பெரியவெண்மணி சாஸனம்

3 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
1:42 AM (16 hours ago) 1:42 AM
to வல்லமை, hiru thoazhamai
வரலாற்று ஆய்வாளர் பாண்டியன் மள்ளர்
பெரியவெண்மணி சாஸனம் — அசல் வரலாற்றுப் பொருள் விளக்கப் பதிவு
X=========X==========X=========X========X
ன்று இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் சமூகம் சார்ந்த காணொலிகளை வெளியிடும் ஒரு சில நபர்கள், மாற்றுச் சமூகங்களின் மீது வன்மத்தைக் காட்டி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான், மள்ளர்ச் சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் தொடர்ந்து செயல்பட்டு வருவது ஆகும். கல்வெட்டுகளில் உள்ள செய்திகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதைத் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபோதும் நல்ல செயலாகத் தெரியவில்லை. இத்தகைய போக்கு இரு சமூகங்களுக்குள் பகைமையை வளர்க்குமே தவிர, அவற்றுக்கிடையே ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்தாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்களைப் பொதுவானவர்கள் என்று காட்டிக்கொண்டு, தொடர்ந்து மள்ளர்ச் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர்.
இக்கல்வெட்டுச் செய்தியைப் பல வருடங்களுக்கு முன்பே மூவேந்தர் தொடர்பான விவாதத்தில் சிலர் பதிவு செய்திருந்தனர். அப்பொழுதே நானும் எனது நண்பரும் இக்கல்வெட்டுத் தொடர்பாக முறையான ஆய்வை மேற்கொண்டு, இதன் உண்மைத் தன்மையை வெளியிட்டிருந்தோம். ஆனால் இன்று சிலர், புதிதாக முகநூலில் (Facebook) இக்கல்வெட்டுச் செய்தியைத் திரித்து வெளியிட்டு, "1000 வருடங்களுக்கு முன்பே மள்ளர் சமூகம் அடிமையாக இருந்தது" என்று கூறுவது வரலாற்று அறியாமையும் வேடிக்கையான செயலுமாகும். ஆதலால், இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள அசல் உண்மைத் தன்மையை ஆதாரங்களுடன் இங்கு மீண்டும் வெளியிடுகிறேன்.
• கல்வெட்டு எண்: 590 / A.R. No. 282 of 1903
• நூல் ஆதாரம்: தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 8 (South Indian Inscriptions, Vol. VIII)
கல்வெட்டு கூறும் அசல் செய்தி என்ன?
அ) விஜயநகரப் பேரரசின் காலமும் காலக் கணக்கீடும்:
இக்கல்வெட்டு முற்றிலும் விஜயநகரப் பேரரசின் கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வட கடல்களுக்கு அதிபதியான, ‘பூர்வதக்ஷிண பச்சிம உத்தரசமுத்திராதிபதி’ ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வரன் ஸ்ரீவீர புக்கண உடையாரின் குமாரர் ஸ்ரீவீர கம்பண உடையார் (குமார கம்பணர்) காலத்தில் வெட்டப்பட்ட அசல் அரசாணையாகும்.
• காலம்: ஸகாப்தம் 1286 (கி.பி. 1364), விசுவாவஸு வருஷம், மீன நாயறு (பங்குனி மாதம்), பூர்வபக்ஷம், பஞ்சமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற உரோகிணி நட்சத்திர நாள்.
அசல் கல்வெட்டு வரிகள்:
(1)ஸ்வஸ்தி ஸ்ரீ மந்மஹாமண்டலெச்வரன் ஹரிராயவிபாடந் பாஷைக்கு தப்புவராயர கண்ட-
(2)ன் பூர்வதக்ஷிண பஸ்திதும் உத்தரஸமுத்ராயிபதி ஸ்ரீவீரபுக்கணஉடையார் குமார[ர்]
(3)ஸ்ரீவீரகம்பணஉடையார் பரயிவீராஜ்யம் பண்னாநின்ற ஸகாப்தம் ௲உள௱[௮]௰௬ -ல் மெ-
(4)ல் செல்லாநின்ற விசுவாவஸு வருஷத்து மீநநாயற்று [பூ]ர்வ[ப]க்ஷத்து பளூமியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற (5) ரொஹிணி நாள்
ஆ) கொடையாளி மற்றும் கொடை பெற்றவர் விபரம்:
தென்கரை இராஜகம்பீர வளநாட்டுச் சூரலூர்க் கூற்றத்து பெரியவெண்மணி கிராமத்தின் நாடாளுமைத் தலைவரான களத்தூருடையான் திருவக்கிசுரமுடையான் மழவதரையன், தான் சாதனப்படி விலைக்கு வாங்கித் தன் வசம் வைத்திருந்த காணிச் சொத்துக்களை, வடகரை மன்றச்சநல்லூரில் வாழும் மலையாளரான அண்ணாவுடையார் வடுகப்பிள்ளையார் மகள் மாதேவர் நாச்சியார் மகள் பிறையாருக்கும், அவளது மகன் சொக்கநாயனாருக்கும் ‘பிரீதி தானமாக’ (அன்புக் கொடையாக) வழங்குகிறார்.
அசல் கல்வெட்டு வரிகள்:
--------- தென்கரை இராஜகம்பீரவளநாட்டு சூரலூர்க்கூற்றத்து பெரிய- வெண்ம-
(6)ணியிலிருக்கும் பரதெசிகளில் வடகரை மன்றச்ச நல்[லூரி]ல் மலையாளரில் அண்ணாவுநுடையார்
(7)வடுகப்பிள்ளையார் மகள் மாதெவர்நாச்சியார் மகள் பிறையா[ர்க்]கும் இவள் மகன் சொக்கநாயனார்க்கும தென்கரை இராசகெம்-
(8)பிரவளநாட்டு சூரலூர்க்கூற்றத்து பெரியவெண்மணி களத்தூருடையான் திருவக்கிசுரமுடையான் மழவதரையரென் பிறீதி-
(9)தாநம் பண்ணிக்குடுத்த பரிசாவது [பி]றையாள் என்உடன் [இரு]க்கையில் இவளுக்கும் இவள் மகன் சொக்கநாயனார்க்கும்
இ) தானமாக அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளும் சோழர் நீரியல் நீட்சியும்:
தானமாக வழங்கப்பட்ட நன்செய் நிலத்தின் பெருநான்கெல்லைகளும் இக்கல்வெட்டில் மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளன. பேரரசு மாறினாலும், உள்ளூர் நில மற்றும் நீரியல் கட்டமைப்புகள் இன்னும் சோழர் காலப் பாசனப் பெயர்களாலேயே ஆளப்பட்டு வந்த ஆவணவியல் நீட்சியை இச்சாஸனம் மெய்ப்பிக்கிறது.
அசல் கல்வெட்டு வரிகள்:
(10)குடுத்த இவ்வூரில் என் காணிஆட்சியான நன்செய்நிலத்தில் திருவரங்கநல்லூர் நத்தத்துக்கு கிழக்கு மெலை
(11) . . . . முடிசொழன் த[டி] உ-ல் ௺௳ ௪ இதன் கிழக்கு உட்ச்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு இராசெந்திரசொழன் குண்-
(12) . . . . . ௺௳ உபம உய்யக்கொண்டான்கரைக்கு [வ]டக்கு வத்தராயர் நிலத்துக்கு கிழக்கு உட்ச்சிறுவாய்க்காலுக்கு
(13) . . . . . கு பழுப்பிலிநிலத்துக்கு தெற்கு செ . . பிராட்டி தடி க-ல் ௺௳ ௪ இங்குவிட்டு கிழக்கு திருமாலைசெரநில-
(14) . . . லத்துக்கு கிழக்கு நாற்றங்கால் வா[ய்க்]காலுக்கு கிழக்கு உட்சிறுவாய்க்காலுக்கு தெற்கு வண்ணாண்குண்-
(15)[டுக்]கு மெற்கு அடைய இலந்தைஅடி நாற்றங்கால் குண்டு உ-ல் ௺௳
(16)காலுக்கு தெற்கு விதிவிடங்கள் நிலத்துக்கு கிழக்கு கணபதியவக்கலுக்கு மெ- (17)ற்கு வாரவாய்க்காலுக்கு வடக்கு கண்டரகண்டன் தடி க-ல் ௺௳ வங இங்குவிட்டு கிழக்கு கருநாலையனுக்கு வடக்கு நா-
(18)ற்றங்கால் தடிக்கு கிழக்கு உட்சிறுவாய்க்காலு[க்]கு தெற்கு மெற்கடைய புளியஞ்செய் தடி உ-ல் ௺௳ உபம் ஆக ௺௳ -பம் இது-
(19)வும் இவ்வூரில் மனையாவது இந்தப் பிறையார் குடிஇருப்பாய் சொக்கநாயனார் பிறந்த மனையான
நிறைவுரை விளக்கம்: விளைநிலங்களின் எல்லையை வகுக்கும் போது வரும் முடிசோழன் தடி, ராஜேந்திர சோழன் குண்டு, உய்யக்கொண்டான் கரை, நாற்றங்கால் வாய்க்கால், உட்சிறுவாய்க்கால், வாரவாய்க்கால் (உபரி வடிகால்) மற்றும் கணபதி வயக்கல் ஆகிய சொற்களும், நில அளவைக் குறிக்கும் ௺௳ (மா, காணி எண் குறியீடுகள்) ஆகியவையும் பூர்வீக மருத நிலத்து நீர்ப்பாசன நிருவாகத்தின் உச்சக்கட்டத் துல்லியத்தைக் காட்டுகின்றன.
ஈ) தானமாக அளிக்கப்பட்ட வெள்ளான் அடியார்கள்:
மழவதரையரின் காணி நிலத்தைச் சார்ந்து உழைத்து வந்த வெள்ளான் அடியார்களான — தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம்பிள்ளை மகன் தாயிலும் நல்லான் மற்றும் வெள்ளாட்டி சிவந்தாள் ஆகிய மூவரின் உழைப்புரிமையும் இக்கொடையில் மாற்றப்படுகிறது.
அசல் கல்வெட்டு வரிகள்:
இந்த மனை-
(22) க்கு உள்ள ஸமஸ்தப்ராப்திகளும் என் வெள்ளான்அடியாரில் தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளையு[ம்] நான் கொ-
(23) ண்டுஉடையெனான நல்லாம்பிள்ளை மகன் தாயிலும்நல்லானும் வெள்ளாட்டி சிவந்தாளும் ஆகப் பெர் முன்றும்
உ) நிலத்தை விற்றவர் விபரம்:
மழவதரையர் இச்சொத்துக்களை யாரிடம் இருந்து விலைக்கு வாங்கினார் என்பதன் விபரம்: உடையார் கம்பண உடையாரின் காரியப்பேரான (திணைக்கள அதிகாரி) சந்திரசர் என்பவர் விற்க, அதனை மழவதரையர் கிரயத்திற்கு வாங்கியிருந்தார்.
அசல் கல்வெட்டு வரிகள்:
புலை-
(24) அடியாரில் முன்னாள் நங்கைபுரத்தில் பா[ட்ட]த்தில் நின்ற புலைஅடியாராய் உடையார் கம்பணஉடையார் காரியப்பெர் சந்த்ரசர்
(25) விற்க
ஊ) சர்ச்சைக்குரிய வரிகளின் நிருவாக இயைபும் வரிக்கு வரி விளக்கமும்
தர்க்கம் 1: 'பள்ளர் ஏழு பேர்' மனிதர்களாக விற்கப்பட்டார்களா?
அசல் கல்வெட்டு வரிகள் (வரிகள் 24-26):
(24)...உடையார் கம்பணஉடையார் காரியப்பெர் சந்த்ரசர்
(25)விற்க நான் கொண்டுஉடையெனான சாதனப்படியால் உள்ள பள்ளன்பிறவியும் இவன் பள்ளி அழகியாளும்
(26)இவள் மகள் நம்பாளும் இவள் தம்பி வளத்தானும் இவன் தம்பி [தா]ழியும் இவன் தம்பி வளத்தானும் இவன் தம்பி ஆண்டியும் ஆகப் பேர் ஏழு...
• காரியப்பெர் சந்த்ரசர் விற்க: விஜயநகர அதிகாரியான சந்திரசர் என்பவர் ஏதோ மனிதர்களைச் சந்தையில் விற்கவில்லை; மாறாக அவர் வசம் இருந்த ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியையும் அதன் உரிமைகளையும் விற்கிறார்.
• நான் கொண்டுஉடையெனான சாதனப்படியால் உள்ள: 'சாதனம்' என்பது இடைக்கால நிருவாக மொழியில் 'கிரயச் சாஸனம்' (Deed of Purchase/Land Records) ஆகும். மழவதரையர் தான் சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கிய நில ஆவணத்தை இங்குத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
• பள்ளன்பிறவியும்... ஆகப் பேர் ஏழு: மாற்று அறிஞர்கள் இந்த இடத்தில்தான் அடியோடு சறுக்குகிறார்கள். இடைக்கால நில ஆவணங்களின் இலக்கணப்படி, ஒரு நிலப்பரப்பைச் சட்டப்பூர்வமாக நிருபிக்க, அந்த நிலத்தில் பரம்பரையாகச் சாகுபடி செய்து வரும் முதன்மை உழவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'இன்னார் சாகுபடி செய்யும் நிலப் பிரிவு' (Tenancy/Occupancy Cultivation Boundary) என அடையாளப்படுத்துவது மரபாகும்.
• முடிவு: இங்கும், 'பள்ளன் பிறவி' உள்ளிட்ட ஏழு நபர்களின் பெயர்கள் — மனிதர்களாகிய அவர்களைக் குறிக்காமல், அவர்கள் சாகுபடி செய்து வந்த காணி நிலத்தின் நிருவாகப் பிரிவையே (Land Holding Designation) குறித்து நிற்கிறது என்பதை வாக்கியத்தின் அடுத்த தொடர்ச்சி அப்பட்டமாக நிருபிக்கிறது.
தர்க்கம் 2: மழவதரையர் விலைக்கு வாங்கிய சொத்துகளின் பட்டியல் எது?
அசல் கல்வெட்டு வரி (வரி 27):
(27)ஆக இந்த வகைப்படி நிலமும் மனையும் சிறுப்பலவெள்ளாட்டிகளும் புலைஅடியாரையும்...
• ஆக இந்த வகைப்படி: இச்சொல்லாடல் முந்தைய வரிகளில் கூறப்பட்ட அனைத்தையும் தொகுக்கும் நிருவாகத் தொகுப்புச் சொல்லாகும் (Summation Clause).
• நிலமும் மனையும்: இதுவே வாக்கியத்தின் முதன்மையான பொருள் (Primary Object) ஆகும். அதாவது, 'பள்ளன் பிறவி உள்ளிட்ட ஏழு நபர்கள் சாகுபடி செய்த' அந்த நன்செய் நிலமும், அதனோடு பிணைந்த குடியிருப்பு மனையும்தான் இங்கு முதன்மையாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
• சிறுப்பலவெள்ளாட்டிகளும்: பொதுவாக 'வெள்ளாட்டி' என்பது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்டிரை (பெண்களை) மட்டுமே குறிக்கும் ஒரு பிரத்யேகக் கலைச்சொல் ஆகும். நிலத்தோடு பிணைந்திருந்த உழைக்கும் பெண்களின் சாகுபடிப் பங்களிப்பை இது குறிக்கிறது.
• புலைஅடியாரையும்: ஒப்பந்த அடிப்படையில் (பாட்டத்தில்) உழவு வேலை செய்யக்கூடிய புலை அடியார்களின் உழைப்புரிமையும் இதனுடன் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
• முடிவு: எனவே, மழவதரையர் சந்திரசரிடம் இருந்து விலைக்கு வாங்கியது "பள்ளர் சமூகத்தவர்கள் வேளாண் தொழில் செய்த நிலத்தையும், அத்துடன் புலை அடியாரையும், சில வெள்ளாட்டிகளையும் (பெண்டிரையும்), மனையையும் தான்" என்பது தெள்ளத்தெளிவாகிறது. அதைத்தான் அவர் பிறையாருக்கு வீரதியாகக் கொடை அளித்துள்ளார். இதில் பள்ளர் சமூகத்தவர்கள் அடிமைகளாக விற்கப்படவில்லை என்பது அட்சர சுத்தமாக விளங்குகிறது!
தர்க்கம் 3: நிலத்தோடு மாற்றப்பட்ட உரிமைகளின் சட்டத் தன்மை என்ன?
அசல் கல்வெட்டு வரிகள் (வரிகள் 20-22):
(20)..இம்மனைக்கு புழைக்கடை எல்லை
(21)யாவது வாரவாய்க்காலுக்கு தெற்கு மெனொக்கின மரமும் கினொக்கின கிணறும் பாகமும் பாகாஸ்ரீயமும் மற்றும் இந்த மனை
(22)க்கு உள்ள ஸமஸ்தப்ராப்திகளும்...
• பாகமும் பாகாஸ்ரீயமும்: 'பாகம்' என்றால் நிலத்தின் பிரிவுகளும், 'பாகாஸ்ரியம்' (பாகாச்ரயம்) என்றால் அந்த நிலத்தைச் சார்ந்துள்ள அனைத்துப் பொது உரிமைகளும் (Appurtenances) என்று பொருள்.
• ஸமஸ்தப்ராப்திகளும்: நிலத்தின் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து நிருவாக மற்றும் சிவில் உரிமைகளும் (All Rights and Titles) புதிய கொடையாளிக்கு மாற்றப்படுகிறது.
• முடிவு: நிலத்தை மாற்றும் போது, அதன் மேல் வளரும் மரங்கள் (மேனோக்கின மரம்), நிலத்தடி நீர் ஊற்றுரிமை (கீழ்நோக்கின கிணறு) ஆகியவற்றுடன் சேர்த்து, அந்த நிலத்தின் உழவுத் தொழிலையும் சாகுபடி மரபையும் நன்கு அறிந்த பூர்வீக உழவுக் குடும்பங்களின் 'சாகுபடி உரிமைகளும்' (Cultivation Tenure) புதிய நிலவுரிமையாளருக்கு மாற்றப்படுகிறதே அன்றி, இது மனித அடிமை வியாபாரம் அல்ல என்பதை இச்சட்டச் சொற்கள் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றன.
எ) நாடாளுமைப் பட்டங்களின் கூட்டுச் சிவில் இறையாண்மை (வரிகள் 28–37):
(28)ணமும் பண்ணிக்குடுத்தென் பிறையாற்கும் சொக்கநாயினார்க்கும் மழவதரையரென் இப்படிக்கு களத்தூர் உடையான்
(29) திருவக்கிசுர உடையான் மழவதரையர் எழுத்து இப்படிக்கு இவை கருப்பூர்- உடையான் அழகியமணவாளப்பெ-
(30) ருமாள் நெரியன்விழுப்பரையர் எழுத்து இப்படி அறிவென் கருப்பூர்உடையான் காக்கைநாயகன் புற்றிடங்கொண்டா-
(31) ரென் இப்படி அறிவென் செனைகுடையான் கடல்அடைத்தபெருமாள் இராசராச விழுப்புரையரென் இப்படி அ-
(32) றிவென் மருதூர்உடையான் வில்லவன விழுப்பரையரென் இப்படி அறிவென் பெழாகுடையான் மதுராந்த விழுப்பரையனென்
(33) இப்படி அறிவொம் உடையார் திருப்பராய்த்துறைஉடைய நாயனார் கொயில் தானத்தாரும் கைக்கொளமுதலிகளும் சொற்ப்படிக்கும் இப்படிக்கு
(34) இவை கொயில்க்கணக்கும் ஸ்ரீமா[கெ]சுர[க்கண]க்கும் கிளியூர்-
(35) உடையான் தெவர்கள்செல்வன் எழுத்து . . . . .
(36) . ரையனென் இப்படி அறிவென் தெவர்கள்செல்[வ]க் கொல்லனென் இப்படி அறிவென் தச்சன் பெரியவ-
(37) னென் இப்படி அறிவென் தெவர்கள்செல்வ தட்டானென் இவர் சொல்ல இந்த வீரதிகைப்ரமாணம் பண்ணினபடிக்கு இவை திருநியமத்து நாராயணபட்டன் எழுத்து
• இம்மாபெரும் ‘வீரதிகை ப்ரமாண’ (வீரதியாகக் கொடுத்த காணிப் பிரமாண) ஆவணத்தை இறுதி செய்து சான்றொப்பமிட்டுள்ள குடித்தலைவர்களின் படிநிலை நம் நாடாளுமை வம்சாவழிக் கோட்பாட்டிற்கு வச்சிரக் கோட்டையாகும்.
• கொடையாளியான மழவதரையர் சான்றொப்பமிட்டதைத் தொடர்ந்து, கருப்பூர் உடையான் நெரியன் விழுப்புரையர், ராஜராஜ விழுப்புரம்யர், வில்லவன் விழுப்பரையர், மதுராந்த விழுப்பரையர் ஆகிய பிராந்திய நாடாளுமைத் தலைமைகளும், திருப்பராய்த்துறை உடைய நாயனார் கோவில் தானத்தாரும், கைக்கோள முதலிகளும் சான்றொப்பமிட்டுள்ளனர்.
• இவர்களுடன் இணைந்து உள்ளூர்ச் சிவில் சமூகத்தின் தூண்களான கொல்லன், தச்சன், தட்டான் மற்றும் இச்சாஸனத்தை அட்சர சுத்தமாக எழுதிய திருநியமத்து நாராயண பட்டன் ஆகியோரின் கூட்டுச் சான்றொப்பங்கள் — இடைக்கால உள்ளாட்சி அமைப்புகள் பேரரசின் திணைக்களங்களைச் சாராமல் தன்னாட்சியோடு இயங்கிய கூட்டு ஜனநாயக முறையை உலகறியப் பிரகடனப்படுத்துகின்றன ஐயா.
நிறைவுரை (Conclusion):
முடிவாக, பெரியவெண்மணிச் சாஸனம் (எண்.590 / SII Vol. 😎 காட்டும் அசல் நிருவாக மற்றும் சமூக-பொருளியல் உண்மைகளின்படி — இக்கல்வெட்டில் மள்ளர் (பள்ளர்) சமூகத்தவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்று தற்காலத்தில் பரப்பப்படும் வாதங்கள் யாவும் அப்பட்டமான வரலாற்றுத் திரிபும், அரசியல் உள்நோக்கம் கொண்ட அறியாமையுமாகும் என்பது அக்குவேறு ஆணிவேறாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலத் தமிழகத்தின் காணி நிலப் பரிமாற்ற இலக்கணத்தின்படி, 'பள்ளன் பிறவி உள்ளிட்ட ஏழு நபர்களின்' பெயர்கள் மனிதர்களாகிய அவர்களைக் குறிக்காமல், அவர்கள் பூர்வீகமாகப் பரம்பரை வாரிசுரிமையோடு நன்செய் சாகுபடி செய்து வந்த நிலப்பரப்பை (Land Holding Division) அடையாளப்படுத்தவே பயின்று வந்துள்ளன. மழவதரையர், காரியப்பேர் சந்திரசரிடம் இருந்து விலைக்கு வாங்கிய சொத்துப் பட்டியலானது — 'பள்ளர் சமூகத்தவர்கள் வேளாண் தொழில் செய்த நிலம், அதனோடான மனை, உழைக்கும் பெண்டிரைக் குறிக்கும் சிறுப்பல வெள்ளாட்டிகள் மற்றும் புலை அடியார்கள்' என்ற காணிச் சொத்துக்களின் தொகுப்பேயன்றி வேறல்ல. 'பாகமும் பாகாஸ்ரீயமும் ஸமஸ்தப்ராப்திகளும்' போன்ற உயரிய சிவில் சட்டச் சொற்கள் யாவும், நிலத்தின் மீதான நீரியல் மற்றும் ஊற்றுரிமைகளோடு அதன் உழவுரிமையையும் மாற்றிய இடைக்கால நிலப் பிரபுத்துவ ஒப்பந்தத்தையே (Feudal Tenancy Contract) பறைசாற்றுகின்றன.
எனவே, விளைநிலங்களை அடையாளம் காட்ட உழவர்களின் பெயர்களை, நிருவாகச் சொற்களையும் இச்சாஸனம் கையாண்டுள்ளது — இடைக்கால நிலப் பொருளியலில் மருத நிலத்து அசல் குடியான பள்ளர் (மள்ளர்) சமூகம் நன்செய் சாகுபடியின் முதன்மை நிருவாகிகளாகவும், 'முடிசோழன் தடி, உட்சிற்று வாய்க்கால்' போன்ற நீர்ப்பாசனக் கட்டமைப்புகளின் உண்மையான சாகுபடித் தலைமைகளாகவும் திகழ்ந்தனர் என்பதை உலகறிய மெய்ப்பிக்கும் அசைக்க முடியாத வச்சிர வரலாற்றுப் பிரகடனமாகும். இணையத்தில் வன்மத்தைப் பரப்புவோர் இத்தகைய அசைக்க முடியாத கல்வெட்டியல் சான்றுகளுக்கு முன்பாக இனி எவ்விதத் தர்க்கமும் செய்ய முடியாது என்பதே இக்கல்வெட்டு நமக்கு உணர்த்தும் இறுதி வரலாற்று உண்மையாகும்.

image.png


image.png
Reply all
Reply to author
Forward
0 new messages