அன்புடையீர், வணக்கம். கீழ்வரும் அரிய பாடல் யாராவது தொகுத்துள்ளார்களா? நன்றி. இருப்பின், அதனை அலகிட்டு (ஸ்கான் செய்து) அனுப்பவேண்டுகிறேன். நன்றி.
https://x.com/naa_ganesan/status/2008737865342046486அன்புடன்,
நா. கணேசன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1938 மொழிப்போருக்கு எழுதிய பாடல். 23-8-1947ம் ஆண்டு காஞ்சி மணிமொழியார் (P. C. மாணிக்கவாசகம்) போர்வாள் இதழில் அச்சிட்டுள்ளார். மூன்று செய்யுள்கள். கடைசிச் செய்யுளின் ஈற்றடி முழுமையாக இல்லை. பாரதிதாசன் பாடல்களின் பதிப்புகளில் இம்மூன்று பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளனவா? வெள்ளுரையாக, இணையத்தில் வருவது இதுவே முதன்முறை.
இப்பாடல்கள் ஏதாவது நூலில் கிடைத்தால் அனுப்புங்கள். முக்கியமாக, கடைசிப் பாட்டு வேண்டும். நன்றி.
சேனை ஒன்று தேவை!
பட்டாளஞ் சேர்த்தல்
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
[இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் தமிழ் நாட்டில் ஊரெங்கும் வீதிதோறும் வீடுதோறும் எழுந்த வீரப்பண் இதோ உள்ளது. மறுபடியும் தென்னாட்டில் அவசர அவசரமாக இந்திமொழி நுழைக்கப்படும் இக் காலத்தில் தமிழர் இப் பாடலை நினைப்பூட்டிக் கொள்வது நல்லது. பாட்டு பாரதிதாசனின் உள்ளம் என்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. பாட்டே சொல்லிவிடும்.]
செந்தமிழைக் காப்பதற்குச்
சேனை ஒன்று தேவை - பெருஞ்
சேனை ஒன்று தேவை
திரள் திரளாய்ச் சேர்ந்திடுவீர்
புரிவம் நல்ல சேவை.
பைந்தமிழை மாய்ப்பதற்கே
பகை முளைத்த திங்கே - கொடும்
பகை முளைத்த திங்கே
பாதகரை விட்டு வைத்தால்
தமிழர் திறம் எங்கே?
இந்தியினைத் தமிழரிடம்
ஏன் புகுத்த வேண்டும்? - இவர்
ஏன் புகுத்த வேண்டும்?
எம்முயிரில் நஞ்சுதனை
ஏன் கலக்க வேண்டும்?
சந்தத் தமிழ் மொழியழிந்தால்
தமிழர் நிலை விரசம் - நல்ல
தமிழர் நிலை வாசம்.
தமிழர் திறம் காட்டிடுவோம்
முழக்கிடுவீர் முரசம்!
ஊமை என நினைத்து விட்டார்
ஊர் நடத்த வந்தோர் - நமை
ஊர் நடத்த வந்தோர்.
உளறுகின்றார்; பொருளறியார்
சிறு செயல்கள் புரிந்தோர்.
தூய மொழிக்குத் தீமை செய்தார்
சயமடைந்த துண்டோ? - இங்குச்
சயமடைந்த துண்டோ?
தன் மொழியை விலக்கியதோர்
சமூகமெங்கே கண்டார்?
நாமும் உயிர் வாழ்வதுண்டோ
நம் தமிழைப்பிரிந்தும் - இங்கு
நம் தமிழைப் பிரிந்தும்
நம் தமிழை ஈடழிக்க
இந்திவரத் தெரிந்தும்
"போய் மறைவாய் இந்தி" என்று
புகலுகின்றோம் இங்கே - நாம்
புகலுகின்றோம் இங்கே.
புக நினைத்தால் அழிவை என்று
முழக்கிடுவோம் சங்கே!
தூரிகையும் எழுதுகோலும்
தூய் தமிழர் நாவும்-மிகு
தூய் தமிழர் நாவும்
தொட்டியற்றும் அச்சுச் சாலை
மற்றுமுள்ள யாவும்
ஓரிடத்தும் தொடுவதுண்டோ
இந்தியிலோர் எழுத்தை - அந்த
இந்தியிலோர் எழுத்தை.
உயர் தமிழன் பகையதுவாம்
அறுக்க வேண்டும் கழுத்தை!
காரிகைகள் குழந்தைகள் நம்
கனமறிந்த கிழவர் - நல்ல
கனமறிந்த கிழவர்.
கைத்தொழிலாளர் வணிகர்
கடல் நிகர்த்த உழவர்
பேரிகை முழக்கிடுவீர் இந்தி எதிர்ப்பீரே
பேணவரும் தமிழர்களின்
ஆணை எண்ணுவீரே!
நா. கணேசன்