தேவகோட்டை, ஜூன் 29:
மாணவர்களின் கண் பார்வை குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் 'கண்ணொளி காப்போம்' திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் பள்ளிக்கே வந்து வழங்கப்பட்டன.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, பார்வைக் குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்ந்து சிறப்பாகப் பயிலும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் டாக்டர் கெவின் ஆபிரகாம் மற்றும் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் நிபுணர் மகேஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கி, கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க நல்ல பார்வைத்திறன் மிகவும் அவசியம் என்றும், அரசின் இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் துணையாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் ஸ்ரீதர் சிறப்பாக செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் 'கண்ணொளி காப்போம்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் டாக்டர் கெவின் ஆபிரகாம் மற்றும் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் நிபுணர் மகேஸ்வரி வழங்கினர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம், ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.