பாரியின் நாட்டையும் வீட்டையும் அவனது வீரதீரத்தையும் புகழும் பாடல்...
"வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து,
பூழி மயங்கப் பல உழுது, வித்தி,
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்
களை கால் கழலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் மேலும் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரிய,
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறு நெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப் பெருந்தோள் தாலம்
பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!"புறம். 120.
மேற்சுட்டிய பாடலில் பாரியின் நாட்டில் நிகழ்ந்த பெருவாரியான புன்செய் வேளாண்மையின் சிறப்பு பேசப்படுகிறது. கார் காலம் தொடங்கிப் பெருமழை ஒன்று பொழிந்தவுடன் எவ்வாறு உழுதனர்; எவ்வாறு வரகை விதைத்தனர்; எவ்வாறு களை எடுத்தனர்; எவ்வாறு வரகு விளைந்தது; எவ்வாறு அறுத்தனர் என்று பாடலின் முற்பகுதி பேசுகிறது. தொடர்ந்து தினை கொய்தல்; எள் முற்றல்; அவரை கொய்யும் பருவத்தை அடைதல் எனப் புன்செய் வேளாண்மையின் மிகுதியை அவனது நாட்டின் வளமாகக் கூறுகிறது இப்பாடல்.
தொடர்ந்து பாரியின் மனைவியைப் 'பெருந்தோள்' என்று குறிப்பிட்டு; அவள் தொடர்ந்து விருந்து புறந்தந்தமை புலப்படும் படியாக; எப்போதும்
உண்கலமாகிய தாலத்தைத் தூய்மை செய்யும் பணியை மேற்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதைக் கபிலர் சொல்கிறார்.
அதுமட்டுமின்றி புன்செய் வளத்தையும் நன்செய் விளைவையும் ஒருங்கு சேர்த்து 'நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்'டாள் என்பது பண்டு தொட்டு மக்கள் உண்ணும் உணவு வகையைக் குறிப்பிடுகிறது.
வேளிர் குலத்தோன்றலாகிய பாரி நெல் வேளாண்மை செய்தவன் என்பதையும் அவனைப் பற்றிய இன்னொரு பாடல் சொல்கிறது.
(தொடரும்)
சக