மகாகவியின் குயில்

669 views
Skip to first unread message

Dhivakar

unread,
Dec 11, 2013, 12:40:49 AM12/11/13
to மின்தமிழ், தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தமிழமுதம், முத்தமிழ்

சென்ற செப்டம்பரில் பாரதி நினைவு நாளில் என் நண்பர் சிவராமன் அவர்கள் பேசுவதற்காக குயில் பாட்டின் உரைநடையை எழுதிக் கொடுத்தேன். பாரதி பிறந்த நாளான இன்று இந்த உரைநடையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.


சபையோர்களே!

 

மகாகவி எழுதிய குயில் பாட்டு தமிழில் எழுதப்பட்ட சிறு காவியங்களில் மிகச் சிறந்தது என்று பாரதியார் பாட்டை நன்கு படித்தவர்களுல் தமிழை நன்கு படித்தவர்களும் ஒப்புக்கொள்வார்கள். ஆனாலும் குயில் பாட்டை உள்ளார்ந்து படிக்கும்போதுதான் தமிழின் சுவை மிக அதிகமாகத் தெரியும். இருந்தாலும் நான் இப்போது இந்தக் குயில் பாட்டில் உள்ள கதையைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். குயில் பாட்டில் நவரசங்கள் குறிப்பாக காதலும் சிருங்காரமும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். நான் இந்தக் கதை சொல்லும்போது இந்த நவரசங்களில் கொஞ்சமாக எடுத்துதான் உங்களுக்கு அளிக்கப் போகிறேன். கதையை, அதுவும் ஒரு உன்னதமான காதல் கதையைக் கேட்டு விட்டு பாரதி எழுதிய குயில் பாட்டினையும் படித்தீர்கள் என்றால் குயில் பாட்டின் பூரணத்துவத்தை உணர்வீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்குண்டு. கதை இதோ சொல்லப் போகிறேன். காதல் கதையாற்றே.. காதை நன்றாக தீட்டிக் கொள்ளுங்கள்: -

 

அவன் ஒரு கவிஞன், தமிழ்க் கவிஞன், கற்பனையிலே வாழ்பவன், காவியம் படைப்பவன், பாடல்களைப் படைப்பவன், ரசிப்பவன், காற்றிலே வரும் இனிய கீதம் போல அவன் படைக்கின்ற காவியகீதம் கூட மெல்லிசையோடு பாடினால் இனிமையோ இனிமைதான்.. கீதம் அவனுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும், அது மனிதனால் பாடப்படுவதானாலும் சரி, பறவையால் கூவப்பட்டாலும் சரி, கீதத்தைக் கேட்க அவை தோன்றுமிடமெல்லாம் செல்வான். அவனுக்கு மிகவும் பிடித்த இடம் அதோ அந்த மாபெரும் மாஞ்சோலைதான். அடர்த்தியான மாமர இலைகளூடே பழுத்த மாங்காயைத் தேடி ஓடும் அணில்களின் ஆனந்தமான கீசு கீச்சு ஒலி கூட அவனைப் பொறுத்தவரை இசைதான். பாடலை ரசிக்கத் தெரிந்த கவிஞன் அவன், ஆமாம், முன்னோர்கள் சும்மாவா சொல்லிச் சென்றார்கள் காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்று.. இந்தப் பாட்டின் சுவையை நன்கு அறிந்தவனுக்கு அதே மாஞ்சோலையில் ஒரு மாங்குயிலோ பூங்கோயிலோ பாடினால் அது தெய்வீக இசையாகத்தானே காண்பான். ஆமாம். ஒரு பூங்குயில் நிதமும் கூவிக் கூவி அவனை ஆனந்தப்படுத்தியது. மாஞ்சோலைக்குள்ளே மாவிலைகளுக்கிடையே அதன் கூவும் அடிநாதத்தைத் தேடி தேடி ஒரு நாள் அந்தக் குயிலைக் கண்டு பிடித்து விட்டான்.. அந்த சிங்காரப் பூங்குயில் குறும்புடனே அவனைப் பார்த்ததும் ஆனந்தம் மேலோங்க மேலும் மெல்லிசையோடு கூவியது. கூவியதோடு மட்டுமல்லாமல் மனிதர்கள் வாயால் பேசுவது போலவே  வாய்மொழியாம் தாய்மொழித் தமிழில் பாட ஆரம்பித்தது.

 

:காதல் காதல் காதல்.. காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்..

ஆஹா.. மாநிடனே! என் இனிய கவிஞனே!

என் மனதுக்கினியவனே!

என் சிந்தையைக் கவர்ந்தவனே

வந்தாயோ.. நாளும் உன் வரவை

எதிர் நோக்கி எதிர்நோக்கி,

வாய் வலிக்கப் பாடுகிறேன்..

கண்கள் உறங்காமல், உன் வரவுக்காகத்தான்

ஏங்கி ஏங்கிக் காத்திருக்கிறேன்..

எங்கே நீ இன்னமும் வாராவிட்டால்

என் இன்னுயிரை விடலாமா என்றுகூட

தோன்றியதை இப்போதே சொல்லிவிடுகிறேன்..

உன் மேல் காதல் கொண்டு

உன் வரவுக்காக ஏங்கும் பைத்தியமானேன்..

கண்ணாளா, என் காதலனே, என் ஆருயிரே

வந்தாயே.. நீயே.. என்னுயிரை காத்தாயே..

வாழ்க நீ எம்மான்..

 

அவன் அசந்து போய்விட்டான். தான் காண்பது, கேட்பது இவையெல்லாம் நிசம்தானா.. ஒரு சின்னஞ்சிறு மாங்குயிலோ இப்படிப் பேசுவது.?. அதுவும் காதல் வார்த்தையா?.. இந்தக் கவிஞனின் கவிதையில் காதல் கொண்டால் நம்பலாம்தான்.. ஆனால் இந்த பிச்சிக் குயில் என் மேலல்லவா காதல் கொள்கிறது.? நான் என்ன அப்படி அழகானவனா.?. தனக்கே இதுவரை அப்படித் தோன்றவில்லையே.. இயற்கைக்கு மாறாக மானிடமும் பட்சி இனமும் காதல் கொள்ள முடியுமா? .. இது நடக்குமா.?.

 

ஆஹா.. கவிஞரே! என் காதலை நம்ப மறுக்கிறீரா..

என் பாடலைக் கேட்க மறுக்கிறீரா

என்னடா ஒரு பாழாய்ப்போன குயில்

தன் மேல் காதல் கொள்ளுமா

இது நிஜம்தானா என்று நினைக்கிறீரா..

நீங்கள் சந்தேகம் கொண்டது

வாஸ்தவம்தான் கவிஞரே..

ஏழை நான் எப்படி விளக்குவேன் என் காதலை

எப்படி சொன்னால் என் காதல் புரியும்

இந்த சந்தேகம் தீரவேண்டுமானால்

நான்கு நாள் கழித்து வந்து பாரும்..

என் காதல் உண்மைதான் என்பது புரியும்..

என் அன்புக் காதலரே, என் தெய்வமே

என் உள்ளத்தைக் கவர்ந்து செல்கிறீர்

சரியாக நான்குநாள் கழித்து வாரும்..

அப்படி வரவில்லையென்றால்

நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்..

இது உங்கள் மேல், என் காதல் மேல் ஆணை!

 

என்று சொல்லிவிட்டு பறந்தோடி விட்ட குயிலை அப்படியே பார்த்துக் கொன்ப்டிருந்தான் அவன். எத்தனை நேரம் போயிற்றோ.. தெரியவில்லை.. திரும்ப வீடு சென்றவனுக்கு இன்னமும் அந்த பச்சைக் குயிலே நினைவில் வந்தது. இது சாத்தியமா.. குயில் காதலிக்குமா.. இது என்ன.. காதல் காதல் காதல்.. இல்லையேல் சாதல் சாதல் சாதல்.. நூற்றுக்கணக்கான  கவிதை படைத்தோமே.. நாம் கூட இப்படிக் காதலைப் பாடவில்லையே..

 

இரவு உறக்கம் வரவில்லை.. காலை விடிந்தது.. கானக்குயில் நான்கு நாள் கழித்து வரச்சொன்னதே.. இன்னமும் மூன்று நாட்கள் இருக்கிறதே.. அதுவரை நாம் காத்திருக்கலாமா.. வேண்டாம் உடனடியாக ஓடிப்போய் ‘குயிலே குயிலே.. நானும் உன் காதலை ஏற்றுக்கொண்டேன்என்று சொல்லிவிடலாமே

 

சொல்லிவிடுவதுதான் சரியென்று மாஞ்சோலை கிளம்பியவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஒரு காட்சி காத்திருந்தது. இவன் ஆசைக் குயில் அழகுக்கே சம்பந்தமில்லா ஒரு குரங்கினை அழகோடு ஒப்பிட்டு வர்ணித்துக் கொண்டிருந்தது. அதன் வாலைப் பார்த்து அப்படியே ஆச்சரியப்படுவதுபோல, ஆஹா, மனிதர்களெல்லாம் ஏதோ தாங்கள்தாம் அழகு என்று பெருமை பீற்றிக் கொள்கிறார்களே, இந்தப் பாழாய்ப் போன பிறவிகளுக்கு குரங்குக்கு இருப்பது போல அழகான வால் உண்டோ என்று புகழால் அந்தக் குரங்கைப் போற்றிகொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் முந்தைய தினம் தனக்குரைத்த அதே காதல் கீதத்தை அந்தக் குரங்கிடமும் பாடியது..

 

காதல் காதல் காதல்.. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று பாடி அந்த குரங்கை பைத்தியமாக்கியது. குரங்கும் மதுவுண்டதைப் போல போதைக்குள்ளாகும்போதுதான் இந்தக் கவிஞனுக்கு ஆத்திரம் மேலோங்க உடனே தன்னுடம் எப்போதும் வைத்திருக்கும் கத்தியை எடுத்து ஆவேசத்துடன் அந்தக் குரங்கின் மீது வீச அது குறி தவறிப்போனதால் மறுபடியும் கத்தியை எடுத்து வீசுமுன் அந்தக் குரங்கு அங்கிருந்து ஓடிப்போனது. அத்தோடு அந்த கள்ளக் குயிலும் மறைந்து விட்டிருக்கவேண்டும்.. இருக்கட்டும் நாளை வரத்தானே செய்வாய்.. நானும் வருகிறேன்.. உன்னை முதலில் கொன்று விடுகிறேன்.. என்று இவனும் மனதுள் கருவிக்கொண்டு வீடு திரும்பினான். ஆனால் மன உளைச்சல் மட்டும் தீரவில்லை.

 

அடுத்தநாள் கத்தியைப் பதம் செய்து கொண்டான்.. முதலில் அந்த மாயக் குயிலைத் தீர்த்துக்கட்டவேண்டுமென தீர்மானித்து அந்த மாஞ்சோலைக்குள் நுழைந்தான். மாயக் கருங்குயில் தனக்கு மூன்றாம் நாள் சொன்ன காதல் கதையையே சற்று மாற்றி வேறுவிதமாக ஒரு காளை மாட்டிடம் பீற்றிக் கொண்டிருந்த சோகக் காட்சி அவனை மேலும் ஆத்திரமூட்டியது. கொடுமையான எண்ணம் கொண்ட கருங்குயிலே உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என மனதில் வெறிகொண்டான். அதற்கு முன் இந்தப் பொய்க்குயில் என்னதான் பேசுகிறது என்று கேட்போமே என்று தன் செவிகளைத் தீட்டினான்.

 

மாயக் குயில் அந்தக் காளை மாடு, அதுவும் வயதான மாட்டிடம் காதல் பாஷைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

 

காதலித்தால் மாட்டைப் போல ஒரு பெரிய உருவத்தைத்தான் காதலிக்கவேண்டுமாம். ‘நான் இழி பிறவியாய கருப்புக் குயிலாக்ப் பிறந்துவிட்டேன் என்று மாடரே என்னை மணமுடிக்கத் தயங்கவேண்டாம்.. உங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பேன். பல சமயங்களில் உங்கள் மிகப் பெரிய உடலில் சிறு சிறு புண்கள் வந்து உண்ணிகள் வந்து தொல்லை புரியும்போதெல்லாம் அவைகளை துரத்தி உங்களுக்குத் துன்பம் வராமல் காப்பேன்.. அழகிய மாடரே..உங்கள் மீது ஆசைப்பட்டுவிட்டேன்.. உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அழகிய பாடல்கள் பாடுவேன். உங்கள் மீது பெருங்காதல் கொண்டுவிட்டேன் மாடரே.. அடியவளை ஆதரியுங்கள்..

 

காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்..

 

அவன் வெறுத்துப் போய் குயில் வார்த்தைகளைக் கேட்டாலும் அந்தப் பாடல் இவன் உள்ளத்தை உருக்கியதால் அப்படியே மெய்மறந்து இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென தன் நினைவு வர ‘ஆஹா.. முதலில் இந்த மாட்டைக் கொன்று அதன் பிறகு இந்த மாயக் குயிலையும் கொல்வோம் எனக் கோபமும் கூடவே வர கையில் வைத்திருந்த கத்தியை அந்த மாடு மீது வீசினான். குறி தவறியது.. கொள்ளைக் கார மாடு தப்பி ஓடியது. திரும்பிப் பார்த்தால் குயிலையும் காணோம்..

 

அடச்சே.. எப்படி இது.. இல்லை இனி விடமுடியாது..

 

நாளை நான்காம் நாள்..

என்னை வரச்சொல்லி அந்த மாயக்குயில் கொஞ்சிப் பேசி அழைத்த அதே நான்காம் நாள்

என் காதலுக்கு முடிவு சொல்வதாகச் சொல்லிய அந்த நான்காம் நாள்.. சிந்தையைப் பறித்துச் செல்கிறீர், நான்காம் நாள் நிச்சயம் வாரும் என்று கெஞ்சிய அதே நான்காம் நாள்.

அந்தக் குயில் எனும் விதி, சதியோ என்று சந்தேகத்தில் நாள் குறித்த அந்த நான்காம் நாள்..

 

இந்த நான்காம் நாளில் எப்படியும் அந்தக் குயில் வரும்.. இதே கதையைச் சொல்லும்.. இதே பாட்டையும் பாடும்..

 

ஆனால் பாட்டுக்கு மயங்காமல் உடனடியாக அதைக் கொன்று போட்டுவிடுவது என்று முடிவு செய்து கொண்டு வீடு திரும்பி அந்த நான்காம் நாள் விடிவுக்காக கண்ணுறங்காமல் கவிஞன் காத்துக் கிடந்தான்.

 

நான்காம் நாள் காலையும் விடிந்தது. அரக்க பரக்க ஓடினான்.. குயிலே.. இனி உன் பொய் செல்லாது.. உன் குரல் இனிக்காது.. உன் மாயாஜாலவிளையாட்டுகள் எனக்குத் தெரிந்து போய்விட்டன.. வா வா குயிலே.. இன்று அதே பாடலைப் பாடப்போகிறாயே.. அந்த மாயப் பாடல் என்னை இனியும் மயக்காது.. வா குயிலே.. என் கத்திக்குப் பலியாக என் முன்னே வா..

 

சோலையெல்லாம் ஒலிக்கக் கத்திக்கொண்டே கருங்குயிலைத் தேடினான். அது எங்கும் மறையவில்லை. சாவகாசமாகவே அதுவும் இவன் வருகைக்காகக் காத்திருந்தது போலத்தான் ஒரு கிளையின் மீது சோகமாக இருந்தது.

 

வாரும் எமதருமைக் காதலரே..

உமது கோபம் புரிகின்றது..

என்னைக் கொலை செய்யத் துணிந்தீர்

எனக்கு அதை விட மகிழ்ச்சி ஏது

இருந்தும் என்னைக் கொல்லுமுன் நான் சொல்வதை

கேளீர்.. கேட்டு விட்டுப் பிறகு கொல்லுங்கள்

ஆனந்தமாய ஆவி தரிப்பேன்..

 

குயில் இவனைப் பார்த்து சோகமாய்ச் சொன்னது. அவனுக்கு கோபம் இன்னமும் இருந்தாலும் இந்தக் கள்ளக் குயில் எப்படித்தான் இப்படி பேசுகின்றது என்று ஆவல் ஏற்பட்ட்து.. இருக்கட்டும்,, சாவதற்கு முன் மாநிடர்கள் கூட கடைசி ஆசை நிறைவேற்றுமாறு கேட்பார்கள்.. சின்னஞ்சிறு குயில்.. இது சொல்வதையும் கேட்டுவிட்டுதான் கொல்வோமேஎன்று அவனும் அந்தக் குயிலின் கதை என்ன எனக் கேட்கலானான்,

 

குயில் பேசியது.. ஐயனே,, உம் ஐயத்தைப் போக்குகின்றேன்.. கேளீர். பொதிய மலைக்கருகே ஓர் நாள் இப்படிக் குயிலாகப் பிறந்தாலும் பல பாஷை பேசும் சக்தி எப்படி எனக்குக் கிடைத்தது என்று சோகமாக ஒரு மரத்தின் .கிளையிலே அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில் யோகி ஒருத்தர் வந்தார். முற்றும் உணர்ந்த முனிவரான அவரை வணங்கி என் கதையையும் துயரத்தையும் சொன்னேன்.. அவர்தாம் என் பூர்வஜன்மக் கதையைச் சொன்னார். பொறுமையாகக் கேளுங்கள் எம் தலைவரே!

 

முன் ஜென்மத்தில் சேர நாட்டிலே ஒரு காட்டிலே உள்ள ஒரு வேடராசனுக்கு மகளாக நான் பிறந்ததாக அந்த முனிவர் சொன்னார்.

 

நான் பேரழகியாம்.. பெருமைப் பட வளர்ந்தேனாம். என்னை சின்னக்குயில் எனப் பேரிட்டு செல்லமாய் வளர்த்தனராம்.. குயில் போல பாடுவேனாம். என் அழகில் மோகித்து என் மாமன் மகன் மாடன் என்பான் சிறு வயதிலிருந்தே எனக்கு தினமும் தேன் கொடுத்து தாஜா செய்து வந்தான். ஒருநாள் என்னை மணமுடிக்கவும் என் சம்மதம் கேட்டான். ஐயோ தேன் கொடுத்தவன் வருத்தப்படுவானே எனும் கருணையினால் அவன் மேல் காதல் இல்லாவிட்டாலும், அவன் கொடுக்கும் தேனுக்காக அவனை மணக்கச் சம்மதித்தேன்.. அவனும் சென்று விட்டான். இப்படி இருக்கையில் என் தந்தை வேடராசன் தன் அண்டைக் காட்டிலே வாழும் இன்னொரு வேடராசன் மகனான குரங்கனுக்கு என்னைப் பெண் பேசி நிச்சயமும் செய்து அடுத்து வரும் பன்னிரண்டாம் நாள் கல்யாணம் என தேதி குறித்து வந்துவிட்டான். என்ன செய்வது.. என்று புரியாமல் நிற்கையில் மாமன் மகன் மாடன் வந்தான்.. என்ன இது.. எப்படி என் முறைப்பெண்ணை நிச்சயம் செய்யலாம் என என்னிடமே சண்டை போட்டான்.. அவன் மேல் கருணைப்பட்டு, கலங்காதே மாடா.. கல்யாணந்தானே நிச்சயமானது.. ஆகட்டும் நான் ஏதாவது மாய வார்த்தை பேசி உன்னோடு வந்து விடுகிறேன்.. நீ கலங்காமல் காத்திரு எனக்காக, என்றேனாம், இதையும் காதலோடு இல்லாமல் ஒரு கருணைக்காக சொன்னதாக அந்த முனிவர் சொன்னார். இப்படி இருக்கையில் இரண்டு நாள் சென்றது.. வனத்திலே தோழியரோடு விளையாடிக் கொண்டிருக்கையில் மன்மதனாய ஒரு மதனகாமராசனை அங்குக் கண்டேன்.. ஒருவேளை இவன் சேரநாட்டு ராச்குமாரனோ என நினைத்தேன்.. அவனே தான்.. அவனும் என்னைப் பார்த்து மதி இழந்து போனானாம்,

 

முனிவர்தாம் சொன்னார்.. இரண்டு கண்கள் சந்தித்தன.. ஒன்றையொன்று மாற்றிக்கொண்டன.. இரண்டு இதயங்கள் இடம் மாறிப்போய் தடுமாறிப் போனதாம்.. முனிவர்தாம் சொன்னார். சேரநாட்டு அரச குமாரன் என்னை மணம் செய்வதாய் வாக்களித்தானாம். மயக்கத்தில் இருந்தாலும் நிலை தவறாமல் நான் அந்த ராசனை வணங்கி, ஐயா.. உங்கள் தேசத்தில் உங்களுக்காக பல ராணிகளும் அழகிகளும் காத்திருப்பார்கள்.. ஏழை நான்.. என்னை மறந்து விட்டு சென்று விடுங்கள்என்று கண்ணீரோடு அனுப்பப்பார்த்தேன்.. அந்த அரசன் என்னை வாரி அணைத்தானாம்.. ‘கண்ணே.. நீதான் என் ராணி.. நீயே என் இதயத்தைக் கவர்ந்தவள்.. இதயம் இல்லாமல் என்னால் எப்படி வாழமுடியும்.. கலங்காதே காதலியே.. நீயே இந்த நாட்டின் மகாராணி கூட.. உன்னை முறையாக பெண் கேட்டு முறையாக மணம் புரிவேன்..இப்படி சொல்லிவிட்டு என்னுடன் இன்பக் காதல் புரியும் வேளையில் எப்படியோ மாமன் மகன் மாடனுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை குரங்கனுக்கும் சேதி போய்விட்டது. வெறி பிடித்த பிசாசு போல வந்தவர்கள் என்னைப் பிடித்திருந்த என் மன்னவனை இழுத்து சண்டையிட்டனர். கத்தியால் ராசன் குத்துப் படுவதற்கு முன் என் உள்ளங்கவர்ந்த அரசன் மாடனையும் குரங்கனையும் ஒரே வீச்சால் வெட்டி வீழ்த்தினான். மூவருமே இறந்து போயினர்.. அரசன் என் மடியில் இறப்பதற்கு முன் ‘கண்ணே.. கலங்காதே காதலுக்கு இறப்பில்லை.. இன்னும் பிறவியெடுத்து உன்னை மணப்பேன்என்று கூறிவிட்டு கண்ணை மூடினார். நானும் அவர் பிரிவு தாங்காமல் இறந்துவிட்டேனாம்.. முனிவர்தாம் சொன்னார்.


என் காதலரே.. இரண்டாம் நாள் நீர் பார்த்த குரங்குதான் முற்பிறவியில் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை. நேற்று நீர் பார்த்த காளை மாடுதான் முன்னர் என் மாமன் மகன் மாடன்..

இப்படி முனிவர் சொன்னதும் நான் கேட்டேன். ஐயா.. நான் குயிலாக ஏன் பிறந்தேன்.. இப்படி பல மொழிகள் பாடும் வல்லமை எனக்கு எப்படி கிடைத்தது என்றும் கேட்டேன்.. அதற்கு அவர் சொன்னார். “சின்னக்குயிலே.. முற்பிறவியில் உன் பெயர் சின்னக்குயிலல்லவா.. அதனால் இப்படி வாய்க்க நேரிட்டதுஎன்றார்.

 

புரியவில்லை தவமுனிவரே!.. விளக்கமாக சொல்வீரே.. என்று கெஞ்சினேன்..

 

“அடி பைத்தியமே.. இந்தப் பிறவியிலும் நீ அழகான மானிட மங்கைதான்.. ஆனால் அதோ அந்த மாடனும் குரங்கனும் பேய்களாக திரிகின்றனர்.. மாடாகவும் குரங்காகவும் அவதாரம் செய்து திரியும்போது நீ அவர்கள் கண்களில் பட்டாய்.. உடனே உன் சின்னக்குயில் பெயர் ஞாபகம் வந்ததால் உன்னைக் குயிலாக மாற்றிப் பறக்கவிட்டார்கள்.. கவலைப்படாதே சின்னக்குயிலே.. நீ ஆசைப்பட்ட அந்த பழைய ராசன் உன்னை ஒரு சோலையிலே சந்திப்பான். அவனைக் கண்டதும் உனக்குப் புரிந்து விடும்.. நான்கு நாள் அவகாசம் கொடுத்து அவன் வரும் போது நான் இப்போது சொல்லிய உன் பூர்வஜன்மக் கதையை அந்த நான்காம் நாள் அவனிடம் கூறு.. நல்லதே நடக்கட்டும் என்று ஆசிகள் கொடுத்து அனுப்பி வைத்தார்..

 

என் ஆசைக் காதலரே.. நீரே என் முன் ஜென்மத்தில் மனதைக் கவர்ந்தவர்.. இனி என்னைக் கொல்வது நல்லதெனப் பட்டால் தயை செய்து கொன்றுவிடும்..

 

என்று சொன்ன கானக்கருங்குயில், அந்த சின்னஞ்சிறு குயில் அவன் மடிமீது வந்து விழுந்தது. அதன் சின்ன இறகைக் கவனமாகப் பிடித்து மனதிலே ஆசை வழிந்தோட சின்ன முத்தம் கொடுத்தான்.. என்ன ஆச்சரியம்.. எப்படி அது.. இதோ அவன் கண் முன்னே கானக் குயில் மறைந்து அழகிய காரிகை நின்றாளே..

 

 

ஆஹா.. என்ன இது.. எப்படி இது.. குயில் ஒரு அழகிய இள மங்கையாக மாறிவிட்டதே என அவன் அதிசயப்பட்டான். முனிவர் சொன்னது நடந்து விட்டதா.. ஆஹா.. அதிர்ஷ்டம் இந்தப் பெண்ணின் வாயிலாக வந்து விட்டதா.. யாரிவள்.. தேவதையா.. வான்வெளிப் பாதையில் சென்றவள் வழிதவறி பாதை மறந்து, தன்னையும் மறந்து கீழே நான் செல்லும் பாதையில் விழுந்து விட்டாளோ..

 

அந்தக் கவிஞன் அப்படி நினைத்து அவள் முன்னே செல்ல அடியெடுத்து வைத்தான்.. அழகி அவனை ஆவலுடன் வாவென அழைத்தாள்.. மயக்காத்துடன் தள்ளாடியவன் அவள் அருகே செல்ல அடியெடுத்து வைத்தவன் தடுமாறினான்.. கால்கள் தள்ளாடினான்.. இன்னொரு அடி வைப்பதற்குள் தடாலென்று கீழே விழுந்தான்..

 

ஐய்யோ என்ன இது.. கயிற்றுக் கட்டிலிலிருந்தா கீழே விழுந்தான்.. என்ன இது.. ஆகாயம்.. மாஞ்சோலை, குயிலும், குரங்கும் மாயையா.. எங்கே அந்தக் குயில் கன்னி? எல்லாம் கனவோ ஒருவேளை.. ஐய்யே.. கனவுதான்..

 

அடடா.. ஆமாம்.. அப்படியானால் இதுவரை தூங்கிவிட்டான் அந்தக் கவிஞன்.. இது கனவா.. கனவில்தான் அந்தக் காரிகை வந்து நின்றாளா.. குயிலாக வந்தவள் எங்கே.. குயில் பாட்டு எங்கே.. எப்போது மறுபடியும் கேட்பது.. மயக்கும் குயிலின் பாடலை இனிக் கேட்க மாட்டாமோ.. இல்லை இல்லை.. அந்தக் குயில் இனி வாராது.

 

அன்பர்களே! இதுதான் குயில் பாட்டின் கதை.. இந்தக் கதையைக் கேட்டிர்கள் அல்லவா.. பாரதி எழுதிய அந்த காவியத்தையும் படியுங்கள்.. நாம் தமிழின் உயர்ந்த நிலையில் சென்றுள்ளோம் என்பதை உணர்வீர்கள்.

 

 

இனி பாரதியின் வரிகளாலேயே இந்தக் குயில் பாட்டை முடிப்போம்.

சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், 
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்னையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.  ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க 
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ? 

 

வாழ்க தமிழ்.. மகாகவியின் புகழ் ஓங்குக!!

நன்றி!!.

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages