அன்றொருநாள்: மார்ச் 7
‘அழேன் யக்கே’
‘அழேன் யக்கே’ (Jean Valjean in Victor Hugo’s 1862 novel: Les Misérables.) கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியாரின் படைப்பு. மேற்கூறிய பிரபல ஃப்ரென்ச் நாவலை ‘ஏழை படும் பாடு’ என்று மொழியாக்கம் செய்ததாக சொல்வார்கள். இருக்கலாம். ஆனால், எனக்கு ‘ஏழை படும் பாடு‘ தான் ஒரிஜினல். சிறுவயதில் படித்தது. அழேன் யக்கே என்ற ‘ஊருக்கு இளைத்தவனை’, கவியோகி அவர்கள் ஒரு மிருதுவான கதாபாத்திரமாக படைத்து, என்னை அழவைத்தது மறக்கமுடியாத இலக்கிய அனுபவம். மனித நேயத்தில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டதிற்கு, கவியோகி மஹரிஷி அவர்கள் தான் மூலாதாரம். இன்று அவருடைய அஞ்சலி தினம். மார்ச் 7, 1990 அன்று அமைதியாக, நிம்மதியாக, உறங்கும் நிலையிலேயே, தன்னுடைய 93வது வயதில், மஹாசமாதி அடைந்தார். இன்று நெடுஞ்சாங்கிடையாக விழுந்து அவரை வணங்கி, இவ்விழையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
யான் செய்த பாக்கியம், அருமையான உசாத்துணைகள் கிடைத்தன. அவற்றை மீண்டும், மீண்டும் படித்த பின், அவற்றை சுருக்காமல், காப்புரிமையை உரைத்து, நன்றி நவின்று, இந்த இழையின் ‘உமையொரு’ பாகமாக இணைத்து அளிக்கிறேன். சில பகுதிகளை நீலமேஹத்தில் பொருத்தியிருப்பது, உங்கள் கவனத்தை ஈர்க்கவே. முழு கட்டுரையை படிப்பது தான், புஷ்பாஞ்சலி.
இன்னம்பூரான்
07 03 2012
p://www.tamilheritage.org/kidangku/sudananda/ky1.jpg
![Inline image 1]()
*
ரோஜா: நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
"தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான்
திசைமொழியாம் ஆங்கிலத்தில் திறமை மிக்கான்
மென்மைமிகும் பிரெஞ்சு மொழியை விரும்பிக் கொண்டான்
பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்த பாரதி மெய்ஞ்ஞானப் பண்பில்
மிக்கத் தன் மொழியே தலைசிறந்த மொழியா மென்று
தமிழுக்கே பணிபுரியும் தவசியானான்!":
பாரிஜாதம்: தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது:
யோகியார் பற்றிய முன்னுரை:
கவியோகி சுத்தானந்த பாரதியார் குறித்து நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய "எப்படிப் பாடினரோ அடியார் - அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!" என்ற பாடலை நினைத்துப் பார்க்கலாம். அல்லது எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான இந்தப் பாடலை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அது:- "இல்லையென்பான் யாரடா? என் அப்பனைத் தில்லையிலே பாரடா! கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன் காட்சியளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை, இல்லையென்பான் யாரடா?" இந்தப் பாடலும் நமக்கு கவியோகியை நினைவு படுத்தும். மற்றொரு பாடல் "அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே" என்பது. அடுத்தது "ஜகஜ்ஜனனீ சுகவாணி கல்யாணி", "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்", “சகல கலா வாணியே, சரணம் தாயே!" என்றொரு பாடல். இது அந்தக் காலத்தில் பல பள்ளிக்கூடங்களில் காலையில் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படி அந்தக் காலத்தில் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். இவற்றிலெல்லாம் மிகச் சிறந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது "பாரத மகாசக்தி காவியம்" எனும் படைப்புதான்.
இவரது படைப்புக்கள் பலப்பல. இவர் ஒரு சிறந்த இலக்கிய வாதி. ஆன்மீக உலகத்திலும் கொடிகட்டிப் பறந்தவர். மகாத்மா காந்தி விரும்பிய "உலகமே ஒரு குடும்பம்" என்பது யோகியின் பார்வை. இவருக்கு ஜாதி, மதம், இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. சுத்த ஆன்ம யோக நெறிமுறைகளே இவரது வாழ்க்கை.எட்டு வயதிலேயே சில மகான்களின் கருணையால் குறிப்பாக இவரது உறவினரும் மாபெரும் யோகியுமான பூர்ணானந்தர் என்பவரால் பேரின்பப் பாதையை அறிந்து கொண்டவர். இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படிப் பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது.
சுத்தானந்த பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். தமிழில் கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாவல் முதலியன இவரது புகழ் மிக்கப் படைப்புகள். மொழிபெயர்ப்புப் பணியிலும் இவர் தனி முத்திரை பதித்தவர். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" எனும் மகாகவி பாரதியின் வாக்கைச் செயல்படுத்திக் காட்டியவர். பல அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இத்தாலிய மகாகவி தாந்தே வரலாறு, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வரலாறு, பிரெஞ்சு இலக்கிய மேதை விக்டர் ஹியூகோவின் அற்புதமான நாவலான "லே மிசரபிளே', "லாஃபிங் மேன்" போன்றவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். விக்டர் ஹியூகோவின் 'லே மிசரபிளே'தான் பட்சிராஜா பிலிம்ஸ் நாகையா நடித்த "ஏழை படும் பாடு" எனும் படமாக வெளிவந்தது. 'லாஃபிங் மேன்" கதையை "இளிச்சவாயன்" என்று மொழிபெயர்த்து எழுதினார்.
இளமைப் பருவம்.
இவரது இளமைக்காலம் பற்றி அதிகமாக யாரும் எழுதாவிட்டாலும் இவரே ஒரு காலத்தில் சில பத்திரிகைகளில் எழுதியிருக்கிற கட்டுரையிலிருந்து சில செய்திகள் தெரிய வருகின்றன. "சோதனையும் சாதனையும்" எனும் நூலில் இவர் தன் சுயசரிதையை விரிவாக எழுதியிருக்கிறார். அது தவிர சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் அருகிலுள்ள சோழபுரத்தில் யோகியார் தொடங்கிய உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த அவரது உறவினர் திரு ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயர் எழுதி வெளியிட்ட "Experiences of a pilgrim soul" எனும் வாழ்க்கை சரிதமும் இவர் வரலாற்றைக் கூறுவதாகும். சிவகங்கை இவரது ஊர். தந்தை பெயர் ஜடாதரர். தாயார் பெயர் காமாட்சி அம்மாள். இவர் பிறந்தது 11-5-1897. இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. இவர்கள் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தென் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை இவற்றில் தேர்ந்தவர்கள்.அந்த குடும்பம் பக்தி நெறியில் ஈடுபட்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்பது. இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் மாபெரும் ஞானியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார். இவரது தகப்பனார் வக்கீலாக இருந்தவர். பள்ளியில் பயிலும் காலத்திலேயே இவருக்குக் கம்பன் கவியமுதில் மனம் நாட்டம் கொண்டார். திருக்குறள் இவர் மனதைக் கவர்ந்தது. தந்தை ஜடாதரர் இவரது கல்வி, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வக்கீல். நல்ல செல்வந்தர்.
இவருடைய தாய்வீட்டில் எல்லா வசதிகளும் இருந்த போதும் மனத்தில் மகிழ்ச்சியில்லையாம். அமைதி இல்லையாம். சிவகங்கையில் தந்தை வீட்டில் அமைதியையும், மதுரையில் தாய்மாமன் வீட்டில் உலகத்தையும் அறிந்தேன் என்கிறார் இவர்.
இளம் வயதிலேயே சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று பெற்றோருடன் சேர்ந்து ஹரிகதை, பஜனை இவற்றை நடத்தி வந்தார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது சிதம்பரம் ஆடல்வல்லான் ஆலயத்துக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். நெஞ்சம் நெகிழ்ந்து அவர் மனதில் தோன்றியது ஒரு தமிழ்ப்பாட்டு. அதுதான் நான் முன்பே சொன்ன "எப்படிப்பாடினரோ, அடியார் அப்படிப்பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!" எனும் பாட்டு.
"எப்படிப் பாடினரோ - அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே!
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும்
பொருளுணர்ந்து உன்னையே (எப்படிப்)
குருமணி சங்கரரும்
அருமைத் தாயுமானரும்
அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி
காதலினால் உருகி, கனிதமிழ்ச் சொல்லினால்
இனிதுனை அனுதினம் (எப்படிப்)
சிதம்பரம் சிவகாமி நடராஜப் பெருமான் திருவருளால் முதன்முதல் கவிபாடி அரங்கேற முடிந்தது சுத்தானந்தரால்.
தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவருக்குத் தமிழ் போதித்தார். இலக்கணம், இலக்கியம் முதலானவற்றை முறையாகப் பயின்றார் இவரிடம். யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் இவர் ஒரு குறள் எழுதிக் காட்டினார். அது:
"தெய்வ வொளிதனையே தேடு, பிறவெல்லாம்
கைநழுவும் கால்த்திற்காண்" என்பது.
இதைக் கண்ட ஆசிரியர் "நீ எழுது. மேன்மேலும் எழுது, உன்னிடம் கலைமகள் அருள் நிறைந்திருக்கிறது, புலமை இருக்கிறது" என்றார். தன் இளமைக் காலத்திலேயே தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். "மில்டனில் தாந்தேயைக் காண்கிறேன், தாந்தேயே என் கவிக்கனவின் தந்தை" என்கிறார்.
மதுரை மீனாட்சி அருளால் யோகியானது.
இவரது இளம் வயதில் தனது தந்தையை இழந்து, இவரும் இவரது தாயாரும் மதுரையில் இருந்த இவரது தாய்மாமா வீட்டில் தங்கி படித்தார். பெரிய மாமாவின் பெயர் வக்கீல் ராமசாமி ஐயர். ஆங்கிலத்தில் பெரும் புலவர். ஜபம், தியானம், பூஜை, பாராயணங்கள் இவைகளை செய்து வந்தார். தானே ராட்டையில் நூல் நூற்று கதர் வாங்கி அணிவார். அவரது மாப்பிள்ளை ஒரு ஞானி. சதா தத்வமசி என்று வாழ்ந்தார். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு என்றார். அவர் சொன்னார், "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றார்.
சுத்தானந்தரின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இப்படி அவர் குடும்பத்தில் அனைவர் மீதும் இவருக்குப் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.
சுத்தானந்தர் கல்லூரிப் படிப்பை முடித்தபின் இவரை லண்டனுக்கு அனுப்பி பார் அட் லா படிக்கவைக்க வேண்டுமென்பது மாமனின் விருப்பம். தனக்குப் பின் தன் வக்கீல் தொழிலைத் தன் குடும்பத்தார் செய்யவேண்டுமென்பது அவரது ஆவல். ஆனால் இவருக்கு வேலைக்குப் போகவேண்டும், சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் சதா ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு வந்தார். கோயில் குளம் போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்பார். இவரது போக்கு இவரது மாமாவுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் இவரது மாமா இவரை அழைத்து நீ ஒழுங்காகப் படித்து மேற்கொண்டு சட்டம் படிக்க முயற்சி செய்யாமல் சதா சர்வ காலம் கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறாய். அங்கெல்லாம் போய் கண்ணை மூடிக்கொண்டு யோகம் செய்கிறாயாம். என்னடா இது? படிக்கிறதாய் இருந்தால் இங்கே இரு. இல்லாவிட்டால் எங்காவது போய்விடு. உன்னையும் உன் அம்மாவையும் உட்கார வைத்து சோறு போடுவது நீ படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் தெரிகிறதா? என்றார்.
யோகிக்கு அவர் சொல்கிற பாதை பிடிக்கவில்லை. என்னால் யோகத்தில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது. எனக்கு இறைவன் வகுத்த வழி யோகியாக ஆவதுதான் என்றார். அவர் மாமா தன் பெட்டியைத் திறந்து அதில் ஏராளமாகச் சேர்த்து வைத்திருந்த பொன், நகைகள் இவைகளைக் காட்டி, இவைகளெல்லாம் உனக்காகத்தான் நான் சொல்கிறபடி கேட்டால் இவையெல்லாம் உனக்குத் தருகிறேன். இல்லையேல் வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்றார். இவர் அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. எனக்கு என் மீனாட்சி அம்மன் அருள் செய்வாள் என்றார். அப்படியானால் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டியதில்லை, எங்கேயாவது போய் உன் யோகத்தை நடத்திக் கொள் என்றாள். இவரும் சரியென்று சொல்லி கிளம்பினார். உடனே மாமாவும் இவரது அம்மாவும் இவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.
மாமா கேட்டார், பெரிய வீராப்போடு போகிறாயே, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? திரும்ப இங்கதானே வரவேண்டும் என்றார். இதைக் கேட்ட யோகி நிதானமாகச் சொன்னார், "நான் வெளியே போய்விட்டால் இரவு சாப்பாட்டை என் அன்னை மீனாட்சி போடுவாள்' என்றார். அப்படியா போடாவிட்டால் என்ன செய்வாய் என்றார் மாமா. மரியாதையாக நான் தோற்றுவிட்டேன் என்று சொல்லி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். இல்லையென்றால் மீனாட்சி விட்ட வழியில் நான் என் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
வீட்டைவிட்டுப் புறப்பட்ட சுத்தானந்தர் மீனாட்சி கோயிலுக்குச் சென்றார். ஆலயத்தில் எல்லா சந்நிதிகளிலும் சென்று வழிபட்டு முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தடி மேடையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அர்த்தஜாமம் முடிந்து வெளியே வந்த தேவேந்திர பட்டர் எனும் சிவாச்சாரியார் மேடையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் இவரிடம் வந்தார். அவருக்குச் சுத்தானந்தரை நன்கு தெரிந்திருந்தது. அவரை எழுப்பி என்னப்பா இங்கே இந்த நேரத்தில் ஆத்தில் மாமா, அம்மா எல்லோரும் செளக்கியமா? என்று விசாரித்தார். பிறகு அர்த்தஜாமத்துக்கு செய்த நைவேத்தியம் இருந்த பாத்திரத்திலிருந்து பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து உண்ணச் செய்தார். இவரும் அவற்றைப் பசியாற உண்டார். ஆகா! மீனாட்சி என் விரதத்தை அங்கீகரித்து விட்டாள். இனி அவள் காட்டும் பாதையில் செல்வேன் என்று சபதம் செய்து கொண்டார்.
வீட்டுக்குப் போகலியா என்று கேட்ட சிவாச்சாரியாரிடம் நடந்த விவரங்களைச் சொன்னார். அவர் சுத்தானந்தரை வக்கீல் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு நடந்ததை விவரித்தார். மாமாவுக்கும் இவரது யோகத்தின் மீது நம்பிக்கைப் பிறந்தது. இவர் உறுதியாக நம்பியபடி மீனாட்சி இவருக்கு இரவு உணவு அளித்து தங்க இடமும் கொடுத்து விட்டாளே என்று.
சிவகங்கை வாசம்
தனது பதினெட்டு வயதுவரை இவர் சிவகங்கையில்தான் இருந்தார். ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் படிப்பு. படிப்பில் அதிக கவனமின்றி புலவர்கள், பெரியோர்களின் சொற்பொழிவு என்று இவர் சுற்றத் தொடங்கினார். ஒரு ஆசிரியர் மாணவர்களையெல்லாம் திட்டிக்கொண்டே இருப்பார். பிறகு அவர்களைப் பார்த்து "டேய், தடிப்பயல்களா, நான் சொல்வதை எழுதுங்கள்" என்பாராம். இவரோ, அவர் திட்டிய சொற்களையெல்லாம் எழுதிக் காண்பிக்க அவரிடம் மறுபடி அர்ச்சனை வாங்குவாராம். "பத்து முறை எழுதுடா கழுதை" என்றால், கழுதை கழுதை என்று பத்து முறை எழுதி அடிவாங்கியிருக்கிறார்.
தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவரது தமிழறிவை ஊக்குவித்தார் என்று முன்னமேயே சொன்னேன். மேலும் சில ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமையை வளர்த்துவிட்டனர். சிவகங்கையில் வாழ்ந்த நாட்கள் கல்வி வளர்ச்சியில் இவரை ஊக்கவில்லை ஆனால் யோக வளர்ச்சியில் ஊக்குவித்தது.
இலக்கியமும், கவிதைத்திறனும்.
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ஷெல்லியின் புரோமிதியஸ், பிரான்சிஸ் தாம்சனின் ஹெளண்ட் இவை எனக்கு ஆவேசமளிக்கின்றன, அரவிந்தரின் அஹானா என் உள்ளத்தை அள்ளுகிறது என்று இவர் எழுதியிருக்கிறார். நாளெல்லாம் படிக்கிறேன், பசித்தபோது படித்துக் கொண்டே இருக்கிறேன்" என்கிறார். என் சிறந்த நண்பர்கள் இலக்கியங்களே, இலக்கியத்துக்கு அடுத்ததாக அறிவியல் நூல்களைப் படிக்கிறேன் என்கிறார் இவர்.
கவிதை எழுதத் தூண்டுபவை எவை என்றால் இவர் சொல்கிறார்: "அருவியும் குருவியும் அளித்தன கவிதை; காடும் மலையும் கவிமலர் கொய்தேன், கொய்த மலர்களைக் கோர்த்துக் கோர்த்துச் சுத்த சக்திக்கே சூட்டி மகிழ்ந்தேன்" என்று.
சிவயோக ஆன்மாக்களின் தொடர்பால் இவரது மனம் பக்குவப்பட்டது. அதன் பின்னர் கல்லூரி பாடங்களில் மனம் பதிந்தது. முதலாவது மாணவனாக இவர் தேர்ந்தார். நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதியில் அமர்ந்து கம்பராமாயணம் முழுதும் பயின்றார். பற்பல இலக்கிய நூல்களைப் படித்துப் பல நூல்களை இவரும் எழுதிவைத்தார். வேதம், உபநிஷத்துக்கள், பிரமசூத்திரம், ஜூதஸம்ஹிதை முதலியன கற்றார். அவற்றையெல்லாம் தமிழாக்கம் செய்தார். தெலுங்கும் இந்தியும் பயின்றார், அவற்றிலும் கவிதைகள் எழுதினார்.
அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றார். பிரெஞ்சும், லாட்டினும் பயின்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன், டென்னிஸன், பிரெளனிங், வேட்ஸ்வொர்த், ஷெல்லி, அரிஸ்டாடில், பிளேட்டோ, ஸ்காட், அன்னிபெசண்ட், இராமதீர்த்தர், விவேகானந்தர் ஆகியோருடைய நூல்களைக் கற்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேலும் படிப்பதற்காகவே அரசர் கல்லூரியில் இவர் நூலகர் வேலையில் சேர்ந்து அங்கும் ஓயாமல் படித்தார். இப்படி இவர் விடாமல் படித்ததால்தான் அறிவு பெற்றாரா என்று கேட்டால், இவர் சொல்கிறார், என்மீது திணிக்கப்பட்ட நூலறிவு சிற்றறிவே, என் யோகத்தால் உள்ளிருந்து மலர்ந்த சுத்த ஆன்மஞானமே பெரியதுஎன்றார்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய குணங்கள் இவரிடம் இல்லை. மாறாக எப்படி யிருந்தது என்பதை அவர் சொல்வதைப் பார்ப்போம். "சக்தியின் அருளால் நான் பெண்களை சக்திமயமாகப் பார்த்தேன். எல்லா பெண்களையும் ஓம் ஓம் சுத்த சக்தி என்று வணங்கினேன். என் மனம் மாசுற்றால் உடனே பராசக்தியைப் பாடுவேன், பட்டினி போடுவேன், என்னை நானே தண்டித்துக் கொள்வேன். புலனடங்கினால் மனமும் அடங்கும். புலனடக்கத்திற்கு தூய்மை வேண்டும்." என்கிறார்.
அவரது இளமைக் காலம் வீட்டில் எங்ஙனம் இருந்தது என்றால்:
"வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்
இப்புறம் வேதம்; அப்புறம் கீதம்;
எதிரே கோயிலில் இசையின் அலைகள்
சிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம்.
பாடகர், பண்டிதர், பாவலர், நாவலர், பாக
வதர்கள் பஜனை மடங்கள்
மல்கிய சூழலில் வளர்ந்தது என் வாக்கே
கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றுப்
பாமாலை சூட்டிப் பரமனைத் தொழுதேன்" என்கிறார்.
தமிழ் மொழிபால் இவருக்கிருந்த விருப்பத்தைப் பல பாடல்களில் விவரித்திருக்கிறார்.
"வெள்ளி நகைப்பது பார், வெண் சங்கொலிப்பது கேள்;
கிள்ளை கூறு மொழியும் கீதக் குயிலிசையும்
அள்ளி வரும் தென்றல் அருந்தேன் மலர்களுடன்
துள்ளி விளையாடுதல் பார்!
தும்பி ஓம் சக்தியெனக் கள்ளுண்டு அலம்புவ பார்
காதற் களிப்பூறி உள்ளம் குளிர உயிர் குளிர
ஊன் குளிரத் தெள்ளருளாம் தெய்வத் திருவாரமுதமய
வெள்ளத்திலாட விரைந்தேலோ ரெம்பாவாய்!"
இவருக்குத் திருக்குறள் மீதும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீதும், சங்க இலக்கியங்கள் மீதும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவிய நயத்திலும் அபாரமான ஈடுபாடு, இவை அனைத்தும் அழியாப் பீடினைப் பெற்றவை என்பது இவர் கருத்து. அதைச் சொல்லும் போது:-
"தேவர் குறளாட்டித், திருவாசகம் சூட்டி
மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாம் கம்ப முடி கவிழ்த்து
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டு
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோ மெம்பாவாய்" என்கிறார்.
தமிழை வாழ்த்தி ஒரு கவிதை:
"திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க!
அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி
வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய்
அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி
முழுமதி முகத்தாள், மோகன காந்தம்
வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும்
பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்"
மற்றொரு கவிதை தமிழ் அன்னை என்ற தலைப்பில்
"அன்புருவான தமிழ் அன்னை மொழி
அரசியான தமிழ் அன்னை இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை
எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை
ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் - இயல்
அழகு சொட்டும் பசு வளர்த்தாள்
வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் - ஞான
வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்"
"தமிழ் முழக்கம்" எனும் தலைப்பில் பாடிய கவிதை.
"வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள்
ஒன்றாய்ச் சேருங்கள்
கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள்
வெற்றி பூணுங்கள்
தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்
நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம்
வீரம் காட்டுவோம்"
இப்படித் தமிழ் மீது பற்பல கவிதைகள் பாடியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாட்டினர் ஆண்மையற்றுக் கிடந்த நிலையைப் பார்த்து மனம் நொந்தார். நெஞ்சில் ஆவேசக் கனல் ஆர்த்தெழ வேண்டும் என்ற விருப்புடன் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அப்படி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணற்றவை. வீரத் தமிழர்க்கு ஆவேசக் கடிதங்கள் எனும் தலைப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவியோகி அற்புதமான நூலொன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் எம் தமிழர்க்கு மொழி அன்பு, நாட்டு அன்பு, உலக அன்பு, கடவுள் அன்பு இவை நான்கும் இதயத்தில் பொங்கி எழ வேண்டுமெனத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார்.
எல்லோருக்கும் தமிழுணர்வு வேண்டும். இந்தத் தமிழுணர்வு எலெக்ட்றான் அணுக்களைப் போல எங்கணும் பரவ வேண்டும் என்கிற தனது பேரவாவை வெளிப் படுத்துகிறார். தமிழரின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது போலிச் சாதி உணர்வு என்கிறார். இந்த உணர்வு நொறுக்கப்பட வெண்டும், பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களைத் தூக்கி எறிய வேண்டுமென்கிறார்.
இவர் தனது "முன்னேற்ற முழக்கம்" எனும் கவிதை நூலில் தமிழர் எழுச்சி குறித்து அருமையான கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
"தங்கமணிப் படுகையிலே முத்திறைத்து
தவழமுத வெள்ளமென நடைகுங்குஞ்
சங்கமணிச் செல்வங்கல் மல்கு நாட்டீர்!
தமிழ் மறையைப் புவிக்கீந்த செந்நாப்போதர்
துங்கமணிக் கவியரசன் கம்பன் துலங்குமிளங்
கோவடிகள் சொல்லையுண்ட
சிங்க அணித் தமிழர்காள் கலையினுச்சிச்
சிகரத்தில் செயக் கொடியை நாட்ட வாரீர்!
தமிழ் மன்னர்களின் வீரம் குறித்த இவரது கவிதை தெவிட்டாத இன்பமூட்டக்கூடியது.
"கண்ணகிக்குப் பத்தினிக்கல் கொணர்ந்த சேரன்
கனக விசயர் செருக்களிக்க நடந்து போரில்
விண்ணெட்ட வெற்றி முரசொலித்த நாட்டீர்
வியன் கப்பற் படை நடத்தி ராச ராசன்
கண்ணெட்டு நாடெல்லாம் கைக்கொண்டான்
கலைச்சாலை அறச்சாலை கவின்செய்
கோயில் விண்ணெட்டப் புகழ்
விளங்கச் செய்தான் அன்னான்!
வெற்றி நினைந்து ஆவேசம் பெற்று வாரீர்!
கவியோகி பன்மொழிப்புலவர் என்பதை முன்பே பார்த்தோம். அப்படிப் புலமை பெற்ற அத்தனை மொழிகளிலும் இவர் மிக அருமையான படைப்புக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டுகிறது. இவை தவிர தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இவர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்தைத் தாண்டும்.
தனிமனிதனொருவன் தானே இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறான், அதுவும் இன்றுபோல அத்துணை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் எழுதிக் குவித்திருக்கிறான் என்றால் இதற்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.
இவர் உணவு நெறியை மிகக் கவனமாகக் காத்தார். உப்பு, புளி, மிளகாயை நீக்கினார். வேகும் சோற்றில் காய்கறிகளைப் போட்டு உண்டார். உணவோடு நல்ல சாதுக்களின் சகவாசமும் இவருக்கு உதவியது என்கிறார். நிலக்கடலை, பழங்கள் இவைதான் இவருக்கு உணவு. இதனை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கவனமாக கடைப்பிடித்தார்.
இவருக்கு மதுரையில் இருந்த நாட்களில் வ.உ.சி., ஜி.சுப்பிரமணிய ஐயர், சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. பாரதியாரும் பிறகு அங்கு சேர்ந்து கொண்டார். மதுரை பசுமலையில் இவர் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு திருமங்கலத்தில் வேலைக்கு போன இடத்தில் நிரம்பியிருந்த ஊழலைக் கண்டு ஓடிவந்து விட்டார். அப்போது முசிறி அருகே இருந்த காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் ஆசிரியர் வேலை இருப்பது அறிந்து மனுப்போட்டார் அங்கு வேலை கிடைத்தது.