பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள்
முதலில் அரிவை, தெரிவை ஆகிய பெண் பருவ சொற்கள் பெண்ணின் உடல் அமைப்பை குறிக்க உருவானவை என்பதை உணர்ந்தேன். அதே அடிப்படையில் தான் ஏனைய பருவ சொற்களும் உருவாகியுள்ளன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.
பேதை > 5 - 8 அகவை பெண். பே என்ற வேர் சிறுமை, குறுமை கருத்து வேர் ஒலி. எனவே பேதை என்றால் பெண்ணின் சிறு உடல் அமைப்பை குறிக்கும்.
பெதும்பை > 8 - 11 அகவைப் பெண். பெ > பொ என திரியும். பெது > பொது > பொத்து என்றால் வீக்கம், பெருமை என பொருள். இதாவது, ஒல்லியான உடல் நிலையில் இருந்து சற்றே சதை பிடிப்பு கொண்ட உடலாக வளர்ந்த நிலை.
மங்கை > 12 - 13 அகவைப் பெண். முக்கு என்றால் இணையும்மூலை (corner) எனப்பொருள். முக்கு > மொக்கு > மக்கு > மங்கு > மங்கை - பெதும்பை பருவமும் மடந்தை பருவமும் கூடிஇணைகின்ற உடல்.
மடந்தை > 14 - 19 அகவை பெண். மட்டம் > மடம் > மடந்தை. மட்டம்வெடி என்றால் கிளை கப்பு உண்டாதல் என்கிறது அகராதி. பெண் உடலில் அப்படி ஒரு கிளைப்பு என்பது முலை கூர்ந்து எழும் உடல் அமைப்பே ஆகும். இது 13 அகவையில் தொடங்கி 18 அகவை வரை நிகழும்.
அரிவை > 20 - 25 அகவைப் பெண். அர் என்பது உயர்வு, நெடுமை கருத்து வேர். இந்த நிலையில் ஒரு பெண் தன் அதிக உயரத்தை எய்தி நிற்கிறாள். அந்த வேரைக் கொண்டு அரிவை என்ற சொல் உருவானது.
தெரிவை > 25 - 31 அகவைப் பெண். தெருள் என்றால் திரளல். மணமாகி 5 - 6 பிள்ளைகளை பெற்ற பெண்ணின் உடல் ஊதி பருமனாக இருக்கும். எனவே தெரிவை என்பது திரண்ட உடல்.
பேரிளம்பெண் > 32 - 40 அகவைப் பெண். இளமை முதிர்ந்த பருவம். பிள்ளைப் பேறும் மாதவிடாயும் தொடரும் பருவம். அதனால் இளமை சேர்க்கப்பட்டது.
இதில் அரிவை முதல் பேரிளம்பெண் வரை வயதைக் குறிப்பதில் தடுமாற்றம் உள்ளதாகத் தெரிகிறது.