இந்த பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் எப்படி எனக்கு இதில் ஆர்வம் வந்தது என கடந்த காலத்தை திருப்பி பார்க்க வேண்டி வந்தது. சில பழக்க வழக்கங்களையும், வேகத்தையும், நிதானத்தையும், ஒருங்கிணைக்கும் பாங்கும் என்னுள் பலஇடங்களில் எனக்கு தெரியாமலே தன் இருப்பை பதித்த என் ஆசான்/நாயகன். என் வாழ்வுடன் கலந்துப்போன அவரைப் பற்றி இப்போது எழுதக் காரணமில்லை. இருந்தும் இந்த என் ஆர்வத்திற்க்கும் / பயணத்திற்க்கும் காரணமானவர் என் தாத்தா. பள்ளி இறுதி நாட்களில் திசை தெரியாமல் சுற்றி கொண்டிருந்த வேளையில் புத்தகங்கள் படிக்க வைப்பார் சிறுவர்மலர், காமிக்ஸ், என ஆரம்பித்து வார இதழ்களில் வரும் தொடர்களை சேகரித்து வைத்தும் அதில் வரும் படங்களை வரைந்து பார்க்க சொல்வார். இதில் ஆர்வம் வந்து புத்தகங்களை தேடிக் கொண்டிருந்த வேளையில் பொன்னியின் செல்வனை அறிமுகபடுத்தினான் நண்பன் பால சுப்பிரமணியன். சுருக்கமாக பாலு.
பொன்னியின் செல்வன் தந்த வாசிப்பின் அனுபவம், வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது, இதை பற்றி நானும் பாலும் நிறைய பேசி விவாத்துள்ளோம், அவனது ஆசை, ரிலேட்டிவிட்டி தீங்கிங் வரலாற்றின் மீது எனது ஆர்வத்துக்கு காரணமானவன், கோலம் இணையத்துக்கு தூண்டுகோலும் அவன் தான்,
உதயம்.இன் வேலைகளில் இறங்கி இருந்த போது பழமையான எழுத்துக்களை கணிணியின் எழுத்துருக்காளாக செய்யலாம் என நண்பர் செல்வமுரளி மற்றும் மின்தமிழ் கூகுள் இணைய குழுமம் மூலம் வினோத்ராஜன் அறிமுகம் ஆனார்.
வினோத்ராஜன் பிராமி எழுத்துக்களை எழுத்துருக்களாக (பாண்ட்) மாற்றும் முயற்சியில் இறங்கி இருந்தார், தொழில்முறை டிசைனாரான நான், இந்த வேலைக்கு என்னாலும் சில உதவிகள் செய்ய முடியுமாதலால் இருவரும் இணைந்தோம், வினோத் தமிழின் பழமையான எழுத்துகளை அறிமுகப்படுத்தினார். ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கினோம், பிராமி எழுத்துருக்களை கணிணியில் ஒரு வடிவத்துக்கு கொண்டு வருவதற்க்கு மிகவும் சிரமப்பட்டோம், உயரம், அகலம் வேறுபாடுகள் வேறு, முதல் முறையாக எழுத்துருக்கள் செய்வதால் அடிப்படை விஷயங்களுக்கு மிகவும் சிரம பட வேண்டி இருந்தது. எங்களுக்கான மேற்கொள் நூலாக ஜராவதம் மகாதேவன் எழுதிய Early Tamil Epigraphy என்ற புத்தகம் கிடைத்தது, புத்தகம் ரொம்ப உதவியாக இருந்தது எழுத்துக்கள் ஒரு வடிவத்துக்கு வந்து எழுத்துருக்களை உருவாக்கி ”ஆதிநாதன்” என்ற பெயரில் வெளிட்டோம்.
அந்த புத்தகத்தில் பிராமி எழுத்துக்கள் பற்றி நிறைய இருந்தன. மேலும் சில புத்தகங்களும் கிடைத்தன, புத்தகங்களில் கல்வெட்டுகளை படி எடுத்து போட்டோ காப்பியாக இருந்தன, மதுரையின் அருகிலேயே நாகமலை புதுக்கோட்டை, ஒத்தகடை யானைமலை, மாங்குளம், கிடாரிபட்டி, திருப்பரங்குன்றம் போன்ற மலைகள், குன்றுகள் இருக்கும் இடங்களில் கல்வெட்டுகள் இடங்கள் பற்றி படித்தவுடன் கண்டிப்பாக இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன், (இந்த இடங்கள் முன்னமே பரிச்சயம் என்றாலும் கல்வெட்டுகளையும், குகையையும் காண சென்றதில்லை.)
கடந்த வாரம் மதுரை செல்ல வேண்டி வந்தது, ஞாயிறு அன்று நண்பர் பாலுவுடன், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில் வரை செல்ல தான் திட்டமிட்டு கிளம்பினோம், ஒத்தகடை வந்த பின்னர் மாங்குளம் பற்றிய நியாபகம் வந்தது, மாங்குளம் கல்வெட்டுகளை பாலுக்கு கூறி அங்கேயே போய்வரலாம் என்று இடம் விசாரித்து செல்ல ஆரம்பித்தோம். கிராமங்கள் வழியாகவே செல்ல முடிவு செய்து, கொடிக்குளம் வழியாக கிராமத்தின் உள்செல்ல ஆரம்பித்தோம்.
கிராமத்தின் முகப்பே எல்லை சாமி / காவல் தெய்வம் வரவேற்ப்பு. சுடலை மாடன், பெரியண்ணன், கருப்பசாமி, மதுரை வீரன், அய்யனார், இசக்கி அம்மன், முனீஸ்வரர், பாண்டி, இவர்களில் யாரேனும் இருக்கலாம், வழியெங்கும் காவல் காக்கும் பனை/தென்னை மரங்கள், கிராமம் நகரத்தின் சுவடே இல்லாமல் பின்னர் ப்ளாட்டுகளக மாற இருக்கும் விவசாய நிலங்கள் ஆடு, மாடுகள், ஓட்டிச் செல்லும் கோவண மனிதர்கள், காளைகளை விரட்டும் காளைகள், நெல்வயல்கள், களையெடுக்கும் கிழகுமரிகள், பனை மரங்கள், தென்னந் தோப்புகள், கிணற்றடி, குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், சிறு பாலங்கள், திண்னைகள், குதிரை ஒட்டும் கருப்ப சாமி, மாரியம்மன், காளியம்மன் கோவில், மண் வீடுகள், மாட்டு வண்டிகள், வெட்டவெளியில் முடிதிருத்தும் நாவிதர், அடுத்தது நான் என ஒரு சிறு கூட்டம், ரசம் போன கண்ணாடி, ட்ராக்டர்கள், பம்பரம், கண்ணாமூச்சி, தென்னம் மட்டை கிரிக்கெட், நாங்கள் இன்னும் கிராமம் என்பதை உறுதி செய்தன, அருமையான சூழல், பயணத்திற்க்கு வானிலை மந்தமாக இருந்தது இன்னும் வசதியாக இருந்தது. ஒவ்வொரு கிராமாக கடந்து விசாரித்து மாங்குளம் சென்றோம்.
இது வரை சம தளபகுதியாக இருந்த இடம், மாங்குளத்தில் இருந்து மலைகளின் ஊடாக பயணிக்கனும்.
அடுத்த பகுதியில் மலை ஏறலாம்.