மனோரமா - கடந்த கால நினைவுகளைச் சொல்லியுள்ளார். நன்றி: குங்குமம்
கடந்த கால நினைவுகள் – “மனோரமா”
நான் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி பெற்றவர்கள் எனக்கு வைத்த பெயர் கோபிசாந்தா.
என் தந்தை வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வசதி மிகுந்த ரோடு காண்ட்ராக்டர், தாயார், தந்தை கொண்டு வரும் வெள்ளி நாணயங்களை எண்ண முடியாமல், ‘அரிக்கன்சட்டி’யில் கொட்டி துணியால் ‘வேடு’ கட்டி வைப்பார்களாம்.
அந்த அளவிற்கு வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். இந்த நேரத்தில்தான் எனத் தாயார் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார். எனது அப்பாவுக்கு தன் கூடப் பிறந்த தங்கையையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்ததுதான் அந்தத் தவறு!
அதன் விளைவு -
என் அம்மாவின் வீட்டு நிர்வாகம் கைமாறியது. எனது சின்னம்மாவின் ஆதிக்கம் வலுத்தது.
பல வழிகளிலும் என் அப்பா என் அம்மாவை அவமானப்படுத்தவும் கொடுமைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்.
எந்தத் தங்கையை நல்லவாழ்க்கை வாழச் செய்யவேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை பங்கு போட்டுக் கொடுத்தாரோ அந்தத் தங்கையே எங்கள் வாழ்க்கையின் எல்லா அவலங்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து விட்டார்.
நாளுக்கு நாள் துன்பமும் கொடுமைகளும் அதிகரித்தன. பொறுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எதற்கும் ஒரு உச்சவரம்பு உண்டல்லவா?
எனது அப்பாவின் கொடுமைகளையும் அவமானப் பேச்சுக்களையும் இனி பொறுக்க உடல் வலிமையோ உள்ள வலிமையோ இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
அதன் முடிவு -
ஒருநாள் எனது தாயார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டிக் கொண்டுவிட்டார்.
பிறந்து ஒரு வருடம்கூட நிறைவு பெறாத நான் அருகில் கதறிக்கொண்டிருந்தேன்.
இந்த நேரம் தற்செயலாக எனது அழுகைக்குரல் கேட்டு வந்து பார்த்தவர்கள், எனது அம்மா தூக்கு மாட்டிக் கொண்டு உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறி கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.
அப்படிக் காப்பாற்றப்பட்ட அவருக்கு சரியாக பன்னிரெண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் உயிர் வந்தது.
இந்தத் துன்பச் சூழ்நிலைக்கப்பிறகும் மேலும் நெருக்கடிகளும் மன வெதும்பலுமே அதிகரித்தனவே தவிர குறைந்திடவில்லை. அத்துடன் என் அப்பா கூட என் அம்மவால் தொடர்ந்து குடும்பம் நடித்த முடியாத நிலையும் ஏற்பட்டது.
இனி என்ன செய்வது?
வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை!
அதுமட்டுமா? வீட்டை விட்டு வெளியேறினாலும் எங்கள் ஊரில் மட்டும் அல்ல, தஞ்சை மாவட்டத்திற்குள்ளேயே எங்கும் தலைகாட்டக்கூடாது என்ற கொடுமையான நிலையையும் உருவாக்கிவிட்டார்கள்.
அதனால் -
ஒரு நாள்-
என் தாயார் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
அப்படி அவர் வீட்டை விட்டு, சொந்த ஊரைவிட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு வந்து நின்ற ஊர்தான் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர்.
முன்பின் தெரியாத ஊர்; பார்த்து பழகியிராத மக்கள்; முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. பசித்து அழும் எனக்கு பால் வாங்கக்கூட கையில் காலணா (3காசு) இல்லாத வறுமை.
இப்படி பாவப்பட்ட சூழ்நிலையில் என் அம்மா பள்ளத்தூரில் தனது வாழ்க்கையைத் துவக்கினார்.
பலகாரம் சுட்டு விற்பது என் அம்மா எடுத்துக்கொண்ட தொழில்.
வியாபாரத்தன்மை பெருக்கம் இல்லாத சிறிய ஊர். அதிக முதலீடோ லாபமோ இல்லாத தொழில். அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது. ஆனால் மானத்தோடு வாழ அது வழி காட்டியது!
இந்த பள்ளத்தூர்தான் என்னை வளர்த்த ஊர்! ஏன்? எனது இன்றைய வாழ்க்கைக்கே வழிகாட்டிய ஊர்! அனாதையாக வந்த எங்களை ஆதரித்த ஊர்.
அப்போது எனக்கு இரண்டு வயது இருக்குமாம். திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய “உன்னழகை காண இரு கண்கள் போதாதே” என்ற பாட்டை நான் ஒரு பொம்மையை வைத்து பாடிக் கொண்டிருந்தேனாம். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு எல்லையில்லாத ஆனந்தம் பூரிப்பு!
இருக்காதா பின்னே!
வயதோ இரண்டு. மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை ஓரளவு நயத்தோடு பாடினால் எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி பொங்காது?
தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன்முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
ஏனென்றால் இதைப்பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருந்தாராம்.
ஒரு சின்னஞ்சிறிய ஊரில், எந்த வித வசதியும் இல்லாத ஏழையின் இரண்டு வயதுக் குழந்தை ஓரளவு இனிமை சேர்த்துப் பாடுவது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும் போலும்!
அதுமுதல் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே கூட்டி வைத்துக்கொண்டு “பாப்பா பாடு” என்று சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன்.
படிப்படியாக இந்தப் பாடும் வித்தை எப்படியோ என்னை பலமாக ஒட்டிக்கொண்டுவிட்டது. மற்றவர்களுக்குப் பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்துவிட்டது!
பிறகு எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன விசேஷ நிகழ்ச்சி நடிந்தாலும், அங்கே என்னைத் தவறாமல் கூட்டிச் சென்று பாட வைப்பார்கள்.
இதே நேரத்தில் ரொம்பவும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கூடமும் போய் வந்தேன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்ற பாராட்டையும் பெற்று வந்தேன்.
என்னுடைய பெயர் கோபிசாந்தாவாக இருந்தாலும் எல்லோரும் என்னை “பாப்பா” என்று தான் கூப்பிடுவார்கள். ஒருமுறை எங்கள் பள்ளிச்கூட விழா ஒன்றில் எங்கள் வாத்தியார் என்னை அழைத்து “பாப்பா ஒரு பாட்டுப் பாடும்மா” என்று கேட்டுக் கொண்டார்.
நான் “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாட்டை மீரா படத்தில் வரும் “காற்றினிலே வரும் கீதம்” என்ற பாட்டின் டியூனில் பாடினேன். இதற்கு பள்ளிக்கூட ஆசிரியர்களும், மற்றவர்களும் மிகவும் பாராட்டினார்கள்.
அதுமுதல் நான் பாடாத பள்ளிக் கூட விழாக்களே இல்லை என்றாகியது. அத்துடன் சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பாட வைத்தார்கள்.
எல்லாமே தேங்காய்மூடிக் கச்சேரி மாதிரிதான்.
பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்
2. நான் பாடத் தெரிந்தவள் என்பதினால் எனக்குக் கிடைத்த ஒரு சலுகையும் உண்டு. பள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவேன். அங்கே பலகாரம் விற்பதுடன். எந்தக் காட்சியிலும் எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு. ‘பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்’ என்று பிரியமாக விட்டுவிடுவார்கள். நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன்.
அதோடு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது படம் பார்க்கப் போனால், “பாப்பா வா” என்று என்னையும் படம் பார்க்கக் கூட்டிப் போவார்கள்.
இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது.
இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்ததது. மனக்கவலை – வறுமை – தினந்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான உழைப்பு – இவை எல்லாமாகச் சேர்ந்து இந்த நோயைக் கொடுத்துவிட்டன.
உள்ளூரிலோ மருத்துவ வசதி இல்லை என்ன செய்வது?
இக்கட்டான இந்த நேரத்தில் தயாள மனம் கொண்ட ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் அம்மாவை இராமனாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.
எனக்கு என் அம்மாதான் உலகம். என் அம்மாவுக்கு நான்தான் உலகம். எங்களுக்கு என்று வேறு யாரும் கிடையாது. அதனால் என் அம்மா சேர்ந்திருந்த அரசாங்க மருத்துவமனைக்குப் போய் அம்மாவுக்குத் துணையாக இருந்து வந்தேன்.
அந்த நேரம் எனது பள்ளிச்கூட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். “நல்லாப் படிக்கிற பொண்ணு, இப்படி வீணா படிப்புக் கெட்டுப் போகுதே!” என்று வருந்தினார்கள். சில ஆசிரியர்கள் என்னைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் வைத்தப் படிக்க வைப்பதாகக் கூறினார்ககள்.
ஆனால், அந்தச் சின்னஞ்சிறு வயதில் அம்மாவைப் பிரிந்து எப்படி என்னால் தனியாக இருக்க முடியும். அம்மாவுக்கும் வேறு துணை யார் இருக்கிறார்கள்? அதனால் அம்மா கூடவே இராமனாதபுரம் போய்விட்டேன்.
அம்மாவின் கடுமையான ரத்தப் போக்கைக் கட்டப்படுத்த சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த ஒரு வருடமும் தினசரி என் அம்மாவின் சேலைகளை இரண்டு முறை துவைத்து, காயவைத்துக் கொடுப்பேன். இன்னும் சொல்லப் போனால் அந்தச் சேலைகள்கூட மருத்துவமனையில் தரப்பட்ட சேலைகள் தான். சொந்தமாக உள்ளது ஒரேயொரு சேலைதான்.
எப்போதும் என் அம்மா ரத்தம் தோய்ந்த சேலையோடேயே இருப்பார். அப்படி எந்த நேரமும் ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த ஒரு வருடமும் நாங்கள் பட்ட துன்பத்திற்கு ஒரு எல்லை கட்டிச் சொல்லவே முடியாது.
என் அம்மாவுக்குத் தரப்படும் மருத்துவனைச் சாப்பாட்டைத்தான் இருவரும் பங்கு போட்டுச் சாப்பிடுவோம் அவர்கள் தருவதே கொஞ்சம் இதில் இரண்டு பேருக்கு எப்படிப் போதும்? தினசரி அரைப்பட்டினி, கால் பட்டினிதான்.
பகலில் அம்மா கூட இருப்பேன். இரவில் ஆஸ்பத்திரியின் வராந்தாவில் படுத்துக்கொள்வேன்.
எப்போதாவது தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் ஏதாவது உதவி கேட்டுப் பெற்றுக்கொள்வேன்.
மொத்தமாக, பிச்சை எடுக்க வில்லை, திருடவில்லை; மற்றபடி எல்லா விதத் துன்பங்களையும் அனுபவித்து விட்டோ ம். அதுவும் அந்த ஒன்பது, பத்து வயதில் பட்ட துன்பம் இருக்கிறதே – அதை எந்த வார்த்தையால் விளக்கமுடியும்?
ஓராண்டுக்கால மருத்தவமனை வாழ்க்கையில் ஓரளவு அம்மாவின் உடம்பு தேறியது. நாங்கள் மீண்டும் பள்ளத்தூர் வந்தோம். முன்போல் வேலை பார்க்கும் சக்தி அம்மாவுக்கு இல்லை.
இனி என்ன செய்வது அடுத்த நேரச் சாப்பாட்டிற்கு?
வறுமை எங்கள் முன் பெரிதாக உருவெடுத்து நின்றது!
இன்றைய தினம் மனோரமா மிகவும் வசதியாக வாழ்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் இந்த வாழ்க்கையை வந்தடைய எவ்வளவு கொடிய வழிப்பயணம் செய்திருக்கிறோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கையில் உடம்பு நடுங்குகிறது!
பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் குடும்பங்கள் நிறைய உண்டு. வசதியற்ற குடியானவர்கள் இந்தச் செட்டியார் குடும்பங்களில் மாதச் சம்பளத்திற்கு பண்ணை வேலை அல்லது வேறு வேலைகளில் சேர்ந்தறுப்பார்கள்.
அதேபோல் வீட்டு வேலைகளுக்கு பெண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்களின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்துக்காரர்கள் என் அம்மாவிடம். “உனக்கோ உடம்புக்கு முடியலை. பாப்பாவும் பட்டினி கிடந்து சாகிறதா! அதனால யாராவது ஒரு செட்டியார் வீட்ல பிள்ளை பார்த்துக்க அனுப்பி வை. மாதத்துக்குச் சம்பளமும் கிடைக்கும் பிள்ளைக்கு வயிறார மூணு வேளையும் சோறும் கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பசி – பட்டினியின் துன்புறுத்தலால் மற்றவர்களின் சொல்லுக்கு செவிசாய்த்துவிட்ட என் அம்மா ஒரு செட்டியார் வீட்டில் குழந்தை பார்த்துக்கொள்ள ஒரு அம்மா மூலம் அனுப்பி வைத்தார்.
அங்கே உள்ள ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதும், அதற்குத் தேவையானதைச் செய்வதும்தான் எனக்கு வேலை.
நான் வேலைக்குப் போன முதல் நாள். கீழே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி என் தோள்பட்டையில் சாய்த்து செல்லமாகத் தட்டிக் கொடுத்ததுதான் தாமதம், அந்தக் குழந்தை ‘சரக்’ என்று என் தோள்பட்டையில் கடித்துவிட்டு, ‘வீல்’ என்று கத்தியபடி ஏற்கனவே அங்கே வேலை செய்யும் ஆயாவிடம் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டுவிட்டது.
முன்பின் பழக்கம் இல்லாததால் அந்தக் குழந்தை என்னிடம் வர மறுத்தது.
என்னை வேலைக்கச் சேர்த்தது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக. ஆனால் குழந்தையோ என்னிடம் வர மறுத்து வேலைக்கார ஆயாவிடம் ஓடுகிறது.
பிள்ளையை வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் வீட்டை விட்டுப் போகச்சொல்லி விடுவார்கள். பிறகு சாப்பிடச் சோறு கிடைக்காதே! இந்த எண்ணம் ஏற்பட்டதுமே எனக்கு அடி வயிறு ‘பகீர்’ என்றது. வறுமை எங்களை அந்த அளவிற்கு வாட்டி இருந்தது.
வேலைக்கு என்று வந்து ஒரு வேளைச் சோறுகூட ஒழுங்காகச் சாப்பிடாததற்குள் இந்த நிலைமையா!
எனக்கு கண்கள் கலங்கிவிட்டன! அந்த நிலைமையிலும் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது நான் வேலைக்குச் சேர்ந்த செட்டியார் வீடு மிகப்பெரிய வீடு. ஒரு நாளைக்கு ஏராளமான விருந்தாளிக்ள வந்து போகும் இடம். அதனால் அந்த வீட்டில் எப்போதும் பெரிய விருந்து போலவே சமையல் நடக்கும். வேலைப் பளு அதிகம்.
ஏற்கனவே உள்ள வேலைக்கார அம்மாவுக்கு 40 வயது இருக்கும். அந்த அம்மா, சமையல் பாத்திரங்கள் கழுவுவது. தண்ணீர் இறைப்பது, வீட்டைக் கூட்டுவது, சமையலுக்கான மிளகாய் – மற்றும் மசாலா சாமான்கள் அரைத்துக் கொடுப்பது மற்றும் சில்லரை வேலைகள் செய்வது வழக்கம்.
‘அடுத்து சாப்பாட்டிற்கு என்ன செய்வது?’ என்ற பய உணர்ச்சி ஏற்பட்டதுமே. உடனே அந்த அம்மாவிடம், “ஆத்தா, உங்க வேலைங்களை எல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க இந்தக் குழந்தையைப் பார்த்துக்குங்க. இல்லாட்டி என்னெ போகச் சொல்லிடுவாக” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மாவும் அன்று முதல் பிள்ளை பார்த்துக் கொள்ளவும், நான் அவருடைய வேலைகளைப் பார்க்கவும் ஆரம்பித்தோம்.
அதுமுதல் எனக்கு ஓய்வு ஒளிவு இல்லாத வேலை தொடங்கியது. பசியின் கொடுமை எனது வயதுக்கு மீறிய வேலைச் சுமையை என் தலையில் ஏற்றியது.
இதே நேரத்தில் எனது தாயாரும் வேறு ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.
பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப் பெண்களை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச் சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு. அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச் சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும். அதனால் அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும் “பாப்பா – பாப்பா” என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.
அந்த வீட்டில் எல்லோரும் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களைப்போலவே என்கூடப் படித்த, எப்போதும் “பாப்பா..பாப்பா” என்று குழையவரும் சகதோழியும் ‘குட்டி’ போட்டுக் கூப்பிட்டாள்.
மற்றவர்கள் கூப்பிட்டதைப் பற்றி நான் எதுவும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் – என்னைப் பார்த்து ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் – ‘பாப்பா – பாப்பா’ என்றவள் வழக்கத்தை மாற்றி ‘குட்டி’ என்று கூப்பிட்டதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி – குறுகி – கண்கள் நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என்றாலும், என்னால் என்ன செய்ய முடியும்?
இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப் பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக்குறைவாகக் கூப்பிடவோ -நடத்தவோ இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும் என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும் அனுமதிப்பதில்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச் சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு, “உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது மனம் வருத்தப் படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே’ என்று கண்டித்திருக்கிறார்.
அதன்பிறகு அவள் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடவில்லை. ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக் காயப்படுத்தி விட்டது!.
3. அந்த வீட்டில் அதன்பிறகு சுமார் இரண்டு மாதம் வேலை செய்திருப்பேன்.
ஒரு நாள் என் அம்மா நான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு, என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
நானோ, எனக்கு மேல் உயரமான அண்டா குண்டா பாத்திரங்களை உருட்டித் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தேன். ஏராளமான பாத்திரங்களுக்கு மத்தியில் மிகவும் அவலமான நிலையில் பார்த்த அம்மா, கண்ணீர் விட்டுப் புலம்பத் தொடங்கியதுடன், என்னை வேலையில் சேர்த்துவிட்ட அம்மாவைக் கண்டுபிடித்து சண்டை போட்டு, உடனே என் பிள்ளையைக் கூட்டி வா” என்று துரத்தியிருக்கிறார்.
அந்த அம்மாள் வந்து “உன்னோட பாட்டி செத்துப் போனதா தந்தி வந்திருக்குடி. உன் ஆத்தா அழுதுக்கிட்டு இருக்கு. உன்னைக் கூட்டியாரச் சொன்னா வாடி” என்று சொல்லி கூட்டிப் போய் என் அம்மாவிடம் விட்டு விட்டார்.
இப்போது எனக்கும் வேலை இல்லை. என் அம்மாவுக்கும் வேலை இல்லை. மீண்டும் வந்தது சாப்பாட்டுக் கவலை.
அன்று நான் சாப்பாட்டிற்காக பட்ட கஷ்டங்களின் விளைவு – இன்று நான் சாப்பிட்டு எழும்போது எனது தட்டில் இல்லது இலையில் ஒரு பருக்கையோ காய்கறிகளோ வீணாக இருக்காது. இந்தப் பழக்கத்திற்கு மற்றோர் நிகழ்ச்சியையும் காரணமாகக் கூறலாம்.
ஒருமுறை ஏவி.எம்.மின் ‘நானும் ஒரு பெண்’ படத்தின் வெற்றியையொட்டி ஏவி. மெய்யப்ப செட்டியார் எங்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தார்.
சாப்பாட்டின்போது ஏவி.எம். செட்டியார் என் கண் பார்வை படும் இடத்தில உட்கார்ந்து சாப்பிட்டார். தனக்கு வேண்டியதை தேவையான அளவு கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிந்து எழுந்தபோது. அவர் சாப்பிட்ட இலை அப்போதுதான் புதிதாக போடப்பட்டது போல் இருந்ததே தவிர ஒருவர் சாப்பிட்ட இலை அது என்ற அடையாளமே தெரியவில்லை.
அந்த அளவிற்கு எந்தப் பொருளையும் வீணாக்காமல் விரயம் செய்யாமல் சாப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் நாளொன்றுக்கு ஒரு ஓட்டலையே விரயம் செய்யக்கூடிய சக்தி படைத்தவர். எவ்வளவு பக்குவமாகச் சாப்பிட்டிருக்கிறார் என்பதைக் கண்டபோது நான் அசந்துவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. சாப்பாட்டில் என்னை மிக கச்சிதமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி அது!
இதுமட்டுமில்லை எந்த இடத்தில் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு மனத்திருப்தி அடைந்துவிடும் பக்குவமும் எனக்குண்டு.
தாயும் மகளும் வேலையை விட்டு விட்டோ ம். இனி என்ன செய்வது?
மறுபடியும் அம்மா பலகாரக்கடையை ஆரம்பிக்கலாம் என்றால் மீண்டும் ரத்தப் போக்கு நோய் வந்துவிட்டால் என்ன செய்வது?
ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் வழக்கம்போல் ஊரார் வீடுகளில் மங்கள நிகழ்ச்சிகளில் எனது இலவச பாட்டுக் கச்சேரி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றையதினம் இரவு அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. அதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள் அப்போது “யாரோ” என்னைப்பற்றி சொல்ல என்னை வந்து அழைத்து போனார்கள். என்னுடைய கலை உலகப் பயணம் இங்கே இருந்து தான் ஆரம்பமானது.
அந்த நாடகத்தில் எனது பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் என்னை ரொம்பவும் பாராட்டி ஆசி கூறியதுடன் எனது பெயரை மாற்றி மனோரமா என்று வைத்தார்கள். அவர்கள் பெயர் வைத்த நேரம் அந்தப் பெயரே நிலைத்தது.
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத – மறக்கக்கூடாத பெயர்களில் ஒன்று பால்ராஜ் காரணம் இவர்தான் என்னை நடிகையாக அறிமுகம் செய்வித்தவர்.
நான் பாட்டுப்பாடிய கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ். அவர் எனது பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்து புதுக்கோட்டையில் நடந்த ‘வீதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு என்னிடம் வந்தார்.
முதலில் பயந்த என்னை தைரியம் சொல்லி பாடத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த நான் இதன் மூலம் நடிகையாக மாறினேன். அதன்மூலம் படிப்படியாக எங்கள் பசிக் கவலை தேய்ந்தது.
இதையடுத்து ‘யார் மகன்?’ என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தேன். இந்த நாடகத்தை எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ்.
இந்த நாடகம் சித்தன்னவாசல் என்ற ஊரில் நடந்தது. இந்த நாடகத்திற்கு பிரபல வீணை வித்வானும், முதன் முதலில் கதை, வசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல துறைகளிலும் திரைஉலகில் சாதனை புரிந்தவருமான எஸ்.பாலசந்தர் தலைமை வகித்தார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு வேண்டியவர்களால் இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.
அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், “இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத் தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும். ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்” என்று கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
அதன்பிறகு எனது நடிப்பைப் பாராட்டி தனியாக எனக்கும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை அப்போதே எஸ். பாலசந்தர் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் அதை எப்படி மறக்க முடியும்.
இதேபோல் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் 200-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த என் மகன் பூபதிக்கு அதே டைரக்டர் எஸ். பாலசந்தர் பாராட்டி பரிசுகளை வழங்கினார். அந்தக் காட்சி, எனக்கு அவர் வழங்கிய பரிசோடு ஒப்பிட்டுப் பார்த்து பெருமகிழ்ச்சி கொள்ள வைத்தது.
‘உதரிப் பூக்கள்’ படவிழாவின் போது என் மகனுக்கு எஸ். பாலசந்தர் பரிசு வழங்கும் புகைப்படத்தை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
4.’யார் மகன்? நாடகத்திற்குப் பிறகு தொடர்ந்து நாடகங்கள் வரத் தொடங்கின. இடைவிடாமல் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.
திருச்சி டால்மியா புரத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி மதுரை வரையில் அந்த நேரம் யாராலும் அசைக்க முடியாத நடிகையாகிவிட்டேன்.
அந்தக் காலத்தில் வடஇந்தியத் திரைஉலகில் புகழேணியில் இருந்தவர்களில் முதன்மையாளவர் நடிகை சுரையா அவரது சிறந்த நடிப்புடன் அவருக்கு இருந்த விசேஷ தன்மை சொந்தக் குரலில் பாடுவது. அதனால், என்னையும் அவரோடு ஒப்பிட்டு நாடக போஸ்டர்களில் ‘தென்னாட்டு சுரையா மனோரமா’ என்று விளம்பரம் செய்வார்கள்.
இந்த உயர்வுக்கு வழிகாட்டியவர் பால்ராஜ் என்ற எலக்ட்ரீஷியன் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் கடந்த ஓராண்டுக்குமுன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் என் மனது வேதனையால் துவளுகிறது.
கடந்த வருடத்தில் ஒருநாள் திரைஉலக புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா வேறு இரண்டு பேர்களுடன் என் வீட்டிற்கு வந்தார். நான் காரைக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.
அவர் குறிப்பிட்டுக் கேட்ட நாளில் நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமற்போய் விட்டது. பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து புறப்படும் நேரத்தில் மற்ற இரண்டு பேரில் ஒருவர், “என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டார்.
உண்மையிலேயே அவர் யார் என்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. அதனால் நான் “தெரியவில்லை நீங்க யாருன்னு சொன்னாத் தெரிஞ்சுக்கிறேன்” என்றேன்.
அவர் “நான் தான் பால்ராஜ்” என்றார்.
அந்தப் பெயரைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
30 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவத்தில் எத்தனையோ மாறுபாடுகள் வித்தியாசங்கள் காலச்சித்திரத்தின் வர்ணக் கலவையில் எனக்கு அவரைப் புரிந்து கொள்ளவே முடியாமற்போய் விட்டது.
எனக்குக் கடும் கோபமும் மன ஆதங்கத்தில் ஒருவித அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டது.
அந்த வேகத்திலேயே “என் வீட்டுக்கு என்றுதானே இங்கே வந்தீர்கள்? நான் யார் என்று தெரிந்துதானே வந்தீர்கள்? அப்படி இருக்க எப்படி நீங்கள் உங்களை சொல்லிக்கொள்ளாமல் இவ்வளவு நேரமும் இருந்தீர்கள்” என்று கேட்டேன்.
பேசாமல் நின்றார்.
“நான் உங்களை அடையாளம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்தால் அது என் குற்றம். ஆனால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாத போது நீங்களே சொல்லிக் கொண்டிருந்தால் நான் எவ்வளவு சந்தோஷபட்டு இருப்பேன்” என்றேன்.
அப்போதும் ஒன்றும் பேசாமல் நின்றார்.
“நானே சினிமாவில் நடிக்காமல் வேறு எங்கேயோ ஒரு மூலையில் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் என்னை உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்குமா?
நீங்கள் 30 வருஷத்துக்குமுன்னே பார்த்த மாதிரியேவா இருக்கீங்க அடையாளம் தெரிந்து கொள்ள? இப்படி வந்து என்னை வேதனைப்படுத்திடீங்களே, நியாயமா?” என்று கேட்டேன்.
அவரால் எதுவும் பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமலேயே போய்விட்டார்.
வாழ்க்கையில் யாரை மறக்க கூடாது என்று நினைத்தேனோ, அவரே ‘மறந்துவிட்டவள்’ அல்லது ‘தெரியாதவள் போல் நடிக்கிறாள்’ என்று மற்றவர்கள் எண்ணத் தோன்றும் விதத்தில் நடந்துகொண்டு விட்டாரே என்று நினைத்தபோது அப்படியே உடம்பு ஆடிப்போய் விட்டது.
இப்படியே சில ரசிகர்களும் கேட்பார்கள். எப்போதோ ஒருமுறை சந்தித்துப் பேசியிருப்போம். அதன்பிறகு எத்தனையோ ஆயிரம் பேர்களைச் சந்தித்து இருப்போம். எவ்வளவு காலம் ஓடிப்போய் இருக்கும்.
திடீரென்று ஒருநாள் முதலில் சந்தித்தவர் நம் முன் தோன்றுவார் ‘என்னைத் தெரிகிறதா?’ என்பார். தன்னையும் யார் என்று சொல்லமாட்டார். ‘கண்டுபிடியுங்கள்’ வேலையாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே அந்த நபர் யார் என்று தெரியாது, அல்லது நினைவுக்கு வராது.
உடனே பின்னால் ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பி விட்டு விடுவார்கள். “அவுங்களுக்கு எல்லாம் நம்மையெல்லாம் தெரியாதுப்பா. ஆள் முன்ன மாதிரி இல்ல. இப்போ ரொம்ப மாறிப் போயாச்சு. ஹூம்.. இன்னும் எவ்வளவு நாளைக்குனு பார்ப்போம்!” என்பார்கள்.
இந்த நிலையைத்தான் “பால்ராஜூம் ஏற்படுத்தி விட்டாரோ என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
நாடக உலக ராணி என்ற அளவுக்கு உயர்ந்திருந்த நேரம் அது.
ராம பால கான சபாவில் இருந்து பிரிந்து வந்த காலஞ்சென்ற நடிகர் சகோதரர் ஆர். முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வைரம் கிருஷ்ணமூர்த்தி, மணிநாதன் ஆகியோர் ‘கலைமணி நாடக சபா’ என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது நாடகக்குழுவில் ஒரு கதாநாயகி ஏற்கனவே இருக்காங்க. இரண்டாவது கதாநாயகி தேவை. ஆனால் அது முக்கியமான வேடம். நாடகத்தின் பெயர் ‘புயலுக்குப்பின்’ என்பதாகும்.
இதில் நடிப்பதற்காக என்னைத் தேடிக்கொண்டு நடிகர் ஆர். முத்துராமனும், வைரம் கிருஷ்ணமூர்த்தியும் வந்து விவரத்தைக் கூறி “நாளைக்கு நாடகம், உடனே புறப்படவேண்டும்” என்றார்கள்.
உடனே புறப்பட்டு திருமயம் போய் அங்கிருந்து ரயிலில் கொடுமுடி போனோம்.
ரயிலில் ஏறியபிறகுதான் எனக்கு என்னுடைய பாகத்தின் வசன நோட்டைக் கொடுத்தார்கள். அது 100 பக்கம் உள்ள பாடம்!
மறுநாள் காலையில் ரயிலைவிட்டு இறங்கும்போது அந்த நூறு பக்க பாடத்தையும் மனப்பாடம் செய்து முடித்துவிட்டேன்.
பிறகு நாடகத்தின் பாடல்களையும் மனப்பாடம் செய்து பாடி நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. பிறகு தினசரி நாடகம் இருந்தது.
வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். இங்கு எஸ்.எஸ். ஆர். நாடக மன்றத்தின் ‘மணிமகுடம்’ போன்ற நாடகங்களில் நடித்தேன்.
அதையடுத்து கே.ஆர்.ஆர். நாடக மன்ற நாடகங்களிலும், பிரண்டு ராமசாமியின் நாடகமன்றத்திலும் கதாநாயகியாக நடித்தேன்.
இப்படி நாடகங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தேனே தவிர படங்களில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.
எனவே, படங்களில் நடிக்க முடியாதபோது இனி சென்னையில் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை, ஊருக்குப் போய்விடுவோம் என்று மூட்டைமுடிச்சுகளை எல்லாம் கட்டி வைத்தோம். மறுநாள் புறப்படத் தயார்!
அப்போது ஜானகிராமன் என்பவர் என்னைத் தேடி வந்தார். தான் ‘இன்ப வாழ்வு’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார்.
எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு நாள் காத்திருந்து வராத பட சான்ஸ் ஊருக்குப் புறப்படும்போது வந்திருக்கிறதே. இவருக்கு நம்மைப்பற்றி யார் சொன்னது?
இதற்குப் பதிலை ஜானகிராமனே சொன்னார். “நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள், எஸ்.எஸ். ராஜேந்திரன் நாடகமன்றத்தின் ‘மணிமகுடம்’ நாடகத்தில் உங்கள் நடிப்பைப் பார்த்தாராம். உங்கள் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவர்தான் உங்களை புக்பண்ணச் சொன்னார். அவரை வைச்சுத்தான் நான் படத்தை எடுக்கிறேன்” என்று கூறி முன் பணம் ரூபாய் நூறு கொடுத்துவிட்டுச் சென்றார்.
அந்த நூறு ரூபாய் எங்களுக்கு ஒரு லட்சம் போல் இருந்தது. ஏனெனில் அந்தக்காலத்தில் (1958) படங்களில் நடிப்பது குதிரைக்குக் கொம்புமுளைத்த மாதிரி. அவ்வளவு கஷ்டம் சான்ஸ் கிடைப்பது!
உடனே கட்டிய மூட்டைமுடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. படத்தில் நடிப்பது போல கனவுகள் கண் முன்னாலேயே தோன்றத் தொடங்கி விட்டன.
ஆனால் என்ன துரதிரிஷ்டம் பாருங்கள் – அந்தப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதையடுத்து கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் என்ன ஆச்சரியம் – அந்தப்படம் பட ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது.
என்னடா இது, வாராது வந்த மாமணி போல ஏதாவது ஒன்றிரண்டு பட சான்சுகள் வந்தது. வந்ததும் சப்பாணிப் பிள்ளையைப் போல ஆரம்பகட்டத்திலே நின்னு போச்சே. நமக்கு வர்ற படமெல்லாமே இப்படியே நிக்கிற படமாவா வரணும். என்னடா கடவுளே! என்று யோசனையில் ஆழ்ந்துவிட்டேன்.
இந்த நேரம்தான் கவிஞர் கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை ஆரம்பித்தார். அதில் எனக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் என்பதற்காக ‘காமெடி’ நடிகையாக கவிஞர் கண்ணதாசன் ஒப்பந்தம் செய்தார். சிரிப்பு நடிகையாக இதுவரையில் நடித்ததே இல்லை. திடீரென்று கவிஞர் இந்த வேடத்தில் என்னைப் போட்டதும் நான் பயந்துவிட்டேன். “இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே…” என்றேன்.
அதற்கு கவிஞர் கண்ணதாசன், பரவாயில்லை நடி எல்லாம் சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும் என்று ஆறுதலும் தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார்.
அன்று அவர் சிரிப்பு நடிகையாக அறிமுகப்படுத்திய வாழ்க்கை இன்றளவும் நிலைத்து நிற்கிறது. ஒருக்கால் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு எனது திரைஉலக வாழ்க்கை முற்றுப்பெற்றிருக்கும்.
கதாநாயகிகள் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் ஒதுங்கி விடுகிறார்கள். நகைச்சுவைக்கு காலவரையறையே கிடையாது. அதுவரைக்கும் எனக்கு இந்த சிரிப்பு நடிகையானதில் பெரும் மகிழ்ச்சி.
‘மாலையிட்ட மங்கை’ படத்தை முதன்முதல் நானும் அம்மாவும் பாரகன் தியேட்டரில் ‘கியூ’வில் நின்று டிக்கட் வாங்கிப் பார்த்தோம்.
என் உருவத்தை திரையில் பார்த்ததும் என்னையறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. எவ்வளவோ கட்டுப்படுத்த முனைந்தும் முடியவில்லை.
நான்தான் இப்படி அம்மா எப்படி என்று திரும்பிப் பார்த்தேன். அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.
இதற்கு என்ன காரணம்? எட்ட முடியாத திரையுலகில் நமக்கும் ஒர் இடம் கிடைத்துவிட்டதே என்று கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சிதான் காரணம் என்று கருதுகிறேன்.
இந்தக்காலத்தில் எப்படியெப்படியோ படங்களில் சுலபமாக இடம் பிடித்து விடுகிறார்கள். அதேபோல் மிகச் சுலபமாகவே திரையுலகை விட்டும் வெளியேறிவிடுகிறார்கள்.
ஏன் இது?
திறமையால் முன்னுக்கு வருபவர்கள் குறைவாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடிப்பதற்கு இடம் பிடித்துக் கொள்பவர்கள் அதிகமாகவும் இருப்பது தான். அவர்களுக்கு தமது திறமையில் நம்பிக்கை இருப்பதில்லை. அப்போதைய கவர்ச்சியையே மூலதனமாகக் கொண்டு வருகிறார்கள்.
இந்தக் கவர்ச்சிக்குள்ள காலம் மிகக்குறைவு. திறமைக்கு காலவரையே கிடையாது.
நடிக்க வந்த பிறகாவது திறமையை வளர்த்துக் கொள்ள முயல வேண்டாமா? அதுவும் பல பேருக்குப் புரிவதில்லை.
கஷ்டம் இல்லாமல் வருகிறார்கள். கஷ்டம் இல்லாமல் போய் விடுகிறார்கள்.
இரண்டு முக்கிய பெரும்தலைவர்களோடு நடித்த பெருமை எனக்குண்டு. என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதவை அவை.
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் நான் கதாநாயகி இந்துமதியாக நடித்தேன்.
இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எனது நடிப்பைப்பற்றி அண்ணா அவர்கள் பாராட்டிச் சொன்னார்கள்.
முரசொலி சொர்ணம் எழுதிய ‘விடை கொடு தாயே’ நாடகத்தில் நான்தான் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன். இந்த நாடகத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை தலைமை வகித்து என் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.
ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடந்த நாடகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து எனக்குப் படப்பிடிப்பு இருந்துவந்ததால் என்னால் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.
அதனால், அந்த நாடகத்திற்கு வேறு ஒரு நடிகையைக் கதாநாயகியாகப் போட்டு நாடகத்தை நடத்தினார்கள். இந்த நாடகத்திற்கும் அண்ணா தலைமை வகித்துள்ளார். வழக்கம்போல் நாடகத்தைப் பாராட்டிப் பேசிவிட்டு அண்ணா வீட்டுக்குப் போகும்போது சொர்ணத்திடம் “நாளைக்கு என்னை வீட்டில் வந்துபார்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாள் சொர்ணம் அண்ணாவை வீட்டில் போய் சந்தித்துள்ளார்.
அவரிடம் அண்ணா “நாடகத்தினால்தான் நடிகர் – நடிகைகளுக்குப் பெருமை” என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் – நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது! இனிமேல் மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே” என்று சென்னாராம்.
இதை பிறகு சொர்ணமே என்னிடம் வந்து சொன்னார்.
இது என் வாழ்க்கையில் பெற முடியாத பாராட்டு என்று எண்ணியெண்ணி மகிழ்கிறேன்.
இதை அப்படியே என்னிடம் வந்து சொன்ன சொர்ணத்தின் பெருந்தன்மையை நான் பெரிதும் போற்றுகிறேன்.
தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய ‘உதயசூரியன்’ நாடகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடவை நடித்திருக்கிறேன். இதில் கலைஞர் கதாநாயகன். நான் கதாநாயகி. இதன் அரங்கேற்றம் தேவகோட்டை தி.மு. கழக மாநாட்டில் நடந்தது. கலைஞரிடம் நல்ல பேர் வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
இந்த நாடகத்தில் நடித்தபோது ‘அன்பு எங்கே’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் இரவு தேவகோட்டை நாடகம். ஆனால் முதல் நாள் இரவு வரை படப்பிடிப்பு இருந்தது. நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன் நாடகம் பற்றி. முக்கியமானதாலும், இறுதிக்கட்ட காட்சி என்பதாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
படப்பிடிப்பு முடிந்ததும் எனக்காக ஒரு தனி காரை ஏற்பாடு செய்து மறுநாள் நாடகத்திற்கு தேவகோட்டைக்குக் கொண்டுபோய் விட்டார்கள். இது அந்தக்காலத்தில் சாதாரணமாக நடந்துவிட முடியாதது.
அண்ணாவைப் போலவே கலைஞர் அவர்களும் சொர்ணத்தின் ‘விடைகொடு தாயே’ நாடகத்திற்கு தலைமை வகித்திருக்கிறார்.
ஒருமுறை இந்த நாடகம் கல்லலில் நடந்தது. கலைஞர் தலைமை வகித்தார்.
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் “நம்ம மாவட்டத்துப்பொண்ணு ரொம்ப நல்லா நடிக்குது” என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞருக்கு இந்தப் பேச்ச கேட்டிருக்கு.
தனது பாராட்டுரையில் இதைக் குறிப்பிட்ட கலைஞர் அவர்கள், “மனோரமாவின் முன்னோர்கள் எங்கள் (தஞ்சை) மாவட்டத்துக்காரர்கள். அதை நினைக்கும்போது எனக்கும் பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். இந்தப் பாராட்டுரையும் என்றும் என் நினைவில் நிலைத்திருப்பதாகும்!
5.என் அம்மா, எது எப்படி இருந்தாலும் முதலில் தொழிலுக்குத் தான் முதல் இடம் தருவார் உறுதியாக இருப்பார். வாழ்க்கைக்கு ஆதாரமானது தொழில். அதை விட்டுவிட்டு நம்மைப்பற்றியே அக்கறை எடுத்துக் கொண்டுவிட்டால் பிறகு நம்மீது அக்கறை செலுத்த ஆளே இல்லாமல் போய்விடும்.
இந்த உணர்வு என் ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று. இதற்கு ஒரு நிகழ்ச்சியே உதாரணமாக உள்ளது.
‘பாலும் பழமும்’ படத்தின் ஒரு முக்கியமான காட்சி. அந்தப் படத்தில் எனக்கு ஒரு சிறு வேடம் தான். இருந்தாலும் அந்தக் காட்சியில் நானும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள் மற்றும் சிவாஜி, பாலையா, எஸ்.வி. சுப்பையா, சரோஜா தேவி, செளகார் ஜானகி, சுந்தரிபாய், சி.டி. ராஜகாந்தம், ஏ. கருணாநிதி ஆகிய பெரிய நட்சத்திரங்கள் வரும் கட்டம் அது.
முதல் நாள் இரவு படுக்கப் போகும்போது கடுமையாக காய்ச்சல் அடித்தது எனக்கு. காலையில் எழுந்தால் நெருப்பு போல் உடம்பு கொதிக்க முகம், கை தவிர உடம்பு முழுவதும் அம்மை கண்டிருந்தது.
என்ன செய்வது?
இதற்குள் படப்பிடிப்புக்குக் கூட்டிப்போக கார் வந்துவிட்டது. உடனே அம்மா “எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம். பேசாமல் புறப்படு. போவோம்” என்றார். நானும் புறப்பட்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டேன்.
மேக்கப்மேன் ரங்கசாமி மேக்கப் போட முகத்தில் கையை வைத்தவர் பட்டென்று கையை எடுத்துக் கொண்டு, “என்னம்மா இது, முகத்தில் கையை வைக்க முடியலை. தீ மாதிரி சுடுது எப்படி மேக்கப் போடுறது?” என்றார்.
இதற்குள் என் அம்மா, சுந்தரிபாய் அக்காவிடம் எனது உடல்நிலையைப் பற்றிக் கூறவே, அவர் பதறிப் போய் ஓடிவந்து மேக்கப்மேனை வெளியே போகச் சொல்லிவிட்டு. எனது ஜாக்கெட்டைக் கழற்றிப் பார்த்தவர் பதறிப் போய் விட்டார்.
உடம்பு முழுவதும் அம்மைக் கொப்புளங்கள்!
உடனே சுந்தரிபாய் அக்கா தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொல்ல அவர் வந்து பார்த்துவிட்டு, “ஏம்மா இதை முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. நாங்க என்ன ராட்சதர்களா? மனிதர்கள்தானே!” என்று வருத்தப்பட்டவர், உடனே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எவ்வளவோ சிரமங்கள் – துயரங்கள் – இடையூறுகளுக்கு மத்தியிலும் தொழிலையும், தயாரிப்பாளர்களையும் நாங்கள் மதித்தோம்; தயாரிப்பாளர்களின் சிரமங்களையும் அனுசரித்துப் போனோம்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களிடையே இந்த அளவு பக்குவ நிலை இருக்கிறதா என்றால் அது சர்க்சைக்குரியதாகக்கூட இல்லை, கேள்விக்குரியதாக இருக்கிறது என்கிறார்கள்.
இது இருதரப்பினரையும் துண்டித்து அழித்துவிடக் கூடிய ஒன்றாகும். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திற்கு அடுத்து, ஏ.பி.என். அவர்களின் ‘கண்காட்சி’ படத்தின் இறுதிகட்ட காட்சி நடந்து வந்தபோது நான் யூனிட்டி கிளப் என்ற நாடகமன்றத்தின் நாடகங்களில் நடித்து வந்தேன். என்னுடன் ஆர். முத்துராமன் வி. கோபாலகிருஷ்ணன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் நடித்தார்கள்.
சித்ராலயா கோபுவின் ‘காசே தான் கடவுளடா’ நாடகம் அப்போ நடந்து வந்தது. இந்த நாடகம் பொங்கல் தினத்தில் பம்பாய் சண்முகானந்த சபாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாவே மற்றவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள். ‘கண்காட்சி’ படத்தினால் அவர்களோடு என்னால் போக முடியவில்லை. ஆகவே எனக்கும், என் மகன் பூபதிக்கும் சேர்த்து இரண்டு விமான டிக்கட்டுகள் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள்.
அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நான் அன்று மாலை 6 மணிக்கு பம்பாயில் நாடகம். ஐதரபாத் வந்து வேறு ஒரு விமானத்திற்கு மாறவேண்டும் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்.
எனக்கு இதற்குமுன் விமானம் பயண அனுபவம் இல்லை படிப்பும் போதாது மொழி தெரியாதவர்களிடையே பிரயாணம். ஒரே குழப்பத்தோடு விமானம் ஏறினோம்.
நல்ல வேளையாக நான் ஏறிய விமானத்தில் பிரபல இசைமேதை எம்.எல். வசந்தகுமாரியும் வந்தார். அவருக்கு ஐதராபாத்தில் கச்சேரி என்று சொன்னார்.
அவரை மெதுவாக பழக்கப்படுத்திக் கொண்டேன். ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்திருக்கிறார். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது. என் நிலைமையை அவரிடம் சொன்னேன்.
அவர் ஐதராபாத் வந்ததும் என்னுடன் ஒருவரை அனுப்பி எனது டிக்கட்டை மாற்றி பம்பாய் விமானத்தில் அனப்பி வைத்துவிட்டு வரும்படி கூறினார்.
நாங்கள் போன நேரம், அன்று புறப்பட வேண்டிய காலை பம்பாய் விமானம் ரத்தாகிவிட்டதாகச் சொல்லி விட்டார்கள். மாலை 4 மணிக்குத்தான் இதை கேள்விப்பட்டதும் எம். எஸ். வி. என்னிடம், “நீ தனியாக எங்கே எவ்வளவு நேரம் இருக்கப்போறே? என்னோடு வந்து மாலையில் போகலாம் வா” என்றார். சரி என்று அவருடன் போய் விட்டேன்.
இதற்கிடையில் நான் குறித்த நேரத்தில் பம்பாய் வராததால் அங்கிருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு போன் போட்டு என்னைப்பற்றி விசாரித்து இருக்கிறார்கள்.
மாலையில் எம்.எல். வசந்தகுமாரி என்னுடன் ஒருவரை துணைக்கு அனுப்பி பம்பாய்க்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
விமான நிலையம் வந்தால் 4 மணிக்குப் புறப்பட வேண்டிய ஃபிளைட் மாலை 6 மணிக்குத்தான் புறப்படும் என்றார்கள். 6 மணிக்கு பம்பாய் நாடகம். நான் ஐதராபாத்தில் எனக்கு மயக்கமே வரும் போலாகியது.
மறுபடியும் விமான நிலையத்திற்கு பம்பாயிலிருந்து தொலைபேசித் தொடர்பு கொண்டு என்னைக் கூப்பிட்டார்கள். என்னிடம், நாடகத்திற்கு வேண்டிய சாமான்களை மாத்திரம் ஒரு பையில் போட்டு கையில் எடுத்துக்கொண்டு மற்றவைகளை ‘லக்கேஜில்’ போட்டு அதற்கான கார்டை பம்பாய் விமான நிலையத்தில் தந்து விடுமாறும், ஆள் வரும் என்றும் கூறினார்கள்.
மாலை 6 மணிக்கு விமானம் புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பம்பாய் போய்ச் சேர்ந்தது. இதற்குள் நான் விமானத்திலேயே மேக்கப் போட்டுக்கொண்டு விட்டேன்.
விமானம் போய் நிற்கவும், என்ன ஏற்பாடு – எப்படிச் செய்தார்களோ, விமானத்தையொட்டி ஒரு கார் வந்து என்னை ஏற்றிக்கொண்டு 8.30 மணிக்கு நாடக அரங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது.
அடுத்த சில நிமிடங்களில் நாடகம் தொடங்கியது.
இதில் என்ன விசேஷம் என்றால், அந்த இரண்டரை மணி நேரமும் அந்த ரசிகப் பெருமக்கள் மிக அமைதியாக அரங்கத்திற்குள் உட்கார்ந்து இருந்ததுதான்.
அன்று நாடகம் மிக அருமையாக அமைந்துவிட்டது. பார்த்தவர்களுக்குப் பரம சந்தோஷம்.
இந்த நிகழ்ச்சியின்போது நான் பட்ட சஞ்சலத்தைப் போல வேறு எப்போதுமே பட்டதில்லை!
6.ஆரம்ப கால திரை உலக வாழ்க்கையில் எனக்கு அதிகப் படங்கள் வரக் காரணமாக இருந்தது ‘அபலை அஞ்சுகம்’ படம் என்று கூறலாம். அதில் மெட்ராஸ்காரியாக வேடம் ஏற்று நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றேன். குறிப்பாக தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களோடு எல்லாம் நடித்துவிட்டேன்.
ஆனால், என்னை நல்லதொரு குணச்சித்திர நடிகை என மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ தான்.
இந்தப் படத்தில் மிகவும் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் நன்றாக நடிப்பேன் என்று எதை ஆதாரமாக வைத்து ‘ஜில்ஜில் ரமாமணி’யாக என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் எனக்குப் புரியாத ஒன்றாகவே இருக்கிறது.
இதில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு முழுக் காரணமும் அண்ணன் ஏ.பி. என். தான்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது, தனியாக என்னிடம் ‘மற்ற நடிகர் நடிகைகளைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதே. அவர்கள் எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் எல்லாரையும்விட நீதான் பெரிய ஆள் என்பது போல நெனைச்சுக்கிட்டு நடி, நல்ல பேர் வாங்கணும்” என்று உற்சாகப்படுத்தி விட்டார்.
அவரைப் போல இனி யாரால் தனித்திறமைமிக்க படங்களை உருவாக்க முடியும்?
எனக்கு மனக் கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஏ.பி.என். அவர்களிடம் போய் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தால் எல்லாக் கவலையும் மறைந்துவிடும். அந்த அளவிற்கு ஆறுதலும் அறிவுரைகளும் சொல்லுவார். மிக அற்புதக் கலைத்திறன் படைத்த மனிதர் அவர்!
எனது வாழ்க்கையில் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் உசிலம் பட்டி நிகழ்ச்சியைப் போல் என்னைத் திகைக்க வைத்தது வேறு எதுவும் இல்லை.
உசிலம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் கல்லூரி வளர்ச்சி நிதிக்காக எனது நாடகம் நடைபெறவிருந்தது.
நாங்கள் மதுரையில் தங்கியிருந்து மேக்கப் போட்டுக்கொண்டு மாலை நாலரை மணிக்குக் காரில் புறப்பட்டோ ம். புறப்பட்ட அந்த விநாடியில் இருந்து பயங்கர மழை கொட்டத் தொடங்கியது. எதிரில் இருக்கும் எதுவுமே தெரியவில்லை வழியும் சரியாகப் புலப்படவில்லை.
எனக்குப் பெரும் கவலையாகிவிட்டது. ஏனென்றால் நாடகம் திறந்த வெளி அரங்கில் நடைபெறுவதாக இருக்கிறது. எப்படி நாடகம் நடக்கும்?
எப்படியோ ஒருவழியாக உசிலம்பட்டிக்குள் எங்கள் கார் போய்விட்டது.
என்ன ஆச்சரியம்!
உசிலம்பட்டியைச் சுற்றி ஒரு வளையம் போட்டது போல சுத்தமான ஒரு பொட்டுத் துளி மழைகூடப் பெய்யவில்லை. திரும்பிப் பார்த்தால் பின்னால் மழை கொட்டிக் கொண்டிருந்கிறது.
நாடகம் நடக்கும் இடத்தில் ஆண்களும் பெண்களும் பல ஆயிரம் பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம் மேலிட்டது.
நாடக முடிவில், நாடகத்திற்குத் தலைமை வகித்த மூக்கையாத் தேவர் என்னையும் பேசச் சொன்னார். நான் மழையைப்பற்றிச் சொல்லிவிட்டு, வானத்தில் காயும் முழு நிலவைச் சுட்டிக் காட்டி, “தேவர் நம்மையெல்லாம் அந்த முழு நிலவு வடிவத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்கிறார். அதனால்தான் இந்த நாடகம் எந்த இடையூறும் இல்லாமல் இன்று நடந்து முடிந்திருக்கிறது” என்றேன்.
இப்படி நான் சொல்லி முடித்ததும் உட்கார்ந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களும் ஏககாலத்தில் ‘குலவை’யிடத் தொடங்கி விட்டார்கள். அதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.
உடனே பக்கத்தில் இருந்த மூக்கையாத் தேவர், “பயப்படாதீர்கள் அவர்கள் எல்லாம் நீங்கள் கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள் என்றார். அதன்பிறகுதான் எனக்கு உயிரும் வந்தது மகிழ்ச்சியும்” ஏற்பட்டது.
டைரக்டர் ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் உள்ள பீச்சிடாமிற்கு போயிருந்தோம். இந்தச் சந்தர்பத்தில் நான் மார்டன் தியோட்டர்ஸின் ‘யாருக்குச் சொந்தம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதுவரையில் ஒரு முறைக் கூட டி.ஆர். சுந்தரம் அவர்களைப் பார்த்ததே இல்லை செட்டிற்கு விஸ்வநாதன் என்பவர்தான் வருவார்.
எனக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம். என்னை ஒரு முறைகூட நேரில் பார்த்திராமல், நான் நடித்த ஓரிரு ‘குளோசப்’ காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு என்னைக் கதாநாயகி என்றால் திடீர் என்று எப்படியிருக்கும்!
நான் கதாநாயகியாக நடித்த பட ஆரம்ப விழாவிற்கு முன்னதாக விஸ்வநாதன் இறந்து விட்டார். அதனால் டி.ஆர்.எஸ். அவர்களே நேரடியாக செட்டிற்கு வரத் தொடங்கினார்.
முதல் நாள் படப்பிடிப்பு எனக்கு டி.ஆர்.எஸ். யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவரைப்போலவே வேறு இரண்டு பேர்களும் செட்டிற்குள் இருந்தார்கள். அதனால் அவர்கள் மூன்று பேரில் யார் ஒரிஜினல் டி.ஆர்.எஸ். என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு முதன் முதலில் அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டு, படப்பிடிப்பில் பங்கேற்கச் சொன்னார் அம்மா அதேபோல செய்தேன்.
அது மாடர்ன் தியேட்டர்ஸின் 97-வது படம். அடுத்த 98, 99-வது படங்களிலும் நானே கதாநாயகியாக நடிக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால் அதற்குள் இயற்கை டி.ஆர். எஸ். அவர்களைப் பறித்துக்கொண்டுவிட்டது.
எத்தனையோ பேர் ‘நானா கதாநாயகி’ என்று வியப்பும் மறுப்பும் தெரிவித்த போதும் கூட எந்தவித சலனத்திற்கும் இடம் தராமல், யாரையும் பொருட்படுத்தாமல் என்னை நடிக்க வைத்தார்.
நான் தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை அறியாதவள் ஆனால், அவரிடம் பணியாற்றிய அந்த இரண்டு மாத காலத்தில் அந்த தந்தை பாசத்தை முழுமையாக உணர்ந்தேன். ஆனால் என்ன கொடுமை அந்தப் பாச உணர்வை என்னால் நடித்துப் பெற முடியாமல் போய்விட்டது.
அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுது அழுது 106 டிகிரி காய்ச்சலே வந்து விட்டது மரணச் செய்தி கேட்ட போது என் இருதயம் இரண்டாக பிளந்துவிட்டது போல் இருந்தது.
அந்தப் படத்தில் வாங்கிய சம்பளப் பணம் முழுவதையும் குருவாயூர் கோவிலுக்கு லட்ச தீபம் ஏற்றியும், பழனி, திருப்பதி கோவில்களில் கல்யாண உற்சவம், அபிஷேகம் செய்யவும், மாடர்ன் தியோட்டர்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் வேட்டி – சேலை வாங்கித் தந்தும் செலவிட்டேன். ஒரு காசுகூட என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
7.நான் கஷ்டத்திலே பிறந்து கஷ்டத்திலேயே வளர்ந்தவள். அதனால் மற்றவர்களின் கஷ்டங்களைத் தெளிவாகப் புரிந்து அதற்கேற்பவே நடந்த வந்திருக்கிறேன்.
1000-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நான், இதுவரையில் எந்தத் தயாரிப்பாளரையும் கசக்கிப் பிழிந்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது இல்லை.
எனக்கு வரவேண்டிய பணத்திற்காக எந்தத் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என் சர்வீஸ்கூட இல்லை நான் வாங்கும் சம்பளம்!
முன்பெல்லாம் நட்சத்திரங்களிடையே கடும் போட்டி இருந்தது.
எதில்?
தொழிலில்!
அவரைவிட நாம் சிறப்பாக நடித்துப் பெயர் வாங்க வேண்டும் என்ற வேகம் இருந்தது.
ஆனால் இப்போது?
அந்த நடிகை ஒரு லட்சம் வாங்குகிறாரா? அப்படியானால் எனக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கொடு – என்கின்ற ‘ரேட்’ போட்டிதான் இருக்கிறதே தவிர, நடிப்பிலே போட்டியைக் காண முடியவில்லை.
இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்க வந்து விடலாம். எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால், அந்தக் காலத்தில் ஒரு வார்த்தை பேசவேண்டுமானாலும் அதற்குத் தகுதி, திறமை பார்ப்பார்கள். பரீட்சை வைப்பார்கள்!
நமது தொழிலில் நீடித்து இருக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களை அனுசரித்துப் போகவேண்டும். சிறு பையன்கூட நாளைக்கு உதவி செய்யக் கூடியவனாகவும் இருக்கலாம்; குறிப்பாக தயாரிப்பாளர்களைப் பகைத்துக் கொள்வது போன்ற பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.
‘வீர அபிமன்யூ’ என்று ஒரு படம் இதில் எஸ்.எம். குமரேசன் என்பவர் கதாநாயகன். மிக அருமையான நடிகர் அற்புதமாகப் பாடக் கூடியவர். அந்தப் படத்தில் மிக நன்றாக நடித்திருந்தார்.
அந்தப் படத்திற்குப் பிறகு எஸ்.எம். குமரேசனால் திரையுலகில் பிரகாசிக்க முடியவில்லை. என்ன காரணம்? ‘வீர அபிமன்யூ’ படத் தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த அனாவசியத் தொல்லைகளும் இடையூறுகளும்தான்.
இவரது தொல்லையைக் கண்ட அன்றைய தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடிப் பேசி ‘இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் எஸ்.எம். குமரேசனை வைத்துப் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.
போதுமா!
இதுபோன்ற சில விஷயங்களை நான் எனது சின்ன வயதில் கேள்விப் பட்டதினால் மிக ஜாக்கிரதையாகவே நடந்து வந்துள்ளேன். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஒரு பாடமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.
மேலே கண்ட நிகழ்ச்சியைப் போன்று நானே நேரிடையாகக் கண்ட ஒரு காட்சியையும் உங்களுக்குச் சொல்லி வைக்கலாம் என்று விரும்புகிறேன்.
ஈரோடுக்குப் பக்கத்தில ஊஞ்சலூர் என்ற ஊர் 55 மைலில் உள்ளது. இந்த ஊருக்கு ஒரு படப்பிடிப்பிற்காகப் போனோம். நாங்கள் நாலைந்து போர்தான் நட்சத்திரங்கள்.
அதனால் அதே ஊரில் தயாரிப்பாளர் தனது நண்பர்களின் வீடுகளில் எங்களைத் தங்க வைத்திருந்தார். நாங்கள் அங்கேயே தங்கிக் கொண்டோ ம்.
ஆனால், கதாநாயகி மட்டும் “நான், ‘ஏர்கண்டிஷன்’ இருந்தால் தான் தங்குவேன். இங்கேயெல்லாம் தங்க முடியாது” என்று பிடிவாதம் பிடித்து ஈராட்டில் ஒரு லாட்ஜில் ரூம் போடச் செய்து தினசரி அங்கு போய் வந்து கொண்டிருந்தார்.
இந்த லட்சணத்தில் அவர் உயரத்திற்கு ஒரு நாற்காலியை வேறு தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்.
இதனால் என்ன லாபம்? மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் முடிந்து போய்ச் சேர எப்படியும் 9 மணியாகும். பிறகு காலையில்7 மணிக்கெல்லாம் ஷூட்டிங்கில் இருக்க வேண்டும். இடைப்பட்ட சில மணி நேரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதா?
இத்தனைக்கும் அப்போது அந்த நடிகை நடித்து ஒரேயொரு படம் தான் வந்திருந்தது. இந்தப் படம் இன்னும் வரவில்லை.
இதன் விளைவு? இப்போது அந்த நடிகை யார் என்பதே மறந்துபோச்சு!
ஒரு சமயம் நல்ல புகழோடு இருந்த வில்லன் நடிகர் டி.கே. ராமச்சந்திரன் என்னிடம் சொன்னார். “நீ பணத்தை எண்ணாதே, படத்தை எண்ணு” என்று.
இதைத்தான் நான் மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் என் மகனுக்கும் சொல்வேன்.
8.எத்தனையோ நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நான், என்னுடைய வாழ்க்கையில் என் அடிமனத்தில் ஆனந்தப் பெருவெள்ளத்தைப் பாய்ச்சிய நிகழ்ச்சியொன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சி தாய்மை உணர்வு என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி! எனது மகன் பூபதியை பல இடங்களுக்கும் ‘என்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறேனே தவிர, அவனை எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளச் செய்ததில்லை.
அவனுக்குப் பாட வரும் என்பதும் எனக்குத் தெரியாது. அதனால் மலேசியா சென்றிருந்தபொழுது தானும் பாடுவதாகக் கேட்டான். நான் மறுத்துவிட்டேன்.
பின்னால் கும்பகோணத்தில் ஒரு முறை ஜெய்சங்கரின் ‘ஜெய் ஜாய் நைட்’ நடந்தது. அதற்கு நாங்கள் போயிருந்தோம்.
நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. நான் மேடையின் பின்புறம் ஏதோ வேலையாக இருந்தேன். திடீர் என்று மைக்கில் ஒரு இனிமையான புதுக் குரலிசை ஒலிக்கத் தொடங்கியது.
நான் ஆச்சரியப்பட்டு அருகில் இருந்தவரிடம் “யார் புதுக் குரலா இருக்கே? நல்லா பாடறாங்களே!” என்று கேட்டேன்.
“நம்ம பூபதிதான் பாடுது” என்று பதில் கிடைத்ததும் எனக்குச் சற்று நேரம் ஒன்றுமே ஓடவில்லை. ஆனந்தத்தில் என்னையே நான் மறந்து இருந்து விட்டேன்.
என்னுடைய இரண்டாவது வயதில் நான் பாடியதைக் கேட்டு என் அம்மா எத்தகைய உணர்வை – தாய்மை இன்பத்தைப் பெற்றிருப்பார் என்பதை இப்போது நான் அந்தத் தாயின் இடத்தில் இருந்து உணர்ந்தேன். அந்த உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் தருவது சிரமம்!
அதன் பிறகுதான் ‘மியூசிரமா’வை ஆரம்பித்தேன்.
நட்சத்திரங்களாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நிலையாக இந்தத் துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வர வேண்டும்.
அப்போதுதான் எதையும் எதிர் கொள்ள முடியும். சகித்துச் சமாளிக்க முடியும்.
ஏதோ வந்தோம், பணம் சேர்த்தோம், போனோம் என்ற பாணியில் இருக்கக் கூடாது.
மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல கலைஞரின் லட்சியமாக இருக்க வேண்டும்.
தயாரிப்பாளர்களிடம் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளவும் வேண்டும்; அதே நேரத்தில் சில தயாரிப்பாளர்களிடம் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
எந்தத் தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அதில் முழுதாக ஏமாந்து விடக்கூடாது.
சில தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தில் நஷ்டம், அடுத்த படத்தில் சேர்த்துத் தருகிறேன் என்பார்கள். அடுத்த படத்தில் அதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்!
இன்னும் சிலர் வரவே மாட்டார்கள்!
வேறு சிலரோ கண்டும் காணாதது மாதிரிப் போய் விடுவார்கள்!
சில படங்களில் எனக்கு குறைவாகக் கொடுக்கிறார்கள் என்பதற்காக எனது நடிப்பை அதற்கு ஏற்ப குறைத்துக்கொள்ள மாட்டேன். அதிக சம்பளம் கொடுக்கிற இடத்தில் அதிகமாக நடிப்போம் என்றும் நடிக்க மாட்டேன். பிறகு நடிப்பைப் பிடித்துக்கொள்ள காமிரா கொள்ளாமல் வழிந்துவிடும்!
எந்தச் சந்தர்ப்பத்திலும் எவ்வளவு பிரஷராக இருந்தாலும் எனது தொழிலை நான் முழு மன நிறைவோடு – செம்மையாகச் செய்துவிட்டுத்தான் போவேன்.
நான் படத்துடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் மாலையில் நாடகம் இருக்கும். நான் காலையில் போனதுமே என்னைச் சற்று முன்னதாகவே அனுப்பிவிடும்படி டைரக்டர்களிடம் கேட்டுக் கொள்வேன்.
ஆனால், கடைசி நேரத்தில் ஒரு சீனை முடித்துவிட்டுப் போக வேண்டியது ஏற்படும். அப்போது மாலை 5.45 மணிகூட ஆகிவிடும். 6 மணிக்கு நாடகம் இருக்கும்.
அப்போது மிகுந்த டென்ஷனாக இருக்கும் என்றாலும், காமிரா முன் நிற்கும்போது நிதானமாகவும் முழுமையாகவும் எனது பாகத்தை நடித்து முடித்துவிட்டுத்தான் செல்வேன்.
அதற்குப் பிறகு பரபரப்புடன் சென்று நாடகத்தில் கலந்து கொள்வேன். இதற்கிடையில் மேக்கப் வேறு மாற்றிப் போட வேண்டியது இருக்கும்!
நாங்கள் – குறிப்பாக சிரிப்பு நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் மற்றவர்களைச் சிரிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்யைல் எப்போதாவது சிரித்துக் கொள்கிறேன்.
சர்க்கஸில் கோமாளி பலர் அதி தீவிரத்துடன் செய்யும் வேலைகளை எல்லாம் மிக அனாவசியமாகச் செய்து ரசிகர்களை மகிழ்விப்பான். சில நேரம் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல கீழே விழுந்தும் சிரிக்க வைப்பான்.
ஆனால் உண்மையில் கோமாளி தான் சர்க்கஸில் மற்ற எல்லாக் கலைஞர்களையும்விட ஓரளவு எல்லா விளையாட்டுக்களையும் சிறப்பாகக் கற்று வைத்திருப்பான். அவன் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் நிலையிலும் இருப்பான். ஆனால், அவனைக் கூப்பிடுவதோ கோமாளி என்று கேலியாக!
அதே நிலைதான் சிரிப்பு நட்சத்திரங்களின் நிலையும், திரை உலகில்.
எல்லாவித நடிப்பும் கைவரப் பெற்றவர்கள்தான் சிரிப்பு நடிப்பில் பிரகாசிக்க முடியும்.
என்றாலும், பெரும்பாலும் மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்களின் அடித்தளத்தில் சோகமே மிகுந்து கிடக்கும்.
இதற்கு ராஜ்கபூரின் ‘மேரே நாம் ஜோக்கர்’ இந்திப் படத்தில் வரும் கோமாளி ராஜ்கபூரின் கதாபாத்திரத்தை உதாரணம் காட்டலாம். மேடையில் சிரிக்க வைக்கும் அவர் மேடைக்குப் பின்னால் கண்ணீரில் மிதப்பார்.
அதுதான் எனது வாழ்க்கையில் அகப்பகுதியும்!
9.1976 தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட நேரம். ஒரு நாள் மத்திய அரசு வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து சோதனை போட வேண்டும் என்று கூறி வீடு முழுவதையும் ஒரு நாள் முழுவதும் சோதனை போட்டார்கள்
எனக்கு ஏன், எதற்கு என்ற விபரம் எதுவும் தெரியாது. யாருடைய தூண்டுதலோ அல்லது யாருடைய ஆசையை நிறைவேற்றுவதற்கோ தெரியவில்லை. ஏராளமான அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் ஒரு அடி இடம் கூட விடாமல் சோதனை போட்டார்கள்!
நான் ஆயிரம் திரைப்படங்கள் வரை நடித்திருக்கிறேன். அதனால் பெருந்தொகை கருப்புப் பணம் என்னிடம் குவிந்திருக்கிறது என்று தான் யாரையும் கணக்குப் போட வைக்கும்.
ஆனால் அவர்களுக்குத் தெரியாது, ரசிகப் பெருமக்களின் உள்ளங்களையே நான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறேனே தவிர, பணத்தையல்ல என்பது!
நான் ஏற்கெனவே இலைமறைகாயாக கோடிட்டுக் காட்டியிருக்கிறேன் – பணம் தராமல் தலைமறைவாகிவிடும் தயாரிப்பாளர்களைப் பற்றியும், பாதி சம்பளத்தைக் கொடுத்து மீதியை அடுத்த படத்தில் சேர்த்துத் தந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு பிறகு கண்டும் காணாமல் போய்விடும் தயாரிப்பாளர்களைப்பற்றியும்.
எனது திரைப்பட உலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் சந்திப்புகளே அதிகம் பேசியபடி நடந்து கொள்ளும் நல்ல தயாரிப்பாளர்கள் இல்லை என்பது இதற்கு அர்த்தம் அல்ல முன்னவர்கள் அதிகம் என்பதே பொருள்!
நான் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறேன் ஒரு படத்திலாவது முழுமையாக ஒரு முப்பதாயிரம் ரூபாயைப் பெற்று விட முடியுமா என்று என்னத்தே…. எனக்கு வர வர சந்தேகமாக இருக்கிறது!
இப்படிப்பட்ட நிலையில் எப்படி என்னிடம் லட்சக்கணக்கில் பணத்தை எதிர்பார்க்கமுடியும்!
சரி; வந்துவிட்டார்கள் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.
எவ்வளவோ துருவித் துருவிப் பார்த்தும் எந்த உருப்படியான எதிர்பார்ப்பும் கிடைக்காமல் போகவே அதிகாரிகள் சலித்துப் போய் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
அவர்கள் போகும்போது என் மகனை அழைத்து, “தம்பி! உங்க அம்மாவை இனிமேலாவது, எங்களுக்காகவாவது கொஞ்சம் கூடப் பணம் வாங்கச் சொல்லப்பா!” என்று கூறிவிட்டுப் போனார்கள்!
எனக்கும் ஆசைதான் என் வீடு சோதனையிடப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு மதிப்பளித்து கொஞ்சமாவது மகிழ்ச்சி தரவேண்டும் என்று! ஆனால் பல தயாரிப்பாளர்களின் கண்ணீரிலும் வயிற்றெரிச்சலிலும்தானே அந்த மகிழ்ச்சியை அளிக்க முடியும்? அது தேவைதானா?
இப்போது வரும் இளைய தலைமுறைக் கதாநாயகிகளிடம் ஒரு நல்ல பண்பு இருப்பதைப் பார்க்கிறேன். ‘நான் கதாநாயகி மற்றவர்கள் எல்லாம் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள்’ என்கின்ற ஒருவித அலட்சிய மனப்பான்மை இவர்களிடம் இல்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் அந்தக் காலத்தில் இந்த மனோபாவம் ஒருசில கதாநாயகிகளிடம் அருவருக்கத்தக்க அளவிற்குக் குடிகொண்டிருந்ததை நான் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் சில கதாநாயகிகள் மற்ற நடிகைகளை அடிமைகளைப் போல நடத்தியிருக்கிறார்கள்!
குறிப்பாக சிரிப்பு நடிகை என்றால் அவர்களுக்குக் கிள்ளுக் கீரை என்ற நினைப்பு.
ஒரு சமயம் என்னுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த ஒரு கதாநாயகி, நான் தலையில் அழகான பூவும் அதற்கு ஏற்றாற் போல் கழுத்தில் நகையும் அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு, தயாரிப்பாளரைக் கூப்பிட்டு “மனோரமா தலையில் உள்ள பூவையும் கழுத்தில் உள்ள நகையையும் எடுத்துவிடச் சொல்லுங்கள். இல்லா விட்டால் இனி உங்கள் படத்திற்கு என் கால்ஷீட் கிடைக்காது” என்று பயமுறுத்தியிருக்கிறார். பிறகு அப்படியே நான் பூவை எடுத்துவிட்டு நடித்தேன்!
இத்தனைக்கும் எனது கதாபாத்திரத்திற்கு அது அவசியம் எனத் தரப்பட்டவைகள்தான். இப்போது அந்தக் கதாநாயகி தமிழ் நாட்டில் இல்லை.
10.இப்படி எத்தனையோ கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கி சகித்துக்கொண்டு என் தொழிலில் முன்னேறி வரக் காரணம் நான் தெய்வமாக மதித்து வழிபடும் என் அம்மாதான் என்று நம்புகிறேன். அவரது ஆறுதலும் தேறுதலும் தான் என்னை தன்னம்பிக்கை கொள்ள வைத்து, தொழிலில் நிலைக்க வைத்தது!
ஒருமுறை தேவர் பிலிம்ஸின் படம் ஒன்றின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. இதில் ஒரு குறிப்பிட்ட கதாநாயகியின் கடுகடுப்புக்கும் சிடுசிடுப்புக்கும் ஈடுகொடுத்து நடித்துக் கொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் கதாநாயகியும் நானும் குதிரையில் வரும் காட்சி வேறு படமாக்கப்ட்டது. அதிலும் மற்றோர் தொல்லை கதாநாயகிக்குத் தரப்பட்ட குதிரை கிழட்டுக் குதிரை, வேகமாக ஓடாது. எனக்குத் தரப்பட்டிருந்த குதிரையோ சுறுசுறுப்பான குட்டிக் குதிரை. இது கதாநாயகியின் வயிற்றெரிச்சலை இரட்டிப்பாக்கியிருந்தது. அதனால் எனக்கு என்று தனி ‘ஷாட்’ அல்லது குளோசப் எடுப்பதை அந்தக் கதாநாயகி தடுத்துக்கொண்டேயிருந்தார்.
அதனால் மறுநாள் காலையில் அந்தக் கதாநாயகி வருவதற்குள் என் சம்பந்தப்பட்ட சில தனிக் காட்சிகளைப் படமாக்கிவிட டைரக்டர் ஏற்பாடு செய்து அதன்படி மறுநாள் படப்பிடிப்பு நடை பெற்றது. நான் குதிரையில் வருவதை ‘ரிவர்ஸ்’ (பின்னாலேயே போவது) ஷாட்டாக எடுத்தார்கள். அதற்காக நான் ஒரு திருப்ப மறைவில் இருந்து குதிரையில் வேகமாக வரவேண்டும் என்றார்கள். எனக்கு அதற்குமுன் குதிரை சவாரி செய்து பழக்கமே கிடையாது. குதிரையோ படு சுறுசுறுப்பாக இருக்கிறது. வருவது வரட்டும் என்று துணிந்துவிட்டேன்.
குதிரைக்காரர் மறைவு வரை பிடித்து வந்து, படப்பிடிப்பு ரெடியானதும் அதன் காதில் ஏதோ சொல்லிவிட்டு காமிராவில் தென்பட்டுவிடாமல் தன்னை மறைத்துக் கொண்டார். அவ்வளவுதான்! குதிரை எடுத்தது பாருங்கள் ஓட்டம் சிட்டுக்குருவியாட்டம்!
எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் குதிரையின் கடிவாளத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது! வேகமாக வந்த குதிரை குறிப்பிட்ட திருப்பத்தில் திரும்பியதுதான் தாமதம், அப்படியே நான்கு கால்களும் வாரியடித்தது போல கால் பிசகி கீழே விழுந்து விட்டது. அதோடு சேர்த்து நானும் தூக்கி எறியப்பட்டேன். ஆனால் அப்போதும் குதிரையின் கடிவாளம் என் கையில் பலமாகச் சிக்கியிருந்தது.
ஆனால் அடுத்த கணம், விழுந்த குதிரை அதே வேகத்தில் எழுந்து ஓடத் தொடங்கி விட்டது. அது எழுந்த வேகம் – என் கையில் இருந்த கடிவாளம் இழுபட்ட வேகத்தில் எனது இடது முன்கை எலும்பு பட்டென்று முறிந்துவிட்டது. உடம்பு எங்கும் ரத்தக் காயங்கள்.
உடனே என்னை என் தாயாருடன் காரில் ஏற்றி கடும் மழையில் சென்னைக்கு டாக்டர் நடராசனிடம் அனுப்பி வைத்தார்கள், கைக்கும் காயங்களுக்கும் சிகிச்சை பெற. எனது கை எலும்பு முறிந்துவிட்ட சுயநினைவே எனக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது தான் தெரியும். உடனே, “அம்மா என் கை முறிஞ்சு போச்சும்மா” என்றேன் அழுகையுடன். அப்போது என் அம்மா, “பயப்படாதே பாப்பா! அண்ணன் (தேவர்) காப்பாத்துவார்” என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.
நாங்கள் சென்னைக்கு வந்து சேருவதற்கு முன்னதாக என்ன நினைத்தார்களோ, டாக்டர் நடராசனிடம் கூட்டிப்போவதற்கு பதில் புத்தூர் கட்டுப் போடும்படி தேவர் பிலிம்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளார்கள் ஊட்டியில் இருந்து! நாங்கள் வந்ததும் வராததுமாக புத்தூர் கட்டுப் போடுபவர்களை தேவர் பிலிம்சார் அழைத்து வந்து கையில் கட்டுப் போடச் செய்தனர். பயங்கரமான வேதனையில் துடிக்கவிட்டு ஒரு வழியாக அவர்கள் தங்கள் கட்டுப் போடும் வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கோ கடுமையான வலியும் மயக்கமும் ஏற்பட்டு பாதி சுயநினைவில் தேவர் பிலிம்ஸிலேயே படுத்துவிட்டேன்.
சிறிது நேரம் சென்றிருக்கும் படீர் என்று ஒரு சத்தம் கேட்டது போல் இருந்தது. ஒன்று சேர்ந்திருந்த எலும்பு மறுபடியும் விலகிக் கொண்டு கை வளைந்துகொண்டுவிட்டது. எனக்கோ தாளமுடியாத வேதனை உடனே டாக்டர் நடராசனிடம் போவது என்று மறுபடியும் தீர்மானித்தோம். அதற்கிடையில் ஒரு ‘எக்ஸ் ரே’ எடுத்துக்கொள்வது நல்லது என்று அதையும் எடுத்துக்கொண்டு போனோம். அவர் புத்தூர் கட்டுப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, “நீங்கள் என்னை நம்பி வருவதாக இருந்தால் ஊட்டியில் இருந்து நேராக வரவேண்டியது தானே. புத்தூர் கட்டைப் போட்டுக்கொண்டு ‘எக்ஸ் ரே’ யை வேறே எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களே. இது மாட்டு வண்டிக்கு பெட்ரோல் போட்டு ஓட்டுவது போல இருக்கு” என்று கூறி “என்னால் பார்க்க முடியாது, போய் வாங்க” என்று கூறிவிட்டார்.
அதைக் கேட்டதும் என் அம்மா கதறி அழுது அவர் காலைப் பிடித்துக்கொண்டு, “எப்படியாவது என் மகளைக் காப்பாற்றுங்க டாக்டர்” என்று கெஞ்சினார்.
அதனால் மனம் மாறிய டாக்டர் பிறகு எனக்கு வைத்தியம் செய்தார். இதில் பல நாட்கள் தள்ளிப் போய்விட்டது. அப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நேரம், பல படாதிபதிகள் தங்கள் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல் தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கோ குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற துடிப்பு.
அதனால் அங்குள்ளவர்கள் சிலரும் வேறு பல முக்கியஸ்தர்களும் கூடிப் பேசி என்னை நீக்கிவிட்டு வேறு நடிகையைப் போட்டு படத்தை முடித்துவிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
அப்போது தேவர் பிலிம்ஸ் மாரிமுத்து என்பவரும் தேவர் அவர்களும்தான், அது கூடாது, குணமான பிறகே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம். நம்மைப் போலவே வேறு பல தயாரிப்பாளர்களும்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நமது படத்தினால் பாதிக்கப்பட்ட அவரை நாமே மாற்றி விட்டால் பிறகு மற்ற தயாரிப்பாளர்களும் அதையே செய்யத் தொடங்கிவிடுவார்கள். பிறகு அந்தப் பெண்ணின் படவுலக வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும். அதை அந்த முருகனே ஏற்கமாட்டான் என்று கூறியிருக்கிறார்கள்! அன்று மட்டும் மற்றவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டு தேவரும், மாரிமுத்துவும் செய்திருந்தால் இப்போது என்னுடைய கலை உலகப் பயணம் எப்படியிருந்திருக்கும் என்பதைப் பல நேரங்களில் எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்!
11.எனது சிறு பிராயத்தில் வறுமை வாட்டியெடுத்தது என்றால், திரை உலகில் மற்றவர்களின் அலட்சியமும் அவமானச் சொற்களும் துன்புறுத்தின
என்பதைச் சொல்லியிருக்கிறேன்.
அதற்கு மற்றோர் உதாரணத்தையும் உங்களிடம் சொல்லி வைப்பதில் குற்றமில்லை என்று கருதுகிறேன்.
‘பவநாராயணா’ என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தமிழில் ஒரு படத்தைத் தயாரித்தார். அது ஒரு ‘ராஜா-ராணி’க் கதைப் படம். அதில்
வழக்கமான கதாபாத்திரம் தான் எனக்கு. ஆனால், ஒரு வித்தியாசம், யாருக்கும் பயப்படாத வீராங்கனை.
இந்தப் படத்தில் என்னுடன் ஒரு சிரிப்பு நடிகர் நடித்தார். கொஞ்சம் படபடவென்று பேசச்கூடியவர்.
ஒரு காட்சியில் அந்த சிரிப்பு நடிகரும் மற்றும் மூன்று சிப்பாய்களும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர நான் ஒரு கதாயுதத்தை எடுத்துக்
கொண்டு அவர்களை எதிர்த்துத் தாக்கவேண்டும்.
இதற்கான ஒத்திகை நடந்தது. அப்போது ஒருசேர நான்கு ஆண்களைப் பார்த்ததும் நான் சற்றுத் திகைத்துப் பிறகு எதிர்ப்பது போல் செய்தேன்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த, மறைந்த கதை வசனகர்த்தா அய்யாப்பிள்ளை ஒத்திகை முடிந்து படமாக்கப்படுவதற்கு முன்பாக என்னிடம் வந்து,
“அம்மா, நீங்கள் யாருக்குமே பயப்படாத பெரிய வீராங்கனை. எத்தனை போர்கள் ஒன்றாக வந்தாலும் பயப்பட மாட்டீர்கள். அதனால் திகைப்பது
போல் செய்ய வேண்டாம்” என்றார். நானும் சரி என்று தலையாட்டினேன்.
அப்போது ரிகர்சலுக்குப்பிறகு கதவைச் சாத்திக்கொண்டு தனது இடத்திற்குப் போன அந்த சிரிப்பு நடிகர் நாங்கள் பேசிக்கொண்டதை சற்றே
கதவைத் திறந்தபடி பார்த்தார். உடனே, என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை, அய்யாப்பிள்ளை அப்பால் போனதும், படக்கென்று முழுக்
கதவையும் திறந்த அந்த நடிகர் அருகில் நின்ற என்னிடம், “என்ன சொல்லிவிட்டப்போனார் அய்யாப்பிள்ளை? என்னை வார்ரதுக்கு யோசனை
சொல்லிக் கொடுத்தாரா? என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது. இந்த (19)63-ம் ஆண்டு என் ‘டைம்’!” என்று கூறிவிட்டுப் படக்கென்று கதவைச்
சாத்திக்கொண்டுவிட்டார்.
அவரது இந்தத் திடீர் சொல்லடி எனக்குப் பெருத்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தி விட்டது. இதற்குள் “ஓகே. டேக்” என்று
டைரக்டர் குரல் கொடுத்து விட்டார். ‘கிளாப்’ பை வேறு அடித்து விட்டார்கள். எனக்கோ ரிகர்சலில் செய்தது எதுவும் மனதில் நிற்கவில்லை.
திகைப்பில் அல்லாடிக் கொண்டு நின்றேன். இந்த லட்சணத்தில் கண்ணீர் வேறு முட்டிக்கொண்டு வந்துவிட்டது. வேடமோ வீராங்கனை!
எப்படியோ தட்டுத்தடுமாறி அந்தக் காட்சியில் நடித்து முடித்துவிட்டேன். நல்லவேளை, வசனம் இல்லை. ‘ஆக்ஷன்’ மட்டும்தான். அதனால்
தப்பித்தேன்.
காட்சி முடிந்ததும் எனக்குள் எழுந்த அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. செட்டிற்கு வெளியே இருந்த என் அம்மாவிடம் வந்து ஒரு முறை
அழுது தீர்த்த பிறகுதான் கொஞ்சம் அமைதி அடைந்தேன்.
நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்ட எனது தாயார் எனக்குத் தேறுதல் சொல்லி சமாதானப்படுத்தி விட்டுச் சொன்னார். “கவலைப்படாதே
பாப்பா, இந்த 63-ம் ஆண்டு மட்டும்தான் அவர் டைம்!” என்றார்.
12.என்ன மந்திரச் சொல்லோ அது தெரியவில்லை; திரையுலகில் அந்த 63-ம் ஆண்டிற்குப் பிறகு அந்த சிரிப்பு நடிகரைப் படங்களில் பார்க்க முடியாமற் போய்விட்டது.
இதேபோல் இன்னும் ஒரு உதாசீனம் – பங்கப்படுத்திய நிகழ்ச்சி!
பிரபல நடிகர், மறைந்த கே.ஆர். ராமசாமி அவர்களின் நாடக மன்றத்திலும், மறைந்த சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமி நாடக மன்றத்திலும் ஒரே சமயத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது.
திருநெல்வேலி கண்காட்சியில் ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற நாடகத்தை நடத்துவதற்கு பிரண்டு ராமசாமி தேதி வாங்கிவிட்டார்.
இதே நேரத்தில், அதற்கு முதல் நாள் கே.ஆர்.ஆரின் ‘வேலைக்காரி’ நாடகம் சேத்தியாதோப்பை அடுத்த ‘சங்கரன்பந்தலில்’ நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் என்னிடம் தேதி வாங்கியவர் பிரண்டு ராமசாமிதான். இதனால் கே.ஆர்.ஆரின் நாடகத்தில் நடிக்க நான் ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டேன்.
ஆனால், கே.ஆர்.ஆர். “நீ இல்லாமல் நாடகம் இல்லை. எப்படியும் நீ வரவேண்டும். உன்னை பிரண்டு ராமசாமி குழுவினர் வரும் திருநெல்வேலி ரயிலிலேயே அவர்கள் பெட்டியில் ஏற்றிவிட ஏற்பாடு செய்கிறேன். அதற்கு ஏற்றாற்போல் முன்கூட்டியே நாடகத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார்.
இதை பிரண்ட் ராமசாமியிடம் சொல்லி எப்படியும் நாடகத்திற்கு வந்துவிடுகிறேன் என்று கூறினேன். அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.
என்னைப் போலவே கலாவதி என்ற நடிகையும் இதே இரண்டு நாடக மன்றங்களிலும் நடித்துக் கொண்டிருந்ததால் அவரும் அவரது தந்தையும் எங்களோடு கே.ஆர்.ஆர். நாடகத்தில் நடித்துவிட்டு வருவதாக முடிவாயிற்று.
அதன்படி நாங்கள் முதல் நாளே சங்கரன்பந்தல் போய்விட்டோ ம். இரவு ஒன்பது மணிக்கு நாடகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே நாங்கள் மேக்கப் போட்டுத் தயாராக இருந்தோம். ஆனால், என்ன காரணத்தினாலோ கே.ஆர்.ஆர். வரத் தாமதமாகி, இரவு 11 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். அதன் பிறகு அவசர அவசரமாக நாடகத்தைத் தொடங்கி வேகமாக நடத்தி முடித்தோம்.
நாடகம் முடிந்ததோ இல்லையோ, அவசரமாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டோ ம். கே.ஆர்.ஆர். தனது காரைத் தந்து டிரைவரிடம் எங்களை மாயவரத்தில் நெல்லை ரயிலில் ஏற்றிவிடுமாறு அனுப்பி வைத்தார்.
நாங்கள் புறப்பட்ட நேரம் பலத்த மழை பிடித்துக் கொண்டது. எப்படியோ கஷ்டப்பட்டு மாயவரம் வந்தால் நெல்லை ரயில் போய் அரை மணி நேரமாகிவிட்டது என்றார்கள்.
உடனே அங்கிருந்து தஞ்சாவூரில் ரயிலைப் பிடித்து விடலாம் என்று காரைக் கிளப்பினோம். மறுநாள் இரவு நாடகம், எப்படியும் நெல்லை போயே ஆகவேண்டும்.
பலத்த மழை ஒருபுறம் சுழற்றி அடிக்க காரின் முன் லைட்டுகள் கெட்டுப்போய் வழி தெரியாமல் தத்தளிக்க வேண்டியதாயிற்று. ஒரு இடத்தில் ரோடு என்று நினைத்து கார் ஒரு குட்டைக்குள்ளேயே போய்விட்டது!
13.இதனால் கலாவதியின் அப்பா கையில் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து முன் சீட்டில் இருந்தபடியே வெளியே நீட்டிப் பிடிக்கச் செய்து அந்த வெளிச்சத்திலேயே நீண்ட நேரத்திற்குப் பிறகு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். எங்களுக்காக ரயில் காத்து நிற்குமா? இங்கே இருந்தும் போய்விட்டது! எப்படியும் ரயிலைப் பிடித்து நெல்லை போயே தீரவேண்டும், மறு நாள் நாடகத்தில் நடித்தே தீரவேண்டும்!
திருச்சி போனால் நெல்லை ரயிலை எப்படியும் பிடித்து விடலாம் என்றார்கள். உடனே கார் திருச்சியை நோக்கி நடக்கத் தொடங்கியது. ஆமாம்! அந்தக் கார் ஓடும் நிலையைத் தாண்டி நடக்கும் நிலைக்கு வந்துவிட்டது! ரிப்பேர்!
ஏற்கனவே மழையால் அடிபட்டுப் போய் இருந்த நாங்கள் இப்போது காரைத் தள்ளிக்கொண்டு திருச்சி போகவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோ ம்.
அப்படி இப்படி என்று அதிகாலையில் திருச்சி வந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அரக்கப் பரக்க ஓடியபடி நாங்கள் வந்தால் ‘டாடா’ சொல்லும்படி கூறிவிட்டு ரயில் போய்விட்டிருந்தது.
அப்போது அங்கே ஒருவர், ‘மதுரைக்குப் போனால் அங்கே பிற்பகல் 2 மணிக்கு நெல்லைக்கு ஒரு ரயில் போகிறது அதைப் பிடித்துவிட்டால் எப்படியும் நாடகத்திற்குப் போய்ச் சேர்ந்து விடலாம்’ என்றார்.
உடனே, காரை சரிபார்த்து திருப்பி எடுத்துக்கொண்டு போகுமாறு டிரைவரிடம் சொல்லிவிட்டு, நாலு பேரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினோம். எப்படியோ மதுரைக்கு ஒரு பஸ் கிடைத்தது!
அப்போது என் தாயார் என்னிடம், “நமக்கு ஏதாவது விபத்து நடந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறோம் என்ற தகவலை பிரண்ட் ராமசாமி கேட்காதவரைக்கும் என்ன பாடுபட்டாவது நாம் திருநெல்வேலி எக்ஸிபிஷன் நாடகத் தியேட்டருக்குள் போய் விழுந்து விடவேண்டும். அது வரைக்கும் எங்கேயும் ஒரு நிமிஷம் கூட தாமதிக்கக் கூடாது” என்றார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும், தொழிலின் மீதும் அவருக்கு அவ்வளவு உறுதியும் பக்தியும் இருந்தது!
காலையில் திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தோம். மறுபடியும் ஓட்டமும் நடையுமாக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று நெல்லை போகும் 2 மணி ரயிலில் போய் விழுந்தோம். அப்போதுதான் பாதி உயிர் வந்தது!
அந்த ரயில் மெதுவாகப் புறப்பட்டு ஒருவழியாக எட்டு மணி அளவில் நெல்லையைச் சென்றடைந்தது.
நாங்கள் அவசரக் கோலத்தில் கண்காட்சி மைதான நாடகத் தியேட்டருக்குள் ஓடினோம்! இதற்கிடையில் நாங்கள் வராததால் பிரண்ட் ராமசாமி, எனக்குப் பதிலாக அதே நாடகத்தில் சிறு வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த வேறொரு நடிகையை நடிக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
அந்த நடிகைக்கோ ஒரே திகில் காரணம், என்னுடைய வேடம் அவ்வளவு பெரியது; நிறைய வசனங்கள். அதனால் திடீர் என்று எப்படிச் செய்யப் போகிறோமோ என்ற தொழில் பயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
14.என்னைக் கண்டதும் பெரிய கண்டம் தப்பியது போல ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். எனக்கோ கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
அதற்குப்பிறகு வேக வேகமாக மேக்கப் போட்டுக்கொண்டு நாடகத்தை ஆரம்பித்தோம். சிறப்பான முறையில் நடந்தது நாடகம்.
நாடகம் முடிந்த பிறகுதான் எங்களுக்கும் வயிறு என்று உண்டு என்ற நினைவே வந்தது. இத்தனைக்கும் முதல் நாள் மதியம் சாப்பிட்டது!
நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பதைப்பற்றி எந்த அனுதாபமும் பிரண்ட் ராமசாமிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி லேட்டாகி வந்துவிட்டீர்களே என்ற குறைதான் அவருக்குப் பெரியதாகத் தோன்றியது. இதன் முழுமையான தோற்றத்தை அவர் சென்னையில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இதே நாடகம் பிறகு ஒரு நாள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது நாடகத்திற்குத் தலைமை வகித்த பெரியவர், என்னைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்துவிட்டு அமர்ந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துப் பேச வந்த பிரண்ட் ராமசாமி, “தலைவர் அவர்கள் இங்கே மனோரமாவை மிகப் பிரமாதமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ஆனால், இதே மனோரமாவிற்குத் தொழிலில் போதிய அக்கறை இல்லை என்பது உங்களுக்குத் தெரியாது. சென்ற முறை, திருநெல்வேலி நாடகத்திற்கு இவர் வராமல் காலை வாரி விட்டு விட்டார்!” என்று ஒரு பயங்கரக் குற்றச்சாட்டைத் தூக்கிப்போட்டு விட்டார். சிரமத்தோடு நான் போய் நடித்ததைப் பற்றிக் காட்டிக்கொள்ளவேயில்லை! இதைக் கேட்டு நானும் என் அம்மாவும் பெரிதும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தோம் அதற்குப் பிறகு அந்த நாடகத்தில் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். பிரண்ட் ராமசாமியும், மற்றவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியபோதும் மனம் உடைந்துபோன நான் பின்னால் நடிக்க முடியாது என்று உறுதியாக இருந்துவிட்டேன்!
அவ்வளவு கஷ்டப்பட்டுப் போயும் ஒன்றும் பயன் இன்றிப் போனபிறகு வேறு என்ன நாடகம் வேண்டிக் கிடக்கிறது! இத்தனை அவமதிப்புகளுக்கு மத்தியில் மனப்புண்ணுக்கு தைலம் தடவியது போல் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் பொதுவாகவே நமது நடிகைகளுக்கு ஒரு பெரும் ஆசை நிரந்தமாகவே உண்டு. இதில் போட்டாப் போட்டிகளும் ஏற்படுவதுண்டு என்றுகூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், எனக்கு மட்டும் என்னவோ இந்த ஆசையோ – எண்ணமோ எப்போதுமே ஏற்பட்டதில்லை. அதைப் பற்றி அக்கறைப்பட்டது இல்லை. ஒரு நாள் மதிய வேளை. நான் வீட்டில் உள் வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் பூபதி படித்து கொண்டிருந்தவன் ஓடி வந்து “இந்திப் படவுலக சிரிப்பு நடிகர் மெகமூத் வந்திருக்கிறாராம்; வரலாமா என்று டிரைவர் கேட்கிறார்” என்றான்.
எனக்கு ஒரே வியப்பு! நம்மைத் தேடி நம் வீட்டிற்கு பிரபலமான இந்திப் படவுலக சிரிப்பு நடிகர் வந்திருக்கிறாரா! ஆச்சரியம்தான் என்றவாறு டிரைவரிடம், “எதுக்கு வந்திருக்கிறார்?” என்று கேட்டேன்.
டிரைவர், “ஏதோ பட விஷயமாக இருக்கும் போலிருக்கு” என்றார்.
“சரி; வரச் சொல்லுங்க” என்று சொல்லியனுப்பினேன்.
சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி மெகமூத் வந்தார். உட்கார வைத்தோம். சரி; வரச் சொல்லியாகி விட்டது. உட்கார்ந்தும் விட்டார். எப்படிப் பேசுவது? மொழிப் பிரச்சனை தலையில் இடித்தது.
எனக்கு இந்தியோ ஆங்கிலமோ தெரியாது. அவருக்குத் தமிழ் தெரியாது. ஊமையர் ஜாடைதான் உதவிக்கு வருமோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என் மகன் பூபதி தக்க சமயத்தில் உதவிக்கு வந்தான். அவனைப் படிக்க வைத்ததின் முதல் பயணை அன்று பெற்று மகிழ்ந்தேன்!
மெகமூத் ஆங்கிலத்தில் சொல்வதை எனக்குத் தமிழிலும், நான் தமிழில் சொல்வதை அவருக்கு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துச் சொன்னான்.
மொழிப் பிரச்சனை தீர்ந்தது. இடையிடையே மெகமூத் ஓரிரு தமிழ் வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைப் போக்கினார் மெகமூத்.
மெகமூத் சின்னஞ்சிறு வயதில் ஓடி விளையாடிய இடம் நமது சென்னை மாநகரின் மீர்சாகிப்பேட்டையாம். தமிழ்நாட்டுக்காரர்களான அவர்கள் பம்பாயில் தொழிலை முன்னிட்டு நிரந்தரமாகத் தங்க நேரிட்டு விட்டதான்! நீண்ட காலம் வட இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் தமிழ் மொழி மறந்துவிட்டது! மெகமூத் தமிழ் நாட்டுக்காரர் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தான் ஒரு இந்திப் படம் எடுக்க இருப்பதாகவும், அதில் நான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டார்.
எனக்கு இந்தி தெரியாதே என்று மறுத்தேன். ஆனால், மெகமூத் அவர்கள் “நீங்கள் நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை எடுப்பேன். இல்லாவிட்டால் கைவிட்டு விடுவேன்” என்றார்.
ஒருவாறு நடிக்கச் சம்மதித்தேன். அதற்காக தனியாக ஒரு இந்தி வாத்தியாரை வைத்து இந்தி படித்தேன்.
15.படம் பற்றி பேசி முடித்ததும் அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, தென்பகுதி தமிழ்ப் பெண்ணைப் போல் சேலை கட்டி காட்டச் சொன்னார். அப்படிக் கட்டிக் காண்பித்ததும். நடித்தால் நீங்களே நடிக்க வேண்டும் என்றார் மெகமூத்.
பம்பாயில் ஷூட்டிங் நடந்தபோது மெகமூத்தின் குடும்பப் பெண்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அன்பானவர்கள். அவர்கள் குடும்பப் பெண்கள் அனைவருக்குமே கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிகிறது. என்னிடம் அவர்கள் எல்லாம் அந்த மழலைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஒரு தனி இன்பம் தோன்றும்.
அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியாகக் கலந்து விட்டிருந்தேன். அது ஒரு மகிழ்ச்சியான காலம்.
ஷூட்டிங் முடிந்ததும் நானேதான் எனது வசனங்களையும் டப்பிங் பேச வேண்டும் என்றார் மெகமூத்.
அதேபோல் ஒரே நாளில் 90 ‘லூப்’களை பேசி முடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். அதுதான் ‘குன்வாரா பாப்’ என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை)
அந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சென்னை டி.வி.யில் கூட இரண்டு முறை காட்டினார்கள்!
தமிழ் நட்சத்திர மண்டலத்திற்குள் எனக்குக் கிடைத்த இடைஞ்சல்கள், மனச் சஞ்சலங்களுக்கு மத்தியில் இது ஒரு இனிமையான நினைவாக என்னுள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது.
எனது நாடக உலக ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிக் கூறியிருக்கிறேன். ஆனால், நாடகக் கம்பெனிகளில் நடைபெறும் பல சுவையான தில்லு முல்லுகளைப் பற்றிச் சொல்லவில்லை. அதில் இரண்டைக் கூறினால் உங்களுக்குப் படிக்க சுவையாக இருக்கும் என்பதற்காக இங்கே தருகிறேன்.
நான் வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நேரம் பரமக்குடியில் தொடர்ந்து நாடகம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது நாடகக் கம்பெனியின் முக்கிய நடிகை அவரை நான் ‘அக்கா’ என்றுதான் அழைப்பேன். சென்னைக்குப் போவதற்குத் தயாராகி விட்டார். நாடகக் கம்பெனியின் முக்கியஸ்தர்கள் பலவாறு தடுத்தும் சென்னைக்குப் போவதில் உறுதியாக இருந்தார் அவர்.
முதல் நாள் இரவு நாடகம் முடிந்ததும், மறுநாள் காலையில் சென்னைக்குப் புறப்படுவதற்கு பெட்டியில் சேலைகள், முக்கியமான பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து பூட்டி பெட்டியைத் தன் தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கினார்.
காலையில் கண் விழித்துப் பெட்டியைப் பார்த்தபோது பகீர் என்றது அவருக்கு! காரணம், அவரது உடமைகள் அனைத்தும் அடங்கிய அவரது பெட்டியை இரவு யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள்!
சென்னைக்குச் சென்று பிரபலமான நட்சத்திரமாக மின்னப் போகும் அவரது கனவுகள் எல்லாம் அந்தப் பெட்டியோடு போய்விட்டது. அதில் இன்னும் என்ன மோசம் என்றால், அன்றையபொழுதில் அவர் குளித்து விட்டுக் கட்டிக்கொள்ள மாற்றுப் புடவை கூட இல்லாமல் போனதுதான்! திருடன் யார் என்றே தெரியவில்லை!
16.அன்றைய தினம் நான்தான் பாஞ்சாலிக்குக் கண்ணன் உதவியது போல சேலை கொடுத்து உதவினேன். பிறகு கம்பெனியில் இருந்து அந்த நடிகைக்குத் தேவையான சேலைகளும் மற்ற பொருட்களும் வாங்கித் தரப்பட்டன.
இதன் மூலம் இப்போது நிலைமை என்ன நாடகக் கம்பெனியின் கடனாளியாகிவிட்ட அவர், தனது இஷ்டத்திற்கு உடனடியாக வெளியேற முடியாது. அதனால் அவர் சென்னை போகும் எண்ணத்தை அந்தப் பெட்டியோடு விட்டுவிட்டு தொடர்ந்து நாடகங்களில் நடிக்க வேண்டியதாயிற்று.
சில நாட்களுக்குப் பிறகு யார் திருடன் என்பது மெல்ல வெளியானது. அந்தக் காலத்தில் இப்போது நாடகங்களில் நடிப்பதற்கு நடிகைகள் கிடைப்பது போல் சாதாரணமாகக் கிடைக்க மாட்டார்கள். இதில் இருக்கும் ஓரிரு நடிகைகளும் போய்விட்டால் நாடகக் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான். இதனால், போகப் போவதாகக் கூறும் நடிகைகளைத் தடுத்து நிறுத்த இப்படி ஏதாவது குறுக்கு வழியில் வேலை செய்து போகவிடாமல் செய்துவிடுவார்கள்!
இதில் மற்றொரு வேடிக்கை ஊருக்குப் போக இருந்த நடிகையின் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்திருந்த மற்றோர் நடிகையின் துணிப்பையையும் தவறுதலாகச் சேர்த்து அபேஸ் செய்து விட்டார்கள்! பெட்டியைப் பறிகொடுத்த அந்த நடிகை யார் தெரியுமா? திருமதி. சுலோசனா முத்துராமன் அவர்கள்தான்! இதேபோல் எனக்கும் ஒருமறை டேக்காக் கொடுத்துவிட்டார்கள். சென்னையில் யாரிடமோ இருந்து சினிமாவில் நடிக்க உடனே புறப்பட்டு வரும்படி என் பெயருக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது. இந்தத் தந்தி நாடகக் கம்பெனி உரிமையாளர்கள் கையில் சிக்கிக்கொள்ளவே படித்துப் பார்த்துவிட்டு சுக்குநூறாக அதைக் கிழித்துப் போட்டுவிட்டார்கள். இதனால் தந்தி விவரம் எனக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று மாதம் கழித்து அவர்களாகக் கூடிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களில் ஒருவர் ‘மனோரமா தந்தியைப் பார்த்துப் போயிருந்தால் இப்போது சினிமாவில் நடித்துப் பேர் வாங்கிக் கொண்டிருக்கும்?’ என்று கூற மற்றவர்கள் அப்போது பிரபலமாக இருந்த ஒவ்வொரு நடிகரின் பெயரையும் சொல்லிச் சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது எனக்கு வந்த தந்தி விஷயம்.
அது அவர்களுக்கு ஜாலி – எனக்கோ வயிற்றெரிச்சல்! சினிமாவில் நமது உருவத்தைப் பார்த்துவிட மாட்டோ மா என்று தவம் இருந்த நேரத்தில் இப்படி ஒரு சதி! இதேபோன்று மற்றோர் நிகழ்ச்சி! எனக்கு ஒருமுறை கடுமையான காய்ச்சல் வந்து உடம்பு முழுவதும் அம்மையின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கி விட்டன அன்று மாலை நாடகம். என்னால் சரியாகக்கூட நடக்க முடியவில்லை. அதனால் அன்று நான் நடிக்க முடியாது என்றேன். அம்மை போட்டிருக்கு என்றேன்.
அன்று நான் நடிக்காவிட்டால் நாடகம் நடக்காது; வேறு நடிகையையும் உடனடியாகத் தேடிப் பிடிக்க முடியாது. அதனால் நாடகக் கம்பெனிக்காரர்கள், நாடகம் நடந்த ஊரில் இருந்து ஒருவரைக் கூட்டி வந்து என்னிடமும் என் அம்மாவிடம், எனக்கு வெறும் காய்ச்சல்தான்; அம்மை இல்லை என்று கூறும்படிச் சொல்லிக் கொடுத்து விட்டார்கள். அந்த மனிதரும் என்னைப் பார்த்து அப்படியே பாடத்தை ஒப்புவித்துப் போய்விட்டார். அதை நம்பி நானும் மேக்கப் போட்டு நடித்துவிட்டு மேக்கப்பைக் கலைத்தால், கன்னம் ரெண்டும் பயங்கரமாக வீங்கி உடம்பு முழுவதும் கொப்புளக் கோலங்கள்.
அன்று படுக்கையில் விழுந்த நான் எழுந்திருக்க ஒரு வாரம் ஆகியது. சில நிகழ்ச்சிகளை பிற்காலத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சி பூக்கும். அவை சோகம் சூழ்ந்தவை என்றாலும் கூட ஒரு உவகை பெருமிதம் தோன்றும். வேறு சில நிகழ்ச்சிகளை நாம் நினைக்கவே விரும்பமாட்டோ ம். அவைகளை எப்படியாவது மறந்து விட மாட்டோ மா என்ற தவிப்பில் இருப்போம். என்றாலும் அவைதான் நம் மன ஆழத்தில் இருந்துகொண்டு அடிக்கடி தலையை நீட்டிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீங்கள் படிக்கப் போவது!
சென்னை ஓட்டல் அட்லாண்டிக்கில் ‘கல்யாணராமன்’ படத்தில் 100வது நாள் விழா நடந்து கொண்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் கண்ணதாசன் “டைரக்டர் கே. பாலசந்தர் எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி பெருமைப் பெற்றிருக்கிறார். ஆனால் என்னால் அப்படி அறிமுகப்படுத்த முடியவில்லை. என்னால் மனோரமாவை மட்டும்தான் அறிமுகப்படுத்த முடிந்தது” என்று என்னைப் பற்றி சிலபல பாராட்டுக்களைக் கூறிவிட்டு அமர்ந்தார். அடுத்துப் பேசிய டைரக்டர் கே. பாலசந்தர், “கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை அறிமுகப்படுத்தியதும் – இரண்டும் சரி சமமானதுதான். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி மனோரமா” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப் போனார். போகும்போது என்னிடம் “மனோரமா, யார் யாருக்கோ பாராட்டு விமு நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து விழாக்கள் நடத்துகிறார்களா இல்லை. நான் அமெரிக்காவில் இருந்து வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் அவர் சொன்னபடி நடை பெறவில்லை. உயிரும் உடலுமாகச் சென்ற அவர் உடல் மட்டுமே திரும்பி வந்தது. இந்த துயர நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனையோ பேர் எனக்குப் பாராட்டு விழாக்கள் நடத்துவதற்காக அனுமதி கேட்டார்கள். நான் ஒரேயடியாக மறுத்துவிட்டேன். அத்துடன் அந்த நிகழ்ச்சியை மறந்துவிடலாம் என்று முயல்கிறேன் முடியவில்லை. 1983ம் ஆண்டில் ரொம்பவும் பிடிவாதமாக இருந்து கந்தன் ஆர்ட்ஸ், என்ற நாடக சபாக்காரர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை என்பதால் அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
விழா ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்த போது இலங்கையில் பயங்கர இனக்கலவரம் ஏற்பட்டது அதில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் – தாய்மார்கள் – குழந்தைகள் என்று வித்தியாசம் இல்லாமல் சிங்கள வெறியர்களால் கொன்று குவிக்கப்பட்டார்கள். தமிழ் இனமே ரத்தக்கண்ணீர் வடித்தது. இப்படிப்பட்ட கொடிய சூழ்நிலையில் எனக்கு விழா ஒரு கேடா? என்னிடம் மிகுந்த பாசமும் – அன்பும் – நட்பும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போது நான் எனக்கு விழா கொண்டாடிக் கொண்டால் நானும் ஒரு தமிழச்சி ஆவேனோ? என் அடி வயிறு பற்றி எரியும் போது எப்படி என்னால் பூபாள ராகம் பாட முடியும்?
அதனால், விழா நடத்த ஏற்பாடு செய்த அந்த நல்ல உள்ளத்தவர்களை அழைத்து “கண்டிப்பாக விழா நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் நான் வரமாட்டேன்” என்று கூறி நிறுத்திவிட்டேன். இப்படியே எனக்காக ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் நடைபெற முடியாமலேயே போய் விட்டது!
17.இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களுக்காக ஒரு விஷயம்:- நான் ஒரு படத்தில் அல்லது ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு; நான் தோன்றும் முதல் காட்சியிலேயே எனது கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் பின்வரும் காட்சிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்று பின் தள்ளிவிடமாட்டேன். எனது கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு குழப்பம் இருக்கக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.
இதில் தோற்றம் முக்கிய அம்சம். நாம் என்ன கதாபாத்திரம் ஏற்கிறோமோ அந்தக் கதாபாத்திரத்தின் உருவமாக நாம் மாறிவிட வேண்டும். உதாரணமாக நான் குறத்தியாகவோ – ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவோ – அல்லது பெரிய படாடோ பமுள்ள பணக்காரியாகவோ வருகிறேன் என்றால் அந்தக் கதாபாத்திரத் தோற்றத்தை ரசிகர்கள் கண்முன் நிறுத்த வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் – நாடக நிர்வாகிகள் என்னென்ன உபகரணங்கள் – உடைகள் தருகிறார்கள் என்பதோடு மேலும் என்னென்ன உபகரணங்களை அல்லது அணிகலன்களைச் சேர்த்து அணிந்துகொள்ள வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும். கூடுமானவரை நமது உருவ அமைப்பில் மாறுதல் செய்து கொண்டு சென்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
‘அவர்கள் இவைகளைத் தானே தந்தார்கள்’ என்றில்லாமல் ‘நடிப்பது நாம்’ என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். உருவத்தோற்றத்திற்கு நாம் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு கதாபாத்திரத்தின் சிறப்பு பளிச்சென்று வெளிப்படும். நமது நடிப்பும் நன்கு எடுபடும். ஆகவே, நடிப்புக்கு முன் கதாபாத்திரத் தோற்றத்தை ரசிகர்கள் மனதில் பதிய செய்வது நமது வெற்றிக்கு இன்றியமையாததாகும்.
ஒரு நட்சத்திரத்தின் நீண்ட கால திரை உலக வாழ்க்கைக்கும் புகழுக்கும் அடிப்படையாக அமைவது படவுலகமும் – ரசிகர்கள் உலகமும்! ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு மேற் கூறிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவையாகும். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும் நட்சத்திர வாழ்க்கை.
என் காதுபட சில நட்சத்திரங்கள், “எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனால் இந்த சினிமாக்காரர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்? ரசிகர்கள்தான் முக்கியம் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்டவர்களை இப்போது நான் மட்டுமல்ல, ரசிகர்களும் எங்கே? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகர் – நடிகைக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தால் அது அவர்கள் செய்த புண்ணியம்; அவர்களது திறமை!
ஆனால் எந்த ரசிகரும் தங்கள் நட்சத்திரத்தை மற்றவர்களைவிட தூக்கி நிறுத்துவதற்காக சினிமாப்படம் எடுக்க வருவதில்லை. ரசிகப் பெருமக்களிடம் நிலைக்க வைத்து வாழவைப்பவர்கள் திரைப்படவுலகினர்தான். எந்த ரசிகர்களும் ‘நாங்கள் இருக்கிறோம். நீங்கள் ஒழுங்காகப் படப் பிடிப்புக்குப் போகவேண்டியதில்லை’ என்று கூறுவதும் இல்லை. ‘தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நிறையப் படங்களில் சிறப்பாக நடித்திட வேண்டும்’ என்று தான் ஆசீர்வதிப்பார்கள்.
இதே போல் ‘எனக்கு நிறையத் தயாரிப்பாளர்கள் நடிக்கச் சான்ஸ் தருகிறார்கள். அதனால் ரசிகர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை’ என்று எந்தப் புத்திசாலியும் சொல்லமாட்டார்! ரசிகர்கள் ஆதரவு இல்லாவிட்டால் எந்தத் தயாரிப்பாளர் தேடி வந்து அல்ல – தேடி போனாலும் நடிக்கச் சந்தர்ப்பம் தரப்போகிறார்? அதுமாதிரியே தயாரிப்பாளர்கள் நடிக்கச் சந்தர்ப்பம் தராவிட்டால் எப்படி ரசிகர்களைப் பெற முடியும்? அதனால்தான் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு நடிகர் அல்லது நடிகையின் இரண்டு கண்களைப் போன்றவர்கள் என்று கருதுகிறேன். இதில் எதை இழந்தாலும் இழப்புத்தான் – சரிவுதான். ஆகவே ரசிகர்களையும் மதித்து நடக்க வேண்டும் தயாரிப்பாளர்களையும் திரை உலகத்தினரையும் மதித்து நடக்க மறந்துவிடவும் கூடாது. நல்லெண்ணத்தையும் நல்ல பெயரையும் இருதரப்பிலும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதோடு, காலத்திற்குக் காலம் மாறுபடும் ரசிகர்களின் ரசனையையும் புரிந்து மதித்து அதற்கு ஏற்ப நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பில் மாற்றங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் புது யுக்திகளையும் காட்டி நடிக்கவேண்டும். இதைப் புரிந்து செயல்படாத நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர்களையும் இழந்து, ரசிகர்களையும் இழந்து தவிக்க நேரிடும். குறிப்பாக பொறுப்புணர்ச்சியும் மரியாதை காட்டுதலும் முக்கியம் தேவை! நமக்கு (கலைஞர்களுக்கு) எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும். அவற்றை ஸ்டூடியோ வரை எடுத்துச் செல்லக் கூடாது!
என்னைப் பொறுத்தவரையில், எனக்கு எவ்வளவோ பிரச்சனைகள் தொல்லைகள் உண்டு. அவைகள் அனைத்தையும் வீட்டில் இருந்து ஷூட்டிங் புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறக்கும் வரைதான் என் மனதில் வைத்திருப்பேன். கார் கதவை திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரத்தின் குணத்திற்குரிய முழுக் கலைஞராகத்தான் உட்காருவேன். அத்தோடு வீட்டை மறந்து விடுவேன்.
ஸ்டூடியோவோ – படப்பிடிப்பு நடக்கும் எந்த இடமோ – அங்கே நான் கலைஞர்களோடு, தொழில்நுணுக்க மேதைகள் மற்றும் தொழிலாளர்களோடு ஐக்கியமாகி விடுவேன். மறுபடியும் வீட்டுக்குப் புறப்படும்போது தான் வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைப்பேன். தொழில் முன்னேற்றத்திற்கு இந்த மனப்பாங்கு மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். நான் யாரிடம் மரியாதையுடன் கூடிய அன்பும் பாசமும் செலுத்துகிறேனோ அவர்களோடு எல்லாம் என்னால் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பழக முடியாத துர்ப்பாக்கியசாலியாக இருந்திருப்பதை நினைத்து பல நேரங்களில் நான் தனிமையில் கண்ணீர் வடித்திருக்கிறேன்.
18.நாம் சென்று இருக்கும் காரியம் – இடம் – அதன் சுற்றுச் சூழ்நிலை – மற்றவர்களின் உணர்வுகள் – இவைகளை ஒருகணம் நினைவில் இருந்து நழுவிட விட்டுவிடும் பட்சத்தில் எத்தனை பெரிய மாறாத காயத்தை நம் மனதில் ஏற்படுத்திக்கொண்டு விடுகிறோம் என்பதை உணர்த்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட எண்ணுகிறேன். இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாகவும், என்னை பக்குவப்படுத்தியதாகவும் அமைந்து விட்ட ஒன்றாகும்.
1963-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.: தி.மு. கழகத் தலைவர் டாக்டர் கலைஞரின் குடும்பத்தோடு குடும்பமாக நானும் என் தாயாரும் ஒன்றிப்பழகியவர்கள். குறிப்பாக கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மமையார் மிகவும் அன்போடு பழகுவார்கள். இவர்கள் ஒருநாள் திடீரென்று இறந்துவிட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்தது. மிகுந்த வேதனையோடும் – பதட்டத்தோடும் கலைஞரின் வீட்டிற்கு ஓடினோம். பாசமழை பொழிந்து வந்த அந்தத் தாய், உணர்வு இல்லாத உடலாக அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் பொங்கிப் பொங்கி அழுதோம். எங்களுக்கு முன்னரே ஏராளமான பேர் அங்கே குழுமி இருந்தார்கள். அத்தனை பேரும் அன்றைக்கு அழுத அழுகை இன்றைக்கும் என் மனதில் அப்படியே இருக்கிற காட்சியாகும். கலைஞர் கீழே விழுந்து புரண்டு அழுது வேதனையால் துடித்த துடிப்பை என்னால் மறக்கவே முடியாது.
அதேபோல் முரசொலி மாறனையும் யாராலும் சமாதானப்படுத்தி இருக்க வைக்கவே முடியவில்லை. அதுமாதிரியே வந்தவர்கள் அத்தனை பேர்களுமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் வாய் விட்டு அழுது தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆண்களின் நிலையே இப்படியென்றால் பெண்களைப் பற்றிச் சொல்லவேண்டாம். அன்று கலைஞரின் அக்காமார்களும் அவரது துணைவியாரும், மற்றவர்களும் கதறிப் புலம்பியதுபோல் நான் வேறு எங்குமே பார்த்ததில்லை.
இப்படி எல்லோருமே புலம்பித் தவிக்கக் காரணம், அஞ்சுகம் அம்மையார், உறவினர் என்றோ, தம் பிள்ளைகள் என்றோ, நெருக்கமானவர்கள் என்றோ இல்லாமல் தனது வீட்டிற்கு வரும் அத்தனை பேர்களுடனும் தனது மடிப்பிள்ளைகளைப் போல பாசமும் அன்பும் கருணையும் காட்டிப் பழகியதுதான்.
அப்படிப்பட்ட அன்பான தாயின் இழப்பு அத்தனை பேர்களையும் நிலைகுலையச் செய்துவிட்டிருந்தது. அஞ்சுகம் அம்மையார் இறந்த போது பேரறிஞர் அண்ணா டெல்லியில் இருந்தார். இந்தச் செய்தியை அவருக்குச் சொல்ல டெலிபோன் செய்தார்கள். ஆனால் அதற்கிடையில் அண்ணா சென்னைக்கு ரயிலில் புறப்பட்டுவிட்டார். அதனால் அவருக்குத் தெரிவிக்க முடியாமற் போய்விட்டது.
எனவே, கலைஞர், அண்ணா வந்த பிறகுதான் உடல் அடக்கம் நடைபெற வேண்டும் என்று கூறிவிட்டார். ஆகவே அண்ணா அவர்களின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தோம்.
19.இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களில் சிலர் மறுநாள் வரும் எண்ணத்தில் போய்விட்டாகள். ஏராளமான பேர் அன்று இரவு அங்கேயே தங்கி விட்டார்கள். அப்படித் தங்கியவர்களில் நான், என் தாயார், முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்து, நடிகைகள் பண்டரிபாய், டி.ஏ. மதுரம் ஆகியோரும் உண்டு.
எங்களுக்குப் போக மனம் இல்லாததால் இரவில் அஞ்சுகம் அம்மையாரின் உடல் அருகேயே ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டோம். உடலின் மறுபக்கத்தில் கலைஞரின் பெரிய அக்கா, சின்ன அக்கா உட்பட குடும்பத்தினார் உட்கார்ந்து இருந்தார்கள்.
இரவு பத்து மணி இருக்கும் ஏறக்குறைய எல்லோரும் தூங்கிப் போய் விட்டார்கள். ஆண்கள் மூலைக்கு மூலை கூட்டம் கூட்டமாகப் படுத்து விட்டாகள் நல்ல அமைதி.
அப்போது வெளியே போயிருந்த டி.ஏ. மதுரம் நன்றாக வெற்றிலையைப் போட்டுக்கொண்டு வந்து எங்களோடு உட்கார்ந்தார்.
உட்கார்ந்ததும் மதுரம் ஏதோ ரகசியம் பேசுவது போல முதலில் பேச்சைத் துவக்கினார். நாங்கள் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
“என்னை அந்த ஆளு (கலைவாணர் என்.எஸ்.கே.) முதன்முதலில் கல்கத்தாவுக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செஞ்சு கூட்டிப் போனாரு. அதுல இருந்து எம்மெல அவருக்கு மயக்கம் வந்துடுச்சு. ஆனா, எனக்கு பம்பைத் தலையும் கறுப்புமா அவரு இருக்கிறதினால் புடிக்கல. அப்புறம் அப்புறம்….” இப்படி கலைவாணரை மதுரம் சந்தித்தது, காதலித்தது, கல்யாணம் செய்து கொண்டது போன்ற விவரங்களையெல்லாம் சொல்லத் தொடங்கினார் நகைச்சுவையோடு!
அவர் சொல்வதைக்கேட்டு ஆரம்பத்தில் எங்களுக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவிலும் மெதுவாகச் சிரித்துக்கொண்டோ ம். பிறகு கொஞ்சத்தில் கொஞ்சம் சத்தமாகச் சிரித்தோம். அதற்குப் பிறகு கொஞ்சம் சத்தமாக ‘களுக்’ என்று சிரித்தோம். இன்னும் சற்று நேரம் சென்று இரண்டு மூன்று ‘களுக்’களைச் சேர்த்துச் சிரித்தோம்.
இப்படியே படிப்படியாக உயர்ந்து ஒரு கட்டத்தில் அத்தனை பேர்களும் வாய்விட்டு “கெக்கெக்கே….” என்று பெரிய ஒலியோடு ஒட்டுமொத்தமாக சிரித்து விட்டோம்.
இரவு நேரம் எங்கும் பூரண அமைதி சூழ்ந்திருக்கும் வேளை. ஆறேழு பெண்கள் ஒரே நேரத்தில் சிரித்தால் எப்படி இருக்கும். அந்த சத்தத்தில் சில பேர்கள் கூட விழித்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
அப்போது- அஞ்சுகம் அம்மையாரின் உடலுக்கு அந்தப் பக்கம் இருந்து ஒரு குரல் “இந்த… சிரிக்கிறிய….” என்று கேட்டது! அந்த குரல் எங்கள் தலையில் இறங்கிய இடி மாதிரி இருந்தது! கருமை இருட்டில் தெரிந்த ஒளி விளக்குப் போல் இருந்தது! அப்போதுதான் எங்கள் உணர்வு எங்களிடம் திரும்பியது. எப்படிப்பட்ட சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்பது உறைத்தது. எல்லோருமே பேயறைந்தவர்கள் போல் ஆனோம்! எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோ ம் என்று தெரிந்ததும் வெட்கமும் சொல்ல முடியாத மனஉளைச்சலையும் அடைந்தோம். எனக்கு நெஞ்சுத்துடிப்பே நின்று விட்டது போல் இருந்தது! எவ்வளவு பெரிய இழப்புக்கு மத்தியில் – அதை மறந்து சிரித்துவிட்டோ ம் என்பதை நினைத்து நினைத்து கண்ணீர் மல்கியது வேதனையால்! அதன்பிறகு மூச்சைக்கூட இழுத்துப்பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். ‘இந்த… சிரிக்கிறிய…?’ என்று கேட்டவர் வேறு யாரும் இல்லை. கலைஞரின் பெரிய அக்காதான். அதன்பிறகு அவரை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது! இதில் ஒரு அதிசயம் – எதற்குமே சாதாரணமாக வாயைத் திறக்காத திருமதி. பண்டரிபாயும் வாய் விட்டுச் சிரித்ததுதான். பிறகு திருமதி சத்தியவாணிமுத்து மெதுவாக தலையைச் சாய்த்துக்கொண்டு படுத்து விட்டார். டி.ஏ. மதுரம் அக்கா எங்கே போய் படுத்துக் கொண்டாரோ தெரியவில்லை. காலையில்தான் பார்தேன். வீடு திரும்பும் வரை நாங்கள் ஏன் வாயைத் திறக்கிறோம்! மூச்சைக் கூட தம் பிடித்துத்தானே விட்டோ ம்! இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தவறுகள் நடந்துவிடாமல் மிக ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறேன்.
என்னுடைய ஆயிரம் படவுலக வாழ்க்கையில் எந்தப் படப்பிடிப்பிற்கும் நடிப்பதற்கு என்று போய் விட்டு பிறகு நடிக்க முடியாது என்று திரும்பி வந்ததே இல்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியும் ஒரு நிகழ்ச்சியும் நடந்துவிட்டது. அதை என்னால் தவிர்த்துக் கொள்ள முடியாமற் போய்விட்டது. ‘ஆசை மனைவி’ என்ற படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். எனக்கு ஜோடி இடிச்சபுளி செல்வராஜ். கதைப்படி எங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறேம். படத்தில் எங்கள் மகளாக ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமி என்று கூறியிருந்தார்கள். முதல்நாள் ஷூட்டிங் நான் சற்று முன்கூட்டியே போய்விட்டேன். உள்ளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது சற்று ஒதுக்குப்புறமாக இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு செட் போடப்பட்டு படுக்கையறைக் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ராஜலட்சுமியும் மற்றோர் நடிகரும் படுக்கையறையில் நடித்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் ஆகாத பெண் எங்களுக்கு என்று கூறியிருந்தார்களே படுக்கையறைக் காட்சி படமாக்கப்படுகிறதே எப்படி என்று குழம்பிய நான் உதவி இயக்குனர் ஒருவரை அழைத்து விவரம் கேட்டேன். அவர் ராஜலட்சுமி கல்லூரி மாணவி என்றும், அவளுக்கும் கல்லூரி பிரின்ஸிபாலுக்கம் தொடர்பு என்றும், அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் அப்போது அவரையும் எங்கள் மகளையும் தனியறைக்குள் அனுப்பி விட்டு நாங்கள் வெளியில் காவல் இருப்போம் என்றும், பின்னால் இந்த ஆளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு மாப்பிள்ளை தேடுவதாகவும் கூறினார். இது எனக்குச் சொல்லப்பட்ட கதையில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கவே, டைரக்டரை அழைத்து “என்னிடம் சொன்ன கதை வேறு” இது வேறாக இருக்கிறது. ஒரு குடும்பத் தலைவியே தனது மகளை வைத்து விபச்சாரத் தொழில் நடத்துவது போல் இருப்பது நியாயமில்லை. இதில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? என்று கேட்டேன். டைரக்டர் “முடியும்!” என்றார். “அதனால் உங்கள் கதைக்கு பாதகம் ஏற்படுமா?” என்று திருப்பிக் கேட்டேன். “நிச்சயமாக பெரிய பாதகம் ஏற்படும்” என்றார் பட இயக்குனர். அப்படியானால் என்னை விட்டு விடுங்கள்” என்று கூறி “நான் விபச்சார விடுதியின் தலைவியாகக்கூட நடித்திருக்கிறேன். விபச்சாரியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் தம் மகளை விபச்சாரம் செய்யும் குடும்பத் தலைவியாக நடித்ததில்லை. குடும்பத் தலைவி மானத்தைக் காக்க வேண்டியவள் விபச்சாரம் செய்வது போல் நடிக்கமாட்டேன். தப்பா நினைக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு உடனடியாக முன்பணத்தையும், கம்பெனி உடைகளையும் திருப்பி அனுப்பிவிட்டேன்.
ஆனால் அவர்களோ இதற்கு “இடிச்சபுளி செல்வராஜ் தனக்கு ஜோடியாக நடிக்க விரும்பாமல் போய்விட்டார்” என்று புதுக்கதையைக் கிளப்பி விட்டிருந்தார்கள். அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், நான் இதுவரையில் யாருடனும் நடிக்கமாட்டேன் என்று கூறியதே இல்லை. நேற்று வந்த புதுமுகமானாலும் சந்தோஷத்துடன் நடிப்பவள் நான்! இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக பத்தே நாளில் வேறு ஒரு படத்தில் இதேபோல் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டேன். மேற்கூறிய படத்தினால் ஏற்பட்டிருந்த தவறான செய்தி மேலும் பெரிதாகி, பொய் உண்மையாகி விடக்கூடாதே என்று பயந்து நடித்ததினால் பத்திரிக்கையாளர்களிடம் பிறகு வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்! காலம்சென்ற பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலுவின் மகன் ஒரு படத்தை டைரக்டர் செய்தார். அதில் எப்படியே ஒரு வகையாகக் கதையைச் சொல்லி என்னை ஒப்பந்தம் செய்து விட்டார்கள். ஒரு அலுவலகத்தில் பலபேர்களுக்கு மத்தியில் நானும் வேலை செய்கிறேன். ஆனால் அங்கே உள்ள அத்தனை ஆண்களிடமும் “என்னைக் கட்டிக்க – என்னை கட்டிக்க” என்று அறுத்து எடுத்து விடுகிறேன். அதுவும் மிக மோசமான வசனங்கள்.
என்னால் முடிந்த அளவு வசனங்களைச் சரி செய்து இரட்டை அர்த்தங்களைக் குறைத்து நடித்தேன் என்றாலும் படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ‘ஆயிரம் படங்களை நெருங்கிவிட்ட மனோரமா இப்படிப்பட்ட மோசமான கேரக்டரில் நடிக்கலாமா? அப்படி என்ன அவருக்குக் கஷ்டம் வந்து விட்டது?’ என்று உரிமையோடு கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்விதான் என்ன செய்வது? அப்போது எனது தர்ம சங்கடம், அந்தப் படத்தில் நடிக்கும்படியாகிவிட்டது. இதிலிருந்து இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்தி வைக்க விரும்புகிறேன். ‘உங்கள் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக வரையறை செய்து உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள். இதில் எச்சரிக்கையாக இருக்கத் தவறிவிட்டால் அதனால் ஏற்படும் மனப்புண்களின் வேதனையை ஆற்றிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவீர்கள். இல்லை, எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என்றால் இருதயத்தை எடுத்து வீசி எறிந்து விடுங்கள்! ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். ‘நாம், பழமை மிக்க, புகழ் வாய்ந்த, பண்பாடுள்ள தமிழ்ச் சமுதாயத்திற்குள் நடமாடிக் கொண்டிருக்கிறோம்! நான் எனது வாழ்க்கையில் தந்தை பாசம் அறியாதவள் என்பதை ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இதேபோல் தாலி கட்டிய கணவனின் பரிவையும் பாசத்தையும் அறியாமலேயே போய்விட்டவள் நான்!
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவைகளை இழந்துவிடக் கூடாதோ அவைகளை இழந்து வாழ்ந்தேன் என்றால் அதற்கு ஆதார சுருதியாக அமைந்தவர் எனது தெய்வமாக விளங்கும் என் அன்னைதான். நான் வாழ்ந்தே தீரவேண்டும் என்ற பிடிப்பையும் உறுதியையும் ஏற்படுத்தியவன் எனது மகன்! என் மீது உயிரையே வைத்திருப்பவன் அவன். என் தாயும் என் மகனும் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். என் மகன் பூபதிக்கு சுமார் மூன்று வயது இருக்கும். அப்போது ஒருமுறை எஸ்.எஸ். ஆரின் ‘மணி மகுடம்’, ‘புது வெள்ளம்’ ஆகிய நாடகங்கள் கோயம்புத்தூரில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் அங்கே ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். அப்போது என்னோடு நடிகை சீதாலட்சுமியும் நடித்துக் கொண்டிருந்தார். சீதா லட்சுமி என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் என்னை ‘அடி’ போட்டுப் பேசுவது வழக்கம். நிகழ்ச்சி நாளன்று மதிய வேளையில் நானும் சீதாலட்சுமி அக்காவும் அடுத்தடுத்துப் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம். என் மகன் பூபதி என் அருகில் படுத்திருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ சொல்ல வந்த சீதாலட்சுமி, “அடி பாப்பா!” என்று கூப்பிட்டார். இதை என் பக்கத்தில் படுத்திருந்த என் மகன் கேட்டதும் ஏதோ விஷப்பூச்சி கடித்தது போல் விருட்டென்று எழுந்தவன் குடுகுடுவென்று ஓடிப்போய் சீதாலட்சுமி அக்காவின் நெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, மழலைக்குரலில் “பாப்பாவை ‘அடி’ன்னா சொன்னே… ஹா..” என்றான் கோபமாக. சீதாலட்சுமி “ஆமாண்டா. அடின்னுதான் சொன்னே. அதுக்கு இப்போ என்ன?” என்றார் சிரித்துக் கொண்டே. உடனே பூபதி “எங்கே மறுபடியும் சொல்லு பார்ப்போம்” என்றான். மறுபடியும் சீதாலட்சுமி “சொன்னா என்னடா செய்வே” என்றவர் “அடி பாப்பா!” என்றார். உடனே அவரது கழுத்தை தனது சின்னஞ்சிறு கரங்களால் நெரிக்கத் தொடங்கியபடியே “சொல்லுவே – இனிமே சொல்லுவே” என்றவாறு கோபமாக கத்தினான். அதைக் கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் கொண்ட சீதாலட்சுமி “இல்லேடா அப்பா…. இனிமே சொல்லலே!” என்றபடியே அவனைக் கட்டிக் கொண்டார். அதுமுதல் இன்று வரை சீதாலட்சமி என்னை ‘அடி’ போட்டுப் பேசியதே இல்லை. இப்படி அன்று முதல் இன்று வரை என்மீது பாசத்தைப் பொழியும் என் மகனைப் பெற்றதே நான் பெற்ற பேரின்பம் என்று கருதுகிறேன். இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப் பிறகு பிரண்ட் ராமசாமியின் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ நாடகம் சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. இந்த நாடகத்தில் எனது கதாபாத்திரம், ‘முதலில் கதாநாயகனைக் காதலித்துவிட்டு பிறகு வில்லனைத் திருமணம் செய்து கொள்வது. திருமணத்திற்குப் பிறகு தற்செயலாகக் கதாநாயகனைச் சந்திக்க, அவனுடன் பேசிக்கொண்டிருப்பதை வில்லன் பார்த்துவிட்டு சந்தேகம் கொண்டு என்னை அடிப்பது போல் காட்சி வரும். இதில் வளையாபதி முத்துக் கிருஷ்ணன் கதாநாயகன். ஆர். எம். சோமசுந்தரம் என்பவர் வில்லன். இந்த நாடகத்தை அப்போது தான் பூபதி முதன் முதலாகப் பார்க்கிறான். நாடக அரங்கின் திரைச் சிலைக்குப் பக்கத்தில் நின்றபடி என்னை அடிக்கும் காட்சியைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை.
காட்சி முடிந்து நான் வந்ததும் என்னிடம் ஓடிவந்தவன் ரொம்பவும் கோபமாக மழலையோடு “பாப்பா.. உன்னை அடிச்சானா பாப்பா… பாப்பா…. உன்னை அடிச்சானா பாப்பா…?” என்று கேட்டதோடு அதே கோபத்தோடு கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி அத்தனை பெரிய மேடையில் குறுக்கும் நெடுக்குமாக வேறு நடந்து கொண்டிருந்தான். அந்தச் சின்னஞ்சிறு வயதில் அவனால் அவரை என்ன செய்ய முடியும்? ஆனாலும் மிகப்பெரிய மனிதனைப் போல் அவன் காட்டிய மிடுக்கு இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலாத காட்சியாகும். இதைப்பற்றி எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். அது மட்டுமின்றி, என்னைச் சுற்றி பாதுகாப்பு அரணுக்கான அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக ஒரு உணர்வும் ஏற்பட்டது.
20.ஒரு பெண் மதிக்கப்படுவதும், மகிழ்ந்திருப்பதும் அவளுக்கு அமையும். மண வாழ்க்கைப் பொருத்ததாகும். எனக்கு வாய்த்த மணவாழ்க்கை எட்டிக் காயைப் போல அமைந்தது! வைரம் நாடகம் சபாவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை ஒருவர் சக நடிகர் காதலித்தார். காதலித்தார் என்பதைவிட காதலிப்பது போல் நடித்திருக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன்! இந்த உண்மைகூட எனக்கு இப்போதுதான் உறைக்கிறது! காதல் காட்சிகளில் நடிப்பேனே தவிர, அப்போது சொந்த வாழ்க்கையில் அதன் தராதரத்தைப் பிரித்து உணரும் வயதோ – அறிவோ எனக்கு இல்லாத காலம் அது. சபா நாடகத்திலும், வெளியில் அமெச்சூர் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன். சபா நாடக சம்பளத்தைவிட அமெச்சூர் நாடகங்களில் அதிகச் சம்பளம் தருவார்கள். இதனால் வெளி நாடகங்களுக்கு நான் போய்விடும் நேரத்தில் சபா நாடகங்களில் நடிக்க சரியான நடிகை கிடைக்காததோடு, நான் இல்லாததால் நாடகங்கள் சோபிக்க முடியாமல் இருந்தன.
இது நாடக சபாவின் உரிமையாளர்களுக்கு பெரிய சங்கடத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். இந்த நேரத்தில்தான் சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் என்னைக் காதலித்து இருக்கிறார். அவரது எண்ணத்தை எனக்கு உணர்த்தும் வகையில் பலவித வழிமுறைகளையெல்லாம் கையாண்டார். ஆரம்பத்தில் அவரது நடவடிக்கைகளை வெறுத்தே வந்தேன். பிறகு படிப்படியாக அவரது எண்ணத்திற்கு நானும் உட்பட்டேன். இதற்கு எனது தாயார் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். ஆனால், நான் உண்மையாக எனது மனதை காதல் வசப்படுத்திக் கொண்டது போலவே அவரும் இருப்பார் என்று முழுமையாக நம்பியதால் அம்மாவின் எதிர்ப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருமுறை எங்கள் வைரம் நாடக சபா தூத்துக்குடியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஒரு நாள் என் அம்மாவுக்கத் தெரியாமல் திருச்செந்தூருக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். அங்கே முருகன் கோயிலில் எங்கள் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தால் எனக்கும் என் தாயாருக்கும் சுமுகமான பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது. திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தாலும் முன்போல் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கப் போவதை நிறுத்தச் சொல்லி விட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இரண்டு மாதத்தில் எனக்கு குழந்தை உண்டானது. ஆனால், அது நிற்கவில்லை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.
மோசமான நிலையில் என்னை கொட்டாம்பட்டி மருத்தவமனையில் சேர்த்துவிட்டு என்ன – ஏது என்றுகூட விசாரிக்காமல் எல்லோரும் வேறு ஊருக்கு நாடகம் நடிக்கப் போய் விட்டார்கள். என்னைக் காதலித்துக் கைப்பிடித்தவர் முதலிலேயே போய்விட்டாராம். நான் மயக்கம் தெளிந்து பார்த்த போது என் தாயார் மட்டுமே கலங்கிய கண்களோடு என் அருகில் இருந்தார். அப்போதே என் மனதில் ஒரு உணர்வு தட்டியது, ‘என்கூட எப்போதும் என் தாயார் மட்டுமேதான் இருப்பார் போலும்’ என்று. உடம்பு நலமானதும் மறுபடியும் நாடகக் கம்பெனிக்கே போய்ச் சேர்ந்தோம். இதன்பிறகு எனது மகன் பூபதியை கருக்கொண்டேன். கருத்தரித்து ஒன்பது மாதம் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் எனக்கு ஆறு மாதமாக நாடகச் சம்பளமும் தராமல் இழுத்தடித்தார்கள். நானும் ஒன்றும் கேட்காமல் ‘நம்ம வீட்டுக்காரர் பார்த்துக் கொள்வார்’ என்று இருந்து விட்டேன். ஆனால் கடைசி வரை யானை வாய்க் கரும்பாகவே ஆகிவிட்டது ஆறு மாதச் சம்பளமும்! ஒன்பதாவது மாதக் கடைசியில் பிரசவத்திற்காக நான் ஊருக்கு வந்து விட்டேன்.
இடையில் எனது காதல் கணவர் ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை என்பதோடு எனது பாக்கிச் சம்பளத்தையும் அனுப்பி வைக்கவில்லை. கர்ப்பிணி மனைவியாச்சே, பணத்தேவை இருக்குமே என்று கருதி வேறு பணமும் அனுப்பி வைக்கவில்லை. ஒரு மாதம் ஒரு நொடியைப் போல் ஓடிவிட்டது. என் மகனும் பிறந்து விட்டான். அவனது தந்தைக்குத் தகவல் தரப்பட்டது. பாசம் மிகுந்த தந்தையா அவர்? 15 நாட்களுக்குப் பிறகு வந்தார். வந்தவர், குழந்தை – மனைவியைப் பார்க்க வந்தவராகத் தெரியவில்லை. நாடகத்தில் நடிக்க வைப்பதற்காக மறுபடியும் கையோடு அழைத்துச் செல்ல வந்தவர் போல் தெரிந்தார்.
ஆனால் என் அம்மா, “பச்சைக் குழந்தை – பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை… அவளோ பச்சை உடம்புக்காரி, ந்த நிலையில் ஊர் ஊராக அலையறதுனா.. என்னாலே முடியாது அவ வந்தா அவளை அழைச்சுக்கிட்டுப் போங்க.. நீங்களுமாச்சு உங்க பொண்டாட்டியுமாச்சு. பிஞ்சுக் குழந்தையின் உடம்பு என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்துக்குங்க” என்று கூறி கட்டோ டு மறுத்துவிட்டார். நானும் நிலைமையை யோசித்துப் பார்த்து “இப்போது வரமுடியாது” என்று கூறிவிட்டோம். தன் மனைவி – மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த அவர் இனி வற்புறுத்திப் பயனில்லை என்று கருதியவராகப் போய்விட்டார். அன்றுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு பார்க்கவே இல்லை. என் மகனுக்கு தன் தந்தையைப்பற்றிய உணர்வே இல்லாத நிலை. இப்போது நான், என் மகனுக்காக வாழ்ந்தே தீரவேண்டிய நிலை. என் அம்மாவுக்கு – தன் மகளுக்காகவும் – தன் பேரனுக்காகவும் வாழ வேண்டிய நிலை.
21.சென்னைக்கு வந்து கே.ஆர்.ஆர். நாடக மன்றம், எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றம், பிரண்ட் ராமசாமி நாடக மன்றம் போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினேன். இதற்கிடையில் காலச்சக்கரத்தின் அடியில் சிக்கி நான்கு வருடங்கள் தேய்ந்து விட்டன! எனது குடும்ப வாழ்க்கையின் பிரிவு தற்காலிகமானது என்று நம்பியிருந்த எனது தலையில் இடிப்பது போல் ஒருநாள் ‘விவாகரத்து நோட்டீஸ்’ வந்தது. அந்த நோட்டீஸ் எனது எண்ணத்தைப் பொடிப்பொடியாக்கிவிட்டு ஓய்ந்துவிட்டது. சோகச் சுமையைத் தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக்கொண்டேன். ஆனால், ஒரு உண்மையையும் அப்போதுதான் நான் உண்ரந்தேன் – ‘தங்கள் நாடக மன்றத்தை விட்டு விட்டு நான் வெளி நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி நாடகக் கம்பெனியின் நிரந்தர நடிகையாக இருக்கச் செய்வதற்காக அவர்கள் நடத்திய நாடகம்தான் ‘காதல் – திருமணம்’ என்பதெல்லாமே தவிர உண்மையல்ல அதில் நான் ஒரு ‘ஏமாந்த கதாபாத்திரம்’ என்பதை உணர்ந்த போது எனக்கு ஊமை அழுகையைத் தவிர வேறு எதுவும் உதவ முன்வரவில்லை.
வாழ்க்கை நீரோட்டத்தில் எத்தனையோ சூழல்களில் இருந்து தப்பி எதிர் நீச்சல் போட்டு, எனக்கென்று ஒரு நிம்மதியான சூழலை ஏற்படுத்திக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள தலையைச் சற்று நிமிர்த்த முனைந்தபோது மீண்டும் ஒரு அடி. அதுவும் பயங்கர இரும்புக் கரம் கொண்டு அடித்த அடி! என் தாயார் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு தனது கணவனைவிட்டு அநியாயமாகப் பிரித்தெறியப்பட்டு பயங்கரமான, கொடுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்! என் தாயாராவது மூன்று குழந்தைகளைப் பெற்றபிறகு தனது கணவனைப் பிரிந்தார். நானோ ஒரு குழந்தைநய்ப் பெற்ற பதினைந்தாம் நாளே என் இல்லற வாழ்க்கையை இழந்தேன். இந்தச் சோகச் சித்திரம் எங்களோடேயே முற்றுப் பெற்றுவிடும் என்றுதான் நம்பியிருந்தேன். காரணம் இனி எங்களில் பெண்கள் யாரும் இல்லை – இந்த அவலம் தொடர்ந்து வராது என்ற தெம்பு. ஆனால் என்ன கொடுமை! அது என் மகனையும் தொட்டு ருசி பார்த்தே விட்டது! என் பூபதி ஒரு பி.எஸ்.ஸி. பட்டதாரி. அவன் படித்தது பிரசிடென்ஸி கல்லூரியில். அப்போது அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது பிரண்டைப் பார்க்க ஒரு இளம் பெண் அடிக்கடி வந்து போவாளாம். இப்படி வந்த போய்க்கொண்டிருந்த பெண்ணுக்கும் என் மகனுக்கும் எப்படியோ சந்திப்பு ஏற்பட்டு, அது பழக்கமாக மாறி, பின்னால் அதுவே காதல் என்ற வலையாகப் பின்னிக் கொண்டது. இதுபற்றி நான் பின்னால் அறிய நேர்ந்தபோது மிகவும் பயந்துவிட்டேன். என் மகனிடம் எவ்வளவோ சொல்லி அவர்களது தொடர்பைத் தடுக்க முயன்றேன்.
22.ஒரு நாள் நான் வீட்டில் இல்லாதபோது, எந்தப் பெண்ணை நான் சந்திக்க கூடாது என்று இருந்தேனோ, அதே பெண் என் வீட்ற்கு திடீர் என்று வந்துவிட்டாள். என் தாயாரின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியிருக்கிறாள். நான் இல்லை என்றதும் போகவில்லை வீட்டிலேயே நான் வரும் வரை தங்கிவிட்டாள். நான் வந்ததும் என் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள். “என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள்” என்று கெஞ்சினாள்.
அவளது கெஞ்சலும் கண்ணீரும் என்னைத் தடுமாறச் செய்தாலும் அவளிடம் பல உண்மைகளையும் நியாயங்களையும் சொன்னேன். “நீங்கள் பிராமணர். நாங்கள் உங்கள் ஜாதி இல்லை. இதற்கு எல்லோரும் எதிர்ப்பார்கள். நானும் காதல் திருமணம் செய்து கொண்டு கண் கலங்க நின்றவள். அதனால் ஏற்படும் துன்ப துயரங்களை எதிர்க்கும் வலிவு வேண்டும். அதற்கு நீ தகுதியானவள்தானா என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் வீண் இழப்புக்களும் துன்பங்களும் உனக்கு வரவேண்டாம். பேசாமல் வீட்டுக்குப் போய்விடும்மா” என்றெல்லாம் சொன்னேன்.
அவள் பிடிவாதமாக இருந்தாள். அத்துடன் சில பெரிய மனிதர்களிடம் இருந்து தொலைபேசியில் இந்தத் திருமணம் கட்டாயம் நடக்க வேண்டும் என்று உத்தரவுகளுடன் கூடிய பயமுறுத்தல்கள் வேறு வந்தன! எல்லாரும் ஓரணியில் நிற்கவே, சரி என்று முறையாக என் மகனின் காதல் திருமணத்தை நடத்தி வைத்தேன். அவனது இல்லறம் நன்கு அமைய வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை. என் வேண்டுதல்களின் சக்தி இரண்டு மாதங்கள்தான் போலும்! அதற்குள் திருமகளாக வந்தவள் வெடிமகளாக மாறிவிட்டாள்! இரண்டே மாதத்தில் எங்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தனது பிறந்தகத்திற்குப் புறப்பட்டு விட்டாள். முன்பு அவள் கெஞ்சினாள் – இப்போது அவளிடம் நான் கெஞ்சினேன்! எனது கடந்த கால வாழ்க்கையை எடுத்துக் கூறி என்னைப் போல் உனக்கு நேர்ந்து விடக்கூடாது என்றேன். “நீ பிராமணப் பெண் மறுமணம் இல்லை என்று சொல்வார்கள். நீ வாழவேண்டிய குழந்தை போகாதே” என்றேன்.
அத்துடன் “நீங்கள் தனியாக குடும்பம் நடத்துவதாக இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்றேன். என் பேச்சு எதுவும் அவள் காதில் ஏறவில்லை. போயே போய் விட்டாள். என் மகன் கருகிய பூப் போல மாறிவிட்டான். அவளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தான் அவன்! அவனது அன்பு, கனவில் வந்த பெண்ணிடம் வைத்தது போல் ஆகிவிட்டது!
23.என் தாயின் வாழ்க்கையில் ஆரம்பித்து, என் வாழ்க்கையிலும் தொடர்ந்து, எனது மகனின் சுகத்தையும் தீண்டிய அந்தச் சோகத் தொடர் கதைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அவனுக்கு வளமும் – மணமும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க முயன்று வருகிறேன். எனது மகனின் காதல் திருமணத்தைக் கட்டாயம் நடத்தியே தீர வேண்டும் என்று எனக்கு ஆணை பிறப்பித்தவர்கள், அவனது குடும்ப வாழ்க்கை பாதியில் குலைந்து கலைந்தபோது மட்டும் வாய்மூடி மெளனியாகி விட்டார்கள். தங்களின் மெளனத்திற்கு அல்லது பாராமுகத்திற்கு ஏதாவது நியாயம் கற்பித்துக்கொண்டிருக்கலாம். அது அவர்களுக்குச் சரியாகவும் இருந்திருக்கலாம்.
அதேபோல் நானும் என் நிலைக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறேன். ஆனால் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மனதால் பங்கப்பட்டு கண்ணீர் வடித்து நின்றவர்கள் நாங்கள் தானே தவிர அவர்கள் இல்லையே! நான் விதியை நம்புகிறவள். அதனால் ‘விதி விட்ட வழி இது’ என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்ன என்னால் முடியும்! அவள் – போனவள் போனவள்தான் பிறகு திரும்பவே இல்லை. அவள் – என்றாவது ஒரு நாள் திரும்பி வருவாள் என்று என் மகன் பூபதி திடமாக நம்பியிருந்தான். இப்படி ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல, ஆறு ஆண்டுகள் காத்திருந்தான்! பயனில்லாத எதிர்பார்ப்பு என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது போலும். அதுவரை என் மகன் பிடிவாதமாக ‘விவாதரத்து’ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மறுத்து வந்தான்.
அதன்பிறகும் எந்தப் பயனும் இல்லை என்றபிறகு அரைகுறை மனதோடு விவாகரத்துக்கு முன் வந்தான். என் தந்தை என் அம்மாவைக் கைவிட்ட பிறகு மூன்று திருமணங்கள் செய்துகொண்டார். என்னை மணந்தவர் என்னை விட்டதுமே வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டார். ஆனால் நாங்கள்? ஆண்கள் இல்லையே! பெண்களாயிற்றே! அதனால் நாங்கள் நாங்களாகவே இருந்துவிட்டோ ம். எங்களுக்கு என்று தனி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனமும் பண்பும் இடம்தரவில்லை. ஆனால் என் மகன் எங்களைப் போல பெண்பிள்ளை அல்லவே! அத்துடன் அவனது மனைவியாக வந்தவள் பிரிந்துபோன பிறகு ஏதேதோ மர்மமான செய்திகள் – வதந்தியான தகவல்கள் பல! இந்நிலையில் என் மகன் வீணாக ஏன் வயதைக் கடத்த வேண்டும்? வாழவேண்டிய வயதில் ஏன் வீணாக வசந்தம் இழந்து நிற்கவேண்டும்? அதனால் அவனுக்கு புதிய வாழ்க்கையை – அதுவும் காலத்தே அமைத்துத் தருவது ஒரு தாய் என்ற முறையில் எனது கடமை என்று உணர்வதில் தவறில்லை அல்லவா? அவன் மகரந்தம் நிறைந்த ஒரு ரோஜா மலர். அந்த ரோஜா தனிமையில் வாடிப் போவதை என்னைப் போலவே தாய்மை உள்ளம் கொண்ட நீங்களும் விரும்பமாட்டீர்கள்.