சிற்றகழி கல்வெட்டு

3 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 29, 2026, 7:41:33 AM (7 days ago) Jul 29
to வல்லமை, hiru thoazhamai
image.png

பெரம்பலூர் மாவட்டம்
"வணக்கங்க ஐயா!
நல்லா இருக்கிங்களா?"
கைகூப்பி வணங்கினேன்.
சாலையோர வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் எண்பது வயது நோயாளர்- (நடுக்காளை)மாணிக்கம் ஐயா .
சிறிது நிதானித்தார். நான் யார் எனக் கண்டு பிடித்து விட்டார் என்பதை அவர் புன்னகை உணர்த்தியது. .
"நல்லாருக்கேங்கய்யா. நீங்க நல்லாருக்கிங்களா?"
வணங்கினார்.
"என்னல்லாம் மறந்துட்டிங்களா ஐயா?"
"எப்பிடிங்க மறக்க முடியும் ஐயா? எனக்கு அனாதப் பணம் வாங்கிக் கொடுத்தது நீங்கதானே. மாசாமாசம் வந்து பார்த்ததுட்டு போவிங்க. கட்டுக்கட்ற துணி ,மருந்து, செருப்புல்லாம் தருவிங்க.அப்புறோ நம்ம ஊரு குளக்கரையில அந்த எழுத்து இருக்கிற கல்ல தூக்கி நேரா நட்டு வச்சிட்டு போனிங்கல்ல!எப்பிடி மறப்பேன் "
மனம் நெகிழ்ந்து போனது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பணி மாறுதலில் மீண்டும் இலப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து விட்டேன். இன்று பீல்வாடி ,சித்தளி ஊர்களில் உள்ள நோயாளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன்...
◾
இவ்வூரைச் "சிற்றகழி" என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்போது இந்த ஊர்,"சித்தளி"என வழங்கப்படுகிறது.
இவ்வூரில் இதுவரை 12 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
🔸சிற்றகழி திருவீரட்டானமுடைய நாயனார் கோயில் (வீரபுரீஸ்வரர் கோயில்/சிவன் கோயில்)................6
🔸சிற்றகழி தேவண்ண விண்ணகர எம்பெருமான் கோயில் (வரதராஜ பெருமாள் கோயில்)......... 5
🔸விரத்தியாக் குளக்கரை....1
இவ்வூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள போசளமன்னர் வீரசோமேஸ்வர தேவனின் கல்வெட்டு (கி.பி.1237), வெம்பார் பற்றில் குன்றக் கூற்றத்தின் கீழ் இருந்த சிற்றகழியின் ஒரு பகுதியைப் பிரித்து "தேவண்ணச் சதுர்வேதிமங்கலம்" என்ற பிரம்மதேய கிராமத்தை உருவாக்கி அதில் 22 பிராமணர்களைக் குடியேற்றி அவர்களுக்கு இறையிலியாக நிலங்கள் வழங்கியுள்ளார் எனும் செய்தியை உரைக்கிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்
சித்தளி விரத்தியாக் குளக்கரையில் சாய்ந்து கிடந்த இந்த கல்வெட்டை சூழலியலாளர் அன்புத் தம்பி இராகவன் மகிழன் அவர்களின் முயற்சியால் உள்ளூர் இளைஞர்கள் ஒன்று கூடி நேராக நிமிர்த்தி நட்டு வைக்கப் பட்டது.
♦️கல்வெட்டுச் செய்தி
விஜயநகர மன்னர் விருப்பண்ண உடையார் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மகாபிரதானி முத்தரச உடையார் வெளியிட்ட ஆணையாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது.
காட்டப்பர் என்பவருக்கு ஜீவிதமாக வழங்கப்பட்ட ஊராக "வெம்பார் நாட்டுச் சிற்றகழி" விளங்கியது. இவ்வூரில் நரசிங்கதேவர் என்பவர் புதிதாக ஏரி வெட்டியுள்ளார். இந்த ஏரியின் கீழ் அமைந்த நிலங்களைத் திருத்தி பயிர் செய்கின்றபோது பூர்வத்திலே (முற்காலத்திலே) எவ்வாறு வரிவிதிக்கப்பட்டதோ அதேபோன்று தற்போது வரிவிதித்துக் கொள்ளும்படி முத்தரச உடையார் ஆணை பிறப்பித்துள்ளார்.
இக் கல்வெட்டு குறிப்பிடும்
சிற்றகழியில் நரசிங்க தேவர் வெட்டின புத்தேரி எங்கே இருக்கிறது என அறியக் கூடவில்லை. ஆனால் இந்த கல்வெட்டு காணப்படும் விரத்தியாக் குளமே, நரசிங்க தேவர் வெட்டின "புத்தேரி" ஆகலாம்.
♦️ கல்வெட்டு
இடம்: விரத்தியாக் குளம் அருகே கிடக்கும் தனிக்கல்
மன்னன்: விஜயநகர மன்னர் விருப்பண்ண உடையார் (1377-1400)
ஆட்சியாண்டு: சக வருஷம் 1309
காலம்: கி.பி.1387, தமிழ் வருஷம்: பிறபவ
க.ஆ.அ.எண்: ......
◾கல்வெட்டுப் பாடம்
1. ஸ்வஸ்திஸ்ரீ மன் மஹாமண்டலேஸ்வரன்
2. ஹரி அரி இராச விபாடன் பா
3. ஷைக்குத் தப்பு மூவராயர் கண்டன்
4. ஸ்ரீ வீரவிருப்பண்ண உடையார்
5. பிறுதுவி இராச்சியம் பண்ணி அருள
6. நின்ற ஸகாத்தம் சதகளகூ -ன் மேல்
7. செல்லா நின்ற பிறப வருஷத்து
8. பூறுவ பக்ஷத்து திறையோதெசி
9. யும் புதின் கிழமையும் பெ
10. ற்ற உரோசணி நாள் மஹா
11. ப் பிறதாநி முத்தரச உடை
12. யார் பட்டயம் குடுத்த ப
13. டி காட்டப்பர் சீவிதமா
14. ன வெம்பார் நாட்டு சிற்
15. றகழியில் நரசிங்க தேவர்
16. வெட்டின புத்தேரி கீழ்
17. காடும் வெட்டி கரம்
18. பை திருத்தி நன்செயும் பு
19. ன் செயும் வான் பயிரு
20. ம் புன்பயிரும் பயிர்ச்
21. செய்து கொள்ளக் கட
22. வர்களாகவும் பயிற்செய்
23. த நிலத்துக்கு கடமை
24. பூற்வமரியாதியிலே ெ
25. காள்ளக் கடவராகவும் சந்திராதித்
26. தவரையும் செல்லக் க
27. ல் வெட்டிக் குடுத்த பட்டைய மா
28. மாக கொள்ளவும்.
◾
துணை நூல்:
பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்
பேராசிரியர் முனைவர்
இல.தியாகராஜன்
Reply all
Reply to author
Forward
0 new messages