Groups
Groups

இயக்குநர் இமயமே!

7 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jun 10, 2026, 1:59:14 AM (22 hours ago) Jun 10
to வல்லமை

இயக்குநர் இமயமே!
__________________________________

தமிழர்களை
தமிழர்களே என‌
யாராவது
அழைக்க மாட்டார்களா
என்று
இந்த தமிழ் மண் ஏங்கிக் கிடந்ததை
சுருதி சேர்த்து
திரையில் ஒலித்தாயே!
அந்த ஒலியா மரணமடைந்து விட்டது?
தமிழின் இந்த அதிர்வு எண்கள்
இன்னும் நம்ப வில்லை.
எட்டு கோடி இதயங்களும்
துடித்து துடித்து
எதிரொலிக்கிறது இங்கே.
எத்தனை படங்கள்?
அவை
உன் ஏக்கங்களின்
உன் கனவுகளின்
கையெழுத்துக்கள் அல்லவா?
அந்த "நிழல்கள்" போதுமே
எத்தனை கனற் சூரியன்கள்
உமிழ்ந்து நம்மை உயிர்வித்தன.
கிராமத்தின் நாள முடிச்சுகள்
அத்தனையும்
உன் பிலிம்சுருள்களில் தான்.
"பதினாறு வயதினிலே"
என்று
தொடங்கினாயே
அந்த நம் மண்ணின் கனவுகள்
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும்
இளமையும் சீற்றமும் பொங்கும்
அந்த பதினாறு வயது தானே
நம் ஊழி நெருப்பு.
நோய் உன்னை
அங்குலம் அங்குலமாக‌ வதைத்தபோதும்
அதையும் உன்
ஏதாவது ஒரு படப்பிடிக்கு
வைத்துக்கொள்ளலாம் என்று தான்
நீ நினைத்திருப்பாய்.
மருத்துவ மனை நோக்கி
உன் "க்ளாப் ஸ்டிக்கு"கள்
ஏன் அவசரம் காட்டவில்லை
கலையின் மைந்தனே!
மைந்தன் மறைந்த காட்சியின்
காமிராக்கண்களே அல்லவா
உனக்குள் எப்போதும்
கண்ணீரின் கனமழையை
கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்தது?
உனக்கு விருதுகள்
காத்துக்கொண்டிருக்கலாம்.
அந்த ரத்தினங்களில்
நீ செதுக்கிய கலைவடிவம்
கதைகளை உரக்கச்சொல்லி
எழுந்திரு மனிதா என்று
அதிர வைத்ததில்
"இயக்குநர் இமயமே"
அந்த இமயமும் கூட‌
ஒரு மலர் வளையத்தோடு வந்து
நின்றிருக்கிறதே.
கொஞ்சம் நிமிர்ந்து பார்
மீண்டும் எழுந்து குரல் கொடு
"என் இனிய தமிழ் மக்களே"....
எங்களுக்கு அது
நன்றாக கேட்கிறது!
__________________________________
சொற்கீரன்

Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu