"திருக்குறளைத் திருத்திய பாதிரியார் - திருத்திய நூல்களை எரித்த பாண்டித்துரைத்தேவர்"
கி.பி 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 'ஸ்காட்' என்னும் ஐரோப்பியப் பாதிரியார். இவர் மதுரையில் தமிழ் கற்றுக் கொண்டு தனது பெயரை 'சுகாத்தியர்' என மாற்றிக் கொண்டவர்.
இவர் திருக்குறளில் சில குறட்பாக்கள் எதுகை, மோனை போன்ற யாப்புக்கு முரணாக இருப்பதாகக் கருதி, அவற்றைத் தன்மனம் போன போக்கில் திருத்தி "குறள்மூலமும் கருத்துயரட்டவணயும் பொழிப்புரயும்" என்ற நூலை 1889-ல் வெளியிட்டார். இந்நூலில் திருக்குறளின் பால், இயல் அதிகாரம் போன்றவற்றின் தலைப்புகளையும் மாற்றினார்.
நூலில் அவர் எழுதியுள்ள உரயாசரியர் கோட்பாட்டில்,(அவர் உரயாசரியர் என்று தான் குறிப்பிடுகிறார்)
"திருவள்ளுவர் தெய்வப் புலவராதலாலும் அவர் தம்மயேற்றுக்கொள்ளாத சங்கத்தி லரங்கேற்றி யிருத்தலாலும் இந்நூலய்த் தமிழ்வேதமென முன்னயோரேற்றி ருத்தலாலும் அவரருளிய திருக்குறள்களில் எவ்வித வழுவும் இராவென்னும் நிச்சயத்தாலும் எதுகய்மோனய் வழுவாதிருந்த அநேகங் குறள்களுக்கு மொப்பமற்றய குறள்களுக்கு எதுகய்மோனய்திருத்தி சுத்த மூலங்கண்டு வெளியிடப்பட்டது"
சுகாத்தியர் ஒருமுறை நான்காம் தமிழ்சங்கத்தை உருவாக்கிய பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து தான் திருத்திப் பதிப்பித்த திருக்குறளைக் கொடுத்தார் . பாண்டித்துரைத்தேவர் 'தாங்கள் வெளியிட்ட அத்தனை நூல்களையும் கொண்டு வாருங்கள்; நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்' என்றார். தான் வாங்கிய பிரதிகள் அனைத்தையும் குவித்து நெருப்பூட்டினார்.
இத்திருத்தப்பட்ட பிரதிகள் திருக்குறளின் மேன்மையைக் குழைத்துவிடும் என்றும், தமிழ்ச்சமூகத்தினூடே தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்றும் பாண்டித்துரைத்தேவர் இப்பிரதிகளை எரித்திருக்கிறார்.
நூலை வாசிப்பதற்கான சுட்டி கருத்துப்பெட்டியில்.