விளக்கம்: வேந்தன் சடையவர்ம சுந்தர பாண்டியனின் 13 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1263 இல் கும்ப ராசியும் வளர்பிறை ஐந்தாம் நாள் புதன் கிழமையும் கூடிய அஸ்வதி நாளில் செயம்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர் கோட்டத்தின் இரண்டாயிரம் வேலிபற்றின் அக்ரஹாரங்களில் வாழ்பவரும், வெள்ளாளர் ஊர்களில் வாழ்பவரும், நகரங்களில் வாழ்பவரும் ஒன்று கூடினர். இந்நாட்டு தமுழா நாட்டில் உள்ள உத்திப்பாக்கம் என்னும் ஆதிநாயகச் சதுர்வேதி மங்கலத்தின் இறைவன் திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு; அதே போல கையிலாயமுடைய நாயனார் கோயில் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு கட்டளை தந்த ஏற்பாடு யாதெனில், இந்த உத்திப்பாக்கத்தில் வாழும் பிராமணரில் ஆவணிச்செட்டு ஐயனின் பிள்ளைகளில் ஆட்கொண்டவில்லி, பாம்பணையான், ஸஹஸ்ரகீணன், வரதன், செல்வன் ஆகிய ஐந்து பேரையும் மற்ற பிராமணர், பிள்ளைமார் வாழும் அகிம்சை முறையில் அல்லாமல் கீழ் சாதியார் ஈடுபடும் இம்சையான தாக்குதல் வாழ்க்கை முறையில் போர் ஆயுதங்களை ஏந்தி பிராமணரை வெட்டியும், காது அறுத்தும், பிராமணிகளை வண்டையாக வண்டையாக திட்டியும், பொருள்களை திருடியும், கால்நடைகளை கொன்று விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தனர் அரம்பர் (rowdies). முன்னர் நாடாட்சி செய்த விக்கிரம சோழ தேவ இருங்கோளர், தனியன் வாணராயன், திருமலை தந்தாரான முனையத்தரையர் ஆகிய படைத் தலைவர்கள் பலரும் இந்த ஆயுதம் ஏந்திய அரம்பரைக் (rowdies) கட்டிப்போட்டு அடித்து, தண்டம் தண்டி, வீடுகளை இடித்து இவருடைய வலிமை, கொட்டம் அடங்க பிணித்து சிறையிலிட்டு தப்பித்துவிடாதபடி செய்தனர். அப்படியான போதும் இவர்களது குணநடவடிக்கைகள் திருந்தாதபடியாலும் அதற்கு மீண்டும் பிள்ளை பொத்தப்பிராயர் அரம்பர்கள் தண்டம் கட்டவேண்டும் என்று எழுதிக் கட்டளையிட்ட அளவில் அக்ரஹார மக்களும் ஊரவரும் இவர்களை பற்றி மேலும் செய்திகளை சொல்லி இவர்களை அடக்கி வைக்க வேண்டுகோள் வைத்ததால் பிள்ளை பொத்தப்பிராயரிடம் அரம்பர்களை கட்டிப் பிணித்துக் கொண்டு வருவதாக வள்ளுவ நாடாள்வான் இருங்கோளன், உறுதிமொழி தந்த மலைவாழ் மலையாளரையும் வழி அனுப்பினார் பொத்தப்பிராயர். அப்படி பிடிக்கப் போனவர்களை வெட்டியும் குத்தியும் அம்பு எய்தியும் காயப்படுத்தினர். அரம்பர் இவர்களது ஆயுதங்களையும் பறித்தனர். அப்படி இருந்தும் தப்பி மலையில் ஏறியவனை பின் தொடர்ந்து கடத்திப் போய் ஆட்கொண்ட வில்லியையும், பாம்பணையானையும் பிடித்து வந்து திருக்கச்சூர் சிறைத் தூணில் பிணித்து வைத்து துன்புறுத்தினர். இவர்களைக் காட்டில் பல சிறைகளில் அடைத்தனர்.
பிறகு, கண்ணத்தூர் உலகுடைய பெருமாள் சீபாதரின் தேரிலே போய் வடக்கே உள்ள பிடாகையில் சாணூர் அரசபாக்கக் காட்டில் இவர்களுடைய தம்பிமார் அண்ணன்மாரைத் தேடிய பின் அந்த மூவரும் அண்ணன்களோடு பிற மனிதர்களையும் மீட்டுக் கொண்டு வந்தனர். இவர்களையும் இவர்கள் போன பல சிறைகளையும் வெட்டிவிடுவித்து கொண்டு வந்த செய்தியை தவிர்த்து பிற செய்திகளை உலகுடை பெருமாள் திருவடிகளில் கோரிக்கையாக வைத்தனர். அதாவது, அரம்பர் இருக்கும் இடங்களை கைப்பற்றியாகியது இனி, இவர்களை கீழ்சாதிகளை தண்டிக்கிற முறையில் தண்டிக்க வேண்டும். அரம்பருக்கு இந்நாட்டில் உள்ள வீடுகளையும், விளை நிலங்களையும் திருக்கோவில்களுக்கும் கோவில் சுற்றிடத்திற்கும் திருநாமத்துக் காணியாக விற்று விற்ற பணத்தை அரம்பர்களின் தண்டத் தொகையாக கருவூலத்தில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தமையால் இவர்களுடைய விளைநிலங்களை இறைவன் திருவகத்தீசுவர முடைய நாயனாருக்கும் கையிலாயமுடைய நாயனாருக்கும் திருநாமத்து காணியாக விற்றதில் உத்திப்பாக்கத்தில் அரம்பர் செலுத்தவேண்டிய வரி நிலுவை போக புறம்போக்கு நிலம், புதுக்குளத்தின் நான்கு எல்லையுள் அகப்பட்ட விளை நிலம், கொல்லை, நத்தம் உட்பட வாங்கிய பணத்தில் இவர்கள் கட்டிய நல்பணம் இருநூறு. இந்த பணம் இருநூறையும் திருக்கச்சி ஊர்க் கருவூலகத்தில் கட்டிவிட இவர்களுக்கு உத்திபாக்கத்தில் சொந்தமான நில எல்லைகளிலும் புதுக்குளம் ஊரில் அடங்கிய நான்கு எல்லைகளிலும் உள்ள நிலங்களுக்கு திருச்சூலம் நாட்டி இக்கோயில்களில் கல்வெட்டி இது சந்திர சூரியன் நிலைக்கின்ற நாள் வரையில் திருநாமத்துக்காணியாகவே பயன்பட்டு போவதாக உறுதியளித்து கொடுத்தோம் என்றனர். இரண்டாயிரம் வேலிப்பற்றில் அக்ரகார வாசிகளும், வேளாண் ஊர்வாசிகளும், நகரவாசிகளும் ஆக இவ்வனைவரும் இதற்கு உடன்பட்டோம்.
இப்படியாக கூத்த நல்லூழான், ஆதித்ததேவன், நன்மங்கலக் கிழான், இளந்தேவன், செங்கழுநீர் பிள்ளை, புடோலி பிள்ளை, வயிராதராயன், தரிகைக் காத்துழான் ஆகியோர் உடன்பட்டு கையெழுத்திட்டனர். பணிக்கபுர அருளாள பட்டனின், அருளாள பட்டனின், மண்டலா புருஷ பட்டனின், இராயன் தேவராஜ பட்டனின், விநாயக பட்டனின், தியான பட்டனின், பாண்டவதூத பட்டனின், கால கால பட்டனின், நாராயண பாரத்வாஜின மலைக்கினிய நின்றான் பட்டனின், சிந்தை உடையான் பட்டனின் எழுத்து. உலகங்காத்தான் எழுத்து. உக்கிரகண்ணனின் எழுத்து. களப்பாளன் எழுத்து. கீரன் கையெழுத்து என்று பலர் இதற்கு பிராமணர், வெள்ளாளர், அரசு தரப்பில் இருந்து உடன்பட்டுள்ளனர். இது சிவனடியார் பாதுகாப்பு என கல்வெட்டு முடிகிறது.
11 - 13 ஆம் வரிகள் புரிந்து கொள்ள முடியாதபடி குழப்பமாக எழுத்தப்பட்டுள்ளன. இடங்கை 96 கலனை, வலங்கை 96 கலனை என்று தான் கல்வெட்டுகளில் சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் முதன் முதலாக இக்கல்வெட்டில் தான் சாதி என்ற சொல் பயன்பாடு வந்துள்ளது. இடங்கை, வலங்கை அல்லாத சாதிகளை தான் கீழ்ச் சாதி என்று குறிப்பிடுகிறதா என்று தெரியவில்லை? காட்டில் சிறை என்ற சொல்லாட்சியை வைத்து பார்த்தால் இந்த அரம்பர்கள் பழங்குடி மக்களா? என்று ஐயுற வேண்டி உள்ளது.
திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் திருச்சுற்று வடக்கு சுவரில் உள்ள 22 வரி கல்வெட்டு, தமிழ்நாட்டுக்கு கல்வெட்டுகள் தொகுதி 32, பக்கம் 96 - 99
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 28 வது
- செயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்துச் செங்குன்ற நாட்டுத் திருக்கச்சூ
- ருடையார் திருவாலக் கோயிலுடைய நாயனார்க்கு இக்கோயில் காவல் காணி உடைய இரந்தி தே
- வர்க் கண்ணப்பன் விசையாலப் பரையன், துளாயன் வேங்கையான் வன்னெஞ்சிப் ப
- ரையன் வைத்த சந்தி விளக்கு 1 க்கு பசு ஐ[ஞ்]சுக்கு இக்கோயில் காணியுடைய சிவ ப்ராஹ்மணன்
- காஞ்சிகுறி தக்ஷணா மூர்த்தி பட்டநும் நாற்பத் தெண்ணாயிர பட்டன் பொன்னம்பலக் கூத்தரும்
- திருச்சிற்றம்பல பட்டன் மாதேவரும் சதாசிவ பட்டன் பிச்சரும் கைக்கொண்ட பசு ஐஞ்சு.
- இப்பசு அஞ்சும் கைக்கொண்டு சந்திவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவரை எரிப்பதாக
- சிலாலேகைப் பண்ணிக் கொடுத்தோம் இவ்வணைவோம். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.