அநாகரிகர்களான சுதேசிகளை அப்புறப் படுத்திவிட்டு, அங்கேயும் தம்முடைய
ராஜ்யத்தை நிலை நாட்டுவார்களென்பது நிச்சயம்"... (மாயா வினோதப்
பரதேசி)
* அத்தியாயங்களின் தலைப்புகள் அமர்க்களமாக இருக்கும்: காட்டுகள் :..
அலங்காரத் தாச்சியும் ஆசை நாயகனும், கம்பசேவையும் வம்புப்பேச்சும்,
மூக்கறுபட்டவளுக்கு முக்காடு ஏதுக்கடா?, சட்டைனாதப் பெருமாளுக்குப் பட்டைநாமம்
சாத்தினார், சட்டைநாதர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்ப்பாள், நீர்மேல்குமிழி
நீலலோசனியம்மாள், ஏட்டுச்சுரைக்காய் கறிக்கான விந்தை, மொட்டைத்
தலைக்கேற்ற பட்டுக் குல்லா, தொடில் சுடும் நெருப்பு; விடில் சுடும்
விரகநோய், ஊடலில் தோற்றவரே கூடலில் வெல்பவர்.....
* சாமியாராகவும், துப்பறிபவராகவும் இருந்த அக்கால ஆங்கிலேய பாத்திரம்
GK Chesterton உருவாகிய Father Brown.
http://en.wikipedia.org/wiki/Father_Brown
இவரை மனதில் வைத்து திகம்பர சாமியாரை உருவாக்கியிருப்பார் வடுவூரார் என்று நான்
நினைக்கிறேன். (இவரும் திகம்பர சாமியாரைப் போலவே மாறுவேஷம் போடுவதில் நிபுணர்
என்று என் நினைவு)
( தற்காலத்தில் தொலக்காட்சிப் படங்களிலும் , நூல்களிலும் பிரபலமான ஒரு
துப்பறியும்-சாமியார் உண்டு. Brother Cadfael என்ற பாத்திரம் Ellis
Peters(1913-95) உருவாகினது. )
http://www.xs4all.nl/~embden11/Engels/peters.htm
ஆனால், பல வேறுபாடுகளும் இருக்கின்றன. சட்டைநாத பிள்ளையின் கொட்டத்தை
அடக்கும்வரை தான் இந்தத் தாடிச் சாமியார் உருவம். பிறகு , கடைசியில்
"திகம்பர சாமியார் தமது தாடி முதலியவற்றை சுத்தமாக க்ஷவரம் செய்து,
ஸ்நானம் முடித்துக் கொண்டு, தாம் குடும்பஸ்தராக இருந்த காலத்தில் எப்படி
அணிந்திருந்தாரோ, அப்படியே பட்டுக்கரை வேஷ்டிப் பஞ்சகச்சம் சந்தனப்
பொட்டு முதலியவற்றோடு " அவருடைய இயற்பெயரான சொக்கலிங்கம் பிள்ளை
என்ற பெயரில் மறுபிறவி எடுக்கிறார். பிறகு தம் மனைவி , மைத்துனர் இவர்களின்
உதவியோடு மற்ற கதைகளில் வருவார்; திகம்பர சாமியார் என்ற
பெயரிலேயே உலாவினாலும், குடும்பஸ்தர் தான்!
******
வடுவூராரின் 'கும்பகோணம் வக்கீலி'லிருந்து சில படங்கள்;
1) நூல் அட்டை
cover.jpg
2) 'சட்டைநாதர் சாணி அபிஷேகம்'
ds_1.jpg
3) திகம்பர சாமியார் (மாறுவேஷத்தில்)
ds_2.jpg
4) திகம்பர சாமியார்
ds_3.jpg
பசுபதி
===========
' திகம்பர சாமியார்' படத்தை 1950 -இல் மாடர்ன் தியேட்டர் சுந்தரம்
எடுத்தார். நம்பியார்
கதாநாயகனாக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று. நம்பியார் படத்தில்
ஒன்பது மாறுவேடங்கள் அணிந்து துப்புத் துலக்குவார் என்ற நினைவு.
படத்தின் பாடல்கள் அடங்கிய சில கிராமபோன் தட்டுகளைப் பற்றிய
ஒரு விளம்பரத்தை இணைப்பில் உள்ள கோப்பில் பார்க்கலாம்.
பசுபதி
29-10-08
http://www.hindu.com/cp/2008/10/31/stories/2008103150401600.htm
Pasupathy
31-10-08
என்னிடம் உள்ள நூல்கள் பெயர்களைத் தருகிறேன். இந்தப் பட்டியல் முழுமையானதென்றோ,
அச்சுப்பிழைகளற்றது என்றோ சொல்ல முடியாது. இந்தப் புத்தகங்களைத் தேடுபவர்க்கு
உதவும் என்று தெரியவந்ததால் இப்போது வெளியிடுகிறேன்.
முதல் 14-நூல்களை அல்லயன்ஸ் பிரசுரத்தார் அண்மையில் வெளியிட்டனர் என்று
நினைக்கிறேன்:
1. பூர்ண சந்திரோதயம் ( 5 பாகங்கள்)
2. கும்பகோணம் வக்கீல் (அல்லது) திகம்பர சாமியார் (2 பாகங்கள்)
3. மாயா விநோதப் பரதேசி ( 3 பாகங்கள் )
4. மேனகா ( 2 பாகங்கள்)
5. மதன கல்யாணி ( 3 பாகங்கள் )
6. சௌந்திர கோகிலம் ( 4 பாகங்கள் )
7. பாலாமணி (அ) பக்காத் திருடன் ( 2 பாகங்கள் )
8. வசந்த மல்லிகா
9. வித்யாசாகரம்
10. பன்னியூர் படாடோப சர்மா
11. திவான் லொடபடசிங் பகதூர்
12. திரிபுரசுந்தரி (அ) திகம்பர சாமியார் திடும்பிரவேசம்
13. வஸந்த கோகிலம்
14. தங்கம்மாள் (அ) தீர புருஷனின் தியாக கம்பீரம்
15. இரண்டு கண்மணிகள் (அ) அத்தானுக்கு முத்தம்
16. இராஜேந்திர மோகனா
17. கல்யாணசுந்தரம் ( வேலியே பயிரை மேய்ந்த விந்தை )
18. காங்கிரஸ் கமலம் (அ) ஆணென்று அலைய அகப்பட்டது பெண்புதையல்
19. காந்திமதி (அ) மர்மச் சூழல்களில் நீந்திய மாயாவி
20. சமய சஞ்சீவி (அ) பகையாளி குடியை உறவாடிக் கெடு
21. சிங்கார சூர்யோதயம் (அ) திருட்டில் நவமணிகள்
22. சுயமரணத்தின் மர்மம்
23. சோமசுந்தரம் (அ) தோலிருக்கச் சுளை முழுங்கி
24. சொக்கன் செட்டி (அ) புதுப்புலிக்கும் பழம்புலிக்கும் போட்டிப் பந்தயம்
25. டாக்டர் சோணாசலம் (அ) பிள்ளையார் பிடிக்கக் குரங்காய்ப் போனது
26. திகம்பர சாமியார் பால்ய லீலை ( 2 பாகங்கள்)
27. திடும் பிரவேச மாயாஜாலப் பரதேசியார்
28. தில்லை நாயகி
29. துரைக்கண்ணம்மாள் (அ) திரிசங்கு சாஸ்திரியார்
30. துரை ராஜா
31. நங்கை மடவன்னம்
32. நீலலோசனி (அ) கனவில் மணந்த கட்டழகி
33. பச்சைக் காளி (அ) பணத்தைக் காத்த பயங்கரப் பேய்
34. பாவாடைச் சாமியார்
35. பிச்சுமுத்துக் கோனான் (அ) கும்பகோணம் கோமாளிக் கூத்தர்
36. புஷ்பாங்கி
37. பூஞ்சோலையம்மாள்
38. பூலோக லட்சுமி
39. மருங்காபுரி மாயக் கொலை
40. மிஸ்டர் பூச்சாண்டி எம்மே ( நிக்கு பெப்பே நீ தாத்தாகு பெப்பே )
41. முத்து லட்சுமி
42. வஸந்த சேனை
43. Long missing links or the marvelous discoveries about the Aryans, Jesus
Christ and Allah Vol 1 ( 1931)
===========
பசுபதி
16-1-09
Long missing links, or, The Marvellous Discoveries about the Aryans,
Jesus Christ and Allah" by Vaduvur K Duraiswami Ayyangar, Publisher:
Oriental Home University, 1931])
இந்தப் புத்தகம் மிகச் சுவையான நூல்; இதை வடுவூரார் சொந்தப் பணம்
போட்டுப் பதிப்பித்து , மிக நஷ்டம் அடைந்தார் என்றும் படித்திருக்கிறேன்.
அந்த நூலில் என்ன இருக்கிறது? ஒரு துளியைக் கீழ்க்கண்ட வலைப்பூவில் பார்க்கலாம்.
http://emailbookmarking.blogspot.com/2008/05/ancient-cultures-indian-vedic-influence.html
2009- பிப்ரவரியில் தமிழ்நாட்டு 'பட்ஜெட்' அறிக்கையில், வடுவூராரின்
நூல்களைத் தேச உரிமையாக்கியதாக அறிவிக்கப் பட்டது. இனிமேலாவது, அவருடைய
எல்லா நூல்களும் . . . இந்த நூல் உட்பட .. மீண்டும் கிடைக்கும் என்று
எதிர்பார்க்கலாமா?
பசுபதி
16-3-09