நரிக்குடி அருகே 800 ஆண்டு பழமையான சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு
800 ஆண்டுகள் பழமையான முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரில் உள்ள சீமைக் கருவை மரங்களுக்குள் சிதறிக் கிடக்கும் கற்களில் 800 ஆண்டுகள் பழமையான முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி.1190-1218) கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் நரிக்குடி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, இதைக் கண்டெடுத்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது...," தற்போது மானூர் எனப்படும் இவ்வூர், கல்வெட்டுகளில் மானையூர் எனப்படுகிறது. இங்கு அனாகுலீஸ்வரமுடைய நாயனார், விக்கிரமபாண்டிய விண்ணகரம் ஆகிய சிவன், திருமால் கோயில்கள் இருந்ததாக இவ்வூர் மற்றும் நரிக்குடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவ்வூர் முருகன் கோயிலின் 34 துண்டுக்கல்வெட்டுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது.
கல்லில் இரண்டு வரிகளில் ஒரு துண்டுக் கல்வெட்டு உள்ளது
இக்கோயில் கற்கள், அதன் எதிரில் உள்ள சீமைக் கருவை மரங்களுக்குள் சிதறிக் கிடக்கின்றன. அதில் ஒரு கல்லில் இரண்டு வரிகளில் ஒரு துண்டுக் கல்வெட்டு உள்ளது. இதில் வடதலைச் செம்பி நாட்டு ஆயக்குடியான அழகிய பாண்டிய நல்லூர் சோமதேவன், விரதம் முடித்த பெருமான், குலசேகரக் காடுவெட்டி ஆகிய அரச அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. கோயிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டுகளின் இறுதியில் அதற்கு ஒப்புதல் வழங்கிய அதிகாரிகளின் பெயர்கள் வரும். இதில் சோமதேவன், பாண்டிய அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் புரவுவரி தினைக்கள நாயகமாக இருந்துள்ளார். இவர் பெயர் சோமதேவன் அழகிய மணவாளனான வில்லவராயன் என்பதை திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் குடைவரை, அழகர்கோயில், திருத்தங்கல் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். இவர் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.
ஆயக்குடி என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது.
வடதலைச் செம்பி நாடு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியாகும். இதன் அருகில் உள்ள மேலாய்குடி, கீழாய்குடி ஆகிய ஊர்கள் ஆயக்குடி என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள் மூலம் இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு எனலாம். இதை கோயிலில் வைத்து பாதுகாக்கவேண்டும்" - என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளார்.