குலதெய்வக் கதைகள்

9 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 5, 2026, 9:29:45 PM (21 hours ago) Jul 5
to vallamai
முகநூல் பகிர்வு

/// தெய்வங்களான பலிஆடுகள்

'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தி இருக்கிறார்கள். அதோடு பரிதாபமாக செத்த அந்தக் கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாகித் தனக்கோ தன் குடும்பத்திற்கோ அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப் பெண்ணைக் குலதெய்வமாக்கி வழிபட்டுத் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானது. பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூற முடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .

சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன், வலிமையானவனை எதிர்த்துப் போராட முடியாமலும் தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்த போது  தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .

நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு. வாரிசு பரம்பரையா அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகான மகள் இருந்தா. அவ பேரு பூவாத்தா. பூவாத்தா செக்கச் செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு.

ஒருநா பூவாத்தா குளத்துக்குக் குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து குளத்துக் கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, தன் தலைக்குச் சிக்கு எடுத்துகிட்டிருந்தா. அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சூறாவளிக் காத்து அடித்து; அவளோட முடி பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு. அதப் பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாத்தா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜா தான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா.

இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி கோவத்துல தன் கையில இருந்த வாளால கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .

தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய்ச் சேர்ந்து 'நடந்த கதை'யைத் தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா. அண்ணன்மார்க்குக் கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய; அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியணும்... வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .

இதுக்கிடையில மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு; 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன். எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .

'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லாருமா சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .

குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரைப் பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டுப் பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கப் படுத்துனது காணாதுனு பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேற தான் . அதனால, நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுக் கொடுக்கக் கூடாது' என்றார் .

பிறகு ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி; 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம் தான் முக்கியம். இந்த ராஜாவுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது. ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது. அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கணும் என்று முடிவெடுத்தாஙக.

அதுபடிக்கு மறுநாள் அரண்மனைக்கு வருகிற வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டுப் பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம். வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில பூவாத்தாளை குளிப்பாட்டி; புதுச்சேலை, சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு, சாமி கும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரியலே என்றாலும்; ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.

காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம். மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் ரொம்ப பெரிசு. அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப் பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .

மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கண்ணியைப் (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தானியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டு மாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி வழுவி சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .

பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப் போயி மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடிக் கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள். அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான். பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது. பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள். 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள்; 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே; காடக்கன்னி குவியலில் மூழ்கி மூச்சுத் திணறி செத்துப்போனாள் .

அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப் பூட்டி, அரண்மனைக்கு அனுப்பி விட்டுக் காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க.

அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வச்சு கும்புடுறாங்க' 

https://www.facebook.com/share/1CzCskkw33/

தெரிவு: சக 
Reply all
Reply to author
Forward
0 new messages