அன்றாட வாழ்வில் ஆங்காங்கு நாம் சந்திக்கக் கூடிய ஆளுமைகளில் ஒரு தந்தையும் இரு மகன்களும்...
/// போன வருடம் தந்தையர் தினத்தில் எழுதியது...
இன்றைய சிறுவர்கள் நாளைய நிர்வாகிகள்...
வாண்டுகளுக்கு ஸ்கூல் டைரியில் மாணவர் விவரங்கள் கொடுத்து புகைப்படமும் ஒட்ட வேண்டும் என்று தேடினால் எல்லாம் பழைய புகைப்படங்கள்.
சமீபத்தில் எடுத்தது எதுவும் இல்லை என்பதால் புகைப்படம் எடுக்கக் காலையிலேயே கிளம்பினோம்.
ஏரியாவில் இருந்த ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்தான். எப்படியும் ஒரு பதினைந்து வயதிற்கு மேல் இருக்காது.
"பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்..." என்றபடி உள்ளே நுழைய; "பாஸ்போர்ட் சைஸ் போட்டோவா... வாங்க..." என்று உள்ளே புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
வாண்டுகள் குஷியாக உள்ளே ஓடிச்செல்ல, அம்மணி தயங்கியபடி நின்றார்.
"பெரியவங்க யாரும் இல்லையாப்பா??" என்று அவர் கேட்க,
"பதினஞ்சு வருசமா இந்த கடை இருக்குது'க்கா" என்றான்.
"உனக்கே பதினஞ்சு வயசு தான் இருக்கும்..." என்று அம்மணி புன்னக்கைக்க;
"இல்ல நான் கடைய தான் சொன்னேன்... நான் எடுப்பேன்..." என்று அந்த பையன் கேமராவை எடுக்க; அம்மணி முகத்தில் அத்தனை திருப்தி இல்லை.
வாண்டுகளுக்கு புகைப்படம் எடுத்துவிட்டு அப்படியே குடும்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கிளம்பினார். இப்போது இந்த சிறுவன் ஒழுங்காக எடுப்பானா என்றே அவருக்கு சந்தேகம்.
வாண்டு அந்த பையன் கையில் கேமராவை பார்த்ததும் வேகமாக சென்று இருக்கையில் அமர்ந்து விட்டான். புகைப்படம் ஒழுங்காக வருமா அல்லது நம்மை வைத்து இந்த பையன் ட்ரைனிங் எடுப்பானோ என்று என் மனதிற்குள்ளும் ஓட, வாண்டு சரியாக அமர்வதற்கு உதவி செய்தேன்.
அந்த பையன் ஒரு காலில் முழங்காலிட்டு கேமராவை தூக்கிப் பிடித்தபடி, தலையை எவ்வளவு சாய்க்க வேண்டும், எவ்வளவு நிமிர்ந்து அமர வேண்டுமென்று அழகாய் சொல்ல, வாண்டு சொன்னதுபோலெல்லாம் செய்து புன்னகைக்க; ஒரே கிளிக்... ஒரே போட்டோ... அழகாக எடுத்துவிட்டான்.
"ஓகேவா'ண்ணா?" என்று காண்பிக்க; எனக்கு திருப்தியாக இருந்தது.
வாண்டுகளுக்கு வருடம் ஒரு முறை புகைப்படம் எடுப்பதால்; பல முறை ஸ்னாப் எடுத்து; எது நன்றாக உள்ளதோ அதைத் தேர்வு செய்வோம்.
ஆனால் இம்முறை வாண்டுகள் இரண்டும் சரியாக ஒத்துழைப்பு தர; இருவருக்குமே ஒரு ஒரு கிளிக் மட்டுமே அந்த சிறுவன் எடுத்தான். அதன் பின் எனக்கும் பாஸ்போர்ட் சைஸ் எடுக்கவேண்டியிருக்க, நானும் எடுத்துக்கொண்டேன்.
அந்த பையனின் திறமை, ஒழுங்கு, நேர்த்தி எல்லாம் பிடித்துப்போக, அம்மணி வேகமாய் வாண்டு இரண்டையும் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
"இல்லக்கா... எனக்கு full frame எடுக்கத் தெரியாது" என்றான்.
"சரி ஓகே" என்று புன்னகையோடு, "வைட் background வேணும்.." என்று சொல்ல,
"வைட் தான்'க்கா வரும்.." என்று கணினியில் அமர்ந்து கேமராவிலிருந்து புகைப்படங்களை கணினிக்கு மாற்றினான்.
அதாவது இந்த மாதத்தில், இன்றைய தேதிக்கு ஒரு folder புதிதாய் உருவாக்கி, இந்த புகைப்படங்களை அங்கே மாற்றிவிட்டு; அதன் பின்னே எழுந்து எங்களுக்கு விலை சொன்னான்.
அதோடு ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்ல, சரி திரும்ப வந்து வாங்கிக்கொள்கிறோம் என்று சாப்பிட சென்றுவிட்டோம்.
வேலையெல்லாம் முடித்துவிட்டு மறுபடியும் ஸ்டூடியோ சென்றால், அந்த பையன் இல்லை. அவனைவிட இன்னும் சின்ன பையன் ஒருவன் தான் வாசல் அருகே இருந்த கணினியில் அமர்ந்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.
"போட்டோ கொடுத்துட்டு போனோம்... ரெடியா?" என்று உள்ளே நுழைய,
"காலைல கொடுத்தீங்களா?" என்று உள்ளே சென்று பார்த்தவன்; அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
"ஒரு பைவ் மினிட்ஸ் உட்காருங்க... பிரிண்ட் போடுறேன்" என்று சொல்லிவிட்டு அங்கே பிரிண்டர் அருகே இருந்த கணினியில் அமர; எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
"அடேய்... நீ ஒர்க் பண்ணப்போறியா??" என்று மனதிற்குள்ளேயே யோசித்தபடி அவனைப் பார்க்க, அவன் எதற்கும் அசராமல், கணினியில் தனது வேலையில் இறங்கிவிட்டான்.
அம்மணி உள்ளே சென்று அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க, அந்த பெரிய பையன் எந்த folder இல் வைத்திருக்கிறான் என்று சரியாக தேடிக் கண்டுபிடித்து வேலையை ஆரம்பித்து விட்டான்.
பிரிண்ட் வேலை மட்டும்போல என்று நாங்கள் நினைத்திருக்க, எங்கள் மூவரின் புகைப்படத்திற்கும் எடிட்டிங் இன்னும் செய்யவே இல்லை.
"என்னப்பா இன்னும் ரெடி பண்ணலையா?? இன்னொரு பெரிய பையன் இருந்தானே??" என்று அம்மணி விசாரிக்க,
"ஆமா... அவன் இன்னும் பண்ணல... இருங்க நான் ரெடி பண்றேன்.." என்று போட்டோஷாப்பில் வேலையை ஆரம்பிக்க, எனக்கு புருவங்கள் மேலேறியது.
"போட்டோஷாப்லாம் இந்த பொடியனுக்கு தெரியுமா..." என்றே எனக்கு ஆச்சர்யம்.
அந்த சிறுவனோ அமைதியாக எங்கள் ஒவ்வொருவர் புகைப்படமாக எடுத்து எடிட் செய்து, கலர் காண்ட்ராஸ்ட் எல்லாம் சரியாக்கி, "ஓகே'வா அங்கிள்..." என்று கேட்க எனக்கு புன்னகை மட்டுமே.
"ஓகே" என்று சொல்ல அவன் அடுத்த வாண்டின் புகைப்படத்தை எடுத்து ஒர்க் பண்ண ஆரம்பித்துவிட்டான்.
"நீ என்ன படிக்குற?" என்று அம்மணி கேட்க
"எயித் (எட்டாம் வகுப்பு) படிக்கிறேன் ஆண்ட்டி" என்று பதில் சொன்னாலும் பார்வை கவனம் எல்லாம் கணினியில் இருந்தது.
"அப்போ உன் அண்ணா?" என்று கேட்க; "அவன் டென்த் படிக்கிறான் ஆண்ட்டி..." என்று வேலையைத் தொடர்ந்தான்.
மூன்று புகைப்படங்களையும் ஒர்க் முடித்து, பழைய புகைப்படங்களை அங்கிருந்து தூக்கிவிட்டு அன்றைய நாளில் இந்த புகைப்படங்களை வைத்துவிட்டு பிரிண்ட் கொடுத்தான்.
"எனக்கு மெயில்'ல soft copy ஒன்னு அனுப்பிடுறியாப்பா?" என்று கேட்க; "ஓகே அங்கிள்..." என்றவன் அதே புகைப்படங்களைக் கணினியில் இருந்த shared network folder இல் போட்டுவிட்டு, எண்ட்ரன்ஸில் இருந்த கணினிக்குச் சென்று அங்கிருந்து புகைப்படங்களை எனக்கு அனுப்பிவிட்டவன்; பொறுமையாக பிரிண்ட் எடுத்த புகைப்படங்களைக் கத்தரிக்க எடுத்துச் செல்ல, "இன்னைக்கு உங்க அப்பா லீவா..." என்று சிரித்தபடி கேட்டார் அம்மணி.
"இல்லை... இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க..." என்று சொன்னபடி அவன் கத்தரிக்க ஆரம்பிக்க; அவனது அப்பா வந்தார். அதாவது கடையின் உரிமையாளர் வந்தார். எங்களிடம் எதுவும் விசாரிக்காமல் அவனிடம் மட்டுமே பேசினார். இந்த பொடியனிடம் ஏதோ விசாரிக்க, பதில் சொன்னபடி புகைப்படத்தைக் கத்தரித்தான்.
"அவன் இப்போ தான் டியூஷன் போனான்" என்று சொன்னதை மட்டும் கவனித்தேன். ஏனென்றால் கவனம் புகைப்படம் ஒழுங்காக கத்தரிக்கப் படுகிறதா என்று அதில் தான் என் கவனம் இருந்தது.
அம்மணி அவனைப் பார்த்துக்கொண்டே 'உன் பேர் என்ன?' என்று விசாரித்தார். கிரிஷ் என்று சொல்ல, அவன் அண்ணன் பெயரையும் விசாரித்தார். ஜானேஷ் என்று சொன்னான்.
"குட் ஜாப்" என்று நாங்கள்... அதாவது வாடிக்கையாளர் பேசுவதை எல்லாம் தனியாக அவனே தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனது தந்தை உள்ளே ஏதோ வேலையில் இருந்தார்.
'சின்ன பசங்க என்ன ஒழுங்கா எடுத்துறப் போறாங்க' என்று அசட்டை இல்லாமல், 'எப்படி தான் எடுக்குறாங்க பார்ப்போமே; அதிக பட்சம் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ... ஒழுங்காக எடுக்கவில்லை என்றால் கடந்துவிடுவோம்' என்று முன்னேறிச் சென்ற ஒரு முடிவு ஒரு பிரம்மாண்டத்தை தான் எனக்குக் காட்சியளித்தது.
ஒரு போட்டோ எடுத்து; அதை பிரிண்ட் போட்டுக்கொடுத்தது பெரிய பிரம்மாண்டமா என்று கேட்டால் நிச்சயம் பிரம்மாண்டம் தான். ஏனென்றால் அந்த சிறுவர்கள் இருவரும் போட்டோ மட்டும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட அந்தத் தொழிலையே தான் சிறப்பாகச் செய்தார்கள் என்று நான் சொல்வேன்.
'போட்டோ தான எடுக்கணும், வாங்க நான் எடுக்கிறேன்' என்ற தன்னம்பிக்கை.
'பதினஞ்சு வருசமா இந்தக் கடை இருக்குது' என்று சொல்லி வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சம்பாரித்தல்.
'எனக்கு full frame எடுக்கத் தெரியாது' என்ற தெளிவு.
'gpay பண்ணிடுங்க' என்ற நேர்மை.
அதோடு கூட செய்த வேலையில் இருந்த நேர்த்தி, ஒழுக்கம் என்று பெரியவன் ஒருவாறு கவர்ந்தான்.
'அவன் எதுவும் செய்யலேயே..' என்று குற்றம் கண்டுபிடிக்காமல், சூழ்நிலையைக் கையில் எடுத்த சின்னவன்...
'ஒரு பைவ் மினிட்ஸ் இருங்க' என்று வாடிக்கையாளரின் பொறுமையை சோதிக்காமல் கையாளுதல்...
'இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க' என்று தன் அப்பாவிற்கு ஓய்வு தேவை; அவர் எந்நேரமும் இருக்க முடியாது என்ற புரிதல்; அவனிடமும் இருந்த நேர்த்தி, கவனம் எல்லாம் இன்னும் கவர்ந்தது.
இவர்களுக்கு மேல், வேலையின் நடுவே உள்ளே வந்தாலும்; நான் தான் வந்துட்டேனே; நீ கிளம்பு என்று சிறியவனை விரட்டாமல், ஒதுங்கி நின்ற தந்தை என்று யோசிக்க நிறைய இருந்தது.
கிட்டத்தட்ட அந்த ஸ்டுடியோவில் அவர் இல்லாமலேயே இந்த சிறுவர்கள் இருவரும் சமாளிக்கும் அளவிற்கு பிள்ளைகள் இருவருக்கும் வேலையோடு கூட அதில் ஒழுக்கம், நேர்த்தி, நேர்மை எல்லாம் சேர்த்தே கற்றுக்கொடுத்திருக்கிறார்.
உலக தந்தையர் தினம் இன்று... தந்தையின் பொறுப்பு, இருப்பு, வளர்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் மிகமிக அவசியம் என்று உணர்ந்து, நம் தந்தையின் இருப்பை, அவரை கொண்டாடவே இந்த நாளை நாம் அனுசரிக்கிறோம்.
அப்படியான இந்த நாளில், இந்த தந்தையின் வளர்ப்பை எழுதி வைப்பது மனதில் ஆகப்பெரும் திருப்தியாக உள்ளது.
அதோடு இன்னொன்றையும் எனக்கு நானே மறுபடியும் சொல்லிக்கொண்டேன். எவரையும் சாதாரணமாக எடைபோடக்கூடாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதோடு கூட இந்த விஷயம் எங்களுக்கு ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் உண்டு - அதாவது வாய்ப்பு என்பதை கொடுக்காமல், நாமே ஒரு முடிவிற்கு வரக்கூடாது.
அந்த சிறுவர்கள் இருவருக்கும், 'சின்ன பையன் என்ன செய்வான்' என்று முடிவு செய்து வாய்ப்புக் கொடுக்காமல் போயிருந்தால், அவர்களது இந்த நிர்வாகத் திறமையை என்னால் பார்த்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஸ்டியோவை அவர்கள் நடத்தினார்கள் என்றால் அது மிகையல்ல. அப்படி அவர்களை வழி நடத்தும் அந்த தந்தைக்கு வாழ்த்துக்கள். அவரது பெயர் ஜெய்க்குமார் என்று நினைக்கிறேன், ஸ்டியோவில் அந்த பெயரில் ஒரு gmail id பார்த்த ஞாபகம்.
இன்னும் மென்மேலும் இந்த சிறுவர்கள் வளரட்டும்.
இவண்
கார்த்தி சௌந்தர்
#karthisounder
#FathersDay2025
#FatherhoodJourney///
தெரிவு: சக