மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் கால வணிகர் கல்வெட்டில் சிந்து எழுத்து

இக்கல்வெட்டு வைணவத் திருத்தலமான திருபுட்குழியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்பட்டது. இது தெலுங்கு பல்லவன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இவன் கி.பி.1205 இல் முடி சூடிக் கொண்டதாக தெரிகிறது. நாட்டார் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைய தளத்தில் இப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் மேலே சோழர் கால எழுத்தில் செய்தி உள்ளது. ஆனால் மன்னன் பெயர் தவிர்த்து பிற செய்திகள் சிதைந்து உள்ளன. அதே நேரம் கீழே ஐந்து சிந்து எழுத்தில் மொங்கம் என்ற பெயர் எழுதப்பட்டுள்ளது. இதில் நேரடியாக சிந்து எழுத்துக்களான 𐓏, △ இடம்பெற்றுள்ளன. அதோடு மணி, அமர்ந்த நிலையில் மான், முகமூடி ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இவை சிந்து முத்திரை போலவே புடைப்புச் சிற்பமாய் இருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. இதாவது, கல்வெட்டு எழுத்து போல குழித்து எழுதப்படவில்லை என்பதே. எனவே சிந்து எழுத்து இடம்பெறும் எல்லா வணிகக் கல்வெட்டுகளையும் நேரடி படமாக எடுத்தால் மட்டுமே இவ்வாறு படிக்க முடியும்; மைப்படியாக எடுத்தால் படிக்க முடியாது. இது எல்லா வணிகக் கல்வெட்டுச் சிந்து எழுத்துகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே மைப்படியாக எடுக்கப்பட்ட வணிகக் கல்வெட்டுகளையும் மீண்டும் புகைப்படமாக எடுத்து மறு வாசிப்பு செய்தால் இது போல இன்னும் பல கல்வெட்டுகளைப் படிக்க இயலும். எனது 12 - 13 ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு வாசிப்பில் இது மூன்றாவது கல்வெட்டு ஆகும்.

கல்வெட்டுப் படத்தை 5 மடங்கு பெரிதுபடுத்திப் பார்த்ததில் மணி என்ற சொல்லில் இருந்து - ம், 𐓏 - ஒ, அமர்ந்த மான் என்ற சொல்லில் இருந்து - ன், முகம் என்ற சொல்லில் இருந்து - க, △ - ம். இதில் உள்ள எழுத்துகள் ம்ஒன்கம் > மொங்கம் ஆகும். தடித்த, பருத்த என்ற பொருளில் மொக்கன், மொக்கை ஆகிய சொற்கள் உள்ளன. மொக்கன் > மொங்கன் என்று திரியும். எனவே மொங்கம் என்பது திரண்ட, கூட்டம், team என்பதாக இருக்கலாம். வணிகர் திசை ஆயிரத்தைந் நூற்றுவர், ஐந்நூற்றுவர் என்று பலவாறு பெயர் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் ஓரிடத்தில் கூடப் போவதில்லை. ஆனால் 30 - 40 பேர் அமைந்த ஒரு குழுவாக (team) இடம் விட்டு இடம் பெயர்வர் என்ற வகையில் அந்தந்த குழுவுக்கு என்று தனியாக ஓதன், ஓவன், மொந்தம் என்றவாறு பெயர் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
தொடக்க கால ஆதி (சிந்து) தமிழ் எழுத்துகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டி ஒரு சொல்லில் இடம்பெறும் ஒலியை வைத்து அந்த சொல்லின் விலங்கு அல்லது பொருளின் உருவத்தை வரைந்து எழுத்தை சுட்டினர். அந்த முறை தான் இங்கும் மணி, மான், முகம் ஆகிய உருவங்களாக கையாளப்பட்டுள்ளன. ஐரோப்பியப் பாறை ஓவியங்களில் இடம் பெறும் ஆதி தமிழ் எழுத்துகள் 20,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. உலகின் பல நாடுகளில் பரவி வாழ்ந்த தமிழரால் இந்த எழுத்துகள் அங்குள்ள பாறை ஓவியங்களாக, மட்கல எழுத்துகளாக பொறித்தும், வரைந்தும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு தமிழர் குடியேற்ற தளம் தான் சிந்து வெளி நாகரீகமும். சிந்து எழுத்து அந்த சிந்து நாகரீகம் அழிவுற்ற போதும் வணிகரின் பிற தமிழர் குடியேற்ற தளங்களோடு தொடர்ந்துவந்த தொடர்பால் அழியாமல் பாதுகாக்கப்பட்டது. சரி, தமிழ்நாட்டில் தமிழ் மொழி நிலையும் எழுத்தும் தமிழி, சோழர் கால எழுத்து என்று காலத்திற்கு காலம் மாறிவிட்ட போதும் இந்த சிந்து எழுத்துகளை சிறு மாற்றத்துடன் அழியாமல் பேண வைக்க வேண்டிய கட்டாயம் வணிகருக்கு ஏன் வந்தது என்றால், பிற குடியேற்ற இடங்களில் தமிழ்நாட்டிற் போல தமிழ் மொழியும் ஆதி தமிழ் எழுத்தும் மாற்றமுறாமல் பழைய நிலையிலேயே இருந்தது தான் எனலாம். எனவே அந்த மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் சிந்து எழுத்தை வணிகர் அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்ததன் பின்னணியில் தான் தமிழ் வணிகர் சிந்து எழுத்தையும் தமிழி எழுத்தையும் மறவாமல் இளந் தலைமுறை வணிகருக்கு பயிற்றி வந்துள்ளனர். இக்காலத்தில் அந்த தமிழர் குடியேற்ற இடங்களில் இருந்த சிந்து எழுத்தும் தமிழும் இல்லை. என்னவென்றால் சிறுபான்மையராக இருந்த அந்த மக்கள் மதம் மாறியும், வேற்று மொழிக்கு மாறியும் போனதால் இன்று சிந்து எழுத்து உலகில் இருந்து அழிந்து விட்டது என்பது வரலாற்று உண்மை.