சித்ரா பௌர்ணமியும், மங்கலதேவி கண்ணகியும்.
------------------------------------------
சிலப்பதிகாரம், கண்ணகி, இளங்கோ அடிகள் சார்ந்த விழாவாக, சித்திரை முழுமதி நாள் அமைந்துள்ளது. இதற்கு நீண்ட கால மரபு உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் கண்ணகி தேவிக்கு வழிபாடு, பூசைகள் நடைபெறுகின்றன. செங்குன்றத்து வேங்கைமர நிழலிலிருந்து வானவர் அழைத்துச் சென்ற நாள் சித்திரா பெளர்ணமி எனக் கூறுகிறார்கள். "கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென' இந்திர விழவு ஊர்எடுத்த காதையில் வருஞ் செய்தி. வானியல் பற்றி தமிழ் இலக்கியத்தில் வரும் செய்திகளில் முக்கியமான ஒன்று. சித்திரை தொடங்கிய பன்னிரண்டு மாதங்கள் பற்றிய பாடல்கள் சீவக சிந்தாமணியில் உண்டு. நன்னான்கு மாதங்களாகப் பன்னிரண்டு மாதங்களைப் பிரிப்பதை சாதவாகனர் கல்வெட்டுகளில் காண்கிறோம். வேனில், மழை, பனி என்ற பருவங்கள் இவை. இவை ஒவ்வொன்றையும் இரண்டாக வகுத்துத் தொல்காப்பியர் ஆறு பொழுதுகள் ஆக்கினார். விக்கிரம சகாப்தம் என்ற சித்திரையில் தொடங்கும் மாதம் தமிழகத்தில் கடுங்கோடை. வட இந்திய மரபில் இளவேனில் என்கிறது தொல்காப்பியம். ஆனால், இளவேனிலாக வசந்த இருது தமிழ்நாட்டில் இல்லை. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டில், மழை அடிப்படை. எனவே, தொல்காப்பியர் மழை, பனி, வேனில் எனப் பருவங்களை வரிசைப்படுத்திச் சொல்கிறார். கேரளாவில் தனக்கெனத் தொடர் ஆண்டு அமைக்கும்போது, சிங்க மாசம் என்று ஆவணி 1-ஐத் தேர்ந்தெடுத்தது இதனால் ஆகும். தமிழர்கள் தமக்கென ஓர் தொடர் ஆண்டைத் தொடங்கியபோது திருவள்ளுவர் ஆண்டு எனத் தைப்பொங்கலில் (தை 1) தொடங்குகின்றனர். ராசிச் சக்கரம் பாபிலோனில் இருந்து இந்திய வானியல்/சோதிடத்திற்கு வந்தபோது, ஏனை 11 ராசிகளும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், மகர ராசி மாத்திரம் இந்தியாவின் பழைய வானியலால் அப்படியே கொள்ளப்பட்டது. பாபிலோன் சின்னம் தை மாதத்துக்கு மாத்திரம் இல்லாமல், பாரத வானியல் நிலைகொண்டது. 12 மாதங்களில் தை ஒன்று தான் தனித்தமிழ்ப் பெயர். பொதுவாக, தை என்பது ஸம்ஸ்கிருதப் பெயர் என்பர் (உ-ம்: ஐராவதம் மகாதேவன், ...) ஆனால், திஷ்ய/தைஷ்ய என்பது மூலம் என்றால் திழிய/தைழிய என்றாகும். பௌஷ்ய பௌழிய என்றாதற் போல. மேலும், தை என்பது மிக முக்கியமான தமிழ்ச் சொல்: தந்தை, உந்தை, எந்தை, முந்தை .... என்றும், பிங்கலந்தை, கண்ணந்தை, சாத்தந்தை, கொற்றந்தை, ஆந்தை (ஆதன் + தை), பூந்தை (பூதன் +தை) வருஞ் சொல் இது. ராசி சக்கரத்தில் இந்தியாவின் மகரம்/தை நிலைக்கக் காரணங்களை ஆராயச் சில குறிப்புகள்:
மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
https://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.htmlDivine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.htmlபேரா. கு. சிவமணி ஐயா கட்டுரை தருகிறேன்.
தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள்
கு.சிவமணி
மேனாள் முதல்வர், கரந்தைப்புலவர் கல்லூரி, தஞ்சாவூர்/திருவள்ளுவர்கல்லூரி,பாவநாசம்;
https://nganesan.blogspot.com/2021/04/tolkappiyar-thirunaal-ku-sivamani.html“இன்றைய நிலையில் சித்திரை முழுநிலவு நாள் என்பது (1) உலகெங்கும் புத்த பூர்ணிமா எனவும், (2) 1965 காலகட்டத்தில் சிலம்பொலி செல்லப்பனார், சேலம் (திருச்செங்கோடு) தி. மு. காளியண்ணன் முயற்சியினால் திருச்செங்கோட்டில் சிலப்பதிகாரவிழா- குறிப்பாகக் கண்ணகி விழா எனவும், (3) தமிழகத்தில் சித்திரைத் திருவிழா எனவும் கொண்டாடப்படுகின்றது. மேலும், இளங்கோ அடிகள் நாள் என அமையச் சிறந்த நாள் சித்திரைப் பௌர்ணமி ஆகும்: “சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று நாடெங்கும் பரப்பிய நம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல் செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச் சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத் தொடங்கி வைக்கச் செய்தார்.
இந்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 நாள் நிகழ்ந்த இந்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும் சித்திரைத் திங்களின் சித்திரை முழுநிலவைக் கருதியும் எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திர விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24ம் நாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. ” (இதயத்தை அள்ளும் இளங்கோ அடிகள், ஔவை ந. அருள்).
உலக அளவிலும் தமிழகத்திலும் வேறு பல விழாக்கள் சித்திரை முழுநிலவு நாளில் இடம்பெறுவதால், ’பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ எனும் நாட்டுப்புற மொழிக்கேற்ப, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருநாளையும் அவற்றுடன் சேர்ப்பது சிறப்பாகாது.
ஏனென்றால் தொல்காப்பியத்துக்கு மற்றெவற்றுக்கும் இல்லாத் தனிப்பெரும் புகழும் பெருமிதமும் உண்டு. இன்றியமையா எடுத்துக்காட்டாக இரண்டைக் குறிப்பிடலாம்: (1) 2000-ஆண்டில் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகப் மொழியியல்வாணர்கள் ஏ.எல்.பெக்கர், கெய்த் டெய்லர், இந்திய மொழியியலாளர் ஏ.கே இராமானுசன் ஆகியோர் ஒரு நேர்காணலில் தொல்காப்பியத்தின் நுட்பங்கள் பலவற்றையும் வியந்துரைத்தனர்; அமெரிக்க நூலகங்கள் தோறும் தொல்காப்பியர் சிலை நிறுவப்படவேண்டும் என்றனர்; ஏனென்றால், ’ தீர்முடிவாக, தொல்காப்பியர் ஒரு மொழியியல் குருநாதர்’ (you would call (Tolkappiyar) a linguist’s ’ultimate Guru’) எனப் புகழாரம் சூட்டினர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். (2) உலகச் செவ்வியல்மொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்பும் தலைமையும் பெற்றது என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஒப்பியன் மொழிநூல் (1940), The Primary Classical Language of The World(1966) நூல்கள் எழுதியபோது இங்குள்ள மொழிநூலாருள் பலர் முகஞ்சுளித்தனர்; ஆனால், மாற்றிலக்கணக் கோட்பாட்டுத் தந்தை என மொழியியல் உலகம் மதித்துப்போற்றும் நோவாம்சோம்ஸ்கி, 22.11.2001 அன்று கல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமது இலக்கணக் கோட்பாட்டை எடுத்தியம்பி அவற்றுடன் பொருந்துகிற ஒரு மொழி முதற்படியாகத் தமிழ்மொழி என விளம்பியபோது அவர்கள் மௌனஞ்சாதித்தனர். சோம்ஸ்கியின் ஆய்வு முடிபுக்கு அடித்தளமாக அமைந்தது தொல்காப்பியம்.
இன்று உலகெங்கும் காதலர் நாள், தந்தையர் நாள், அன்னையர் நாள் போன்றவை இந்தநாளில்தான் எனத் திட்டவட்டமாக அமைகின்றன. அதுபோன்று தொல்காப்பியர் திருநாளும் தனிநாளில் அமையவேண்டும்; எனவே சித்திரை முதல்நாள் தொல்காப்பியர் திருநாள் எனக் கொள்ளலாம். மேலும் முழுநிலவுநாளை அடுத்துத் தேய்பிறை தொடங்குகிறது. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போல’ எனக் கலித்தொகை(5) கூறுவதைப் போன்று, திருவிழா முடிந்த மறுநாளே மகிழ்ச்சி அலைகள் மறைந்து மனம் வெறிச்சோடுகிறது. அதுமட்டுமன்றிப் பஞ்சாங்கத்தின்படி முழுநிலவுநாள் ஆண்டுதோறும் மாறக்கூடியது. சித்திரைத் திங்களில் எப்போது வேண்டுமானாலும் அமையும். சித்திரை முதல்நாள் என்றால் அன்று முகிழ்க்கும் மகிழ்வுணர்வு பிறைநிலா போல வளர்ந்து முழுநிலாநாள் வரையிலும் தொடர்ந்து முழுமைபெறும். ஆகவே சித்திரை முதல்நாளே தொல்காப்பியர் திருநாள் என்பதை அறிஞர்கள் சிந்திக்கலாம். ”
கர்நாடகாவில் வழங்கும் கண்ணகி கதையில் அவள் பெயர் சந்திரா எனச் சந்திரனோடு தொடர்பு படுத்தப்படுகிறாள். கண்ணகி தெய்வம் ஆகிய அயிரைமலை என்றழைக்கும் பழனி மலைத்தொடரில் கம்பங்கூடலூரில் உள்ள மங்கலாதேவி கோட்டம். இப்போது தமிழக, கேரள எல்லையில், கேரளாவிலே இருக்கிறது. சித்திரா பௌர்ணமி (பூரணை) நாளில் வானுலகு கண்ணகி அங்கிருந்து ஏகியதால் “ஶ்ரீ பூரணிகிரி ஆளுடைய நாச்சியார்” என்கிறது பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு. பூரணி என்ற பெயரை ராஜராஜசோழன் காலத்தைய தேய்ந்துபோன வட்டெழுத்துக் கல்வெட்டிலும் காண்கிறோம். சேரநாடு சங்க காலத்தில் குடமலைநாடு, குணமலை நாடு என இரு பகுதிகள். கம்பம் கூடலூரில் உள்ள கண்ணகி தனியாக நிற்கிறாள். மங்கலாதேவி. பூரணை நாளில் தெய்வம் ஆனாள். எனவே, பூரணி. கர்நாடகாவில் ‘சந்திரா’ என்றே கண்ணகி கதை இருக்கிறது. மங்களூர் கண்ணகியின் பெயரால் அமைந்தது என்பார் உவேசா.
கண்ணகியின் இக் கோயிலைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் (Annals of Oriental Research, Volume 1, University of Madras) பாரதியார் போற்றிய மு. ராகவையங்கார் தான். இச் செய்தியைக் கண்ணகி கோட்டம் பற்றி வரும் எந்தக் கட்டுரை, நூல்களிலும் காணோம். 1904-லே ஆங்கில அரசுக்கு இக்கோயில் தெரியவந்தது. 1920களில் ஒரு கல்வெட்டை வெளியிட்டனர். இப்போது பிரபலமாக உள்ள பெயர் சி. கோவிந்தராசனார் தான். ஆனால், அவருக்குச் சொன்னவர் கண்ணகி கோட்டத்தருகே, ஏல விவசாயிகள் சங்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார் ஆவார். அவர் ராகவையங்கார் நூல்களைப் படித்திருக்கலாம். புலவர் சோமசுந்தரத்தின் மாணவர்கள் தேனியில் இருந்து சென்று, சி. கோவிந்தராசனாரை அழைத்துவந்தனர். பின்னர் புலவர் செ. இராசுவும் வந்தார். அப்போது (1976) புலவர் செ. இராசு எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பிவைத்தார், கொற்றவையின் வடிவமாக, மதுரையை எரித்து, 14 நாள் நடந்து சென்ற மலை இது. கொற்றவை வாகனம் வேங்கை. எனவே தான், குறிப்புப்பொருளை வைத்து, வேங்கை மர நீழலில் நின்றாள் எனப் பலமுறை பாடினார் இளங்கோ அடிகள்.
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.htmlகண்ணகி விழா சித்ரா பௌர்ணமியில், மங்கலாதேவி கோட்டத்திலும், திருச்செங்கோட்டிலும், சிலம்புச் செல்வர் மபொசி அவர்களாலும் கொண்டாடப்படுகின்றன. நேரடியாக, இளங்கோ அடிகள் சொல்லாவிட்டாலும், கண்ணகி தெய்வம் ஆன நாள் சித்ரா பௌர்ணமி எனக் கூற, பூரணி என்றும், சந்திரா என்ற பெயர்களும், மங்கலாதேவி கோட்டம் “ஶ்ரீபூரணிகிரி” என 1200+ ஆண்டுகளாய் அழைக்கப்படுதலாலும் அறிய முடிகிறது. கண்ணகி சோழ நாட்டுப் பெண். மருத நிலம். எனவே, வேந்தன் எனத் தொல்காப்பியம் அழைக்கும் இந்திரன் விழாவின் சித்ராபௌர்ணமியில் கோவலன், தேவர்களுடன் வந்து வேங்கை மரத்தின் அடியே நின்ற கண்ணகியை வானுலகுக்கு அழைத்துச் சென்றான் என்பது பொருத்தமே. பௌர்ணமிக்கு அடுத்து 14 நாள் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்). அதாவது, இந்த உலகத்தில் அவள் வாழ்க்கை தேய்ந்து, வானுலக தெய்வம் ஆனாள்.
என் வினா: கண்ணகி சித்ரா பௌர்ணமியில் வான லோகம் சென்றாள் என்ற செய்தி நாட்டார் இலக்கியங்களில் இந்தியாவிலோ, இலங்கையிலோ உண்டா?
நா. கணேசன்